Thursday, October 22, 2015

ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடம் ஒரு உரையாடலை நாம் தொடங்கியே ஆக வேண்டும்! பத்ரி கட்டுரையை முன்வைத்து...

ஆசை‘இந்திய நாத்திகர்கள்’ என்ற தலைப்பில் சமீபத்தில் பத்ரி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் (பத்ரியின் கட்டுரையைப் படிக்க இந்த இணைப்புக்குச் செல்லவும்: http://www.badriseshadri.in/2015/10/blog-post.htmlபத்ரியிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை. வரவேற்கிறேன். அதே நேரம் இந்துத்துவவாதிகள் மீதான எதிர்ப்பை வலுவாக அவர் பதிவுசெய்யவில்லை. இருந்தாலும் அந்த முகாமிலிருந்து இப்படியாவது ஒருவர் எழுதியிருப்பது குறித்து மகிழ்ச்சி. 

பத்ரியின் இந்த வாதத்தையும் கொஞ்சம் கட்டுடைத்தால் பார்ப்பனியம், இந்துத்துவம் போன்றவற்றின் கூறுகளை நாம் கண்டுபிடிக்கலாம். ஆனால், காலம்காலமாக நாம் இப்படித்தான் செய்துவருகிறோம். எதிர் தரப்பிலிருந்து சற்றே மாறுபட்ட கருத்து வரும்போதும் அந்தக் கருத்தில் தவறான உள்நோக்கத்தைக் கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டாமல், ‘சரி இந்த அளவிலாவது வருகிறதேஎன்று வரவேற்றால் ஒரு பொதுவான உரையாடல் நிகழ்வதற்குச் சாத்தியம் ஏற்படும் என்று நினைக்கிறேன். நாம் பேசியபோது காதுகளை இறுக்கமாக மூடிக்கொண்டவர்கள், இப்போது பத்ரி போன்றவர்கள் சிறிதளவாவது பேசும்போது கொஞ்சமாவது செவிமடுக்க ஆரம்பிப்பார்கள். அந்த இடத்தைச் சிக்கென்று பற்றிக்கொண்டு ஆரோக்கியமான உரையாடலை நாம் ஆரம்பிக்க வேண்டும். கட்டாயமாக உரையாடல் நிகழ்த்தியாக வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஏனெனில் அதிகாரம், அதுவும் இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக இந்து அரசு ஒன்றுக்கு வானளாவிய அதிகாரம் கிடைத்திருக்கிறது. எதை வேண்டுமானாலும் செய்வார்கள், செய்கிறார்கள். இந்தத் தருணத்தில் நம் முன் நான்கு வழிகள் உள்ளன. 1. ஜனநாயகபூர்வமான முறையில் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டிருத்தல், 2. வன்முறை மூலம் எதிர்த்தல், 3. (எதிர்த்தரப்பின் மேல் கடும் கோபமும் விமர்சனமும் இருந்தாலும்கூட எதிராளியைச் சட்டென்று குற்றவாளிக்கூண்டில் நிப்பாட்டும் உத்தியைத் தவிர்த்துவிட்டு) திறந்த மனதுடனும் Good Faith அடிப்படையிலும் ஒரு உரையாடல் நிகழ்த்துதல், 4. சும்மா இருத்தல்.


இந்த வழிமுறைகளில் முதலாவதையும் மூன்றாவதையும் சரிவிகிதத்தில் கலந்து செயல்படுத்தினால் சற்றேனும் மாற்றம் ஏற்படக்கூடும் என்று நம்புகிறேன். மூன்றாவது வழிமுறையை வைத்து என்னையும் கூட கட்டுடைத்து விமர்சிக்க முடியும். ‘அதெப்படி, பாபர் மசூதியை இடித்துத் தொடர் கலவரங்களுக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் காரணமானவர்கள், குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றவர்கள், இன்று மாட்டுக்கறி பிரச்சினையிலும் கருத்து சுதந்திரத்திலும் மூர்க்கமாக நடந்துகொண்டிருப்பவர்களைக் குற்றம் சாட்டாமல் சாத்விகமாகப் பேசுவதா? மிதமான இந்துத்துவாவாதியின் பேச்சு போல் இருக்கிறதேஎன்று என்னையும் சுட்டிக்காட்டி எளிதாகப் பேசிவிட முடியும். அவர்கள் செய்ததை நம்மால் மறைக்கவோ அவர்களால் மறைக்கவோ முடியாதுதான். அவர்களின் கொடூரத்துக்கு வரலாற்றில் அவர்களால் பதில்சொல்ல முடியாதுதான். ஆனால், என்ன செய்வது, இன்று அவர்கள் வரலாற்றையும் சட்டங்களையும் உருவாக்கும் அல்லது அழிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். நாம் அவர்களுக்குச் சரியாக எதிர் தரப்பில் இருக்கிறோம். எடுத்தவுடன் குஜராத் கொலைவெறியர்களே என்று ஆரம்பித்தால் அவர்களுக்கு அடுத்த வரியைப் படிக்க பொறுமை இருக்காது. அடுத்த வாதத்தைக் கேட்க பொறுமை இருக்காது. ‘நண்பரே, நான் சொல்வதைக் கொஞ்சம் காதுகொடுத்துக் கேட்பீர்கள் என்று நம்புகிறேன்என்று சொன்னால் அடுத்தததாக நாம் சொல்லப்போவதை அவர்கள் கேட்பதற்குச் சிறிதளவாவது வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்தத் தரப்பில் பத்ரி போன்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நாம் தணிவாகப் பேசிச் சூழலின் கடுமையை அவர்களிடத்தில் எடுத்துக் கூறினால் பத்ரியைப் போன்றவர்களாவது சற்றே நகரக்கூடும். இம்முயற்சி தோற்றும்போகலாம். ஆனால், ஜனநாயகத்துக்குட்பட்டு இந்த முயற்சியளவுக்கு வெற்றிகரமாகச் செயல்படும் (சிறிதளவே வெற்றி என்றாலும்), வேறொரு வழிமுறை எனக்குத் தெரியவில்லை. இந்தத் தருணத்தில் வன்முறையைத் தவிர்த்த எந்த வழிமுறையையும் முயற்சித்துப் பார்ப்பதால் நமக்கு இழப்பு அதிகம் இருக்காது என்றே தோன்றுகிறது.

சமீப காலமாக நான் மிகவும் நிம்மதி இழந்துபோயிருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உள்ளிட்ட வலதுசாரிகளின் மனசாட்சியை நோக்கி, இதயத்தை நோக்கி எப்படிப் பேசுவது என்பதைக் கண்டறிய முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அந்த முயற்சிகளில் ஒன்றாக சமீபத்தில் ஒன்றைச் செய்தேன். வலதுசாரியும் நண்பருமான ஒரு பெண்மணி தொடர்ந்து ஏதாவது ஒரு வடிவத்தில் இஸ்லாமியர் மீதும், சாகித்ய அகாதமி விருதைத் திருப்பிக்கொடுக்கும் எழுத்தாளர்கள் மீதும் வெறுப்பைக் கக்கும் பதிவுகளாகப் போட்டுக்கொண்டுவந்தார். தலித் குழந்தைகள் எரிக்கப்பட்ட சம்பவத்திலும் தொடர்ந்து கிண்டலடித்துக்கொண்டே வந்தாரே ஒழிய அந்தக் குழந்தைகள் எரிக்கப்பட்டதற்கு எந்தக் கண்டனமும் இல்லை. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என்னுடன் பழகியபோது அவரிடம் தெரிந்த இனிமை முஸ்லிம், தலித் என்று வரும்போது எங்கே போயிற்று? இரக்கம், மென்மை போன்ற உணர்வுகள் இல்லாதவரா அவர்? நிச்சயம் அப்படி இல்லை. அவர் குழந்தைகள், கணவர், உறவினர், என்னைப் போன்ற நண்பர்கள் எல்லோரிடமும் அவரின் இரக்கமும், மென்மையும் வெளிப்படும். அதை அந்த அளவோடு நிறுத்திக்கொண்டுவிட்டார். அதை இன்னும் கொஞ்சம் விரித்துக்கொண்டே சென்றால் தலித்கள், கிறித்தவர்கள், முஸ்லிம்கள், பாகிஸ்தான் முஸ்லிம்கள், உலகத்தின் அத்தனை மக்கள் என்று விரிந்துகொண்டே போகும். ஆனால், அது ஒரு அளவில் மட்டும் நின்றுவிட்டது. அவ்வளவுதான். அவரிடம் உரையாடல் நிகழ்த்தியே ஆக வேண்டும். அவருடன் நான் நிகழ்த்திய உரையாடலின் தமிழ் வடிவம் இங்கே:

“நான் காங்கிரஸ், பாஜக இரண்டையும் வெறுக்கிறேன். (ராஜீவ் காந்தி காலத்திலும் ராகுலின் காலத்திலும் குடிசைகள், வறுமை மாறவேயில்லை என்று தலித் குழந்தைகள் எரிக்கப்பட்டதைப் பார்க்க வந்த ராகுலின் படத்தை வைத்துக் கிண்டலடித்திருக்கிறீர்கள்.) இப்போது பாஜக ஆட்சிக்கு வந்து வறுமையை ஒழித்துவிட்டது என்றே நம்புகிறேன். அல்லது வறுமையை ஒழிக்கும் என்று நம்புகிறேன் (அதாவது அம்பானி, டாடா போன்றவர்களின் வறுமையை). ராகுலின் அரசியல் நாடகங்களை விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால், கொடூரமாக இரண்டு தலித் குழந்தைகள் எரித்துக்கொல்லப்பட்டதைக் கண்டிப்பதற்கான இதயம் உங்களுக்குக் கொஞ்சமும் இல்லையா? என்னைப் பொறுத்தவரை இஸ்லாமியப் பயங்கரவாதத்தைப் போல, சாதி என்பது இந்து பயங்கரவாதம், இது குறித்து நான் குற்றவுணர்வு கொள்கிறேன். மதத்தின் ஒரு அம்சமான சாதியின் பெயரால் என்னுடைய முன்னோர்கள், தலித்களுக்கு இழைத்த அநீதியைக் குறித்தும், என்னுடைய தற்போதைய தலைமுறையினர் தலித்களுக்கு இழைத்துவரும் அநீதியைக் குறித்தும் நான் மிகுந்த குற்றவுணர்வு கொள்கிறேன். ஆனால், ஒரு சமூகமாக குற்றவுணர்ச்சி அற்றவர்களாக ஆகிவிட்டோம் நாம். இந்த விஷயத்தில் ஜெர்மனியின் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. உலகப்போர்களுக்காகவும், யூத இன அழிப்புக்காகவும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் குற்றவுணர்வை பிரம்மாண்டமாக முன்னெடுத்து வைக்கிறார்கள், நினைவுகூர்கிறார்கள்.

சாதி, மதம், சித்தாந்தம் என்று எந்த அடிப்படையிலும் வன்முறை நடந்தாலும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். இந்த அடிப்படையில் எனக்கு இந்து பயங்கரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், மாவோயிஸ பயங்கரவாதம் எல்லாம் ஒன்றுதான். குழந்தைகள் கொல்லப்படும் செய்திகளைக் கேள்விப்படும் நாளெல்லாம் நிம்மதி இழக்கிறேன் நான், பல சமயங்களில் தூக்கமிழக்கிறேன். அது இந்துக் குழந்தையாக இருந்தாலும் சரி, முஸ்லிம் குழந்தையாக இருந்தாலும் சரி. அடிப்படையில் ஒரு குழந்தை குழந்தை மட்டுமே. அதற்கு எந்த மதமும் கிடையாது. குஜராத் இன அழிப்பின்போது இந்து பயங்கரவாதிகளால் கருவிலிருந்து வெளியில் எடுத்து எரித்துக் கொல்லப்பட்ட சிசுவாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் குண்டுவெடிப்புகளில் கொல்லப்படும் குழந்தையாக இருந்தாலும் சரி. ஒரு குழந்தை, குழந்தைதான். அதற்கு எந்த மதமும் கிடையாது. அதேபோல், மனிதர் மனிதர்தான். அடிப்படையில் எந்த மதமும் கிடையாது. யார் கொல்லப்பட்டாலும் எனக்கு வலிக்கிறது. கோத்ரா ரயிலில் கொல்லப்பட்ட கரசேவகராக இருந்தாலும் சரி, தாத்ரியில் கொல்லப்பட்ட முஸ்லிம் பெரியவராக இருந்தாலும் சரி. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் உங்கள் இதயத்தை, மனசாட்சியைப் பார்க்க விரும்புகிறேனே தவிர உங்கள் சித்தாந்தத்தை அல்ல. ஏனெனில் சித்தாந்தத்துக்கு இதயம் கிடையாது. நான் பேசும் தொனி போதிக்கும் தொனியில் இருந்தால் என்னை மன்னியுங்கள். சகிப்பின்மையின் காலத்தில் நான் அதன் அபாயத்தைப் பற்றிப் பேசுவதற்குத் தவிக்கும் தவிப்பின் வெளிப்பாடுதான் இது. இறுதியாக சாப்ளினின் மேற்கோள்: “நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம், மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமேபுத்திசாலித்தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும். அப்புறம் நமது கதை அவ்வளவுதான்.” (தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்திலிருந்து)”


இவ்வளவு தவிப்புடன் நான் எழுதிய பிறகு அந்தப் பெண்மணிஆம். வன்முறையை எந்த வடிவத்திலும் நான் எதிர்க்கிறேன்என்று மொட்டையாக பதில் போட்டார். அது மொட்டையான பதிலாக இருக்காலாம். ஆனால், அங்கிருந்து என்னால் ஆரம்பிக்க முடியும் என்று நம்புகிறேன்.

1 comment:

  1. சரியான திசையிலான முயற்சி என்றே நானும் நினைக்கிறேன், ஆசை.

    ReplyDelete