Friday, February 18, 2022

பேபல் நூலகத்தின் படிக்கட்டுகள் வழியே… ('இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்’ நூலுக்கு நான் எழுதிய என்னுரை)

 


ஆசை

1.

திரும்பிப் பார்க்கும் தருணம் இது! திரும்பிப் பார்க்க வேண்டிய அளவுக்கு வயதாகிவிடவில்லையென்றாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்படிச் செய்வது நம்மைச் செழுமைப்படுத்திக்கொள்ள உதவும் என்று நம்புகிறேன். 

மிகச் சமீபத்தில்தான் யோசித்துப் பார்த்தேன், எத்தனை ஆண்டுகளாக கட்டுரைகள் எழுதுகிறோம் என்று. மன்னார்குடி அரசுக் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு (2001-ல்) படிக்கும்போது நண்பரின் ஆசிரியத்துவத்தில் அவருடன் இணைந்து கொண்டுவந்த ‘இந்தியன் இனி’ மாத இதழில் எழுதிய கட்டுரைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் கடந்த 21 ஆண்டுகளாக நான் இலக்கியக் கட்டுரைகளை எழுதிவருகிறேன். என்னளவில் இது மலைப்பையே தருகிறது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக எழுதியிருக்கிறேன் என்ற பிரக்ஞை எனக்கு சமீப காலம் வரை இல்லை. ’இந்தியன் இனி’ இதழுக்கும் முன்பு 10-ம் வகுப்பு படிக்கும்போது மன்னார்குடியின் மாதாக்கோவில் தெரு நண்பர்களோடு இணைந்து கொண்டுவர முயற்சி மேற்கொண்டு தோல்வியடைந்த ‘நதி’ என்ற பத்திரிகையும் என் இலக்கியச் செயல்பாடுகளுக்கு ஒரு முன்னோட்டம் என்று கொள்ளலாம். 

ஆனால், வாசிப்புதான் எல்லாவற்றுக்கும் அடித்தளம். சிறுவர் இலக்கியம், க்ரைம் நாவல்கள், சரித்திர நாவல்கள் என்று பெரும்பாலானோரைப் போலவே என் வாசிப்புப் படிக்கட்டு அமைந்திருந்தது. 10, 11-ம் வகுப்புகள் படித்த காலகட்டத்தில் சுஜாதாவின் கட்டுரைகள், குறிப்பாக ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ நூல், எனக்குப் பெரும் திறப்பைத் தந்தன. ஏற்கெனவே, அண்ணன் மூலம் தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் அறிமுகமாகியிருந்தாலும் சுஜாதாவின் மூலம்தான் புதுமைப்பித்தன், மௌனி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி உள்ளிட்ட பல பெயர்களையும் கேள்விப்படுகிறேன். தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பெரும் பரப்பை எனக்குக் காட்டிவிட்டதற்காக சுஜாதாவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

11 வயதில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேன். அடுத்து வந்த சில ஆண்டுகள் அதிகம் மரபுக் கவிதைகள்தான். பாரதியும் பாரதிதாசனும் அப்போது எனக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். பாரதியின் தாக்கம் இன்று வரை எனக்குள் தொடர்கிறது. கட்டுரைகளைப் பொறுத்தவரை சுஜாதாதான் ஆரம்பப் புள்ளி. இளங்கலைப் படிப்பின்போது நான் படித்த சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலும் ‘விரிவும் ஆழமும் தேடி’ கட்டுரைத் தொகுப்பும் என்னை அப்படியே புரட்டிப் போட்டன. அதுவரையிலான என் ரசனை, மதிப்பீடுகள் போன்றவற்றை மாற்றியமைத்தது சுந்தர ராமசாமிதான். ‘விரிவும் ஆழமும் தேடி’ கட்டுரைத் தொகுப்பில் நான் கண்டெடுத்த ‘மறுபரிசீலனை’ என்ற சொல் அப்போதைக்கு ஒரு மந்திரச் சொல்லாக எனக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. அரசியல், திரைப்படம், இலக்கியம் என்று எல்லாவற்றிலும் நான் கொண்டிருந்த மதிப்பீடுகளும் ரசனையும் மாற ஆரம்பித்தன. நான் செய்த மறுபரிசீலனைகளால் நிறைய நல்ல விளைவுகளும் சில தீய விளைவுகளும் ஏற்பட்டன. சிறு வயதிலிருந்து திராவிட இயக்கத்தில் ஊறியிருந்த எனக்கு, கார்கில் போர் காலகட்டத்தில் சற்றே பாஜக சாய்வு ஏற்பட்டது. ஆனால், அங்கே நான் விழுந்துவிடாமல் என்னைக் காப்பாற்றியது இலக்கியம். அது நல்ல விளைவு. அதே நேரத்தில் என்னை முற்றிலும் அரசியலற்றவனாகவும் நவீன இலக்கியம் ஆக்கிவிட்டது. இது குறித்து, கருணாநிதிக்கு நான் எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருப்பேன்: “கட்சியின் மீது தொடர்ந்து வெறுப்புணர்வை அவன் வளர்த்துக்கொண்டான். முழுக்க முழுக்க இலக்கியத்தை நோக்கி அவன் நகர்ந்ததும் இதற்குக் காரணம். அவன் படித்த நவீன இலக்கியங்கள் அவனை அரசியலற்றவனாக மாற்றிவிட்டதை சமீபத்தில்தான் அவன் உணர்ந்தான். ஆரம்ப காலத்தில் அந்த இலக்கியங்கள்தான் திராவிட இயக்கத்தின் மீது ‘புனிதமான’ கேள்விகளைக் கேட்கவைத்து அந்த இயக்கத்திலிருந்து அவனை விலக வைத்தன.”

கல்லூரியில் படிக்கும்போதே சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ பாதிப்பிலிருந்து விலகிவிட்டேன். என் தனிப்பட்ட ரசனையின் விளைவு இது. நான் அதிகம் கவிதையிலேயே கவனம் செலுத்தினேன். அதன் பிறகு மறுபடியும் நண்பர்களும் நானும் சேர்ந்து 2010-ல் தொடங்கிய ’தமிழ் இன்று’ இணைய இதழ் எனக்குக் கட்டுரைகள் எழுதுவதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. சிற்றிதழ்கள் பலவும் இருந்தாலும் யாரோடும், எந்த இலக்கிய அரசியலோடும் என்னை இணைத்துக்கொள்ளாமலேயே இருந்தேன், இருக்கிறேன். இதிலும் நல்ல விளைவுகள், தீய விளைவுகள் இரண்டுமே இருக்கின்றன. ‘அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள், பிரச்சினைகள், சண்டை சச்சரவுகள் போலத்தான் இலக்கிய உலகிலும் இருக்கும்; அதற்காக இலக்கிய உலகத்தையே புறக்கணிக்க வேண்டியதில்லை’ என்ற தெளிவு மிகவும் தாமதமாகவே எனக்கு வந்தது. மேலும், நான் அடிப்படையில் புதியவர்களுடன் பழகுவதில் தயக்கமும் கூச்சமும் கொண்டவன். நானொரு அகவுலகவாசி. மன்னார்குடியில் உள்ள எங்கள் வீட்டில் என்னுடைய அறைக்குள்ளேயே என்னை நானே புதைத்துக்கொண்டு புத்தகங்கள், இளையராஜா என்று மூழ்கிவிடுவேன். சென்னை வந்த பிறகும் அதிக பேருடன் நான் பழகவில்லை. ஆகவே, எந்தக் குழுவுடனும் நான் என்னை இணைத்துக்கொள்ளவில்லை.

சுஜாதா, சுந்தர ராமசாமிக்கு அடுத்தபடியாக என் இலக்கிய பார்வையை விரிவுபடுத்தியவர்கள் க்ரியா ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும். இவர்களுடைய பார்வைகளை நான் வரிந்துகொண்டதும் உரிய நேரத்தில், அல்லது சற்று தாமதமாக, அவற்றிலிருந்து விடுபட்டு, எவ்வளவு எளிமையானதென்றாலும் எனக்கென்று ஒரு பார்வையை உருவாக்கிக்கொண்டதும் காலப் போக்கில் நிகழ்ந்தது. அது எவ்வளவு அவசியமானது என்று இப்போது புரிகிறது. 

2013-ல் ‘இந்து தமிழ்’ நாளிதழ் தொடங்கப்பட்டபோது அதன் நடுப்பக்க அணியில் இணைந்துகொண்டேன். இலக்கியம், சமூகம், சுற்றுச்சூழல், அறிவியல், மொழி, திரைப்படம், சிறார் இலக்கியம் என்று பல்வேறு வகைமைகளில் எழுதவும் மொழிபெயர்க்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை இன்றுவரை பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். எனது சிறிய உலகம் ‘இந்து தமிழ்’ நாளிதழில் நான் சேர்ந்த பிறகு விரிய ஆரம்பித்தது. எழுத்தாளர்கள், வாசகர்கள் என்று பலரின் உறவும் கிடைத்தது. அச்சுப் பதிப்பு மட்டுமல்லாமல் இணையத்திலும் நாளிதழ் வெளிவருவதால் தினமும் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கானவர்களிடம் என் எழுத்து சேர்வதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் எனக்கு ஏற்பட்டது.


2.

இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளுள் கணிசமானவை நூல் மதிப்புரைகள். இவற்றை மேலோட்டமாகப் பார்ப்பவர்களால் கூட உணர்ந்துகொள்ள முடியும், இயன்ற அளவுக்குப் பல எழுத்தாளர்கள், பல பதிப்பகங்களை இந்தக் கட்டுரைகள் உள்ளடக்கியுள்ளன என்று. எனினும் விடுபாடுகள் இருக்கவே செய்கின்றன என்பதை நானும் உணர்கிறேன். முன்னோடி எழுத்தாளர்கள், மூத்த எழுத்தாளர்கள், 2000-க்குப் பின் எழுத வந்தவர்கள், பெண் எழுத்தாளர்கள் என்று இன்னும் நிறைய ஆளுமைகளைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருக்கிறது. (கிடைத்த சந்தர்ப்பங்களில் இவர்களில் பலரது படைப்புலகத்துக்கு ‘இந்து தமிழ்’ நாளிதழில் அணியாக மரியாதை செலுத்தியிருக்கிறோம் என்பது நினைவில் கொள்ளத் தக்கது). இவர்களைப் பற்றி நான் எழுதுவது நான் ஏதோ இவர்களுக்குச் செய்யும் உபகாரம் என்று அர்த்தமாகாது. இவர்களைப் படித்து எழுதுவதன் மூலம் எனது எழுத்தின் ஆழத்தையும் படைப்புச் சிந்தனையையும் விரிவுபடுத்திக்கொள்கிறேன் என்பதே முதலும் முடிவுமான நோக்கம். இந்த நூல் ஒரு தொடக்கம்தான். 

நான் ஆங்கில இலக்கிய மாணவன் என்பதால் அதன் வழியாகவும், சிற்றிதழ் உலகம் மூலமாகவும், தனிப்பட்ட வாசிப்பின் மூலமாகவும் எவ்வளவோ இலக்கியக் கோட்பாடுகள் என்னை வந்தடைந்திருக்கின்றன. அவையெல்லாம் சேர்ந்து என் இலக்கியப் பார்வையில் குறிப்பிட்ட அளவு தாக்கம் செலுத்தியிருக்கின்றன. கூடவே, குவாண்டம் இயற்பியல் மீதான எனது நாட்டத்தை எனது அறிவியல் கட்டுரைகளில் மட்டுமல்லாமல் எனது இலக்கியக் கட்டுரைகளிலும் காண முடியும். இலக்கியமும் குவாண்டம் இயற்பியலும் அடிப்படையில் மெய்ம்மையைப் பார்க்கும் பார்வைகள்தானே? அதனால் இரண்டுக்கும் இடையே வியக்கத்தக்க ஒற்றுமைகளை என்னால் உணர முடிகிறது. முக்கியமாக, புறவயமான (objective) பார்வை ஒன்று கிடையவே கிடையாது, எல்லாமே அகவயம் (subjective) சார்ந்ததுதான் என்பது குவாண்டம் கோட்பாட்டின் அடிப்படைகளுள் ஒன்று. இதை இலக்கியத்துடனும் பொருத்திப்பார்க்க முடியும். கூடவே, காலம், வெளி குறித்து குவாண்டம் கோட்பாடு, சார்பியல் கோட்பாடு போன்றவை கூறியவற்றில் பலவும் தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளில் அவர்களையும் அறியாமலேயே இழையோடுவதையும் என்னால் பார்க்க முடிகிறது. கோட்பாடுகள் எனக்கு உதவியிருந்தாலும் நான் கோட்பாட்டு விமர்சகன் அல்ல. என்னுடைய இலக்கிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக, ஒரு படைப்பில் நான் என்னவெல்லாம் கண்டடைந்திருக்கிறேன், எதுவெல்லாம் என் கற்பனையைக் கிளறுகிறது என்பதை நானே கண்டுபிடிப்பதற்காகவே பெரிதும் விமர்சனங்கள் எழுதுகிறேன். 

நான் இலக்கிய உலகுக்குக் கடன்பட்டிருப்பவன். ஆகவே, அந்த உலகுக்கு என்னால் ஆன மரியாதைதான் இந்தக் கட்டுரைகள். ஒரு நூலுக்கு மதிப்புரை எழுதுவதாலேயே, அதுவும் வெகுசனப் பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு மதிப்புரை எழுதுவதாலேயே ஒரு நூலின் ஆசிரியருக்கு மேல் தன்னை வைத்துக்கொண்டுவிடலாகாது என்ற பிரக்ஞை எனக்கு எப்போதும் உண்டு. 

வெகுசன இதழில் எழுதும்போது கூடுமான வரை கடுமையான விமர்சனங்களைத் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனால், மொழிபெயர்ப்புகள் வெள்ளம்போல் பாய்ந்துவரும் சூழலில் அக்கறையின்றி எப்படி அவை செய்யப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட இரண்டு முறை மட்டும் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறேன். அதற்காக நான் மிக மோசமாக அவதூறுகளுக்கு உள்ளாக்கப்பட்டதும் நடந்தது. இதையெல்லாம் தாண்டி, எவ்வளவோ எழுத்தாளர்களும் வாசகர்களும் என்மீது அன்பு செலுத்தியிருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நான் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.


3.

என்னுடைய 21 ஆண்டுகால இலக்கியம், கலை விமர்சனக் கட்டுரைகளை மட்டும் கணக்கிலெடுத்துப் பார்த்தபோது 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் கிடைத்தன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவைதான் இந்தக் கட்டுரைகள். இலக்கியம், அறிவியல், மொழி என்று பல்வேறு வகைமைகளில் நான் கட்டுரைகள் எழுதியிருப்பதை இந்தப் புத்தகத்தை வேகமாகப் புரட்டினால் கண்டுகொள்ள முடியும். இலக்கியத்தைத் தாண்டியும் உலகம் இருக்கிறது, புனைவுகள், கவிதைகளைத் தாண்டியும் புத்தகங்கள் இருக்கின்றன என்று க்ரியா ராமகிருஷ்ணன் என் பார்வையை விரிவாக்கியதுதான் இதற்கு அடிப்படை.

இந்தத் தொகுப்புக்கான செம்மையாக்கம் செய்யும்போது நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறேன். கட்டுரைகளின் அடிப்படையில் கைவைக்கவில்லை என்றாலும் தேவையான திருத்தங்களைச் செய்திருக்கிறேன். சில தலைப்புகளையும் மாற்றியிருக்கிறேன். கட்டுரைகளை அவை வெளியான கால வரிசையில் இல்லாமல் புனைவு, கவிதை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பகுப்புகளின் அடிப்படையில் கொடுத்திருக்கிறேன். பிற மொழிப் பெயர்களை அந்தந்த மொழியில் எப்படி உச்சரிக்கிறார்களோ அப்படியே கொடுப்பதற்குக் கூடுமானவரை முயன்றிருக்கிறேன். எடுத்துக்காட்டாக, Nikos Kazantzakis-ன் பெயரைத் தமிழில் நிக்கோஸ் கசன்ஸாகீஸ் என்று எழுதுவதே வழக்கம். ஆனால், அவருடைய மொழியான கிரேக்கத்தில் நீக்கோஸ் காஸான்ட்ஸாகீஸ் என்றே அவர் அழைக்கப்படுகிறார். நான் அதையே பின்பற்றியிருக்கிறேன். 

இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவும் விரிவாக எழுதப்பட்டு அவற்றின் சுருக்கமான வடிவங்கள் மட்டுமே அச்சுப் பதிப்பில் வெளியாயின. ஆகவே, இந்தத் தொகுப்பில் பெரும்பாலும் விரிவான வடிவங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன. தகுந்த இடங்களில் எந்த சந்தர்ப்பத்தில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டன என்ற குறிப்புகளைக் கொடுத்திருக்கிறேன்.


4.

இந்தக் கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸின் ‘பேபல்  நூலகம்’ (த லைப்ரரி ஆஃப் பேபல்) என்ற சிறுகதையின் தொடக்க வரியிலிருந்து தழுவிக்கொள்ளப்பட்டது. போர்ஹெஸுக்கு நன்றி!

சிந்தனையானது ஆழமாகவும் கூர்மையாகவும் வெளிப்பட மொழி மிகவும் முக்கியம் என்று எனக்குச் சொல்லிக்கொடுத்த க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எப்போதும் நன்றி! ஒட்டுமொத்தத் தொகுப்பையும் படித்துவிட்டு, ஊக்கமளிக்கும் வார்த்தைகளைக் கூறியவர் என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமன். ஆங்கில இலக்கிய-விமர்சன மரபு பற்றிய ஆழமான அறிவு கொண்ட அவர் இந்தத் தொகுப்புக்கு வழங்கியிருக்கும் மதிப்புரையை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். அவர் எழுதியதற்கு ஏற்றவாறு என்னைச் செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கூடுதல் பொறுப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தங்க. ஜெயராமனுக்கு என் நன்றி!

இந்தக் கட்டுரைகளை அவை எழுதப்பட்ட காலத்திலேயே, வெளியாகும் முன்பே படித்துவிட்டு அவற்றைச் செம்மையாக்குவதற்கும் கூர்மையாக்குவதற்கும் நண்பர் சமஸ் கூறிய யோசனைகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்திருக்கின்றன. அவருக்கு நன்றி!  வெகுசன இதழில் தீவிர இலக்கியக் கட்டுரைகள் எழுதுவதற்கு முழுச் சுதந்திரம் அளித்து என்னுடைய பல கட்டுரைகளைப் பாராட்டியிருக்கும் ‘இந்து தமிழ்’ நாளிதழின் ஆசிரியர் கே.அசோகனுக்கு நன்றி! உடனுக்குடன் படித்துவிட்டுக் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கூறிய கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன், செல்வ புவியரசன், த. ராஜன் உள்ளிட்ட சகாக்களுக்கும் நன்றி! மூத்த சகாக்கள் சாரி, சிவசு ஆகியோருக்கும் நன்றி! 

சாரு நிவேதிதாவும் எஸ்.ராமகிருஷ்ணனும் என் வலைப்பூவில் உள்ள கட்டுரைகளைத்  தங்கள் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி எழுதியது விரிவான இலக்கிய வாசகப்  பரப்புக்கு என்னைக் கொண்டுசென்றது. அவர்களுக்கு என் நன்றி!  

பல முறை என் கட்டுரைகளைப் படித்துவிட்டுக் கூர்மையான கருத்துகளை வழங்கியிருக்கும் பா.வெங்கடேசனுக்கும் சீனிவாச ராமாநுஜத்துக்கும் நன்றி!

இந்தக் கட்டுரைத் தொகுப்பை சிரத்தையுடன் படித்துத் தங்கள் விரிவான கருத்துகளையும் கூர்மையான விமர்சனத்தையும் வழங்கியவர்கள் தூயன், முகம்மது ரியாஸ், ராஸ்மி. அவர்களுக்கு மிக்க நன்றி!

நண்பர்கள் கார்த்தி, செந்தமிழுக்கு என் அன்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிடும் டிஸ்கவரி புக் பேலஸின் வேடியப்பனுக்கு நன்றி! பொருத்தமான அட்டைப் படத்தை வடிவமைத்துத் தந்த ஓவியர் மணிவண்ணனுக்கும் நன்றி!

மேலும், இந்தக் கட்டுரைகள் வெளியானபோது படித்துவிட்டுப் பாராட்டிய, குறைகளைச் சுட்டிக்காட்டிய எழுத்தாளர்களுக்கும், தொடர்ந்து ஊக்கம் தரும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

எனது ஒவ்வொரு புத்தகமும் எனக்குக் கொஞ்சமாவது மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டுமென்று ஆசைப்படும் என் மனைவி சிந்துக்கு இந்த நூல் மேலும் கொஞ்சம் ஆசுவாசம் தரும் என்று நம்புகிறேன்.

மகன்கள் மகிழ் ஆதனுக்கும் நீரனுக்கும் அன்பு முத்தங்கள்.

நூல் விவரங்கள்:

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்
(இலக்கியக் கட்டுரைகள்)
ஆசை
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.330
தொடர்புக்கு: 99404 46650