Tuesday, May 26, 2015

மோடியும் அவரது சக்கர வியூகமும்




(‘தி இந்து’ நாளிதழில் 26-05-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை)


சக்கர வியூகத்துக்குள் நுழைவது எப்படி என்பதை சுபத்ராவிடம் கிருஷ்ணர் சொல்லிக்கொண்டிருந்தபோது சுபத்ரையின் கருப்பையில் இருந்த அபிமன்யும் கேட்டுக்கொண்டிருந்தான். உள்ளே நுழைவது எப்படி என்பதை அறிந்துகொண்ட அபிமன்யு வெளியே வருவது எப்படி என்பதை அறிந்துகொள்ளவில்லை. குருச்சேத்திரத்தில் நடந்த உக்கிரமான போரில் அபிமன்யு மரணமடைவதற்கு அதுதான் காரணம். ஆனால், காந்தி அப்படி இல்லை. சக்கர வியூகத்தை வெகு சுலபமாக வெற்றி கொண்டவர் அவர். உள்ளே நுழைந்தது மட்டுமல்ல, வெளியே வந்ததிலும் அவ்வளவு லாவகம். அவரே தேர்ந்தெடுத்த நேரம், இடம் ஆகியவற்றில் அவர் இதைச் செய்தார். அகிம்சையைப் பிரயோகித்து சக்கர வியூகத்தை அவர் வெற்றிகொண்டார். இப்படியாக சுதந்திர இந்தியாவை அவர் உருவாக்கினார்.

நவீன இந்தியாவின் சக்கர வியூகத்தைப் பெருமளவில் வடிவமைத்தவர் ஜவாஹர்லால் நேருதான். காந்தி போன்று அவ்வளவு சுலபமாக அதைச் சாதிக்கவில்லை என்றாலும், சக்கர வியூகத்தின் உள்ளே நுழைந்து வெளியே வெற்றிகரமாக வந்துவிட்டார். இதன் விளைவுதான் ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியா. இந்திரா காந்தியோ சக்கர வியூகத்தினுள் அகப்பட்டுக்கொண்டார். அபிமன்யுவைப் போலவே, சக்கர வியூகத்தின் ஆறாவது வட்டத்தில் அவர் சிக்கிக்கொண்டார்; நெருக்கடிநிலைப் பிரகடனத்தால் அவர் வீழ்ந்தார். அதிகாரம் மிக்கவராகவும், எல்லோர் மீதும் சந்தேகம் கொள்பவராகவும் மாறினார். தன்னைச் சுற்றி அரண் அமைத்துக்கொண்டார். அதன் காரணமாக, உண்மையான எதிரிகளின் கணைகளுக்கும், கற்பனை எதிரிகளின் கணைகளுக்கும் இலக்கானார்.
இப்படியாக எல்லாப் பிரதமர்களுக்கும் அவர்களது சக்கர வியூகங்களுக்கும் மதிப்பெண்களை நாம் வழங்கலாம். ஆனால், மோடியின் ஓராண்டு நிறைவு என்பது அவருடைய அரசின் சக்கர வியூகத்தை அவர் வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளைப் பற்றிப் பேச நமக்குக் கிடைத்த சந்தர்ப்பம்.
எதுவுமே மாறவில்லை
சக்கர வியூகத்தை உடைக்கும் தந்திரம் என்பது இடப் பக்கமும் வலப் பக்கமும் உள்ள வீரர்களைத் தாக்கியழித்து, அடுத்தடுத்த வளையங்கள் எப்படித் திரும்பினாலும் அவற்றுக்குள் நுழைவதே என்பதை கிருஷ்ணர் சொல்ல, தாய் வயிற்றுக்குள் இருந்த அபிமன்யு கேட்டுக்கொண்டிருந்தான். நமது பிரதமர் இடதுசாரி அரசியல் மீது தாக்குதல் நிகழ்த்தினார்; ஆனால் வலதுசாரிகளின் பொருளாதாரக் கோட்பாடுகளுக்குத் தான் அளிக்கும் ஆதரவு குறித்து உறுதியான நிலைப்பாடு எதையும் அவரால் எடுக்க முடியவில்லை. மோடியின் சமூக, கலாச்சாரக் கோட்பாடுகளுக்கு எதிராக இடதுசாரிகள் கிளர்ந்தெழும் அதே நேரத்தில், பொருளாதாரத்தைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்று வலதுசாரிகள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ‘எதுவுமே மாறவில்லைஎன்கிறார் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த தீபக் பரேக்.
மகாபாரதத்தில் சக்கர வியூகம் என்பது ஏழு சுழல் வட்டங்களைக் கொண்ட, நுழைய முடியாத போர்க்கள உத்தி. இந்திய அரசியலின் ஏழு வட்டங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.
ஏழு வட்டங்கள்
ஏழாவது வட்டமாகவும் வெளி வட்டமாகவும் இருப்பது வெளியுறவுக் கொள்கை. இதுதான் உலகத்தோடு நாம் கொள்ளும் உறவு. அண்டை நாடுகள், பிராந்தியங்கள், புவியரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது இது. இதில்தான் மோடி மிகவும் திறம்படச் செயலாற்றிவருகிறார். உலகின் வெவ்வெறு நாடுகளின் குழுக்கள் இந்திய உறவுக்காகப் போட்டாபோட்டி போடும் வகையில் அவற்றின் கவனத்தை மோடி ஈர்த்திருக்கிறார். ஜூன் 21- சர்வதேச யோகா தினமாக அறிவிக்கும்படி .நா. சபையைத் தூண்டியது, குடியரசு தினத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை விருந்தினராகப் பங்கேற்கச் செய்தது, பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியை நிறுவுவதில் பங்காற்றியது, வங்கதேசத்துடன் நிலப் பகிர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது எல்லாம் இந்தத் தளத்தில் மோடியின் வெற்றிகள். இடதுசாரிகளை அடக்கியும் வலதுசாரிகளைக் கண்டுகொள்ளாமலும் முதல் வட்டத்தை மோடி வெற்றிகரமாகக் கடந்தார். மோடியின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையில் நிச்சயமாக நேருவின் பாணி இருக்கிறது.
இரண்டாவது வட்டத்தையும் மோடியால் ஊடுருவ முடிந்திருக்கிறது. ஆட்சி நிர்வாகத்துக்காக அரசியல் கூட்டணியை ஏற்படுத்துவதுதான் இந்த வட்டம். பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றதன் மூலம் சமரச யுகத்துக்கும் கூட்டணி அரசியலுக்கும் முடிவு கட்டினார். அதற்குப் பிறகு பல மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்றது. இப்படியாக, தீர்மானகரமான தேசிய அரசியல் என்னும் புதிய காலத்துக்கு அவர் முகமன் கூறியிருக்கிறார். இன்னமும் அரசியல்ரீதியிலான எதிர்ப்பு இருக்கிறது, கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும். இந்த வட்டத்துக்குள் அவர் ஊடுருவுவதை அவையெல்லாம் தடுத்துவிட முடியாது.
பளபளப்பை இழக்கும் மோடி ஜாலம்
ஆட்சி நடத்தும் வழிமுறைகள்தான் மூன்றாவது வட்டம். அந்த முன்றாவது வட்டத்தைத் தற்போது மோடி எதிர்கொண்டிருக்கிறார். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (வங்கிக் கணக்குகள்), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி (ஆயுள் காப்பீடு), பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா (விபத்துக் காப்பீடு), அடல் பென்ஷன் யோஜனா (அமைப்புசாரா துறையினருக்கான ஓய்வூதியம்) போன்ற சில நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், மேற்கண்ட திட்டங்களோடு நிலம் கையகப்படுத்தல் சட்டத் திருத்தம், அவசர அவசரமாக வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதிகள், ஊடகங்களோடு கிட்டத்தட்ட உறவே இல்லாமல் இருத்தல் போன்றவை முரண்படுகின்றன. இப்படியாக, மக்கள் நலத் திட்டங்கள் ஒரு பக்கம், மக்கள் விரோதத் திட்டங்களும் முடிவுகளும் இன்னொரு பக்கம். முந்தைய வட்டங்களில்இடதுபக்க போர்வீரர்களைத் தோற்கடித்ததுபோல இந்த வட்டத்தில் அவர்களைத் தோற்கடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. ‘வலதுபக்க வீரர்களும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். மிகைப்படுத்தப்பட்டதும், இலக்கற்றதுமான பொருளாதாரக் கொள்கையைப் பற்றி கார்ப்பரேட் இந்தியா புலம்ப ஆரம்பித்துவிட்டது.
மோடியின் ஜாலம் அதன் பளபளப்பை இழந்துகொண்டிருக்கிறது.
ஜனநாயக நெறிகள் மீதும், நாடாளுமன்ற நெறிமுறைகள் மீதும் கொண்டிருக்கும் மதிப்புதான் நான்காவது வட்டம். இதில் மோடி சாதித்தது மிகவும் சொற்பம். அவசரச் சட்டங்களில் போய்தான் அடிக்கடி மோடி தஞ்சம் புகுகிறார். மாதம் இருமுறை மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதுவது நேருவின் வழக்கம். 1948-ம் ஆண்டு, ஆகஸ்ட் 16 அன்று நேரு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “அவசரச் சட்டங்களெல்லாம் ஆபத்தான வழிமுறைகள்.”
நிலம் கையகப்படுத்தல் சட்டத் திருத்தம் விஷயத்தில் மட்டுமல்லஓய்வுபெற்ற அதிகாரி ஒருவருக்கு அரசு வேலை கொடுப்பதுஎன்ற அவரது ஆசைக்காகவும் அவசரச் சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டார். அதேபோல அரசு நிறுவனங்களின் வீரியத்தை மோடி நீர்த்துப்போகச் செய்வதும் கண்கூடு. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66- பிரிவுக்கு மத்திய அரசு சப்பைக்கட்டுக் கட்டியது, உச்ச நீதிமன்றம் அந்தப் பிரிவை நீக்கியது; தலைமை தகவல் ஆணையர் பதவி போன்றவற்றை நிரப்பாமல் வைத்திருப்பது என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்.
நான்காவது வட்டத்தில் மோடியால் நத்தை வேகத்தில்தான் முன்னேற முடிகிறது. அரசு அமைப்புகளையெல்லாம் மோடி வலுப்படுத்துவாரா, வலுவிழக்கச் செய்வாரா என்பதை அறிந்துகொள்ள இன்னும் ஓராண்டாவது நமக்கு வேண்டும் என்றாலும் நமக்குத் தெரியும் அறிகுறிகள் அவர் வலுவிழக்கச் செய்வார் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.
உண்மையான பரீட்சை
ஐந்தாவது வட்டத்தில்தான் மோடி தோற்க ஆரம்பித்திருக்கிறார். நவீன ஜனநாயக சமூகத்தைக் கட்டமைக்க அடிப்படையான பன்மைச் சமூகம் குறித்த உரையாடல்தான் ஐந்தாவது வட்டம்.
சமூக உரையாடலுக்கான வழிமுறைகளை மோடி ஆதரவாளர்களிடையே இருக்கும் பிற்போக்குவாதிகளே தீர்மானிக்கிறார்கள். மோடியோ இதையெல்லாம் கண்டும்காணாமலே இருக்கிறார். “பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நாம் இன்று போதிப்பவற்றில் அறமோ பொருண்மையோ இல்லை. அவைதான் ஒருவருடைய பண்பையும் நடத்தையையும் தீர்மானிக்கக் கூடியவை. நமது வரலாற்றில் இந்தியத்துவமே பிரதிபலிக்கவில்லைஎன்று இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் கூறும்போதும், அன்னை தெரசாவின் சேவைக்குப் பின்னால் மதமாற்ற நோக்கங்களே இருந்தன என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொன்னபோதும் மோடி மவுனமாகவே இருந்தார்.
இதுவரை குறிப்பிடப்பட்ட ஐந்து வட்டங்களையும் தாண்டினால் உண்மையான சவால் 6-வது வட்டத்திலும் (அரசியல் தத்துவம்), ஏழாவது (தனிப்பட்ட அறம்) வட்டத்திலும்தான் தொடங்குகின்றன. இந்தியா போன்ற பன்மைத் தன்மை கொண்ட ஒரு நாட்டை ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் உருவாக்கப்பட்ட தத்துவத்தைக் கொண்டு ஆள முடியாது. இந்தியாவை ஆள்வதற்கான அரசியல் தத்துவத்தின் மையமாக மதச்சார்பின்மையும் சமூகநீதியும் இருக்க வேண்டும். காங்கிரஸ் பின்பற்றியதுபோல் பாரபட்சமான மதச்சார்பின்மையாக இல்லாமல் உண்மையான மதச்சார்பின்மை நிச்சயம் தேவைப்படுகிறது .
மோடி பெரும்பான்மைவாத மனப்போக்கைக் கொண்டிருக்கிறார். பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள் ஆகிய இரண்டு தரப்புக்குமே அது நல்லதில்லை. மோடியின் அடிப்படை நம்பிக்கைகள் என்ன? வெவ்வெறு இனங்கள், மதங்களுக்கிடையில் உள்ள உறவைப் பற்றி அவர் என்ன புரிந்துகொண்டிருக்கிறார்? பெண்கள் மேம்பாட்டுக்கு அவர் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகிறார்? ஆதிவாசிகளுக்கு என்ன செய்யப்போகிறார்? ஜாதியால் பிளவுற்றுக் கிடக்கும் சமூகத்துக்குக் கண்ணியத்தை எப்படி ஊட்டப்போகிறார்? அவரது நெருங்கிய சகாக்கள் தண்டிக்கப்படும் நிலை வருமெனினும் சட்டத்தின் மேன்மையைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார்?
இவையெல்லாம் அர்த்தமற்ற கேள்விகளல்ல. இந்திரா காந்தி எங்கே வீழ்ச்சியடைந்தாரோ அந்த ஆறாவது வட்டத்தை இவைதான் கட்டமைக்கின்றன. இதில் வெற்றி கொண்டால் தனிப்பட்ட அறம் தொடர்பான ஏழாவது வட்டத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டியிருக்கிறது.

- நன்றி ‘தி இந்து’
 ‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: மோடியும் அவரது சக்கர வியூகமும்

No comments:

Post a Comment