ஆசை
('தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பகுதியில் 05-06-2016 அன்று வெளியான கட்டுரை)
சின்னி என்ற அந்தச் சிறுமி சாப்பிட்டு மூன்று நாட்களாகிறது. நெடுஞ்சாலையோரக் கிராமமொன்றில் வசிக்கிறாள் அவள். வீட்டில் நிறைமாதக் கர்ப்பிணியாய் சாப்பிடாமல் படுத்திருக்கும் அம்மா. அவளுக்கு ஒரு அக்காவும் ஒரு தம்பியும் இருக்கிறார்கள். வேலை தேடிச் சென்ற அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டில் கைப்பிடியளவு எஞ்சியிருந்த அரிசியை அம்மா தன் மூத்த மகளுக்குக் கொடுக்க, அவள் சாப்பிடாமல் சின்னிக்குக் கொடுக்க, சின்னி அதை அப்படியே தம்பிக்குக் கொடுத்துவிடுகிறாள். இந்த நிலையிலும் தன் பிள்ளைகளை நினைத்து அந்த அம்மாவுக்குப் பெருமிதம்.
பசியே அன்றாடமாக இருக்கும் சின்னியின் வாழ்க்கையில் ஓராண்டுக்கு முன்பு ஒரு வசந்த காலம் வந்தது. அதுவும் எப்படித் தெரியுமா? ஒரு விபத்தால். சாலையில் விளையாடிக்கொண்டிருக்கும்போது லாரியில் சின்னி அடிபட்டுவிட, லாரியின் உரிமையாளர் சின்னியை ஒரு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கிறார். தினமும் சின்னிக்குப் பழங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் என்றெல்லாம் வாங்கிக்கொண்டு வருகிறார். அவள் குணமாகி வீட்டுக்குச் சென்ற பின்னும் மாதாமாதம் அவள் வீட்டுக்கு நூறு ரூபாய் கொடுக்கிறார். அந்தச் சாலையைக் கடக்கும்போதல்லாம் சின்னிக்குத் தின்பதற்கு ஏதாவது தந்துவிட்டுப் போவார். இப்படியே கொஞ்ச காலம் கழிந்த பிறகு அந்த உபகாரங்கள் நின்றுவிடுகின்றன. வெறுமனே சிரிப்பைத் தந்துவிட்டுப் போகும் லாரியைத் தினமும் பார்க்கிறாள் சின்னு. இப்படியே எதிர்பார்த்து எதிர்பார்த்துக் கடைசியில் துணிந்து ஒரு முடிவெடுக்கிறாள், லாரிக்குக் குறுக்கே பாய்ந்து லாரியை நிறுத்துவதென்று. கதையில் தொடக்கத்தில் ஒரு தவளை அடிபட்டுச் செத்துக் கிடக்கும். அதேபோல் இறுதியில் சின்னியும் லாரியில் அடிபட்டுச் செத்துக் கிடக்கிறாள். தலித் மக்களின் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் உதாரணமாக இந்த ஒப்புமை ஆகிவிடுகிறது.