Monday, August 4, 2014

போர்களின் இலக்கு குழந்தைகள்தானா?



ஸ்டீவன் ஹாக்கிங்

(தமிழில்: ஆசை)


இந்தப் பிரபஞ்சம் அனாதி காலமாக இருந்துவருகிறது என்று கிரேக்கத் தத்துவவாதி அரிஸ்டாட்டில் நம்பினார். ‘‘மனித இனம் மேலும் வளர்ச்சி பெற்ற நிலையில் இல்லாததற்குக் காரணம், வெள்ளங்களும் மற்ற இயற்கைப் பேரழிவுகளும்தான்’’ என்றார் அவர். ஏனெனில், அவையெல்லாம் மனித நாகரிகத்தை மறுபடியும் மறுபடியும் ஆரம்ப நிலைக்கே கொண்டுசெல்கின்றன.

நவீனத் தொழில்நுட்பமும் ஆதிமனித மூர்க்கமும்
இன்று, மனிதர்கள் முன்பைவிட வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். நமது அறிவு பன்மடங்கு வளர்ந்துகொண்டிருக்கிறது; அதனோடு சேர்ந்து நமது தொழில்நுட்பமும் அதே வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், குகையில் வாழ்ந்த காலத்தின் உள்ளுணர்வுகளை மனிதர்கள் இன்னும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, அந்தக் காலகட்டத்தின் மூர்க்க உணர்வுகளை. உயிரினங்கள் பிழைத்திருப்பதற்குத் தேவையான சில சாதகமான அம்சங்களை மூர்க்கம் என்பது கொண்டிருக்கிறதுதான். ஆனால், நவீனத் தொழில்நுட்பமும் ஆதிமனித மூர்க்கமும் ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும்போது, பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படும்.
குழந்தைகள் மீதான தாக்குதல்கள்
அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக வெடிகுண்டுகள், ரசாயனங்கள் மற்றும் பிற ஆயுதங்கள் வடிவில் சிரியாவில் இன்று நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்படுவதையும் குழந்தைகள் குறிவைத்துத் தாக்கப்படுவதையும் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அறிவுபூர்வமான செயல் அல்ல.
கை கால்களை இழந்த நிலையில், அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருக்கும் குழந்தைகளுக்கும் மின்சாரம் இல்லாததால் இன்குபேட்டரில் இறக்கும் பச்சிளம் சிசுக்களுக்கும் கிடைக்கக்கூடிய மனிதாபிமான உதவிகளையும் நிவாரணப் பொருட்களையும் கிடைக்க விடாமல் தடுப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமன்றி, கொடுமையன்றி வேறென்ன? இதையெல்லாம் ‘குழந்தை களைக் காப்போம்’ அமைப்பு பதிவுசெய்து வெளியிட உள்ளது.
சிரியாவில் நடைபெற்றுவருவது மிகவும் அருவருப்பானது. இதை ஒட்டுமொத்த உலகமும் அமைதியாகத் தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. நமது உணர்ச்சிபூர்வமான அறிவு எங்கே போனது? நமது சமூகத்தின் ஒட்டுமொத்த நீதியுணர்வு எங்கே போனது?
இந்தப் பிரபஞ்சத்தில் ‘அறிவு’ என்ற விஷயத்தைக் கொண்ட உயிரினங்களைப்பற்றி நான் விவாதிக்கும்போது, மனித குலத்தையும் உள்ளடக்கியே சொல்கிறேன்; அந்த இனம், வரலாறு நெடுக, பெரும்பாலும் தான் பிழைத்திருப்பதற்கு உதவும் செயல்களில் ஈடுபட்டிருக்கவில்லை என்றாலும்கூட.
மனித குலம் நீண்ட காலம் பிழைத்திருப்பதற்கு ‘மூர்க் கம்’ உதவுவதைப் போல ‘அறிவு’ உதவுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும், தனிப்பட்ட இனத்தின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக எல்லாவற்றின் எதிர்காலத்துக்கும் சேர்த்து சிந்திக்கக்கூடிய தனித்துவமான திறனைக் கொண்டதுதான் ‘மனித அறிவு’.
போதும் எல்லாம்
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் சிரியாவின் குழந்தைகளைக் காப்பாற்றவும் நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும். இந்த உள்நாட்டுப் போர் மிகவும் தீவிர நிலையை அடைந்து, எல்லா நம்பிக்கைகளையும் பொய்யாக்கியதை சர்வதேசச் சமூகம் மூன்று ஆண்டுகளாக ஓரத்தில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்தது. ஒரு தகப்பனாகவும் தாத்தாவாகவும் சிரியாவின் குழந்தைகள் பாதிக்கப்படுவதைக் கண்ணுற்று இப்போது நான் இதைச் சொல்லியே ஆக வேண்டும்: போதும், இனியும் வேண்டாம்.
வேற்றுலகவாசிகளின் பார்வையில் நாம்…
பிரபஞ்சத்துக்குள், தொலைவிலிருந்து பிற ஜீவராசிகள் நம்மைப் பார்த்தால் நாமெல்லாம் அவர்களுக்கு எப்படித் தெரிய வேண்டும் என்று யோசிப்பேன். பிரபஞ்சத்தைப் பார்க்கும்போது நாம் காலத்தால் பின்நோக்கிச் செல்கிறோம். ஏனென்றால், தூரத்திலுள்ள பிரபஞ்சப் பொருட்களிலிருந்து புறப்படும் ஒளி நம்மை வந்துசேர மிகமிக அதிகக் காலம் ஆகிறது. இன்று பூமியிலிருந்து வெளிப்படும் ஒளி வேற்றுலக உயிரினங்களுக்கு எதைக் காண்பிக்கும்?
நமது கடந்த காலத்தைப் பிறர் பார்க்கும்போது, நாம் நமது சகோதரர்களை எப்படி நடத்துகிறோம் என்பதையும், நமது சகோதரர்கள் நமது குழந்தைகளை எப்படி நடத்த நாம் அனுமதிக்கிறோம் என்பதையும் அவர்கள் பார்க்க நேரிடும். அந்தக் காட்சிகளெல்லாம் நாம் பெருமைப்படும் விதத்தில் இருக்குமா?
அரிஸ்டாட்டில் சொன்னது உண்மையல்ல என்பது நமக்கு இப்போது தெரியும்: பிரபஞ்சம் அனாதி காலமாக இருப்பது அல்ல. கிட்டத்தட்ட 1,400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் தோன்றியது. ஆனால், பேரழிவுகள் நாகரிகத்தின் பெரும் பின்னடைவுகள் என்று அவர் சொன்னது மிகச் சரியே. சிரியாவில் நடைபெற்றுவரும் போர் மனித குலத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய ஒன்றாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், நம்மை ஐக்கியப்படுத்தி வைத்திருக்கும் கட்டுமானத்தில் விழுந்த விரிசலாகத்தான் ஒவ்வொரு அநீதியையும் நாம் கருத வேண்டும். நீதிகுறித்த உலகளாவிய கோட்பாடு என்பது இயற்பியலை அடிப்படையாகக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், நாம் உயிர்வாழ்வதற்கு இயற்பியல் எவ்வளவு அடிப்படையானதோ அதேபோல் அந்த நீதியும் அடிப்படையானது. அது இல்லையென்றால், மனித குலம் வெகுநாட்கள் நிலைத்திருக்க முடியாது.
ஸ்டீவன் ஹாக்கிங்: ஐன்ஸ்டைன், வெர்னர் ஹெய்சன்பெர்க் வரிசையில் மிக முக்கியமான இயற்பியலாளர்-பிரபஞ்சவிய லாளர், ‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ உள்ளிட்ட பிரபலமான அறிவியல் புத்தகங்களின் ஆசிரியர்.
© கார்டியன், தமிழில்: ஆசை, ‘தி இந்து’ நாளிதழில் இந்தக் கட்டுரையைப் படிக்க:




No comments:

Post a Comment