Monday, June 4, 2018

அவரவருக்கான இசை! அவரவருக்கான ராஜா!




ஆசை
(இளையராஜா-75-ஐ முன்னிட்டு 04-06-18 அன்று ‘தி இந்து’ தமிழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது)

நெடுந்தொலைவு போவது என்றால் பேருந்துப் பயணத்தைவிட ரயில் பயணம் மிகவும் வசதியானது மட்டுமல்ல அழகானதும் கூட. ஒருமுறை சென்னையிலிருந்து டெல்லி வரை ரயிலில் பயணித்திருக்கிறேன். இந்தியாவின் விதவிதமான நிலங்களை அந்த ரயில் பயணம் என் கண்களுக்குள் தொடர்ச்சியாகக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டே இருந்தது. பேருந்துகள் பெரும்பாலும் ஊர்களுக்கு உள்ளே செல்பவை. ரயில்களோ ஊர்களின் புறப்பகுதி வழியே செல்பவை. பெரும்பாலும் ஏழை எளிய மக்களின் கொல்லைப்புறம் வழியாகச் செல்பவை என்று சொல்லலாம். அப்படிச் செல்லும்போது எத்தனையோ விதமான மனிதர்கள், கிழிந்த உடைகள், அழுக்கு உடைகள், வெறித்த பார்வை, ஒவ்வொரு ஊரிலும் ரயிலுக்கு டாட்டா காட்டும் குழந்தைகள்கூடவே, ஒவ்வொரு ஊரின் நிறத்தையும் காட்டும் வயல்கள், தரிசு நிலங்கள், இடையிடையே காடுகள், குன்றுகள், மலைப்பரப்புகள். மனிதர்கள் தென்படாவிட்டாலும் அந்த நிலப்பரப்புகள் ஏதேதோ உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டும், நம்மிடமிருந்து உணர்வுகளை எழுப்பிக்கொண்டும் இருக்கும். அங்கே நாம் இருக்க வேண்டும் என்ற உணர்வையும் அந்தக் காட்சிகள் ஏற்படுத்தும். இங்கே இருந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் நம்மை அங்கேயும் இருக்க வைப்பது அந்தக் காட்சிகளின் தன்மை. ரயில் பயணத்தின் தன்மை. ஆகவேதான், இளையராஜாவின் இசையை நீண்ட ரயில் பயணத்துடன் ஒப்பிடவே நான் விரும்புவேன். நம் மனதுக்குள் அவருடைய இசை காட்டும் நிலப்பரப்புகள், எழுப்பும் உணர்வுகள், கற்பனைகள், இங்கே இருக்கும் நம்மை அங்கே இருக்க வைத்தல் என்று எல்லாவற்றையும் வைத்துத்தான் இதை உறுதியாகச் சொல்கிறேன்.

இளையராஜாவின் இசையைப் பொறுத்தவரை அவருடைய மகத்தான சாதனையாக அவரின் இசை நுணுக்கங்கள், இனிமை, ராகங்கள், பாடகர் தேர்வு போன்றவற்றையல்ல, நம் மனதில் அவர் இசை எழுப்பும் கற்பனையைத்தான் பிரதானமான சாதனையாகச் சொல்வேன். ஏனென்றால், அவருடைய இசையில் வெளிப்படும் தொழில்நுட்பம் கேட்கும் எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். ஆனால், அவர் இசை நம் மனதில் எழுப்பும் உணர்வுகளும் கற்பனைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொருவரும் தங்களுக்கேயான நினைவுகளை, கற்பனைகளை, உலகைப் படைப்பதற்கான இடைவெளிகளைக் கொண்டிருக்கும் இசை அவருடையது. இடைவெளி என்றால் ஒரு இசைக்கு இடையே நிசப்தத்தைத் தவழ விடுவது என்ற அர்த்தத்தில் அல்ல. இழையோடும் அந்த இசை நம் மனதை நிரப்புவதுபோல் அதற்குள்ளும் நம் மனதை நாம் நிரப்பிக்கொள்ளும் வகையிலான இடைவெளி. அதாவது, அங்கே இளையராஜா இசை நிகழ்த்துபவராகவும் நாம் அதைப் பெற்றுக்கொள்பவர்களாகவும் இல்லாமல் இளையராஜாவுடன் சேர்ந்து நாமும் இசை நிகழ்த்துகிறோம். இசைக்குறிப்புகள் அவருடையவை. அவற்றில் நம் மனதும் அதன் கற்பனைகளும் போய் உட்கார்ந்துகொள்கின்றன. ஒரே இளையராஜா தன் இசை வழியாக அவரவருக்கான இளையராஜாவைத் தருவதுதான் அவருடைய மகத்தான சாதனையாக நான் கருதுகிறேன்.

வாசகருக்குள் விதவிதமான கற்பனைகளைத் தருவதற்கு இடமளிக்கும் எழுத்துக்களை உயர்ந்த எழுத்துக்களாக இலக்கியத்துக்குள் கருதுவதுண்டு. இசையிலும் அதுபோல்தான், மகத்தான இசைக்கலைஞர்கள் பலரும் இப்படிச் செய்வதுண்டுதான். ஆனால், நம் மண்ணில் நமக்கு அதை விதவிதமாகச் செய்துக்காட்டியவர் இளையராஜாதான். அந்த அளவுக்கு இசை கேட்பவரின் படைப்பூக்கத்துக்கான இடைவெளியை உருவாக்கித் தந்தவர்.

அந்த வகையில் 1975-லிருந்து 1981-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் இளையராஜா அளித்த விருந்துதான் மகத்தானது என்று கருதுகிறேன். இதனால் அதற்குப் பிறகு அவர் அளித்தவை நல்ல இசை இல்லை என்று அர்த்தமாகாது. அந்தக் காலகட்டத்தைவிட நேர்த்தியான இசையை அதற்குப் பிறகான காலகட்டத்தில் அவர் தந்திருக்கிறார். கணக்கற்ற இனிமையான பாடல்கள். பிரமிக்க வைக்கும் இசைக்கோலம். ஆனால், 81-க்கு முந்தைய காலத்தின் பிசிறடிக்கும், நேர்த்தியாக இல்லாததுபோல் வெளித்தோற்றத்துக்குத் தெரியும், ஆனால் முழுக்கவும் ரசிகருக்கான கற்பனை சாத்தியங்களைக் கொண்டிருக்கும் இசை 81-க்குப் பிறகு குறைவுதான்.

எடுத்துக்காட்டாக, ‘உதிரிப்பூக்கள்’ (1979) படத்தில் வரும்அழகிய கண்ணேபாடலையும்கோழி கூவுது’ (1982) படத்தில் வரும்ஏதோ மோகம்பாடலையும் தேர்ந்த இசை ரசிகரிடம் போட்டுக்காட்டி இசையமைப்பில் சிறந்த பாடல் எது என்றால் துல்லியமான ஒலி, நேர்த்தியான, இனிமையான இசை போன்றவற்றின் அடிப்படையில் அவர் நிச்சயமாகஏதோ மோகம்பாடலைத்தான் சுட்டிக்காட்டுவார். ஆனால், ‘அழகிய கண்ணேபாடல் நமக்குத் தரும் கற்பனைகளுடன் ஒப்பிட்டால் உண்மையில்ஏதோ மோகம்பாட்டு சாதாரணமானதுதான். மிகச் சாதாரணமான வரிகளைக் கொண்டதுஅழகிய கண்ணேபாடல். ஆனால், ராஜாவின் இசைக்குள் அந்த வரிகள் போய் உட்கார்ந்த பிறகு வரிகளை ஒரு சம்பிரதாயத்துக்கு நாம் கேட்டுவிட்டு அதன் அர்த்தத்தைப் பொருட்படுத்தாமல் வேறொரு பிராந்தியத்துக்குப் பயணப்படுகிறோம். இந்தப் பாடல் முழுவதும் விசாலமான மேட்டுநிலத்தை என் மனதில் கட்டியெழுப்பும். அழகிய காட்சி, ஆனால் அதில் இழையோடும் சோகம். உங்களுக்கு இந்தப் பாடல் வேறொரு நிலக்காட்சியையும் வேறொரு உணர்வையும் தரலாம். அதுதான் அதன் தனித்துவம்.

கல்லூரிக் காலகட்டத்தில் எங்கள் நண்பர்கள் குழுவுக்குள்ளே இளையராஜா இசை சார்ந்து இரண்டு பிரிவுகள் உண்டு. ‘மெட்டி ஒலி காற்றோடு’, ‘என் இனிய பொன் நிலாவே’, ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’, ‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா’, ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’, ‘பருவமே புதிய பாடல் பாடுபோன்ற ராஜா பாடல்களை அதிகமாகக் கேட்கும் எங்கள் குழு. ‘ஏதோ மோகம்’ போன்ற பாடல்களைக் கேட்கும் தனிநபர் குழுவாக ஒரு நண்பர்! “உங்களை வித்தியாசமானவங்களாக் காட்டிக்கணும்னு அந்தப் பாடல்களையெல்லாம் தூக்கிப்பிடிக்கிறீங்கஎன்று அந்த நண்பர் எங்களைக் குற்றம்சாட்டுவார். கொஞ்ச காலம் கழித்து அந்த நண்பர் எங்களிடம் சொன்னார், “ஆமாம், அந்தப் பாடல்கள்ல என்னமோ இருக்குடா.”

என்னமோ இருக்கு’, ‘என்னமோ செய்யுது’, ‘எங்கேயோ கூட்டிக்கிட்டுப் போவுதுஎன்று சொல்வதெல்லாம் இசையறிவை வைத்தோ, தொழில்நுட்பத்தை வைத்தோ அல்ல. சொற்களில் திட்டவட்டமாக விவரிக்க முடியாத வகையில் ராஜாவின் இசை நமக்கு அளிக்கும் உணர்வையும் அது எழுப்பும் கற்பனையையும் வைத்து.

இளையராஜாவைப் பிடிக்கும் என்று சொல்வது அவ்வளவு வழக்கமாகிப் போய்விட்ட விஷயம். அப்படி இருக்கும்போது நண்பர் ஒருவர் இளையராஜாவைப் பிடிக்காது என்று சொன்னதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன். ஏன் பிடிக்காது என்று அவரிடம் கேட்டேன். “நினைவுகளைத் தருகிறார். அந்த நினைவுகள் யாவும் ஏங்கித் தவிக்க வைக்கும் நினைவுகள்என்றார். உண்மையில் இதை நான் ராஜாவுக்கான பாராட்டாகவே கருதுகிறேன். நடந்தவற்றின் நினைவுகளை மட்டுமல்ல, நடக்காதவற்றின் நினைவுகளையும் இல்லாதவற்றின் நினைவுகளையும் தரக்கூடியவை ராஜாவின் பாடல்கள்.

நம் கனவுகள் ஏன் நமக்கு அற்புதமாகத் தோன்றுகின்றன? நம் கனவுகளில் பெரும்பாலான விஷயங்கள் துல்லியமாக இருப்பதில்லை. மனிதர்கள், காலம், இடம், சம்பவங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று குழம்பிப்போய், ஒரு கலங்கலான உணர்வு தோன்றுவதால் கனவுகள் நமக்கு ஏற்படுத்தும் அற்புத உணர்வு உருவாகிறது. கனவுகள் அவற்றைக் காணும் நேரத்தில் அல்ல, உண்மையில் அவற்றை நினைவுகூரும் நேரத்தில்தான் அற்புதமாகத் தோன்றும். ஏனெனில், விழித்தபின் அவற்றில் பெரும்பாலான பகுதிகள் நமக்கு மறந்துபோய் இனம்புரியாத ஒரு உணர்வு மட்டும் நீடிக்கும். அந்த உணர்வை இழைபிடித்துக்கொண்டு போகும்போது இங்கொன்றும் அங்கொன்றும் கனவின் விஷயங்கள் நமக்கு நினைவுக்கு வரும். பேருந்தில் பயணிக்கும்போதோ அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதோ நாம் காணும் பொருளும் காட்சிகளும்கூட கனவின் மறக்கப்பட்ட ஒரு பகுதியை நமக்கு மீட்டுத்தரும். பெரும்பாலும், கனவை முழுவதுமாக மீட்டெடுக்க முடியாது. ஆனால், அதை நினைவுகூர முயலும் தருணங்கள் ரொம்பவும் அழகானவை. இளையராஜாவின் அற்புதமான பாடல்களில் பெரும்பாலானவை கனவை நினைவுகூர்வதற்கான தருணங்களைப் போன்றவை. சமயத்தில் அது கனவாக இல்லாமல் பூர்வஜென்ம வாசனை போன்ற நினைவுகளை (பூர்வஜென்மம் என்று ஒன்று இருக்குமானால்) நமக்குள் மீட்டுத்தருவது போல் இருக்கும். ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ‘மீன் கொடி தேரில் மன்மத ராஜன்போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அப்படித்தான் தோன்றும் எனக்கு.

குவாண்டம் உயிரியல்என்ற புதிய அறிவியல் துறையைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை சமீபத்தில் பார்த்தேன் (https://www.youtube.com/watch?v=q4ONRJ1kTdA&t=1618s). நமது மூக்கு எப்படி வாசனையை உணர்கிறது என்பதை குவாண்டம் அறிவியல் அடிப்படையில் விளக்கினார்கள். மூக்கும் காதைப் போலக் கேட்கிறது என்றார்கள். அதாவது, வாசனையின் இசையை மூக்கில் உள்ள வாசனை ஏற்பிகள் கேட்கும் நிகழ்வுதான் முகர்தல் என்றார்கள். இதில் விநோதம் எது தெரியுமா? வந்து சேரும் வாசனை அணுக்கள் தங்களுக்கிடையில் பிணைப்புகளை தந்திக் கம்பிகள் போல் கொண்டிருக்கும்; அவற்றை நம் மூக்கின் ஏற்பியில் உள்ள எலெக்ட்ரான்கள் மீட்டும். அவையே மீட்டி அவையே இசையைக் கேட்கின்றன என்று அந்த ஆவணப்படம் விவரித்தது. வாசனை அணுக்களும் அவற்றில் நம் எலெக்ட்ரான் மீட்டும் இசையும் மூளையில் வெவ்வேறு பகுதியில் சென்றுசேர்ந்து அது தொடர்பான நினைவுகளையும் நம்மிலிருந்து எழுப்பிவிடுகின்றன என்றும் ஆவணப்படம் விளக்கியது. இளையராஜாவின் இசையை அறிவியல்பூர்வமாக விளக்கியது போல் இருந்தது இந்த விளக்கம். இளையராஜாவின் இசையும் வாசனைதான். அதை நம் செவியின் அணுக்கள் மீட்டி நினைவுகளாக நமக்குத் தருகின்றன. நாம் மீட்டுவதற்கு இளையராஜா தரும் தந்திதான் அவருடைய இசை. அவரவருக்கான இசை. அவரவருக்கான ராஜா!