கவ்வியபோது பிடிக்கப்பட்டதா
அல்லது
பாம்பு பற்றித்
தொங்குபவனுக்கு வாயில்
தேன் வந்து விழுந்ததுபோல்
வலைக்கு வந்தபின்
கவ்வியதா
அல்லது
கூடையில் கொட்டியபோது
பிளந்த வாய்க்குள்
நேரே சென்று
சிறுமீன் விழுந்ததா
(உள்ளே விழித்த விழிப்பில்
என்ன கண்டிருக்கும் சிறுமீன்
நழுவும் துடிப்பொன்றின்மேல்
தன்துடிப்பும்
தாளமிட்டே நழுவுவதையா)
மீன் கவ்விய மீன் கவ்விய மரணம்
அதை மட்டுமே விற்கிறார்
மீன்காரம்மா
தன் கூடையில்
வாழ்வு உண்டு செரிக்க
கவ்விய
கவ்விய
கவ்விய
என் கவ்வலே
-ஆசை, ‘குவாண்டம் செல்ஃபி’ (2021) கவிதைத் தொகுப்பிலிருந்து
No comments:
Post a Comment