ஜான் பில்ஜர்
(தி கார்டியன், தமிழில்: ஆசை)
'தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க:
இருவேறு இந்தியா சொல்லும் சேதி
(தி கார்டியன், தமிழில்: ஆசை)
மும்பையின் கடற்கரையை ஒட்டியிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணக்காரக் குழந்தைகள் ‘ஆ… ஊ…’ என்று சத்தமிட்டபடி ஒளிந்து பிடித்து விளையாடுகின்றன. இந்த இடத்துக்கு அருகில் இருக்கும், நிகழ்த்துக்கலைகளுக்கான தேசிய மையத்தில் நடக்கவிருக்கும் மும்பை இலக்கிய விழாவுக்காக எல்லாரும் வந்துகொண்டிருந்தனர். பிரபலமான எழுத்தாளர்களும் இந்தியாவின் செல்வாக்கு மிக்க வர்க்கத்தின் பிரபலங்களும்தான் அவர்கள். நடைபாதையின் குறுக்கே படுத்திருக்கும் ஒரு பெண்ணை மிதித்துவிடாமல் லாவகமாகத் தாண்டிச் செல்கிறார்கள். விற்பனைக்காக அந்தப் பெண் வைத்திருக்கும் துடைப்பங்கள் நடைபாதையில் கிடக்கின்றன. அந்தப் பெண்ணின் இரண்டு பிள்ளைகளின் உருவங்கள், அவர்களுக்கு வீடாக மாறியிருக்கும் ஆலமரத்துக்குக் கீழே தெரிகின்றன.
இந்தியாவில் அன்று ‘குழந்தைகள் தினம்’. இந்தியாவில் 50% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருப்பதாக அன்றைய நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருந்த ஓர் ஆய்வு முடிவு சொன்னது. வயிற்றுப்போக்கு போன்ற எளிதில் தடுக்கக் கூடிய உடல்நலப் பிரச்சினைகளால் ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதுக்கு உட்பட்ட 20 லட்சம் குழந்தைகள் இறந்துபோகிறார்கள். மிஞ்சியிருக்கும் குழந்தை களில் பாதிப் பேருடைய வளர்ச்சியானது ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குன்றுகிறது. நாடு முழுவதும் பள்ளிக்கூடப் படிப்பைப் பாதியிலேயே விடுபவர்கள் 40%. இது போன்ற புள்ளிவிவரங்களெல்லாம் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. வேறு எந்த நாடும் இதில் இந்தியாவுடன் போட்டிபோட முடியாது. அந்த ஆலமரக் கிளைகளில் தொங்கிக்கொண்டிருந்த மெலிந்த கால்கள்தான் அதற்குச் சரியான சான்று.
பொருளாதாரத்தைக் கட்டவிழ்த்து விடுதல்
பம்பாய் என்று முன்பு அழைக்கப்பட்ட மும்பை என்ற பிரமாண்டம்தான் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம், உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகள், தனியார் சொத்து போன்றவற்றுக்கெல்லாம் மையம். இருந்தும்கூட, மித்தி ஆற்றில் நீரோட்டம் குறைவாக இருக்கும்போது சாக்கடைகளிலும், சாலையோரங்களிலும் மலம்கழிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். நகரத்தின் மக்கள்தொகையில் பாதிப் பேர் சுகாதார வசதிகள் இல்லாத சூழலிலும் அடிப்படை வசதிகள் இல்லாத சேரிகளிலும்தான் வாழ்கிறார்கள். 90-களுக்குப் பிறகு, இந்த நிலை இருமடங்காக ஆகியிருக்கிறது; அதாவது, இந்தியப் பொருளாதாரத்தையும் வாழ்க்கை முறையையும் தாங்கள் உய்வித்துக்கொண்டிருப்பதாக இந்து தேசியவாத பா.ஜ.க. செய்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கோஷம் அமெரிக்க விளம்பர நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட காலத்துக்குப் பிறகுதான் இது இரு மடங்காக ஆகியிருக்கிறது.
தொழில்துறை, உற்பத்தித்துறை, விவசாயம் ஆகிய துறைகளைப் பாதுகாத்துக்கொண்டிருந்த தடுப்புச் சுவர்களெல்லாம் தகர்க்கப்பட்டன. முன்பு அனுமதி மறுக்கப் பட்டிருந்த பகுதிக்குள் இப்போது கோக கோலா, பீட்ஸா ஹட், மைக்ரோசாஃப்ட், மான்சண்டோ, ரூபெர்ட் முர்தோச் எல்லாம் நுழைந்துவிட்டார்கள். எல்லையற்ற ‘வளர்ச்சி’தான் மனித முன்னேற்றத்தின் புதிய அளவுகோலாக இப்போது ஆகியிருக்கிறது. இந்த அளவுகோல், பா.ஜ.க-வையும் சரி, சுதந்திரம் வாங்கிக்கொடுத்த காங்கிரஸையும் சரி ஆட்கொண்டுவிட்டது. ஒளிரும் இந்தியா, சீனாவை விரட்டிப் பிடித்து மாபெரும் சக்தியாக, ‘பெரும் புலி’யாக ஆகப்போகிறது. அப்படி ஆகும் என்றால், இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் ‘நடு’ என்ற ஸ்தானமே இல்லாத சமூகத்திடமிருந்து தங்களுக்கே உரித்தான உரிமைகளைப் பெறுவார்கள். ‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக’த்தின் பெரும்பான்மை மக்களாக இருந்து, தேர்தல்களில் வாக்களித்து, அடையாளமற்றவர்களாகவே இருப்பார்கள்.
அவர்களுக்கென்று புலிப்பாய்ச்சல் பொருளாதாரம் என்று ஏதும் அப்போது இல்லை. முன்னேறிய நாடுகளின் எல்லைகளை ‘உயர் தொழில்நுட்ப இந்தியா’ தொடும் என்று சொல்லப்பட்டதெல்லாம் அப்போது பெரும் புரட்டுதான். கணினி தொழில்நுட்பத்திலும் பொறியியலும் இந்தியா தற்போது பெற்றிருக்கும் மேலாதிக்கத்தை நான் மறுக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. இந்த நகர்ப்புறத் தொழில்நுட்பத் துறையினர் மிகமிகக் குறைந்த அளவில் இருக்கும் ஒரு பிரிவினர். தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளால் அவர்கள் பெற்ற பலன்கள் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகமிகச் சொற்பமே.
2012-ல் தேசிய மின்தொகுப்பு செயலிழந்தபோது, 70 கோடி மக்களுக்கு மின்சேவை துண்டிக்கப்பட்டது. கிட்டத்தட்ட பாதி அளவு மக்களுக்கு இந்தச் செயலிழப்பை உணர முடியாத அளவுக்கு மிகமிகக் குறைவான மின்சாரம்தான் கிடைத்தது. எனது கடந்த இரண்டு வருகைகளின்போது, அதாவது, கடந்த நவம்பரிலும் 2011-லும், இந்தியப் பத்திரிகைகளின் முதல் பக்கங்கள் “கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைச் செலுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் நுழைந்தது” என்றும் இந்தியா அதன் “சரித்திரத்திலேயே பெரிய” ஏவுகலத்தை ஏவியிருக்கிறது என்றும் செவ்வாய்க்கு விண்கலனை இந்தியா அனுப்பிருக்கிறது என்றும் தம்பட்டமடித்தன. இதில் செவ்வாய்ப் பயணம் “நாமெல்லாம் உவகைகொள்ள வேண்டிய வரலாற்றுத் தருணம்” என்று அரசாங்கத்தால் போற்றப்பட்டது.
மும்பை விமான நிலையத்தில் இறங்கியதும் தெரியக்கூடிய தார்ப்பாய் வீடுகளையும், மின்விளக்கு, தூய்மையான குடிநீர் போன்ற அடிப்படைத் தொழில்நுட்ப வசதிகள் மறுக்கப்பட்ட எண்ணற்ற கிராமங்களையும் மேற்கண்ட உற்சாகக் குரல்கள் எட்டவேயில்லை. இங்கே, நிலம்தான் வாழ்க்கை, ‘கட்டற்ற சந்தை’தான் இங்கே எதிரி. உணவு தானியங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றில் காணப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மூர்க்கமான உலகச் சந்தையை நோக்கிச் சிறு விவசாயிகளை உறிஞ்சிக்கொண்டுவிட்டது; இதன் பின்விளைவுகள்தான் கடனும், நிர்க்கதியான நிலையும். 1990-ன் நடுப்பகுதியிலிருந்து 2,50,000 விவசாயிகளுக்கு மேலே தற்கொலைசெய்துகொண்டிருக்கிறார்கள், உள்நாட்டு நிர்வாகங்கள் வேண்டுமென்றே இந்த மரணங்களை ‘விபத்தினால் நிகழ்ந்த’ மரணங்கள் என்று தவறாகக் குறிப்பிட்டதால், மேற்கண்ட எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையின் சிறு பகுதியாகக்கூட இருக்கலாம். மகாராஷ்டிரத்தின் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் மட்டும் வாரம்தோறும் டஜன் கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
மக்கள் மீதான போர்
“குறுக்கும் நெடுக்குமாக இந்தியா முழுவதும் உள்ள தன்னுடைய மக்கள் மீதே இந்திய அரசாங்கம் போர் அறிவித்திருக்கிறது” என்று சொல்கிறார் புகழ்பெற்ற சுற்றுச்சூழலியலாளர் வந்தனா சிவா. காலனிய காலத்துச் சட்டங்களை வைத்துக்கொண்டு, வளம்மிக்க நிலங்கள் சதுர மீட்டருக்கு ரூ. 300 என்ற சொற்பத்தொகைக்கு ஏழை விவசாயிகளிடமிருந்து அபகரிக்கப்பட்டு ரூ. 6,00,000 அளவுக்கு வீட்டுமனை வணிகர்களால் விற்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசத்தில், விளையாட்டு வசதிகளையும் ஃபார்முலா ஒன் பந்தயத் தடங்களையும் கொண்ட ‘சொகுசு’ நகர்களுக்குப் புதிய விரைவுப்பாதை ஒன்று போட்டிருக்கிறார்கள். இதற்காக 1,225 கிராமங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகளும் அவர்களைச் சேர்ந்த மக்களும் இதை எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள், இந்தியா முழுவதும் செய்வதைப் போலவே, போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்; பலர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
பிரிட்டனைப் பொறுத்தவரை, அதன் ஆயுத விற்பனைப் பிரிவின் சொற்களில் சொல்வதென்றால், இந்தியாதான் ‘முன்னுரிமை கொண்ட சந்தை’. 2010-ல் பிரிட்டனின் முன்னணி ஆயுத நிறுவனங்களின் பெருந்தலைகளை இந்தியாவுக்கு அழைத்துச் சென்ற டேவிட் கேமரூன் ஹாக் குண்டு வீச்சுப் போர்விமானங்களை இந்தியாவுக்கு விற்பதற்கான
ரூ.4,352 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ‘பயிற்சி விமானங்கள்’ என்ற போர்வையில் அபாயகரமான இந்த விமானங்கள் கிழக்கு திமோரின் கிராமங்களில் குண்டுவீசப் பயன்படுத்தப்பட்டன. தாக்கியழிக்கும் ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பதற்கான டேவிட் கேமரூனின் முயற்சி இந்த வாரம் புஸ்வாணமானது. ஊழல் புகார்களுக்கு ஆளான இந்த ஒப்பந்தமே ஒளிரும் இந்தியாவுக்கு இங்கிலாந்து அரசின் தனிப்பெரும் பங்களிப்பாகத் திகழ்கிறது.
கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே தனியாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், எல்லாவற்றையுமே விற்றுவிட வேண்டும் என்ற புதிய தாராளமயக் கொள்கையின் ஏகாதிபத்திய வழிபாட்டின் முன்மாதிரியாக இந்தியா ஆகியிருக்கிறது. சமூக ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் உலகளாவிய தாக்குதலும் பெரிய அரசியல் கட்சிகளின் ரகசியக் கூட்டும் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் 1980-ல் தொடங்கின; காணச்சகிக்காத கோரமாக நமக்குத் தோன்றும் நேரெதிர் துருவங்களின் நரகத்தை இந்தியாவில் அவை உருவாக்கிவிட்டன.
வாக்குரிமையை அளிப்பதில் ஜவாஹர்லால் நேருவின் ஜனநாயகம் வெற்றியடைந்திருக்கிறது (இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 32 லட்சம்); ஆனால், சமூக நீதியையும் பொருளாதார நீதியையும் உருவாக்குவதில் அவருடைய ஜனநாயகம் தோல்வியடைந்துவிட்டது. பெண்களுக்கு எதிராகப் பரவலாக நிகழும் வன்முறைகளைப் பற்றிய பேச்சு என்பது இப்போதுதான் அரசியல் செயல்திட்டத்தில் அதுவும் நம்பகத்தன்மையற்ற விதத்தில் இடம்பெற்றிருக்கிறது. மதச்சார்பின்மை என்பது நேருவின் மாபெரும் தொலைநோக்குத் திட்டமாக இருந்திருக்கலாம், ஆனால், உலகிலேயே மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், அதிக அளவில் பாரபட்சமாக நடத்தப்படுபவர்கள், இரக்கமின்றி நடத்தப்படும் சிறுபான்மையினர் ஆகியோருடன் வைக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர் இந்திய முஸ்லிம்கள்.
2006-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சச்சார் குழுவின் அறிக்கையின்படி, புகழ்பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் 100 மாணவர்களில் 4 பேர்தான் முஸ்லிம்கள்; நகரங்களைப் பொறுத்தவரை வழக்கமான வேலைவாய்ப்புகளில் தலித் மக்கள், பழங்குடியினர் ஆகியோருக்குக் கிடைப்பதைவிடக் குறைந்த அளவே முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்றன. “முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான வன்முறைகள் குஜராத்தில்தான், அதாவது மகாத்மா காந்தியின் மாநிலத்தில்தான், மிகவும் மோசமாக நிகழ்ந்திருக்கின்றன என்பது என்ன ஒரு முரண்பாடு!” என்று குஷ்வந்த் சிங் எழுதியிருக்கிறார்.
நரேந்திர மோடிக்கும் குஜராத்தான் சொந்த மாநிலம், தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வென்று முதல்வரானவர் அவர்; மே மாதம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் துணிச்சலற்ற ராகுல் காந்தியை வழியனுப்பப்போகிறவர் என்று கருதப்படுபவர்.
மாற்று இனங்களின் மீது துவேஷம் கொண்ட இந்துத்துவா சிந்தாந்தத்தைக் கையிலெடுத்திருக்கும் மோடி, முஸ்லிம்களுக்கு ‘தனிச்சலுகைகள்’ காட்டப்படுவதாக நம்பும் ஏழை எளிய இந்துக்களை எளிதில் கவர்கிறார். 2002-ல் இவர் ஆட்சிக்கு வந்ததுமே நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் பல்வேறு கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலையாளர்களைத் தடுத்து நிறுத்த வேண்டாமென்று போலீஸ் அதிகாரிகளுக்கு மோடி கட்டளையிட்டார் என்று ஒரு விசாரணைக் குழுவிடம் சொல்லப்பட்டது, மோடியோ அதை மறுத்திருக்கிறார். சக்திவாய்ந்த பெருமுதலாளிகளால் புகழப்பட்ட மோடி, இந்தியாவிலேயே அதிக வளர்ச்சியைத் தனது மாநிலம் அடைந்திருப்பதாகப் பெருமிதப்படுகிறார்.
இந்த அபாயங்களுக்கெல்லாம் மத்தியில், இந்தியாவுக்கு விடுதலையைப் பெற்றுத்தந்த மகத்தான மக்கள் எழுச்சி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. 2012-ல் டெல்லி மாணவி, கும்பல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டபோது ஏராளமானோர் தெருவுக்கு வந்து போராடினார்கள்.
அரசியல் அதிகார வர்க்கத்தின் மீது மக்களுக்குள்ள அதிருப்தி, அநீதியையும், நிலப்பிரபுத்துவத்துடன் கடுமையான முதலாளித்துவம் கூட்டுசேர்வதையும் அந்த அதிகார வர்க்கம் அனுமதிப்பதில் தங்களுக்குள்ள கோபம் ஆகியவற்றை மக்கள் வெளிப்படுத்தினார்கள். இதுபோன்ற வெகுஜன இயக்கங்கள் மேதா பட்கர், பினாலக்ஷ்மி நேப்ராம், வந்தனா சிவா, அருந்ததி ராய் போன்ற பெண்களால்தான் பெரும்பாலும் முன்னின்று நடத்தப்பட்டன. ஏழை எளிய மக்களும் பாதிக்கப்படுபவர்களும் பலவீனமானவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இதுதான் உலகத்துக்கு இந்தியா அளித்ததும் நீடித்து நிலைக்கக் கூடியதுமான பரிசு, அதிகாரத்திலிருக்கும் ஊழல் பேர்வழிகள் இதை அலட்சியப்படுத்தினால் அவர்களுக்குத்தான் அழிவு.
© கார்டியன், தமிழில்: ஆசை
'தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க:
இருவேறு இந்தியா சொல்லும் சேதி
No comments:
Post a Comment