எங்கெங்கும் இசைவில்லாத சூழல். தலைசுற்றுகிறது. டெக்குவாவில் உள்ள பிரதான சாலை ஒன்றிலிருந்து, தள்ளி அமைந்திருக்கும் ஃபெலாஃபெல் கடை அது (ஃபெலாஃபெல்: உருண்டையாக இருக்கும் ஒரு வகை தின்பண்டம்). கடையிலுள்ள சுவரின் ஒரு மூலையில் மாட்டப்பட்டிருக்கும் தொலைக்காட்சியில் செய்திகள் அரபி மொழியில் ஓடிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் காஸாவைப் பற்றிய செய்திகள். மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கும் பெண் ஒருத்தியைக் காட்டுகிறார்கள்; அவள் முகமெல்லாம் சின்னச் சின்னதாக ஏராளமான காயங்கள்; சில காயங்கள் மிகவும் மோசம்; அநேகமாக வெடிகுண்டுச் சிதறலால் ஏற்பட்டிருக்கலாம். அவளால் பேச முடியவில்லை; தூங்கித் தூங்கி விழுவதுபோல் தெரிகிறது (அது தூக்கம்தான் என்றும், மரணம் இல்லை என்றும் நம்புவோம்). அவளுக்கு அருகே, இரண்டு வயதுக் குழந்தை ஒன்று அழுதுகொண்டிருக்கிறது. நம்பிக்கையை இழந்து, தன் தாயின் கையைப் பற்றியபடி, அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே அழுகிறது.
கடையின் முதலாளியான அந்த இளைஞன், தன் முன் மலைபோல இருக்கும் கொண்டைக்கடலை மசாலாவிலிருந்து கரண்டியைக் கொண்டு சிறுசிறு உருண்டைகளை வறண்டி எடுத்து, வாணலியில் உள்ள எண்ணெயில் இட்டுப் பொரிக் கிறான். அவை நன்கு பொரிந்தபின் ஒவ்வொன்றாக எடுத்துத் தன் முன்னால் லாவகமாக அடுக்குகிறான். அவன் நிச்சயம் ஒரு கலைஞன்தான். அவனுக்குத் தான் செய்யும் வேலை மீது ஆழ்ந்த காதல் இருக்கிறது. அதேபோல், எங்களுக்கு உணவு தருவதிலும் அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். இஸ்ரேலால் சமீபத்தில் அபகரிக்கப்பட்ட நிலங்களில் மதியப் பொழுதைக் கழித்துவிட்டு, அந்தக் கிராமத்துப் பெரியவர்களுடன் அந்தக் கடைக்கு வந்திருக்கிறோம் நாங்கள். பாலஸ்தீனர்களின் விருந்தோம்பல் முறையைப் பறைசாற்றும் விதத்தில் இன்முகத்துடன் அந்த இளைஞன் எங்களை வரவேற்றான்.
நான் சாப்பிட்டதிலேயே அருமையான ஃபெலாஃபெல் அதுதான். சாப்பிட்டு முடித்துவிட்டு அந்த இளைஞனிடம் நன்றி சொல்வதற்குச் சென்றேன். “ஃபெலாஃபெல் அருமையாக இருந்தது” என்று சொன்னேன்.
“உங்கள் ஆரோக்கியத்துக்காக” என்று சொல்லிவிட்டு, “மீண்டும் அவசியம் நீங்கள் வர வேண்டும்” என்றான் அந்த இளைஞன்.
அங்கேயும் சாத்தியமாகுமா?
இணக்கமான சூழல். ஆனால், இங்கிருந்து 100 கி.மீ-க்கு அப்பால் யூதர்களும் பாலஸ்தீனர்களும் ஒருவரை யொருவர் கொன்றுகொண்டிருக்கிறார்கள், கழுதைப்புலி களுக்கே உரிய குதூகலமான மூர்க்கத்துடனும், ஓரிறைக் கோட்பாட்டாளர்களுக்கே உரிய சூம்பிப்போன நியாய வாதங்களுடனும். இந்த இசைவின்மை தலைசுற்ற வைக்கிறது. இங்கே சமாதானம் சாத்தியமென்றால், அங்கே ஏன் சாத்தியமில்லை? “அங்கேயும்கூட சாத்தியம்தான்” என்றார் என்னுடன் வந்த கய்.
நாங்கள் டெக்குவாவுக்கு வந்தது ஏன்? வழக்கமான காரணம்தான். இஸ்ரேலிய இளைஞர்கள் மூவர் கடத்திக் கொல்லப்பட்ட பிறகு, இங்குள்ள இஸ்ரேலியக் குடி யேறிகள், “சரியான யூதப் பதிலடி தரப்படும்” என்று அறிவித்தனர். தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளின் ஆதரவுதான் இதற்குக் காரணம்.
நிலங்களின் உரிமையாளர்களை இன்று எங்களுடன் அழைத்துப்போவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அவர் களுக்குப் பயம். அந்த விளைநிலங்களும் மேய்ச்சல் நிலங்களும் டேக்குவா-4, நோக்திம் ஆகிய இடங்களின் குடியேற்றப் பகுதிகளையொட்டி அமைந்திருக்கின்றன. எனவே, இங்கு வருவதென்பது ஆபத்தான விஷயம். கய்யும், எஸ்ராவும் இங்குள்ள குடியேறிகளால் மூர்க்கமாகத் தாக்கப்பட்டிருக்கின்றனர். ஆக்கிரமிப்பாளர்களாலும் ராணு வத்தினராலும் இன்று நாங்கள் தாக்கப்படுவதற்கு 50% வாய்ப்பு இருப்பதாக எஸ்ரா என்னை எச்சரித்தார்.
சொந்தக் கருத்துகள் கிடையாது
அந்த கேரவன்கள் இருக்கும் இடத்துக்குச் சில கஜங்கள் அருகே வந்ததும் சற்றே நின்றோம். ராணுவத்தினர் வரு வார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அதேபோல் அவர்கள் வரவும் செய்தனர். எங்களிடம் விசாரிப்பதற்காக ராணுவத்தினர் இருவர் அந்தக் குன்றில் ஏறி வந்தார்கள். அவர்களுடன் பேசும்படி, இந்த இடத்தைப் பற்றி அவர்களுக்கு விளக்கும்படி எஸ்ரா என்னிடம் சொன்னார்.
“இந்த இடத்துக்கு யார் பொறுப்பு?” என்று கேட்டார்கள்.
“யாரும் பொறுப்பு இல்லை. ஆனால், உங்களுடன் பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்றேன்.
“இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
“இங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக இந்த நிலங்களின் உரிமையாளர்களுடன் நாங்கள் வந்தோம்” என்றேன்.
“குடியேற்றப் பகுதிகளில் வந்து ஏதாவது போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.
“இல்லை. ஆனால், இந்த ஆக்கிரமிப்புகளும் குடியேற்றங் களும் சட்டவிரோதமானவை என்பதையும் இஸ்ரேல் அரசின் ஆதரவுடன் நடக்கும் அபகரிப்பு என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றேன்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தப் பகுதி தரைமட்ட மாக்கப்படுவதை இரண்டு வாரங்கள் தள்ளிப்போட்டு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்பது மட்டும் தெரியும்.”
“உண்மைதான். ஆனால், இப்படித்தானே எல்லா குடியேற்றங்களும் தொடங்கின. அதெல்லாம் இருக்கட்டும். இதைப் பற்றியெல்லாம் உங்களுக்கென்று ஒரு சொந்தக் கருத்து இருக்குமல்லவா?”
“சொந்தக் கருத்தா? நான் சீருடை அணிந்திருக்கிறேன். நான் யோசிக்கத் தேவையில்லை.”
இந்த முறை அவர்கள் எங்களை விரட்டு வதற்கு முயற்சிக்கவில்லை. நாங்கள் எங்களுடைய எதிர்ப்பைக் காட்டலாம் என்றும் அதில் அவர்கள் தலையிடப் போவதில்லை என்றும் சொன்னார்கள். கய் அவர்களுடன் விவாதம் செய்ய முயற்சித்தார். ஆனால், அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. ராணுவத்தினரைச் சேர்ந்த டேனியலிடம் பேச்சுக்கொடுத்தேன். கல்லூரியில் தத்துவம் படித்துக்கொண்டிருக்கும் இளைஞன் அவன். இந்த ஆண்டு அறவியலில் இரண்டாண்டு காலப் படிப்பில் சேர்ந்திருக்கிறான். ஏட்டளவில் இருக்கும் அறத்தைவிட, நடைமுறை அறத்தை நோக்கி அவன் நகர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றேன் அவனிடம். ஏனெனில், அதுதானே நிதர்சனம்?
இப்படித்தான் ஆரம்பிக்கும்…
இப்படியே கொஞ்சம்கொஞ்சமாக, நிலங்களின் உரிமையாளர்களை அவர்களுடைய ஆடுகளுடன் அங்கே திரும்பி வரச் சொல்லிப் பார்க்கலாம்; இங்கேயும் நீதிமன்றங்களிலும் அவர்களுக்கு உதவுவதற்கு எங்களுடன் அவர்கள் துணைநிற்கச் செய்யலாம். மறுபடியும் அவர்களுடைய நிலங்கள் அவர்களுக்கேகூடக் கிடைக்கலாம். இதற்கு முன்பு டெக்குவாவில் எங்களுக்குச் சில வெற்றிகள் கிடைத்திருந்தன. ஆனால், இப்போது இங்கே நம் கண்முன்னேயே, எல்லாம் புரையோட ஆரம்பித்திருப்பதைக் காண முடியும். ஓரிரு கேரவன்கள், அப்புறம் வலதுசாரிகளின் மனுவுக்குப் பதிலளித்துக் குடியேறிகளை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றம், அப்புறம் அதிகாரிகள் மூலம் கொட்ட ஆரம்பிக்கும் பணம்… இதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் முன்னே அந்தக் குடியேறிகளுக்கு மின்வசதி, நீர்வசதி எல்லாம் கிடைப்பதற்கு வழிவகைகளும் செய்யப்பட்டுவிடும். அப்புறம் அவர்களைப் பாதுகாப்பதற்கும், அந்த இடங்களின் உரிமையாளர்களான பாலஸ்தீனர்களைச் சீண்டுவதற்கும் ராணுவத்தினர் அடங்கிய சிறு படை ஒன்றும் தரப்படும். இதற்கிடையே காஸா போர் வேறு. பிராந்தியங்களின் பல இடங்களில் நிலைமை வேறு சரியில்லை; நிறைய இடங்களில் வெளியுலகத்துடனான தொடர்பும் அறுந்துவிட்டது இப்போது. சுஸ்யா பிராந்தியத்திலிருந்து நாஸர் என்னை இன்று அழைத்து, எக்காரணம் கொண்டும் யாட்டாவுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
எப்போதும் உணர்ச்சிகள் கிடையாது
உம் அல்-அராய்ஸில் வழக்கமான காட்சிகள் அரங்கேறின. சயீது, ஆவாது இனக் குழுவினருடன் அவர்களுடைய நிலங்களை நோக்கிச் சென்றோம். அதிகாரபூர்வமாக கையெழுத்திடப்பட்ட ஆணை ஒன்றையும், தடை செய்யப் பட்ட ராணுவப் பகுதியின் வரைபடம் ஒன்றையும் ராணுவத்தினர் எங்களிடம் காட்டினார்கள். அமித்தாய் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அந்தப் பள்ளத்தாக்கின் மையத்துக்குச் சென்று அமைதியாக ஒரு பாறையின் மீது உட்கார்ந்துகொண்டார். ராணுவத்தினர் அவரைக் கைதுசெய்தனர்.
அவர்களின் ஒருவன், “என்றாவது ஒரு நாள் டெல் அவிவ் நகர வீதியொன்றில் வைத்து உன்னை நான் வன்புணர்ச்சி செய்துவிடுவேன்” என்று அமித்தாயை எச்சரித்தான். அவர்களில் ஒருவனிடம், “உங்களால் துரத்தியடிக்கப்படும் பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் முகங்களில் ஏதாவது உணர முடிகிறதா உங்களால்?” என்று கேபி கேட்டார். “எனக்கென்று உணர்ச்சிகள் ஏதும் கிடையாது” என்று பதில் சொன்னான் அவன்.
“சீருடையில் நீங்கள் அப்படி இருக்கலாம். சீருடையில் இல்லாதபோது?” என்று கேபி கேட்டார்.
“சீருடையில் இல்லாதபோதும் எனக்கு உணர்ச்சிகள் கிடையாது” என்றுதான் பதில் வந்தது.
ஆன்ம மரணம்
அந்தப் பதில் எல்லாவற்றையுமே சொல்லிவிடுகிறது என்று நினைக்கிறேன். இஸ்ரேலின் ஒட்டுமொத்தக் கதையும் அந்த ஆன்ம மரணத்தில் அடங்கியிருக்கிறது. காஸாவில் நடந்துகொண்டிருக்கும் போரில் இது தெளிவாகத் தெரிகிறது. உள்ளுக்குள்ளே நீங்கள் இறந்துபோயிருந்தால் நீங்கள் எதுவும் செய்வீர்கள். குழந்தைகளைக் கொன்று விட்டுக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடலாம். யூதர் களாகிய நமக்கு என்னவாயிற்று? முன்பு நாமெல்லாம் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாகவும் சுய விமர்சனம் செய்துகொள்பவர்களாகவும் இருந்தோம்; தாக்குதல்களுக்கும் தீங்குகளுக்கும் எளிய இலக்குகளாகவும் இருந்தோம். ஆயினும், நம் மூளை, இதயம் ஆகியவற்றின் துணைகொண்டு தப்பிப்பிழைத்தோம். ஆனால், இப்போது நாம் கடுமையானவர்களாக ஆகிவிட்டோம்; அச்சுறுத்தல், பலவந்தம் மற்றும் பழிக்குப் பழி ஆகியவற்றின் மொழியில் பேச ஆரம்பித்துவிட்டோம்.
ஜிலோ குடியிருப்புப் பகுதியில் நிறைய பதாகை கள் வைக்கப்பட்டிருக்கின்றன. சங்கீதம் 18:38-லிருந்து ரத்தவேட்கை கொண்ட வரிகள் அந்தப் பதாகைகளில் இடம்பெற்றிருக்கின்றன: “என் எதிரிகளைத் துரத்திச்சென்று அவர்களை வெற்றிகொள்வேன்; அவர்களைப் பூண்டோடு அழிக்காமல் நான் திரும்ப மாட்டேன்.”
அதிசயத்துக்கான காத்திருப்பு
இதையெல்லாம் தாண்டி அவ்வப்போது சில அதிசயங்களும் நடக்கத்தான் செய்கின்றன. ஆம், புதிதாய் சில தன்னார்வலர்கள் எங்களுடன் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களில் நோவா என்ற இளம் பெண்ணும் அடக்கம். மொஷவ் குடியேற்றப் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், எப்படியோ எங்கள் தாயுஷ் அமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, எங்களுடன் சேர்ந்திருக்கிறார். அதையெல்லாம் விட முக்கியமானது என்னவென்றால், எல்லா இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும், போரின்போது உச்சத்தில் இருக்கும் மதரீதியான மூளைச் சலவைகளை மீறியும், சுயமாகச் சிந்தித்தல் என்ற அற்புதப் புதையலைக் கண்டடைந்திருக்கிறாள் அந்தப் பெண்.
கடவுள் நிச்சயமாக இருக்கிறார்!
- டேவிட் ஷுல்மன், இஸ்ரேல் அறிஞர், சங்க இலக்கியத்தை ஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்தவர், இஸ்ரேலியர்கள் அபகரித்துக்கொண்ட நிலப் பகுதிகளை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக் கொடுக்கும் நோக்கில் செயல்படும் ‘தாயுஷ்' (அமைதி இயக்கம்) அமைப்பைச் சேர்ந்தவர்,
தொடர்புக்கு: ddshulman@yahoo.com, தமிழில்: ஆசை
இஸ்ரேலிலிருந்து ‘தி இந்து’வுக்காக எழுதப்பட்ட பிரத்தியேகக் கட்டுரை
‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: யூதர்களாகிய நமக்கு என்னவாயிற்று?
No comments:
Post a Comment