Monday, May 18, 2015

அமெரிக்காவை வெல்லுமா சீனா?






- இன்றைய சூழலில் வெளிப்பார்வைக்குப் புலப்படாமல் ஏராளமான விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ‘ஒரே நாடு, இரண்டு அமைப்புகள்என்ற கோட்பாடு ஹாங்காங்குக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவைச் சித்தரிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், உண்மை என்ன தெரியுமா? அமெரிக்க-சீனப் பொருளாதாரங்களின் எதிர்காலம் இன்று ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் அவைதான் நாம் உற்றுநோக்க வேண்டியஒரே நாடு: இரண்டு அமைப்புகள்என்கிற அளவுக்கு.


ஆண்டுதோறும் இரு தரப்புக்கும் இடையில் 60,000 கோடி டாலர்கள் அளவில் நடக்கும் வர்த்தகம்; அமெரிக்காவில் படிக்கும் 2,75,000 சீன மாணவர்கள், சீனாவில் படிக்கும் 25,000 அமெரிக்க மாணவர்கள்; அமெரிக்க வேளாண் பொருட்களுக்கான மிகப் பெரிய சந்தையாக சீனா இருப்பது; சீனாவிடம் அதிகமாகக் கடன் வாங்கிய நாடாக அமெரிக்கா இருப்பது; சீனாவில் அமெரிக்கா செய்துவரும் முதலீட்டைவிட அமெரிக்காவில் சீனா செய்யும் முதலீடு கடந்த ஆண்டு முதல்முறையாக அதிகரித்திருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் ஆழத்தில் சென்று பார்த்தால் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் மற்ற நாட்டினால் மேலும்மேலும் குழப்பமடைந்துகொண்டே இருக்கின்றன. சீன அதிகாரத் தரப்பினர் அமெரிக்காவைத்தான் தங்கள் பொருளாதார முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறார்கள்; முதலாளித்துவத்தை அவர்கள் கற்றதும் அங்கேதான். ஆனால், 2008-ல் உலகப் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும் அளவுக்கு அமெரிக்கா அசிரத்தையாக இருந்தது அமெரிக்காவின் வல்லரசு பிம்பம் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணம் சீனாவில் ஏற்படத் தொடங்கியது. அமெரிக்காவின் இந்த வீழ்ச்சி ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து சீன அதிகாரத் தரப்பினர் இன்னும் மீளவேயில்லை.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை சீனா உருவாக்க முயன்றபோது அமெரிக்காவின் பொருளாதாரக் கூட்டாளிகளான தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகள் அதில் சேராமல் இருப்பதற்கான வேலைகளை ஒபாமா வட்டாரம் செய்ய முயன்றபோது சீன அதிகாரத் தர்ப்பு குழம்பிப்போனது. அமெரிக்காவின் கவலையெல்லாம் அந்த வங்கி சர்வதேசத் தரத்துடன் இயங்க வேண்டும் என்பதுதான் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஜாக் லீயு வெளிப்படையாகவும், பொறுப்பாகவும் வலியுறுத்திவந்த அதே நேரத்தில் ஒபாமாவின் வட்டாரம் அமெரிக்காவின் கூட்டாளிகள் அந்த வங்கியில் சேருவதைத் தடுப்பதற்கான வேலைகளில் முனைப்பாக இருந்தது. ஜப்பானைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்காவை உதாசீனப்படுத்திவிட்டு சீனத் தலைமையில் இயங்கும் அந்த வங்கியில் சேர்ந்துகொண்டன. அமெரிக்கா சீனாவைத் தனக்குக் கீழே வைத்திருக்கத்தான் விரும்புகிறதே தவிர தனது பங்காளியாக வைத்திருக்க அல்ல என்ற உறுதியான எண்ணத்தை சீன விமர்சகர்களிடையே இந்த ஒட்டுமொத்த விவகாரமும் மேலும் மேலும் வலுப்படுத்தவே செய்தது.

இந்தச் சூழலில் அமெரிக்கர்கள் சீன அதிபர் ஜீயிடம் கேட்கிறார்கள்: “என்ன விஷயம்?”
புரையோடிய ஊழலால் சீனாவின் ஒரு கட்சி ஆட்சி முறை நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது. ஊழலுக்கு எதிரான ஜியின் நடவடிக்கைகள் ஒரு கட்சி ஆட்சி முறைக்கு எதிரான அச்சுறுத்தல்களை ஒழித்துக்கட்டுவதை இலக்காகக் கொண்டவை என்பது தெளிவு. அதைப் போலவே, அவர் தனது அரசியல் எதிரிகளையும் ஒழித்துக்கட்டிக்கொண்டிருப்பதுபோலவும் தோன்றுகிறது. ராணுவம், பொருளாதாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் அதிக அளவில் அதிகாரங்களைத் தன்னிடத்தில் ஜி வைத்திருக்கிறார். மாவோவின் காலத்துக்குப் பிறகு இவ்வளவு அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்துக்கொண்ட பிறிதொரு தலைவர் சீனாவில் கிடையாது.

கம்யூனிஸக் கட்சியின் அதிகார பீடத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அதிகாரங்களைத் தன்னகத்தே குவித்துக்கொண்டிருக்கிறார் ஜிஎன்கிறார் வில்லி வோ-லாப் லாம் என்ற அரசியல் நோக்கர். “சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குக் காரணமே ராணுவம், பொருளாதாரம் ஆகியவற்றின் மீதான அதிகாரத்தை கம்யூனிஸக் கட்சி இழந்ததுதான் என்று ஜி நம்புகிறார்என்பது வில்லியின் வாதம். சோவியத் எப்படி சரிந்தது என்பதில்தான் அவர் அதிகம் கவனம் செலுத்த விரும்புகிறாரே தவிர அமெரிக்கா எப்படி வெற்றி பெற்றது என்பதில் அவர் கவனம் செலுத்தவில்லை. அவருடைய களையெடுப்பு நடவடிக்கைகளால் அதிகார மட்டம் உறைந்துபோயிருக்கிறது. பெரிய பெரிய முடிவுகளை எடுக்கத் தயங்குகிறார்கள். ஜியின் களையெடுப்பு நடவடிக்கைகளின் இலக்கு ஊழல் மட்டுமல்ல, மெலிதாக வெளிப்படும் எதிர்ப்புகளும் அவற்றின் இலக்கே. பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டுப் பாடப் புத்தங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. இணையத்தில் பதிவுகள் இடுவது, சீனாவின் முக்கியமான இணையதளங்களைத் தேடுவது போன்ற செயல்களெல்லாம் இந்த அளவுக்கு என்றுமே கட்டுப்படுத்தப்பட்டதில்லை. அதேசமயம், ‘கண்டுபிடிப்புகள்என்ற திசையை நோக்கி சீனாவை வலுவாக நகர்த்தத் தொடங்கியிருக்கிறார் ஜி. உற்பத்தி செய்வது, இயந்திர பாகங்களை ஒன்றுசேர்ப்பது போன்ற நிலையிலிருந்து சீனப் பொருளாதாரத்தை அதிக அளவு அறிவுழைப்பு தேவைப்படும் வேலைகளை நோக்கி நகர்த்துகிறார். ஆனால், களையெடுப்புகள் எந்தப் புத்தாக்க முயற்சிக்கும் வித்திடுவதுபோல் தெரியவில்லை.

முதலீட்டாளர் அந்துவான் வான் அக்ட்மால் என்னிடம் சொன்னது போல்தான்: சீனாவிலேயே புத்தாக்கம் செய்வது என்பதை சீனா வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், சீனாவில் தொழிலாளர் ஊதியமும், அமெரிக்காவில் புத்தாக்கமும் அதிகரித்துவருகின்றன. இதனால், அமெரிக்கா தனது நாட்டுத் தொழில் நிறுவனங்களை அவற்றின் அடுத்த உற்பத்திப் பிரிவுகளை சீனாவில் அல்ல, அமெரிக்காவில் தொடங்கும்படி தூண்டிக்கொண்டிருக்கிறது. விலை மலிவான எரிசக்தியும், மேலும் இலகுவான, திறந்த அறிவுப் பங்கேற்பும் கலந்த செயல்முறையை அமெரிக்கா கொண்டிருக்கிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் புதுத் தொழில் நிறுவனங்களும் தங்கள் அறிவுசக்தியை பெரும் தொழில் நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதால் புதுப் புதுக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. இதனால் எல்லாமே முன்பைவிட விரைவாகவும் நுட்பமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்படுகின்றன. இதனால்தான்புதிதாக முளைவிடும் மகத்தான சந்தையாக அமெரிக்கா உருவாகிவருவதாக வான் அக்ட்மாயேல் குறிப்பிடுகிறார். “பெரிய மாற்றம் இது,” என்கிறார் அவர். “யார் மலிவாக உற்பத்தி செய்வார்கள் என்பதைப் பற்றித்தான் இருந்தன கடந்த 25 ஆண்டுகளும். அடுத்த 25 ஆண்டுகளோ, யார் சாமர்த்தியமான பொருட்களை உற்பத்தி செய்வார்கள் என்பதைப் பற்றித்தான் இருக்கும்என்கிறார் அவர். ஆனால், அதிபர் ஜி இணையத்தையும் அரசியல்ரீதியிலான எதிர்ப்பையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு சீனா பெரியது, புத்திசாலித்தனமானது என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் புத்தாக்கத்தில் சாதித்துவிட முடியும் என்றும் அவர் நம்புவதைப் போல் தோன்றுகிறது. இன்றைய உலகில் இதுதான் பெரும் சவால்.

- C தி நியூயார்க் டைம்ஸ், சுருக்கமாகத் தமிழில்: ஆசை

 -நன்றி: ‘தி இந்து’.
 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: அமெரிக்காவை வெல்லுமா சீனா?   

No comments:

Post a Comment