Saturday, November 11, 2023

சிங்காரத்தின் மாபெரும் சிக்ஸர்



உள்ளூர்ப் போட்டியில்
சிக்ஸர்களாய் அடித்து
எங்கள் தெருவுக்கு
வெற்றிதேடித் தந்தவன் சிங்காரம்
பரிசாய்க் கிடைத்த
மூன்னூறு ரூபாயில்
தெருவுக்கே புது மட்டை
வாங்கிக்கொடுத்தவன்
சிங்காரம்
பகலில்
கிரிக்கெட் மைதானமாகவும்
இரவில்
கேரம் மைதானமாகவும்
மாறிப் போகும்
அவன்
வீட்டு வாசல்
எல்லா நேரத்திலும்
இளமையின்
வர்ணனை மைதானமாக
இருக்கும் அது
கிரிக்கெட்டையும்
இளமையையும்
தெருவையும்
ஒன்றாகப் பறித்துக்கொண்டதன்
பெயர் என்னவென்று தெரியவில்லை
ஊருக்குப் போகும்போது
எப்போதாவது
சிங்காரத்தைப் பார்ப்பதோடு சரி
படிப்பு இல்லையென்றாலும்
வெளிநாடு போய்ச் சம்பாதித்து
அதில் பாதி இழந்து
பின் சொந்தமாய் ஒரு மர இழைப்பகம்
பெரிய கோயிலுக்கு அருகில்
கணினியில் வடிவமைத்து
ஆணையைத் தட்டும்போது
உள்ளே அவனுடைய சிஎன்ஸி இயந்திரம்
சிக்ஸர்களாய் அடிக்க ஆரம்பிக்கும்
வாழ்வை
அப்படித்தான் அனுதினமும்
வென்றுகொண்டிருந்தான்
கடைசியாய் ஊருக்குப் போனபோது
சிங்காரத்தின் மரணச் செய்தி
தடுக்கிப் பின்பக்கமாக விழுந்து
தலையில் அடிபட்டுச்
செத்துப்போனதாய்க் கேள்வி
இளம் மனைவி
வயிற்றில் பிள்ளை
அது இன்னேரம் பிறந்திருக்கும்
ஆணோ பெண்ணோ
எங்கிருக்கிறது தெரியவில்லை
தன் அப்பா அடித்த
சிக்ஸர்களை
அது பார்த்திருக்க வேண்டுமே
அது இருந்திருந்தால்
பரிசில் பங்கு பிரித்துக்கொண்டு
பொம்மை வாங்கிக்கொடுத்திருப்பான்
சிங்காரம்
மிச்சப் பணத்தில்
தண்ணி அடித்திருப்போம்
நாங்கள்
இப்படித்தான் பல நேரங்களில்
நேரிடுகிறது
சிங்காரம் சிக்ஸர் அடித்ததைப் பார்க்க
அப்போது அவன் குழந்தை இல்லாததைப் போலவும்
அவன் அடித்த சிக்ஸர்
அவனது எல்லைக்கோட்டைத் தாண்டிப்போய்
எங்கோ இப்போது கொட்டக் கொட்டக்
கண்ணை உருட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்க
சிங்காரம் இல்லாததைப் போலவும்

-ஆசை 

(மறைந்த நண்பன் சிங்காரத்தின் பிறந்தநாள் கவிதை)

1 comment:

  1. எங்க ஊரு சிங்காரம் என் மனசை கிளருகிறான்...

    ReplyDelete