![]() |
ஓவியம்: லியானார்தோ டா வின்சி |
ஆயினும்
ஒருவருக்கொருவர்
விருப்பக்குறி
இட்டதில்லை
ஒரு நொடி
நிறுத்தும்
கருத்தோ
படமோ
அவர் சுவரில்
கண்டதில்லை
அவருக்கும் நான்
அப்படியே
இருந்திருக்கலாம்
ஏதோ வெறுப்பு
சட்டென்று
கடந்துவிடுவேன்
இன்றறிகிறேன்
அவர்
உன் தெருக்காரர் என்று
என்தவம்
என்னிறைஞ்சுதல் போல்
ஏதுமின்றி
அவர் குரல் உன்செவி
உன்குரல் அவர்செவி
அவருரு உன்விழி
உன்னுரு அவர்விழி
அடைதலை
எத்தனை முறை
வாய்க்கப்பெற்றிருப்பார்
உன் மாபெரும்
அருள் வற்றி
ஒருசிறு
துளியாவது
எஞ்சியிராதா
அவருள்
அச்சிறு துளி
ஆர்ப்பரித்துச் சூழ்ந்துகொள்கிறது
என்னை
கடலளவு நேசம் அவர்மேல்
பிறப்பிக்கச் சொல்லி
ஏதோ
உன்விழி
உன்குரல்
எட்டியவர்களையெல்லாம்
நேசித்தால்
உன்னை
எட்டிவிடலாம் என்பது போல
கிறுக்குத்தனம்தான்
ஆனால்
அதுவொன்றே
என்னைக் கிறுகிறுத்து
ஆட்டிவைக்கிறது
-ஆசை