Wednesday, April 27, 2016

விரல் நுனியில் விண்மீன்


ஆசை

('தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 26-04-2016 அன்று வெளியான கட்டுரை)

வேகம்! மனித குலத்துக்கு எப்போதும் வேகத்தின் மீது தீராத வேட்கை இருந்துவந்திருக்கிறது. வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் மீது வேட்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் ஒரு மணி நேரத்துக்கு 2.6 மைல் தூரம் நடந்திருக்கிறார்கள். சமீப காலத்தில் நிலவுக்கு அருகே சென்று திரும்பி வந்திருக்கும் அப்போல்லோ-10 விண்கலத்தின் வேகம் கிட்டத்தட்ட மணிக்கு 26,000 மைல்கள். மனிதர்களைச் சுமந்து சென்ற வாகனம் ஒன்றின் உச்சபட்ச வேகம் இதுதான். ஆக, பத்தாயிரம் ஆண்டுகளில் மனிதர்களின் வேகம் பத்தாயிரம் மடங்கு அதிகரித்திருக்கிறது.
அதுக்கும் மேலே
வேகம் என்றாலே அது தூரத்தை இலக்காகக் கொண்டதுதானே! தூரத்தில் தெரியும் அருவி, தூரத்தில் தெரியும் காடு, மலை என்றெல்லாம் ஆரம்பித்த வேகத்துக்கான தாகம் ஒரு கட்டத்தில் நாடுகளைத் தாண்டுவதை இலக்காகக் கொண்டது. அப்படியே செங்குத்தாக மேல்நோக்கி நிலவையும் இலக்காகக் கொண்டு வெற்றி பெற்றது. வேகத்தை, தூரத்தை வெற்றி கொள்வதில் இன்றுவரை மனிதர்கள் அடைந்த / அடைந்துகொண்டிருக்கும் பெருவெற்றி வாயேஜர்-1 என்ற விண்கலம்தான். 1977-ல் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் மணிக்கு 38,610 மைல் வேகத்தில், 2 ஆயிரம் கோடி கிலோ மீட்டருக்கும் மேல் பயணித்து, தற்போது சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்றிருக்கிறது. விண்மீனுக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றுகொண்டிருக்கும், மனிதரால் உருவாக்கப்பட்ட ஒரே பொருள் வாயேஜர்-1 கலம்தான்.

சரி, சூரியக் குடும்பத்தைக் கடந்தாயிற்று. இனி வாயேஜரின் இலக்கு விண்மீன்தானே என்று கேட்கலாம். வாயேஜரின் வேகம் வேண்டுமானால் நம்மை மலைக்க வைக்கலாம். ஆனால், அந்த வேகத்தை வைத்துக்கொண்டு நம் அடுத்த வீட்டு விண்மீனும், பூமியிலிருந்து 4.3 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதுவுமான ஆல்பா சென்டோரியை அடைய வேண்டுமன்றால் இன்னும் 70 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். ‘அடுத்த வீட்டு விண்மீனுக்கே இவ்வளவு காலம் என்றால் இன்னும் பிரபஞ்ச விரிவு வரை செல்ல எவ்வளவு காலம் ஆகும்!’ என்றெல்லாம் மலைப்பு ஏற்படுகிறதல்லவா!
அடுத்த வீட்டு விண்மீன்
கவலை வேண்டாம்! ஆல்ஃபா சென்டோரியைக் குறிவைத்தாயிற்று. இந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் அதற்கான திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. மென்பொருள் துறையின் மூலம் பெரும் செல்வந்தரான யூரி மில்னரும் பிரபல அறிவியலாளர் ஸ்டீவன் ஹாக்கிங்கும் சேர்ந்து இந்தக் கனவுத் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். ‘பிரேக்த்ரூ ஸ்டார்ஷாட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்துக்கு முதல் கட்டமாக யூரி மில்னர் 100 மில்லியன் டாலர்களை அளித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக 5 பில்லியன் டாலரிலிருந்து 10 பில்லியன் டாலர் வரை இந்தத் திட்டத்துக்குச் செலவு பிடிக்கும் என்று உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தின்படி ஒரு விண்கலம் அல்ல, ஓராயிரம் விண்கலங்கள் ஏவப்படவிருக்கின்றன. என்ன, இந்த விண்கலங்கள் ஒவ்வொன்றும் ஸ்மார்ட் போன்கள் அளவுக்குத்தான் இருக்கும். ஒளியின் வேகத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு வேகத்தில் செல்லும் இந்த நுண்கலங்கள் ஆல்ஃபா சென்டோரியைச் சென்றடைவதற்கு 20 ஆண்டுகள் ஆகும். திட்டமே தற்போதுதான் தொடங்கப்பட்டிருப்பதால் ஆராய்ச்சிகள், தொழில்நுட்பக் கட்டமைப்புகள் போன்றவற்றுக்குப் பிறகு இன்னும் 20 ஆண்டுகள் கழித்துத்தான் இந்த நுண்கலங்கள் ஏவப்படவிருக்கின்றன. ஆக, இன்னும் 40 ஆண்டுகள் கழித்துதான் இந்தக் கலங்கள் ஆல்ஃபா சென்டோரியைச் சென்றடையும். அதற்குப் பிறகு அங்கிருந்து அவை அனுப்பும் தகவல்கள் பூமிக்கு வந்து சேர்வதற்கு மேலும் 4.3 ஆண்டுகள். எனவே, இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் ஆல்ஃபா சென்டோரி கூறும் வரவேற்பு வாசகத்தைக் கேட்க நமக்கு இன்னும் 45 ஆண்டுகள் ஆகும்.
இந்தத் திட்டத்தில் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஸக்கர்பெர்க்கும் இணைந்திருக்கிறார். ஆலோசகர்களாக உலகின் மிக முக்கியமான பொறியாளர்கள், அறிவியலாளர்கள் என்று 20 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். நாஸாவின் ஆம்ஸ் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரான பீட் வோர்டென் இந்தத் திட்டத்தின் தலைவராக இருப்பார்.
ஒளியின் வேகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வேகம் எப்படி என்பதுதான் எல்லோரையும் தற்போது வியப்படைய வைத்திருக்கிறது. அதிநவீன லேசர் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், திறன் மிகுந்த, மிகச் சிறிய மின்சுற்றுகள் எல்லாம் இணைந்துதான் இந்தக் கனவைச் சாத்தியப்படுத்தவிருக்கின்றன.
பெரிய பெரிய சாதனங்களையும் அமைப்புகளையும் கொண்டிருக்கும் வழக்கமான விண்கலத்தைக் கொண்டு இந்த வேகம் இயலாத காரியம். கணிப்பொறி கண்டுபிடித்தபோது ஒரு கட்டிடம் அளவுக்கு அது இருந்தது; தற்போது ஒரு சிறிய சிப் அளவுக்கு வந்துவிட்டது. அதுபோல் விண்கலம் என்ற கட்டமைப்பின் அடுத்த கட்டப் பாய்ச்சல்தான் இந்த நுண்கலங்கள். இந்த நுண்கலங்களில் பாய்மரக் கப்பல்களில் இருப்பதுபோல் குட்டிப் பாய்கள் இருக்கும். லேசர்கள் அந்தப் பாய்களை உந்தித் தள்ளிச் செலுத்துவதன் மூலம் இந்த வேகம் கிடைக்கிறது. லேசர் கதிர்களின் பாய்ச்சல் இரண்டே நிமிடத்தில் 6 லட்சம் மைல்களுக்கு அப்பால் இந்த நுண்கலங்களைக் கொண்டுசெலுத்திவிடும். கிட்டத்தட்ட ஆயிரம் நுண்கலங்கள் செலுத்தப்படுகின்றன. விண்பொருட்கள், விண் குப்பைகள் போன்றவற்றில் பல நுண்கலங்கள் மோதிச் சிதறிவிட்டாலும் மீதமுள்ள நுண்கலங்களாவது தங்கள் இலக்கை நோக்கிச் செல்லட்டும் என்பதால்தான் இந்த முடிவு.
ஆல்ஃபா சென்டோரி
வெறுங்கண்ணால் பார்ப்பதற்கு ஒற்றை விண்மீனாகத் தெரிந்தாலும் உண்மையில் மூன்று விண்மீன்களின் தொகுப்புதான் ஆல்ஃபா சென்டோரி. ஆல்ஃபா சென்டோரி-ஏ, ஆல்ஃபா சென்டோரி-பி ஆகிய இரண்டு விண்மீன்களும் ஒன்றையொன்று சுற்றிக்கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு விண்மீன்களையும் ப்ராக்ஸிமா சென்டோரி என்று மூன்றாவது விண்மீன் சுற்றிவருவதாகக் கருதப்படுகிறது. நமது சூரியக் குடும்பத்துக்குப் பக்கத்தில் உள்ள இந்த விண்மீன் தொகுப்பில் கோள்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுதான் ‘பிரேக்த்ரூ ஸ்டார்ஷாட்’ திட்டத்துக்கு முக்கியக் காரணம். இந்தத் திட்டம் குறித்து ஸ்டீபன் ஹாக்கிங் இப்படிச் சொல்கிறார்: “மனித வரலாறு என்பதே மாபெரும் பாய்ச்சல்களுள் ஒன்றுதான்.
இன்று நாம் அடுத்த மாபெரும் பாய்ச்சலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறோம்.” மேலும் அவர் சொல்கிறார், “பூமி என்பது அற்புதமான இடம்தான். ஆனால் அது என்றென்றும் நீடிக்காது. இப்போதோ பிறகோ நாம் விண்மீன்கள் நோக்கிய தேடலைத் தொடங்கியாக வேண்டும். அந்தப் பயணத்தில் ‘பிரேக்த்ரூ ஸ்டார்ஷாட்’ என்பது பரவசமூட்டும் முதல் அடியாக விளங்குகிறது.’
பெருங்கனவுதான் இது! சாத்தியமாகுமா ஆகாதா என்றெல்லாம் தற்போது சொல்ல முடியாது. ஆனால், சீன ஞானி லாவோ ட்சு சொன்னதுபோல், ‘ஆயிரம் மைல் பயணம் காலடி நிலத்திலிருந்துதான் தொடங்குகிறது.’ என்ன, முதல் அடி மணிக்கு 2.6 மைல் வேகத்தில் தொடங்கியது. இப்போது அது மணிக்குக் கிட்டத்தட்ட 13 கோடி மைல் வேகத்தை எட்டவிருக்கிறது!
 - நன்றி: ‘தி இந்து’
- ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/IvCdWe    

No comments:

Post a Comment