Saturday, May 18, 2013

ஆசையின் "கொண்டலாத்தி" எனும் பறவை



அனார்(பிப்ரவரி அம்ருதா இதழில் வெளிவந்த மதிப்புரை )

  
வாழ்வது என்பது வேறு.... 
கனவை வாழ்வது வேறு..... 
கனவை வாழ்வது எப்படி என்பதையெல்லாம் ஒரு கவிதை மனம் உணர்ந்துதான் இருக்கும். கனவை வாழும் தருணங்களை, அடைவதன் பாதையை, நான் கவிதை எழுதும் தருணங்களில் கண்டுகொண்டிருக்கிறேன். நண்பர் ஆசையின் கொண்டலாத்தி கவிதைத் தொகுப்பு, கனவை வாழ்வதற்கான மிக மென்மையான அழைப்புகளை விடுக்கிறது. நம்முடைய வெறும் வாழ்வில் உயிருடன் உணரத்தக்க கனவுகளாக சிறகுகளைச் சிலிர்த்தும், பறவைகளை உற்றுணர்ந்து, பார்த்து ஆசை வாழ்ந்த கனவை அவருடைய கவிதைகளில் எமக்களித்திருக்கிறார்.


இந்தக் கணத்தின் நிறம் நீலம்

தளும்பத் தளும்பப் பொங்கும் நீலம்
சிறகிலிருந்து நூலாய்ப் பிரியும்
ஒளியும் நனைய காற்றும் நனைய
பெய்யும் மழையின் பெயர் நீலம்
நுரைத்து நுரைத்து அலைகள் பாய்ந்து
தெறிக்கும் துளியில் ஒளியும் ஏறி
விரியும் வில்லில் தொடங்கும்
இந்த ஆற்றின் பெயர் நீலம்
கரையக் கரையப் பறந்து சென்று
முடியும் புள்ளியில் மூழ்கும் மீன்கொத்தி
அலைகள் தோன்றி அதிரும்
இந்தக் கணத்தின் நிறம் நீலம்
==


நிறங்களின் மீது ஒரு வகையான நேசம் எனக்கிருப்பது, என்னுடைய கவிதைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும். அனேகமான கவிஞர்களுக்கு ஏதோ ஒன்றின் மீது பிரத்தியேகமான பிரியம் இருக்கும். ஆசை பறவைகள் மீது கொண்டிருக்கும் நேசம் ஒரு குழந்தையின் மீதும், காதலின் மீதும் உள்ள பற்றுதலைப் போல, மிகுந்த பவித்திரமானதாக இருக்கிறது. ஒரு கண்ணாடிக் குவளையை கைநழுவி விடாமல் கையாளும் பதற்றத்தோடுதான் பறவைகளைப் பற்றிய சொற்களை அவர் எழுதுகிறார்.


பறவைகளைப் பேசுவதான அவருடைய மொழி, ஒரு பறவையைப்போல் பறந்துபோய்விடக்கூடியது. 
அதே நேரம் பறவை சென்ற பிறகும், கிளைகளில் இருக்கும் அதிர்வும்... ஒரு நினைவும்போல மனதில் தங்கிவிடுகின்றது.

தையல்சிட்டு பறந்து சென்ற பின்
தையல்சிட்டின் கனம்தான்
இருக்கும்
இந்தக் கணம்
அதிர்ந்துகொண்டிருக்கிறது
அது
தையல்சிட்டு பறந்து சென்றபின்
அதிரும்
இலைக் காம்புபோல
==




சொண்டுகளின் கூர்மையை, மூக்கின் ஈரத்தை, சிறகு கோதலின் ஆன்மப் பரவசத்தை, வால் அசைவின் வீரியத்தை, பறவையின் நகக்கீறலை என அவர் தன்னுடைய கவிதையையே பறவையாக்கிப் பார்க்க எத்தனிக்கிறார். 


இவ்வளவு பரவசமான அவதானத்தின் கணிப்பும், கவனிப்பும் மிகையில்லாத கவிதைகளாக ஆசையை எழுத வைத்திருக்கிறது. 
தன்னிகரற்ற பறவைகளின் கூடுகளைப்போல அவர் கவிதைகளை கட்டிப் பார்த்திருக்கிறார். அந்தக் கூடுகளுக்குள் அப்பறவைகளின் வினோதமான குரல்களின் உரசல்கள் கேட்கின்றது. எல்லையற்ற ஆகாயத்தில் பறவைகளுக்கு இருக்கும் உரிமை, அவை கனவாகி மிதக்கின்ற அருமை, ஆசையின் கவிதைகளில் தொடர்ந்து படபடக்கின்றது. தெளிவுடனும் குறும்புகளோடும் முறைமைகளோடும் அந்தப் பறவைகள் சிறகசைத்துப் பயணிக்கின்றன. நம்முடைய கண்களுக்கு அல்லாமல் நமது ஆன்மாவிற்குக் கொடுக்கக் கூடிய காட்சிப் பரிசுகளாக, பறவைகளின் புகைப்படங்களை அடையாளப்படுத்தியிருக்கிறார்.அற்புதமான இத்ருணங்களை நமக்குக் கையளிக்க ஆசை எடுத்துக்கொண்ட முயற்சியையும், உழைப்பையையும் அர்ப்பணிப்பையும் மிகவும் மதிக்கிறேன்.


எப்பவும் பறக்க விரும்புகிறவர்களுக்காக, மேன்மையான ரசனைகளின், புதிய, அபூர்வமான சில பாதைகளை அவர் திறந்துவிட்டிருக்கிறார்.
பெயர்களின் பயனின்மை
உனக்குப் பெயர்கள் ஓராயிரம்
ஓராயிரம் மொழிகளில்
இருந்தும் உனக்குத் தெரியாது
உன்னுடைய பெயர்
என்னவென்று
பெயர் தெரிந்து என்ன பயன்?
உன்னுள் கிடையாது
உனக்கென்று ஒரு பெயர்
எனக்குத் தெரியும்
என்னுள்ளும் கிடையாது
எனக்கென்றொரு பெயர்
நீ வரும்போதெல்லாம்
என்மேல் படிந்திருக்கும் பெயரை
உறிஞ்சிக் குடித்துவிட
நாமிருவரும் ஒன்றாகிறோம்
ஏற்கனவே நாம்
ஒன்றாயிருப்பதுபோலவே

(கொண்டலாத்தி, க்ரியா வெளியீடு,
கிடைக்குமிடம்: க்ரியா, புதிய எண்: 2, பழைய எண்: 25,  17வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை-600 041, தொலைபேசி எண்: 7299905950 )

3 comments:

  1. Replies
    1. நன்றி திரு. ஆறுமுகம் அவர்களே! உங்கள் அறிமுகம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி!

      Delete
  2. மிகவும் சிறப்பு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete