Tuesday, April 26, 2016

புத்தகம் வாழும்


ஆசை
(உலக புத்தக தினத்தை முன்னிட்டு 2014-ல் ‘தி இந்து’ நாளிதழில் வெளியான கட்டுரையை இந்த ஆண்டு புத்தக தினத்தை முன்னிட்டு மறுபடியும் பதிவிடுகிறேன்.)  

ஃபாரென்ஹீட் 451. காகிதம் தானாகவே எரிய ஆரம்பிக்கத் தேவைப்படும் தோராயமான வெப்பநிலை. புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர் ரே ப்ராட்பரி தன்னுடைய நாவலுக்கு வைத்த தலைப்பும் இதுதான். 'புத்தகங்கள் தடைசெய்யப்பட்ட எதிர்காலத்தில்' நடப்பதாக எழுதப்பட்ட அந்த நாவலின் நாயகன் தீயணைப்பு வீரன். யார்யாரெல்லாம் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து அவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் புத்தகங்களை எரிக்கும் பணியில் இருப்பவன். ஒரு நாள் அவனுடைய புத்தக எரிப்புக் குழு ஒரு மூதாட்டியின் ரகசிய நூலகத்தை எரிக்கச் செல்கிறது. புத்தகங்களை எரிப்பதை அனுமதிக்காத அந்த மூதாட்டி தன்னைத் தானே எரித்துக்கொண்டு இறந்துபோகிறார். போயும்போயும் புத்தகங்களுக்காகத் தங்கள் உயிரையும் மாய்த்துக்கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்பது நாவலின் நாயகனுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அவன் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போகிறது.

சற்று ஆழமாகப் பார்த்தோம் என்றால் எதிர்காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதை உண்மையில் கடந்தகால சம்பவங்களின் பிரதிபலிப்பே என்பது தெரியவரும். வரலாறு நெடுகிலும் வெவ்வேறு நாடுகளில் புத்தகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன; நூலகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன; புத்தகத்தை எழுதியவர்கள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள்; புத்தகத்தை எரித்தவர்கள் எரிக்கப்பட்டிருகிறார்கள். எரிக்கப்படவில்லையென்றாலும் ஏதாவது ஒரு வகையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாம் வாழும் காலத்திலேயே சல்மான் ருஷ்தி, தஸ்லிமா நஸ்ரின் போன்ற எழுத்தாளர்களுக்கு மத அடிப்படைவாதிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாடுவிட்டு நாடு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். புத்தகம் என்ன அவ்வளவு பயங்கரமான பொருளா? ஆம், பயங்கரமான பொருள்தான்- ஆதிக்கச் சக்திகளுக்கு. புத்தகத்தை அழிக்க நினைப்பவர்களைவிட அதற்குப் பன்மடங்கு சக்தி அதிகம். அதை அழிக்காவிட்டால் அது அவர்களை அழித்துவிடும். எனவேதான் புத்தகங்களைப் பார்த்துப் பலரும் பயப்படுகிறார்கள். புத்தகங்கள் எல்லாம் உண்மையைப் பேசுபவை இல்லைதான் என்றாலும் அவற்றுக்கு மக்களிடம் நம்பகத்தன்மை அதிகம். புத்தகத்தில் இப்படிப் போட்டிருக்கிறார்கள், எனவே அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்புபவர்கள் ஏராளம். எனவேதான் பெரும் மதங்களெல்லாம் ஒரு புத்தகத்தை (அல்லது பல புத்தகங்களை) மையமாகக் கொண்டு உருவாகியிருக்கின்றன, பைபிள், கீதை, குர்ஆன், ஜெண்ட் அவஸ்தா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
புத்தகம் ஏன் உருவானது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மனிதர்கள் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளுதல், பதிவுசெய்தல், அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுதல் போன்ற காரணங்கள்தான் அவை. ஆதிமனிதனின் பாறை ஓவியங்களையும் சித்திர எழுத்துக்களையும் புத்தகத்தின்  தொன்மையான வடிவங்கள் என்று சொல்லலாம். புத்தகத்தின் முறையான தொடக்கம் என்பது மனிதர்கள் மரப்பலகைகளையும் மரப்பட்டைகளையும் காகிதங்கள்போல் பயன்படுத்த ஆரம்பித்ததே. சீனர்கள்தான் இதில் முன்னோடி. தவிர அவர்கள் பட்டுத்துணிகளிலும் எழுத ஆரம்பித்தார்கள். அதுபோல் நம் நாட்டில் பனையோலைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், எலும்புகள், கிளிஞ்சல்கள், தோல் போன்றவற்றிலும் எழுதியிருக்கிறார்கள்.
முற்கால எகிப்தியர்கள் ஒரு வகை நாணற்புல்லின் சதைப்பற்றான தண்டின் சோற்றை அரைத்துக் காய வைத்துக் காகிதம் போன்ற ஒன்றைத் தயாரித்ததாகத் தெரிகிறது. அதற்குப் பிறகு கி.பி. முதலாம் நூற்றாண்டில் சீனர்கள் காகிதத்தைக் கண்டுபிடித்ததுதான் பெரும் பாய்ச்சல். அதற்கு அடுத்த பெரும் பாய்ச்சல் 1440ஆம் ஆண்டில் கூடன்பர்க் என்ற ஜெர்மானியர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததுதான். அதற்குப் பிறகுதான் புத்தகம் என்பது தொழில்முறையில் செய்யப்படும் விஷயமாக மாறியது. அதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொழில்புரட்சி, மின்சாரத்தின் கண்டுபிடிப்பு, கணிப்பொறியின் பயன்பாடு, இணையம், மின்புத்தகங்கள் என்று அசுரத்தனமான மாற்றங்களைப் புத்தகம் சந்தித்திருந்தாலும் இணையமும் மின்புத்தகங்களும் பயமுறுத்தும் அளவு வேறு எதுவும் புத்தகப் பிரியர்களைப் பயமுறுத்தவில்லை. ஆனால் இதற்கெல்லாம் பயப்படத் தேவையில்லை என்கிறார் பிரபல இத்தாலிய நாவலாசிரியர் உம்பர்த்தோஎகோ. மேலும், ‘கலாச்சார வரலாற்றைப் பொருத்தவரை ஒன்று இன்னொன்றை முற்றிலும் அழித்ததே இல்லை. ஒன்று வேறொன்றாக உருமாறியிருக்கும், அவ்வளவுதான்’ என்கிறார். புத்தகத்திற்கு நடந்துகொண்டிருப்பதுவும் இதே கதைதான்.
பிரதி அச்சிடப்பட்டிருக்கும் காகிதக் கட்டுதான் புத்தகம் என்றால் புத்தகம் என்பது பெரும் மாற்றத்துக்கு உள்ளாகித்தான், வேறு வகையில் சொன்னால், அழிவுக்கு உள்ளாகித்தான் ஆக வேண்டும். ஆனால் புத்தகம் என்பதை ஒரு பிரதி என்று மட்டும் எடுத்துக்கொண்டால் அது அழிவுக்கு உள்ளாக வாய்ப்பே இல்லை. இதை நிரூபிப்பதுபோல், பல தொகுதிகளாக வெளிவந்துகொண்டிருந்த ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் பேரகராதி   இனிமேல் அச்சிட்ட வடிவத்தில் வெளியிடப்படுவது சந்தேகமே என்றும் அதற்குப் பதிலாக இணையத்திலும் குறுந்தகட்டிலும் மட்டும் தொடர்ந்து வெளியிடப்படலாம் என்றும் ஆக்ஸ்ஃபோர்ட் அறிவித்திருக்கிறது. அச்சிட்ட புத்தகங்களின் காதலர்களுக்கு மட்டும்தான் இது பேரிழப்பு. மற்றபடி ஜனநாயகரீதியிலும் பொருளாதார ரீதியிலும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் இது ஒரு நல்ல முடிவே. 1928ஆம் ஆண்டில் 10 தொகுதிகளாகவும் 1989ஆம் ஆண்டு 20 தொகுதிகளாகவும் வெளிவந்த அந்த அகராதி தற்போது வெளிவருமேயானால் குறைந்தது நாற்பது தொகுதிகளாக இருக்கும். அந்த நாற்பது தொகுதிகளையும் வாங்க விரும்பினாலும் வாங்குவதற்கு எத்தனை பேருக்கு வசதி இருக்கும் என்பதையும், அத்தனை தொகுதிகளையும் வாங்கி வைக்க வீட்டில் எத்தனை பேருக்கு இடம் இருக்கும் என்பதையும், அத்தனை தொகுதிகளின் அனைத்துப் பிரதிகளையும் அச்சிட எவ்வளவு மரங்கள் வெட்டப்படும், எவ்வளவு மை பயன்படுத்தப்படும், எவ்வளவு தொழில் நுட்பம் தேவைப்படும் என்பதையும் கணக்கிட்டுப் பார்க்கும்போது ஆக்ஸ்ஃபோர்ட் நல்லதொரு முடிவையே எடுத்திருக்கிறது எனலாம். புத்தகம் என்பதை அச்சுப் பிரதியாக அல்லாமல் உள்ளடக்கமாக மட்டுமே நாம் கருதுவோம் என்பதால் மேற்குறிப்பிட்ட ஆக்ஸ்ஃபோர்ட் விஷயத்தில் புத்தகம் காப்பாற்றப்பட்டு மிகவும் எளிமையானதும் பன்முகத்தன்மை கொண்டதுமான வேறொரு தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படுகிறது. பிரிட்டானிகா கலைக்களஞ்சியமும் இது போன்ற ஒரு முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் அறிவுப் பரவல் முன்பைவிட அதிக அளவிலான மக்களை நிச்சயம் சென்றடையும்.

இன்றைய சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு மாற்றங்கள் புரட்சிகளெல்லாம் ஏற்பட்டுவருகின்றன. உற்றுப் பார்த்தால் இந்த ஊடகங்களும் ஒரு வகையில் புத்தகத்தின் பரிணாம வளர்ச்சியே. கல்வெட்டுக்கள், களிமண் கட்டிகள், பனையோலைகள் போன்றவற்றைப் புத்தகங்களின் வரலாற்றில் வெவ்வேறு கட்டங்களாக நாம் எடுத்துக்கொள்வதுபோல்தான் சமூக வலைத்தளங்களையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். என்ன, புத்தகம் கொஞ்சம் அளவுக்கதிகமாக ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவேதான், இணையத்தை ஜனநாயகத்தின் மீதான ஜனநாயகத்தின் தாக்குதல் என்கிறார் ஒரு அறிஞர்.   
-  நன்றி: ‘தி இந்து’
- ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/twVVwl

1 comment:

  1. ஃபாரென்ஹீட் 451 நூலைப் பற்றி சுருக்கமான தங்கள் பதிவு மூலமர்க அறிந்தேன். நன்றி.

    ReplyDelete