Showing posts with label நேரு. Show all posts
Showing posts with label நேரு. Show all posts

Tuesday, May 27, 2025

நேரு என்ற மாபெரும் சாகசக்காரர்


ஆசை


நேருவின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை ராமச்சந்திர குஹா தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.

அது 1942-ம் ஆண்டு. காந்தி தனது ஆசிரமத்தில் காங்கிரஸ் கூட்டமொன்றை நடத்துகிறார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அலகாபாத் செல்வதற்காக ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில் நேரு கிளம்புகிறார். ‘சீக்கிரமாகப் போய் ரயிலைப் பிடிப்பதற்குக் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக’ என்று கஸ்தூர் பா, நேருவை ஆசிர்வதித்திருக்கிறார். அந்த அவசரத்திலும் நேருவுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. ‘காட்டுமிராண்டித்தனமான போர்களை அனுமதிப்பவர்தான் கடவுளா? விஷவாயு கொண்டு யூதர்கள் படுகொலை செய்யப்படுவதை அனுமதிப்பவர்தான் கடவுளா? ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும் வேட்டையாட அனுமதிப்பவர்தான் கடவுளா?’ என்ற ரீதியில் நேரு பொரிந்துதள்ளியிருக்கிறார். சுற்றிலும் அப்படியொரு அமைதி. கஸ்தூர் பாவை எதிர்த்துப் பேசும் தைரியம் காந்திக்குக்கூட கிடையாது. சங்கடமான இந்தச் சூழலில் காந்தி நுழைகிறார், “பா, ஜவாஹர்லால் என்ன சொல்லியிருந்தாலும் நம்மையெல்லாம் விட கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர் அவர்தான்” என்கிறார்.

Tuesday, August 15, 2023

எல்லோருக்குமாம் ஒரு இன்னறுங் கனிமரம்


 

சிறுவயதில்
தெருவில் கொடியேற்றம்
அப்பாவிடம் கேட்டேன்
இது என்ன மரமென்று
கொடிமரம்டி என் தங்கம்
என்றார்
கொடிமரம் என்றால்
பூ பூக்குமா
காய் காய்க்குமா
பழம் பழுக்குமா
என்று கேட்டேன்
கண்டிப்பாய் என்றார்
நான் பறித்துக்கொள்ளலாமா
என்று கேட்டேன்
எல்லோரும் பறித்துக்கொள்ள வேண்டுமென்றுதான் ஊர்ப்பொதுவில் நட்ட மரம்
நான் பிறந்தபோது இல்லை
உனக்கு இருக்கிறது
எவ்வளவு தாத்தா
எவ்வளவு ஆத்தா
இதை நடுவதற்குப்
படாதபாடு பட்டிருக்கிறார்கள் தெரியுமா
என்றார்
ஒரு மரம் நடுவது என்ன
அவ்வளவு பெரிய சிரமமா அப்பா
என்று கேட்டதற்கு
ஆமாம்
மரநிழலில் இளைப்பாறக்கூட
முடியாது என்றபோது
நம் ஒவ்வொருவரும்
சொந்தமாய் நட்டுக்கொள்ள
ஒரு மரம் தந்தார்களே சும்மாவா
மரம் நடுவது சிரமம்தான்
அதைவிடச் சிரமம்
நட்டமரம்
பட்டுப்போகாமல் பார்த்துக்கொள்வது
அப்போதுதான்
மரம் உனக்குக் கனி தரும்
உனக்கான கனி
எல்லோருக்கும் இனிக்கும்
என்று சொல்லிவிட்டுக் கேட்டார்
உனக்கான கனியை
எல்லோருக்கும் இனிக்கச் செய்வாயா
அப்பா பேசியதும் புரியவில்லை
அதற்கு என்ன பதில் சொல்வதென்றும்
தெரியவில்லை
பேசியது மட்டும்
அழியாமல் நினைவில் இருக்கிறது
அதே மரத்திலிருந்து பறித்து
எல்லோருக்கும் கசப்பின் கனிகள்
வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்று
என் வீட்டின் நடுவே
நட்டுவைத்திருக்கிறேன்
அப்பாவின் கேள்வியை
கசப்பிடம் தோற்ற
என் இனிப்பை
என் பிள்ளைகள்
வெல்லச் செய்வார்கள்
- ஆசை
15-08-23


தொப்புள்கொடி

 


ஏற்றுவதற்காகச்
சிந்தப்பட்ட
எவ்வளவோ குருதியும்
கண்ணீரும்
வியர்வையும்
இரண்டு கைகளாய்
உருத்திரண்டு
ஏற்றப்பட்ட
கொடி

எல்லா கண்ணீரையும்
காயங்களை
ஆற்றவே
அது அசைந்தாடி
காற்று வீச வேண்டுமென
ஏற்றிய கொடி

அண்ணாந்து பார்க்கும்
எல்லா விழிகளுக்கும்
வானத்தையே வாழ்வாகத்
தரும் கொடி

அது அசைக்கும்
காற்று
அதன் கீழுள்ள
எல்லா உயிர்களையும்
ஒரு தளையின்றி
அந்த வானில் பறக்க விடும்
கொடி

தாயின் மணிக்கொடி
சுதந்திர வாழ்வின்
தொப்புள் கொடி

கண்களைக் கட்டிப்போட்டு
ஏற்றினாலும்
உயிர் உணரும் கொடி
உயிர் மூச்சு தரும் கொடி
உயிர் மேல் ஏற்றிய கொடி

அது உயிர்மேல் 
அசைந்தாடிப் பறக்கட்டும் என்றும்
உயிருள்ள கைகள் மட்டுமே
ஏற்றட்டும் என்றும்
     -ஆசை

Tuesday, November 14, 2017

சூச்சிகளின் காலத்தில் நேரு!


ஆசை
(நேருவின் 128-வது பிறந்த நாளையொட்டி ‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரை)

சமகாலத்தின் கொடுமையான இன அகற்றல்களில் ஒன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான மியான்மர் அரசின் ஒடுக்குமுறை. சர்வதேசச் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குவது மியான்மரின் அரசின் இந்த ஒடுக்குமுறை மட்டும் அல்ல; ஆளும் அரசியல் கட்சியின் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சியின் மௌனம் எல்லோரையும் மேலும் நொறுக்குகிறது. ரோஹிங்கியா பிரச்சினை குறித்து சர்வதேசச் சமூகத்தின் அழுத்தத்துக்குப் பிறகு ஆங் சான் சூச்சி தன் வாயைத் திறந்துவிட்டாலும் அவருடைய வார்த்தைகள் இதயத்திலிருந்து வரவில்லை என்பதே உண்மை.

உலகில் எங்கெல்லாம், எப்போதெல்லாம் ஒரு அரசு தன்னுடைய தேசத்தின் சிறுபான்மை மக்களை ஒடுக்குகிறதோ அப்போதெல்லாம் நம்முடைய முதல் பிரதமர் நேருவின் நினைவு வருவது தவிர்க்க முடியாததாகிறது.

மியான்மரில் சிறுபான்மையினர் மீதான அரசின் ஒடுக்குமுறையின் பின்னணியிலும் ஆங் சான் சூச்சியின் பாராமுகத்திலும் அரசியல்ரீதியான காரணம் உண்டு. ராணுவ ஆட்சியை எந்தப் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு அவர் அகற்றினாரோ அந்த மக்களின் ஆதரவை இழந்துவிடுவோம் என்ற அச்சம்தான் அந்தக் காரணம். இன்னமும் மியான்மர் முழு ஜனநாயக நாடாகிவிடவில்லை. ராணுவத்தின் கண்கள் அரசின் மீது உட்கார்ந்திருக்கின்றன. ஆனால், இதை முன்வைத்து ஆங் சான் சூச்சியின் நடவடிக்கைகளைச் சிறிதும் நியாயப்படுத்திவிட முடியாது.

சூச்சியின் தோல்வியும் நேருவின் வெற்றியும்


மியான்மரை விடப் பல மடங்கு பெரிய நாடு இந்தியா. மதம், இனம், மொழி, சாதி என்று பல மடங்கு பிரிவினைக் கூறுகளையும் கொண்டது. தனக்கேயான பிரிவினைவாத சக்திகளை மட்டுமல்லாமல் அந்தப் பிரிவினைகளில் ஆதாயம் காணும் வகையில் செயல்பட்ட ஆங்கிலேயர்களையும் எதிர்த்து விடுதலை பெற வேண்டிய கட்டாயத்திலேயே பிரிட்டிஷ் இந்தியா இருந்தது.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்குள் காந்தி நுழையும்போது அது எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இல்லை. தனித்தனியே அவரவர் நலனுக்கான போராட்டங்களின், சிறுபான்மையினரை விலக்கிய பெரும்பான்மையினரில் மேல்தட்டு வர்க்கத்தினரை உள்ளடக்கிய போராட்டத்தின் தொகுப்பாகவே இந்திய சுதந்திரப் போராட்டம் இருந்தது. காந்தியின் வரவுக்குப் பிறகே இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு குடைக்குக் கீழ் வருகிறது. இந்து, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், ஏழைஎளியவர்கள், விவசாயிகள், பெண்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக நம் சுதந்திரப் போராட்டம் உருவெடுக்கிறது.

தொடக்கத்திலேயே காந்திக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. இந்தியா தனக்கேயுரிய பிரிவினைகளை வெற்றிகொள்ளாமல் விடுதலை சாத்தியம் இல்லை என்பதுதான் அந்தப் புரிதல். தீண்டாமை ஒழிப்பு, இந்து-முஸ்லிம் நல்லுறவு, கிராமப்புற மேம்பாடு மூன்றையும் சுயராஜ்யத்தின் மூன்று தூண்களாக காந்தி கருதினார். காந்தி முன்வைத்த மூன்று தூண்களில் கிராமப்புற மேம்பாடு என்பதில் நேருவின் நிலைப்பாடு வேறாக இருந்தது. தீண்டாமை ஒழிப்பை நோக்கிய பயணத்தில் காந்தியின் பார்வைக்கு மாறுபட்டவர் நேரு இல்லை என்றாலும், அந்தத் தளத்தில் அவர் பெரிய பணிகள் ஏதும் ஆற்றவில்லை என்பதே உண்மை. ஆனால், சிறுபான்மையினர் பாதுகாப்பில் குறிப்பாக இந்து-முஸ்லிம் ஒற்றுமையில் காந்தியின் ஈடுபாட்டுக்குச் சற்றும் குறையாததாக நேருவின் ஈடுபாடு இருந்தது.

சிறுபான்மையினரைக் கைவிட்டுவிட்டோ அகற்றிவிட்டோ இந்தியா பெறும் விடுதலையில் நேருவுக்கு என்றைக்குமே நம்பிக்கை இருந்ததில்லை. அவரது அரசியல் செயல்பாடுகளின் தொடக்கத்திலேயே இந்த நம்பிக்கை உருக்கொண்டது மிக முக்கியமானது. ஆங் சான் சூச்சி தோற்ற இடத்தையும் நேரு வெற்றிபெற்ற இடத்தையும் புரிந்துகொள்வதற்கு இதை அடிப்படையாக நாம் கொள்ள வேண்டும்.

பிரிவினைக் காலகட்டம் போன்ற, இந்துக்கள்-முஸ்லிம்கள் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கொன்றழித்துக்கொண்டிருந்த மிகக் கொடுமையான ஒரு காலகட்டத்தில், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் இயல்பாகவே பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தே பேசுவதையும் செயல்படுவதையுமே உலகம் முழுக்கப் பார்த்துவருகிறோம். தன்னை இந்துக்களின் பிரதிநிதியாக மட்டும் நேரு எண்ணிக்கொண்டு செயல்பட்டிருந்தால் இன்று சங்கப் பரிவாரங்களும் மோடியும்கூட நேருவைத் தூக்கிவைத்துக்கொண்டாடியிருப்பார்கள். ஆனால், நேரு இந்துக்களுக்கு மட்டுமான பிரதிநிதியாக நடந்துகொள்ளவில்லை. சிறுபான்மையினரைக் கண்ணியமாக நடத்தாத ஒரு தேசம் சுதந்திரமான தேசம் என்று அழைக்க முடியாது என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார்.

புதிதாக உருவாகிவந்த பாகிஸ்தான் பகுதியிலிருந்து விரட்டப்பட்டு டெல்லி நோக்கி வந்த இந்துக்களின் மீது எத்தகைய அக்கறையைக் காட்டினாரோ, அதே கரிசனத்தை முஸ்லிம்களிடமும் காட்டினார். ‘பாகிஸ்தானில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்களே!’ என்று இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் அவரிடம் கேட்கப்பட்டபோதுஇந்தியாவை இந்து பாகிஸ்தானாக ஆவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதுஎன்றார் நேரு.

பேச்சு அல்ல, செயல்!


பிரிவினைக் கலவரத்தால் டெல்லி பற்றியெரிந்துகொண்டிருந்தபோது நேரில் பார்த்த ஒரு விஷயத்தை பிரெஞ்சு பத்திரிகையாளர் மாக்ஸ் ஒலிவியே-லக்கோம் பதிவுசெய்திருக்கிறார். டெல்லியின் கனாட் சர்க்கஸ் பகுதில் இருந்த முஸ்லிம்களின் கடைகளை இந்துக்களின் கும்பல் சூறையாடிக்கொண்டிருக்கிறது. அந்தக் கடைகளின் உரிமையாளர்களான முஸ்லிம்களைக் கொன்றுவிட்டு கடைகளைச் சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள் சில இந்துக்கள். அவர்களை நோக்கி காங்கிரஸ் குல்லா அணிந்த ஒருவர் கையில் லத்தியை வைத்துக்கொண்டு ஓடுவதையும் அவர்களைத் துரத்துவதையும் மாக்ஸ் காண்கிறார். நெருங்கிப் பார்த்தபோது அவருக்குத் தெரிகிறது, அந்தக் குல்லா மனிதர் வேறு யாருமல்ல; சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு!

வன்முறைக்கு எதிராக வானொலியிலும் நாடாளுமன்றத்திலும் பேசுவதோடு முடித்துக்கொண்டவர் அல்ல நேரு. வெற்று வார்த்தைகளோடு முடிந்துவிடுவதல்ல ஆழமான அன்பும் உண்மையான கரிசனமும்! தன் சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதற்குத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கிச் செயல்பட்ட பிரதமரை இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் வெறுத்துவிடவில்லை என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். பிரிவினைக் கலவரம், இரண்டு தரப்பிலும் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பு போன்றவற்றைத் தாண்டியும் இந்தியா விழுந்துவிடாமல் தாக்குப்பிடித்ததற்கு இந்த உணர்வுதான் மிகவும் அடிப்படையானது.


மியான்மர் விடுதலைப் போராட்டத்தின் தொடக்கத்திலேயே ரோஹிங்கியா மக்களையும் உள்ளடக்கிக்கொள்ளாமல் போனதும் சிறுபான்மையின மக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பெரும்பான்மை மக்களின் மனதில் விதைக்காமல் போனதும்தான் மியான்மரில் இன்று நடந்துகொண்டிருக்கும் இன சுத்திகரிப்புக்கு முக்கியமான காரணங்கள். நல்ல தலைவர்கள் காலத்தைத் தாண்டி சிந்திக்க வேண்டும். மக்களுக்குக் கற்றுக்கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். குறுகிய கால பலன்களுக்காக மக்களை வெறும் ஓட்டுகளாகப் பார்ப்பவர்களாக இருக்கக் கூடாது. நல்ல வேளையாக நமக்கு காந்தி கிடைத்தார். அவர் வழியே நேரு கிடைத்தார்!

Saturday, November 14, 2015

இந்தியாவில் எல்லாருக்கும் இடம் இருக்கிறது



ஜவாஹர்லால் நேரு
 அலிகாருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். காலத்தால் மட்டுமல்ல, உத்வேகத்தாலும்  கண்ணோட்டத்தாலும் நமக்கிடையே இடைவெளி இருக்கிறது. நீங்கள் இன்று எங்கே நிற்கிறீர்கள், நம்மில் பெரும்பாலானோரும் எங்கே நிற்கிறார்கள் என்பதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரிய வில்லை. ஏனென்றால், ஏராளமான கொந்தளிப்பு களையும் பெரும் துயரங்களையும் நாம் கடந்து வந்திருக்கிறோம். அதனால், நிகழ்காலம் குழப்பம் நிரம்பியதாகவும், அதைவிட எதிர்காலம் மூட்டமானதாகவும் ஊடுருவிப் பார்க்க முடியாததாகவும் காட்சியளிக்கிறது. இருந்தாலும், நாம் நமது இந்த நிகழ்காலத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்; அப்படி எதிர்கொள்வதன்மூலம் எதிர்காலத்தை உருவாக்க முயன்றுதான் ஆக வேண்டும்.
நாம் இப்போது எங்கே நிற்கிறோம் என்பதையும் நாம் எதை அடையாளப்படுத்துகிறோம் என்பதையும் நாம் பார்த்தாக வேண்டும், நம்மில் ஒவ்வொருவரும் பார்த்தாக வேண்டும். எதிர்காலத்தின்மீது உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் நமது நிகழ்காலத்தில் இலக்கின்றித் திரிய நேரிடுவதுடன் வாழ்க்கையை வாழ்ந்துபார்ப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லாமலும் போய்விடும். 

நேருவைப் பற்றிய 5 கட்டுக்கதைகள்


ராமச்சந்திர குஹா

(நேரு நினைவு நாளன்று எனது மொழிபெயர்ப்பில் ‘தி இந்து’ நாளிதழில் வெளியான கட்டுரை)  

ஜவாஹர்லால் நேருவின் நினைவு வாரத்தை முன்னிட்டு, அவரைப் பற்றி இதுவரை உருவாகியிருக்கும் கட்டுக் கதைகள் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம்:
கட்டுக்கதை 1: வாரிசு அரசியலை நேரு ஊக்குவித்தார்
நேருவின் மகள், பேரன் ஆகியோர் இந்தியாவின் பிரதமர்களாக இருந்த காரணத்தாலும் அவருடைய பேரனின் மனைவி அந்தப் பதவியை அடைவார் என்ற நிலை இருந்த காரணத்தாலும் நேருவின் கொள்ளுப்பேரன் வாரிசுரிமை அடிப்படையில் காங்கிரஸில் முன்னிறுத்தப்படும் காரணத்தாலும்தான் இப்படியொரு கட்டுக்கதை உருவாகியிருக்கிறது.
உண்மையில், நேருவுக்கும் ‘வாரிசு அரசிய'லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனது மகள் இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று அவர் நினைத்துப் பார்த்தது மில்லை; அப்படிப்பட்ட விருப்பமும் அவருக்கு இல்லை. இந்திய தேசிய காங்கிரஸைக் குடும்பத் தொழில்போல ஆக்கியது இந்திரா காந்திதான். முதலில் தனது மகன் சஞ்சயை அவர் கொண்டுவந்தார், சஞ்சயின் மரணத்துக்குப் பிறகு, தனது இன்னொரு மகன் ராஜீவைக் கொண்டுவந்தார்.
இரண்டு மகன்கள் விஷயத்திலுமே, இந்திரா காந்திக்குப் பிறகு காங்கிரஸின் தலைவராகவும் பிரதமராகவும் அவருடைய மகன்தான் வருவார் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருந்த விஷயம். ஆகவே, ‘நேரு-(இந்திரா) காந்திப் பரம்பரை' என்பது முறையாக ‘(இந்திரா) காந்தி பரம்பரை' என்றே அழைக்கப்பட வேண்டும்.