Thursday, April 28, 2016

இந்தப் பிரபஞ்சத்தின் மையம் எது?


ஆசை
(‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் ‘28-04-2016 அன்று வெளியான கட்டுரை)

இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கியது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. பிரபஞ்சத்தின் பிறப்புக்குக் காரணமான பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது இடத்தில் அல்ல, காலத்தில்.
"பெருவெடிப்பு நிகழ்ந்தது எங்கே?" என்று என்னிடம் பலரும் அடிக்கடி கேட்பதுண்டு. கையெறி குண்டு ஒன்று வெடிப்பதைப் போன்று பிரபஞ்சம் விரிவதையும், அந்தக் கையெறி குண்டின் சிதறல்கள் பறப்பதுபோல் சூரியக் குடும்பத்தையும், பால்வெளியையும் கற்பனை செய்துகொண்டு இது போன்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.
இந்தப் பிரபஞ்சம் ஒரு இடத்தில் தொடங்கவில்லை, காலத்தில்தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 1,380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் தொடங்கியது என்பது பிரபஞ்சவியலின் மேம்பட்ட தரவுகளின் கணிப்பு. பிரபஞ்சம் உருவானதிலிருந்து விரிவடைந்துகொண்டிருக்கிறது. விரிவடைந்துகொண்டிருக்கிறது என்றால், ஏற்கெனவே இருக்கும் வெளியைத் தனது விரிவால் நிரப்புகிறது என்றல்ல. பிரபஞ்சம் நிரப்புவதற்கான இடமென்று அதற்கு வெளியில், அதற்குப் புறத்தே, வேறு வெளி ஏதும் இல்லை. முடிவில்லாமல் வளர்ந்துகொண்டே இருப்பதாக நமக்குத் தெரியும் காலத்தில்தான் இந்த விரிவு நிகழ்கிறது.

தற்சமயம் மட்டுமே!
பிரபஞ்சத்தின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை 1,380 கோடி ஆண்டுகள் ஒளி பயணம் செய்திருக்கிறது. நாம் இப்போது பிரபஞ்சத்தை இவ்வளவு பெரிதாகக் காண்கிறோம். ஆனால், மிக ஆரம்பத்தில் பிரபஞ்சம் ஒரு ஆரஞ்சு அளவில் இருந்தது. அதனுள் கிலியூட்டும் ஆற்றல்களெல்லாம் ததும்பிக் கொந்தளித்துக் கொண்டிருந்தன. அந்த ஆரஞ்சுமே காலம் என்ற ஒரு விளிம்பைத் தவிர, வேறு விளிம்பில்லாத தொகுப்பே. பிரபஞ்சத்தில் நாம் எங்கே பார்த்தாலும் கடந்த காலத்துக்குள்தான் நாம் பார்க்கிறோம். இன்னும் தூரமாகப் பார்க்கப் பார்க்க, கடந்த காலத்தில் இன்னும் ஆழமாக நாம் பார்க்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தின் மையத்தில் நிகழ்காலம் இருக்கிறது. அடக் கொடுமையே, எதிர்காலத்தைக் காண வேண்டுமென்றால், நாம் பார்க்க வேண்டிய திசை ஏதுமில்லையே! ஒருவேளை நம் மனதுக்குள்ளும் கனவுகளிலும் வேண்டுமானால் எதிர்காலத்தைப் பார்த்துக்கொள்ளலாம். இப்போது - தற்சமயம் என்பது மட்டுமே, இப்போது என்பது மட்டுமே.
ஆக, பிரபஞ்சத்தின் மையம் எங்கே இருக்கிறது? வேறெங்கே, இங்கேதான். ஆமாம், நாம் ஒவ்வொருவரும் இந்தப் பிரபஞ்சத்தின் மையமே.
கால இயந்திரங்கள்
இடமும் காலமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்று 1905-ல் ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் தனது ‘சிறப்புச் சார்பியல் கோட்பா’ட்டில் விளக்கியபோது, நம் கண்கள்தான் ‘கால இயந்திரங்கள்’ என்று அவர் நமக்குக் கற்றுக்கொடுத்தார். ஒளியின் வேகத்தைத் தாண்டி எதுவும் செல்ல முடியாது என்றார் அவர். ஒளிதான் பிரபஞ்சத்தின் வேக எல்லை. எனவே, நிகழ்காலத்தில் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எல்லாமே கடந்த காலத்திலிருந்து வருபவைதான்.
அதேபோல், இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்பது எங்கேயும் இருக்கிறது, எங்கேயும் இல்லை என்றது ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு. வட்டத்துக்குள் வட்டம் என்கிற ரீதியில் கடந்த காலத்தின் வட்டங்கள் சூழப்பட்டு மத்தியில் நிகழ்காலம் இருக்கிறது. வரலாறு உங்களை நோக்கி ஒரு நொடிக்கு 1,86,282 மைல்கள் வேகத்தில் விரைந்துவருகிறது. இந்த வேகம்தான் ஒளியின் வேகம், எல்லா தகவல்களின் வேகமும். நமது கண்கள்தான் ஒரு கால இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அறை. ஈரப்பதத்துடன் இருக்கும் சவ்வு படர்ந்த இந்தக் கோளங்களால் ஒரே ஒரு திசையில் மட்டுமே பார்க்க முடியும். அதாவது, பின்நோக்கி மட்டுமே. நாம் பார்ப்பது, உணர்வது, கேட்பது எல்லாமே நம்மை வந்தடைய குறிப்பிட்ட அளவு நேரம் எடுக்கும்; தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஈர்ப்பு அலைகள்போல. நாம் உணர்வன எல்லாமே கடந்த காலத்திலிருந்து நம் புலன்களை நோக்கி வருகின்றன. தொடுவானத்தில் உலவிக்கொண்டிருக்கும் நிலா என்பது ஒன்றரை நொடிகளுக்கு முன்பு அதன் மேடுபள்ளமான மேற்பரப்பிலிருந்து புறப்பட்ட ஒளியின் பிம்பமே தவிர வேறல்ல. நம்மைச் சுட்டெரிக்கும் சூரியன் என்பது 8 நிமிடங்கள் 19 நொடிகளுக்கும் முந்தையது. அதாவது, சூரிய ஒளி சூரியனிலிருந்து நம்மை வந்தடைய ஆகும் நேரம் இது.
உங்கள் காதலியின் தொலைவு
நம்மை வெறித்துப் பார்க்கும் ஆரஞ்சு நிற வியாழன் கோள், இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது 41.4 கோடி மைல் தொலைவில் இருக்கிறது. அதாவது, கடந்த காலத்தில், 37 நிமிடங்கள் தொலைவில் இருக்கிறது. நமது பால்வெளியின் மையத்திலிருந்து புறப்படும் ஒளி இங்கே வந்தடைவதற்கு 26,000 ஆண்டுகள் ஆகின்றன. அந்த ஒளி புறப்பட்டபோது பனியுகத்தின் பூர்வ மனிதக் குடியிருப்புகள் உருவாகியிருக்கும். அந்த ஒளி இங்கே வந்தடைவதற்குள் வானளாவிய கட்டிடங்களைக் கொண்ட அதிநவீன மாநகரங்கள் உருவாகிவிட்டிருக்கின்றன. உங்களுக்கு எதிரே நின்றுகொண்டிருக்கும் உங்கள் காதலி, அல்லது காதலன் ஒரு நானோ நொடிக்கு முந்தையவர்.
இது ரொம்பவும் கவித்துவமாக இருக்கிறதல்லவா! கணிதபூர்வமாகச் சொல்ல வேண்டுமென்றால், குறிப்பாக ஐன்ஸ்டைனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், இந்தப் பிரபஞ்சத்தின் எந்த மூலையிலும் கிடைக்கக்கூடிய தகவல் அல்லது வரலாறு என்பதற்கு ஒளிக்கூம்பு என்று பெயர். எல்லோருக்கும் ஒரு ஒளிக்கூம்பு இருக்கும். ஒவ்வொருவருடையதும் சிறிதளவே வேறுபாடு கொண்டதாக இருக்கும். வேறு வகையில் சொல்வ தென்றால், ஒவ்வொருவருடைய பிரபஞ்சமும் மற்றவரின் பிரபஞ்சத்தைவிடச் சற்றே வேறுபட்டதாக இருக்கும்.
எப்போதுமே உங்களிடம் எதாவது சில தகவல்கள் வந்து சேர்வதும், உங்கள் காதலரிடம் இன்னும் வந்து சேராததுமாக இருக்கும். நாமெல்லோரும் அவரவர் எண்ணங்களின் உலகில் தனித்துவத்துடன் இருப்பதற்கு இது புதிய அர்த்தத்தையல்லவா கொடுக்கிறது.
டி.எஸ். எலியட் சொன்னதுபோல்:
‘நாமெல்லாம் அவரவர் சிறையில்,
அதைத் திறக்கும் சாவியை நினைத்துக்கொண்டே-சாவியின் நினைப்பே இருப்பது சிறை என்பதை உறுதிசெய்கிறது.’
இதன் விளைவாக இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இடமும் தனித்துவமான இடமே. எப்போதுமே இந்தப் பிரபஞ்சத்தில் நீங்கள் பார்த்தேயிராதது என்று ஒன்று இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் பார்த்து, யாருமே பார்க்காதது என்றும் ஏதாவது இருக்கும். பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த அறிவைப் பெறுவதற்கு வசதியான இடம் என்று எதுவுமே இல்லை. நாம் அனைவரும் நம் அனைவருடைய அறிவின் ஒட்டு மொத் தத்தை உருவாக்க வேண்டுமென்றால், பரஸ்பரம் எல்லோரையும் நம்பியிருக்கிறோம். நாம் நமது சிறைக்குள் அடைந்து கிடக்க வேண்டியதில்லை. ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றிக்கொண்டு, பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும். இதை பாப் டைலான் வார்த்தைகளில் சொல்வதானால், "என் கனவுக்குள் உன்னைவர விடுவேன், உன் கனவுக்குள் என்னை நுழையவிட்டால்…"
- டெனிஸ் ஓவர்பை, அறிவியல் எழுத்தாளர்.
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை
 - 'தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/jWMBqo

No comments:

Post a Comment