Thursday, August 7, 2025

கலைஞர் இறுதி ஊர்வலத்தின் இலக்கியப் பதிவு!

ஓவியம்: ஜோ.விஜயகுமார்
அண்ணாவின் இறுதி ஊர்வலத்தை நேரில் கண்டவர் அப்பா. கலைஞரின் இறுதி ஊர்வலத்தை நேரில் கண்டவன் பிள்ளை. இரண்டு ஊர்வலங்களும் எனது ’மாயக் குடமுருட்டி’ (2025, எதிர் வெளியீடு) நெடுங்காவியத்தில் நெகிழ்ச்சியான ஆவணமாகியிருக்கின்றன. கலைஞர் இறுதி ஊர்வலத்தின்போது கலந்துகொண்ட ஒரு பிராமண இளைஞரைப் பற்றியும் இதில் பதிவாகியிருக்கிறது. அந்த இளைஞர் இந்தக் கவிதையைப் படித்துவிட்டு என்னிடம் நெகிழ்ந்துபோய்ப் பேசினார். கலைஞருக்கு ஒரு அஞ்சலி இக்கவிதை!

***
கோஷமிட்ட தீ
**
முன்னவர்
இறுதி ஊர்வலத்தில்
தான் கண்டதையெல்லாம்
கதைகதையாய்ச் சொன்னாரே அப்பா
ரயில்கூரையில் பயணித்ததையும்
பாலம் தட்டிப் பலபேர் மடிந்ததையும்
சென்னையே சேர்ந்து நகர்ந்ததையும்
மேலேறியவர்களின் பாரம் தாங்காமல்
மரக்கிளைகள் முறிந்து விழுந்ததையும்
உலகத்திலேயே இப்படியோர்
இறுதி ஊர்வலம்
வரலாறு கண்டதில்லை என்பதையும்
சொல்லிச்சொல்லி மாய்வாரே அப்பா
பின்னவர் இறுதி ஊர்வலத்தைக்
காண விடாத உடலுக்குள்
முடங்கிக்கிடந்த அப்பாவுக்காக
நான் போனேனே ஐயா
ஆ ஆ அது இறுதி ஊர்வலமா
கல்யாண ஊர்வலம் ஐயா
ஊர்தி கடக்கும் இடமெல்லாம்
நின்று நின்று
ஆயிரமாயிரம் தற்படங்கள்
ஆயிரமாயிரம் நாடகங்கள்
தலைவனுக்காகக் குத்தாட்டங்கள்
முன்னவர் காலம்
ஓங்கி உயர்ந்தெழுந்த
அழுகையின் காலமென்றால்
பின்னவர் காலமோ
அழுகைக்கு விடைகொடுத்த
ஆர்த்தெழும் காலம்
அப்பாவுக்காகத்தான்
வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன் ஐயா
ஆனாலும் அப்படி ஆகிவிட்டது
உடன்வந்திருந்த அய்யர் பையன்
ஊர்தி அருகே கடக்கும் தருணம்
அப்படி ஒரு குரலில் ஓலமிட்டான்
‘முத்தமிழறிஞர்
சமத்துவ நாயகர்…’
ஊர்தி மேலே ஒரு உருவம் மட்டும்
மௌனி கதையின் யாளியாய்
தன் விஸ்வரூபத்தால்
அந்த கோஷத்தை ஆசிர்வதித்ததை
நான் மட்டும் கண்டேன்
சற்றுப் பொறுங்கள் ஐயா
இன்னும் அந்த நொடி முடியவில்லை
இன்னொரு பாதி இல்லாமல்
இழுத்துக்கொண்டே போகுமல்லவா
கோஷமும் நொடியும்
நானே எதிர்பார்க்கவில்லை
பீறிட்டெழுந்தது ஒரு சொல்
என் அடிவயிற்றிலிருந்து
மூடிய வாயென்ன செய்யும்
அப்போது
‘வாழ்க’
அதையும் ஏற்றுக்கொண்டு
அமைதியானது யாளி
பூர்த்தியானது நொடியும் கோஷமும்
அமைதியிழந்தேன் நான்
ஆயிரம் ஆயிரம் நூல்கள்
எனக்குச் சொல்லித்தந்தது இதுதானா
நான் படித்த இலக்கியம்
எனக்குச் சொல்லித்தந்தது இதுதானா
ஒரு கவிஞன்
‘வாழ்க வாழ்க’ கோஷமிடலாமா
என்னை இனி நான்
எப்படி ஏறெடுத்துப் பார்ப்பேன் ஐயா
அடேய் தம்பி
ஏன்டா இந்தப் புலம்பல்
கோஷம் என்ன கெட்ட வார்த்தையா
அறிவு கோஷம் போடாது தம்பி
வயிறு கோஷம் போடும்
அப்படியே இருந்தாலும்
அங்கே இருந்தவன் கண்டவன் கேட்டவன்
மட்டுமே நீ
‘வாழ்க’வென்று கோஷமிட்டது
நீயில்லையடா
உன்னை ஓங்கியடித்து
உட்காரவைத்து
மாக்கடியென்று எகிறி குதித்த
உன் ஒப்பன்காரன்டா
உன் ஒப்பன்காரன்டா
ஏனென்றால்
அவன் வயிற்றுக் கவலை
ஓய்ந்த இடத்தில்தான்டா தம்பி
உன் அறிவுக் கவலை
தொடங்கியது
புலம்பலை விட்டுவிட்டு
இன்னொரு மடக்கை எடுத்துக் குடி
***

Wednesday, August 6, 2025

ஹிரோஷிமா, நாகசாகி: ஒரு பேரழிவின் கதை! - 80-ஆம் ஆண்டு மறுபகிர்வு



ஆசை 

மனித குல வரலாற்றில், மனிதர்களின் படைப்பு சக்தியும் அழிவு சக்தியும் ஒருசேர புதிய உச்சத்தைத் தொட்ட நாள் ஆகஸ்ட் 6, 1945. சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொடும் சம்பவம் அது. அதன் விளைவுகள் உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்திருக்கின்றன.  

இரண்டாம் உலகப் போர் தனது முடிவை நெருங்கிக்கொண்டிருந்த தருணம் அது. ஜப்பான் போரில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்று எண்ணிய சாதாரண குடிமக்களில் ஒருவர் சுடோமு யமகுச்சி. இன்றைக்கு உயிரோடிருந்தால் அவருக்கு 104 வயது இருக்கும். 1945-ல் அவருக்கு 29 வயது. அவரது குடும்பமும் அவர் வேலை பார்த்த நிறுவனமும் ஜப்பானின் நாகசாகி நகரத்தில்தான் இருந்தன. ஆனால், 1945-ல் மூன்று மாத காலம் அலுவல் நிமித்தமாக ஹிரோஷிமாவில் தங்கியிருந்தார். 

ரத்த சாட்சியம் 

ஆகஸ்ட் 6 அன்று காலையில் ஹிரோஷிமாவை விட்டுப் புறப்படுவதற்காக ரயில் நிலையத்துக்குத் தனது சகாக்களுடன் சென்றவர் தனது அடையாள அட்டையை மறந்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்திருக்கிறது. அதை எடுப்பதற்காகத் திரும்பிவந்தபோதுதான் வானை அண்ணாந்து பார்த்திருக்கிறார். ஒரு விமானமும் இரண்டு பாராசூட்டுகளும் தென்பட்டிருக்கின்றன. சற்று நேரத்தில் வானத்தில் பெரிதாக ஏதோ ஒன்று அதுவரை யமகுச்சி கண்டிராத பிரகாசத்துடன் வெடித்திருக்கிறது. யமகுச்சி தூக்கிவீசப்பட்டார். எங்கு பார்த்தாலும் தீ. எங்கெங்கும் மரண ஓலம். அவரது செவிப்பறை, கண்கள் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது; உடலில் கதிரியக்கத்தால் காயம் ஏற்பட்டது.  

குண்டுவெடித்த இடத்திலிருந்து 3 மைல் தூரத்தில் இருந்ததால் யமகுச்சி உயிருக்கு உடனடியாக ஆபத்து ஏற்படவில்லை. பேரழிவுக்கு நடுவே அவருக்குப் புகலிடம் கிடைத்தது. அன்று இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் நாகசாகிக்கு சென்றார் யமகுச்சி. உடலில் காயம் இருந்தாலும் ஆகஸ்ட் 9 அன்று பணிக்குத் திரும்பினார். அன்றைக்கு நாகசாகியில் குண்டு வீசப்பட்டது. இந்தக் குண்டுவெடிப்பிலும் யமகுச்சி உயிர் தப்பினார். அவருக்கு இருந்த அதிர்ஷ்டம் ஏனைய 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இல்லை. அதன் பிறகு நெடிய காலம் ஹிரோஷிமா, நாகசாகியின் வாழும் நினைவாக இருந்த யமகுச்சி 2010-ல் தனது 93 வயதில் காலமானார். அவரை இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்தது. ஒரு கொடூர வரலாற்றுக்கு ரத்த சாட்சியமாக இருந்த அந்த மனிதர் வாழ்நாள் நெடுக அணு ஆயுதங்களின் கொடுமையையும் பேரபாயத்தையும் பேசிக்கொண்டேயிருந்தார்.  

முன் வரலாறு 
1939-ல் உலகப் போர் இன்னும் தொடங்கியிருக்கவில்லை. ஆனால், ஜெர்மனியின் செயல்பாடுகளெல்லாம் உலக அமைதியை அச்சுறுத்திக்கொண்டிருந்த காலம் அது. இதற்கு முன்னதாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு அணுவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும் என்பதை ஐன்ஸ்டைனின் கோட்பாடு விளக்கியிருந்தது; இயற்பியலாளர் லியோ ஸில்லார்ட் அணுக்கரு சங்கிலித் தொடர் நிகழ்வை 1933-ல் கண்டுபிடித்திருந்தார். 1930-களின் இறுதியில் அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் ஜெர்மனி ஈடுபட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகி உலகையே அச்சுறுத்தின. இதைத் தொடர்ந்து இந்தத் திசையில் ஜெர்மனியை முந்துவது அவசியம் என்று கருதி ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனும் லியோ ஸில்லார்டும் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டுக்குக் கடிதம் எழுதினார்கள். அதுதான் அணுகுண்டு திட்டத்துக்குத் தொடக்கப்புள்ளி.  

முன்னேற்பாடுகள் எல்லாம் முடிந்து அமெரிக்காவின் மன்ஹாட்டன் மாவட்டத்தில் 1942-ல் அணுகுண்டு தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற ஆரம்பித்தன. அதனால், இதற்கு ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்ற பெயர் வந்து சேர்ந்தது. 1945-ல் அமெரிக்கா வெற்றிகரமாக அணுகுண்டைத் தயாரித்தும்விட்டது. தயாரித்த அணுகுண்டை 1945 ஜூலை 16 அன்று நியூ மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு பாலைவனப் பிரதேசத்தில் பரிசோதித்தார்கள்.  

இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் பிரதானமாக இருந்த ஜெர்மனி சரணடைந்ததால் அந்தப் போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தாலும் ஆசியப் பகுதியில் ஜப்பான் எளிதில் அடிபணிவதாக இல்லை. அணுகுண்டுப் பரிசோதனை நிகழ்த்தப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரூமேன், ரஷ்யாவின் ஸ்டாலின், பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ஆகிய மூவரும் சந்தித்து ஜப்பான் சரணடைவதற்கான இறுதி எச்சரிக்கையை விடுத்தார்கள். ஜப்பானோ வேறு வழிகளில் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுகொண்டிருந்தது. எது எப்படியிருந்தாலும் ஜப்பான் தோல்வியின் விளிம்பில்தான் நின்றுகொண்டிருந்தது. ஏற்கெனவே ஜப்பானின் 60 நகரங்களில் அமெரிக்கா சாதாரண வெடிகுண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்திருந்தது. இந்த நிலையில்தான் ஜப்பான் மீது அணுகுண்டை வீசுவது என்று முடிவெடுத்தது அமெரிக்கா.  

ஆகஸ்ட் 6 அன்று காலையில் பசிபிக் கடலில் உள்ள டினியன் தீவிலிருந்து ‘பி-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ்’ விமானம் புறப்பட்டது. பால் டிபெட்ஸ் ஓட்டிச்சென்ற அந்த விமானம் சுமந்திருந்த அணுகுண்டின் பெயர், குட்டிப் பையன் (லிட்டில் பாய்). 4,400 கிலோ எடை கொண்ட அதன் உள்ளே 64 கிலோ மட்டுமே செறிவூட்டப்பட்ட ‘யுரேனியம்-235’ இருந்தது. சரியாக 8.15 மணிக்கு ஹிரோஷிமாவுக்கு மேலே 31,060 அடி உயரத்தில் பறந்தபோது அணுகுண்டு விடுவிக்கப்பட்டது. கீழ்நோக்கிப் பயணித்து 45 நொடிகள் கழித்து, தரையிலிருந்து 1,950 அடிகள் இருக்கும்போது அது வெடித்தது. அணுகுண்டைப் போட்டுவிட்டு வெகு வேகமாக அந்த இடத்தைவிட்டுச் சென்ற அந்த விமானம் குண்டுவெடித்த இடத்திலிருந்து சுமார் 11 மைல் தொலைவில் பறந்தபோது குண்டுவெடிப்பின் அதிர்வுகள் அதையும் உலுக்கின.  

மானுட அவலத்தின் பேயாட்டம் 

அதன் பின்பு நடந்தது முன்னுதாரணமில்லாத ஒரு பேரழிவு. இந்தக் குண்டுவெடிப்பின் சக்தி 2 கோடி கிலோ டி.என்.டி. வெடிபொருளுக்கு இணையானது என்றார்கள். குண்டுவீச்சின் தாக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். 13 சதுர கி.மீ. தூரத்துக்கு நகரம் அழிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 70% கட்டிடங்கள் சேதமடைந்திருந்தன. தூரத்திலிருந்து பார்க்கும்போது ஹிரோஷிமாவுக்கு மேலே சிவப்பும் கறுப்புமாக ராட்சகக் காளான் ஒன்று முளைத்திருந்ததைப் போல தெரிந்ததாகச் சொன்னார்கள். குண்டுவெடித்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கறுப்பாக அமில மழை பெய்தது. இறந்துகொண்டிருந்தவர்களின் மரண ஓலமும், தங்கள் குடும்பத்தினரைத் தேடி அலைந்தவர்களின் ஓலமுமாக ஓசைகளின் நகரமானது ஹிரோஷிமா. கை, கால், தலையில்லாத குழந்தைகளை அவற்றின் அன்னையர் தூக்கிக்கொண்டு திரிந்தனர். என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் பலரும் தங்கள் உயிரையும் குடும்பத்தினரையும் பறிகொடுத்துவிட்டிருந்தார்கள். 

ஹிரோஷிமாவின் மீது குண்டு வீசப்பட்டும் ஜப்பான் அடிபணியவில்லை. மூன்று நாட்கள் கழித்து கொக்குரா என்ற நகரத்தின் மீது குண்டுவீசத் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், கொக்குராவில் மேகமூட்டமாக இருந்ததால், அடுத்து நாகசாகி தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இங்கு வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் குண்டு மனிதர் (ஃபேட் மேன்). இதன் எடை 4,670 கிலோ. இதன் உள்ளே 6.4 கிலோ புளுட்டோனியம் இருந்தது. ‘குட்டிப் பைய’னைவிட இது திறன் மிகுந்தது என்று கூறப்படுகிறது. 2.3 கோடி கிலோ டி.என்.டி. வெடிபொருட்களின் திறனுக்கு இணையானது அது என்று சொன்னார்கள். எது எப்படியிருந்தாலும் நாசத்தை வைத்துதான் போர் வியாபாரிகள் எல்லாவற்றையும் அளவிடுவார்கள். நாகசாகியின் மீது வீசிய குண்டும் ஹிரோஷிமாவுக்கு இணையான விளைவுகளை உண்டாக்கியது. எங்கெங்கும் மானுட அவலத்தின் பேயாட்டம். காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும் மருத்துவர்களும் செவிலியர்களும்கூட மிஞ்சவில்லை. 

நான்கு நாட்களுக்குள் இரண்டு அணுகுண்டு வீச்சு. ஜப்பான் நடுங்கிப்போனது. சில நாட்களில் ஜப்பான் மீது போர் தொடுக்கப்போவதாக ரஷ்யா அறிவித்ததும் வேறு வழியின்றி ஜப்பான் சரணடைந்தது. அணுகுண்டு வீசினாலும் வீசாவிட்டாலும் எப்படியும் ஜப்பான் இறுதியில் தோல்வியடைந்திருக்கும் என்று கருதுவோரும் உண்டு. ரஷ்யாவுக்குத் தன் பலத்தை நிரூபிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் இந்தக் குண்டுவீச்சுகள் என்போரும் உண்டு. இரண்டாவது உலகப் போரை முடித்துவைத்தது அணுகுண்டு வீச்சுதான் என்று ஒரு வாதம் சொல்லப்பட்டாலும் அதுதான் பனிப்போரைத் தொடங்கியும் வைத்தது என்ற உண்மையை நாம் காண வேண்டும். 

ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களிலும் குண்டுவீச்சின்போது உடனடியாக இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சமாக இருந்தாலும், அடுத்து வந்த சில வாரங்கள், மாதங்கள் என்று அந்த ஆண்டின் முடிவுக்குள் மேலும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சின் காரணமாகப் பல்வேறு வகையிலான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். கணக்கற்ற குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறந்து ஹிரோஷிமா, நாகசாகியின் வாழும் சாட்சிகளாக உலவுகின்றனர். அதற்குப் பிறகு, கடந்த 75 ஆண்டுகாலமாக எந்த நாடும் மற்றொரு நாட்டின் மீது அணுகுண்டு வீசவில்லை என்றாலும் ஏராளமான அணுஆயுதங்களைப் பல நாடுகளும் வைத்திருக்கின்றன. ஆகவே, எப்போதும் எரிமலையின் வாய் மீது உட்கார்ந்திருப்பது போன்றதுதான் நம் வாழ்க்கை. ஒரு கிறுக்குத்தனமான ஆட்சியாளரோ அல்லது ஸ்டேன்லி கூப்ரிக்கின் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்லவ்…’ படத்தில் வருவதுபோல் ஒரு ராணுவ ஜெனரலோ திடீரென்று ஒரு கணத்தில் ஒரு பொத்தானை அழுத்தினால் இந்த உலகம் முடிவுக்கு வரும் அபாயத்தில்தான் நாம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  

முதல் அணுகுண்டைத் தயாரித்த அறிவியலாளர்கள் ‘அழிவுநாள் கடிகாரம்’ (டூம்ஸ்டே கிளாக்) என்ற கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் அழிவுநாளுக்கு, அதாவது கடிகாரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு, இன்னும் இரண்டு நிமிடங்களே உள்ளன. நள்ளிரவு 12 மணியை நோக்கிய முதல் உந்தலை ஹிரோஷிமா அளித்ததென்றால் தொடர்ந்த போர்கள், அணுஆயுதப் பெருக்கம், இயற்கைப் பேரழிவுகள் போன்றவை மேலும் கடிகாரத்தின் முட்களை வேகமாக நகர்த்தின, நகர்த்திக்கொண்டிருக்கின்றன. ஹிரோஷிமா, நாகசாகியின் மீது குண்டுவீசப்பட்ட 75-ம் ஆண்டும் கரோனா பெருந்தொற்று உலகத்தையே முடக்கிப்போட்டிருக்கிறது. அது ‘அழிவுநாள்’ கடிகாரத்தையும் முடக்கிப்போடுமானால் மனித குலத்துக்கே பெரும் விடிவாக அமையும். 

-(ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டு வீசப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரை)

Saturday, July 26, 2025

கமல், ஸ்டேன்லி கூப்ரிக்கை என்ன செய்தீர்கள்? - ஸ்டேன்லி கூப்ரிக் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு


ஆசை

(இப்படைப்பு முழுவதும் கற்பனையே. ஆனால் யாருடைய கற்பனை என்பது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் இந்தப் படைப்பு தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது. இறுதியில் படைப்பும் அதன் பார்வையாளர்களும் சேர்ந்து இது யாருடைய கற்பனை என்று கண்டுபிடித்தால் மகிழ்ச்சியே. கமல், சத்யராஜ், வாகை சந்திரசேகர், நிக்கி கல்ரானி, ஜெய் மற்றும் ஸ்டேன்லி கூப்ரிக் ஆகியோரின் ரசிகர்கள் மனம் புண்படும் என்றால் அவர்களிடம் இந்தப் படைப்பு, மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.)

**
நடிப்பு: பத்மஸ்ரீ கமல்ஹாசன் (அப்போது உலக நாயகன் பட்டம் தரப்படவில்லை), சத்யராஜ், வாகை சந்திரசேகர், ஜெய், நிக்கி கல்ரானி இவர்களுடன் நானும் நீங்களும்.

கதை-திரைக்கதை-வசனம்: ஸ்டேன்லி கூப்ரிக், கமல்ஹாசன், நானும் நீங்களும்

இயக்கம் – முதல் அத்தியாயத்தின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்   

குறிப்பு: இத்திரைப்படம் மன்னார்குடி சத்யா திரையரங்கில் மட்டுமே தினமும் இரவு ஒரு மணிக்குத் திரையிடப்படும்

**

1.

சைக்கிளை விட்டு இறங்காமல் ஒற்றைக்காலை ஊன்றிக்கொண்டு  “கோபாலகிருஷ்ணன்” என்றான் பிரகாஷ்.

நானும் “கோபாலகிருஷ்ணன்” என்றேன். சங்கேதம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

“ஆனா இன்னைக்கு ரொம்ப ரொம்ப வேற விஷயம் அப்படின்னாரு சண்முகம் அண்ணே” என்றான். 

அவ்வளவு தூரம் சைக்கிள் மிதித்து வந்ததில் இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அவனுக்கு.

“சரி நீ போ. நான் வந்துடுறேன்.”

Friday, July 25, 2025

மக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்! - இயக்குநர் மகேந்திரன் பிறந்தநாள் மீள்பகிர்வு


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான இயக்குநர் மகேந்திரன் நேர்காணலின் முழு வடிவம் இது. இந்த நேர்காணலின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அச்சில் வெளியாகியிருக்கிறது. முழுமையான, விரிவான நேர்காணல் எனது வலைப்பதிவில் பிரத்யேகமாக இங்கே...)

ஐம்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ இரண்டு படங்களும் வெளியாகி. ஆனாலும், சலிக்கவே சலிக்காமல் தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னமும். இன்று அவரது 86-வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு அவரது நேர்காணலின் மீள்பகிர்வு இங்கே...

இன்று புதிதாக வரும் இயக்குநர்களும் உங்களை ஆதர்சமாகக்கொண்டிருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எனக்கு எல்லாமே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. நான் வேண்டுமென்றே எந்த உத்தியையும் பின்பற்றி அந்தப் படத்தை எடுக்கவில்லை. எனக்குத் தெரிந்த சினிமாவை நான் எடுத்தேன். ஆனால், மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் நிறைய எழுதுகிறார்கள் அதைப் பற்றி. அதற்கு என்ன காரணம் என்பதை உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

எனக்குப் பள்ளி நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்கள் மீது ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. மேடை நாடகங்கள் போலவும் வானொலி நாடகங்கள் போலவும் தமிழ்த் திரைப்படங்கள் இருப்பதாக நான் உணர்ந்தேன். சினிமா ஒரு காட்சி ஊடகமாக இருக்க வேண்டும். காட்சிகளால் நகர வேண்டும் என்று நினைத்தேன். எனக்குத் தமிழ்த் திரைப்படங்கள் மீது என்னென்ன ஒவ்வாமைகளெல்லாம் இருந்தனவோ அதையெல்லாம் நீக்கிவிட்டு எடுத்த படம்தான் ‘உதிரிப்பூக்கள்’.

Saturday, July 12, 2025

பாப்லோ நெருதா கவிதைகள் - பிறந்தநாள் பகிர்வு



1. ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு ஒரு பாடல்

ஃபிடல், ஃபிடல்,
செயலாக மாறிய சொற்களுக்கும்
பாட்டாக ஒலிக்கும் செயல்களுக்கும்
நன்றிகாட்டுகிறார்கள் மக்கள்,
காணாத தூரத்தைக் கடந்து நானொரு கோப்பையில்
என் நாட்டின் மதுவோடு வந்திருப்பதும் அதனால்தான்:
நிலத்தடி மக்களின் உதிரம் அது
இருட்டிலிருந்து புறப்பட்டு உனது தொண்டையை
வந்தடைகிறது,

உறைந்துகிடந்த நிலத்திலிருந்து
நூற்றாண்டுகளாய்த் தீயைப் பிழிந்து
வாழ்ந்த சுரங்கத் தொழிலாளிகள் அவர்கள்.
கடலின் ஆழத்திலும்
நிலக்கரியைத் தேடும் அவர்கள்
பேயுருகொண்டு கரையேறுகிறார்கள்:
முடிவில்லா இரவுக்குப் பழகிக்கொண்டுவிட்டார்கள் அவர்கள்,
பகல் வேளையின் வெளிச்சம் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது,

ஆயினும், இதோ, இந்தக் கோப்பை.
சொல்லொணாத் துயரத்தினதும்,
கண்காணாத தூரத்தினதும் கோப்பை.
இருளும் பிரமைகளும்
பேயாய்ப் பற்றிக்கொண்ட,
சிறைப்பட்ட அந்த மனிதர்களின்
மகிழ்ச்சி அது.

சுரங்கங்களின் உள்ளே இருந்தாலும்
வசந்தத்தின் வரவையும்
அந்த வரவோடு வந்த சுகந்தங்களையும்
உணர்கிறார்கள் அவர்கள்.
தெளிவின் உச்சத்துக்காக மனிதன் போராடுகிறான்-
இதனை அறிந்தவர்களல்லவா அவர்கள்.

தெற்குப் பிரதேசத்தின் சுரங்கத் தொழிலாளிகளும்,
பரந்த புல்வெளிப் பிரதேசத்தில் தனியர்களாய் இருக்கும் மைந்தர்களும்,
படகோனியாவின் குளிரில் வாடும் மேய்ப்பர்களும்,
தகரத்துக்கும் வெள்ளிக்கும் பிறப்பளிக்கும் தகப்பன்களும்,
காதில்யெரா மலைத் தொடர்களுக்கு வாழ்க்கைப்பட்டு
சூகீக்கெமாதெ சுரங்கங்களிலிருந்து செம்புத் தாதுவை அகழ்பவர்களும்,
பேருந்துகளின் கூட்டமும்,
நேற்றைய நினைவிலேயே நிலைத்துவிட்ட நெரிசலும்,
வயல்கள் பட்டறைகளில் உழைக்கும் பெண்களும்,
குழந்தைப் பருவத்தை அழுதே கழித்த குழந்தைகளும்,
க்யூபாவைப் பார்க்கிறார்கள்:

இதுதான் அந்தக் கோப்பை, எடுத்துக்கொள் ஃபிடல்.
அவ்வளவு நம்பிக்கையால் நிறைந்திருக்கும் கோப்பை இது!
அருந்தும்போது நீயறிவாய்
ஒருவரால் அல்ல, பலராலும்
ஒரு திராட்சையால் அல்ல, பல தாவரங்களாலும் உருவான,
எனது தேசத்தின்
பழம் மதுவைப் போன்றது உனது வெற்றி என்பதை.

ஒரேயொரு துளியல்ல; பல நதிகள்:
ஒரேயொரு படைத்தலைவன் அல்ல, பற்பல போர்கள்.
நீண்ட, நெடிய போராட்டம் நம்முடையது,
அதன் ஒட்டுமொத்த மகத்துவத்தின் முழு உருவம் நீ.
அதனால்தான் அவர்களின் ஆதரவெல்லாம் உனக்கு.

க்யூபா வீழுமென்றால் நாங்களும் வீழ்வோம்,
அவளைக் கைதூக்கிவிட நாங்கள் வருவோம்,
அவள் பூத்துச் சொரிந்தால்
நாம் வென்றெடுத்த தேன்கொண்டு செழித்திடுவாள்.
உன் கைகளால் கட்டவிழ்ந்த
க்யூபாவின் நெற்றியை யாராவது தொடத் துணிவார்களென்றால்,
மக்களின் முஷ்டிதான் அவர்களுக்கு பதிலளிக்கும்,
புதைந்திருக்கும் நமது ஆயுதங்களைக் கைக்கொள்வோம்:

எங்கள் நேசத்துக்குரிய க்யூபாவைப் பாதுகாக்க
எங்களுக்குத் துணையாய் வரும்
உதிரமும் மாண்பும்!


2. தேனீக்களுக்கு ஒரு பாடல்

மொய்க்கும் தேனீக்கூட்டமே
உலகின் மென்மைக்கும் மென்மையான
சிவப்பு, நீலம், மஞ்சளின் உள்ளே
புகுந்தும் புறப்பட்டும்
தொழிலுக்காகப்
பூவிதழின் அடுக்கினுள்
கவிழ்ந்து விழுந்து, மீண்டு,
பொன்மயமான உடையும்,
கணக்கில்லா மஞ்சள் காலணிகளும்.
கச்சிதமான இடை, கரும்பட்டைக் கோடிட்ட கீழ்வயிறு
துருதுருக்கும் சின்னஞ்சிறிய தலை
புத்தம்புதிய நீராலான இறக்கைகள் ---
மணங்கமழும் ஜன்னல்கள் எல்லாம் நுழைந்து,
பட்டுக் கதவுகளைத் திறந்து,
இணையில்லா மணம் வீசும் காதலின் மணவறையில் நுழைந்து,
வைரப் பொட்டாகப் பனித்துளியைக் கண்டெடுக்கிறீர்கள்.

சென்றுவரும் வீடெல்லாம்
தேன் என்னும் புதிரை, வளத்தை, கட்டமுதை
அள்ளிச்செல்கிறீர்கள்
அது அடர் மணம், ஓடையாய் ஒளிரும் திரவம்.

கூடிவாழும் கூடத்துக்கு மீண்டுவந்து
அதன் கைப்பிடிச் சுவரில்
பூவின், விண்வெளிப் பாய்ச்சலின்
விளைச்சலான அந்த
கந்தர்வ ரசத்தை, மணநாளின் ரகசியச் சூரியனை,
தேனை, சேமித்து வைத்து
மொய்க்கும் தேனீக்களே,
ஒற்றுமையின் புனித முகடே,
ரீங்கரிக்கும் கல்விக்கூடமே.

ரீங்கார ஆரவாரத்தில்
பூவின் மதுவைப் பக்குவமாக்க
அமுதத் துளிகளைப் பரிமாறி
பசுமை படர்ந்த
ஒசர்னோ எரிமலையின் ஏகாந்த வெளியில்
வெய்யில்காலப் பிற்பகலின் கண்ணயர்வு--
உச்சி சூரியன்
ஈட்டிக் கிரணங்களைப் பனிமீது பாய்ச்ச,
எரிமலைகள் ஒளிர
கடலாக நிலம் விரிகிறது.

நீல வெளியின் ஏதோவொரு நடுக்கம்.
கனன்றுவரும் கோடையின் இதயம்,
தேனினிக்கும் இதயங்கள் பெருகின
ரீங்கரிக்கும் தேனீ
நொறுங்கிச் சடசடக்கும் தேன்கூடு
பொன்வண்ணம், சிறகின் படபடப்பு!
தேனீக்களே,
களங்கமில்லா உழைப்பாளிகளே, ஊன்பெருக்காத கூன் உடல்
தொழிலாளர்களே ஒளிவீசும் தொழிலாள வர்க்கமே!

தன்னையே மாய்த்துவிடும் கொடுக்கோடு கொட்டிச் சாடும்
குறையில்லா தீரப் போர்ப்படையே
இரைச்சலிடுங்கள், புவியின் கொடைகளின்மேல்
பொன்வண்ணக் குடும்பமே,
காற்றின் மந்தையே
பூக்களின் தீயை,
மகரந்தக் கேசரத்தின் தவிப்பை,
நாசியைத் துளைக்கும் நறுமண நூலை,
நாட்களை இணைத்துத் தைக்கும் நூலை,
அந்தத் தேனை விசிறித் தெளியுங்கள்
வெம்மையான கண்டங்களைக் கடந்து
மேலை வானின் தொலைதூரத் தீவுகளுக்கும்.

ஆம்,
பசுமைச் சிலைகளை
தேன் மெழுகு உருவாக்கட்டும்!
எண்ணில்லா நாவில் தேன் சிதறட்டும்,
தேன்கூடாய் ஆகட்டும் அந்தப் பெருங்கடல்
புவியே பூக்களாலான கோபுரமாய், அங்கியாய் மாறட்டும்!
உலகமே ஓர் அருவியாகட்டும்
எரிகல்லின் ஒளிரும் வாலாக
தேன்கூடுகளின் முடிவில்லாச் செல்வமாய் ஆகட்டுமே!


3.

உனது உடலின் வரைபடத்தை
நெருப்பின் குறியீடுகளால் 
குறித்துக்கொண்டு செல்கிறேன்எனது இதழ்கள்
உன் உடல் முழுதும் செல்கிறது
ஒளிந்துகொள்ள முயலும் சிலந்தியாய்.
உனக்குள், உன் பின்னே, கோழையாய்,
தாகத்தால் விரட்டப்பட்டு.

மாலையின் கரையில்
உனக்குச் சொல்வதற்கு 
கதைகளுண்டு நிறைய,
சோகவயப்பட்ட நளினமான பொம்மையே,
எனவே நீ துக்கமடைய மாட்டாய்.
ஒரு அன்னம், ஒரு மரம்,
தூரத்திலிருக்கும் மகிழ்ச்சியான ஏதோ ஒன்று.
திராட்சைகளின் பருவம், முதிர்ந்த, நிறைந்த பழங்களின் பருவம்.

எங்கு உன்னைக் காதலித்தேனோ 
அந்த துறைமுகத்தில் வாழ்ந்த நான்.
கனவாலும், அமைதியாலும் 
குறுக்கிடப்பட்ட அந்தத் தனிமை.
கடலுக்கும் துயரத்துக்கும் மத்தியில்
அடைக்கப்பட்டு.

நிசப்தமாக, பீடிக்கப்பட்டு, 
அசைவற்ற இரு படகோட்டிகளுக்கு மத்தியில்.
உதடுகளுக்கும் குரலுக்கும் இடையே
மங்கிக்கொண்டு வருகிறது
ஏதோ ஒன்று.
பறவையின் சிறகுகளுடன் ஏதோ ஒன்று,
வலியுடன், சுயநினைவற்று,
ஏதோ ஒன்று.
வலையால் தண்ணீரைப் 
பிடித்துவைத்திருக்க முடியாததைப் போல.
என் விளையாட்டுப் பொம்மையே,
ஓரிரு துளிகள் மட்டும் 
தனித்து நடுங்கிக்கொண்டிருக்கின்றன.

அப்படியும், ஏதோ ஒன்று பாடுகிறது,
நிலையற்ற இந்த சொற்களால்.
ஏதோ ஒன்று பாடுகிறது, 
எனது பசிகொண்ட வாயில்
பற்றி ஏறுகிறது.
ஓ! பரவசத்தின் அனைத்துச் சொற்களாலும் 
கொண்டாட முடிகிறது
உன்னை.

பாடு, எரி, பற, 
ஒரு பைத்தியக்காரனின் கையில் 
அகப்பட்ட கோயில் மணியைப் போல.
என் சோகவயப்பட்ட கனிவே,
உன்னை சட்டென்று ஆட்கொள்வது எது?
மிகவும் கிளர்ந்திழுக்கும்
குளிர்ச் சிகரத்தை எட்டி முடித்ததும்
என் இதயம் மூடிக்கொள்கிறது
ஒரு இரவு நேர மலரைப்போல.


4.

உன் முலைகள் 
என் இதயத்திற்குப் போதுமானவை
என் சிறகுகள் 
உன் விடுதலைக்கு.
உனது இதயத்தின் மேல் உறங்கிக்கொண்டிருப்பது
என் உதடுகளின் வழியாக வானத்தை நோக்கி
உயரும்.

உனக்குள் ஒவ்வொரு நாளின் 
மாயத்தோற்றம்.
விரிந்த மலர்களில் வீழும் 
பனித்துளிகளைப் போல் வருகிறாய் நீ. 

தொடுவானத்தை மங்கச் செய்கிறாய் நீ
உனது பிரிவால்.
அலைகளைப் போன்று 
முடிவில்லாமல் பறந்துகொண்டிருக்கிறாய்.
ஊசியிலை மரங்களைப் போல
பாய்மரங்களைப் போல
நீ காற்றில் பாடுகிறாய் என்று 
சொல்லியிருக்கிறேன் நான்.
அவற்றைப்போல நீயும் உயரமாக, 
பேசாமடந்தையாக
மேலும் சட்டென்று சோகமாக, 
ஒரு கடற்பயணத்தைப்போல.

பொருட்களை திரட்டிக்கொள்கிறாய் உன்னிடத்தில்
ஒரு பழைய சாலையைப்போல.
எதிரொலிகளாலும்
பழைய நினைவுகளின் குரல்களாலும்  
நிறைந்திருக்கிறாய்.

நான் எழுகிறேன்
சில சமயங்களில் 
பறந்துசெல்கின்றன, இடம்பெயர்கின்றன
உன் இதயத்தில் உறங்கிக்கொண்டிருந்த பறவைகள்.


5.

பெண்ணுடல், வெள்ளை மலைகள், வெண்ணிறத் தொடைகள்,
உனது சரணாகதித் தோற்றத்தில் இந்த உலகைப் போன்று தோன்றுகிறாய் நீ.
எனது கொடிய முரட்டுத்தனமான உடல் உன்னில்  தோண்டி
துள்ளியெழச்செய்கிறது குழந்தையைப் புவியின் ஆழத்திலிருந்து.

நான் தனியாகச் சென்றேன் ஒரு வளையைப்போல. பறவைகள் பறந்துசென்றன என்னிடமிருந்து, மற்றும் இரவு தனது வலிமையால் ஊடுருவியது என்னில்.
நான் பிழைத்திருப்பதற்காக உன்னைத் தட்டிதட்டி செய்தேன் ஒரு ஆயுதமாக,
எனது வில்லில் அம்பாக, எனது கவணில் கல்லாக.

ஆனால் பழிவாங்கும் தருணம் வந்துவிட்டது, அதனால் உன்னை நான் நேசிக்கிறேன்.தோலின், பாசியின், விடாயின், நிதானமான பால்.
ஓ முலைகளின் கோப்பைகளே! பிரசன்னமின்மையின் விழிகளே!அடிவயிற்றின் ரோஜாக்களே! ஓ உனது மெல்லிய, துயரமான குரலே!

பெண்ணுடலே, நான் உனது மகிமையால் நிலைத்திருப்பேன்.
எனது விடாய், எனது கட்டற்ற ஏக்கம், எனது குழப்பமான பாதை!முடிவற்ற தாகங்கள் பாய்ந்துசெல்லும்,
களைப்பு பாய்ந்துசெல்லும், எல்லையற்ற சோகம் பாய்ந்துசெல்லும் கருநிற நதிப்படுகைகள்.


 

Thursday, June 26, 2025

குளம்படிகளின் சரித்திரம் - நெடுங்கவிதை

 


1.

போரின் சித்திரத்தைத் 
தெளிவாக உருவாக்கக்
குளம்படிகளைத் தவிர
வேறெதுவும் இல்லை

சரித்திரத்தின் அடிமரத்தில்
இதோ
ஆணியாய்ப் படிந்துவிட்ட
குளம்படியை
இறந்துபோன அந்த மன்னன்
--ஆம் அவன்தான்
போரை நிர்மாணித்தவன்--
பிடுங்கியெறிய முயல்கிறான்
பிடிவாதமாய்

அவனுக்குத் தெரியாது
அந்தக் குளம்படியின் வேர் 
பூமியின் எல்லையைக் கடந்துவிட்டது


2.
அதோ அந்தக்
குளம்புகளற்ற ஏராளமான
குதிரைகள் ஓடுகின்றன

அவற்றுடன் 
தீர்மானிக்கப்பட்ட யாவும் அர்த்தமற்று
தலைதெறிக்க ஓடுகின்றன
எதற்குள்ளும் எதுவும்
பொருந்திப்போக முடியவில்லை

தலையற்ற வீரனைக் கொண்டு
போரின் எல்லைவரை சென்ற
குதிரைக்குத்
தன்மேலுள்ள சுமையாலே
போரைப் பற்றிய முடிவுறாக் கற்பனைகள்
கிளர்ந்தெழுகின்றன

அதன் முதுகிலிருந்து
அந்த வீரன்
சரிந்து விழும்வரை
போர் இன்னமும் 
நடந்துகொண்டிருப்பதாகவே
எண்ணிக்கொள்கிறது

இறந்து கிடக்கும் யானைகள்
குதிரைகள் வீரர்கள்
மன்னர்களின் ஊடே
அது அலைந்துகொண்டிருக்கிறது
போர் முடிந்துவிட்ட பிறகும்

தன் வீரனுடன் போர் புரிய
எவருமில்லையா?

குதிரைகளைக் காலம்
பரிகசிக்கிறது


3.
சூரியன் மறைகிறது
குதிரைகளுக்கு விடுதலை

தங்கள் தலைகளைச் சரிபார்த்துப் 
பொருத்திக்கொள்கிறார்கள் மன்னர்கள்
இளைப்பாறும் குதிரைகள்
குளம்புகளை நக்கிக்கொள்கின்றன
நடக்கவிருக்கும் எல்லாப் போர்களுக்குமாக

பொழுது விடிகிறது
இன்னுமொரு போர்


4. 
குளம்படிகளுக்குள் நிகழ்ந்தவையாகக்
கொள்ளப்படுகின்றன
போர்கள்

குளம்படிகள் புலம்புகின்றன
அவற்றால்கூட முடியவில்லை
தங்களை இப்புவியிலிருந்து
--மற்றும் சரித்திரத்திலிருந்து--
விடுவித்துக்கொள்ள

ஒரு சரித்திர ஆசிரியன்
எழுதுகிறான்
‘...ஆண்டில்
குளம்படிகளுக்கிடையே நடந்த போரில்
குளம்படிகள் வென்றன
குளம்படிகள் தோற்றன’


5.
குதிரைகளெல்லாம் முற்றிலும்
தீர்ந்துபோன ஒரு போர்க்களத்தில்
மண்ணில் கெட்டிப்பட்டுப்போன
குளம்படிகள்
மனிதர்களின் பாதங்களை உள்வாங்கி
அவர்களை மாற்றிவருகின்றன
குதிரைகளாய்

பழைய குதிரைகள்
கடிவாளங்கள் காற்றில் பிய்ந்துசெல்லப்
பிடரியைச் சிறகாய்ப் பொருத்திக்கொண்டு
கால்களுக்கெதிராகப் பறந்துவிட்டன
இலவம்பஞ்சைப் போன்று

மண்ணில் பாவாமல்
மிதந்துகொண்டிருக்கும்
அவற்றின் முடிவற்ற கனவுகளை
மீண்டும் ஒரு மன்னன்
தன் பாதி உறக்கத்தில் கண்டு தெளிந்து
தேடிச்செல்கிறான்
போர்களுக்கான குளம்படிகளை


6.
மனித வாடையற்ற
பனிமலையின் அடியில்
உறைந்துபோன குதிரைகள் குளம்புகளற்றுக்
கண்டுபிடிக்கப்பட
அதற்குள் முடிந்துவிட்டது
எல்லாம்

சரித்திரம் குளம்படிகளால் எழுதப்பட்டுக்
காத்திருக்கிறது
குளம்படிகளால் அழிக்கப்படவும்

                          01-07-2001 (2006-இல் ‘க்ரியா’ வெளியீடாக வெளியான எனது ‘சித்து’ கவிதைத் தொகுப்பிலிருந்து...)



Tuesday, June 24, 2025

தமிழால் ஆடுகின்றான் கண்ணதாசன்! - கண்ணதாசன் பிறந்தநாள் கவிதைப் பகிர்வு

மன்னார்குடியில் ஒரு இசையகத்தில் நாங்கள் அடிக்கடி பாடல்களைப் பதிவுசெய்து கொண்டுவந்து கேட்போம். ‘உங்களிடம் அதிகம் பதிவுசெய்யப்பட்ட பாடல் எது?’ என்று அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய பாடல் ‘கண்ணே கலைமானே’. கண்ணதாசன், இளையராஜா, பாலுமகேந்திரா, ஸ்ரீதேவி, கமல் என்று எல்லோருக்குமான பெருமை அது. பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு வந்தவர்களில் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் ஒருவர் கண்ணதாசன். ‘உனக்கே உயிரானேன்... எந்நாளும் எனை நீ மறவாதே’ என்பது அவரது மரண சாசனமாகவே அமைந்துவிட்டது. எப்படி மறப்போம் கண்ணதாசா?

எனது ‘அண்டங்காளி’ தொகுப்பின் இந்தக் கவிதை கண்ணதாசனுக்கு அர்ப்பணம்!
பார் சிவனே
மீனாளின் குங்குமத்தைத்
தானாள வேண்டுமென்று
ஏன் விரும்பினான் கண்ணதாசன்
தானும் சிவனாகும்
ஆசையினாலா
இடம்பெயர்ந்த
உன் நெற்றிக்கண்ணின்
குளிர்சிவப்பைப்
பார்த்து
அவனுக்கும்
ஆசை விடவில்லை
உன் நெற்றிக்கண்ணை
ஒரு பொய்கையாக்கி
அதில் குளித்து விளையாடிக்
கரைமீண்ட மீனாள்
தன் நெற்றியில் துளியாய்த் தங்கிவிட்ட
உன் தகிப்பை
எப்படித்
தன் குங்குமமாக மாற்றிவிட்டாள்
பார்
உன் நெற்றியிலிருந்து
அவள் நெற்றிக்குப்
பயணிக்கும் துடிப்பில்
குளிரைத் துரத்தும்
வெம்மையும்
வெம்மையில் குளிக்கும்
குளிரையும்
உள்ளடக்கிய
தீராத விளையாட்டு
திரைபோட்டு
நடக்கிறது
அதுதான்
நீயாடும் அம்பலம்
அவளாடும்
தன்பலம்
சிவனாகும் ஆசையில்
கண்ணதாசனும்
ஆட முயல்கின்றான்
மீனாளின்
குங்குமப் பரப்பென்ற
குளிர்சிவப்பு
மேடையில்
அம்மை தன்
மேடையெறிந்து
அதைச் சூரியனாக்கிவிடுவாள்
தாங்க மாட்டான்
கண்ணதாசன்
அவள் குங்குமமென்பது
நீ ஒட்டிக்கொண்ட
நெற்றிக்கண்ணோடு
ஆடும் பரப்பல்ல
உன்னைப் போல
வெம்மையை வீசிக்கொண்டு
யாரும் அணுக முடியாத
நெற்றிக்கண் வாசல்
கொண்டதுமல்ல
அவளுடையது
கண்ணதாசா
உற்றுப்பார் உள்ளே
அது அவள்
இதயத்துக்குப்
போகும் வழி
அவள் இதயத்துக்குப்
போகும் வழிக்கு
உன் இதழால்தான்
ஆட்டமிட வேண்டும்
ஆட்டம் தொடங்கியும்கூட
எத்தனையெத்தனை
இதழ்களை எரித்த
குளிர்சிவப்புக்
குங்குமம் அது
தமிழால் ஆடுகின்றான் சிவனே
கண்ணதாசன்
தாங்குவானா
நான் பார்க்க வேண்டும்
ஆடட்டும் அவன்
-ஆசை (‘அண்டங்காளி’, 2021, டிஸ்கவரி வெளியீடு)
நன்றி: ‘ஆகாயப் பந்தலிலே’ பாடலின் ‘மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா’ வரிகள்

Wednesday, June 18, 2025

க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு


ஆசை

தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும் ‘கிட்டத்தட்ட’ இல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.

எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு ‘எடிட்டிங்’ என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

Friday, June 13, 2025

நிலாவுக்குப் போகும் வழி


அண்ணன்காரன் சொல்லிக்கொண்டிருந்தான்
'நான் பெரியவனாகி
சயன்டிஸ்ட் ஆகி
அயன்மேன் சட்டை கண்டுபுடிப்பேன்
தோர் சுத்தியல் கண்டுபுடிப்பேன்
கேப்டன் அமெரிக்கா கவசம் கண்டுபிடிப்பேன்
ஸ்பைடர்மேன்பூச்சி கண்டுபிடிப்பேன்'
கடற்கரை மணலில்
குழி தோண்டிக்கொண்டிருந்த
தம்பிக்காரனிடம் கேட்டால்
நாற்பத்தைந்து டிகிரியில் கையை
உயர்த்தி
நிலாவைக் காட்டிச் சொல்கிறான்
'இலா ஆவணும்'
நிலா பதறிப்போய்விட்டதைப்போல்
தெரிந்தது
நானே குத்துமதிப்பாக நிலாவாக இருக்கிறேன்
என்று புலம்ப ஆரம்பித்ததைப் போன்றும்
தெரிந்தது
சற்றைக்கெல்லாம்
நிலாவுக்குப் பரிதாப முகம்
'அம்மாவும் நிலா
ஆகணும்னா என்ன
செய்யணும்டி'
என்று கேட்டால்
'இந்த மண்ண நோண்டணும்'
என்கிறான்
'எப்போ வரைக்கும்
நோண்டணும்'
என்று கேட்டதற்கு
'நேத்தைக்கு வரைக்கும்'
என்று தலைநிமிராமல்
சொல்லிவிட்டுத்
தொடர்ந்து மண்ணைத் தோண்டுகிறான்
நான்கு திசையிலும்
அண்ணனின்
அயன்மேனையும்
தோரையும்
கேப்டன் அமெரிக்காவையும்
ஸ்பைடர்மேனையும்
காவலுக்கு நிறுத்திவிட்டு
மலைப்பாக இருந்தது எனக்கு
நிலாவுக்குப் போகும் வழியில்
இவ்வளவு மண்ணை யார் கொட்டியது என்று
அதனால்தான்
அம்மாவுக்காக அதையெல்லாம்
அப்புறப்படுத்திக்கொண்டிருக்கிறான்
-ஆசை

Tuesday, June 3, 2025

காஃப்காவின் முன் இரு சிறுமிகள் - காஃப்கா நினைவுநாள் சிறுகதை



ஆசை

1. சர்வீஸ் சாலை

அந்த நெடுஞ்சாலை மிகவும் பெரியது என்றாலும் அதன் ஓரம் நடப்பதற்கு நிறைய இடம் இருக்கிறது என்றாலும் அந்த சாலையில் செல்லும் மிக நீண்டதும் ஏராளமான சக்கரங்களைக் கொண்டதுமான லாரிகளையும் கண்டெய்னர்களையும் பார்க்க எனக்கு அச்சமாக இருந்ததால் அந்த நெடுஞ்சாலையின் இடது பக்கம் இருந்த சர்வீஸ் சாலை என்று சொல்விவிட முடியாத ஆனால் இணையாகச் செல்லும் மண்ணும் தார்ச் சாலையும் கலந்த அந்த சாலையில் குறுக்காக இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எங்கும் புழுதி மயம். நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்வதால் அங்கே ஓரத்தில் இருந்த புழுதி கிளம்புகிறது என்றால் இந்த சர்வீஸ் சாலையில் ஏன் இந்த அளவுக்குப் புழுதி என்று எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் காற்றே இல்லாத புழுக்கமான பகல் பொழுது இது. இந்தப் புழுதிக் காட்டில் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் வழக்கமாக நெடுஞ்சாலைகளில் இருப்பது போன்று டீக்கடை, பிஸ்கெட் சிகரெட் விற்கும் தண்ணீர் போன்றவை விற்கும் கடைகளும் இருந்தன.

Monday, June 2, 2025

அவரவருக்கான இசை! அவரவருக்கான ராஜா!



ஆசை

(இளையராஜா-75-ஐ முன்னிட்டு 04-06-18 அன்று ‘தி இந்து’ தமிழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது)

நெடுந்தொலைவு போவது என்றால் பேருந்துப் பயணத்தைவிட ரயில் பயணம் மிகவும் வசதியானது மட்டுமல்ல அழகானதும் கூட. ஒருமுறை சென்னையிலிருந்து டெல்லி வரை ரயிலில் பயணித்திருக்கிறேன். இந்தியாவின் விதவிதமான நிலங்களை அந்த ரயில் பயணம் என் கண்களுக்குள் தொடர்ச்சியாகக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டே இருந்தது. பேருந்துகள் பெரும்பாலும் ஊர்களுக்கு உள்ளே செல்பவை. ரயில்களோ ஊர்களின் புறப்பகுதி வழியே செல்பவை. பெரும்பாலும் ஏழை எளிய மக்களின் கொல்லைப்புறம் வழியாகச் செல்பவை என்று சொல்லலாம். அப்படிச் செல்லும்போது எத்தனையோ விதமான மனிதர்கள், கிழிந்த உடைகள், அழுக்கு உடைகள், வெறித்த பார்வை, ஒவ்வொரு ஊரிலும் ரயிலுக்கு டாட்டா காட்டும் குழந்தைகள்… கூடவே, ஒவ்வொரு ஊரின் நிறத்தையும் காட்டும் வயல்கள், தரிசு நிலங்கள், இடையிடையே காடுகள், குன்றுகள், மலைப்பரப்புகள். மனிதர்கள் தென்படாவிட்டாலும் அந்த நிலப்பரப்புகள் ஏதேதோ உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டும், நம்மிடமிருந்து உணர்வுகளை எழுப்பிக்கொண்டும் இருக்கும். அங்கே நாம் இருக்க வேண்டும் என்ற உணர்வையும் அந்தக் காட்சிகள் ஏற்படுத்தும். இங்கே இருந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் நம்மை அங்கேயும் இருக்க வைப்பது அந்தக் காட்சிகளின் தன்மை. ரயில் பயணத்தின் தன்மை. ஆகவேதான், இளையராஜாவின் இசையை நீண்ட ரயில் பயணத்துடன் ஒப்பிடவே நான் விரும்புவேன். நம் மனதுக்குள் அவருடைய இசை காட்டும் நிலப்பரப்புகள், எழுப்பும் உணர்வுகள், கற்பனைகள், இங்கே இருக்கும் நம்மை அங்கே இருக்க வைத்தல் என்று எல்லாவற்றையும் வைத்துத்தான் இதை உறுதியாகச் சொல்கிறேன்.

Tuesday, May 27, 2025

நேரு என்ற மாபெரும் சாகசக்காரர்


ஆசை


நேருவின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை ராமச்சந்திர குஹா தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.

அது 1942-ம் ஆண்டு. காந்தி தனது ஆசிரமத்தில் காங்கிரஸ் கூட்டமொன்றை நடத்துகிறார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அலகாபாத் செல்வதற்காக ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில் நேரு கிளம்புகிறார். ‘சீக்கிரமாகப் போய் ரயிலைப் பிடிப்பதற்குக் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக’ என்று கஸ்தூர் பா, நேருவை ஆசிர்வதித்திருக்கிறார். அந்த அவசரத்திலும் நேருவுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. ‘காட்டுமிராண்டித்தனமான போர்களை அனுமதிப்பவர்தான் கடவுளா? விஷவாயு கொண்டு யூதர்கள் படுகொலை செய்யப்படுவதை அனுமதிப்பவர்தான் கடவுளா? ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும் வேட்டையாட அனுமதிப்பவர்தான் கடவுளா?’ என்ற ரீதியில் நேரு பொரிந்துதள்ளியிருக்கிறார். சுற்றிலும் அப்படியொரு அமைதி. கஸ்தூர் பாவை எதிர்த்துப் பேசும் தைரியம் காந்திக்குக்கூட கிடையாது. சங்கடமான இந்தச் சூழலில் காந்தி நுழைகிறார், “பா, ஜவாஹர்லால் என்ன சொல்லியிருந்தாலும் நம்மையெல்லாம் விட கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர் அவர்தான்” என்கிறார்.

Thursday, May 8, 2025

பழிக்குப் பழி (பாலஸ்தீனக் கவிதை)

 

தாஹா முகம்மது அலி

(போர் ஆதரவாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய கவிதை)
**
சில சமயங்களில்… நான் ஆசைப்படுவதுண்டு…
என் அப்பாவைக் கொன்று
எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி
குறுகலானதொரு நிலத்துக்குள் என்னை விரட்டிய
அந்த மனிதனை ஒரு துவந்த யுத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று
சில நேரங்களில் நான் ஆசைப்படுவதுண்டு.
அந்தச் சண்டையில் அவன் என்னைக் கொன்றுவிடுவான் எனில்
நான் ஒருவழியாக நிரந்தர அமைதியில் ஆழ்ந்துவிடுவேன்…
இல்லையெனில், அவனைப் பழிவாங்கத் தயாராகிவிடுவேன்.
•ஆனால்,
துவந்த யுத்தத்தில் என்னுடைய எதிரியை எதிர்கொள்ளும்போது
அவனுக்காக வீட்டில் அவனுடைய அம்மா காத்துக்கொண்டிருப்பாள் என்பதோ,
குறித்த நேரத்தில் வராமல்
கால்மணி நேரம் தாமதித்தாலும்,
தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கும்
தந்தை ஒருவர் இருப்பார் என்பதோ
எனக்குப் புலப்பட்டால்
நான் நிச்சயம் அவனைக் கொல்ல மாட்டேன்,
என்னால் முடிந்தால்கூட.
• அதேபோல்… அவனுக்குத் தம்பிகளும் தங்கைகளும் இருப்பார்கள் என்பதையோ
அவன்மேல் மிகுந்த அன்பைக் கொண்டிருக்கும் அவர்கள்
அவனுக்காக ஏங்குவார்கள் என்பதோ
எனக்குத் தெரிய வந்தாலும்
அவனை நான் கொல்ல மாட்டேன்.
அவன் வீடு திரும்பும்போது அவனை வரவேற்க மனைவியொருத்தி இருந்தாலோ
அவனது பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத,
அவன் அளிக்கும் பரிசுகளால் குதூகலமடையும் குழந்தைகள் இருந்தாலோ
நான் அவனைக் கொல்ல மாட்டேன்.
அல்லது
அவனுக்கு நண்பர்களோ சகாக்களோ
தெரிந்த அண்டை வீட்டுக்காரர்களோ
சிறையில் மருத்துவமனையில் பரிச்சயமான கூட்டாளிகளோ
பள்ளித் தோழர்களோ இருந்தால்…
அவனைப் பற்றி விசாரிக்கக் கூடியவர்களோ,
அவனுக்கு வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பக் கூடியவர்களோ இருப்பார்கள் என்றால்
நான் அவனைக் கொல்ல மாட்டேன்.
• ஆனால்,
அவனுக்கு யாருமே இல்லை என்றாலோ
-அதாவது மரத்திலிருந்து துண்டிக்கப்பட்ட கிளையைப் போல அவன் இருப்பான் என்றாலோ-
அம்மா, அப்பா இல்லாமல்,
தம்பி, தங்கைகள் இல்லாமல்
மனைவி இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் அவன் இருந்தாலோ
உற்றார் உறவினரோ அண்டை அயலாரோ
நண்பர்களோ சகாக்களோ கூட்டாளிகளோ
இல்லாதவன் என்றாலோ
ஏற்கெனவே தனிமையில் வாடும் அவனுக்கு
மேலும் வேதனையை ஏற்படுத்த மாட்டேன்.
மரணமெனும் அவஸ்தையை,
இறந்துபோவதன் துக்கத்தைத் தர மாட்டேன்,
அதற்குப் பதிலாக,
தெருவில் அவனைக் கடந்துசெல்லும்போது
அவனைப் பொருட்படுத்தாமல் செல்வதையே விரும்புவேன்,
அவனைக் கண்டுகொள்ளாமல் விடுவதும்கூட
ஒரு வகையில் வஞ்சம் தீர்ப்பதுதான்
என்று எனக்குள் திருப்திப்பட்டுக்கொள்வேன் நான்.
-(நாசரேத், ஏப்ரல் 15, 2006) -தாஹா முகம்மது அலி (1931-2011), பாலஸ்தீனக் கவிஞர்,
-ஆங்கிலத்தில்: பீட்டர் கோல், தமிழில்: ஆசை