Wednesday, February 18, 2015

பாரதி: பிரபஞ்சத்தின் பாடகன்

              

ஆசை


(பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர்-11, 2014 அன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இங்கே)


ஓடி விளையாடும் பாப்பாவாக நாம் இருக்கும்போது நம் அன்னையரிடமிருந்தும் அதற்குப் பிறகு ஆரம்பக் கல்வியில் பள்ளிக்கூடத்திலும் வாஞ்சையான தகப்பனைப் போல பாரதி நமக்கு அறிமுகமாகிறார். கூடவே, ‘அச்சம் தவிர், ஆண்மை தவறேல்என்று ஆத்திசூடி மூலமும், ‘ஒளிபடைத்த கண்ணினாய் வாவா’ ‘அச்சமில்லை அச்சமில்லைபோன்ற உத்வேகம் மிக்க முழக்கங்களாலும் பாரதி மேலும் நம்முள் ஆழமாக ஊன்றப்படுகிறார். அப்புறம், தேசப் பற்றுப் பாடல்கள், மொழிப் பற்றுப் பாடல்கள்.
அதற்குப் பிறகு பாரதி நம்முடன் திரைப்படங்கள் வழியாகவும் உறவுகொள்கிறார். பாரதியின் பல்வேறு பாடல்கள் திரைப்படங்களிலும், பாரதியின் பல்வேறு வரிகள் திரைப்படத் தலைப்புகளிலும் இடம்பிடித்திருக்கின்றன. நாவல்களுக்கோ கவிதைத் தொகுப்புகளுக்கோ தலைப்பு கிடைக்கவில்லை என்றாலும் பாரதிதான் உதவிக்கு வருகிறார். அதுமட்டுமா? ‘தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்வரிகள் இல்லையென்றால் ஊழல் வழக்குகள் உள்ளிட்டவற்றில் கைதாகும் அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள் என்பதையே நினைத்துப்பார்க்க முடியவில்லை.
இப்படியாக நம் சமூகத்தின் கலை, பண்பாடு, அரசியல் என்று எல்லாவற்றுக்கும் விதைநெல் தரும் களஞ்சியமாக பாரதி இருப்பது எந்த அளவுக்கு நம் சமூகத்தில் இன்றியமையாத ஒருவராக பாரதி இருக்கிறார் என்பதைக் காட்டுகிறதுஆனால், பாரதி அவ்வளவு மட்டும் இல்லை. உண்மையான பாரதியை, அதாவது முழுமை பெற்ற பாரதியை (அல்லது முழுமையை முயன்ற பாரதி) அறிந்துகொள்ள நாம் இன்னும் கொஞ்சம் பாரதிக்குள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.
இந்தப் பயணத்தின் பாதி வழியில், ‘பாரதிதான் என்ன?’ என்ற கேள்வி வரும்.

சுடர் விடும் சொல் 
ஒரே ஒரு சொல்லைத் தேடியவர்தான் பாரதி. ‘சொல் ஒன்று வேண்டும். தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்என்று தவம் கிடந்தவர்தான் பாரதி. எதற்காக அந்த ஒரு சொல்லைத் தேடினார்? அந்த ஒரு சொல்தான் என்ன?
அந்தச் சொல் உண்மையில் சொல் அல்ல; சுடர். ‘சொல்லில் விளங்கும் சுடரே சக்திஎன்று பாரதி சொன்னது அதனால்தான். நவமெனச் சுடர் தரும் உயிரில் பாரதி அந்தச் சொல்லைக் கண்டுகொண்டார். சொல்லைச் சுடராக்கி அதில் உடல், பொருள், ஆவி அனைத்துக்கும் தீ மூட்டினார். அப்படித் தீ மூட்டாமல் பாதுகாப்பாக இருந்திருந்தால் வெறும்குடும்பஸ்தன்கவியாகவே பாரதி மிஞ்சியிருப்பார். ‘புலன்களைக் குலைத்துப் போடும்விபரீத விளையாட்டின் மூலம் தன் உச்சபட்ச கவித்துவத்தை சாதித்துக்கொண்ட பிரெஞ்சுக் கவிஞன் ரைம்போவைப் போலத்தான் பாரதியும்.

நிலவொளிப்
பாடகன்
இத்தாலியக் கவிஞன் லெப்பர்டியின் கவிதையைக் குறித்து இதாலோ கால்வினோ இப்படிச் சொல்லியிருக்கிறார்: ‘அவர் கவிதைகளில் அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத்தட்ட நிலவொளிபோல் ஆக்கிவிடுகிறார்.' இது பாரதியின் கவிதைகளுக்கு முற்றிலும் பொருந்தும். பாரதியின் பல கவிதைகளை அர்த்தங்களுக்காக ரசிப்பதைவிட கார்த்திகை அகல் போல அவை விடும் அமைதியான சுடருக்காக நாம் ரசிப்பதே அதிகம்.
காக்கைச் சிறகினிலே நந்தலாலாஎன்ற பாடலை அது சொல்லும் பிரபஞ்ச ஒருமைக்காக ரசிப்பதைவிட அதன் கவித்துவ அமைதிக்காகத்தான் அதிகமாக ரசிக்கிறோம். பிய்த்துப்பிய்த்து அர்த்தம் காண முயலும்போது அந்தப் பாடல் தன் அழகை இழந்துவிடும், அதன் அர்த்தம் ஆழமானது என்றாலும்கூட. இந்தப் பாடலின் அழகே அர்த்தத்தை சொற்களின் வழியாக இல்லாமல் உணர்வின் வழியாக நமக்கு ஊட்டுவதுதான். புத்தரின் சாந்த முகம் நமக்கு உணர்த்துவது போன்றது இது.
இதை உணர்ந்துகொள்ளும்போது பாரதியின் முக்கியமான, அறுதிப் பரிமாணத்தை நாம் உணர்ந்துகொள்கிறோம். இந்த இடத்தில் நமக்கு இரண்டு வகையான பாரதி கிடைக்கிறார். விட்டுவிடுதலையாகத் துடிக்கும் பாரதியும் பிரபஞ்ச ஒருமை காணும் பாரதியும். உண்மையில் இந்த இரண்டு பாரதிகளுமே ஒருவருக்கொருவர் நிறைவு செய்பவர்களே. எனவே, விட்டுவிடுதலையானதால் பாரதியால் பிரபஞ்ச ஒருமையைக் காண முடிந்தது என்றும் சொல்லலாம்.

ஞானியும்
பித்தனும்
பிரபஞ்ச ஒருமையைக் காணும்போது ஒரு பக்கம் ஞானிபோலவும் இன்னொரு பக்கம் பித்தன் போலவும் ஆகிவிடுகிறார் பாரதி. ஞானியின் குரலுக்கு வசன கவிதைகள் சாட்சியாவதைப் போல பித்தனின் குரலுக்குஒளியும் இருளும்’, ‘ஊழிக் கூத்து’, ‘காளிபோன்ற கவிதைகளும், பாஞ்சாலி சபதத்தில் வரும் மாலை வருணனையும் சாட்சியாகின்றன.
அமைதியான மாலைப் பொழுதை பாஞ்சாலியுடன் ரசித்துக்கொண்டிருக்கும் அர்ஜுனனுக்கு ஒவ்வொரு கணமும் காளி கவிதை செய்வதாகப் படுகிறது. திடீரென்று, அர்ஜுனனுக்குள் பாரதி புகுந்துகொள்ள, பிதற்ற ஆரம்பிக்கிறான் அர்ஜுனன்,

 "பார்! சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!
என்னடீ யிந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்! - செழும்பொன் காய்ச்சி
விட்ட வோடைகள்! - வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்! - பாரடீ!
நீலப் பொய்கைகள்! - அடடா, நீல
வன்ன மொன்றி லெத்தனை வகையடீ!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
எத்தனை! - கரிய பெரும் பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந் திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ் சிகரங்கள்! - காணடி யாங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்! - ஆஹா! எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!"

அமைதியான
குளத்தின் மீது பெருமழை வீழ்ந்து குளத்தின் மேற்பரப்பைத் தத்தளிக்க வைப்பதுபோல் மொழியைத் தத்தளிக்க வைக்கிறார் பாரதி. மொழி பதறுகிறது; சாமியாடுகிறது. அர்த்தங்கள் மொழியை விட்டு ஓடுகின்றன. அந்தத் தத்தளிப்பை அப்படியே முன்வைக்கிறார் பாரதி. ‘நீல
வன்ன மொன்றி லெத்தனை வகையடீ!’ என்று படிக்கும்போது அடடா அடடா என்று பதற வைக்கிறாரல்லவா பாரதி. எப்படிப்பட்ட இயற்கை உபாசகர்!
இயற்கையை காளியின் நடனமாகப் பார்த்தவர் பாரதி,
அதனால்தான்,
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை- இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியை
என்று காளியைப் பாடுகிறார். சொற்கள் எப்படித் தாண்டவமாடுகின்றன! குறிப்பாகவினைச்சிஎன்ற சொல்லைப் பாருங்கள். பாரதியைத் தவிர வேறு யார் இந்த சொல்லை உருவாக்கியிருக்க முடியும்?
இன்னொரு உருவம் அமைதியான பாரதி. “வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர்-இவை ஒரு பொருளின் பல தோற்றம். உள்ளதெல்லாம் ஒரே பொருள், ஒன்று. இந்த ஒன்றின் பெயர்தான்’” என்று சொல்லும் பாரதி. இதுதான் பிரபஞ்ச ஒருமை என்பது.

பிரபஞ்ச
ஒருமை
விட்டுவிடுதலையாகாமல் பிரபஞ்ச ஒருமை காண்பது சாத்தியம் இல்லை. எவ்வளவு சுமைகளைத் தாங்கிக்கொண்டு திரிகிறோம்! குடும்பம், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், எல்..சி. பாலிசி, தேர்தல்கள், தெரு, மொழி, இனம், தேசம், எல்லைக்கோடுகள், போர்கள்... எவ்வளவு ஒழுங்குகள்! எல்லாமே கடமைகளாகி நம் மேல் சுமை கவிந்துவிட்டன. ஒருவர் இவ்வளவு சுமைகளையும் சுமந்துகொண்டு கலந்துகொள்ளும் ஓட்டப் பந்தயத்தின் பெயர்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. பாரதி இந்த சுமைதூக்கும் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள விரும்பவில்லை. ‘விட்டுவிடுதலையாகிசிட்டுக்குருவியைப் போலஎட்டுத் திசையும் பறந்துதிரிந்து, ‘மட்டுப்படாதெங்கும் கொட்டிக்கிடக்கும் இவ்வானொளியென்னும் மதுவின் சுவையைஉண்ணவே விரும்பினார். இதற்காகச் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே, ஒரு தொழிலே என்கிறார்:
யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்.”

அன்பு
எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கும். இதுதான் பாரதி இந்த உலகுக்கு அளிக்கும் செய்தி. இதனால்தான் பாரதி நம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்குமே கவியாகிறார்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

    நன்றி: தி இந்து
   ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: பாரதி: பிரபஞ்சத்தின் பாடகன்




Tuesday, February 17, 2015

அறிவோம் நம் மொழியை-1

ஆசை
(‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தொடக்க இதழில் 16/09/2013 அன்று வெளியான பத்தி)
வலசைஎன்றால் என்ன?
விலங்குகளும் பறவைகளும் உணவு, நீர் போன்றவற்றைத் தேடியும் தகுந்த தட்பவெப்பத்தைத் தேடியும் இடம்பெயர்வதற்கு வலசை என்று பெயர். இப்போதெல்லாம் வலசை என்ற சொல் பெரும்பாலும் பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் குடியேறுவதற்குதான்வலசைஎன்று பழந்தமிழில் பெயர். காலப்போக்கில் பொருள் சற்று மாறி பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தொடர்பான சொல்லாகவலசைஆகிவிட்டது. மனிதர்கள் வேறு நாட்டுக்குக் குடியேறுவதைக் குறிக்கபுலம்பெயர்தல்என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். ‘வலசைஎன்ற சொல்லுக்குகுக்கிராமம்என்ற பொருளும் இருந்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில்வலசையூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது.

தொடர்புடைய சொற்கள்: வலசை போதல், வலசை வருதல், வலசைப் பறவை, வரத்துப் பறவை (= வலசை வரும் பறவை), விருந்தாளிப் பறவை (= வலசை வரும் பறவை)
                        - 
சாத்தனார்,  நன்றி: தி இந்து (16/09/2013)

அறிவோம் நம் மொழியை-2

ஆசை
எது கொள்ளை? எது திருட்டு?
இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை. பறிகொடுத்தது ஒரு பெரிய தொகை அல்லது கிலோ கணக்கில் நகைகள் என்றால் அது கொள்ளை என்றும் தொகையோ நகையோ குறைவாக இருந்தால் அது திருட்டு என்றும் நினைக்கிறார்கள். அப்படிக் கிடையாது. உங்கள் வீட்டில் உங்களுக்குத் தெரியாமல் நுழைந்து கோடி ரூபாயை அடித்துச் சென்றாலும் அது திருட்டுதான். அதே சமயம், உங்களுக்குத் தெரிந்து, நீங்கள் எதிர்க்கும் பட்சத்தில் வன்முறைமூலம் ஒரு ரூபாயை அடித்துச் சென்றாலும் அது கொள்ளைதான். சாலையில் போகிறபோக்கில் உங்களிடம் அடித்துச் சென்றால் அது வழிப்பறி.
தொடர்பான சில சொற்கள்: களவு, ஜேப்படித் திருட்டு, ஜேப்படித் திருடன், அபகரித்தல், களவாணி, திருடன், திருடி, கொள்ளையர்.

                                  சாத்தனார், 17/09/2013 அன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது
                                             

Monday, February 16, 2015

காந்தி: இந்தியாவின் வை-ஃபை


ஆசை

(காந்தி நினைவு தினத்தன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியான கட்டுரை)

இன்றைய உலகத்தில் காந்தி ஏன் மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறார்?
உலகின் முதுகெலும்பு அறம்தான். அந்த அறம்தான் அன்பை உருவாக்குகிறது. இதை வேறு வழியிலும் சொல்லலாம். அன்புதான் அறத்தை உருவாக்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் முதுகெலும்பு இல்லாமல் ஒடிந்துவிழும்போல்தான் இருக்கிறது. அறம் இல்லாதது, அன்பு இல்லாதது வீழும். இதைத்தான் மிகச் சரியாக வள்ளுவர் சொல்கிறார், ‘என்பி லதனை வெயில்போலக் காயுமே/ அன்பி லதனை அறம்’.

இயற்கை என்பது அறம், நீதி, அநீதி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் மனிதர்கள் தங்கள் வாழ்வின் தேவைகளுக்காக உருவாக்கிக்கொண்டவை. இயற்கையின் படைப்புகளில் தனியொரு இனமாக நாம் விரிவடைந்துவிட்டோம் எனும்போது, நமது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கென்று ஓர் ஒழுங்கு தேவைப்படுகிறது.
ஒற்றையடிப் பாதைக்கென்று போக்குவரத்துக் காவலரோ சிக்னலோ தேவையில்லை. ஆனால், வாகன நெரிசல் மிகுந்திருக்கும் அண்ணா சாலையில் போக்குவரத்துக் காவலரோ சிக்னலோ இல்லையென்றால் என்னவாகும் என்று நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதல்லவா? இப்படியொரு கட்டத்துக்கு மனித குலம் வந்துவிட்டபின் அன்பும் அறமும் மிகமிக இன்றியமையாத தேவைகளாகிவிட்டன. அவைதான் நமது வாழ்க்கையின் மையம். அவற்றிலிருந்து எவ்வளவு விலகிச் செல்கிறோமோ அவ்வளவு அழிவுகளை நாம் சந்திக்கிறோம். அறம் வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்துக்கு அறத்தின் அவசியத்தை எடுத்துக்காட்ட காலந்தோறும் ஓர் உதாரணம் தேவைப்படுகிறது. நம் காலத்தின் மகத்தான உதாரணம் காந்தி.

அறத்துக்கும் சமரசம் சார்பென்ப…
காந்தி காலத்திலும் சரி, அதற்குப் பின்பும் சரி, தங்கள் துறைகளில் மட்டும் அல்லது தனிப்பட்ட வாழ்வில் அறத்தைக் கடைப்பிடித்தவர்கள் / கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு பெரிய களத்துக்கு வரும்போது ஏகப்பட்ட சமரசங்கள் செய்துகொண்டு ‘அறத்துக்கும் சமரசம் சார்பென்ப’ என்ற இலக்கணத்தை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள்தான் ஏராளம். மிகப் பெரிய அளவுக்கு அறத்தைக் கடைப்பிடிப்பது, பரிசோதிப்பது மிகவும் கடினம். சுயநலம், உயிர் பயம், அடுத்தவர் நலன்கள், முரண் கருத்துகள், தன்னைப் பற்றித் தவறான அபிப்பிராயம் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம், பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்துவிடும் நிலை, அதனால் தனது நலனும் தன்னைச் சார்ந்திருப்பவர்களின் நலனும் பாதிக்கப்பட்டுவிடக் கூடும் என்ற அச்சம் இப்படி ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இந்தக் காரணங்களில் சிலவற்றுக்குத் தற்காலிக நியாயமும் இருக்கிறது.

தனிமனித வாழ்விலும், தொடக்க கால சமூக/அரசியல் வாழ்விலும் அறத்தைக் கடைப்பிடித்தவர்கள் பெரிய களத்தில் இறங்கும்போது என்னவாகிறார்கள்? அவர்கள் அறத்திலிருந்து பிறழ்ந்து சரிவதன் குறியீடுதான் நம்முடைய தலைவர்களின் வீழ்ச்சி. இதில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சமூக சேவகர்கள், போராளிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்று பலருமே அடங்குவார்கள். நல்ல காரியங்கள் செய்பவர்கள்கூட சமரசம் செய்துகொண்டால் மேலும் நன்மை கிடைக்கலாம் என்பதற்காக அறத்திலிருந்து பிறழ்வது நிதர்சனம். அதாவது, நன்மைக்காக அறம் பிறழ்தல். இதுதான் அறத்தின் இடத்தை மேலும் கேள்விக்குறியாக்குகிறது. அதாவது, நன்மைக்கும் அறத்துக்கும் தொடர்பில்லை என்ற பெரும்பாலானோரின் எண்ணத்தை இது உறுதிப்படுத்துகிறது.
அறத்தைக் கடைப்பிடிப்பதில் இவ்வளவு சவால்கள் இருக்கின்றன. ஆனால், தான் நம்பிய அறத்துக்காகவே வாழ்ந்து, அந்த அறத்துக்காகவே கொல்லப்பட்ட ஒருவர்தான் காந்தி. அறத்துக்கு ஒவ்வொருவரும் ஒரு பெயர் வைத்திருப்பார்கள். காந்தி வைத்த பெயர் சத்தியம். அதைத்தான் இறுதி வரை கடவுளாக நினைத்து வழிபட்டார். அவரது ‘ராமன்’கூட ‘ராமாயண ராமன்’அல்ல. சத்தியத்தின் அவதாரமாக அவரே வரித்துக்கொண்டவர்தான் அந்த ராமன். அதேபோல் சத்தியத்தின், அறத்தின் போரில் தனக்குக் கிடைத்த மகத்தான முன்னுதாரணம் என்பதால், ஏசுவின் மீது அவ்வளவு வாஞ்சையாக இருந்தார் காந்தி. அதனால்தான் புனித பீட்டர் ஆலயத்தில் ஏசுவின் சொரூபத்துக்கு முன்பு கண்ணீர் மல்க நின்றார் காந்தி. இறுதியில் ஏசு சந்தித்த முடிவையே காந்தியும் சந்தித்ததில் ஆச்சரியப்படுவதற்கென்று ஏதுமில்லை.

காந்தியின் அளவுக்கோ அல்லது காந்தியை விடப் பெரிய அளவிலோ களத்தில் இறங்கியவர்கள் வரலாறு நெடுக ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால், காந்தி அளவுக்கு அறத்தை ஆயுதமாகக் கொண்டு, பெரிய பரிசோதனைக் களத்தில் இறங்கியவர்கள் வெகு சிலரே. தன் உடலை, தன் வாழ்க்கையை, தன் குடும்பத்தை, இன்னும் விரிவாகச் சொல்லப்போனால் ‘நான்’, ‘தான்’ என்ற சொற்கள் எவற்றையெல்லாம் உள்ளடக்குகின்றனவோ அவற்றையெல்லாம் பலிகொடுக்கத் தயாராகத்தான் அவர் களமிறங்கினார். பலிகொடுக்கவும் செய்தார். இவ்வளவு பெரிய பலியைக் கொடுத்ததால்தான் அவர் எல்லோருக்கும் மேல் உயர்ந்து நிற்கிறார். இந்தத் தியாகங்களால் கிடைக்கும் உன்னத ஸ்தானத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல் அதை இழக்கத் தயாராக இருந்ததும், அந்த ஸ்தானத்தைப் பலிகடாவாக ஆக்கியதும்தான் எல்லாவற்றிலும் பெரிய காரியம். தன் வாழ்நாள் முழுவதும் கர்ணன் செய்திருந்த தானங்களின் மொத்தப் பலனையும் வரமாகக் கேட்ட கிருஷ்ணனுக்குச் சற்றும் யோசிக்காமல் அதைத் தானமாக அளித்து, மேலும் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்த கர்ணனின் செயலுக்கு ஒப்பாக இதைக் கூறலாம்.

சமரசம் இல்லாத சத்தியம்
இந்தியாவின் சுதந்திரம் என்ற ஒரு நல்ல காரியத்துக்காக அறம் என்ற விஷயத்தைச் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று காந்தி நினைத்தார். அதன் விளைவுதான், முன்னுதாரணமே இல்லாத ஒரு பாதையை இந்திய சுதந்திரப் போராட்டம் தேர்ந்தெடுத்தது. அதன் விளைவுதான், உலகமே இந்தியாவையும் காந்தியையும் தங்களுக்கான முன்னுதாரணங்களாகத் தேடிவருவது. அறத்தின் உச்சபட்ச வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் அமெரிக்காவின் பிரதிநிதியான ஒபாமாவின் இந்திய வருகையைக்கூட நாம் இப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.

சமரசம் இல்லாமல் சத்தியத்தை இடைவிடாது பரிசோதித்து அடைந்த வெற்றிதான் காந்தியம். தனிமனிதராகத் தான் மட்டும் ஈடுபடாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதில் ஈடுபடுத்தினார். நவீனக் கண்டுபிடிப்பான வை-ஃபைக்கு காந்திதான் முன்னோடி (Wi-Fi: கம்பியில்லா முறையில் ஒரு பகுதியில் உள்ள கணினிகளையோ கைபேசிகளையோ இணைக்கும் அமைப்பு). இந்தியாவின் ‘வை-ஃபை’யாக காந்தி இருந்தார். தனது பரிசோதனையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைத்துக்கொண்டார். இந்தியர்கள் தங்களின் நிறைகுறைகளோடு அந்தப் பரிசோதனையில் கலந்துகொண்டார்கள். மக்களின் குறைகளைப் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதில்லை. தானே நிறைய குறைகளைக் கொண்ட ஒருவர்தான் என்ற எண்ணம் அவருக்கு இறுதிவரை இருந்தது. பிறருடைய குறைகளுக்காகவும், தன்னிடம் இருப்பதாக அவர் நம்பிய குறைகளுக்காகவும்தான் அவர் தன் வாழ்க்கையைப் பலிகொடுக்கத் தயாரானார். அறத்தின், சத்தியத்தின் போரில் தன்னைப் பலிகொடுக்கத் தயாராக எப்போதும் இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. அவருடைய படுகொலைக்கு முன்னால் ஐந்து முறை அவரைக் கொல்வதற்கான முயற்சிகள் நடந்தும்கூடத் தனக்கென்று எந்தப் பாதுகாப்பையும் அவர் ஏற்றுக்கொள்ளாதது இதற்கு உதாரணம். எந்த எளிய மனிதரும் அவரைச் சந்தித்துவிட முடியும். இந்த ஒரே ஒரு அளவுகோலை நமது உள்ளூர், இந்திய, உலகத் தலைவர்களுக்கு வைத்துப்பார்த்தாலே போதும் காந்தியின் இடம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பது நமக்குப் புரிந்துவிடும்.

காந்தியோடு உரையாடுவோம்
காந்தியை நேசிப்பவர்கள் ஏராளமாக இருப்பதைப் போல் அவரை வெறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காந்தியைக் கடவுளாக வழிபடுவது ஆபத்தானது என்றால், அவரை முற்றிலுமாகத் தூக்கியெறிவது அதைவிடப் பல மடங்கு ஆபத்தானது. அவரே சொன்னதுபோல் அவரை நாம் மகாத்மாவாக ஆக்க வேண்டாம்; நமது தாத்தாவாக உணர்ந்தாலே போதும். நம் தாத்தாவுடன் எதையும் நாம் உரையாட முடியும். அவரை மறுத்தும் அவருடன் உரையாட முடியும். அந்த உரையாடலின் இறுதியில், ஒன்று, நாம் அவரை அதிக அளவுக்கு நேசிப்பவர்களாக மாறிவிடுவோம். அல்லது, அவரை எதிர்ப்பதற்கான வலுவை அவரிடமிருந்தே நாம் பெறுவோம். எனவே, காந்தியை வழிபடுவதைவிட, தூக்கியெறிவதைவிட அவருடன் தொடர்ந்து உரையாடுவோம்.

இதற்காகத்தான் ஆஷிஸ் நந்தி இப்படிச் சொல்கிறார்: “காந்தியைவிடச் சத்தியம் மகத்தானது. நீங்கள் காந்தியை மறந்தால், அவர் வலியுறுத்திய கருத்துகள் உலகின் வேறு பாகங்களில், வேறு வடிவங்களில் எழவே செய்யும். அவை ஒருபோதும் நம்மை காந்தியை மறக்க விடாது. அவரது போதாமைகள், தவறுகளைக் கூறி அவரை நாம் கீழிறக்கிவிட முடியாது. ஏனெனில், மனித குலத்தின் அடிப்படையான அகத் தேவைகள் சிலவற்றோடு பிணைக்கப்பட்டவை அவரது எண்ணங்கள்.”
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
         
 நன்றி; ‘தி இந்து’

‘தி இந்து இணையதளத்தில் கட்டுரையைப் படிக்க:
காந்தி: இந்தியாவின் வை-ஃபை


Saturday, February 14, 2015

காதல் என்றால் ஏன் பயப்படுகிறார்கள்?




(‘தி இந்து’ நாளிதழில் 14-02-2015 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)


ஆசை

சிலர் ஜீன்ஸ் அணிந்திருக்கிறார்கள், மற்றவர்கள் சாதாரண முழுக்கால் சட்டை. கையிலோ சட்டைப் பையிலோ மேலைநாட்டு அறிவியலின் இறக்குமதியான செல்ஃபோன், ஒருவர்கூட மகாராஷ்டிரத்தின் பாரம்பரிய உடையை அணிந்திருக்கவில்லை. 2013-ல் காதலர் தினத்தன்று இளம் காதலர்களை அடித்தும் உதைத்தும் துரத்துகிறார்கள். அந்தப் படையில், இல்லையில்லை சேனையில், பெண்களும் அடக்கம். அந்த சேனையின் ஆண்கள் கண்ணியமானவர்கள். அவர்கள் பெண்கள்மீது கைவைக்க மாட்டார்கள். ஆகவே, பெண்களைப் பெண்களே ‘கவனித்து’க்கொள்கிறார்கள். கன்னத்திலே அறை மேல் அறை கொடுத்துத் துரத்துகிறார்கள். கவனிக்க, சேனையின் வீராங்கனைகளில் அநேகமாக யாரும் சேலை உடுத்தியிருக்கவில்லை. நம்புங்கள், இவர்கள்தான் நமது இந்தியக் கலாச்சாரத்தைக் காப்பாற்றுபவர்கள்!

இந்தச் சேனையாவது ‘கண்ணிய’மானது, ஆண்களை ஆண்களே அடிப்பார்கள், பெண்களைப் பெண்களே அடிப்பார்கள். கர்நாடகத்தில் இருக்கும் சேனை அப்படியல்ல. கலாச்சாரத்தைக் காப்பாற்றும்போது கண்ணியமா முக்கியம்? பெண்களை அடித்து உதைத்தாவது கலாச்சாரத்தைக் காப்பாற்றிவிட வேண்டுமே என்ற ‘உன்னத நோக்க’த்தில் செயல்படுபவர்கள். அடிப்படையில் யோசித்துப்பார்த்தால் இவர்களுக்கு மேலை நாகரிகமான ‘காதலர் தினம்’ என்பது பிரச்சினையே அல்ல. காதல்தான் பிரச்சினை. இவர்கள் மேலை நாகரிகத்தைக் கண்டு அஞ்சவில்லை, காதலைக் கண்டுதான் அஞ்சுகிறார்கள்.

காதலைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? ‘கலாச்சாரம், கலாச்சாரம்’ என்று உயிரை விட்டுக் கத்திக்கொண்டிருக்கிறார்களே அந்தக் கலாச்சாரம் என்பது என்னவென்று உள்ளே போய்ப் பார்த்தால் அவர்களின் அச்சத்துக்குக் காரணம் புரியும்.

கலாச்சாரத்தின் இரண்டு முகங்கள்
‘கலாச்சாரம்’ என்ற சொல்லில் ‘கலை’ என்பது ஒரு பகுதியாக இருக்கிறது. ஒரு சமூகத்தின் வெவ்வேறு கலைகள் ஒன்றுசேர்ந்துதான் அதன் கலாச்சாரத்தின் ஒரு முகத்தை வடிவமைக்கின்றன. கலாச்சாரத்தின் இந்த முகம் இறுகிப்போன முகமல்ல. முரண்களுடன் உறவாடி, தொடர்ந்து வளரக் கூடியது. நமது கோயில்கள், இலக்கியம், ஓவியம் எல்லாவற்றிலுமே மரபு, மரபுக்கு எதிரான போக்கு ஆகிய இரண்டு அம்சங்களையும் நாம் காணலாம். இந்தக் கலாச்சாரமும் காலம் காலமாக பிற கலாச்சாரங்களால் தாக்கம் பெற்றிருக்கின்றன; மாறுதல் அடைந்திருக்கின்றன. அதேபோல், பிற கலாச்சாரங்கள் மீதும் நமது கலாச்சாரம் தாக்கம் செலுத்தியிருக்கிறது. அவற்றை மாறுதல் அடையச் செய்திருக்கிறது. கலாச்சாரத்தின் ஒரு முகம்தான் இது. மிகவும் உயிரோட்டமான முகம் இது.

இன்னொரு முகம் இருக்கிறது. அது இறுகிப்போன ஒரு முகம். அதற்கு மரபு ஒன்றே பெருமை, அதாவது தனது பெருமைக்குக் காரணங்கள் எவையென்பதை உணராமல், பெருமைக்காக இருக்கும் பெருமை. இந்தப் பெருமையைக் கட்டமைத்திருப்பது சாதியமும் மதவாதமும் பழமைவாதமும்தான். கலாச்சாரத்தின் முதல் முகத்துக்குக் காதல் எவ்வளவு அத்தியாவசியமானதோ அந்த அளவுக்கு கலாச்சாரத்தின் இன்னொரு முகத்துக்குக் காதல் பரம எதிரி. காதலுக்கு சாதி கிடையாது, மதம் கிடையாது என்பதால் எல்லாக் கட்டுக்கோப்புகளும் மீறப்பட்டுவிடும். இன்னும் அடிப்படையாக, கலாச்சாரக் காவலர்களின் மொழியில் சொன்னால் ‘ரத்தக்கலப்பு’ ஏற்பட்டுவிடும்.

‘ரத்தக்கலப்பு’ என்ற ஒரே காரணம்தான் காதலை எதிர்க்க வைக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரும் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் மேற்கத்திய நாகரிகமான காதலர் தினத்தைக் கொண்டாடாமல், ரோஜாப் பூக்கள் பரிமாறிக்கொள்ளாமல் ‘இந்திய’ மரபுப்படி மல்லிகைப் பூவை(!) கொடுத்துத் தங்கள் காதலைத் தெரிவித்துக்கொள்ள இந்தக் ‘கலாச்சாரக் காவலர்கள்’ அனுமதிப்பார்களா? மேலும், அந்தக் காதலர்கள் மணம் புரிந்துகொள்ளவும் அவர்கள் அனுமதிப்பார்களா? இது போன்ற கேள்விகளைக் கேட்டாலே ’கலாச்சாரம்’ என்ற சொல்லுக்கு நாம் கொடுத்திருக்கும் அர்த்தம் என்ன என்பது தெளிவாகப் புரிந்துவிடும்.

‘கலாச்சாரக் காவலர்கள்’ என்ற பெயர் சுமத்தப்பட்டாலும் இவர்களுக்கு நமது கலாச்சாரத்தைப் பற்றித் துளியும் தெரியாது என்பதுதான் உண்மை. நமது கலாச்சாரத்தின் செழுமையையோ பரிணாமத்தையோ சற்றும் அறியாதவர்கள் இவர்கள். கலாச்சாரம் என்ற காரணத்தைக் கொண்டு எதையெல்லாம் இன்று எதிர்க்கிறார்களோ அவற்றில் பல கஜுரஹோ உள்ளிட்ட இந்தியக் கோயில்களிலும், ‘காமசூத்ரா’, ‘மகாபாரதம்’ உள்ளிட்ட இந்திய இலக்கியங்களிலும் இருப்பதை உணராதவர்கள் இவர்கள். ஏவிவிட்ட தளபதிகளில் சிலருக்கு இதெல்லாம் தெரிந்திருக்கலாம்; ஆனால், அவர்களுக்குக் கலாச்சாரத்தை விட முக்கியமானது கலாச்சாரத்தைக் கொண்டு செய்யும் அரசியல். ஏவப்பட்ட சேனையருக்குத் தெரிந்ததெல்லாம் ‘நமது கலாச்சாரம் உயர்ந்தது. அதில் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது’ என்ற தாரக மந்திரம் மட்டும்தான்.

எதில் இருக்கிறது நம் கலாச்சாரம்?
நமது கலாச்சாரம் தற்போது எதில் இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள்? ஆடையலங்காரங்களைப் பொறுத்தவரை அந்நியக் கலாச்சாரத்திடம் எப்போதோ சரணடைந்துவிட்டோம். உணவுப் பழக்கத்திலும் அப்படியே. அடுத்து, பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்கு மன்மோகன் காலத்தில் இந்தியாவின் கதவுகள் அகலமாகத் திறந்துவிடப்பட்டன. ‘கலாச்சாரக் காவலர்கள்’ தங்களின் ஆஸ்தான நாயகராக வழிபடும் மோடியோ அந்தக் கதவுகளும் இருக்கக் கூடாது என்று முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆக, தொழில்கள், தொழில்நுட்பத்திலும் அந்நியக் கலாச்சாரத்திடம் ஒட்டுமொத்தமாகச் சரணடைந்துவிட்டோம். ஒரு பக்கம் சங் பரிவாரங்களின் ‘வேத காலத்துக்குத் திரும்புவோம்’ கோஷம். இன்னொரு பக்கம் சங் பரிவாரக் குழந்தையின் ‘மேக் இன் இந்தியா’ கோஷம். இந்த முரண்-பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது நம்மவர்களுக்குக் கலாச்சாரம் முக்கியமல்ல, ‘கலாச்சார அரசியல்’தான் முக்கியம் என்பது படும்.

நீங்கள் போரிட வேண்டியது எங்கே?
‘காதலர் தினம்’ அந்நியக் கலாச்சாரம்தான். இல்லையென்று சொல்லவில்லை. உலகமயமாதல், தாராளமயமாதல், வணிகமயமாதல் முதலான ‘மயமாதல்’களால் சமூகத்தின் ஒட்டுமொத்த அம்சங்களும் அந்நியமயமாகும்போது காதல் மட்டும் எப்படித் தப்பிக்கும்? ‘கலாச்சாரக் காவலர்’களின் போராட்டம் அந்நியமயமாதலுக்கு எதிரானதா அல்ல காதலுக்கு எதிரானதா என்ற கேள்வியே நமக்கு எழுகிறது. அந்நியமயமாதலுக்கு எதிரானது என்றால் நீங்கள் போராட வேண்டிய இடம் காதலர்கள் கூடும் பூங்காக்கள் அல்ல, ‘மேக் இன் இந்தியா’வின் கர்ப்பகிருஹமான இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால்தான். ஆனால், அப்படிச் செய்ய மாட்டோம். நமது அடிப்படைப் பிரச்சினை ‘அந்நியமயமாதல்’ அல்லவே, ‘அந்நிய ரத்தக்கலப்புமயமாதல்’தானே. அதற்குக் காரணமாக இருக்கும் காதல்தானே நமக்குப் பெரும் எதிரி.

ஒன்றிணைக்கும் காதல்!
கலாச்சாரக் காவலர்கள் தனியானவர்கள் அல்ல. எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் அவர்களுக்குத் தோழர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் மாற்று சாதி, மாற்று மதக் கலப்பு தங்கள் சமூகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான். மற்ற விவகாரங்களில் ஒருவரையொருவர் எதிர்த்துக்கொண்டிருப்பவர்கள் இதில் மட்டும் சாதி, மத வேறுபாடுகளைத் துறந்து ஒன்றுகூடுவார்கள். ஆக, காதல் மதங்களை மட்டுமல்ல மத அடிப்படைவாதிகளையும் ஒன்றுசேர்க்கிறது!

முத்தம் குறித்த விவாதத்தின்போது பலரது வாதம் இப்படித்தான் இருந்தது: “சாலையில் போகும் ஒரு பெண்ணைப் பிடித்து முத்தம் கொடுக்க முடியுமா?” ‘முத்தம்’ என்றாலே தன் மனைவியோ காதலியோ நினைவு வராமல் தெருவில் போகும் பெண்கள்தான் ஒருவருக்கு நினைவு வருகிறதே என்றால் அவர்களது சிந்தனை எந்த அளவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்?! இதே போன்ற இன்னொரு வாதம்தான் இது: “உங்கள் பெண்ணையோ தங்கையையோ நீங்கள் அனுமதிப்பீர்களா?” ஆக, இந்த விஷயமே பெண்ணை மையம் கொண்டே, பெண்ணின் ‘தூய்மை’யில் போய்தான் முடிகிறது. ஆண்கள், ஒரு பொருட்டல்ல. இவர்களின் ‘ரத்தத் தூய்மை’யின் ஆதாரமே பெண்தானே?

அவரவர் உரிமை
உங்களுக்குக் காதலோ காதலர் தினமோ பிடிக்காமல் இருக்கலாம். அது உங்களின் விருப்பம், உங்களின் உரிமை. அதேபோல், பிறர் காதலிப்பதும், காதலர் தினம் கொண்டாடுவதும் அவர்களின் விருப்பம், அவர்களின் உரிமை. இந்த இரண்டு தரப்பினரின் உரிமைகளும் விருப்பங்களும் பரஸ்பரம் திணிக்கப்படுவது தவறு. அதை வன்முறை மூலம் செய்வது பெருங்குற்றம்!

காதல் என்பது தனிப்பட்ட விஷயம். தயவுசெய்து அதில் வன்முறையைக் கலந்துவிட வேண்டாம். காதலைப் பற்றி நமது மொழியின் மகாகவி ஒருவர் சொல்வதைத் தாண்டி நாம் என்ன சொல்லிவிட முடியும்?

“காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்,
அதனாலே மரணம் பொய்யாம்."

-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

நன்றி ‘தி இந்து’

‘தி இந்து’ இணையதளத்தில் படிக்க: காதல் என்றால் ஏன் பயப்படுகிறார்கள்?