Wednesday, June 1, 2016

புத்தாயிரத்தின் கவிஞர்கள்ஆசை
(சென்னைப் புத்தகக் காட்சியையொட்டி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 01-06-2016 அன்று வெளியான என் கட்டுரையின் விரிவான வடிவம் இது)

புத்தாயிரத்துக்குப் பிறகான காலகட்டம் என்பது நவீனத் தமிழ்க் கவிதையின் வரலாற்றில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு மிகவும் முக்கியமான காலகட்டமாகும். 90-களுக்கு முன்பு வரை கவிதைகளும் கவிஞர்களும் சமூக வெளி, சமூகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்குக் கொடுத்திருந்த இடம் குறைவே. 90-களுக்கு முந்தைய கவிஞர்கள் பெரும்பாலும் மனவெளியில் உலவியவர்களாகவே தெரிந்தார்கள். ஆத்மாநாம் போன்ற ஒருசிலர்தான் விதிவிலக்காக இருந்தார்கள்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக உலகுக்கு இந்தியா திறந்துவிடப்பட்டது 1990-களின் தொடக்கத்தில். இதன் தொடர்ச்சியாக பொருளாதாரத் தாரளமயமாதல், உலகமயமாதல் போன்றவற்றின் கரங்கள் இந்தியாவை இறுகப்பற்ற ஆரம்பித்தன. இந்தப் போக்குக்கான எதிர்க்குரல்கள் தமிழ்க் கவிதைகளில் தீவிரமாகப் பிரதிபலிக்க ஆரம்பித்தது புத்தாயிரத்துக்குப் பிறகுதான். கூடவே, தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழல் சார்ந்த குரல்கள் 90-களில் தமிழில் வெளிப்பட ஆரம்பித்தாலும் கவிதையில் ஆழமாகக் காலூன்றியது புத்தாயிரத்துக்குப் பிறகுதான்.


2000-வது ஆண்டில் வெ. ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ழாக் பிரெவெரின்சொற்கள்கவிதைத் தொகுப்பு தமிழ்க் கவிஞர்களிடையே பெரும் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தியது. அரசியல் பார்வையையும் அன்றாட வாழ்வின் தருணங்களையும் ஒருங்கே எழுதக் கூடிய குணாம்சத்தைப் பலரும் பிரெவெரிடமிருந்து ஆரத் தழுவிக்கொண்டார்கள்.
கவிதை அரசியல் பேசக்கூடாதுஎன்ற எழுதப்படாத விதியைத் தூக்கி எறிந்தார்கள் புத்தாயிரத்தின் தமிழ்க் கவிஞர்கள். இந்த விதியின் படி கவிதை எழுதிய முந்தைய தலைமுறைக் கவிஞர்களின் மீது மதிப்பை வெளிப்படுத்தியபடி வேறோரு போக்கைத் தொடங்குகிறார்கள் புத்தாயிரத்தின் கவிஞர்கள். இதன் விளைவாகத் தமிழ்க் கவிதை உலகமயமாகிறது.

விற்பனைப் பிரதிநிதிகள், தண்ணீர்ச் சுரண்டலால் தொலைந்துபோன கிணறுகள், மாதவிடாய், தன்பாலின உறவு, குடும்ப வன்முறை, சாதியம், வெண்புள்ளி கொண்டிருக்கும் பெண், ஜார்ஜ் புஷ், ஏகாதிபத்தியம், ஈழ விடுதலைப் போராட்டம் என்றெல்லாம் விதவிதமான பாடுபொருள்களைக் கொண்டிருந்தன புத்தாயிரத்தின் கவிதைகள். இரண்டாயிரமாண்டு காலத் தமிழ்க் கவிதை வரலாற்றில் இந்த அளவுக்குப் பன்மைக்குரல்கள் ஒருபோதும் எழுந்ததில்லை. இந்த அளவுக்குத் தமிழ்க் கவிதைக்குள் ஒருபோதும் ஜனநாயகம் நிகழ்ந்ததில்லை. ஒடுக்கப்பட்ட தரப்புகளிலிருந்து எழுத வந்த, அல்லது ஒடுக்கப்பட்ட தரப்புகளைப் பற்றி எழுதிய கவிஞர்களின் குரல்கள்தான் மற்றவர்களைவிட அதிகமாக ஆதிக்கம் செலுத்தின என்பது தற்காலக் கவிதைப் போக்கில் சமூக நீதியின் நீட்சியை நாம் காணலாம்.

தலித் கவிஞர்களின் வரவு தமிழ்க் கவிதைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களின் வாழ்க்கை, வலி, கோபம் எல்லாமே கவிதையாயின. நவீன கவிதை தோன்றி பல பத்தாண்டுகள் கழித்து, புத்தாயிரத்துக்குப் பிறகுதான் தலித் படைப்பாளிகளின் குரல் கவிதைகளில் அதிக அளவில் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதன் பின்னுள்ள காரணத்தை நாம் அலசிப் பார்க்க வேண்டும். பெண்களின் குரலும் கவிதைகளில் உரக்க ஒலிக்க ஆரம்பித்தது புத்தாயிரத்துக்குப் பிறகுதான். தலித் பெண்கள், இலங்கைப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் என்று பெண்களின் கவிதைகளும் பன்மைத்தன்மை கொண்டவையாக இருந்தன. புத்தாயிரத்துக்குப் பிறகான ஆண்டுகள் ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த ஆண்டுகள். அந்தப் போராட்டத்தின் இறுதியில் மனிதப் பேரவலமும் நிகழ்ந்தது. இயல்பாகவே, இவையெல்லாம் இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளில் உக்கிரத்தை ஏற்றின. இந்தக் குரல்கள் பலவும் உலகெங்குமிலிருந்து ஒலித்தன. தமிழ்க் கவிதை வரலாற்றில் இதுவும் ஒரு முக்கியமான பகுதி.  


மேற்கண்டவை எல்லாம் புத்தாயிரத்துக்குப் பிந்தைய கவிதைகளின் சாதகமான அம்சங்கள் என்றால் தமிழின் நெடிய இலக்கிய மரபைச் சமகாலக் கவிஞர்கள் சற்றும் பொருட்படுத்தாமல் விலகிச்சென்றுகொண்டிருப்பது வருத்தம் தருவது. மரபு என்பதற்காகவே மரபை ஏற்றுக்கொள்ள வேண்டாம்தான். ஆனால், இன்றைய கவிதை என்பது சட்டென்று வெற்றிடத்திலிருந்து உருவாகிய ஒன்றல்ல. பலரும் ஐரோப்பிய கவிதைகளை முன்மாதிரிகளாகக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பியக் கவிஞர்களுமே தங்கள்  மரபின் செழுமையை நன்றாக உள்வாங்கிக்கொண்டு, மரபின் பொருந்தாத அம்சங்களை நிராகரித்தவர்கள்தான். தமிழின் செழுமையான கவிதை மரபில் ஊன்றித்திளைக்காமல் இனியொரு பெருங்கவி உருவாவதென்பது சாத்தியமே இல்லை

தலித் மக்கள், இஸ்லாமியர், சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்உதிரிகள்என்றழைக்கப்படும் பல்வேறு மக்கள் போன்ற விளிம்புநிலை வாழ்வைப் பற்றியும்  உலகமயமாதல், ஏகாதிபத்தியம் போன்றவற்றைப் பற்றியும் இன்றைய கவிதைகள் ஆழமான, அவசியமான அரசியல் பேசினாலும், வெகுமக்களை இந்தக் கவிதைகள் பெரிதும் போய்ச்சேருவதே இல்லை. ஒரு பக்கம், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வெகுமக்களின் ரசனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்றால் இன்னொரு பக்கம், கவிஞர்களும் மொழிரீதியாக வெகுமக்களை விட்டு விலகிவந்து, தங்களைச் சிறுபத்திரிகைகளுக்குரியவர்களாக ஆக்கிக்கொண்டார்கள். ஆழமான கவிதைகள் வெகுமக்களையும் போய்ச்சேரும் என்பதை நிரூபித்தவர்கள் பாப்லோ நெருதாவும் ழாக் ப்ரெவெரும். அவர்களைப் போன்றதொரு கவி இயக்கம் தமிழில் நடைபெற்று கவிதை எல்லோருக்கும் போய்ச்சேர்ந்தால்தான் அது உண்மையிலேயே ஜனநாயகப்படுத்தப்படும். இல்லையென்றால், மக்களைப் பற்றிய கவிதைகளை, மக்களுக்கான அரசியல் பற்றிய கவிதைகளை எழுதிக்கொண்டு ஆனால் அவற்றைச் சிறுபத்திரிகை வாசகர்களும் எழுத்தாளர்களும் மட்டுமே படித்துக்கொண்டிருக்கும் நிலைதான் நீடிக்கும். இந்த மாற்றம் வெறுமனே எளிய மொழியில் கவிதை எழுதுவதால் நிகழ்ந்துவிடாது. கல்விமுறை, வாசிப்பு இயக்கங்கள், வெகுஜனப் பத்திரிகைகள் போன்றவற்றின் மூலம் செய்ய வேண்டிய மாற்றம் இது. மொழியின் உன்னத வடிவமான கவிதை என்பது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டுமே தவிர. ஒருசிலருக்கானதாக மட்டும் ஆகிவிடக் கூடாது.

புத்தாயிரத்துக்குப் பிறகு வெளிவந்த முக்கியமான தொகுப்புகளைப் பட்டியலிடச் சொல்லி கவிஞர்கள் சுகுமாரன், சுகிர்தராணி, சே. பிருந்தா, சமயவேல், ராணிதிலக் ஆகியோரிடம் கேட்டோம். அவர்கள் தந்த பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பட்டியல் இது.          


உறுமீன்களற்ற நதிஇசை, காலச்சுவடு பதிப்பகம்
காயசண்டிகைஇளங்கோ கிருஷ்ணன்காலச்சுவடு பதிப்பகம்
திருச்சாழல்கண்டராதித்தன்புது எழுத்து பதிப்பகம்-                 (9842647101)
களம்- காலம்- ஆட்டம்- சபரிநாதன்புது எழுத்து பதிப்பகம் -
               (9842647101)
ஏரிக்கரையில் வசிப்பவன்ஸ்ரீநேசன் - ஆழி பதிப்பகம்
தீண்டப்படாத முத்தம்சுகிர்தராணிகாலச்சுவடு பதிப்பகம்
முலைகள்குட்டி ரேவதிஅடையாளம் பதிப்பகம் (94437 68004)
ஈதேனின் பாம்புகள்- றஷ்மிகாலச்சுவடு பதிப்பகம்
கல்விளக்குகள்- என்.டி. ராஜ்குமார்காலச்சுவடு பதிப்பகம்
ஆயிரம் சந்தோஷ இலைகள் - ஷங்கர்ராம சுப்ரமணியன்பரிதி பதிப்பகம் – (கிடைக்குமிடம்டிஸ்கவரி புக் பேலஸ்: 9940446650)

 நன்றி: ‘தி இந்து’, ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவத்தைப் படிக்கhttp://goo.gl/XVGA0B

1 comment:

  1. அத்தகைய ஒரு மாற்றம் ஏற்படும் என்று நம்புவோம்.

    ReplyDelete