Thursday, June 26, 2025

குளம்படிகளின் சரித்திரம் - நெடுங்கவிதை

 


1.

போரின் சித்திரத்தைத் 
தெளிவாக உருவாக்கக்
குளம்படிகளைத் தவிர
வேறெதுவும் இல்லை

சரித்திரத்தின் அடிமரத்தில்
இதோ
ஆணியாய்ப் படிந்துவிட்ட
குளம்படியை
இறந்துபோன அந்த மன்னன்
--ஆம் அவன்தான்
போரை நிர்மாணித்தவன்--
பிடுங்கியெறிய முயல்கிறான்
பிடிவாதமாய்

அவனுக்குத் தெரியாது
அந்தக் குளம்படியின் வேர் 
பூமியின் எல்லையைக் கடந்துவிட்டது


2.
அதோ அந்தக்
குளம்புகளற்ற ஏராளமான
குதிரைகள் ஓடுகின்றன

அவற்றுடன் 
தீர்மானிக்கப்பட்ட யாவும் அர்த்தமற்று
தலைதெறிக்க ஓடுகின்றன
எதற்குள்ளும் எதுவும்
பொருந்திப்போக முடியவில்லை

தலையற்ற வீரனைக் கொண்டு
போரின் எல்லைவரை சென்ற
குதிரைக்குத்
தன்மேலுள்ள சுமையாலே
போரைப் பற்றிய முடிவுறாக் கற்பனைகள்
கிளர்ந்தெழுகின்றன

அதன் முதுகிலிருந்து
அந்த வீரன்
சரிந்து விழும்வரை
போர் இன்னமும் 
நடந்துகொண்டிருப்பதாகவே
எண்ணிக்கொள்கிறது

இறந்து கிடக்கும் யானைகள்
குதிரைகள் வீரர்கள்
மன்னர்களின் ஊடே
அது அலைந்துகொண்டிருக்கிறது
போர் முடிந்துவிட்ட பிறகும்

தன் வீரனுடன் போர் புரிய
எவருமில்லையா?

குதிரைகளைக் காலம்
பரிகசிக்கிறது


3.
சூரியன் மறைகிறது
குதிரைகளுக்கு விடுதலை

தங்கள் தலைகளைச் சரிபார்த்துப் 
பொருத்திக்கொள்கிறார்கள் மன்னர்கள்
இளைப்பாறும் குதிரைகள்
குளம்புகளை நக்கிக்கொள்கின்றன
நடக்கவிருக்கும் எல்லாப் போர்களுக்குமாக

பொழுது விடிகிறது
இன்னுமொரு போர்


4. 
குளம்படிகளுக்குள் நிகழ்ந்தவையாகக்
கொள்ளப்படுகின்றன
போர்கள்

குளம்படிகள் புலம்புகின்றன
அவற்றால்கூட முடியவில்லை
தங்களை இப்புவியிலிருந்து
--மற்றும் சரித்திரத்திலிருந்து--
விடுவித்துக்கொள்ள

ஒரு சரித்திர ஆசிரியன்
எழுதுகிறான்
‘...ஆண்டில்
குளம்படிகளுக்கிடையே நடந்த போரில்
குளம்படிகள் வென்றன
குளம்படிகள் தோற்றன’


5.
குதிரைகளெல்லாம் முற்றிலும்
தீர்ந்துபோன ஒரு போர்க்களத்தில்
மண்ணில் கெட்டிப்பட்டுப்போன
குளம்படிகள்
மனிதர்களின் பாதங்களை உள்வாங்கி
அவர்களை மாற்றிவருகின்றன
குதிரைகளாய்

பழைய குதிரைகள்
கடிவாளங்கள் காற்றில் பிய்ந்துசெல்லப்
பிடரியைச் சிறகாய்ப் பொருத்திக்கொண்டு
கால்களுக்கெதிராகப் பறந்துவிட்டன
இலவம்பஞ்சைப் போன்று

மண்ணில் பாவாமல்
மிதந்துகொண்டிருக்கும்
அவற்றின் முடிவற்ற கனவுகளை
மீண்டும் ஒரு மன்னன்
தன் பாதி உறக்கத்தில் கண்டு தெளிந்து
தேடிச்செல்கிறான்
போர்களுக்கான குளம்படிகளை


6.
மனித வாடையற்ற
பனிமலையின் அடியில்
உறைந்துபோன குதிரைகள் குளம்புகளற்றுக்
கண்டுபிடிக்கப்பட
அதற்குள் முடிந்துவிட்டது
எல்லாம்

சரித்திரம் குளம்படிகளால் எழுதப்பட்டுக்
காத்திருக்கிறது
குளம்படிகளால் அழிக்கப்படவும்

                          01-07-2001 (2006-இல் ‘க்ரியா’ வெளியீடாக வெளியான எனது ‘சித்து’ கவிதைத் தொகுப்பிலிருந்து...)



Tuesday, June 24, 2025

தமிழால் ஆடுகின்றான் கண்ணதாசன்! - கண்ணதாசன் பிறந்தநாள் கவிதைப் பகிர்வு

மன்னார்குடியில் ஒரு இசையகத்தில் நாங்கள் அடிக்கடி பாடல்களைப் பதிவுசெய்து கொண்டுவந்து கேட்போம். ‘உங்களிடம் அதிகம் பதிவுசெய்யப்பட்ட பாடல் எது?’ என்று அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய பாடல் ‘கண்ணே கலைமானே’. கண்ணதாசன், இளையராஜா, பாலுமகேந்திரா, ஸ்ரீதேவி, கமல் என்று எல்லோருக்குமான பெருமை அது. பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு வந்தவர்களில் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் ஒருவர் கண்ணதாசன். ‘உனக்கே உயிரானேன்... எந்நாளும் எனை நீ மறவாதே’ என்பது அவரது மரண சாசனமாகவே அமைந்துவிட்டது. எப்படி மறப்போம் கண்ணதாசா?

எனது ‘அண்டங்காளி’ தொகுப்பின் இந்தக் கவிதை கண்ணதாசனுக்கு அர்ப்பணம்!
பார் சிவனே
மீனாளின் குங்குமத்தைத்
தானாள வேண்டுமென்று
ஏன் விரும்பினான் கண்ணதாசன்
தானும் சிவனாகும்
ஆசையினாலா
இடம்பெயர்ந்த
உன் நெற்றிக்கண்ணின்
குளிர்சிவப்பைப்
பார்த்து
அவனுக்கும்
ஆசை விடவில்லை
உன் நெற்றிக்கண்ணை
ஒரு பொய்கையாக்கி
அதில் குளித்து விளையாடிக்
கரைமீண்ட மீனாள்
தன் நெற்றியில் துளியாய்த் தங்கிவிட்ட
உன் தகிப்பை
எப்படித்
தன் குங்குமமாக மாற்றிவிட்டாள்
பார்
உன் நெற்றியிலிருந்து
அவள் நெற்றிக்குப்
பயணிக்கும் துடிப்பில்
குளிரைத் துரத்தும்
வெம்மையும்
வெம்மையில் குளிக்கும்
குளிரையும்
உள்ளடக்கிய
தீராத விளையாட்டு
திரைபோட்டு
நடக்கிறது
அதுதான்
நீயாடும் அம்பலம்
அவளாடும்
தன்பலம்
சிவனாகும் ஆசையில்
கண்ணதாசனும்
ஆட முயல்கின்றான்
மீனாளின்
குங்குமப் பரப்பென்ற
குளிர்சிவப்பு
மேடையில்
அம்மை தன்
மேடையெறிந்து
அதைச் சூரியனாக்கிவிடுவாள்
தாங்க மாட்டான்
கண்ணதாசன்
அவள் குங்குமமென்பது
நீ ஒட்டிக்கொண்ட
நெற்றிக்கண்ணோடு
ஆடும் பரப்பல்ல
உன்னைப் போல
வெம்மையை வீசிக்கொண்டு
யாரும் அணுக முடியாத
நெற்றிக்கண் வாசல்
கொண்டதுமல்ல
அவளுடையது
கண்ணதாசா
உற்றுப்பார் உள்ளே
அது அவள்
இதயத்துக்குப்
போகும் வழி
அவள் இதயத்துக்குப்
போகும் வழிக்கு
உன் இதழால்தான்
ஆட்டமிட வேண்டும்
ஆட்டம் தொடங்கியும்கூட
எத்தனையெத்தனை
இதழ்களை எரித்த
குளிர்சிவப்புக்
குங்குமம் அது
தமிழால் ஆடுகின்றான் சிவனே
கண்ணதாசன்
தாங்குவானா
நான் பார்க்க வேண்டும்
ஆடட்டும் அவன்
-ஆசை (‘அண்டங்காளி’, 2021, டிஸ்கவரி வெளியீடு)
நன்றி: ‘ஆகாயப் பந்தலிலே’ பாடலின் ‘மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா’ வரிகள்

Wednesday, June 18, 2025

க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு


ஆசை

தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும் ‘கிட்டத்தட்ட’ இல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.

எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு ‘எடிட்டிங்’ என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

Friday, June 13, 2025

நிலாவுக்குப் போகும் வழி


அண்ணன்காரன் சொல்லிக்கொண்டிருந்தான்
'நான் பெரியவனாகி
சயன்டிஸ்ட் ஆகி
அயன்மேன் சட்டை கண்டுபுடிப்பேன்
தோர் சுத்தியல் கண்டுபுடிப்பேன்
கேப்டன் அமெரிக்கா கவசம் கண்டுபிடிப்பேன்
ஸ்பைடர்மேன்பூச்சி கண்டுபிடிப்பேன்'
கடற்கரை மணலில்
குழி தோண்டிக்கொண்டிருந்த
தம்பிக்காரனிடம் கேட்டால்
நாற்பத்தைந்து டிகிரியில் கையை
உயர்த்தி
நிலாவைக் காட்டிச் சொல்கிறான்
'இலா ஆவணும்'
நிலா பதறிப்போய்விட்டதைப்போல்
தெரிந்தது
நானே குத்துமதிப்பாக நிலாவாக இருக்கிறேன்
என்று புலம்ப ஆரம்பித்ததைப் போன்றும்
தெரிந்தது
சற்றைக்கெல்லாம்
நிலாவுக்குப் பரிதாப முகம்
'அம்மாவும் நிலா
ஆகணும்னா என்ன
செய்யணும்டி'
என்று கேட்டால்
'இந்த மண்ண நோண்டணும்'
என்கிறான்
'எப்போ வரைக்கும்
நோண்டணும்'
என்று கேட்டதற்கு
'நேத்தைக்கு வரைக்கும்'
என்று தலைநிமிராமல்
சொல்லிவிட்டுத்
தொடர்ந்து மண்ணைத் தோண்டுகிறான்
நான்கு திசையிலும்
அண்ணனின்
அயன்மேனையும்
தோரையும்
கேப்டன் அமெரிக்காவையும்
ஸ்பைடர்மேனையும்
காவலுக்கு நிறுத்திவிட்டு
மலைப்பாக இருந்தது எனக்கு
நிலாவுக்குப் போகும் வழியில்
இவ்வளவு மண்ணை யார் கொட்டியது என்று
அதனால்தான்
அம்மாவுக்காக அதையெல்லாம்
அப்புறப்படுத்திக்கொண்டிருக்கிறான்
-ஆசை

Tuesday, June 3, 2025

காஃப்காவின் முன் இரு சிறுமிகள் - காஃப்கா நினைவுநாள் சிறுகதை



ஆசை

1. சர்வீஸ் சாலை

அந்த நெடுஞ்சாலை மிகவும் பெரியது என்றாலும் அதன் ஓரம் நடப்பதற்கு நிறைய இடம் இருக்கிறது என்றாலும் அந்த சாலையில் செல்லும் மிக நீண்டதும் ஏராளமான சக்கரங்களைக் கொண்டதுமான லாரிகளையும் கண்டெய்னர்களையும் பார்க்க எனக்கு அச்சமாக இருந்ததால் அந்த நெடுஞ்சாலையின் இடது பக்கம் இருந்த சர்வீஸ் சாலை என்று சொல்விவிட முடியாத ஆனால் இணையாகச் செல்லும் மண்ணும் தார்ச் சாலையும் கலந்த அந்த சாலையில் குறுக்காக இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எங்கும் புழுதி மயம். நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்வதால் அங்கே ஓரத்தில் இருந்த புழுதி கிளம்புகிறது என்றால் இந்த சர்வீஸ் சாலையில் ஏன் இந்த அளவுக்குப் புழுதி என்று எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் காற்றே இல்லாத புழுக்கமான பகல் பொழுது இது. இந்தப் புழுதிக் காட்டில் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் வழக்கமாக நெடுஞ்சாலைகளில் இருப்பது போன்று டீக்கடை, பிஸ்கெட் சிகரெட் விற்கும் தண்ணீர் போன்றவை விற்கும் கடைகளும் இருந்தன.

Monday, June 2, 2025

அவரவருக்கான இசை! அவரவருக்கான ராஜா!



ஆசை

(இளையராஜா-75-ஐ முன்னிட்டு 04-06-18 அன்று ‘தி இந்து’ தமிழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது)

நெடுந்தொலைவு போவது என்றால் பேருந்துப் பயணத்தைவிட ரயில் பயணம் மிகவும் வசதியானது மட்டுமல்ல அழகானதும் கூட. ஒருமுறை சென்னையிலிருந்து டெல்லி வரை ரயிலில் பயணித்திருக்கிறேன். இந்தியாவின் விதவிதமான நிலங்களை அந்த ரயில் பயணம் என் கண்களுக்குள் தொடர்ச்சியாகக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டே இருந்தது. பேருந்துகள் பெரும்பாலும் ஊர்களுக்கு உள்ளே செல்பவை. ரயில்களோ ஊர்களின் புறப்பகுதி வழியே செல்பவை. பெரும்பாலும் ஏழை எளிய மக்களின் கொல்லைப்புறம் வழியாகச் செல்பவை என்று சொல்லலாம். அப்படிச் செல்லும்போது எத்தனையோ விதமான மனிதர்கள், கிழிந்த உடைகள், அழுக்கு உடைகள், வெறித்த பார்வை, ஒவ்வொரு ஊரிலும் ரயிலுக்கு டாட்டா காட்டும் குழந்தைகள்… கூடவே, ஒவ்வொரு ஊரின் நிறத்தையும் காட்டும் வயல்கள், தரிசு நிலங்கள், இடையிடையே காடுகள், குன்றுகள், மலைப்பரப்புகள். மனிதர்கள் தென்படாவிட்டாலும் அந்த நிலப்பரப்புகள் ஏதேதோ உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டும், நம்மிடமிருந்து உணர்வுகளை எழுப்பிக்கொண்டும் இருக்கும். அங்கே நாம் இருக்க வேண்டும் என்ற உணர்வையும் அந்தக் காட்சிகள் ஏற்படுத்தும். இங்கே இருந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் நம்மை அங்கேயும் இருக்க வைப்பது அந்தக் காட்சிகளின் தன்மை. ரயில் பயணத்தின் தன்மை. ஆகவேதான், இளையராஜாவின் இசையை நீண்ட ரயில் பயணத்துடன் ஒப்பிடவே நான் விரும்புவேன். நம் மனதுக்குள் அவருடைய இசை காட்டும் நிலப்பரப்புகள், எழுப்பும் உணர்வுகள், கற்பனைகள், இங்கே இருக்கும் நம்மை அங்கே இருக்க வைத்தல் என்று எல்லாவற்றையும் வைத்துத்தான் இதை உறுதியாகச் சொல்கிறேன்.