Monday, August 4, 2014

மௌனி: தமிழின் வசீகரக் கனவு

(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் மௌனியின் 107-வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம். ‘தி இந்து’ கட்டுரையை இந்த இணைப்பில் படிக்கலாம்: http://tamil.thehindu.com/general/literature/மௌனி-தமிழின்-வசீகரக்-கனவு/article6274985.ece)


ஆசை

மௌனியின் கதைகளில் முதன்முறையாக நுழையும் ஒருவருக்குக் கிடைப்பது பாழடைந்த ஒரு வீட்டுக்குள் நுழையும் உணர்வுதான். அந்தக் கால முறைப்படி அமைந்த வீடு; உயர்ந்த திண்ணைகள், நீண்ட ஆளோடி, விசாலமான கூடம், முற்றம், தானே காற்றில் அசைந்துகொண்டிருக்கும் ஊஞ்சல். உங்களுக்கு மூச்சுமுட்டும். வெளியே ஓடிவிடத் தோன்றும்.
ஆனால், அந்த வீட்டின் ‘பாழ்பட்ட வசீகரம்’ உங்களை வெளியிலும் விடாது. இதுதான் விதிபோலும் என்று நினைத்துக்கொண்டு வீட்டை மேலும் துழாவிப் பார்ப்பீர்கள். அப்படித் துழாவ முயல்பவர்களின் கண்ணுக்குத்தான் தெரியும், சுவரில் ஒட்டடை படிந்து தொங்கும் கருப்புவெள்ளைப் புகைப்படங்கள். சற்று நெருங்கிச் சென்று பார்க்கும்போது அந்தப் புகைப்படங்களில் ஒன்று உங்களை வசீகர மர்மத்துடன் சுண்டியிழுக்கும். பதின் வயதுகளின் இடைப்பகுதியில் இருக்கும் பெண் ஒருத்தியின் புகைப்படம்தான் அது. உற்றுப்பார்ப்பீர்கள். அழகும் சோகமும் ஒருசேர இணைந்திருக்கும் அந்தப் பெண்ணின் உதடுகள் அசைந்து அசரீரி போல் ஏதோ ஒலிக்கும். உற்றுக்கேட்கிறீர்கள். ‘நான் விதியின் நிழல். என்னிடம் காதலின் முழு வசீகரக் கடுமையை நீ காணப்போகிறாய்…’
இதற்குப் பிறகு உங்களால் என்ன செய்ய முடியும்? மௌனியின் கதைகளில் உலவுவதும் அதுபோலத்தான்.

யாளி சொல்வதென்ன?
மௌனியின் கதைகளில் வரும் பெண்கள் ஏதோ சொல்லுவதைப் போன்ற பார்வையையும் முக பாவத்தையும் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மட்டுமல்ல, பறவைகள், மாட்டுவண்டி, கோயில் யாளி, வௌவால்கள், மலைக்கோட்டை... இப்படியாக எல்லாமும் எதையோ சொல்ல முயல்வதாகக் கதையின் நாயகர்களுக்குத் தோன்றுகிறது. அதோ அதோ என்று காட்டி, காட்சிக்கு இடம் கொடுத்துவிட்டு மறையும் சுட்டுவிரல் போல எதையோ ஒன்றைச் சுட்டிக்காட்டிவிட்டு மறைந்துவிடுகின்றன அவையெல்லாம். நமக்கும் சில சமயம் ஏதாவது ஒரு இடத்துக்குச் செல்லும்போது அங்கே கட்டிடம், கோயில், பழைய கடைவீதி, ஊருக்கு வெளியே ஓடும் ஆற்றங்கரை மரங்கள், கரையோரச் சுடுகாடு போன்றவற்றைப் பார்க்கும்போது அமானுஷ்யம், முன்நினைவு, கனவம்சம், தொன்மையுணர்வு எல்லாம் கலந்த ஒரு உணர்வு ஏற்படும். எல்லாமும் எதையோ சொல்வதைப் போன்று தோன்றும். இந்தச் சூழலை நாம் எழுத்திலோ பேச்சிலோ வெளிப்படுத்த முயலும்போது மொழி முன்னகராத திணறலையோ, அல்லது முன்சொன்ன உணர்வுகள் ஏதும் வெளிப்படாத துல்லியமான, தர்க்க அடிப்படையிலான வெளிப்பாட்டைத்தான் நம்மால் உருவாக்க முடியும். தர்க்கத்தால் விளக்க முடியாத உணர்வை விளக்க, தர்க்கத்தை மீறிய மொழி வேண்டும். அது மௌனிக்கு மட்டுமே தமிழில் சாத்தியமாகியிருக்கிறது.

மொழியையும் சிந்தனையையும் மீறி…
தமிழில் பிற எழுத்தாளர்கள் மொழியின் எல்லைக்குள் நின்றபடி, மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்தி மொழியின் எல்லை வரை சென்றிருக்கிறார்கள். இதில் பற்பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால், மௌனி தொடங்கிய இடமே மொழியின் எல்லைதான். மொழியின் எல்லையிலிருந்து தாண்டித்தாண்டிக் குதிக்க முயன்று பல இடங்களில் தாண்டியும் சென்றிருக்கிறார்; பிரபஞ்சத்தின் விளிம்பில் நின்றுகொண்டு அப்பால் எட்டிப்பார்க்க முயல்வதுபோல்.

மொழியை மீறிச்செல்ல முயன்றவர் என்று மட்டும் மௌனியை வர்ணித்தால் அது பெரும் பிழை. அனுபவத்தையும் சிந்தனையையும் மீற முயன்றவர் அவர். அதனால்தான், ‘காதலின் வசீகரக் கடுமை’, ‘எவற்றின் நடமாடும் நிழல்கள்’, ‘வாழ்க்கை? ஒரு உன்னத மனவெழுச்சி’ போன்ற அற்புதங்களெல்லாம் சாத்தியமாகியிருக்கின்றன. மேலும், சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:
‘அவள் உள்ளே கிடக்கிறாள். படர்ந்த பிரபஞ்சத்தின் மூலையில் ஒன்றி மறைய.’
‘வெளியுலகு மடியுமட்டும் உள்ளே கேட்கும் கோர சப்தங்கள்.’
‘இவை எல்லாம் அர்த்தமற்ற பேச்சுக்கள்; வளைந்த வானம் எதிரொலிக்காத சப்தங்கள்.’
‘அநந்தத்திலும் அவியாது என்னுள் இருந்து உன்னைப் பார்த்ததும் உணர்வு கொள்ளுவது எது?’
மேலும், ‘நினைவுச்சுவடு’ கதையில் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று ஒரு வீட்டு வாசலில் நிற்கிறான் நாயகன் சேகரன். வீட்டின் வாயிற்புறம் இருட்டாக இருக்கிறது அப்போது ‘சேகரா- வரக் கூடாதா’ என்ற அசரீரியான சப்தம் கேட்கிறது. அந்த சப்தம் எப்படித் தோன்றியிருக்கக் கூடும் என்று மௌனி சொல்வது பேரற்புதம்: ‘எத்தனையோ காலம் மௌனமாக நின்ற அந்த இருட்டு அப்போது ஒரு உணர்ச்சி வேகத்தில் சப்தமாக உருவாகியது போலும்!’
கால-வெளி
மௌனியின் தருணங்கள் காலமும் இடமும் முயங்கியவை, ஐன்ஸ்டைன் சொன்ன கால-வெளி போன்று. நகுலன் கவிதையில் வருவதுபோல காலம் இடமாகத் தெரியும் தருணங்கள் அவை. பிரபஞ்சவியலில் கருந்துளை என்று ஒன்று உண்டு. கருந்துளையினுள் காலம் = நிச்சலனம். கருந்துளையினுள் ஒரு தேக்கரண்டியளவு பருப்பொருள் பூமியளவு கனக்கும். கருந்துளை ஒளியைத் தப்ப விடாது. தன்னைக் கடந்துசெல்லும் ஒளியையும் வளைத்து உறிஞ்சிக்கொள்ளும். அதனுள் வழக்கமான இயற்பியல் விதிகள் எதுவும் செல்லாது. மௌனியின் மொழியும் தருணங்களும்கூட கருந்துளையைப் போலத்தான்.

மௌனியின் கதைகளைப் படிப்பவர் கனவுலகத்தில் நடமாடுவதுபோல உணர்வார். கனவைப் போன்று தர்க்கத்துக்குள் அகப்படாத சம்பவங்கள் மௌனியின் கதைகளில் நிறைய வரும். நாம் கனவு காணும்போது ஒரு சாதனம் நம் கனவை அப்படியே மொழி வடிவில் பிரதியெடுத்தால் எப்படி இருக்கும் அதைப் போன்றவைதான் மௌனியின் கதைகளும். ஆனால் வெறுமனே சம்பவங்களைக் குலைத்துப் போடுவதாலோ கால-வெளி பின்னணியைச் சரித்துவிடுவதாலோ மட்டும் மௌனி இதையெல்லாம் சாதிக்கவில்லை. அர்த்தமற்ற சம்பவங்களின் மங்கிய பின்புலத்தில் அவற்றை ஒன்றுசேர்த்து ஒரு சரடுபோல் ஓடும் மொழிதான் அவரது சாதனைக்குப் பிரதானக் காரணம். அர்த்தமின்மையின் கடலிலிருந்து திடீர் திடீரென்று தெறித்து விழும் மொழியின் அந்தத் தெறிப்புகள் அபாரமானவை.


பிரபஞ்ச ஒருமை
மொழியின் மீறல்கள், சிதைந்த கால-வெளி ஆகிய எல்லாவற்றுக்கும் அடியில் பிரபஞ்ச ஒருமையைப் பற்றிய ஆழ்ந்த தேடல் ஒன்று மௌனியின் கதைகளில் புதைந்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் எல்லா சப்தங்களையும் ஆழ்ந்த நிசப்தம் ஒன்றின் வெளிப்பாடுகளாகத்தான் அவர் காண்கிறார்: ‘எவ்வித உலக சப்தமும் பிரபஞ்ச பயங்கர நிசப்தத்தைத்தான் உணர்த்தியது.’  ‘மாபெரும் காவியம்’ கதையில் தனது காவியம் அழிந்ததில் ஆனந்தப்படும் கிட்டு இப்படி உணர்கிறான்: “மலரினின்றும் பிரிந்து வதங்கிய இதழைவிட்டுச் சென்ற மணத்தை எங்கும் உணர்ந்தான். எதற்காக மலரையும் மணத்தையும் ‘அவன்’ ஒன்று சேர்த்தான். கேவலம் இது தொழில் செய்வதில் கொள்ளும் ஆனந்தத்திற்காகவா?’ இதேபோல், ‘பிரபஞ்சகானம்’ சிறுகதையிலும், பிரபஞ்சமும், பிரபஞ்சத்தின் சப்தங்களும் காட்சிகளும் ஏதோ குறைவுபட்டவைபோல் தோன்றுகின்றன. காரணம்?-
“அவள்தான் சங்கீதம்; பிரபஞ்ச கானம் அவளுக்குள் அடைபட்டுவிட்டது… அவளுடைய சங்கீதம் வெளி விளக்கம் கொள்ளாததால் இயற்கையே ஒரு வகையில் குறைவுபட்டது போலவும் வெளியில் மிதப்பது வெறும் வறட்டுச் சப்தம்தான் என்றும் எண்ணலானான்.”
“… இயற்கை அன்னை அளிக்கக் கூடிய, அளிக்க வேண்டிய இன்பம் பாதிக்குமேல், (சப்த ரூபத்திலும், காட்சி ரூபத்திலும்) அவளிடம் அடங்கி மறைந்து போய்விட்டது.”

பிரபஞ்சமும் தன்னிடம் குறைவுபட்ட ஒன்றை அவளிடமிருந்து எடுத்துக்கொள்ளத் துடிக்கிறது. அவளிடம் அடைபட்டுக்கிடக்கும் பிரபஞ்சத்தின் அம்சமும் ஆரம்பத்திலிருந்து வெளிப்படத் துடிக்கிறது. இறுதியில் பாடிப்பாடி பாடலின் முடிவில் உயிரைவிடுகிறாள். பிரபஞ்சத்திடம் குறைவுபட்ட அம்சம் மறுபடியும் பிரபஞ்சத்தோடு இணைந்துகொண்டது. அப்போது ‘உலகப் பேரிரைச்சல் ஒரு உன்னத சங்கிதமாக ஒலித்தது.’
‘நினைவுச்சுழல்’ கதையிலும் இப்படித்தான்: ‘ஹிருதயத்தின் சங்கீத ஒலி சப்தமின்றி வெளி வியாபகம் கொள்ளும் என்ற நினைப்பினால், அதை விடாது பிடித்து விரல் நுனிவழியே பிடில் தந்திகளிலேயே ஏற்றி நாதரூபமாக்கச் சிரமப்பட்டான்.”
பிரபஞ்சமும் பிரபஞ்ச அம்சமும் ஒன்றுதான் எனினும் ஏதோ ஒரு விஷயம் அவற்றைப் பிரிக்கிறது. பிறகு ஒன்றையொன்று அடைய முயற்சிக்கின்றன. இதன் நிழலாட்டம்தான் வாழ்க்கையோ என்று மௌனி கேள்வி எழுப்பிவிட்டுச் செல்கிறார்.

நீண்ட முத்தத்தில் வாழ்க்கை
மௌனி கதைகளில் வரும் உறவுகள் விசித்திரமானவை. வழக்கமான உறவுகளில் கூட அசாதாரணமான பிணைப்பை ஏற்படுத்திவிடுவார் மௌனி. ‘சிகிச்சை’ கதை அற்புதமான அன்பைச் சுமந்த கதை. சாகும் தறுவாயில் இருக்கும் மனைவி (கமலா) ‘தான் இறப்பினும் தன் ஜீவிய ஞாபகத்தை ஒரே பார்வையில் பதித்துச் செல்ல முயலுவது போன்று’ தன் கணவனை (சீனு) பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் இறந்தபின் தன் வாழ்க்கை எப்படிக் கழியும் என்று அரற்றிக்கொண்டிருந்த கணவனை அருகில் வரச்சொல்லி ஒரு முத்தம் அளித்துவிட்டு இப்படிச் சொல்வாள்:
‘ “இப்போது தெரிந்ததா உங்களுக்கு பின்னால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்குமென்று?” ஒரு நீண்ட முத்தத்தில் கழியும் போலும்.’ இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவர் கோமதி ஆண்களையும் திருமணத்தையும் வெறுப்பவர். ஆனால், அவர் மனதிலும் ஒரு சலனம் ஏற்படுகிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இவ்வளவு அன்பு இருக்க முடியுமா என்று தோன்றுகிறது. பிறகு, சீனுவைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் கோமதி இறுதியில் சொல்கிறாள்: “உங்களைத் தனியாக உங்களுக்காகவே நான் உங்களை மணக்கவில்லை. என்னுடைய மனதைக் கவர்ந்து ஆட்கொண்ட கமலாவின் நினைவு ததும்பி இருக்கும் உங்களைத்தான் நான் காதலித்து மணம் செய்துகொண்டேன்.” ஒருவரின் நினைவு எப்போதும் ததும்பி இருக்கும் மனது எவ்வளவு களங்கமில்லாத, அற்புதமான மனது! அதற்காகவே அந்த மனதைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் மனது இன்னும் எவ்வளவு அற்புதமானது! அந்த உறவுதான் எவ்வளவு ஆனந்த வசீகரம்!
பால் ஆஸ்டர் என்ற அமெரிக்க எழுத்தாளரின் ‘நியூயார்க் டிரைலாஜி’ நாவல் தொகுப்பில் ஒரு கதையின் நாயகனான துப்பறியும் நிபுணருக்கு ஒரு வேலை வரும். ஒருவர் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்தபடி தொடர்ந்து அவரைக் கண்காணிக்க வேண்டிய வேலை. தொடர்ந்து நாட்கணக்கில், மாதக் கணக்கில், கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்து, அவரைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் துப்பறியும் நிபுணர் ஒரு கட்டத்தில் தனக்கு இந்த வேலையைக் கொடுத்தது யார் என்று துப்பறிய ஆரம்பிப்பார். தான் யாரைக் கண்காணிக்கிறோமோ அவர்தான் தன்னை  இந்த வேலையைச் செய்யப் பணித்தது என்று தெரியவருகிறது. எதனால், இப்படியொரு கிறுக்குத்தனமான செயலை அவர் செய்விக்க வேண்டும்? அங்கேதான் இருக்கிறது புதிர். தன் வாழ்வில் ஏதாவது அர்த்தம் கிடைக்குமா என்பதை அறிந்துகொள்ளத்தான் இப்படிச் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல் இன்னொருவரின் பார்வை அல்லது கண்காணிப்பு தன் இருப்பை நிஜப்படுத்துகிறது என்றும் அவர் உணர்ந்ததால்தான் இப்படிச் செய்திருக்கிறார். இதைப் போலத்தான், ஒருவரில் இன்னொருவரைக் காண்பது, ஒருவரின் இருத்தல் இன்னொருவரின் இருத்தலை (அந்த இன்னொருவர் இறந்துவிட்டாலும்கூட) நிஜப்படுத்திக்கொண்டிருப்பது, நீட்டித்துக்கொண்டிருப்பது என்பன தொடர்ந்து மௌனியின் கதைகளில் வரும் (மலைக்கோட்டை, பிரக்ஞைவெளியில், நினைவுச்சுழல், எங்கிருந்தோ வந்தான்).

மௌனியின் சிறுகதைகளைப் பற்றி சொல்லும்போது ‘தமிழர்கள் பாக்கியசாலிகள்’ என்றார் க.நா.சு. தமிழின் சாத்தியங்கள் எவையெவை என்பதை ஒருவர் அறிய விரும்பினால் மௌனியின் கதைகளைப் படித்தே ஆக வேண்டும். தமிழில் மௌனியின் கதைகள் மட்டும் இல்லையென்றால், ‘பிரபஞ்சகானம்’ சிறுகதையில் வருவதைப் போல, தமிழ் இலக்கியம் ஏதோ குறைவுபட்டதாகவே இருந்திருக்கும். ஒருவர் மகத்தான எழுத்தாளராகக் கொண்டாடப்படுவதற்கு 24 கதைகள் மட்டுமே போதுமா என்று மௌனியைப் படிக்காத ஒருவர் கேட்கலாம். ஆனால், அவரே மௌனியை ஊன்றிப் படிப்பாரெனில் ஒரு வாழ்க்கைக்கு இந்தக் கதைகள் மட்டுமே போதுமானவை என்றும் சொல்லத் தோன்றும். (அப்படிச் சொன்ன நண்பன் ஒருவன் எனக்கு இருக்கிறான்.) ஆம், மௌனியின் கதைகளைப் படிப்பதென்பது வாழ்க்கையை ‘நீண்ட முத்தமொன்றில் கழிப்பதுபோலத்தான்’.
                         
               


’தி இந்து’ நாளிதழில் வெளியான சுருக்கமான வடிவம்:

மௌனி: தமிழின் வசீகரக் கனவு
ஆசை

 (மௌனி: பிறப்பு - 27.07.1907 இறப்பு - 06.07.1985)

தமிழில் பிற எழுத்தாளர்கள் மொழியின் எல்லைக்குள் நின்றபடி, மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்தி மொழியின் எல்லை வரை சென்றிருக்கிறார்கள்இதில் பற்பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால், மௌனி தொடங்கிய இடமே மொழியின் எல்லைதான். பிரபஞ்சத்தின் விளிம்பில் நின்றுகொண்டு அப்பால் எட்டிப் பார்க்க முயல்வதுபோல்.
மொழியை மீறிச் செல்ல முயன்றவர் என்று மட்டும் மௌனியை வர்ணித்தால் அது பெரும் பிழை. அனுபவத்தையும் சிந்தனையையும் மீற முயன்றவர் அவர். அதனால்தான், ‘காதலின் வசீகரக் கடுமை’, ‘எவற்றின் நடமாடும் நிழல்கள்’, ‘வாழ்க்கை? ஒரு உன்னத மனவெழுச்சிபோன்ற அற்புதங்களெல்லாம் சாத்தியமாகியிருக்கின்றன.
நினைவுச் சுவடுகதையில் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று ஒரு வீட்டு வாசலில் நிற்கிறான் நாயகன் சேகரன். வீட்டின் வாயிற்புறம் இருட்டாக இருக்கிறது அப்போதுசேகரா- வரக் கூடாதாஎன்ற அசரீரியான சப்தம் கேட்கிறது. அந்த சப்தம் எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்று மௌனி சொல்வது பேரற்புதம்: ‘எத்தனையோ காலம் மௌனமாக நின்ற அந்த இருட்டு அப்போது ஒரு உணர்ச்சி வேகத்தில் சப்தமாக உருவாகியது போலும்!’
கால-வெளி
மௌனியின் தருணங்கள் காலமும் இடமும் முயங்கியவை, ஐன்ஸ்டைன் சொன்ன கால-வெளி போன்று. நகுலன் கவிதையில் வருவதுபோலக் காலம் இடமாகத் தெரியும் தருணங்கள் அவை.
மௌனியின் கதைகளைப் படிப்பவர் கனவுலகத்தில் நடமாடுவதுபோல உணர்வார். கனவைப் போன்று தர்க்கத் துக்குள் அகப்படாத சம்பவங்கள் மௌனியின் கதைகளில் நிறைய வரும். நாம் கனவு காணும்போது ஒரு சாதனம் நம் கனவை அப்படியே மொழி வடிவில் பிரதியெடுத்தால் எப்படி இருக்கும்?
அதைப் போன்றவைதான் மௌனியின் கதைகளும். ஆனால் வெறுமனே சம்பவங்களைக் குலைத் துப் போடுவதாலோ கால-வெளி பின்னணியைச் சரித்துவிடுவதாலோ மட்டும் மௌனி இதையெல்லாம் சாதிக்கவில்லை. அர்த்தமற்ற சம்பவங் களின் மங்கிய பின்புலத்தில் அவற்றை ஒன்றுசேர்த்து ஒரு சரடுபோல் ஓடும் மொழிதான் அவரது சாதனைக்குப் பிரதானக் காரணம். அர்த்தமின்மையின் கடலிலிருந்து திடீர் திடீரென்று தெறித்து விழும் மொழியின் அந்தத் தெறிப்புகள் அபாரமானவை.
பிரபஞ்ச ஒருமை
மொழியின் மீறல்கள், சிதைந்த கால-வெளி ஆகிய எல்லாவற்றுக்கும் அடியில் பிரபஞ்ச ஒருமையைப் பற்றிய ஆழ்ந்த தேடல் ஒன்று மௌனியின் கதைகளில் புதைந்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் எல்லா சப்தங்களையும் ஆழ்ந்த நிசப்தம் ஒன்றின் வெளிப்பாடுகளாகத்தான் அவர் காண்கிறார்:
எவ்வித உலக சப்தமும் பிரபஞ்ச பயங்கர நிசப்தத்தைத்தான் உணர்த்தியது.’ ‘மாபெரும் காவியம்கதையில் தனது காவியம் அழிந்ததில் ஆனந்தப்படும் கிட்டு இப்படி உணர்கிறான்: “மலரினின்றும் பிரிந்து வதங்கிய இதழை விட்டுச் சென்ற மணத்தை எங்கும் உணர்ந்தான். எதற்காக மலரையும் மணத்தையும்அவன்ஒன்று சேர்த்தான். கேவலம் இது தொழில் செய்வதில் கொள்ளும் ஆனந்தத்திற்காகவா?’ இதேபோல், ‘பிரபஞ்ச கானம்சிறுகதையிலும், பிரபஞ்சமும், பிரபஞ்சத்தின் சப்தங்களும் காட்சிகளும் ஏதோ குறைவுபட்டவைபோல் தோன்றுகின்றன. காரணம்?
அவள்தான் சங்கீதம்; பிரபஞ்ச கானம் அவளுக்குள் அடைபட்டுவிட்டதுஅவளுடைய சங்கீதம் வெளி விளக்கம் கொள்ளாததால் இயற்கையே ஒரு வகையில் குறைவுபட்டது போலவும் வெளியில் மிதப்பது வெறும் வறட்டுச் சப்தம்தான் என்றும் எண்ணலானான்.”
பிரபஞ்சமும் தன்னிடம் குறைவு பட்ட ஒன்றை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளத் துடிக்கிறது. அவளிடம் அடைபட்டுக்கிடக்கும் பிரபஞ்சத்தின் அம்சமும் ஆரம்பத்திலிருந்து வெளிப்படத் துடிக்கிறது. இறுதியில் பாடிப்பாடி பாடலின் முடிவில் உயிரை விடு கிறாள். பிரபஞ்சத்திடம் குறைவுபட்ட அம்சம் மறுபடியும் பிரபஞ்சத்தோடு இணைந்து கொண்டது. அப்போதுஉலகப் பேரிரைச் சல் ஒரு உன்னத சங்கீதமாக ஒலித்தது’.
பிரபஞ்சமும் பிரபஞ்ச அம்சமும் ஒன்றுதான் எனினும் ஏதோ ஒரு விஷயம் அவற்றைப் பிரிக்கிறது. பிறகு ஒன்றை யொன்று அடைய முயல்கின்றன. இதன் நிழலாட்டம்தான் வாழ்க்கையோ என்று மௌனி கேள்வி எழுப்பிவிட்டுச் செல்கிறார்.
நீண்ட முத்தத்தில் வாழ்க்கை
மௌனி கதைகளில் வரும் உறவுகள் விசித்திரமானவை. வழக்கமான உறவு களில்கூட அசாதாரணமான பிணைப்பை ஏற்படுத்திவிடுவார் மௌனி. ‘சிகிச்சைகதை அற்புதமான அன்பைச் சுமந்த கதை. சாகும் தறுவாயில் இருக்கும் மனைவி (கமலா) ‘தான் இறப்பினும் தன் ஜீவிய ஞாபகத்தை ஒரே பார்வை யில் பதித்துச் செல்ல முயலுவது போன்றுதன் கணவனைப் (சீனு) பார்த்துக்கொண்டிருப்பாள்.
அவள் இறந்த பின் தன் வாழ்க்கை எப்படிக் கழியும் என்று அரற்றிக்கொண்டிருந்த கணவனை அருகில் வரச் சொல்லி ஒரு முத்தம் அளித்துவிட்டு இப்படிச் சொல்வாள்:
இப்போது தெரிந்ததா உங்களுக்குப் பின்னால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்குமென்று?” ஒரு நீண்ட முத்தத்தில் கழியும் போலும்.’ இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவர் கோமதி ஆண்களையும் திருமணத்தையும் வெறுப்பவர். ஆனால், அவர் மனதிலும் ஒரு சலனம் ஏற்படுகிறது.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இவ்வளவு அன்பு இருக்க முடியுமா என்று தோன்றுகிறது. பிறகு, சீனுவைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் கோமதி இறுதியில் சொல்கிறாள்: “உங்களைத் தனியாக உங்களுக்காகவே நான் உங்களை மணக்கவில்லை. என்னுடைய மனதைக் கவர்ந்து ஆட்கொண்ட கமலாவின் நினைவு ததும்பி இருக்கும் உங்களைத்தான் நான் காதலித்து மணம் செய்துகொண்டேன்.
ஒருவரின் நினைவு எப்போதும் ததும்பி இருக்கும் மனது எவ்வளவு களங்கமில்லாத, அற்புதமான மனது! அதற்காகவே அந்த மனதைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் மனது இன்னும் எவ்வளவு அற்புதமானது! அந்த உறவுதான் எவ்வளவு ஆனந்த வசீகரம்!
ஒருவரில் இன்னொருவரைக் காண்பது, ஒருவரின் இருத்தல் இன்னொருவரின் இருத்தலை (அந்த இன்னொருவர் இறந்துவிட்டாலும்கூட) நிஜப்படுத்திக்கொண்டிருப்பது, நீட்டித்துக்கொண்டிருப்பது என்பன தொடர்ந்து மௌனியின் கதைகளில் (மலைக்கோட்டை, பிரக்ஞை வெளியில், நினைவுச் சுழல், எங்கிருந்தோ வந்தான்) வரும்.
மௌனியின் சிறுகதைகளைப் பற்றிச் சொல்லும்போதுதமிழர்கள் பாக்கியசாலிகள்என்றார் .நா.சு. தமிழ் மொழியின் சாத்தியங்கள் எவையெவை என்பதை ஒருவர் அறிய விரும்பினால் மௌனியின் கதைகளைப் படித்தே ஆக வேண்டும். ஒருவர் மகத்தான எழுத்தாளராகக் கொண்டாடப்படுவதற்கு 24 கதைகள் மட்டுமே போதுமா என்று மௌனியைப் படிக்காத ஒருவர் கேட்கலாம்.
ஆனால், அவரே மௌனியை ஊன்றிப் படிப்பாரெனில் ஒரு வாழ்க்கைக்கு இந்தக் கதைகள் மட்டுமே போதுமானவை என்றும் சொல்லத் தோன்றும். ஆம், மௌனியின் கதைகளைப் படிப்பதென்பது வாழ்க்கையை நீண்ட முத்த மொன்றில் கழிப்பதுபோலத்தான்.
தொடர்புக்கு: www.asaithambi.d@thehindutamil.co.in
      





















No comments:

Post a Comment