சபரிநாதன்
மனிதன் ஒழுங்கமைவைத் தேடுகிற உயிரினம். வடிவமைப்பைக் கணிக்கும் உள்ளுணர்வு அவனுக்கு இயல்பிலேயே வாய்த்துள்ளது. மழைக்காலம் முடிந்து குளிர்காலம். பிறகு கோடையும் கழிந்தால் மீண்டும் திரும்புகிற மழைக்காலம் என பருவங்கள் ஒரு நிரந்தரச் சுழற்சியை அறிவிக்கும் அதே நேரம் ஓர் உத்தரவாதத்தையும் அவனுக்கு வழங்குகின்றன. வசந்தம் மீள மரங்கள் பூச்சூடி நிற்கையில் நமக்குள் எழுகிற நம்பிக்கை, பரிணாமத்தின் ஒரு கட்டத்தில் அழகியல் உணர்ச்சியாக உருமாறி இருக்கக்கூடும். பஞ்ச காலத்திலும் கொள்ளை நோய் நேரத்திலும் நம்மில் தோன்றும் ‘மழை வரும்' என்ற நிச்சயமும் ‘இயல்புநிலை திரும்பும்' என்ற எதிர்பார்ப்பும் மிக ஆழமான இடத்தில் வேர்பிடித்துள்ளவை. அது உயிரியல்பாகவே நமக்குள் ஊறிப்போயுள்ளது. காரணம், வாழ்வின் நடனமான இச்சுழற்சியானது பல்லாயிரம் ஆண்டுகளாக மனித ஞாபகத்தில் ஓடிப் பதிந்துள்ளதுதான். இன்னும் நீட்டித்துச்சொல்வதென்றால், தொன்மங்களும் புராணங்களும் யுகங்களையும் பிறவிகளையுமேகூடக் காலச்சக்கரத்தில் மீளமீள வந்துசெல்பவை என ஆறுதல் அளிக்கின்றன. தவிர, கடும்
குழப்பத்தை அறிவதற்கும் நமக்கு வடிவுருக்கள் தேவையாகின்றன. இந்த ஒழுங்கமைவின் தேட்டத்திலிருந்து பிறந்தவற்றுள் ஒன்றே தாளம் என்று நினைக்கிறேன். சொல்லப்போனால், எல்லா அறிதலுமே ஒரு வகையில் லயத்தை அறிவதுதான். தாளம் ஒரு காலக்கணக்கு எனில், நாம் உணரும் காலம் கூட தாளக்கணக்கு எனலாம்.
இசை, நடனம், கவிதை என எல்லாக் கலைகளும் தாளத்தின் இந்த உத்தரவாதத்தை, உத்வேகத்தை, சீர்மையின் அர்த்தத்தை, ஒழுங்கின் நிறைவை ரசிகர்களுக்கு அளிக்கின்றன. மிகச் சிறந்த லயம் வாசகனை, கண நேரமெனினும், உயர் பிரக்ஞைக்கு
அழைத்துச்செல்ல வாய்ப்புடையது என்கிறார் அரவிந்தர். இந்திய விமர்சன மரபில் சப்த அலங்காரம், அர்த்த அலங்காரம் என்ற இரண்டு வகைகள் சொல்லப்படுகின்றன. மத்தியகால அரசவைக் கவிதைகள் அளவுக்கதிகமாக சப்த அலங்காரங்களை அணிந்து நடக்க முடியாதபடி மூச்சுத்திணறத் தொடங்கியதைக் கண்ட நவீனத்துவம் அணிகலன்களைத் துறந்த நிர்வாணக் கவித்துவத்தை நோக்கி நகர்ந்தது. அப்படி திட்டமான யாப்பு வடிவங்களைத் துறந்து முன்னேறியபோது, கவிதை இழப்பது என்ன என்பது குறித்த பிரக்ஞை பல நவீன கவிஞர்களுக்கு இருந்துள்ளதைப் பார்க்கிறோம். அதைப் பேச்சுமொழியின் ஓசையொழுங்கைக் கொண்டும் லிரிக் கவிதைகள் வழியாகவும் அவர்கள் கடந்துள்ளனர். ஆங்கிலத்தில் ராபர்ட் ஃப்ராஸ்ட் மாதிரி, தமிழில் பிரமிள், ஞானக்கூத்தன் போன்று, ஓசை வடிவங்களைச் சற்று நெகிழ்த்திப் பயன்படுத்துவதைத் தொடர்ந்தோரும் இருந்தனர். இதைத் தாண்டி தற்சமயம் புத்துருவியல்வாதக் கவிதைகளும் (Neoformalist poems) மேலை மொழிகளில் பரீட்சார்த்தமாக எழுதப்படுகின்றன. இப்படியாக இசைமையின் போதாமை உணரப்படும் இப்போதைய தமிழ்ச் சூழலில் ஆசையின் இத்தொகுப்பு சமகாலக் கவிதைகளின் செல்நெறியிலிருந்து பெரிதும் விலகி நிற்கிறது என்பதால் தனது தனித்துவத்தைக் கண்கூடாக முன்வைக்கிறது.
இருமுனை முடிவின்மையின்
நடுவெளி நர்த்தனம் நீ
தொடுஊழி தரையிறக்கும்
தத்தளிப்பு நீ
கடல்புரியும்
தாண்டவத்தின் தெறிப்பும் நீ
எரிஜோதி இடைபறக்கும்
கொடும்பறவை நீ
அனலுமிழும் கனல் மயக்கும்
பேய்ச்சிரிப்பு நீ
நாத்திகனின் கனவில் வரும்
நடனக்காளி நீ
என்ற வரிகளை எதிர்கொள்கையில் ஒரு புழுத்துளை வழியாக நாம் முற்றிலும் வேறொரு காலத்துக்குள் விழுந்துவிட்டதைப் போல உணர்கிறோம். இந்த உச்சாடன கதி அகவெளியின் சூட்டில் உருக்கொண்டு, இறுதியில் மொழியுருகி வழியும், அர்த்தங்களை அலட்சியப்படுத்திய ஒரு பித்தரங்கத்துக்குள் நுழைந்துவிடுகிறது. இந்த வரிகளுக்கு என்ன பொருள் என்று வாசகர் கோருகையில் அவர் மொழிக்குள்ளேயே தொலைய நேரிடும். ஏனெனில், அங்கே கவிஞனேகூட ஓசையால் இழுத்துச் செல்லப்படும் குருடனாகிவிடுகிறான், யாருமின்றி லயத்தின் மேல் பயணிக்கும் படகுபோல. இப்போது அவன் பார்வை நடைபாதையில் இல்லை; அது உள்ளேயோ வெளியேயோ வேறெங்கோ கற்பனாதீதத்தில் நிலைகுத்தி நிற்கிறது. இதற்கு அழுத்தம் சேர்க்கும் பொருட்டு இக்கவிதைகளின் திரைச்சீலையாக அன்றாடக் காட்சிகள் அன்றி அண்டம், கருந்துளை, காலவெளிக் கம்பளம், பாழ்வெளி எனப் பிரபஞ்சத்தின் இருண்ட பெரும்புறம் விரிக்கப்பட்டுள்ளது. காளியானவள் காலசொரூபிதானே.
கண்ணைத் திறந்துகொண்டு
காணும் காளியல்ல நீ
கண்ணை மூடினால்
விழிக்கோளத்துக்கும்
இமையடைப்புக்கும்
இடையே
இருள்தாண்டவம் ஆடுபவள் நீ
இருட்காளி
...
கண்மூடி நான் காணும்
இருளெல்லாம்
கண் திறந்தே காண வேண்டும்
வழிசெய்
அந்தகத்தை வேண்டிப் பெறும் கவிஞனைக் காண்கிற அதேநேரம் இதில் ஓர் உபாசகனையும் காண்கிறோம். இந்த உபாசகன் அன்னையை யாசிப்பவன் மட்டுமல்ல; அவளைச் சீண்டுபவனும் சபிப்பவனாகவும் இருக்கிறான். ஒரு மகனின் முழுவுரிமையையும் எடுத்துக்கொள்கிற உபாசகன். இத்தகைய தோத்திரத் தன்மையும் வரம்பற்ற இறைஞ்சல் தொனியும் கலந்து காலப் பொருத்தப்பாட்டுக்கு ஒவ்வாத விசித்திரப் படைப்புகளாக இவற்றை ஆக்குவதைக் கவிஞரே ஊகித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர் எதிர்பார்ப்பும் அதுதான்போல.
இவை கட்டின்மையும் ஒருவிதப் பீடிப்பும் கொண்ட கவிதைகள். இத்தகைய பித்துநிலை சொல்வழிப்படுகையில் மனவக்கிரங்களாகவும் வெளிப்படத் தயங்குவதில்லை. சில இடங்களில் இவை பிரக்ஞை வரம்பிடாத தன்னரற்றலாகவும், விளைவு கருதாத பைத்திய உளறலாகவும் படுகிறது. பல சமயம் உளவியல் கூறாய்வு செய்வதற்கான ஆர்வத்தை அடக்கிக்கொண்டேன் என்றே கூற வேண்டும். உதாரணத்துக்கு இந்நூலில் வருகிற, மேடையில் ஆடும் காளியைக் கீழமர்ந்திருந்து காணும் தனயன் என்ற பிம்பம் பல்வேறு அடக்கப்பட்ட பிராயத்து நினைவுகளைக் கொண்டுவருகிறது.
ஆடும் அன்னையே
நீ கால்தூக்கக்
குறிகண்டு
கண்மூடாப்
பிள்ளை நான்
...
எனைப் பாதியிலே
கொண்டுவந்து
பாழ்வெளியில்
தள்ளிவிட்டாய்
முட்டித்திறப்பேனோ நான்
நீ மூடிவிட்ட பெருங்கதவை
இந்நூலில் அரங்கேறும் பிரதான நாடகம் காளிக்கும் கவிஞனுக்கும் இடையிலானது. இந்த நாடகம் காளிதாஸன் தொட்டு பாரதி உட்பட பல கவிஞர்களின் வாழ்வில் நிகழ்ந்த ஒன்று. ஆசையும் தன் கவிதைக்குள் அதை நிகழ்த்திப் பார்க்கிறார். அரைச் சந்தத்தில் தோத்திர பாணியில் எழுதப்பட்ட கணிசமான கவிதைகளில் பாரதி பாடல்களின் எதிரொலிப்பு கேட்கிறது (அன்னை அன்னை, பேயவள்காண் எங்கள் அன்னை), ஆங்காங்கே கண்ணதாசனின் தாக்கமும் தென்படுகிறது (பார் சிவனே).
பக்தி இலக்கியங்கள் சிவன், விஷ்ணு என்ற ஆண் பெருந்தெய்வங்களை ஒட்டி எழுதப்பட்டவை. சாக்த மரபிலும் இத்தகைய பாடல்கள் இருப்பினும், தாந்திரீக மார்க்கத்தில் மைய இடம்பெற்றிருந்த காளி எனும் பெண் தெய்வம் மீதான பாடல்கள் வங்காளத்தில் 18ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ‘சாக்த பாதவளி' என்ற இவ்வகைமையில் தாந்திரீகக் கூறுகள் கூர் நீக்கப்பட்டு மெல்லியல் படைத்துப் பொதுவெளிக்குள் நுழைந்தன என்கின்றனர். இதில் காளி பல்வேறு மனிதாய உணர்வுகளுக்கும் உறவு நிலைகளுக்கும் ஆளாகிறாள். பெரும்பாலும் அன்னையாக, சிலபோது காதலியாக, போற்றப்பட்டு, வணங்கப்பட்டு, சீண்டப்பட்டு, சில நேரம் மிரட்டவும் படுகிறாள். இத்தகைய தன்மையை ஒத்த கவிதைகளை இத்தொகுதியில் பார்க்கலாம்.
தெண்டத்துக்குத்
தீ வளர்த்தாய்
தெருத்தெருவாய்
தேரிழுத்தாய்
உண்டசோறு
செரிப்பதற்கு எமை
உருட்டிவிளை யாடுகின்றாய்
கண்டகருமாந்திரத்தையும்
காலமென்று கூட்டிவர
மண்டைபெருத் தாடுதடி
மதிமயங்கச் செய்யுதடி-உன்
அண்டப்புளுகு நாங்கள்
அவசரத்துக்குப்
பெத்துப்போட்டாய்
இதில் மகிமைக்கும் போற்றுதலுக்கும் ஒவ்வாத அப்பட்டமான அவமதிப்பு தொனி அல்லது மரியாதையின்மை உள்ளதைக் காணலாம். இது ஏறத்தாழ இத்தொகுப்பு முழுக்க ஒலிக்கிறது. அதே நேரம் சைவ மரபில் முக்கியப் படிமமான கூத்து, முன்னொரு காலம் ஐயனின் நடனத்தைக் காண விரும்பிய மூதாட்டியின் பெருவிருப்பம், ஒற்றை முலை, காளியவள் களிநடனம் என தமிழ் இலக்கியப் பரப்பில் கண்பட்ட சில படிமங்களைத் தவிர, தனிப்பட்ட தாந்திரீகத்தின் குறியீடுகளோ படிமங்களோ தாக்கமோ இவற்றில் காணப்படுவதில்லை. பதிலாக, தடைக்கட்டுகள் நிலவும் சமூக சரிநிலைகளையெல்லாம் மீறி இங்கே அன்னை தேவியாகிறாள்; தேவி அன்னையாகிறாள். முலை, முலைப்பால், யோனிவாசல் என அன்னையோடு தொடர்புடைய யாவும் தேவியோடும் தொடர்புடையவை என்பதால் இம்மயக்கநிலைப் பிராந்தியத்தை இக்கவிதைகள் பயன்படுத்துகின்றன. பக்தியைக் காமத்தின் மொழியிலும் காமத்தை பக்தி வழியாகவும் சொல்லிப் பார்த்த பாரம்பரியம் உண்டுதானே நமக்கு. அர்த்தமாக்கல் மட்டுமல்ல, புனிதமாக்கலும் கலையை வாகனமாகக் கொண்டதுதான்போல.
இக்கவிதைகளின் எரிபொருளாக உள்ளது காமம். வழக்கமாகக் காமம் சார்ந்து எழுதப்படும், இன்பப் பரவசத்தையும் காதலின் கிறக்கத்தையும் வெளிப்படுத்தும் மென்மையான கவிதைகள் போலன்றி இவற்றில் மூர்க்கமும் கரைதல் விருப்பமும் நிரம்பியுள்ளன. நீர்ச்சுழலில் விழ விரும்பி நீந்தும் ஒருவரைப் போலத் தெரிகிறார் கவிதைசொல்லி. உடலே குறியாக விறைப்பதாகவும் இப்பேரண்டத்தைக் காளியின் உயவுநீர் விளையாட்டாகவும் காணும் கவிஞர்,
குறிபிடித்துக் கூட்டிச்செல்லடி
என்னை
உன் குறியாளும்
பெருமேடைக்கு
என்று வேண்டுகிறார். இக்கவிதைகளில் ஒரு ‘நானும்' ஒரு ‘நீ'யும் வசிக்கின்றன. அவை சிலநேரம் கவியாகவும் காளியாகவும், சிலநேரம் சேயாகவும் தாயாகவும், சிலபோது காதலன் காதலி யாகவும், கணவன் மனைவியாகவும் விளங்குகின்றன. ஆனால், எப்போதும் அது ஓர் ஆணும் பெண்ணுமாகவுமே அமைகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால், பெண்ணுக்கு இங்கு ஒரு நிலையான பாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அவள் பேரன்னையாகவும் வரமளிக்கும் பேய்க்காளியாகவும் உறைந்திருக்கிறாள். ஆணே கிடந்து அலைக்கழிபவனாகவும் தஞ்சம் கேட்பவனாகவும் உழல்கிறான். எனவே, இக்கவிதைகள் பெரும்பாலும் தனது ஆண்தன்மையை பங்கமின்றி அப்பட்டமாக எடுத்துரைப்பவையாகவும் உள்ளன எனச் சொல்லலாம். அதே நேரம் ஆசாரமான ஒரு வாசகருக்கு இத்தொகுப்பு மர்ம ஸ்தானங்களின் மணம் வீசும் வஸ்துவாகத் தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், இவ்வரிகளையும் இவற்றை எழுதிய மனக்கொந்தளிப்பையும் இவற்றுள் புதைந்துள்ள மனரகசியங்களையுமே நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். ஏனெனில், இங்கு உடல் மட்டும் இருக்கிறது. உணர்ச்சி தாளமாகி அதுவே மனமாகிறது. மனம், வெறுமனே உடலின் மொழி பாய்ந்து கொப்பளிக்கும் செயலாகிறது.
அதேநேரம் இந்தப் பாலியல் சுட்டல்களும் காமத் தணலும் சுகிப்பின் பரவசத்தைப் பேசுவதைவிட நிலைகுலைவையும் உள்ளொடுங்குதலுக்கான விருப்பத்தையும் பேசுவதாகவே படுகிறது. வெப்பமிக்க ஆங்காரம் ஒலிப்பினும் இவை அடிப் படையில் இருத்தலியல் பதைப்பின் விசித்திர வெளிப்பாடுகள்தானோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. ஈரோஸ் இயங்குவதுபோல தானடோஸும் இயங்குகிறது. இனம்புரியாத விருப்புறுதியும், இல்லாதொழிவதற்கான ரகசிய ஆசையும் சேர்ந்தே வினைபுரிகின்றன. யோனி வழியே மீண்டும் திரும்பிச்செல்லும் ஆசையைப் பல இடங்களில் போலவே இக்கவிதையிலும் காணலாம்:
சூனியம் பிளந்தவளே
அதைச் சுத்தியலால் அடித்தவளே
சுண்டி இழுத்தவளே
எடுத்த இடத்தில்
வைத்துவிடடி
என்னை
தாந்திரீக மரபிலிருந்தே மனித உடலை அண்டத்தின் நுண்வடிவ மாதிரியாகக் காணும் போக்கு தொடங்குகிறது. முன்பு வைதீக, அவைதீக மரபுகளின் சந்நியாச வலியுறுத்தலுக்கும் தேக ஒறுப்புக்கும் மாறாக தாந்திரீகத்தில் உடலும் உறவும் மையமாக இடம்பெறுகின்றன. அத்வைத ஒருமைக்கும் சூன்யத்துக்கும் பதிலாய் இருமையும் துய்ப்பும் முன்வைக்கப்படுகின்றன. பற்றிலிருந்து விடுதலை எனும் பெரும் பாதையில், பற்றின் வழி விடுதலை என்பதாய் நிகழ்த்தப்பட்ட இவ்விடையீடு உலகியலின் சார்பாகச் சமநிலையைப் பேண ஒரு சாத்தியத்தை வழங்கிற்று எனலாம்.
சமகாலத்திய நவீன மனம் கொண்ட வாசகருக்கு இக் கவிதைகள் எந்த அளவுக்குப் பொருத்தப்பாடு கொண்டிருக்கும் என்பது பெரிய கேள்வி. கட்டற்ற தன்மையானது வடிவ மைதியை மட்டுமின்றி சில கவிதைகளில் வெளிப்பாட்டையுமே சிதைத்துள்ளதாகப் படுகிறது. மேலும், ஓசையின் உத்வேகத்தை நம்பி எழுதப்படும் கவிதைகளுக்கு நேரும் அசம்பாவிதங்கள் பலவும் இங்கு நிகழ்ந்துள்ளன. லயமும் கவித்துவ உத்வேகமும் கலந்து அபாரமாகத் தொனிக்கும் கவிதைகளின் அருகிலேயே சிலது வெடிக்காமலும் சிலது வெறும் வெடிச் சத்தமாகவும் முடிந் துள்ளன.
நிலையற்ற பீடிப்பும், சந்தக் கட்டும், துதித் தன்மையும், தாந்திரீக சாயலும், காமக் கடுப்பும், அகண்டகார பின்புலமும் கூடி நினைவுகூர இயலாத ஒன்றை ஞாபகப்படுத்தும் விநோத மான கலவையாகக் கூடிவந்திருக்கிறது இக்கவிதைத் தொகுதி. ஆசையின் முந்தைய தொகுதியைப் போலவே இதுவும் வாசிப்பனுபவத்தில் ஒரு தனித்துவமான நூலாக விரியும் என எண்ணுகிறேன்.
(‘அண்டங்காளி’ கவிதைத் தொகுப்புக்கு சபரிநாதன் எழுதிய மதிப்புரை)
அண்டங்காளி
ஆசை
விலை: ரூ.100
புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070
அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEb