Friday, February 2, 2024

தேசியப் பள்ளி (NHSS) - 125: நான் மலர்ந்த இடம்


ஆசை

(நான் 1990லிருந்து 1997 வரை படித்த மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி தனது 125வது ஆண்டில் நுழைவதையொட்டி ஒரு சிறப்புப் பகிர்வு. சமஸ் தொகுப்பாசிரியராக வெளியிட்ட ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலிலிருந்து...)

வணக்கம் தம்பி… நான் உங்க ஹெட்மாஸ்டர் சேதுராமன் பேசிறேன். ஞாபகம் இருக்கா? உங்களுக்கு சிறந்த கவிஞருக்கான விருது கிடைச்சிருக்குன்னும், முதல்வர் அந்த விருதை வழங்கப்போறாருன்னும் கேள்விப்பட்டேன். வாழ்த்துகள் தம்பி. பெருமையா இருக்கு!

இப்படி ஒரு செல்பேசி அழைப்பு வந்தபோது, நானும் என் நண்பன் இளங்.கார்த்திகேயனும் பள்ளியிறுதி ஆண்டில் எடுத்துக்கொண்ட சபதம் நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி இறுதியில் சொல்கிறேன்.

எனக்கு வாழ்த்துக் கூறிய என்னுடைய தலைமையாசிரியரிடம் நன்றி கூறியபோது அவர் கேட்டார், “ஆசை, நான் உனக்கு நல்ல ஆசிரியரா இருந்திருக்கேனா?” அந்தக் குரலில் ஒரு சிறு தவிப்பு தெரிந்தது. நான் கொஞ்சம் யோசித்தேன். முதலில், அவரைப் போன்ற கண்டிப்பும் அக்கறையும் கொண்ட ஒரு தலைமை ஆசிரியரின் அளவுகோலின்படி நான் ஒரு நல்ல மாணவனாக இருந்திருக்கிறேனா? வாழ்க்கையில் ஒரு சாதனை செய்த தன் மாணவனிடம் இவ்வளவு தவிப்புடன் கேட்பவர் நிச்சயம் நல்ல ஆசிரியராகத்தானே இருக்க முடியும்! மற்றவர்களுக்கெல்லாம் தங்கள் சாதனைகளுக்கு ஏதேதோ உயரங்கள் அடையாளமாக இருந்தாலும் ஒரு ஆசிரியர் தான் ஒரு ‘நல்ல ஆசிரியர்’ என்று அழைக்கப்படுவதைத்தானே தனது பெரும் சாதனையாகக் கருதுவார்!  

சேதுராமன் சாரிடம் பேசி முடித்ததும், தேசிய மேல்நிலைப் பள்ளிக்கு என்னுடைய கேப்டன் சைக்கிளை மாதாக்கோவில் தெருவிலிருந்து மிதித்துக்கொண்டு போவது போன்ற நினைவு எனக்கு ஏற்பட்டது. 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை, வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியான பதின்பருவத்தில் 7 ஆண்டுகளை ஆக்கிரமித்துக்கொண்ட இடம் தேசிய மேல்நிலைப் பள்ளி. பாரதி-பாரதிதாசன் அறிமுகம், சுஜாதா அறிமுகம், உயிர் நண்பன் அறிமுகம், நான் கவிஞனானது, கதை எழுதத் தொடங்கியது என்று நான் இன்று என்னவாகவெல்லாம் இருக்கிறேனோ அவற்றில் பலவற்றுக்குமான வித்துகள் விழுந்த இடம் அது.

சமீபத்தில், ஆன்லைன் கல்விச் செயலி ஒன்றின் விளம்பரத்தைப் பார்த்தேன், ‘உன்னை சந்தோஷப்படுத்துவது என் வேலையில்லை. உன்னை வெற்றி பெற வைப்பதுதான் என் வேலை’ என்று ஒரு ஆசிரியர் சொல்வதான விளம்பரம் அது!

கல்வியையே எப்படித் தலைகீழாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றியது. இங்கிருந்து, நான் பயின்ற மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியை நான் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில், அந்தப் பள்ளியில் 7 ஆண்டுகள் படித்து முடித்த நிலையில் நான் ஒரு தோல்வியுற்ற மாணவன். ஆம்! 12-ம் வகுப்பில் கணக்கில் தோல்வி. ஆனால், படிக்கும் காலகட்டத்தில் நான் அதிகம் சந்தோஷமாக இருந்தேன். தேர்வுத் தோல்வியும்கூட பெரிய வருத்தத்தைக் கொடுக்கவில்லை. படிப்பில் தோல்வியுற்ற மாணவர்களும் பெரிய ஆட்களாக வருவார்கள் என்றே நம்பினேன்.

தேர்வு முடிவைப் பற்றிக் கேட்டவர்களிடமெல்லாம் சிறிதும் கூச்சமில்லாமல் “ஃபெயில்” என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னேன். இரக்கமோ, அக்கறையோ, அறிவுரையோ நீண்டால் “கலைஞரே எஸ்.எஸ்.எல்.சியில ஃபெயிலுதான்” என்று பதில் சொன்னேன். என் அப்பாவோ தினமும் விடியற்காலையிலேயே எழுந்து “என் சின்னப் புள்ளைக்கு இப்புடி ஆச்சே!” என்று அழ ஆரம்பித்தார். வீட்டாரின் கோபம், அலட்சியம், தெரிந்தவர்களின் இளக்காரம் என்று எல்லாவற்றையும் எதிர்கொள்ள ஆரம்பித்தேன். ஒரு தோல்வி எனக்கு உலகத்தைப் பெரிதாகத் திறந்துகாட்டியது. அதற்கு என் நன்றி!

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்தது சின்ன கான்வென்ட்; அது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. ரொம்பவும் மகிழ்ச்சிகரமான பருவம் அது. அங்கு முடித்து, வீட்டிலிருந்து சில கி.மீ. தொலைவில் இருந்த தேசிய மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும்போது நான் பயந்தது என் மகிழ்ச்சிக்கு ஏதும் குறைவு ஏற்பட்டுவிடுமோ என்றுதான். பெரிய அளவில் என் சுதந்திரமும் மகிழ்ச்சியும் பறிபோய்விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  

நல்ல மதிப்பெண்ணை இலக்காகக் கொண்ட மாணவர்களுக்குப் பள்ளி வகுப்பறையே மையம். நான் மதிப்பெண்ணை ஒருபோதும் இலக்காகக் கொண்டதில்லை. எனது கனவுகள் வேறு, ஆனாலும் சுதந்திரமாக வானில் பறக்கும் பட்டத்தின் சிறு கட்டுப்பாட்டு நூலின் மறுமுனையாகப் பள்ளி இருந்து என்னைக் கண்காணித்துக்கொண்டது. பள்ளியின் சுவர்களைத் தாண்ட முடியவில்லை என்றாலும் வகுப்பறை என்னைத் திணித்துக்கொண்டுவிடாதபடி, பள்ளிக்குள்ளும், ஏன் வகுப்பறைக்குள்ளுமே ஒரு உலகத்தை என்னால் சிருஷ்டித்துக்கொள்ள முடிந்தது. கணிசமான ஆசிரியர்கள் அந்த சுதந்திரத்தைத் தந்தார்கள். கூடவே, அக்கறையையும் செலுத்தினார்கள். ஊடாகவே என்னுடைய சாகசங்களுக்கும் சின்ன இடம் இருந்தது. கட் அடிப்பது, பிட் அடிப்பது போன்றவை எல்லாம் பள்ளியின் ஒழுங்கு நோக்கில் தவறானவையாக இருந்தாலும், பெருந்தீங்கற்ற அந்த சாகசங்கள் எனக்குப் பள்ளி வாழ்க்கையின் பிரிக்க முடியாத நினைவுகள். ஒரு தேற்றத்தைப் படித்துவிட்டுச் செல்வது பெரிய விஷயம் இல்லை. ஆனால், செருப்பிலும் தொடையிலும் எழுதிக்கொண்டுபோய், பார்த்து எழுதியதெல்லாம் என்னை நானே பிதாகரஸாக உணர்ந்த தருணங்கள். திணிக்கப்பட்ட நற்செயல்களைவிட சுதந்திரமாகச் செய்த சிறுசிறு மீறல்கள் அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தன.

சிறுவயதிலிருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாதென்றாலும், பள்ளிப் பிரார்த்தனை நேரத்தில் எம்.எஸ். குரலில் ஒலிக்கும் ‘குறையொன்றுமில்லை’, ‘பஜ கோவிந்தம்’ போன்ற பாடல்களுக்கு நான் அப்போதே பெரும் ரசிகன். எம்.எஸ். அப்படித்தான் எனக்கு அறிமுகமானார். ஆசிரியர் சூரியநாராயணன், ‘மானச சஞ்சரரே’ பாடும்போது நாள் முழுக்கவும் பிரார்த்தனையாகவே இருந்துவிடக் கூடாதா என்று மனம் ஏங்கும். நாத்திகரையும் உருக்கும் குரல் அவருடையது. பல ஆசிரியர்களையும் பல காரணங்களுக்காக மறக்க முடியாது. நகைச்சுவை கலந்து பாடம் எடுக்கும் ஆசிரியர் சுப்பராயலு, ஆசிரியர் சீனிவாசன் போன்றோரின் பாடங்களில் நல்ல மதிப்பெண் எடுக்க முடிந்தது. மாணவரை சந்தோஷப்படுத்தாமல் அவரை வெற்றிபெற வைக்க முடியாது என்பதற்கு அவர்கள்தான் எடுத்துக்காட்டு.

சமீபத்தில் குறுநாவல் தொகுப்பு ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் தேசிய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவரான பாலாஜி பிரசன்னா ஒரு நல்ல குறுநாவல் எழுதியிருக்கிறார். அதில் பள்ளியைப் பற்றியும் சில குறிப்புகள் வரும். ஒரு இடத்தில் இப்படி எழுதியிருப்பார்: ‘பி.டி. வாத்தியார் தினம் ஒரு பத்து பேரையாவது வெயிலில் முட்டிப் போடவைத்துவிட்டு, கட்டி வந்த டிஃபனைச் சாப்பிட உட்காருவார். இரண்டு வகை சட்னி இருந்தாலும் முட்டிப்போடும் பத்துப் பேரைப் பார்த்தால்தான் இட்லி இறங்கும். பின் வெற்றிலை வாயோடு ஆளுக்கொரு பிரம்படி பட்டெக்ஸில் கொடுத்து வகுப்புக்குத் துரத்துவார்.’ படித்துக்கொண்டிருக்கும்போதே அது யாரென்று தெரிந்துவிட்டதால் குபீர் என்று சிரித்துவிட்டேன். இதுபோல பல குணாம்சங்களின் பிரதிபலிப்புகளாக அமைந்த ஆசிரியர்களை அங்கு சந்தித்திருக்கிறேன்.

கோபுலு கார்ட்டூன்கள், சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’, தி.ஜானகிராமனின் பாத்திரங்கள் போன்றவற்றைப் புத்தக வடிவில் சந்திக்கும் முன்பே பள்ளியில் ரத்தமும் சதையுமாக சந்திருக்கிறேன். தோலை உரித்துவிடும் கடுமையான ஆசிரியரும் உண்டு;  ஒருமுறைகூட மாணவர்களை அடிக்காத, தி.ஜானகிராமனின் ‘முள் முடி’ அனுகூலசாமி போன்ற ஆசிரியர்களும் உண்டு. ஆசிரியர்போல் அல்லாமல் நண்பர் போல் பழகியவர்களில் ஆங்கில ஆசிரியர் சண்முகம் முக்கியமானவர். ஒரு எழுத்தாளனாக மலர்வதற்கு ஆரம்பக் காலத்தில் ஆசிரியர் கருணாகரன் பெரும் ஊக்கம் தந்திருக்கிறார்!

எல்லாவற்றுக்கும் மேலாக, எங்கள் அனைவரையும் அரவணைத்துச் சென்ற தலைமை ஆசிரியர் சேதுராமனை மறக்க முடியாது. மிகவும் கண்டிப்பானவர் என்றாலும் அதே நேரத்தில் மிகவும் அக்கறையானவர். பள்ளிதான் அவருடைய முழு நேர வாழ்க்கை! ஒருமுறை, தலைமை ஆசிரியர் சேதுராமன் காட்டிய மேற்கோள் கவிதையை, நான் ஒரு கவிஞன் என்ற முறையில், என்னால் மறக்க முடியாது. தலைமை ஆசிரியர் அறையிலிருந்து ஒலிபெருக்கியில் பேசினால் எல்லாக் கட்டிடங்களின் எல்லா வகுப்புகளுக்கும் கேட்கும். அந்த ஒலிபெருக்கியில் பேசியபோது மாணவர்களின் மறைந்துகிடக்கும் திறமையைப் பற்றிப் பேசும்போது தாமஸ் கிரேயின் ‘Elegy Written in a Country Churchyard’ கவிதையிலிருந்து இந்தக் கவிதையை மேற்கோள் காட்டினார்:

            Full many a gem of purest ray serene,
                   The dark unfathom'd caves of ocean bear:
            Full many a flow'r is born to blush unseen,
                   And waste its sweetness on the desert air.

            (தூய ஒளி பொருந்திய ரத்தினங்கள் பற்பல
            ஆழங்காணாத கடல்களின் இருட் குகைகளில் அமைதியாக:
            கணக்கிலாத மலர்கள் பிறக்கின்றன யாரும் காணாமல்
            புன்னகைக்க,
            பாலைவனக் காற்றில் தம் இனிமை வீண்போக.)

பள்ளியில்தான் எத்தனை எத்தனை நட்புகள்! மரபெஞ்சில் ‘காட்டுக் குயிலு மனசுக்குள்ள’ பாடலின் தாளத்தை அச்சுப்பிசகாமல் கொண்டுவரும் பிரகாஷை நினைத்தால் அப்படியொரு வியப்பு ஏற்படும். எங்கள் இருவருக்குமான நட்பு, வெறுப்பும்-நேசமுமானது. இரண்டு குடும்பங்களின் சண்டை வரை போய்விட்டது. ஆனால், ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு செல்லும்போது இன்னின்னார் இன்னின்ன வகுப்புக்கு என்று பிரிப்பார்கள்; முதல் ஆண்டு சேர்ந்து படித்தவர்கள் அடுத்த ஆண்டும் சேர்ந்து படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. அன்று வகுப்பு பிரிப்பதற்கு முன்பு நானும் பிரகாஷும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதோம். வெவ்வேறு வகுப்புகளில் இருவரும் போடப்பட்டால் ‘யூரின் இண்டெர்வெல்’, ‘லஞ்ச் டைம்’ போன்ற நேரங்களில் தவறாமல் ஒரு இடத்தில் சந்தித்துக்கொள்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். இறுதியில் என்னையும் அவனையும் ஒரே வகுப்பில்தான் போட்டார்கள். நிம்மதி! ஆனால், 10-ம் வகுப்புக்குப் பிறகு வேறு வேறு வகுப்புகளுக்கு நாங்கள் சென்றுவிடவே தூரத்துச் சிரிப்பாக அந்த நட்பு மாறிவிட்டது. இப்போதும் மன்னார்குடிக்கு வரும்போது பிரகாஷ் எப்போதாவது எதிர்ப்பட்டால் நாங்கள் கட்டிப்புரண்டு சண்டைபோட்டதும், கட்டிப்பிடித்து அழுததும்தான் நினைவுக்கு வரும்!


தொடக்கப் பள்ளியிலேயே ‘சிறுவர் மலர்’, ‘அம்புலிமாமா’, ‘கோகுலம்’ படித்துவந்த நான், ஆறாம் வகுப்புக்கு வந்த வேகத்தில் க்ரைம் நாவல்களுக்கு வந்துவிட்டேன். அந்த க்ரைம் நாவல்களைக் குப்பை நூல்கள் என்று ஒருவர் ஒதுக்கித் தள்ளலாம். ஆனால், பல்வேறு விஷயங்களை அவை எனக்கு அந்த வயதில், எனக்குக் குறுகுறுப்பு ஏற்படும்படி, கற்றுக்கொடுத்தன. என் சக வகுப்புத் தோழர்களுக்கு ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களின் சுருக்கத்தைச் சொல்வேன். நான் சொன்னவற்றுள் அந்த வயதுக்கு மீறிய விஷயங்களை என் நண்பர்கள் நம்பவே இல்லை. ஆறாவது படிக்கும்போது என் முதல் கவிதையை நான் எழுதினேன். அது தொலைந்துபோய்விட்டது என்றாலும், அது போட்ட விதை தற்போது நான்கு கவிதைத் தொகுப்புகளாக விரிந்து நிற்கிறது.

இப்படி ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்ப என் வாசிப்பின் அடுக்குகளும் ஏறிக்கொண்டேபோயின. பாடப் படிப்பு என்பது எனக்கு இரண்டாம்பட்சம்தான். என் உலகம் கதைகள், புத்தகம், சினிமாதான். அந்த வயதிலேயே முடிவெடுத்துவிட்டேன், நாம் ஒரு ஒரு திரைப்பட இயக்குநர்! பின்னாளில் எழுத்தாளராகவும் அகராதியியலராகவும் பத்திரிகையாளராகவும் ஆனாலும் அன்று அந்தக் கனவு மிகத் தீவிரமானதாக இருந்தது. என் வகுப்புத் தோழர்களும் அதைத் தீவிரமாக நம்பினார்கள். ஒரே கனவைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமா என்ன, அதற்கும் பரிணாம மாற்றம் இருக்கிறதில்லை அல்லவா!

எட்டாவது படிக்கும்போது என் அண்ணன் எனக்கு அன்பளிப்பாகத் தந்த ‘பாரதியார் கவிதைகள்’ நூல் என்னைப் பாரதி பித்தனாக மாற்றியது. கூடவே, கொஞ்சம்கொஞ்சமாகக் காசு சேர்த்து ‘பாரதிதாசன் கவிதைகள்’ நூலை அழகப்பா தாளகத்தில் வாங்கினேன். அதன் விலை 17 ரூபாய். அதுதான் நான் காசு கொடுத்து வாங்கிய முதல் புத்தகம். இரண்டு புத்தகங்களின் தாக்கத்தாலும் நிறையக் கவிதைகள் எழுதினேன். எட்டாம் வகுப்பில் பள்ளி அளவிலான தேர்வில் பாடப் புத்தகத்திலிருந்து ஒரு வெண்பாவை எடுத்துக்கொண்டு ‘நேர்-நேர்-தேமா’ பிரித்து எழுதச் சொன்னபோது சொந்தமாக அப்போதே ஒரு வெண்பா எழுதி ‘நேர்-நேர்-தேமா’ பிரித்து எழுதும் அளவுக்கு மரபுக் கவிதையில் தேர்ச்சி பெற்றிருந்தேன். பள்ளியின் பிரதானக் கட்டிடத்துக்கு உள்ளே சதுர வடிவில் முற்றம்போல் இருந்த இடத்தில் இருந்த செடிகளின் பூக்கள் எனக்குக் கவிதைகளை வாரி வழங்கின.

அது மட்டுமல்லாமல், பள்ளி என்பது சித்தாந்தரீதியான களமாகவும் எனக்கு அமைந்தது. ஒன்பதாம் வகுப்பில் நண்பன் ஹரிஹரனும் நானும் பெரியார், தமிழ் ஆகிய விஷயங்களில் மோதிக்கொண்டோம். திடீரென்று பேச்சை நிறுத்திக்கொள்ளும் அளவுக்குப் போன விவாதம் அது. அதன் பின் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்க்குட்டில் (Orkut) அவன் என்னைக் கண்டுபிடிக்கவே, நட்பை மீட்டுக்கொண்டோம். அதேபோல், பிரிந்த இன்னொரு நண்பன் கலைவாணன். அவன் நன்றாகப் படிக்கும் மாணவன். நானும் கார்த்திகேயனும் வகுப்பில் கடைசி வருபவர்கள். ஆனால், எப்போதும் இலக்கியம், சினிமா என்று தனியுலகத்தில் இருந்த எங்களால் கவரப்பட்ட கலைவாணன் எங்களுடன் நட்பானான். அப்படியும் பள்ளி வாழ்க்கையின் இறுதியில் ஒரு பிணக்கினால் நாங்கள் பிரிந்துவிட்டோம். “நம் சந்திப்பை ரஃபேல், மைக்கேலேஞ்சலோ லியனார்தோ டா வின்ஸி ஆகிய மூவரின் சந்திப்புபோல முன்பு கருதினேன்” என்று அவன் சொல்லிவிட்டுச் சென்றதை நினைத்தால், இன்றும் மிரட்சியாகத்தான் இருக்கிறது. இந்த ஃபேஸ்புக் யுகத்திலும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எங்கள் பள்ளிக்கும் காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு. ஊருக்கு அவர் வந்தால், பள்ளி திருவிழாக் கோலம் பூணும். எல்லா மாணவர்களுக்கும் திருநீறு வழங்கப்பட்டபோது, நான் வாங்கிக்கொள்ள மறுத்ததும், அதற்காக என்னை யாரும் வேறுபாடாகப் பார்க்காததும் இன்றைக்கு குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கின்றன!

நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு போட்டி குறித்து அறிவிக்கப்பட்டது. நீடாமங்கலம் கலை இலக்கியக் கழகத்தால் நடத்தப்பட்ட போட்டி அது. கவிதை, சிறுகதை, ஓவியம், நடனம் போன்றவற்றுக்காக நடத்தப்படும் அந்தப் போட்டி ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட அளவில் முக்கியமான ஒன்றாகும். நான் கவிதைக்குப் பெயர் கொடுத்திருந்தேன். சும்மா போய்தான் கலந்துகொண்டேன்.  மன்னார்குடி அளவில் என்னுடைய கவிதை தேர்வானது. அடுத்து, அதே கவிதை மூன்று மாவட்ட அளவிலும் முதலாம் இடத்துக்குத் தேர்வானது. நீடாமங்கலத்தில் பரிசு வழங்கும் விழாவுக்கு ஆசிரியர் கருணாகரன் அழைத்துச்சென்றார். அங்கே போட்டியில் வென்றதற்காக ‘கண்ணதாசன் கவிதைகள்’ நூல் பரிசாக வந்தடைந்தது. பாரதியார், பாரதிதாசன் வரிசையில் எனக்குப் பிடித்த அடுத்த கவிஞருடைய நூல். வாழ்க்கையில் என் எழுத்துக்காக நான் வென்ற முதல் பரிசு.

அடுத்து, பதினோராம் வகுப்பிலும் அந்தப் போட்டி குறித்த அறிவிப்பு வந்தது. வகுப்பில் பெயர் கொடுக்க நான் கைதூக்குவதற்கு முன்பே இன்னொரு மாணவன் கைதூக்கினான். எனக்கு அதிர்ச்சி, ‘யாரடா, நம்முடைய பேட்டையில் இன்னொரு ஆள்!’ அமைதியாகக் காட்சி அளித்த அந்த மாணவன், அநாயசமாகப் போட்டியில் என்னை அடித்துத் தூக்கி வீசியதோடு, அந்த ஆண்டின் போட்டியில் வெற்றியாளராகவும் ஆனான். போதாக்குறைக்கு, அறிவியல் ஆசிரியர் வெங்கட்ராஜுலு போன்றவர்கள் வகுப்பறையிலேயே அவனை அவ்வப்போது, கவிதை சொல்லச் சொல்லி, ‘அவள் முகத்தில் இல்லாத ஈர்ப்புவிசையையா / நியூட்டன் புவியிடம் கண்டுபிடித்துவிட்டான்?’ என்று அவன் வகுப்பில் வெடிக்கும் கைதட்டல்களை அள்ளிக்கொண்டிருந்தான். அந்த இளங்.கார்த்திகேயன் பிற்பாடு என் உயிர் நண்பனாகவும் ஆகி, அந்த நட்பு இன்றுவரை அப்படியே நீடிக்கவும்செய்கிறது.

சரி, கவிதைக்கான இடம் போய்விட்டது; அடுத்து எந்த இடத்தைக் குறிவைக்கலாம் என்று பார்த்திருந்தபோதுதான் அடுத்த ஆண்டுக்கான போட்டி அறிவிப்பு வந்தது. கார்த்திகேயன் கவிதைக்கும், நான் சிறுகதைக்குமாகப் பெயர் கொடுத்தோம். சொல்லிவைத்தாற்போல மன்னார்குடி அளவில் வென்றதோடு, மூன்று மாவட்ட அளவிலும் வென்றோம். பரிசுகள் அதிகம் வென்ற பள்ளி என்ற கேடயத்தையும் பள்ளிக்குப் பெற்றுத்தந்தோம்.

இம்முறை எனக்குக் கிடைத்த பரிசு என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நான் நினைத்துப்பார்க்கவில்லை. ‘சுந்தர ராமசாமி சிறுகதைகள்’ நூல்தான் அது. அடுத்த சில ஆண்டுகளில் சுந்தர ராமசாமியின் எழுத்துகள் என் சிந்தனையிலும் எழுத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இதோ எனது சமீபத்திய நூலை அவருக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறேன். அந்தப் பரிசில் இன்னொரு ஆச்சரியம், அந்த நூலை வெளியிட்டது ‘க்ரியா’ பதிப்பகம். அந்தப் பதிப்பகத்தில்தான் பின்னாளில் 10 ஆண்டுகள் பணியாற்றி, அது வெளியிட்ட ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியர் பொறுப்பு வகித்தேன். என் ஐந்து நூல்களை வெளியிட்டதும் அந்தப் பதிப்பகம்தான். எல்லாவற்றுக்கும் மேல் என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பேறுகளில் ஒன்றானது ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணனுடனான நட்பு.

பள்ளியே பாராட்டித்தள்ளியது இந்த வெற்றியை. வகுப்பில் எங்கள் இருவரையும் எழுந்து நிற்கச் சொல்லி, எல்லா மாணவர்களையும் கைதட்டச் சொல்லி, வெகுவாகப் பாராட்டினார் ஆசிரியர். ஆனால், இந்தப் பெருமைகள் எல்லாம் நிரந்தரமானவை இல்லை. அரையாண்டுத் தேர்வில் கணக்கில் நானும் கார்த்திகேயனும் தோல்வியுறவே அதே வகுப்பில் எங்களை எழுந்து நிற்கச் சொன்ன ஆசிரியர் இப்படியும் சொன்னார், ‘இது சிறுகதை, இது பெருங்கதை. இரண்டும் உருப்பட்டாற்போல்தான்!’

அன்று நானும் கார்த்தியும் ஒரு சபதம் எடுத்துக்கொண்டோம்: ‘பள்ளி வாழ்க்கை முடிந்த பிறகு எல்லோரும் வியக்கும்படி பெரிய ஆளாகித்தான் இந்தப் பள்ளிக்கு மறுபடியும் வர வேண்டும்!’

பள்ளி வாழ்க்கைக்குப் பிறகு மறுபடியும் அங்கே செல்லவில்லை. எனினும், ஒருமுறை என் கட்டுரையைப் படித்துவிட்டு, அதில் மன்னார்குடி என்ற குறிப்பைப் பார்த்துவிட்டு சென்னை ‘இந்து தமிழ்’ பத்திரிகை அலுவலகத்துக்கே என்னைப் பார்க்க வந்துவிட்டார் ஆசிரியர் கௌதமன். யாரோ ஓர் எழுத்தாளனாகக் கருதி என் எழுத்துகளை அதுவரை வாசித்து, நேசித்துவந்த அவருக்கு, நான் அவருடைய மாணவன் என்பதை அறிந்துகொண்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதே மகிழ்ச்சியின் வெளிப்பாட்டைத்தான் தலைமையாசிரியர் சேதுராமன் பேசியபோதும் உணர்ந்தேன். பள்ளிக்கு நான் திரும்பச் செல்லாவிட்டாலும், மறுபடியும் தேசியப் பள்ளிக்குள் நுழைவதுபோலும் பள்ளியில் எல்லோரும் பெருமையுடன் என்னை வரவேற்பதுபோலவும் ஒரு உணர்வு ஓடி மறைந்த கணங்களில் திளைத்தேன்.


ஒரு பள்ளிக்கூடமும், ஆசிரியர்களும் நம்முள் எத்தகு மாற்றங்களையெல்லாம் உண்டாக்கியிருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக வரையறுத்திடுவது கடினம். ஆனால், ஒட்டுமொத்தமாக அங்கே என்ன நிகழ்ந்தது என்பதை உணர்வின் வழிச் சொல்ல முடியும். நான் அங்குதான், எங்கள் தேசிய மேல்நிலைப் பள்ளியில்தான் மலர்ந்தேன்!


4 comments:

  1. அருமை தோழர். நானும் தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவன். 86-88 +2 பேட்ச் 💕

    ReplyDelete
  2. 1984 - 1990 வரை மன்னார்குடி புனித தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த பழைய நினைவுகள் கிளர்தெழுகின்றன. நன்றி ஆசை.

    ReplyDelete