Saturday, October 31, 2015

எங்கே இருக்கிறாய் கலுவிக் கோடியே? உலகின் அரிய பறவையொன்றுடன் எட்டு ஆண்டுகள்! - பறவையியலாளர் ஜெகநாதன் பேட்டி


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 31-10-2015 அன்று வெளியான பேட்டி. இந்தப் பேட்டியின் முழுவடிவம் ‘தி இந்து’ தீபாவளி மலரில் தற்போது வெளியாகியிருக்கிறது.) 

உலகிலேயே மிகவும் அரிதான பறவைகளுள் ஜெர்டான்ஸ் கோர்ஸரும் ஒன்று. அழிந்துபோய்விட்டதாகக் கருதப்பட்டு 1986-ல் ஆந்திரத்தின் கடப்பா பகுதியில் ஜெர்டான்ஸ் கோர்ஸர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்தப் பறவையின் இருப்பிடத்துக்குச் சென்று, அந்தப் பறவையைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டே, அதன் இருப்பிடத்தைக் காப்பாற்றும் முயற்சிகளில் எட்டு ஆண்டுகள் ஈடுபட்டவர் பறவையியலாளர் ஜெகநாதன். அந்த ஆண்டுகளில் அவராலேயே ஏழெட்டு முறைதான் அந்தப் பறவையைப் பார்க்க முடிந்திருக்கிறது என்றால் அந்தப் பறவை எந்த அளவுக்கு அரிதானது என்பது நமக்குப் புரியும். அவரை சந்தித்து உரையாடியதிலிருந்து…

ஜெர்டான்ஸ் கோர்ஸரின் உலகத்துக்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்?
ஆந்திரத்தில் கடப்பாவில் மட்டுமே இருந்த அல்லது இருக்கும் பறவை அது. அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக பி.என்.எச்.எஸ்-ஸில் ஒரு திட்டத்தை 2000-ல் அறிவித்திருந்தார்கள். அந்தத் திட்டத்தின் கீழ் அந்தப் பறவையைப் பற்றி எட்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றேன்.
ஜெர்டான்ஸ் கோர்ஸர் (Jerdon’s Courser) என்பது கோர்ஸர் என்றழைக்கப்படும் ஒரு பறவை இனத்தைச் சேர்ந்தது. தெலுங்கில் இதற்கு ‘கலுவிக் கோடி’ என்று பெயர். ‘ஆள்காட்டிப் பறவைகள்’ பிரிவைச் சேர்ந்தது. இந்த கோர்ஸர் பறவைகள் நன்றாகப் பறக்கக் கூடியவை என்றாலும் அதிகம் நடந்தும் செல்லக்கூடியவை. கலுவிக் கோடி இரவில் நடமாடும் பறவை. இந்தப் பறவையைக் குறித்து முதலில் விவரித்தது டி.சி. ஜெர்டான் என்ற ஆங்கிலேய பறவையியலாளர்தான். அவருடைய பெயரையே அந்தப் பறவைக்கும் வைத்திருக்கிறார்கள். அந்தப் பறவை அழிந்துபோய்விட்டதாகவே அப்போது நினைத்தார்கள்.
ஹோவர்டு காம்பெல் என்பவர் 1900-ம் ஆண்டு வாக்கில் பார்த்திருக்கிறார். அந்தப் பறவை கடைசியாகப் பார்க்கப்பட்டது அப்போதுதான். அதற்குப் பிறகு 86 ஆண்டுகள் கழித்துதான் அந்தப் பறவையை மறுகண்டுபிடிப்பு செய்தார்கள். பி.என்.எச்.எஸ்-ஸைச் சேர்ந்த பரத் பூஷண் என்ற ஆராய்ச்சியாளர்தான் அதை மறுபடியும் கண்டுபிடித்தார். பறவை வேட்டையாடுபவர்கள், உள்ளூர் மக்கள் என்று எல்லோரிடமும் கலுவிக் கோடி பறவையின் படத்தைக் கொடுத்துத் தேடல் நிகழ்த்தியபோது அய்த்தண்ணா என்பவரிடம் அந்தப் பறவை அகப்பட்டுக்கொண்டது.
களத்துக்குச் சென்று நீங்கள் எப்போது ஆய்வு ஆரம்பிக்கிறீர்கள்?
1986-ல் அந்தப் பறவை இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னும் 2000 வரை அது குறித்து ஆராய்ச்சி எதுவும் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. புதர்கள், அவற்றையொட்டி திறந்தவெளி இப்படி இருக்கும் பகுதிகளில் மட்டும்தான் அந்தப் பறவைகள் இருக்கும். பகல் முழுவதும் புதர்களில் இருந்துவிட்டு இரவு நேரங்களில் திறந்தவெளிக்கு வந்து எறும்புகள், கரையான்கள், பூச்சிகள் போன்றவற்றைப் பிடித்து உண்ணும். நான் முதன்முதலில் அந்தப் பறவையைப் பார்த்தது 2000-வது ஆண்டின் இறுதியில். ஆள்காட்டியை விடக் கொஞ்சம் சிறியதாக இருக்கும். டார்ச் அடித்தால் அந்தப் பறவை அப்படியே தரையோடு தரையாக உட்கார்ந்துகொள்ளும். பார்ப்பதற்குக் கல் கிடப்பதைப் போல இருக்கும். அருகே போனால் மேலே பறந்துசென்று வேறு எங்காவது போய் உட்கார்ந்துகொள்ளும்.
கலுவிக் கோடி பற்றிய கணக்கெடுப்புக்குப் புதுமையான ஒரு வழிமுறையை மேற்கொண்டோம். சாலையோர மண்ணை எடுத்துச் சலித்து, அந்த மண்ணைக் கொண்டு 5 மீட்டர் நீளம் மட்டும் கொண்ட பாதைகள் பலவற்றை அந்தப் பறவைகள் அடிக்கடி நடக்கும் பகுதிகளில் அமைத்தோம். அந்த மணல் பாதைகளின் மீது அந்தப் பறவைகள் நடந்தால் அவற்றின் காலடித் தடம் நன்றாகப் பதிந்துவிடும் வகையில் பாதைகளை அமைத்தோம். அந்தப் பறவையின் காலடித் தடம், குரல்கள் போன்றவை எப்படி இருக்கும் என்பதெல்லாம் நமக்குத் தெரியாதல்லவா?

                                          கேமரா டிராப்பும் மணல் பாதையும்


இந்த வழிமுறையின் மூலம் உங்களுக்கு எவ்வளவு நாட்களில் கலுவிக் கோடியின் காலடித் தடம் கிடைத்தது?
ஒரு வாரத்தில் கிடைத்துவிட்டது. எனினும் அது அந்தப் பறவைதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது எப்படி? அதற்காக அந்தப் பாதைகளின் இரு புறமும் ‘கேமரா டிராப்’ வைத்தோம். அந்தப் பறவை அதன் வழியே நடந்துபோனால் அதன் காலடித் தடமும் கிடைக்கும், அதன் புகைப்படமும் கிடைக்கும். தினமும் காலையில் போய் கேமராக்களை நான் பார்ப்பேன். படச்சுருளைக் கழுவிப் பார்த்த பிறகு அதில் அந்த ‘கலுவிக் கோடி’ பறவை எங்களுக்குக் கிடைத்தது. அதன் புகைப்படத்தைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட பரவசத்துக்கு அளவே இல்லை.
தேடலின் அடுத்த கட்டம் என்ன?
அடுத்ததாகக் குரலைக் கண்டுபிடிக்கும் வேட்டை. ஒரு நாள் இந்தப் பறவையின் குரலும் கேட்டது. வித்தியாசமாக இருக்கிறதே என்று பதிவுசெய்துகொண்டோம். எல்லா பறவைகளின் குரல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எதனுடனும் அந்தக் குரல் பொருந்திப்போகாததால் கலுவிக் கோடியின் குரல்தான் அது என்பது எங்களுக்கு உறுதியானது. புலப்படாத பறவையின் குரலையே பதிவுசெய்ததில் எனக்கு உற்சாகம் பிடிபடவில்லை. ‘கலுவிக் கோடியின் குரலைப் பதிவுசெய்திருக்கிறோம்’ என்று இந்தத் திட்டத்தின் முக்கிய உறுப்பினர்களும் டாக்டர் ரிஸ் கிரீனிடம் (Dr. Rhys Green) சொன்னேன். ‘இது குறித்து 99% உறுதிதான் இருக்கிறது உங்களுக்கு. அந்தப் பறவை குரல் கொடுப்பதை நேரில் பார்த்தால் மட்டுமே 100% உறுதியாகும்’ என்று அவர் சொல்லிவிட்டார். நாம் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்; இவர் இப்படிச் சொல்லிவிட்டாரே என்று எனக்கு ஒரு வாரம் தூக்கமே வரவில்லை.
தினமும் சாயங்காலம் ஆனதும் களத்துக்குச் சென்றுவிடுவேன். எப்படியாவது அந்தப் பறவை கத்துவதை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இரண்டு மாதங்கள் முயன்று பார்த்துவிட்டேன். முடியவில்லை. அப்புறம் ‘பிளே பேக்’ வழிமுறையை மேற்கொண்டோம். நாங்கள் பதிவுசெய்திருக்கும் குரலை ஒலிக்கச் செய்து ஏதாவது பறவையிடமிருந்து பதில் குரல் வருகிறதா என்பதை எதிர்பார்ப்போம். மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே குரலை ஒலிக்க விடும் உத்தியைப் பின்பற்றலாம்.


சரி, அந்தப் பறவை கத்தியதை நேரில் பார்த்தீர்களா?
பார்த்தோம்! ஒரு முறை எனது உதவியாளருடன் மாலை வேளையில் கள ஆய்வுக்காகச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பறவை கத்திக்கொண்டிப்பது கேட்டது. இரவு நேரத்தில் கேட்க வேண்டிய சத்தம் இப்போது கேட்டுக்கொண்டிருக்கிறதே என்று கலுவிக் கோடி நானும் என் உதவியாளரும் அப்படியே மறைவாகப் படுத்துக்கொண்டோம். எங்களுக்கு எதிரே, ஆனால் ஒரு புதருக்குப் பின்னாலிருந்து கத்திக்கொண்டிருந்தது. அதுதான் கத்துகிறது என்று தெரிந்தாலும் நேரில் பார்க்காவிட்டால் 100% உறுதியாகாது அல்லவா? எனவே, எங்கள் டேப் ரெக்கார்டரில் இருந்த குரலை ஒலிக்கச் செய்தோம். ‘க்விக்கூ... க்விக்கூ...’ என்ற சத்தம் கேட்டதும் புதருக்கு வெளியிலிருந்து ஓடி வந்து பார்த்து அதுவும் ஒலி எழுப்பியது. என் வாழ்க்கையில் மகத்தான மிகச் சில தருணங்களுள் அதுவும் ஒன்று.
உடனே, கிரீனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ‘நீங்கள் அப்படிச் சொல்லியிருக்காவிட்டால் நான் அசட்டையாக இருந்திருப்பேன். நீங்கள் மறுத்ததால்தான் எனக்கு ஊக்கம் கிடைத்து, அந்தப் பறவையின் குரலை உறுதிப்படுத்தினேன்’ என்று அவருக்கு நன்றி தெரிவித்தேன். இப்போது 100% உறுதியாகிவிட்டது. ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் மட்டுமே அந்தப் பறவை இருக்கிறது. ஒரு பெரிய காப்புக்காட்டின் பகுதி அது. இந்தப் பறவை அங்கே காணப்படுவது தெரிந்தவுடன் அதை  லங்கமல்லேஸ்வர காட்டுயிர் சரணாலயமாக அறிவித்துவிட்டார்கள்.

அப்படியென்றால் அந்தப் பறவையினத்தைக் காப்பாற்றுவதற்கான முறையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன என்றுதானே சொல்ல வேண்டும்?
அப்படி இல்லை. நாங்கள் செய்ததில் மிகவும் முக்கியமான விஷயம் அந்தப் பறவை எப்படிப்பட்ட இடத்திலெல்லாம் இருக்கும் என்பதை நிர்ணயித்ததுதான். திறந்தவெளிப் புல் பரப்புகளில் அது இருக்காது. அடர்த்தியான புதர்களிலும் இருக்காது. குறிப்பிட்ட உயரமுள்ள பெரிய புதர்கள், சிறிய புதர்கள், இடையில் திடல்கள் என்று வித்தியாசமான வாழிடம் அந்தப் பறவைக்கு அவசியம் என்பதைக் கண்டுபிடித்தோம். மலைக்கு மேலல்ல, ஊரை அடுத்து மலையடிவாரத்தில்தான் இது போன்ற வாழிடங்கள் காணப்படும்.
இது போன்ற வாழிடங்களைச் செயற்கைக்கோளின் உதவியுடன் கண்டுபிடித்து அங்கெல்லாம் அந்தப் பறவையைக் கண்டறிவதற்காக மண் சுமந்துகொண்டுபோவோம். இதன் மூலமாக அந்தப் பறவையின் கால்தடங்கள் அந்த சரணாலயத்துக்குள்ளாகவே மூன்று இடங்களில் எனக்குக் கிடைத்தன.
இப்படியாக 2005-ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக மும்பை போய்விட்டுத் திரும்பிவந்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் காட்டின் உள்ளே ஒரு பொக்லைன் நின்றுகொண்டிருந்தது. தெலுங்கு-கங்கை கால்வாய்க்காக தோண்டப்பட்டுக்கொண்டிருந்தது. அது எந்த இடம் தெரியுமா? முதன்முதலில் கலுவிக் கோடியின் காலடித் தடத்தை நான் கண்டுபிடித்த இடம்; அதன் குரலை நேரடியாகக் கேட்டறிந்த இடம் அது. எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள்! எனக்கு உண்மையிலேயே அழுகை வந்துவிட்டது. உடனே பி.என்.எச்.எஸ் இயக்குநருக்கும், சுந்தர் என்ற டி.எஃப்.ஓ-வுக்கும் தகவல் தெரிவித்தேன். அந்த டி.எஃப்.ஓ துணிச்சல் மிக்கவர்.
பாசனத் துறையின் பொறியாளர்களிடம் இருந்தது பழைய வரைபடம். அரிய வகைப் பறவை ஒன்று அங்கே கண்டறியப்பட்டது, அதனால் அந்தப் பகுதி சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது போன்றவை தொடர்பாகப் பழைய வரைபடத்தில் ஏதும் இல்லை என்பதால், அவர்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அதற்குப் பிறகு இன்றுவரை அந்த இடத்தில் கலுவிக் கோடியை நான் பார்க்கவில்லை.
தண்ணீர் வேண்டும்தான், கால்வாய் வேண்டும்தான். ஆனால், மக்களா, காடா, பறவையா என்று என்னிடம் கேட்டால் முன்னுரிமை காட்டுக்கும் பறவைக்கும்தான். அதற்குப் பிறகுதான் மக்கள். மக்கள் உயிர்வாழ அவைதானே அடிப்படை! துரதிர்ஷ்டவசமாக, அதுபோன்ற புரிதல் இன்றுவரை பெரும்பாலானோரிடம் இல்லை. அதற்குப் பிறகு 2005-லிருந்து 2008வரை பதற்றமான ஒரு சூழலில்தான் அங்கே வேலைபார்த்தேன்.
                                          கலுவிக் கோடியின் தடத்தில் தெலுங்கு-கங்கை கால்வாய்

கால்வாய் அந்த வழியில் செல்வதைத் தடுத்து நிறுத்த முடிந்ததா?
இது சம்பந்தமாக நிறைய பேரைப் பார்த்து முறையிட்டோம். கடப்பா பகுதி காலஞ்சென்ற ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியுடையது. தெலுங்கு-கங்கா திட்டத்தை அந்த வழியே கொண்டுசெல்வதில் முனைப்பாக இருந்தார் அவர். அவரிடமும் முறையிட்டோம்.
இதையெல்லாம் பற்றி அறிந்த, சாங்சுவரி ஏசியா (Sanctuary Asia) காட்டுயிர் இதழின் ஆசிரியர் பிட்டு சாகல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கலுவிக் கோடியின் வாழிடம் வழியே இந்தக் கால்வாய் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது. கால்வாய் வேறு திசையில் சென்றது. சாதாரணமாக இரண்டு, மூன்று வாக்கியங்களில் சொல்லிவிட்டேன். ஆனால், இதற்கென்று நாங்கள் சந்தித்த இன்னல்களுக்கு அளவே கிடையாது.
தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது?
முன்பைவிட மோசமாகத்தான் இருக்கிறது. வனத்துறையினருக்கே சரியான புரிதல் இல்லை. பெரிய திட்டங்களெல்லாம் கொண்டுவரத் திட்டமிட்டால் இதுபோன்ற இடங்கள்தான் முதல் இலக்கு. இதுபோன்ற சமவெளியில் உள்ள தரைக்காடுகள், புதர்க்காடுகள் முதலிய வாழிடங்களை, சரியாக வளராத புதர்கள்தானே என்று நினைத்து இங்கெல்லாம் கைவைத்துவிடுவார்கள்.
இயற்கையைப் பொறுத்தவரை அடர்த்தியான காடுகள் மட்டுமல்ல, புதர்க் காடுகளும், ஒன்றுமே இல்லையே என்று நினைக்கத் தோன்றும் இயற்கையான புல்வெளிகளும்கூட முக்கியம்தான். தமிழ்நாட்டில் இயற்கையான புல்வெளிகளே இப்போது கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. அங்கிருந்த வெளிமான்கள், கானல் மயில்கள், சிவிங்கிப் புலிகள் போன்றவையும் மறைந்துவிட்டன.
அது போன்ற இடங்களெல்லாம் அரசாங்கப் பதிவேடுகளில் ‘பாழ்நிலம்’ (waste land) என்று குறிக்கப்பட்டிருக்கும். இயற்கையான நிலப்பரப்புகளில் எது ‘பாழ்நிலம்’? எது நல்ல நிலம்? அது போன்றுதான் கலுவிக் கோடி இருந்த இடங்களையும் ‘பாழ்நிலங்கள்’ என்று குறித்துவைத்திருந்தார்கள். கலுவிக் கோடியின் வாழிடங்களை வனத்துறைக்குக் கீழ் கொண்டுவந்த பிறகு, அந்தப் பறவையை என்னால் பார்க்க முடிந்ததே இல்லை.
கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?
2008 ஏப்ரலில்தான் அதன் குரலைக் கடைசியாகக் கேட்டேன். இத்தனைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கேமரா டிராப்களைக் காடு முழுவதும் வைத்தும்கூட இன்றுவரை ஒரு பறவைகூட தென்படவில்லை.
அப்படியென்றால் அந்தப் பறவை முற்றிலும் அழிந்துபோய்விட்டது என்கிறீர்களா?
இப்போதைக்கு அந்த இடத்தில் இல்லாமல் போயிருக்கலாம். அந்த மாதிரி காடுகள் ஆந்திரத்தில் நிறைய இடங்களில் இருக்கின்றன. அந்தக் காடுகளுக்கு இடம்பெயர்ந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, அந்தக் காடுகளையெல்லாம் பாதுகாக்க வேண்டும். என்னுடைய அடுத்த முயற்சி அதுதான்.
இவ்வளவும் செய்வது எதற்காக?
அந்தப் பறவையைக் காப்பாற்ற நினைப்பது என்பது காடுகளையும் காப்பாற்றுவதுதான். அந்தக் காடுகளில் மேலும் பல உயிரினங்கள் இருக்குமல்லவா? அது மட்டுமல்லாமல் ஊர் மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும், விறகு பொறுக்குவதற்கும் அங்கேதான் வருவார்கள். அதுவும் இல்லையென்றால் அடர் காடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன.
நமக்கு இருப்பது ஒரே ஒரு தாஜ்மஹால்தான். தாஜ்மஹால் நமக்குக் கலாச்சாரச் சொத்து. அதுபோல, கலுவிக் கோடி நமக்கு இயற்கைச் சொத்து. இவையெல்லாம் இருப்பது நமக்குப் பெருமை. ஆகவே, இவற்றைக் காப்பாற்றுவது நமது கடமை. இப்படி ஒரு பறவை இருந்தது. அதை எங்கள் காலத்தில் அழித்துவிட்டோம் என்று நமது வருங்காலச் சந்ததியினரிடம் சொன்னால், அதைவிட நமக்கு வெட்கக் கேடு வேறு எதுவும் இல்லை.
ஒவ்வொரு உயிரினத்துக்கும் இந்த உலகில் வாழ்வதற்கு உரிமை உண்டு. அதுவும் இந்தப் பறவை உலகிலேயே அரிய பறவைகளுள் ஒன்று. அதைப் பாதுகாத்தே ஆக வேண்டும். அது நமது கடமை.
இது போன்ற உயிரினங்களுக்காகக் காடுகளைப் பாதுகாப்பதால் நேரடியாக மனிதர்களுக்குப் பயன் ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் நிறைய ஆக்ஸிஜன் கிடைக்கிறது. ஆறுகள், ஓடைகளில் தண்ணீர் வருகிறது. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை வைத்தும் சொல்லலாம். ஆனால், அதைச் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமா? உண்மையில், இயற்கையின் எந்த அம்சத்துக்கும் விலை நிர்ணயிக்கவே முடியாது!
- இந்த நேர்காணலின் விரிவான வடிவம் ‘தி இந்து’ தீபாவளி மலரில் (2015) வெளியாகியிருக்கிறது.

Wednesday, October 28, 2015

வரலாற்றின் மிகச் சிறந்த இந்துவின் இந்து மதமா, மிக மோசமான இந்துவின் இந்து மதமா? (அல்லது) இந்துபாகிஸ்தான் ஜிந்தாபாத்!


ஆசை

இந்து மதத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான காலகட்டம், சவாலான காலகட்டம் எது?
புத்த மதமும் சமணமும் தோன்றி இந்து மதத்துக்கு சவால் விடுத்த காலகட்டமா? இஸ்லாமியப் படையெடுப்புகள் நிகழ்ந்து அதற்குப் பிறகு முகலாயர் ஆட்சி அமைந்த மூன்றரை நூற்றாண்டு காலமா?
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த மூன்று நூற்றாண்டு காலமா?
இந்து மதத்துக்குள்ளிருந்துகொண்டே சனாதனத்தின் மீது காந்தி தாக்குதல் நிகழ்த்திய காலகட்டமா? இந்து மதத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னும் வெளியேறியும் அதன் மீது கடுமையாக அம்பேத்கர் தாக்குதல் நிகழ்த்திய காலகட்டமா?

இவற்றில் எதுவும் இல்லை. இந்து மதத்துக்கு மிகவும் மோசமானதும், சவால்கள் நிறைந்ததும் தற்போதைய காலகட்டம்தான். ‘என்ன? இந்து மதத்தின் பழைய மகத்துவத்தையும் சக்தியையும் மீட்டுக்கொண்டு வரும் வகையில் நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு சர்வ அதிகாரமிக்க ஒரு இந்து அரசு அமைந்திருக்கும் இந்தக் காலம்தான் இந்து மதத்துக்குச் சவால் நிறைந்த, மோசமான காலமா? என்ன விளையாடுகிறீர்களா? பொற்காலத்தின் தொடக்கம் என்று சொல்லுங்கள்’ என்று பலரும் மறுத்துப் பேசலாம். இல்லையில்லை, இதுதான் இந்து மதத்துக்கு மிகவும் சவாலான காலகட்டம். சவால் விடுப்பவர்கள் முஸ்லிம்களோ கிறித்தவர்களோ இல்லை. இந்துத்துவர்கள்தான். அவர்கள் விடுக்கும் சவாலை இந்துக்கள் உட்பட அனைவரும் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதில்தான் இந்து மதம் இனி வரும் நூற்றாண்டுகளில் என்னவாக இருக்கப்போகிறது என்பது தீர்மானிக்கப்படும்.

பலவீனம்தான் பலம்
இந்தியா என்றால் ஒரு காலத்தில் சாமியார்கள் நாடு, பாம்பாட்டிகள் நிறைந்த நாடு, ஏழைகள் நிறைந்த நாடு என்ற பிம்பம்தான் இருந்தது. அந்த பிம்பத்தை மாற்றியது இந்திய சுதந்திரப் போராட்டமும் அதைத் தலைமையேற்றி நடத்திய காந்தியும்தான். மிகப் பெரிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எந்த ஆயுதமுமில்லாமல் ஒரு கிழவர் எப்படிப் பணியவைத்தார் என்பது உலகெங்கும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. இந்தியர்களின் ஆன்ம வல்லமை வியந்துநோக்கப்பட்டது. இந்தியர்களின் ஆன்ம வல்லமையை மீறியும் பிரிவினை ஏற்படுத்திய வடு இந்தியாவுக்குப் புதிதாகக் கிடைத்த சுதந்திரத்தையும் புதிய பிம்பத்தையும் சிதைப்பதாக இருந்தது. கிட்டத்தட்ட பாகிஸ்தான் மக்கள்தொகை அளவுக்கு இந்தியாவிலும் முஸ்லிம்கள் எஞ்சியிருந்தனர். கிறிஸ்தவர்களும் கணிசமாக இருந்தனர். அது மட்டுமல்லாமல், ஏராளமான மொழிகள், இனங்கள் என்று பிளவுகளுக்கும் வேறுபாடுகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆகவே, சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளிலேயே இந்தியா சுக்குநூறாக உடைந்துவிடும் என்றே மேலை நாடுகள் ஆரூடம் சொன்னார்கள். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் அந்த ஆரூடத்தை அவர்கள் மறுபடியும் புதுப்பித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் இந்தியா அப்படியேத்தான் இருக்கிறது. சிலபல மோசமான பிரச்சினைகள் நீடித்தபோதும் இந்தியா சிதைந்துபோகவில்லை. என்ன காரணம்? அதுதான் இந்தியாவின் பன்மைத்தன்மை. எவற்றைப் பிளவுகளாக மேலை உலகமும் இந்தியாவின் அழிவை எதிர்பார்த்தவர்களும் கருதினார்களோ அவற்றைப் பிளவுகளாகக் கருதாமல் இந்தியாவின் ஒருங்கிணைக்கும் நூலிழையாகச் சரியாகக் கண்டுகொண்டவர் காந்தி. ‘பன்மைத்தன்மை’ என்ற அந்த நூலிழையை வலுவான துணியாக நெய்தவர் காந்தி. எவ்வளவோ பிரச்சினைகளுக்குப் பிறகும் இந்தியா சிதையாமல் இருப்பதற்குக் காரணம் இந்தப் பன்மைத்துவத்தை அது தனது பலமாக நினைப்பதால்தான். அதன் ஆன்ம வல்லமையின் ஊற்று அதுதான். இதனால்தான் அன்றைய மீரா பென்னிலிருந்து நேற்றைய ஸ்டீவ் ஜோப்ஸ் வரை இந்தியாவைத் தேடி வந்தார்கள்.

பன்மைத்தன்மையின் அற்புதம் குறித்து ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நான் குடியிருந்தது பெரும்பான்மையாக கிறித்தவர்கள் வசிக்கும் தெருவில். கார்கில் போர் முடிந்த சமயத்தில் நானும் எனது நண்பர்களும் களிமண்ணில் ‘கார்கில் பிள்ளையார்’ செய்து தேர்போல இழுத்துக்கொண்டு நாங்கள் குடியிருந்த பெரிய கிறித்தவத் தெரு வழியாகப் போனோம். வழிநெடுகவும் இரு பக்கமும் கிறித்தவர்கள் அந்தப் பிள்ளையாரை வழிபட்டு, சிலர் திருநீற்றை எடுத்துக்கொண்டதுடன் எங்கள் உண்டியலில் காசும் போட்டனர். 99% கிறித்தவர்கள் இருக்கும் அந்தத் தெருவில் பிரச்சினை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் பிள்ளையாரை இழுத்துச்சென்றோம். காலம்காலமாக எங்களுடன் வாழ்ந்துவரும் அந்த கிறித்தவ நண்பர்கள், தாய்மார்கள் எங்கள் எண்ணத்தில் கரியைப் பூசி அவர்கள் நெற்றியில் திருநீற்றை இட்டுக்கொண்டார்கள். பங்குத்தந்தை கூட அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்தான். ஆனால், தெருவாசிகள் அப்படித்தான். அந்தக் கிறித்தவக் குடும்பங்களுடன் 50 கி.மீ. நடந்து எங்கள் அம்மா 20 ஆண்டுகளாக வேளாங்கண்ணி சென்றுவந்தார். நான் கூட கோயிலுக்குப் போக மாட்டேன். ஆனால், எங்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்த கிறித்தவர்கள் எங்கள் அம்மாவுடன் முத்துமாரியம்மன் கோயிலுக்குச் செல்வார்கள். இதெல்லாம் கதை இல்லை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், கார்கில் பிள்ளையாரை இப்போது அந்த கிறித்தவத் தெருவில் என்னால் இழுத்துச்செல்ல முடியுமா? எவ்வளவு அற்புதமான பந்தத்தை நாம் இப்படிச் சிதைத்துவிட்டோம். அதுவும் இந்து மதத்தின் பெயரால்.

காந்தியின் இந்து மதம்
காந்தி தன்னை இந்துவாகவே கருதினார். இந்து மதத்தை மற்ற சனாதன இந்துக்கள் பார்த்தது போல் அவர் பார்க்கவில்லை. இந்து மதத்திலும் இந்து மத வேதங்களிலும் தனக்குப் பிடித்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, பிடிக்காத கருத்துக்களை விட்டுவிட்டு அதை அற்புதமான நடைமுறை வடிவத்துக்குக் கொண்டுவந்தார். இதையே இந்து மதத்தின் வலிமை என்று சொல்லவும் செய்தார்.

காந்தியின் இந்து மதம் என்ற கருத்தாக்கம் அற்புதமானது. பெரியாருக்கும் காந்திக்கும் இடையிலான உரையாடல் ஒன்று இதை மேலும் தெளிவாக்கும். அந்த உரையாடலில், இந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று வாதிடுகிறார் பெரியார். கோட்பாட்டளவில் அப்படி இருந்தாலும் நடைமுறையில் இந்து மதம் என்ற ஒன்று இருக்கத்தானே செய்கிறது என்கிறார் காந்தி. மற்ற மதங்களில் அருளப்பட்ட வேதம், மையம் என்ற ஒன்று இருக்கிறது; இந்து மதத்தில் அப்படி இல்லையே என்கிறார் பெரியார். இது நல்ல விஷயம்தானே. மற்ற மதங்களின் வேதங்களில் ஒரு வரியை மாற்றினாலும் தொலைத்துக்கட்டிவிடுவார்கள். இந்து மதத்தில் மையமாக ஏதும் இல்லை என்பதால் நம் காலப்போக்குக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து, எல்லாவற்றையும் அரவணைத்துத் தழுவிக்கொண்டு போகலாம். இது ஜனநாயகரீதியில் அற்புதமான விஷயம் அல்லவா என்று காந்தி கேட்டிருக்கிறார். 

இந்து மதத்தைத் தனக்குப் பிடித்த வகையில், ஆக்கபூர்வமான வழியில் எடுத்துக்கொண்டார் காந்தி. இன்னும் சொல்லப்போனால் விமர்சனபூர்வமாகவும் இந்து மதத்தை காந்தி அணுகினார். இந்துத்துவர்களோ அதை எதிர்மறையான வழியில் மட்டுமே தங்களுக்கு உகந்த விதத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். இறுகிப்போனவர்களால் தங்கள் கோட்பாடுகளை விமர்சனபூர்வமாகப் பார்க்கவே முடியாது.

இஸ்லாமிய வெறுப்பு
இஸ்லாமிய-கிறித்தவ வெறுப்பு. இதில் இஸ்லாமியர்களைத்தான் பெரும் எதிரிகளாக இந்துத்துவர்கள் கருதுகிறார்கள். இந்துத்துவ வெறியர்களைக் கேட்டால் இஸ்லாமியர்களை அழித்தொழிக்க வேண்டும் அல்லது அவர்களை பாகிஸ்தானுக்குத் துரத்த வேண்டும் என்பார்கள். மிதமான இந்துத்துவர்களைக் கேட்டால் ‘அவர்கள் இங்கேயே இருக்க வேண்டுமென்றால் வாலை சுருட்டிக்கொண்டு நமக்குப் பணிந்து அமைதியாக இருக்க வேண்டும்’ என்பார்கள். இந்த இரண்டு தரப்பிலிருந்தும் நமக்குத் தெளிவாகப் புலப்படும் விஷயங்கள் இவை: 1. அடுத்தவர் என்பவர் (அதாவது இந்து அல்லாதவர்) நம்மை விடக் கீழானவர். நாம்தான் உலகிலேயே மேல் என்னும் பாசிசக் கருத்து. 2. இஸ்லாமியர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. 3. மற்ற மதங்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவற்றிடம் சகோதரத்துவத்தை போதிக்கும் வல்லமையும் தேவையும் (தங்கள்) இந்து மதத்துக்கு இல்லை.
இதை அப்படியே காந்தியின் கீழ்க்கண்ட கருத்துக்களுக்குப் பொருத்திப் பாருங்கள்.            

“சமய உறவுகளில் ‘சகிப்புத்தன்மை’ (tolerance) என்கிற சொல் எனக்குப் பிடித்ததல்ல. ‘சமரசம்’ (compromise) என்கிற சொல்லிலும் ஒருவரின் மதத்தைவிட மற்றவரின் மதம் தாழ்வானது என்கிற பொருள் வந்துவிடுகிறது. மாறாக நமது சமயத்தின்பால் நமக்குள்ள நன்மதிப்பை மற்ற மதங்களின்மீதும் காட்ட வேண்டும் என்று என் அஹிம்சைக் கோட்பாடு வற்புறுத்துகிறது. இந்த நோக்கில் நம் சமயத்திலுள்ள குறைபாடுகளையும் நாம் ஏற்க வேண்டும். எல்லா மதங்களும் சமமானவை என ஏற்பது சமயங்களுக்கிடையே வித்தியாசங்களை நீக்குவது அல்ல.”

இவற்றை இந்துத்துவர்களால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியுமா? அவர்களுக்குத்தான் இந்து மதத்தின் வல்லமை மீதும், சமத்துவ சகவாழ்வு மீதும் நம்பிக்கையே இல்லையே. பேருந்தில் நமக்குப் பக்கத்து இருக்கையில் அமர்கிறவரையே ஆக்கிரமிப்பாளராகக் கருதி, எதிரியாக நினைத்துக் கைப்பிடியைக் கைவசப்படுத்தப் போராடுபவர்கள் நாம். பேருந்தை இந்தியாவாகக் கருதினால் இந்துத்துவர்களைக் கைப்பிடிக்காகப் போராடுபவர்கள் என்றுதான் கருத வேண்டும். காந்தியோ கைப்பிடியை மற்றவரிடம் விட்டுக்கொடுப்பதன் மூலம் நீங்கள் எதையும் இழந்துவிட மாட்டீர்கள்; ஆனால், அன்பை சம்பாதிப்பீர்கள் என்றிருப்பார்.

வாஜ்பாய் உள்ளிட்ட சில இந்துத்துவர்களும் முஸ்லிம்களை ஏற்றுக்கொள்வதைப் பற்றிப் பேசுகிறார்கள். நல்ல விஷயம்தானே! ஆனால், எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் தெரியுமா? அவர்களின் தனித்துவ அடையாளங்களை அழித்துவிட்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். அதாவது நம் வீட்டுக்கு வரும் விருந்தாளி, தான் டீ குடிப்பது மட்டுமே வழக்கம், காப்பி குடிப்பதில்லை என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நாமோ டீ குடிப்பதில்லை, காபிதான் குடிப்போம். நல்ல விருந்தோம்புநர் என்ன செய்வார்? தனக்கு டீ பிடிக்காது என்றாலும் விருந்தினருக்கு டீ தயாரித்து, அல்லது வாங்கி வந்து கொடுப்பார். அல்லது தங்கள் வீட்டில் டீ தயாரிப்பதில்லை, மன்னித்துவிடுங்கள் என்றாவது சொல்லிவிடுவார். ஆனால், விருந்தினரிடம் வலுக்கட்டாயமாக காபியைக் கொடுத்துக் குடிக்கச் சொல்வாரா? இந்துத்துவர்கள் அப்படி சொல்கிறார்கள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் கிறித்தவர்களும் விருந்தாளிகள் இல்லை. நம் சகோதரர்கள். நம் வீட்டில் நமக்கு இருக்கும் உரிமை அவர்களுக்கும் இருக்கிறது. நம் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, தாங்கள் ஒதுக்கப்படுவதாக, வஞ்சிக்கப்படுவதாக அவர்கள் உணரும்போது அவர்களில் வெகுசிலர் தங்கள் உணர்வை மிக மோசமான வழிமுறைகளில் வெளிப்படுத்தியிருக்கலாம், இந்துக்களில் சிலரும் அப்படி மோசமான வழிமுறைகளை மேற்கொள்வதுபோல. முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் மீது பயங்கரவாதச் செயல்களைக் கட்டவிழ்த்துவிடும் ஒருசில இந்துத்துவவாதிகளுக்கும் பெருபான்மையான அமைதியான இந்துக்களுக்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அதே போல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் ஒருசில முஸ்லிம்களுக்கும் அமைதியாக வாழ விரும்பும் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரும் கலந்து வசிக்கும் எல்லா தேசங்களிலும் நடப்பதுபோலத்தான் இந்தியாவிலும் நடக்கிறது. பெரும்பான்மையினர் தங்களைச் சூழ்ந்திருப்பதே சிறுபான்மையினரின் அச்சத்துக்கு முதல் காரணமாகிறது. அடுத்ததாக, பெரும்பான்மையினரின் ஆதிக்கம் சிறுபான்மையினரில் சிலரை வன்முறைப் பாதையில் ஈடுபடத் தூண்டுகிறது. யாரோ சிலர் அப்படி ஈடுபடும்போது சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான வாய்ப்பாக அதைப்  பயன்படுத்திக்கொண்டு பெரும்பான்மையினர் மூர்க்கமாகச் செயல்பட பிரச்சினை பூதாகரமாகிறது. விளைவு இரண்டு தரப்பிலும் அமைதியின்மை. சமூகப் பிளவு. தீவிரம் அதிகரித்தால் இன அழிப்பு. வேறு எங்கும் போக வேண்டாம். இலங்கையைப் பாருங்கள். விடுதலைப்புலிகள் மிகவும் மோசமான வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள்; மன்னிக்கவே முடியாதுதான். ஆயினும் அவர்களை அந்த நிலைக்குத் தள்ளியது அங்குள்ள பெரும்பான்மைச் சமூகத்தின் மூர்க்கமான ஆதிக்கப் போக்குதான் இல்லையா!

ஆனால், காந்தி இதற்கெல்லாம் அற்புதமான ஒரு மாற்று மருந்தை நமக்களித்திருந்தார். அகிம்சை வழியில் சமாதானமான சகவாழ்வு. அந்த வழியில் போய் சிறுபான்மையினரைத் தழுவிக்கொள்ளும் இந்து மதம் உயர்ந்ததா? சிறுபான்மையினரை எதிரியாகக் கருதி அழித்தொழிக்கவோ, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவோ நினைக்கும் இந்து மதம் உயர்ந்ததா?

முஸ்லிம்களுக்கு காந்தி ரொம்பவும் இடம்கொடுத்துவிட்டார்; அவர்கள் செய்யும் தவறை அவர் தட்டிக்கேட்டதேயில்லை என்று இந்து அடிப்படைவாதிகள் அன்றிலிருந்து இன்றுவரை குற்றம்சாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிறுபான்மை-பெரும்பான்மை விஷயத்தில் காந்தி சொன்ன இந்த வார்த்தைகளை ஒவ்வொரு இந்தியரும் தங்கள் வீட்டில் எழுதித் தொங்கவிட வேண்டும்: “நான் எப்போதுமே சிறுபான்மையினர் தரப்புடன் இருக்கவே விரும்புவேன். ஏனென்றால் சிறுபான்மையினர் தவறிழைக்க வாய்ப்பில்லை. அப்படியே தவறிழைத்தாலும் அதைத் திருத்திக்கொள்ள முடியும். ஆனால், பெரும்பான்மையினரைப் பொறுத்தவரை அதிகாரபோதை, ஆதிக்க போதை அவர்களின் தலைக்கேறுமென்றால் என்றால் அதைத் திருத்துவது மிகமிகக் கடினம்.” காந்தி எச்சரித்த தருணம் இன்று உருவாகியிருக்கிறது. இந்தத் தருணம் இந்து மதத்தின் கிளையில் உட்கார்ந்துகொண்டு அதன் அடிமரத்தை இந்துத்துவம் வெட்டும் தருணம்.

நம் மீது கோபம் வரவில்லையே?
நம்மை அடக்கியாண்ட முஸ்லிம் மன்னர்கள், கிறித்தவர்களான ஆங்கிலேயர்கள் ஆகியோரின் மீதுள்ள கோபத்தை இன்றுள்ள முஸ்லிம்கள் மீதும் கிறித்தவர்கள் காட்டுகிறோம். உண்மையில் அவர்களில் பெரும்பாலானோர் சில தலைமுறைகளுக்கு முன்பு இந்துக்களாக இருந்தவர்களே. அவர்களுக்கும் முஸ்லிம் மன்னர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் என்ன சம்பந்தம்? நம் பூர்வ சகோதரர்கள் அல்லவா அவர்கள்!

முஸ்லிம்களும் ஆங்கிலேயரும் சேர்ந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக நம்மை அடக்கியாண்டு பெருங்கொடுமைக்குள்ளாக்கிவிட்டார்கள் என்பதுதான் இன்று அவர்கள் மீது இந்துத்துவர்களுக்கு இவ்வளவு கோபம் எழுவதற்குக் காரணம். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் இந்து மக்களிலேயே பெரும் பிரிவினரைச் சூத்திரர்களென்றும், அதைவிடக் கொடுமையாக இன்னும் பலரை பஞ்சமர்கள் என்றும் இந்து மதத்தின் பெயரால் கொடுமைப்படுத்திவருகிறோமே, அதற்கு யார் மீது கோபப்படுவது? முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் எதிரிகளாக அடையாளம் காண்பதற்குப் பதில் நம்மிடம் உள்ள சாதியத்தையல்லவா நமது பெரும் எதிரியாக நாம் கருதியிருக்க வேண்டும். நம்மைச் சேர்ந்தவர்களையே கீழான இழிநிலைக்கு ஆளாக்கிவிட்டு முஸ்லிம்கள் மீது மட்டும் கோபம் கொள்வதில் சிறிதும் தார்மிக உரிமை நமக்கு இல்லை. இன்றைக்கு சாதியாவது ஒன்றாவது என்று கேட்பவர்களைப் பார்த்து கயர்லாஞ்சியும் தர்மபுரியும் யுவராஜும் கெக்கொலிகொட்டிச் சிரிக்கவில்லையா? சாதியின் பெயரால் நம்மவர்களுக்கு நாம் இழைத்துவரும் கொடுமையைவிடவா பிறர் நமக்கு இழைத்துவிட முடியும்?

இந்து பாகிஸ்தான்
இந்தியப் பிரிவினையையொட்டி நிகழ்ந்த கலவரங்களின்போது தனிநபர் ராணுவமாக நவகாளிக்குச் சென்று முஸ்லிம்களிடமிருந்து இந்துக்களையும் பிஹாருக்குச் சென்று இந்துக்களிடமிருந்து முஸ்லிம்களையும் காப்பாற்றினார். இது நடக்கும்போது அவருக்கு 78 வயது. எந்தவொரு முஸ்லிமையும் விட அதிக அளவிலான முஸ்லிம்களை அவர் காப்பாற்றியிருக்கிறார். எந்த ஒரு இந்துத்துவரை விடவும் அதிக அளவிலான இந்துக்களை அவர் காப்பாற்றியிருக்கிறார். அவரை விட யாரும் இந்து மதத்துக்கு உரிமை கோரிவிட முடியாது. ‘இந்தியாவை இந்து பாகிஸ்தான் ஆக்கிவிடாதீர்கள்’ என்று திரும்பத் திரும்பக் கதறினார் அந்த மனிதர். அவர் சொன்னது இந்துத்துவவாதிகளின் காதில் விழவே இல்லை. அவர்களின் காதுகேளாமையால்தான் உயிரிழந்தார் காந்தி. இந்து மதத்துக்குக் கருணையுள்ள, பரிசுத்தமான முகத்தைக் கொடுக்க நினைத்ததால் கொல்லப்பட்டார். அதனால்தான் அவர் வரலாற்றிலேயே சிறந்த இந்து. அதனால்தான் அவரைக் கொன்றவன் வரலாற்றிலேயே மோசமான இந்து.

கருணையில், அன்பில், விருந்தோம்பலில், நட்பில், பன்மைத்தன்மையில் தலைசிறந்த நாடாக உலகமே இந்தியாவை வியந்து பார்த்திருக்கிறது. லட்சக் கணக்கான மேற்கத்தியர்கள் இந்தியாவுக்கு வருவது உலகுக்கே ஞானத்தையும் அன்பையும் போதித்த நாடு என்பதனால்தான். அந்தப் பண்பை அழித்துவிட்டு இந்தியாவையோ இந்து மதத்தையோ உலக அரங்கில் தலை நிமிரச் செய்துவிட முடியும் என்றும், அப்படிச் செய்வதன் மூலம் உலகின் ஆதிக்க சக்தியாக இந்தியாவைத் தலையெடுக்கச் செய்துவிட முடியும் என்றும் இந்துத்துவர்கள் உறுதியாக நம்புவது விசித்திரம்தான்.

காந்தி படுகொலையில் இந்துத்துவர்கள் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை! அவரது ரத்தம் சில பத்தாண்டுகள் அவர்களின் செயல்திட்டத்தை அடித்துக்கொண்டு போய்ப் பின்னுக்குத் தள்ளியதை அவர்கள் உணரவே இல்லை. இந்த முறை காந்தி இல்லை, நம் செயல்திட்டம் எளிதில் நிறைவேறிவிடும் என்று அவர்கள் நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்காது. இந்தியா முழுதும் அவரது ரத்தம் படர்ந்திருக்கிறது. அது மீண்டும் மீண்டும் அவர்களை வீழ்த்திக்கொண்டே இருக்கும், அவர்கள் எவ்வளவு பலத்துடன் இருந்தாலும்.


இப்போது இந்துத்துவர்கள் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது. அவர்கள் உண்மையாக இந்து மதத்தை நேசிப்பவர்களாக இருந்தால், அதைக் காப்பாற்ற நினைப்பவர்களாக இருந்தால் வரலாற்றிலேயே சிறந்த இந்து ஒருவரின் இந்து மதத்தைப் பின்பற்றியே ஆக வேண்டும். அவரது இந்து மதம் மற்ற எல்லா மதங்களையும் அவர்களுடைய அடையாளங்களுடனேயே ஏற்றுக்கொள்வது, சமமாக பாவிப்பது, ஏற்றத்தாழ்வு அற்றது.  உண்மையில் இந்த இயல்புதான் இந்து மதத்தை இவ்வளவு நாட்களாகக் காப்பாற்றிவந்திருக்கிறது. இல்லை, வரலாற்றிலேயே மிகச் சிறந்த இந்துவைச் சுட்டுக்கொன்ற மிக மோசமான இந்துவைத்தான் பின்பற்றுவோம் என்று பிடிவாதமாக இருந்தால் இந்து மதம் இந்துத்துவர்கள் கையாலேயே அழிவதை யாராலும் தடுக்க முடியாது.

Monday, October 26, 2015

மவுனமும் குற்றமாகிவிடும்




ஷிவ் விஸ்வநாதன்

உண்மைக்கு உண்மையாக இருப்பதென்பது ஒரு எழுத்தாக்கத்துக்கு அத்தியாவசியமானது என்பதை 88 வயது எழுத்தாளர் நயன்தாரா ஷாகல் இந்தியாவுக்கு நினைவுபடுத்தியிருக்கிறார். மறுப்பு என்பது துணிச்சலான ஒரு செயல்; பெரும் போக்குக்கு எதிராக நிற்பது; வம்பர் மனப்பான்மை கொண்டிருக்கும் பெரும்பான்மையை எதிர்கொள்வது. மறுப்பு என்பது ஒற்றை ஆளாக நிற்பது, பெரும் கூட்டத்தை எதிர்கொள்வது; அந்த தருணத்தில் ஒற்றைக் குரல் என்பது சூழ்ந்திருக்கும் மவுனத்தையே ஊடுருவித் துளைத்துவிடும்.  

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தியாவில் உள்ள பலரும் ‘மறுப்பின் மீதான பொறாமை’ என்ற வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நயன்தாரா ஷாகல் தனது எதிர்ப்பைத் தெரிவித்த அடுத்த நொடியே சிலர் அதனை சிறுபிள்ளைத்தனமான குமுறல் என்றோ பணக்காரர் ஒருவரின் குமுறல் என்றோ சொல்லி நிராகரிக்க விரும்புகிறார்கள். அவர்களின் உத்திகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. சிலர் இதனை ‘தேர்ந்தெடுத்த கோபவெளிப்பாடு’ என்கிறார்கள். நாம் தொழில்முறை மறுப்பாளராக இருக்க வேண்டும் என்கின்றன இந்த விமர்சனங்கள். அநீதிகள் விஷயத்திலும் கூட நாம் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதற்காகப் போராடலாம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேயில்லை. நேரு யுகத்தால் பயனடைந்தவர் அவர் என்கிறார்கள் பலரும். அப்படித்தான் என்றாலும், நேரு தலைமுறையைச் சேர்ந்தவர்களில் பலரைப் போல அல்லாமல் தனக்கே உரித்தான சாதனைகளுக்குச் சொந்தக்காரர் நயன்தாரா. தனிக்கவனம் கொடுத்த நாம் ஊன்றிநோக்க வேண்டிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் நயன்தாரா. அந்த வாழ்க்கைக்குத் தற்போது மேலும் அழகும் துணிவும் சேர்த்திருக்கிறார்.

Thursday, October 22, 2015

ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடம் ஒரு உரையாடலை நாம் தொடங்கியே ஆக வேண்டும்! பத்ரி கட்டுரையை முன்வைத்து...

ஆசை



‘இந்திய நாத்திகர்கள்’ என்ற தலைப்பில் சமீபத்தில் பத்ரி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் (பத்ரியின் கட்டுரையைப் படிக்க இந்த இணைப்புக்குச் செல்லவும்: http://www.badriseshadri.in/2015/10/blog-post.htmlபத்ரியிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை. வரவேற்கிறேன். அதே நேரம் இந்துத்துவவாதிகள் மீதான எதிர்ப்பை வலுவாக அவர் பதிவுசெய்யவில்லை. இருந்தாலும் அந்த முகாமிலிருந்து இப்படியாவது ஒருவர் எழுதியிருப்பது குறித்து மகிழ்ச்சி. 

பத்ரியின் இந்த வாதத்தையும் கொஞ்சம் கட்டுடைத்தால் பார்ப்பனியம், இந்துத்துவம் போன்றவற்றின் கூறுகளை நாம் கண்டுபிடிக்கலாம். ஆனால், காலம்காலமாக நாம் இப்படித்தான் செய்துவருகிறோம். எதிர் தரப்பிலிருந்து சற்றே மாறுபட்ட கருத்து வரும்போதும் அந்தக் கருத்தில் தவறான உள்நோக்கத்தைக் கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டாமல், ‘சரி இந்த அளவிலாவது வருகிறதேஎன்று வரவேற்றால் ஒரு பொதுவான உரையாடல் நிகழ்வதற்குச் சாத்தியம் ஏற்படும் என்று நினைக்கிறேன். நாம் பேசியபோது காதுகளை இறுக்கமாக மூடிக்கொண்டவர்கள், இப்போது பத்ரி போன்றவர்கள் சிறிதளவாவது பேசும்போது கொஞ்சமாவது செவிமடுக்க ஆரம்பிப்பார்கள். அந்த இடத்தைச் சிக்கென்று பற்றிக்கொண்டு ஆரோக்கியமான உரையாடலை நாம் ஆரம்பிக்க வேண்டும். கட்டாயமாக உரையாடல் நிகழ்த்தியாக வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஏனெனில் அதிகாரம், அதுவும் இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக இந்து அரசு ஒன்றுக்கு வானளாவிய அதிகாரம் கிடைத்திருக்கிறது. எதை வேண்டுமானாலும் செய்வார்கள், செய்கிறார்கள். இந்தத் தருணத்தில் நம் முன் நான்கு வழிகள் உள்ளன. 1. ஜனநாயகபூர்வமான முறையில் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டிருத்தல், 2. வன்முறை மூலம் எதிர்த்தல், 3. (எதிர்த்தரப்பின் மேல் கடும் கோபமும் விமர்சனமும் இருந்தாலும்கூட எதிராளியைச் சட்டென்று குற்றவாளிக்கூண்டில் நிப்பாட்டும் உத்தியைத் தவிர்த்துவிட்டு) திறந்த மனதுடனும் Good Faith அடிப்படையிலும் ஒரு உரையாடல் நிகழ்த்துதல், 4. சும்மா இருத்தல்.


இந்த வழிமுறைகளில் முதலாவதையும் மூன்றாவதையும் சரிவிகிதத்தில் கலந்து செயல்படுத்தினால் சற்றேனும் மாற்றம் ஏற்படக்கூடும் என்று நம்புகிறேன். மூன்றாவது வழிமுறையை வைத்து என்னையும் கூட கட்டுடைத்து விமர்சிக்க முடியும். ‘அதெப்படி, பாபர் மசூதியை இடித்துத் தொடர் கலவரங்களுக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் காரணமானவர்கள், குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றவர்கள், இன்று மாட்டுக்கறி பிரச்சினையிலும் கருத்து சுதந்திரத்திலும் மூர்க்கமாக நடந்துகொண்டிருப்பவர்களைக் குற்றம் சாட்டாமல் சாத்விகமாகப் பேசுவதா? மிதமான இந்துத்துவாவாதியின் பேச்சு போல் இருக்கிறதேஎன்று என்னையும் சுட்டிக்காட்டி எளிதாகப் பேசிவிட முடியும். அவர்கள் செய்ததை நம்மால் மறைக்கவோ அவர்களால் மறைக்கவோ முடியாதுதான். அவர்களின் கொடூரத்துக்கு வரலாற்றில் அவர்களால் பதில்சொல்ல முடியாதுதான். ஆனால், என்ன செய்வது, இன்று அவர்கள் வரலாற்றையும் சட்டங்களையும் உருவாக்கும் அல்லது அழிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். நாம் அவர்களுக்குச் சரியாக எதிர் தரப்பில் இருக்கிறோம். எடுத்தவுடன் குஜராத் கொலைவெறியர்களே என்று ஆரம்பித்தால் அவர்களுக்கு அடுத்த வரியைப் படிக்க பொறுமை இருக்காது. அடுத்த வாதத்தைக் கேட்க பொறுமை இருக்காது. ‘நண்பரே, நான் சொல்வதைக் கொஞ்சம் காதுகொடுத்துக் கேட்பீர்கள் என்று நம்புகிறேன்என்று சொன்னால் அடுத்தததாக நாம் சொல்லப்போவதை அவர்கள் கேட்பதற்குச் சிறிதளவாவது வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்தத் தரப்பில் பத்ரி போன்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நாம் தணிவாகப் பேசிச் சூழலின் கடுமையை அவர்களிடத்தில் எடுத்துக் கூறினால் பத்ரியைப் போன்றவர்களாவது சற்றே நகரக்கூடும். இம்முயற்சி தோற்றும்போகலாம். ஆனால், ஜனநாயகத்துக்குட்பட்டு இந்த முயற்சியளவுக்கு வெற்றிகரமாகச் செயல்படும் (சிறிதளவே வெற்றி என்றாலும்), வேறொரு வழிமுறை எனக்குத் தெரியவில்லை. இந்தத் தருணத்தில் வன்முறையைத் தவிர்த்த எந்த வழிமுறையையும் முயற்சித்துப் பார்ப்பதால் நமக்கு இழப்பு அதிகம் இருக்காது என்றே தோன்றுகிறது.

சமீப காலமாக நான் மிகவும் நிம்மதி இழந்துபோயிருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உள்ளிட்ட வலதுசாரிகளின் மனசாட்சியை நோக்கி, இதயத்தை நோக்கி எப்படிப் பேசுவது என்பதைக் கண்டறிய முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அந்த முயற்சிகளில் ஒன்றாக சமீபத்தில் ஒன்றைச் செய்தேன். வலதுசாரியும் நண்பருமான ஒரு பெண்மணி தொடர்ந்து ஏதாவது ஒரு வடிவத்தில் இஸ்லாமியர் மீதும், சாகித்ய அகாதமி விருதைத் திருப்பிக்கொடுக்கும் எழுத்தாளர்கள் மீதும் வெறுப்பைக் கக்கும் பதிவுகளாகப் போட்டுக்கொண்டுவந்தார். தலித் குழந்தைகள் எரிக்கப்பட்ட சம்பவத்திலும் தொடர்ந்து கிண்டலடித்துக்கொண்டே வந்தாரே ஒழிய அந்தக் குழந்தைகள் எரிக்கப்பட்டதற்கு எந்தக் கண்டனமும் இல்லை. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என்னுடன் பழகியபோது அவரிடம் தெரிந்த இனிமை முஸ்லிம், தலித் என்று வரும்போது எங்கே போயிற்று? இரக்கம், மென்மை போன்ற உணர்வுகள் இல்லாதவரா அவர்? நிச்சயம் அப்படி இல்லை. அவர் குழந்தைகள், கணவர், உறவினர், என்னைப் போன்ற நண்பர்கள் எல்லோரிடமும் அவரின் இரக்கமும், மென்மையும் வெளிப்படும். அதை அந்த அளவோடு நிறுத்திக்கொண்டுவிட்டார். அதை இன்னும் கொஞ்சம் விரித்துக்கொண்டே சென்றால் தலித்கள், கிறித்தவர்கள், முஸ்லிம்கள், பாகிஸ்தான் முஸ்லிம்கள், உலகத்தின் அத்தனை மக்கள் என்று விரிந்துகொண்டே போகும். ஆனால், அது ஒரு அளவில் மட்டும் நின்றுவிட்டது. அவ்வளவுதான். அவரிடம் உரையாடல் நிகழ்த்தியே ஆக வேண்டும். அவருடன் நான் நிகழ்த்திய உரையாடலின் தமிழ் வடிவம் இங்கே:

“நான் காங்கிரஸ், பாஜக இரண்டையும் வெறுக்கிறேன். (ராஜீவ் காந்தி காலத்திலும் ராகுலின் காலத்திலும் குடிசைகள், வறுமை மாறவேயில்லை என்று தலித் குழந்தைகள் எரிக்கப்பட்டதைப் பார்க்க வந்த ராகுலின் படத்தை வைத்துக் கிண்டலடித்திருக்கிறீர்கள்.) இப்போது பாஜக ஆட்சிக்கு வந்து வறுமையை ஒழித்துவிட்டது என்றே நம்புகிறேன். அல்லது வறுமையை ஒழிக்கும் என்று நம்புகிறேன் (அதாவது அம்பானி, டாடா போன்றவர்களின் வறுமையை). ராகுலின் அரசியல் நாடகங்களை விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால், கொடூரமாக இரண்டு தலித் குழந்தைகள் எரித்துக்கொல்லப்பட்டதைக் கண்டிப்பதற்கான இதயம் உங்களுக்குக் கொஞ்சமும் இல்லையா? என்னைப் பொறுத்தவரை இஸ்லாமியப் பயங்கரவாதத்தைப் போல, சாதி என்பது இந்து பயங்கரவாதம், இது குறித்து நான் குற்றவுணர்வு கொள்கிறேன். மதத்தின் ஒரு அம்சமான சாதியின் பெயரால் என்னுடைய முன்னோர்கள், தலித்களுக்கு இழைத்த அநீதியைக் குறித்தும், என்னுடைய தற்போதைய தலைமுறையினர் தலித்களுக்கு இழைத்துவரும் அநீதியைக் குறித்தும் நான் மிகுந்த குற்றவுணர்வு கொள்கிறேன். ஆனால், ஒரு சமூகமாக குற்றவுணர்ச்சி அற்றவர்களாக ஆகிவிட்டோம் நாம். இந்த விஷயத்தில் ஜெர்மனியின் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. உலகப்போர்களுக்காகவும், யூத இன அழிப்புக்காகவும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் குற்றவுணர்வை பிரம்மாண்டமாக முன்னெடுத்து வைக்கிறார்கள், நினைவுகூர்கிறார்கள்.

சாதி, மதம், சித்தாந்தம் என்று எந்த அடிப்படையிலும் வன்முறை நடந்தாலும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். இந்த அடிப்படையில் எனக்கு இந்து பயங்கரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், மாவோயிஸ பயங்கரவாதம் எல்லாம் ஒன்றுதான். குழந்தைகள் கொல்லப்படும் செய்திகளைக் கேள்விப்படும் நாளெல்லாம் நிம்மதி இழக்கிறேன் நான், பல சமயங்களில் தூக்கமிழக்கிறேன். அது இந்துக் குழந்தையாக இருந்தாலும் சரி, முஸ்லிம் குழந்தையாக இருந்தாலும் சரி. அடிப்படையில் ஒரு குழந்தை குழந்தை மட்டுமே. அதற்கு எந்த மதமும் கிடையாது. குஜராத் இன அழிப்பின்போது இந்து பயங்கரவாதிகளால் கருவிலிருந்து வெளியில் எடுத்து எரித்துக் கொல்லப்பட்ட சிசுவாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் குண்டுவெடிப்புகளில் கொல்லப்படும் குழந்தையாக இருந்தாலும் சரி. ஒரு குழந்தை, குழந்தைதான். அதற்கு எந்த மதமும் கிடையாது. அதேபோல், மனிதர் மனிதர்தான். அடிப்படையில் எந்த மதமும் கிடையாது. யார் கொல்லப்பட்டாலும் எனக்கு வலிக்கிறது. கோத்ரா ரயிலில் கொல்லப்பட்ட கரசேவகராக இருந்தாலும் சரி, தாத்ரியில் கொல்லப்பட்ட முஸ்லிம் பெரியவராக இருந்தாலும் சரி. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் உங்கள் இதயத்தை, மனசாட்சியைப் பார்க்க விரும்புகிறேனே தவிர உங்கள் சித்தாந்தத்தை அல்ல. ஏனெனில் சித்தாந்தத்துக்கு இதயம் கிடையாது. நான் பேசும் தொனி போதிக்கும் தொனியில் இருந்தால் என்னை மன்னியுங்கள். சகிப்பின்மையின் காலத்தில் நான் அதன் அபாயத்தைப் பற்றிப் பேசுவதற்குத் தவிக்கும் தவிப்பின் வெளிப்பாடுதான் இது. இறுதியாக சாப்ளினின் மேற்கோள்: “நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம், மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமேபுத்திசாலித்தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும். அப்புறம் நமது கதை அவ்வளவுதான்.” (தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்திலிருந்து)”


இவ்வளவு தவிப்புடன் நான் எழுதிய பிறகு அந்தப் பெண்மணிஆம். வன்முறையை எந்த வடிவத்திலும் நான் எதிர்க்கிறேன்என்று மொட்டையாக பதில் போட்டார். அது மொட்டையான பதிலாக இருக்காலாம். ஆனால், அங்கிருந்து என்னால் ஆரம்பிக்க முடியும் என்று நம்புகிறேன்.