Saturday, February 4, 2017

எண்ணெய் ஒழுகும் மானுடம்


(எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதிக்கொண்டதை அடுத்து கடலில் எண்ணெய் கொட்டி மோசமான விபத்து நிகழ்ந்ததையொட்டி ‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்துக்காக எழுதிய கவிதை)

தைல வண்ண ஓவியமொன்றிலிருந்து
எண்ணெய் ஒழுக ஒழுக
வெளியேற முயல்கின்றன
கடல் மீன்களும்
கடற்பறவைகளும்
கடலாமைகளும்
கூடவே கடலும்

ஒட்டுமொத்த மானுடமும் சேர்ந்து
கடலுக்குத் திணித்த
மானுடத் தன்மையில்
மூச்சு முட்டி
அலைகள் ஓங்கி ஓங்கி
அறைகின்றன
கரையை

எண்ணெய் ஒழுகும் மீன்
எண்ணெய் ஒழுகும் பறவை
எண்ணெய் ஒழுகும் ஆமை
எண்ணெய் ஒழுகும் கடல்
புகைப்படத்துக்கும்
ஓவியத்துக்கும் மிகவும் அழகானவை

தான் பெருக்கிய எண்ணெயில்
தான் கசிய விட்ட எண்ணெயில்
மூழ்கும் மானுடமும்
அழகானதுதான்

மானுடம் மொத்தமாய்
வடிந்த ஒரு நாளில்
மொத்த மானுடத்துக்கும்
ஒற்றைத் தலைப்பிட்டு
வைக்கப்பட்டிருக்கும்
தைல வண்ண ஓவியம் ஒன்று

அந்த ஓவியத்திலிருந்தும்
விடாப்பிடியாக வெளியேறிக்கொண்டிருக்கும்
எண்ணெய் வடியும்
கடல் மீன்களும்
கடற்பறவைகளும்
கடலாமைகளும்
கடலும்
 - நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/kFbFOZ)

1 comment:

  1. ஆற்றாமையை உணர்த்தியுள்ள விதம் அருமை.

    ReplyDelete