Wednesday, November 20, 2013

பழங்குடிகளின் ஒலிம்பிக்ஸ்


(‘தி இந்து’, தலையங்கம், 19.11.13)

அடுத்த உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டி 2014-ம் ஆண்டும், ஒலிம்பிக் போட்டிகள் 2016-ம் ஆண்டும் பிரேசிலில் நடக்க இருக்கின்றன. ஆனால், அந்தப் போட்டிகளுக்கு முன்னதாக, அவற்றைவிட முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் பிரேசிலில் நடந்துமுடிந்திருக்கின்றன - பழங்குடிகளின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள். பிரேசிலின் 48 பழங்குடியினங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர்; கூடவே, பிற நாடுகளின் பழங்குடி இன மக்களும்; இவர்கள்தான் பங்கேற்பாளர்கள்.

Friday, November 15, 2013

நேரு என்ற ஆக்க சக்தி

'தி இந்து' (தமிழ்) தலையங்கம் (14.11.13)

சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவை ஒன்றுசேர்த்துப் போராட வைப்பதற்கான, ஒன்றிணைக்கும் சக்தி தேவைப்பட்டது. மிகச் சரியாக அந்த இடத்தில் காந்தி வந்து அமர்ந்தார். சுதந்திரத்துக்குப் பிறகும் அதேபோல் ஒன்றிணைக்கும் சக்தி தேவைப்பட்டது. சுதந்திரமடைந்த சில மாதங்களில் காந்தி கொல்லப்படவே, அவருடைய இடத்தில் இயல்பாகவே நேரு வந்து அமர்ந்தார். ஒருங்கிணைக்கும் சக்தியாக ஆற்ற வேண்டிய பணிகள் நேருவுக்கு முன் குவிந்துகிடந்தன, காந்திக்கு இருந்த கடமைகளைவிட அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் எல்லாருக்கும் இடம் இருக்கிறது

ஜவாஹர்லால் நேரு

(தமிழில்: ஆசை. 'தி இந்து' தமிழ் நாளிதழில் நேரு பிறந்த நாள் அன்று வெளியானது)


அலிகாருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். காலத்தால் மட்டுமல்ல, உத்வேகத்தாலும்  கண்ணோட்டத்தாலும் நமக்கிடையே இடைவெளி இருக்கிறது. நீங்கள் இன்று எங்கே நிற்கிறீர்கள், நம்மில் பெரும்பாலானோரும் எங்கே நிற்கிறார்கள் என்பதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரிய வில்லை. ஏனென்றால், ஏராளமான கொந்தளிப்பு களையும் பெரும் துயரங்களையும் நாம் கடந்து வந்திருக்கிறோம். அதனால், நிகழ்காலம் குழப்பம் நிரம்பியதாகவும், அதைவிட எதிர்காலம் மூட்டமானதாகவும் ஊடுருவிப் பார்க்க முடியாததாகவும் காட்சியளிக்கிறது. இருந்தாலும், நாம் நமது இந்த நிகழ்காலத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்; அப்படி எதிர்கொள்வதன்மூலம் எதிர்காலத்தை உருவாக்க முயன்றுதான் ஆக வேண்டும்.

ஒபாமாகேர்: மாபெரும் அலங்கோலம்

பால் க்ருக்மன்

(தமிழில்: ஆசை. நியூயார்க் டைம்ஸ் ஆங்கில இதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு தி இந்து நாளிதழில் 30.10.13 அன்று வெளியானது) 
 
 
  
‘ஒபாமாகேர்’- நுழைவுதளமான (போர்ட்டல்) ‘ஹெல்த்கேர்.கவ்’ குறித்த நல்ல செய்தி என்னவென்றால், அதன் நிர்வாகம் தன் பிரச்சினைகளைச் சாதாரணமானவையாகக் கருதவில்லை. பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான முதல் படி அதுதான், நிச்சயம் சரிசெய்யப்பட்டுவிடும். என்ன, ‘சீரான நிர்வாகம்’என்ற புதிய நம்பிக்கை நவம்பர் இறுதிக்குள் சாத்தியப்படுமா என்பதுதான் கேள்வி.

இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள் ஒரு கொடூர நகைச்சுவை - குணால் சாஹா பிரத்தியேகப் பேட்டி

சமஸ்
 
(தமிழில்: ஆசை. தி இந்து நாளிதழில் 05.11.2013 அன்று வெளியான நேர்காணல்)

  • குணால் சாஹா
    குணால் சாஹா
  • அனுராதா சாஹா
    அனுராதா சாஹா
  • குணால் சாஹாவுடன் அவரது மனைவி அனுராதா சாஹா
    குணால் சாஹாவுடன் அவரது மனைவி அனுராதா சாஹா
இந்திய மருத்துவத் துறையையே உறைய வைத்திருக்கிறார் குணால் சாஹா. தன்னுடைய மனைவி அனுராதாவின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சைக்கு இழப்பீடாக ரூ. 11 கோடியை உச்ச நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பாகப் பெற்றிருக்கிறார் சாஹா. இந்திய வரலாற்றில் மருத்துவத் துறை தவறுகளுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அபராதத் தொகை இது. “இந்திய மருத்துவத் துறைக்கு இது ஒரு கருப்பு நாள்” என்று சொல்லும் அளவுக்கு இந்திய மருத்துவத் துறையை குறிப்பாக, தனியார் மருத்துவத் துறையைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது சாஹா பெற்றிருக்கும் தீர்ப்பு. ஆனால், சாமானியர்களோ கொண்டாடுகிறார்கள். சாஹாவிடம் பேசினால், ஒரு பெரிய கதை விரிகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் காதலில் தொடங்கும் அந்தக் கதை இந்திய நோயாளிகளின் அவலங்களை அம்பலப்படுத்துகிறது; கூடவே இந்திய மருத்துவத்தைச் சூறையாடும் பண வெறியையும்.

ஆசாத் எனும் மகா அக்பர்


 முஷிருல் ஹசன்
(தமிழில்: ஆசை, ஆசாதின் 125-வது பிறந்த தினத்தில் (11.11.13) தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை)

உயரம் ஐந்து அடி ஐந்து அங்குலம்; மிகவும் ஒடிசலான உடல்வாகு; வெளுப்பான நிறம்; சுமார் 33வயது; சவரம் செய்யவதில்லை என்றாலும் முகத்தில் அநேகமாக ரோமம் ஏதும் இல்லை; நீண்ட, தீர்க்கமான முகம், எடுப்பான மூக்கு. இந்திய சுதந்திரப் போரின் மகத்தான இளைஞனாக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாதைப் பற்றி முறையாகச் சொல்ல வேண்டும் என்றால் இதுதான் சரியான வர்ணனை. தனது தன்னம்பிக்கை, வசீகரம், அர்ப்பணிப்பு ஆகிய குணங்களாலும் அறிவுக் கூர்மை, சிந்தனை வேகம் ஆகியவற்றாலும் ஆசாத் பெரிதும் ஈர்த்தார்.
ஆனால், பிற்காலத்தில் அவர் வரித்துக்கொண்ட தோற்றம் வேறு: அவருடைய ஆழ்ந்த கல்வியறிவுக்கும் வயதுக்கு உரிய மரியாதையைத் தரும் தோற்றம்.

ஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்!

ஹசன் சுரூர்
(தமிழில்: ஆசை. தி இந்து நாளிதழில் 10.11.13 அன்று வெளியான கட்டுரை. )
 

நரேந்திர மோடி பேசிய பேச்சு, நேருவையும் படேலையும் ஒப்பிட்டுப் பரபரப்பாக விவாதம் நடக்கத் தூண்டியிருப்பதோடு மட்டுமல்லாமல், நவீனமும் ஒன்றுபட்டதும் மதச்சார்பற்றதுமான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டு, இப்போது மக்கள் நினைவிலிருந்தே மறைந்துபோன இருவரைப் பற்றிப் பேசுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரஃபி அகமது கித்வாய். தேசியத்தைக் கண்போல் மதித்த இஸ்லாமியத் தலைவர்களின் மகத்தான, கடைசித் தலைமுறையினர்.

பைத்தியக்காரர்களிடம் செல்லுபடியாவாரா காந்தி?

ஜார்ஜ் ஆர்வெல்

(ஆர்வெல் 1949-ல் எழுதிய கட்டுரையின் சுருக்கமான மொழிபெயப்பு: ஆசை. தி இந்து நாளிதழில் 02.10.2013 அன்று வெளிவந்தது.)
 
காந்தியின் சுயசரிதை முதன்முதலில் வெளியானபோது அதன் ஆரம்ப அத்தியாயங்களை மட்ட ரகக் காகிதத்தில் அச்சான ஓர் இந்திய நாளிதழில் படித்தேன். அவை எனக்குள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின, அப்படிப்பட்ட தாக்கத்தை காந்தி என்னுள் அப்போது ஏற்படுத்தியிருக்காவிட்டாலும்கூட.
காந்தி என்றால் ஒருவருக்கு என்ன தோன்றும்? சுதேசி கதர் துணி, ஆன்ம பலம், சைவ உணவு - இவை எதுவும் அப்போது என்னைக் கவரவில்லை. பின்தங்கிய, பசியோடு இருக்கும், அதிக அளவு மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டுக்குச் சரிப்பட்டு வராதவையாகத்தான் காட்சியளித்தன, மத்திய காலத்துக்குரியவையான அவரது திட்டங்கள்.

அந்தக் காலத்திலும் ஒரு மலாலா இருந்தார்

வில்லியம் டால்ரிம்பிள்
(தமிழில்: ஆசை , தி இந்து நாளிதழில் 15.10.2013 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை, இதன் மூல வடிவம் 'நியூயார்க் டைம்ஸ்' ஆங்கில இதழில் வெளிவந்தது ) 
 
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் பிழைத்ததற்குப் பிறகு, மலாலா வுக்குக் கிடைக்காத கௌரவங்களே இல்லை; அமைதிக்கான நோபல் பரிந்துரையில் ஆரம்பித்து அன்னை தெரசா விருது, ‘டைம்’பத்திரிகையின் ‘செல்வாக்கு மிக்க 100 பேர்’பட்டியலில் கிடைத்த இடம் என்று நீண்டுகொண்டே போகின்றன. மலாலாவின் அசாத்தியமான துணிச்சலும் பெண் கல்வி, சமாதானம் ஆகியவற்றில் அவரின் ஈடுபாடும் உண்மையிலேயே உத்வேகமளிக்கக் கூடியவை. ஆனாலும், அவர் மீது தொடர்ச்சியாகச் சூட்டப்படும் புகழ் மாலைகள் ஒருவித அசௌகர்ய உணர்வை ஏற்படுத்துகின்றன. தீவிரப் பழமைவாத சமூகமாகவும் தந்தைவழி சமூகமாகவும் பொதுவாகக் கருதப்படும் பஷ்டூன் சமூகத்தைச் சேர்ந்தவர் மலாலா. ஆஃப்கன், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்தச் சமூகம் பரந்திருக்கிறது. மலாலாவின் குரல்தான் இந்தச் சமூகத்திலேயே தனித்த குரல் என்றும் மலாலா கிட்டத்தட்ட முன்னுதாரணமற்ற நிகழ்வு என்றும் கருதுவதும்தான் அந்த அசௌகர்ய உணர்வுக்குக் காரணம்.

காகமாதல்

ஆசை 
('தி இந்து' நாளிதழில் 24.09.13 அன்று 'காகமும் நாமும்' என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது )
                                                     படம்: விக்கிபீடியா




ஒரு நாள் அலுவலகத்துக்கு வந்தபோது நான் பார்த்த காட்சி என்னை வியப்பிலும் பொறாமையிலும் ஆழ்த்தியது. அலுவலகத்தின் பால்கனியில் என் அலுவலக சகா ஒருவர் வெளியில் பார்த்து நின்றுகொண்டிருக்க அவர் முகத்துக்கு அருகே உள்ள இரும்பு கிராதியில் ஒரு காகம் அவரைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பிஸ்கட்டை காகத்துக்குப் பிட்டுக்கொடுக்க அதுவும் அலகால் அதைக் கொத்திக்கொண்டு போய்விட்டது. அவரிடம் மட்டும் வரும் காகம் நம்மிடம் வராதா என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது.

42 நட்சத்திரங்களும் 55 ஆண்டுகளும்

ஆசை

(தி இந்து நாளிதழில் 24.09.2013 அன்று வெளியான கட்டுரை)
 


 

பெருநட்சத்திர வெடிப்பின் மிச்சம் படம்: ஏ.பி.பி.
 

ராபர்ட் ஓவன் இவான்ஸின் தலை எப்போதும் அண்ணாந்தபடிதான் இருக்கும்போல. இவரைப் பற்றி சில வருடங்களுக்கு பில் பிரைசனின் ‘எ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் நியர்லி எவரிதிங்’ (A Short History of Nearly Everything) புத்தகத்தில் படித்தேன். அடிப்படையில் இவான்ஸ் ஒரு பாதிரியார். ஆனால் அவரது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் விஷயம் என்ன தெரியுமா? இரவு நேரத்தில் பெருநட்சத்திர வெடிப்பை (supernova) தேடி நடத்தும் வேட்டைதான்.

இந்த நாளின் பெயர் தேன்சிட்டு

ஆசை

(தி இந்து, 28.10.2013) 
  • ஆண் தேன் சிட்டு
    ஆண் தேன் சிட்டு
  • பெண் தேன் சிட்டு
    பெண் தேன் சிட்டு        படம்: கே. ஞானஸ்கந்தன்  

காலையில் நாம் கண்விழிக்கும்போது அற்புதமான பாடல் ஒன்றைக் கேட்டால் எப்படி இருக்கும்?
கல்லூரி நாட்களில் இளையராஜாவின் ஏதாவதொரு பாடலைக் காலையில் கேட்டுவிட்டுக் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். அந்த நாள் முழுவதும் காதுக்குள்ளே அந்தப் பாடலின் நாதம் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் ஏதோ ஒரு நாளில் கண் விழிக்கும்போது பறவைகளின் குரலுக்குப் பழகினேன். ஏதாவது ஒரு பறவையின் குரல் என்னை எழுப்பும். முதல் தடவை நான் எழுந்தது அக்காக்குயிலின் கூவலுக்கு.