நெல்சன் மண்டேலா
(சுருக்கமான மொழிபெயர்ப்பு: ஆசை, 'தி இந்து' தமிழ் நாளிதழில் 08.12.13 அன்று வெளியானது)
நெல்சன் மண்டேலா
(நாசவேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு 1964, ஏப்ரல் 20-ம் தேதி தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது நெல்சன் மண்டேலா ஆற்றிய உரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு)
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் நான்தான். கலையியலில் இளங்கலை பட்டதாரியான நான் ஜோஹன்னஸ்பர்கில் ஆலிவர் டேம்போவுடன் இணைந்து பல ஆண்டுகள் சட்ட ஆலோசகராக இருந்திருக்கிறேன். அனுமதி இல்லாமல் நாட்டை விட்டுச் சென்றது, 1961-ம் ஆண்டு மே மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டியது ஆகிய காரணங்களுக்காகக் குற்றவாளியென்று அறிவிக்கப்பட்டுக் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறைத்தண்டனையை அனுபவித்துவருகிறேன்.
ஆரம்பத்திலேயே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் போராட்டங்களின் பின்னணியில் அயல்நாட்டவர்களும் கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்கள் என்று அரசு சொல்வதை முற்றிலும் நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில், ஒரு தனிநபராகவும் எனது மக்களின் தலைவனாகவும் நான் எது செய்திருந்தாலும் தென்னாப்பிரிக்காவில் எனக்கு நேர்ந்த அனுபவங்களாலும் ஆப்பிரிக்கன் என்ற எனது உணர்வின் அடிப்படையிலுமேயன்றி ஏதோ அந்நியர்களின் தூண்டுதலால் அல்ல.
மூதாதையரின் வழியில்…
டிரான்ஸ்கேயில் எனது இளம் பருவத்தில் எங்கள் இனக்குழுவின் மூத்தோர், பழம்காலத்தின் பெருமைகளையெல்லாம் கதைகளாகச் சொல்லக் கேட்டு வளர்ந்தவன் நான். எங்கள் மூதாதையர் எங்கள் தந்தையரின் நிலத்தைக் காப்பதற்காக ஈடுபட்ட போர்களைப் பற்றியும் அந்தக் கதைகளுக்கிடையே அவர்கள் சொல்வார்கள். இதையெல்லாம் கேட்ட பிறகு, எனது மக்களுக்காகப் பணியாற்றவும் அவர்களின் விடுதலைக்காகப் பாடுபடவும் வாழ்க்கை எனக்கு வாய்ப்பு வழங்குமென்று நம்பினேன். இதுதான் எனக்கு உந்தசக்தியாக இருந்து என்னைச் செலுத்தியது; நான் செய்ததாக இந்த வழக்கில் சாட்டப்படும் குற்றங்களுக்கெல்லாம் காரணம் இதுதான்.
ஏன் வன்முறை?
இதையெல்லாம் சொன்ன பிறகு, வன்முறை என்ற விஷயத்தைப் பற்றியும் நான் பேசியாக வேண்டும். இந்த நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளில் சிலவற்றில் உண்மை இருக்கிறது, சிலவற்றில் உண்மை இல்லை. நாசவேலைகளுக்குத் திட்டம்தீட்டியது நான்தான் என்பதை நான் மறுக்கப்போவதில்லை. கண்மூடித்தனமாகவோ வன்முறையின் மீதுள்ள விருப்பத்தாலோ நான் இந்தத் திட்டத்தைத் தீட்டவில்லை. வெள்ளையர்களால் என் மக்கள் நெடுங்காலமாக அனுபவித்துவந்த கொடுங்கோன்மை, சுரண்டல், அடக்குமுறை ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்டிருந்த அரசியல் சூழ்நிலையை நிதானமாகவும் ஆழ்ந்தும் மதிப்பிட்ட பிறகே நான் இந்தத் திட்டத்தைத் தீட்டினேன்.
உம்கோண்டோவை (உம்கோண்டோ- ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப் படை) தோற்றுவித்தவர்களில் நானும் ஒருவன். அந்த அமைப்பை நாங்கள் தோற்றுவித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக ஆப்பிரிக்க மக்கள் ஒருகட்டத்தில் வன்முறைப் போக்கைக் கைக்கொள்வது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது; மக்களின் உணர்வுகளுக்குச் சரியான பாதை வகுத்துக்கொடுக்கும் வகையிலான தலைமை இல்லையென்றால் வன்முறை வெடித்து நாடெங்கும் உள்ள வெவ்வேறு இனங்களுக்கிடையில் பெரும் பிளவும் விரோதப் போக்கும் ஏற்பட்டுவிடும் சூழல் வேறு. இரண்டாவதாக, வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு வெற்றிபெற வன்முறையைத் தவிர வேறெந்த வழியும் ஆப்பிரிக்க மக்களுக்கு இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிரான, சட்டபூர்வமான எதிர்ப்புகள் அனைத்துக்கும் வழியே இல்லாத வகையில் சட்டம் கதவடைத்துவிட்டது. எங்களின் இழிநிலையை நிரந்தரமாக ஏற்றுக்கொள்வது அல்லது அரசுக்கு எதிராகச் செயல்படுவது என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இந்நிலையில் சட்டத்தை மீறுவது என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.வன்முறைக்கு வழிவகுத்துவிடாதபடி சட்டத்தை நாங்கள் மீறினோம். இந்த வழிமுறையும் சட்டத்தால் ஒடுக்கப்பட்ட பின்னர், அரசு தன் எதிர்ப்பாளர்களை நசுக்குவதில் ஈடுபட்டபோதுதான் வன்முறைக்கு வன்முறையால் பதிலடி கொடுப்பதென்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.
ஆனால், நாங்கள் தேர்ந்தெடுத்த வன்முறையைத் தீவிரவாதம் என்று சொல்லிவிட முடியாது. உம்கோண்டோவைத் தோற்றுவித்த நாங்கள் அனைவரும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் (ஆ.தே.கா) உறுப்பினர்களாக இருந்தவர்கள்தான். அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அகிம்சையையும் சமரசத்தையும் வழிமுறையாகக் கொண்டிருந்த ஆ.தே.கா-வின் பின்னணியிலிருந்து வந்தவர்கள்தான் நாங்கள். தென்னாப்பிரிக்கா ஒரு குழுவுக்கு மட்டும் உரியதல்ல என்றும் அதில் வாழும் அனைவருக்கும், அவர்கள் கருப்பினத்தவரோ வெள்ளையரோ, அது சொந்தம் என்றும் நாங்கள் நம்புகிறோம். இனங்களுக்கிடையில் போர் மூள்வதை நாங்கள் விரும்பவில்லை, எப்பாடுபட்டாவது அதைத் தவிர்க்கவே நாங்கள் முயன்றோம்.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்
ஆ.தே.கா-வைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். ‘தென்னாப்பிரிக்க சட்ட’த்தாலும் ‘உள்ளூர் நிலச் சட்ட’த்தாலும் ஒடுக்கப்பட்டிருந்த ஆப்பிரிக்க மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக 1912-ம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. 1949வரை, அதாவது முப்பத்தேழு ஆண்டுகளாக, சட்டபூர்வமான போராட்டத்திலேயே அது ஈடுபட்டுவந்தது. தனது கோரிக்கைகளையும் தீர்மானங்களையும் அது முன்வைத்தது. ஆப்பிரிக்கர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அமைதியான முறையில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் முழுமையான அரசியல் உரிமைகளை நோக்கி ஆப்பிரிக்கர்கள் சீராக நடைபோட முடியும் என்ற நம்பிக்கையிலும் அரசாங்கத்துக்கு அது தனது பிரதிநிதிகளை அனுப்பிவைத்தது. ஆனால் வெள்ளையரின் அரசாங்கங்கள் கொஞ்சம்கூட அசைவதாகவே இல்லை. ஆப்பிரிக்கர்களின் உரிமைகள் அதிகமாவதற்குப் பதிலாகக் குறைந்துகொண்டே வந்தன. எனது தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான லுட்டுலி இப்படிச் சொன்னார்: “திறக்கவே திறக்காத வகையில் இறுக்கமாக மூடப்பட்டிருந்த கதவை, பொறுமையுடனும் மிதமான முறையிலும் கண்ணியத்துடனும் தட்டுவதில் என் ஆயுளில் முப்பதாண்டுகளை நான் வீணடித்திருக்கிறேன் என்பதை யாரால் மறுக்க முடியும். மிதவாதத்தின் பலன்கள்தான் என்ன? நமது உரிமைகளையும் முன்னேற்றத்தையும் நசுக்கும் வித்த்திலான சட்டங்களைத்தான் கடந்த முப்பதாண்டுகளாக நாம் பார்த்துவந்திருக்கிறோம். கடைசியில் நமக்கென்று எந்த உரிமையும் இல்லாத நிலைக்கு இப்போது வந்தடைந்திருக்கிறோம்.”
தொடர்ந்து போராடியாக வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. போராட்டத்துக்கு மாற்று, முழுமையான அடிபணிதல்தான். போரிடுவதா வேண்டாமா என்பதல்ல எங்கள் பிரச்சினை, எங்கள் போராட்டத்தை எப்படித் தொடர்வது என்பதுதான் எங்கள் பிரச்சினை. ஆ.தே.கா-வைச் சேர்ந்த நாங்கள் நிறப்பிரிவினையற்ற ஜனநாயகத்தையே எப்போதும் முன்மொழிந்துவந்திருக்கிறோம். நாட்டில் இருக்கும் வெவ்வேறு இன மக்களை மேலும் பிளவுபடுத்தும் எந்த நடவடிக்கையிலிருந்தும் நாங்கள் ஒதுங்கியே இருந்தோம். ஆனால், ஐம்பது ஆண்டுகளின் அகிம்சைப் போராட்டம் மேலும் மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் சட்ட அமைப்பையும் கிட்டத்தட்ட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையையும் நோக்கி எங்களைத் தள்ளியது. வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றியும் வெள்ளையருக்கு எதிராகப் போரிட்டு தங்கள் நாட்டை மீட்கும் நாளைப் பற்றியும் மக்கள் நெடுங்காலமாகப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் கள். ஆ.தே.கா-வின் தலைவர்களாகிய நாங்கள் வன்முறையைத் தவிர்த்துவிட்டு அமைதியான முறையில் போராடும்படி மக்களுக்கு அறிவுறுத்தினோம். எனினும், அகிம்சைக் கொள்கையில் எங்கள் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்து தீவிரவாதப் போக்கைக் கடைப்பிடிப்பதைப் பற்றிய எண்ணங்களை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தனர்.
வன்முறையின் முதல் வடிவம்
உள்நாட்டுப் போரைத் தவிர்ப்பது என்ற எண்ணமே எங்கள் அனைவருடைய சிந்தனைகளையும் வெகு காலமாக ஆக்கிரமித்திருந்தது. ஆனால், வன்முறைப் பாதையைக் கடைப்பிடிப்பது என்ற முடிவை எடுத்தபோது அது போன்ற ஒரு போரை நாங்கள் எதிர்கொள்ளும் நாள் வரலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம். உள்நாட்டுப் போர் என்பதைக் கடைசிப் புகலிடமாகவே மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதைத் தவிர்க்க முடியாத நிலை வருமெனில் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் முடிவெடுத்தோம்.
வன்முறையின் நான்கு வடிவங்கள் அப்போது எங்கள் முன்னால் இருந்தன. நாசவேலைகள், கெரில்லா போர்முறை, தீவிரவாதம், வெளிப்படையான கிளர்ச்சி. இவற்றுள் முதல் வகையைத் தேர்ந்தெடுப்பது என்றும் வேறுவிதமான முடிவுக்குப் போகும்வரை இந்த வகைப் போராட்டத்தின் எல்லாவிதமான சாத்தியங்களையும் பார்த்துவிடுவது என்றும் முடிவெடுத்தோம்.
நான் கம்யூனிஸ்டு அல்ல
ஆப்பிரிக்க தேசியவாதம்தான் ஆ.தே.கா-வின் எப்போதுக்குமான சித்தாந்தம். ‘வெள்ளையர்களைக் கடலில் தள்ளுங்கள்’ என்ற முழக்கம் வெளிப்படுத்தும் கோட்பாடும் ஆப்பிரிக்க தேசியவாதமும் ஒன்றல்ல. ஆப்பிரிக்க மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கப்பெறுவதும், அவர்களுடைய சொந்த மண்ணின் மீதான உரிமை நிலைநாட்டப்படுவதும்தான் ஆப்பிரிக்க தேசியவாதம். ஆ.தே.கா-வால் உருவாக்கப்பட்ட அரசியல் ஆவணங்களில் மிக முக்கியமானது, அது உருவாக்கிய ‘விடுதலைப் பிரகடனம்’தான். அது எந்த வகையிலும் ஒரு சோஷலிச நாட்டுக்கான வரைபடம் அல்ல. நிலங்களை மறுபகிர்மானம் செய்யவே அது கூக்குரல் கொடுக்கிறதே தவிர அவற்றை நாட்டுடைமையாக்குவதற்காக அல்ல; சுரங்கங்கள், வங்கிகள், ஏகபோகம் நிலவும் தொழில்துறைகள் போன்றவை நாட்டுடைமையாக்கப்படுவதற்கு அது வகைசெய்கிறது. இது போன்ற நாட்டுடைமையாக்கம் இல்லையென்றால், அதிகாரப் பரவலாக்கத்தை மீறியும் குறிப்பிட்ட ஒரு இனத்தின் ஆதிக்கம் நீடிப்பதைத் தடுக்க முடியாமல் போய்விடும்.
வர்க்கபேதத்தை கோடிட்டுக்காட்டுவது கம்யூனிஸ்டு கட்சி, ஆ.தே.கா-வோ வர்க்கங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயல்வது. இதுதான் இரண்டு கட்சிகளுக்குமிடையேயுள்ள முக்கியமான வேறுபாடு. ஆ.தே.கா-வுக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே அவ்வப்போது ஒத்துழைப்பு இருந்துவந்தது என்பது உண்மைதான். இந்த ஒத்துழைப்பு எங்களின் பொது நோக்கத்தை, அதாவது வெள்ளையர் ஆதிக்கத்தை அகற்றுவது என்ற நோக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறதே தவிர, இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான் என்று சுட்டிக்காட்டவில்லை.
வரலாறு முழுக்க இதுபோன்ற உதாரணங்களைக் காட்ட முடியும். ஹிட்லருக்கு எதிராக பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் ஒருங்கிணைந்து போரிட்டதைவிடவா ஒரு நல்ல உதாரணத்தைக் காட்டிவிட முடியும்? இந்த ஒத்துழைப்பை வைத்து, சர்ச்சிலும் ரூஸ்வெல்ட்டும் கம்யூனிஸ்டுகளாக ஆகிவிட்டார்கள் என்றும் பிரிட்டனும் அமெரிக்காவும் கம்யூனிச உலகத்தைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன என்றும் ஹிட்லர் மட்டும்தான் சொல்லியிருக்கக் கூடும்.
ஆப்பிரிக்க தேசப்பற்றாளன் என்றே என்னை நான் எப்போதும் கருதிவந்திருக்கிறேன். வர்க்கபேதமற்ற சமுதாயம் என்னும் சிந்தனையால் இன்று நான் கவரப்பட்டிருக்கிறேன். மார்க்ஸிச வாசிப்பும், முந்தைய ஆப்பிரிக்கச் சமூக அமைப்புகள் மேல் எனக்கு இருந்த வியப்பும்தான் இந்த ஈர்ப்புக்குக் காரணம். உற்பத்தியின் முக்கியமான சாதனமாக இருந்த நிலம் என்பது அதன் மக்களுக்குத்தான் அப்போது சொந்தம். அப்போது ஏழைகளுமில்லை, பணக்காரர்களுமில்லை எந்த விதமான சுரண்டலுமில்லை.
ஏற்கெனவே, நான் குறிப்பிட்டிருப்பதுபோல் மார்க்ஸிசம் என்மேல் தாக்கம் ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். எனக்கு மட்டுமல்ல, உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் இந்தத் தாக்கம் இருந்திருகிறது. காந்தி, நேரு, ங்க்ரூமா (கானா நாடு), நாசர் (எகிப்து) போன்ற தலைவர்களெல்லாம் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். முன்னேறிய நாடுகளை எங்கள் மக்கள் எட்டிப்பிடிப்பதற்கும் அவர்களின் கடுமையான வறுமையைப் போக்கவும் வகைசெய்யும் சோஷலிசத்தின் ஒரு வடிவத்தை நாங்கள் எல்லாரும் ஏற்றுக்கொள்கிறோம். இதனாலெல்லாம் நாங்கள் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிவிட முடியாது.
ஆப்பிரிக்கர்களின் இழிநிலை
அடிப்படையில், ஆப்பிரிக்க வாழ்க்கையின் அடையாளங்கள் என்று ஆகிவிட்ட இரண்டு அம்சங்களை எதிர்த்துதான் நாங்கள் போரிடுகிறோம், சட்டத்தால் நன்றாக நிலைபெற்றுவிட்ட அவை விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. ஏழ்மையும் மனித உரிமையின்மையும்தான் அந்த அம்சங்கள். இதை எங்களுக்குப் போதிப்பதற்கு கம்யூனிஸ்டுகள்தான் வர வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கில்லை.
ஆப்பிரிக்காவிலேயே பணக்கார நாடு தென்னாப்பிரிக்காதான். முற்றிலும் எதிரெதிர் துருவங்களும் அசாதாரணமான வேறுபாடுகளும் காணப்படும் நாடும் இதுதான். உலகிலேயே மிகவும் சொகுசான வாழ்க்கை முறையை இங்குள்ள வெள்ளையர்கள் அனுபவிக்கும் அதே வேளையில் ஆப்பிரிக்கர்கள் ஏழ்மையிலும் துயரத்திலும் உழல்கின்றனர். தாங்கள் ஏழைகளாக இருக்கும் அதே நேரத்தில் வெள்ளையர்கள் மட்டும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல ஆப்பிரிக்கர்களின் முறையீடு, வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் யாவும் இந்த நிலையைத் தொடர்ந்து நீடிக்கச் செய்பவையாகவே இருக்கின்றன என்பதும்தான்.
வெள்ளை ஆதிக்கத்தின் நேரடி விளைவுதான் ஆப்பிரிக்கர்கள் அனுபவிக்கும் இழிநிலை. வெள்ளை ஆதிக்கம் என்பது கருப்பர்கள் தாழ்வானவர்கள் என்பதையே குறிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஒழிசலான வேலைகள் என்பவை ஆப்பிரிக்கர்களால் மட்டுமே செய்யப்படுகின்றன. எதையாவது தூக்கிச் செல்ல வேண்டுமென்றாலோ எதையாவது சுத்தம் செய்ய வேண்டுமென்றாலோ ஒரு வெள்ளையர் சுற்றும்முற்றும் யாராவது கருப்பினத்தவர் தென்படுகிறாரா என்றுதான் பார்ப்பார், அவர் தனது வேலையாளாக இல்லாவிட்டாலும் கூட. இது போன்ற அணுகுமுறையால்தான் வெள்ளையர்கள் ஆப்பிரிக்கர்களை ஏதோ தனிவகை ஜந்து என்ற விதத்தில் பார்க்கிறார்கள். கருப்பர்களுக்கும் குடும்பம் இருக்கும் என்றோ அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும் என்றோ, வெள்ளையர்களைப் போலவே அவர்களுக்கும் காதல் ஏற்படும் என்றோ வெள்ளையர்கள் உணர்வதில்லை. வெள்ளையர்கள் தங்கள் மனைவியருடனும் குழந்தைகளுடனும் இருக்க விரும்புவதைப் போலவே கருப்பர்களும் விரும்புவார்கள் என்று அவர்கள் உணர்வதில்லை; தங்கள் குடுமபத்தை நல்லபடி நடத்தவும், உணவு துணிமணிகள் போன்ற தேவைகளை நிறைவேற்றவும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் தேவையான அளவுக்கு சம்பாதிக்கக் கருப்பர்கள் விரும்புவார்கள் என்று வெள்ளையர்கள் உணர்வதில்லை.
கோரிக்கைகள்
ஆப்பிரிக்கர்கள் நல்ல முறையில் வாழ்க்கை நடத்தத் தேவையான அளவு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் சொல்லும் வேலைகளைத்தான் ஆப்பிரிக்கர்கள் செய்ய வேண்டும் என்ற நிலை இல்லாமல் ஆப்ப்ரிக்கர்கள் எந்த வேலைகளைச் செய்ய விரும்புகிறார்களோ அந்த வேலைகளைச் செய்வதற்குத்தான் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆப்பிரிக்கர்களுக்கு எங்கே வேலை கிடைக்கிறதோ அங்கே அவர்கள் வாழ அனுமதிக்கப்பட வேண்டும். தாங்கள் வேலைபார்க்கும் பிரதேசங்களில் இடங்கள் வாங்க அனுமதிக்கப்பட வேண்டுமே தவிர வாடகை வீடுகளில்தான் குடியிருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படக் கூடாது. பொதுச் சமூகத்தின் ஒரு பங்காகவே ஆப்பிரிக்கர்கள் இருக்க வேண்டுமே தவிர சேரிகளுக்குள் அவர்களை ஒதுக்கிவிடக் கூடாது. ஆப்பிரிக்கப் பெண்கள் தங்கள் கணவர்களுடன் வாழ அனுமதிக்கப்பட வேண்டுமே ஒழிய காலமெல்லாம் அவர்கள் அபலைகளாகவே ஆக்கப்படக் கூடாது. ஆப்பிரிக்கர்கள் தங்கள் நாட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும். மொத்தத் தென்னாப்பிரிக்காவிலும் ஆப்பிரிக்கர்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும். சமூகப் பாதுகாப்பும், சமூகப் பங்கேற்பும் அவர்களுக்குத் தரப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, சரிசமமான அரசியல் உரிமைகள் எங்களுக்கு வேண்டும், ஏனெனில் அவையில்லாவிட்டால் எங்கள் ஊனங்களெல்லாம் நிரந்தரமாகிவிடும். இந்த நாட்டிலுள்ள வெள்ளையர்களுக்கு இது ஏதோ கலகச் சிந்தனைபோல் தோன்றக்கூடும். இதனால்தான் ஜனநாயகத்தைக் கண்டு வெள்ளையர்களுக்கு அச்சம்.
ஆனால், இன ஒற்றுமைக்கும் எல்லாருக்குமான சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்கக் கூடிய ஒரே பாதையின் குறுக்கே அந்த அச்சம் தடையாக நின்றுவிடக் கூடாது. எல்லாருக்குமான வாக்குரிமை என்பது இன ஆதிக்கத்துக்கு வழிவகுத்துவிடும் என்பது உண்மையல்ல. நிறங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பிளவு என்பது முழுக்க முழுக்க செயற்கையானதே. இது மறைந்துபோகும்போது ஒரு நிறத்தின் மீது இன்னொரு நிறம் செலுத்தும் ஆதிக்கமும் மறைந்துபோய்விடும். அரை நூற்றாண்டாக நிறவெறியை எதிர்த்தே ஆ.தே.கா. போராடியிருக்கிறது. அது வெல்லும்போது தனது கொள்கையை மாற்றிக்கொள்ளாது.
ஆ.தே.காவின் போராட்டம் என்பது இதுதான். அவர்களின் போராட்டம் என்பது உண்மையில் தேசம் முழுமைக்குமானது. இது ஆப்பிரிக்க மக்கள் தங்கள் துன்பங்கள், அனுபவங்கள் அடிப்படையில் முன்னெடுத்த போராட்டம். வாழ்வதற்கான உரிமை வேண்டிய போராட்டம்.
என் வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் இந்தப் போராட்டத்துக்காகவே என்னை அர்ப்பணித்திருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன், கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். எல்லாரும் ஒற்றுமையாக வாழக்கூடிய, எல்லாருக்கும் சமமாக வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய, ஜனநாயகபூர்வமான, சுதந்திரமான சமூகம் என்ற லட்சியத்தையே நான் போற்றிவந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த லட்சியத்தைதான்; நான் வாழ நினைப்பது இந்த லட்சியத்துக்காகத்தான். தேவை என்றால் என் உயிரையும் துறக்க நினைப்பதும் இந்த லட்சியத்துக்காகத்தான்.
நன்றி: 'தி இந்து' தமிழ் நாளிதழ்,
'தி இந்து' தமிழ் நாளிதழின் இணையதளத்தில் இந்த உரையைப் படிக்க: