Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Wednesday, March 12, 2025

உப்பு சத்தியாகிரகம்: காந்தியின் வரலாற்று நடைப்பயணம்!


ஆசை

“தாக்குங்கள் என்று திடீரென்று உத்தரவு வரவே, ஏராளமான போலீஸ்காரர்கள் முன்னே செல்கிறார்கள். உப்பு ஆலையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் சத்தியாகிரகிகளின் தலை மீது லத்தியால் தாக்குகிறார்கள். சத்தியாகிரகிகளில் ஒருவர்கூட அடியைத் தடுப்பதற்குக் கையை உயர்த்தவில்லை. மண்டை உடைந்து ரத்தம் தெறிக்க அப்படியே சரிகிறார்கள். அடுத்து வரும் வரிசைக்கும் தெரியும் தாங்கள் தாக்கப்படுவோமென்று. அவர்களும் முன்னே செல்ல, தாக்கப்பட்டு வீழ்கிறார்கள். உதவிக்கென்று நின்றிருக்கும் சத்தியாகிரகிகள் கீழே வீழ்ந்தவர்களைத் தூக்கிச் செல்கிறார்கள். எந்தக் கைகலப்பும் இல்லை, போராட்டமும் இல்லை” என்று எழுதுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளர் வெப் மில்லர்.

Tuesday, March 12, 2024

உப்பு சத்தியாகிரகம்: காந்தியின் வரலாற்று நடைப்பயணம்


ஆசை
“தாக்குங்கள் என்று திடீரென்று உத்தரவு வரவே, ஏராளமான போலீஸ்காரர்கள் முன்னே செல்கிறார்கள். உப்பு ஆலையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் சத்தியாகிரகிகளின் தலை மீது லத்தியால் தாக்குகிறார்கள். சத்தியாகிரகிகளில் ஒருவர்கூட அடியைத் தடுப்பதற்குக் கையை உயர்த்தவில்லை. மண்டை உடைந்து ரத்தம் தெறிக்க அப்படியே சரிகிறார்கள். அடுத்து வரும் வரிசைக்கும் தெரியும் தாங்கள் தாக்கப்படுவோமென்று. அவர்களும் முன்னே செல்ல, தாக்கப்பட்டு வீழ்கிறார்கள். உதவிக்கென்று நின்றிருக்கும் சத்தியாகிரகிகள் கீழே வீழ்ந்தவர்களைத் தூக்கிச் செல்கிறார்கள். எந்தக் கைகலப்பும் இல்லை, போராட்டமும் இல்லை” என்று எழுதுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளர் வெப் மில்லர்.

அது 1930-ம் ஆண்டு. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக உள்ளுக்குள் பொருமிக்கொண்டே இருந்தார்கள். பூரண சுதந்திரம் என்ற பேச்சு பல ஆண்டுகளாக இருந்தபோதிலும் இன்னும் அது கிடைத்தபாடில்லை.

Tuesday, August 15, 2023

எல்லோருக்குமாம் ஒரு இன்னறுங் கனிமரம்


 

சிறுவயதில்
தெருவில் கொடியேற்றம்
அப்பாவிடம் கேட்டேன்
இது என்ன மரமென்று
கொடிமரம்டி என் தங்கம்
என்றார்
கொடிமரம் என்றால்
பூ பூக்குமா
காய் காய்க்குமா
பழம் பழுக்குமா
என்று கேட்டேன்
கண்டிப்பாய் என்றார்
நான் பறித்துக்கொள்ளலாமா
என்று கேட்டேன்
எல்லோரும் பறித்துக்கொள்ள வேண்டுமென்றுதான் ஊர்ப்பொதுவில் நட்ட மரம்
நான் பிறந்தபோது இல்லை
உனக்கு இருக்கிறது
எவ்வளவு தாத்தா
எவ்வளவு ஆத்தா
இதை நடுவதற்குப்
படாதபாடு பட்டிருக்கிறார்கள் தெரியுமா
என்றார்
ஒரு மரம் நடுவது என்ன
அவ்வளவு பெரிய சிரமமா அப்பா
என்று கேட்டதற்கு
ஆமாம்
மரநிழலில் இளைப்பாறக்கூட
முடியாது என்றபோது
நம் ஒவ்வொருவரும்
சொந்தமாய் நட்டுக்கொள்ள
ஒரு மரம் தந்தார்களே சும்மாவா
மரம் நடுவது சிரமம்தான்
அதைவிடச் சிரமம்
நட்டமரம்
பட்டுப்போகாமல் பார்த்துக்கொள்வது
அப்போதுதான்
மரம் உனக்குக் கனி தரும்
உனக்கான கனி
எல்லோருக்கும் இனிக்கும்
என்று சொல்லிவிட்டுக் கேட்டார்
உனக்கான கனியை
எல்லோருக்கும் இனிக்கச் செய்வாயா
அப்பா பேசியதும் புரியவில்லை
அதற்கு என்ன பதில் சொல்வதென்றும்
தெரியவில்லை
பேசியது மட்டும்
அழியாமல் நினைவில் இருக்கிறது
அதே மரத்திலிருந்து பறித்து
எல்லோருக்கும் கசப்பின் கனிகள்
வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்று
என் வீட்டின் நடுவே
நட்டுவைத்திருக்கிறேன்
அப்பாவின் கேள்வியை
கசப்பிடம் தோற்ற
என் இனிப்பை
என் பிள்ளைகள்
வெல்லச் செய்வார்கள்
- ஆசை
15-08-23


தொப்புள்கொடி

 


ஏற்றுவதற்காகச்
சிந்தப்பட்ட
எவ்வளவோ குருதியும்
கண்ணீரும்
வியர்வையும்
இரண்டு கைகளாய்
உருத்திரண்டு
ஏற்றப்பட்ட
கொடி

எல்லா கண்ணீரையும்
காயங்களை
ஆற்றவே
அது அசைந்தாடி
காற்று வீச வேண்டுமென
ஏற்றிய கொடி

அண்ணாந்து பார்க்கும்
எல்லா விழிகளுக்கும்
வானத்தையே வாழ்வாகத்
தரும் கொடி

அது அசைக்கும்
காற்று
அதன் கீழுள்ள
எல்லா உயிர்களையும்
ஒரு தளையின்றி
அந்த வானில் பறக்க விடும்
கொடி

தாயின் மணிக்கொடி
சுதந்திர வாழ்வின்
தொப்புள் கொடி

கண்களைக் கட்டிப்போட்டு
ஏற்றினாலும்
உயிர் உணரும் கொடி
உயிர் மூச்சு தரும் கொடி
உயிர் மேல் ஏற்றிய கொடி

அது உயிர்மேல் 
அசைந்தாடிப் பறக்கட்டும் என்றும்
உயிருள்ள கைகள் மட்டுமே
ஏற்றட்டும் என்றும்
     -ஆசை

Sunday, November 29, 2020

நாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்?



யுவால் நோவா ஹராரி 

சதிக் கோட்பாடுகள் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவற்றில் ரொம்பவும் பரவலானது உலகளாவிய ரகசிய அரசியல் குழுவைப் பற்றிய சதிக் கோட்பாடுதான். “ஒரு குழுவைச் சேர்ந்த மக்கள் ரகசியமாக உலகத்துப் போக்குகளைக் கட்டுப்படுத்தி உலகையே ஆள்கிறார்கள்” என்ற கோட்பாட்டை நம்புகிறார்களா என்று 25 நாடுகளைச் சேர்ந்த 26 ஆயிரம் பேரிடம் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. “நிச்சயமாக அல்லது ஒருவேளை உண்மையாக இருக்கலாம்” என்பது 37% அமெரிக்கர்களின் பதிலாக இருந்தது. 45% இத்தாலியர்களும், 55% ஸ்பானியர்களும் 78% நைஜீரியர்களும் அப்படியே பதிலளித்தார்கள். 

சதிக் கோட்பாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன. அவற்றுள் சில கோட்பாடுகள் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நாஜிஸத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் வழக்கமாக நாஜிஸத்தை ஒரு சதிக் கோட்பாடாகக் கருதுவதில்லை. அது ஒரு நாடு முழுவதையும் ஆட்கொண்டு இரண்டாம் உலகப் போரைத் தொடக்கியதால் அது தீயதாக இருந்தாலும் நாஜிஸத்தை நாம் வழக்கமாக ஒரு ‘சித்தாந்தம்’ என்றே கருதுவோம். 

நாஜிஸமும் சதிக் கோட்பாடே 

ஆனால், அதன் மையமான சித்தாந்தத்தைப் பொறுத்தவரை, நாஜிஸமானது கீழ்க்கண்ட யூத வெறுப்புப் பொய்யை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ரகசிய சதிக் கோட்பாடாகவே இருந்தது: “யூத நிதி நிறுவனங்களின் ரகசியக் குழுவொன்று ஒட்டுமொத்த உலகத்தையும் ரகசியமாக ஆதிக்கம் செலுத்துவதுடன் ஆரிய இனத்தை அழிப்பதற்கும் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள்தான் போல்ஷ்விக் புரட்சிக்குக் காரணம், மேற்கத்திய ஜனநாயக நாடுகளை இயக்கிக்கொண்டிருப்பவர்கள் அவர்களே, ஊடகங்களும் வங்கிகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஹிட்லரால் மட்டுமே அவர்களின் எல்லா தீய தந்திரங்களையும் கண்டுபிடிக்க முடிந்தது – அவரால் மட்டுமே அவற்றைத் தடுத்து நிறுத்தி மனித குலத்தைக் காப்பாற்ற முடியும்.” இதுதான் அந்தப் பொய். 

இதுபோன்ற உலகளாவிய ரகசிய அரசியல் குழுக்களினுடைய கோட்பாடுகளின் பொதுவான அமைப்பைப் புரிந்துகொள்வது என்பது அவற்றின் கவர்ச்சியையும் அவற்றில் அமைந்திருக்கும் பொய்மையையும் நமக்கு விளக்கும். 

கட்டமைப்பு 

இந்த உலகில் நடக்கும் ஏராளமான நிகழ்வுகளின் பின்னணியில் ஒரு தீய குழுவொன்று இருக்கிறது என்று உலகளாவிய ரகசிய அரசியல் குழுக்கள் தொடர்பான கோட்பாடுகள் வாதிடுகின்றன. இந்தக் குழுவின் அடையாளம் மாறலாம்: இந்த உலகம் ரகசியமாக ஃப்ரீமேஸன்களால், சூனியக்காரிகளால் அல்லது சாத்தானியர்களால் ஆளப்படுகிறது என்று சிலர் நம்புகிறார்கள்; பிறர், அது வேற்றுக்கிரகவாசிகளால், பல்லி மனிதர்களால் அல்லது பல்வேறு இறுக்கமான குழுக்களால் ஆளப்படுவதாக நம்புகிறார்கள். ஆனால், இதன் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றுதான்: அந்தக் குழு கிட்டத்தட்ட அனைத்து நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறது; அதே நேரத்தில், இப்படித் தான் கட்டுப்படுத்துவதை ரகசியமாகவும் வைத்திருக்கிறது. 

இதுபோன்ற உலகளாவிய சதிக் கோட்பாடுகள் எதிரெதிர் துருவமாகக் காட்சியளிப்பவற்றை ஒன்றிணைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றன. கம்யூனிஸமும் முதலாளியமும் நேரெதிராக இருக்கும் எதிரிகள்போல் மேல் தோற்றத்துக்குத் தோன்றுகிறதல்லவா? தவறு, அப்படித்தான் யூத ரகசிய அரசியல் குழுக்கள் நம்மை நம்பவைக்கின்றன என்று நாஜி சதிக் கோட்பாடு கூறியது. புஷ் குடும்பமும் கிளிண்டன் குடும்பமும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்று சூளுரைத்துக்கொண்டவை என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் நமக்கு முன்னால் நடிக்கிறார்கள் – மூடிய கதவுக்குப் பின்னால் அவர்கள் ஒரே விருந்து நிகழ்வுக்குத்தான் செல்வார்கள். இப்படியெல்லாம் இந்தச் சதிக் கோட்பாடுகள் எதிரெதிர் துருவங்களை இணைத்துக் கூறுகின்றன. 

மயக்கும் கண்ணி 

இதிலிருந்து இந்த உலகத்தைப் பற்றிய ஒரு கோட்பாடு வெளிப்படுகிறது. செய்திகளில் கூறப்படும் நிகழ்வுகளெல்லாம் நம்மை ஏமாற்றும் விதத்தில் தந்திரமாக வடிவமைக்கப்பட்ட வடிகட்டிகளே. நமது கவனத்தைத் திசைதிருப்பும் பிரபலத் தலைவர்களெல்லாம் உண்மையாக ஆள்பவர்களின் கைகளில் வெறும் பொம்மைகளே. 

உலகளாவிய சதிக் கோட்பாடுகளை நிறைய பேர் நம்பி, பின்பற்றுவதற்கு ஒரு காரணம் என்னவென்றால் எண்ணற்ற சிக்கலான நிகழ்வுகளுக்கு அவை நேரடியான, ஒற்றை விளக்கத்தைத் தருகின்றன. நமது வாழ்க்கை தொடர்ச்சியாகப் போர்கள், புரட்சிகள், பிரச்சினைகள், பெருந்தொற்றுக்களால் அலைக்கழிக்கப்படுகின்றன. ஆனால், சில வகையான சதிக் கோட்பாட்டை நான் நம்பினால் எனக்கு எல்லாம் புரிகிறது என்ற ஆசுவாச உணர்வு எனக்கு ஏற்படுகிறது. 

சிரியாவில் நடைபெறும் போர்? அங்கே என்ன நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு நான் மத்தியக் கிழக்கு வரலாற்றைப் படிக்கத் தேவையில்லை. அது பெரிய சதியின் ஒரு பகுதி. 5ஜி தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்? மின்காந்த அலைகள் பற்றி நான் எந்த ஆராய்ச்சியும் செய்யத் தேவையில்லை. அது ஒரு சதிக் கோட்பாடுதான். கரோனா பெருந்தொற்று? அதற்கும் உயிர்ச்சூழல்கள், வௌவால்கள், வைரஸ்களுக்கும் தொடர்பில்லை. இது தெளிவாக சதிக் கோட்பாடுதான். 

உலகளாவிய சதிக் கோட்பாடு கொண்டிருக்கும் எல்லாப் பூட்டுகளையும் திறக்கும் சாவியானது உலகின் எல்லாப் புதிர்களையும் திறந்துவிடுகிறது, பிரத்யேக வட்டம் ஒன்றுக்கான, அதாவது எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் மக்களின் வட்டம் ஒன்றுக்கான அனுமதியை எனக்குத் தருகிறது. அது என்னை வழக்கமான நபர்களை விட அதிக புத்திசாலியாக ஆக்குகிறது. பேராசிரியர்கள், இதழாளர்கள், அரசியலர்கள் போன்ற அறிவுஜீவி மேல்தட்டினர், ஆளும் வர்க்கத்தினரைவிடவும்கூட என்னை மேலுயர்த்துகிறது. அவர்கள் காணத் தவறியதை அல்லது அவர்கள் மறைக்க முயல்வதை நான் காண்கிறேன். 

பிழை 

உலகளாவிய சதிக் கோட்பாடுகள் எல்லாம் ஒரே அடிப்படைப் பிழையால் பீடிக்கப்பட்டிருக்கின்றன: வரலாற்றை அவை மிகவும் எளிமையானதாக நினைக்கின்றன. உலகளாவிய சதிக் கோட்பாடுகளின் மையக் கருதுகோள் என்னவென்றால் இந்த உலகத்தைத் தன் வசத்தில் கட்டுப்படுத்துவது ஓரளவுக்கு எளிது என்பதுதான். போர்கள், தொழில்நுட்பப் புரட்சிகள் தொடங்கி பெருந்தொற்றுகள் வரை சிறியதான சில குழுக்களால் புரிந்துகொள்ள முடியும், முன்கூட்டியே கணிக்க முடியும், எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று சதிக் கோட்பாடுகளை நம்புபவர்கள் நினைக்கிறார்கள். 

குறிப்பாகக் குறிப்பிட வேண்டியது எதுவென்றால் உலகளாவிய சதுரங்கத்தில் பத்து நகர்வுகளை முன்கூட்டியே காணும் இந்தக் குழுவின் திறன்தான். அவர்கள் வைரஸை எங்காவது வெளியிடும்போது அது இந்த உலகம் முழுதும் எப்படிப் பரவும் என்பதைக் கணிப்பது மட்டுமல்லாமல் உலகப் பொருளாதாரத்தை ஒரு ஆண்டு கழித்து எப்படிப் பாதிக்கும் என்பதையும் அவர்கள் கணிக்கக் கூடியவர்கள். ஒரு போரை அவர்கள் தொடங்கினார்கள் என்றால், அது எப்படி முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். 

இராக் எடுத்துக்காட்டு 

ஆனால், இந்த உலகம் அதைவிடவும் மிகவும் சிக்கலானது. எடுத்துக்காட்டாக, இராக்கில் அமெரிக்காவின் ஊடுருவலைப் பற்றி யோசித்துப் பாருங்கள். 2003-ல் இந்த உலகின் ஒரே ஒரு வல்லரசு, நடுத்தர அளவுள்ள மத்தியக் கிழக்கு நாட்டினுள் ஊடுருவியது. அந்த நாட்டிலுள்ள பேரழிவு ஆயுதங்களை அழிப்பதற்காகவும், சதாம் ஹுசைனின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும் அந்த ஊடுருவலை நிகழ்த்தியதாக அமெரிக்கா கூறியது. அந்தப் பிரதேசத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், இராக்கின் முக்கியமான எண்ணெய்க் கிணறுகளைத் தன்வசப்படுத்தவும் அமெரிக்கா இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று சிலர் சந்தேகப்பட்டனர். தனது லட்சியத்துக்கான தேடலில் உலகின் மிகச் சிறந்த ராணுவத்தை அமெரிக்கா ஈடுபடுத்தியதோடு மட்டுமல்லாமல் டிரில்லியன் கணக்கான டாலர்களையும் அதற்காகச் செலவழித்தது.  

சில ஆண்டுகளை வேகமாக முன்னோக்கி ஓட்டிப் பாருங்கள், இந்த பிரம்மாண்டமான முயற்சியின் விளைவுகள் என்ன? பரிபூரணப் பேரழிவுதான். பேரழிவு ஆயுதங்கள் ஏதும் இராக்கில் இல்லை, அந்த நாடு அதலபாதாளத்துள் வீழ்ந்தது. இந்தப் போரில் பெரிய வெற்றியாளர் யாரென்றால் ஈரான்தான். அதுதான் இந்தப் போரின் விளைவாக அந்தப் பிராந்தியத்தில் பெரும் ஆதிக்கச் சக்தியாக உருவானது.  

ஆக, ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷும் டொனால்டு ரம்ஸ்ஃபெல்டும் உண்மையில் ஈரானியக் கையாள்கள் என்றும் தீயதும், சாமர்த்தியமானதுமான ஈரானிய சதியை அவர்கள் நிறைவேற்றினார்கள் என்றும் நாம் முடிவுக்கு வரலாமா? வரவே முடியாது. மாறாக, மனித விவகாரங்களைக் கணிப்பதும் கட்டுப்படுத்துவதும் மிக மிகக் கடினம் என்ற முடிவுக்கே நம்மால் வர முடியும்.  

இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வதற்காக மத்தியக் கிழக்கு நாடொன்றை ஊடுருவத் தேவையில்லை. ஒரு பள்ளிக்கூட வாரியத்திலோ உள்ளூர் பஞ்சாயத்திலோ நீங்கள் பணியாற்றியிருந்தாலும் அல்லது உங்கள் அம்மாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியூட்டும் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய முயன்றாலும் உங்களுக்குத் தெரியும் மனிதர்களைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம் என்று. ஒரு திட்டத்தைத் தீட்டுவீர்கள், அது நேரெதிர் விளைவையே ஏற்படுத்தும். நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரோடு நீங்கள் ஒரு சதித் திட்டம் தீட்டுவீர்கள், ஒரு முக்கியமான கட்டத்தில் அவர் உங்கள் முதுகில் குத்திவிடுவார்.  

1,000 அல்லது 100 மனிதர்களையே நம்மால் கணிக்கவும் கட்டுப்படுத்தவும் மிகவும் சிரமமாக இருக்கும் சூழலில் கிட்டத்தட்ட 800 கோடி மக்களை ஆட்டுவிப்பது எளிது என்று சதிக் கோட்பாட்டாளர்கள் நம்மை நம்பச் சொல்கிறார்கள். 

நிதர்சனம் 

நிச்சயமாக, உலகில் உண்மையான சதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. தனிநபர்கள், பெருநிறுவனங்கள், அமைப்புகள், திருச்சபைகள், கட்சிகளின் பிரிவுகள், அரசுகள் போன்றவையெல்லாம் தொடர்ந்து வெவ்வேறு சதிகளைத் தீட்டி அவற்றை நிறைவேற்றுகின்றன. அதனால், அவை ஒட்டுமொத்த உலகத்தையும் கணித்து அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது என்று சொல்லிவிடுவது எளிதல்ல. 

1930-களில் உலகெங்கும் கம்யூனிஸப் புரட்சிகளைத் தூண்டிவிட சோவியத் ஒன்றியம் உண்மையில் சதித் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது; முதலாளிய வங்கிகளெல்லாம் நேர்மையற்ற எல்லாவித உத்திகளையும் பின்பற்றின; ரூஸ்வெல்ட்டின் நிர்வாகம் ‘நியூ டீல்’ மூலம் அமெரிக்காவை மறு கட்டமைப்பு செய்யத் திட்டமிட்டது; யூதர்களின் ஸையனிஸ்ட் இயக்கம் பாலஸ்தீனில் தங்கள் தாய்நாட்டை நிறுவும் திட்டத்தை இடைவிடாமல் பேணியது. ஆனால், இவையும் எண்ணற்ற பிற திட்டங்களும் அடிக்கடி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இயக்குபவர்களாக ஒற்றைக் குழு ஏதும் இருந்திருக்கவில்லை. 

இன்றும்கூட நீங்கள் நிறைய சதிகளுக்கு இலக்காகலாம். உங்கள் சக ஊழியர்கள் உங்கள் முதலாளியை உங்களுக்கு எதிராகச் செயல்படும்படி சூழ்ச்சி செய்யலாம். தீங்கு விளைவிக்கும் ஓபியாய்டுகளை உங்களுக்குக் கொடுக்கும்படி உங்கள் மருத்துவருக்கு ஒரு பெரிய மருந்து நிறுவனம் லஞ்சம் கொடுக்கலாம். மற்றுமொரு பெருநிறுவனம் அரசியலர்களுக்கு அழுத்தம் கொடுத்து, சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு நீங்கள் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்த முயன்றுகொண்டிருக்கலாம். ஒரு அரசியல் கட்சி தங்களுக்கு செல்வாக்கு மிக்க மாவட்டங்களின் எல்லையைத் தேர்தல் வெற்றிக்கு ஏற்றவாறு மறுவரையறுக்கலாம். வெளிநாட்டு அரசு ஒன்று உங்கள் நாட்டில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடலாம். இவையெல்லாம் உண்மையான சதிகளாக இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் உலகளாவிய ஒற்றைச் சதியின் பங்காக இருப்பவையல்ல. 

அதிகாரமும் பிரபல்யமும் 

சில சமயம், ஒரு பெருநிறுவனம், ஒரு அரசியல் கட்சி, அல்லது ஒரு சர்வாதிகாரி தம் கைகளில் இந்த உலகின் ஒட்டுமொத்த அதிகாரத்தில் கணிசமான பகுதியைக் கொண்டிருக்க முயன்று வெற்றி காண்பதும் உண்டு. அப்படி ஒரு விஷயம் நிகழும்போது, அதை ரகசியமாக வைத்திருப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம். பெரும் அதிகாரம் வரும்போது பெரும் பிரபல்யம் வரும்.  

உண்மையில், பெரும் அதிகாரத்தைக் கைக்கொள்வதற்கான அத்தியாவசியத் தேவையாகப் பெரும் புகழ் என்பது பல விஷயங்களிலும் இருந்துள்ளது. பொது மக்களின் பார்வையை லெனின் தவிர்த்திருந்தால் ரஷ்யாவில் அவர் அதிகாரத்தை வென்றிருக்க முடியாது. ஸ்டாலின் ஆரம்பத்தில் ரகசியமாகவே திட்டம் தீட்ட விருப்பம் கொண்டிருந்தார். ஆனால், சோவியத் ஒன்றியத்தில் எல்லா அதிகாரங்களையும் தன் கையில் அவர் குவித்துவிட்டிருந்தபோது பால்டிக் பிரதேசத்திலிருந்து பசிபிக் வரை ஒவ்வொரு அலுவலகம், பள்ளி, வீடு ஆகியவற்றில் ஸ்டாலினின் படம் தொங்கிக்கொண்டிருந்தது. ஸ்டாலினின் அதிகாரம் என்பது அவரது ஆளுமை மீதான் வழிபாடுடன் தொடர்புகொண்டது. லெனினும் ஸ்டாலினும் திரைக்குப் பின்னால் உள்ள ஆட்சியாளர்களின் முகமூடி மட்டுமே என்ற கருத்து எல்லா வரலாற்று ஆதாரங்களுக்கும் முரணானது. 

எந்த ஒரு தனி ரகசியக் குழுவும் இந்த ஒட்டுமொத்த உலகையும் ரகசியமாகக் கட்டுப்படுத்தவில்லை என்பது துல்லியமானது மட்டுமல்ல, அது நமக்கு சக்தியையும் அளிக்கிறது. அப்படிப் புரிந்துகொண்டால், நம் உலகில் ஒன்றுக்கொன்று போட்டியிடும் குழுக்களை நம்மால் அடையாளம் காண முடியும் என்றும், சில குழுக்களுக்கு எதிராக சில குழுக்களுடன் உங்களை இனம் கண்டுகொள்ள முடியும் என்றும் அர்த்தமாகிறது. உண்மையான அரசியல் என்பதெல்லாம் இதைப் பற்றியதுதான். 

- யுவால் நோவா ஹராரி, வரலாற்றாசிரியர், ‘சேப்பியன்ஸ்’ நூலாசிரியர். 

© ‘நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை, நன்றி: ‘இந்து தமிழ்’ நாளிதழ்

Friday, November 27, 2020

ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம்! - வி.பி. சிங்கின் உரை



மண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கசப்புணர்வை ஏற்படுத்தின. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம் என்பதும் அப்படிச் செய்வதன் மூலம் எங்களை நாங்களே நெருக்கடிக்குள் தள்ளப்போகிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஒருவேளை அதுதான் எனது விதியாக இருக்கலாம்.  

நான்  நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதார அமைப்புடன் என் பார்வைகள் முரண்பட்டன; ஆக, அந்தப் பதவியிலிருந்து நான் விலக நேரிட்டது. பாதுகாப்பு அமைச்சராக நான் இருந்தபோது எனது பார்வைகள் அரசியல் கட்டமைப்புடன் முரண்பட்டன. ஆகவே, அந்தப் பதவியிலிருந்தும் விலக நேரிட்டது. தற்போது நான் பிரதமராக இருக்கிறேன், சமூக அமைப்பைப் பற்றிய எனது கொள்கையும் தற்போதைய கொள்கையும் முரண்படுகின்றன; ஆகவே, நான் வெகு விரைவில் இந்தப் பதவியை விட்டும் போக வேண்டியிருக்கும். ஆயினும், நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. எங்களுடைய ஐந்தாண்டு கால ஆட்சியை நிறைவுசெய்வதற்காகவே இந்த அமைப்புகளுக்கு நாங்கள் தலைவணங்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம், அதே நேரத்தில் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து போரிடுவோம். நூற்றுக் கணக்கான தேர்தல்களில் போட்டியிட வேண்டியிருந்தாலும் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை; ஆனால் நீதியின் பாதையிலிருந்து நாங்கள் விலகிச்செல்ல மாட்டோம்.  

இந்த ஆண்டு பாபா சாஹேப் பீம் ராவ் அம்பேத்கரின் நூற்றாண்டு, சமூகநீதியின் ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக நாங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் சில வகுப்பினரின் வெறுப்புக்கு உள்ளாகத்தான் நேரிடும். ஏழைகள் எப்படி அதிகாரத்தின் பங்குதாரர்களாக ஆவது என்பதுதான் நம் முன் தற்போது உள்ள கேள்வி. நீதிக்கான போராட்டத்தில் ஏழை எளியோர் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடவில்லை, மாறாக சமூக வாழ்க்கையில் கண்ணியமும் மதிப்பும் கிடைப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இந்த அதிகாரக் கட்டமைப்பில்- அது இந்த அவையிலாகட்டும் அல்லது அதிகாரத் தரப்பிலாகட்டும்- அவர்கள் பங்கெடுக்காவிட்டால் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கவே முடியாது என்பது என்னுடைய கருத்தாக இருந்துவந்திருக்கிறது. ஆகவே, நாட்டின் நிர்வாகத்தில் தங்கள் பங்கை அவர்கள் பெறுவதற்கு வழிவகை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகாரத்தில் அவர்கள் பங்கு பெற்றாலொழிய வெறுமனே விவாதங்கள் நடத்துவது வீணாகப் போவதுடன் அவர்கள் புறக்கணிப்புக்குள்ளாவது தொடரவே செய்யும்.     

ஐயா (அவைத்தலைவர்), மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே இந்தக் கட்டத்தை எட்டியிருக்கிறோம், அரசு அமைப்பது என்பது தற்காலிக நிறுத்தம் மட்டுமே. ஆட்சியில் இருந்தபோதும் எங்களது போராட்டத்தைத் தொடர்ந்தோம், அதிகாரத்தில் இல்லாதபோதும் தொடரவே செய்வோம். விடாமல் போராடுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். முக்கியமான நிகழ்வுகளின் ஒருசில கணங்கள் கூட வரலாற்றில் கணிசமான முக்கியத்துவத்தைப் பெறும்.  

கடவுளின் படைப்பான, நமது சக மனிதர்கள் மீது நாம் நமது கவனத்தைத் திருப்புவோமாக. எண்ணற்ற மனிதர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு துயர்மிகுந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அந்த மக்களுக்கு உதவிசெய்வது நம் கடமையாகிறது, நாங்கள் செய்ததும் சரியாக அதைத்தான். அரசுக்கு அதிகாரம் இருக்கிறது; அந்த அதிகாரம் ஏழைகளுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உதவவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் சில பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மண்டல் குழுவானது சாதியம் என்ற பிரச்சினையை எழுப்புகிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் கூறினார். இந்த அம்சத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக அமைப்பும் அரசியல் கட்டமைப்பும் பல வழிகளில் ஒன்றையொன்றைச் சார்ந்தவையாகும். சமூக, பொருளாதார அமைப்புகளில் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கீழ்மட்ட அளவில் பெருமளவிலான கூட்டுறவு காணப்படுகிறது. இந்தக் கீழ்மட்டமானது பெரிதும் தலித் மக்களாலும் சிறு விவசாயிகளாலும் ஆனது. அவர்களில் 99% ஏழைகள். மேலும் அவர்களில் 90% பேர் சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள். உயர்சாதி மக்கள் பணக்காரர்கள் என்பதும் உண்மை. சமூக அமைப்புக்கும் பொருளாதார அமைப்புக்கும் வேறுபாடுகள் இருக்கும் என்றால் சமூக அமைப்புக்கும் அரசியல் கட்டமைப்புக்கும் இடையே ஒற்றுமைகளும் இருக்கவே செய்கின்றன. அரசியல் கட்டமைப்பை மாற்றாமல் சாதியத்தை ஒழிக்கவோ சமூக அமைப்பை மாற்றவோ நம்மால் முடியாது. சாதியத்தை வேரோடு அழிக்க அரசியல் கட்டமைப்பில் நாம் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். மண்டல் குழு தொடர்பாக நாங்கள் எடுத்த முடிவு தீவிரமான பரிசீலனைக்குப் பிறகு மனவுறுதியுடன் எடுக்கப்பட்டது. நாம் எல்லோரும் கிராமங்களிலிருந்து வந்திருக்கிறோம், ஆகவே கிராமத்தினரின் நலன்களுக்கு உதவுவதற்காக எங்களின் அதீத சக்தியைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் தயார் 

ஐயா, இந்தக் கணத்தில் எங்கள் தரப்பைப் பொறுத்தவரை அதீதத் திமிரோ கடுமையான  வேதனையோ எதுவும் எங்களுக்கு இல்லை. மாறாக, நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் கூடவே நாங்கள் அவமானகரமான முறையில் செல்லவில்லை என்று பெருமிதமும் அடைகிறோம். சிலநேரம் மரணம் என்பது வாழ்க்கையை விட உயர்வானது. ஐயா, ஒரு நபர் தனக்கு மிக மிக முக்கியமான ஒரு லட்சியத்தை அடைவதற்காகத் தன் வாழ்க்கையையே இழக்கத் துணிவார் என்றால், அவர் அதற்காக வருத்தப்பட மாட்டார். இது ஒரு நல்ல நோக்கத்துக்கான போராட்டம், நாங்கள் அதிகாரத்தில் இருந்தபோது இந்த நோக்கத்துக்காக தொடர்ந்து போராடினோம், அதிகாரத்தை விட்டு விலகினாலும் இந்தப் போராட்டத்தைத் தொடரவே செய்வோம்.      

-தமிழில்: ஆசை

Thursday, August 6, 2020

ஹிரோஷிமா, நாகசாகி: ஒரு பேரழிவின் கதை


ஆசை 

மனித குல வரலாற்றில், மனிதர்களின் படைப்பு சக்தியும் அழிவு சக்தியும் ஒருசேர புதிய உச்சத்தைத் தொட்ட நாள் ஆகஸ்ட் 6, 1945. சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொடும் சம்பவம் அது. அதன் விளைவுகள் உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்திருக்கின்றன.  

இரண்டாம் உலகப் போர் தனது முடிவை நெருங்கிக்கொண்டிருந்த தருணம் அது. ஜப்பான் போரில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்று எண்ணிய சாதாரண குடிமக்களில் ஒருவர் சுடோமு யமகுச்சி. இன்றைக்கு உயிரோடிருந்தால் அவருக்கு 104 வயது இருக்கும். 1945-ல் அவருக்கு 29 வயது. அவரது குடும்பமும் அவர் வேலை பார்த்த நிறுவனமும் ஜப்பானின் நாகசாகி நகரத்தில்தான் இருந்தன. ஆனால், 1945-ல் மூன்று மாத காலம் அலுவல் நிமித்தமாக ஹிரோஷிமாவில் தங்கியிருந்தார். 

ரத்த சாட்சியம் 

ஆகஸ்ட் 6 அன்று காலையில் ஹிரோஷிமாவை விட்டுப் புறப்படுவதற்காக ரயில் நிலையத்துக்குத் தனது சகாக்களுடன் சென்றவர் தனது அடையாள அட்டையை மறந்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்திருக்கிறது. அதை எடுப்பதற்காகத் திரும்பிவந்தபோதுதான் வானை அண்ணாந்து பார்த்திருக்கிறார். ஒரு விமானமும் இரண்டு பாராசூட்டுகளும் தென்பட்டிருக்கின்றன. சற்று நேரத்தில் வானத்தில் பெரிதாக ஏதோ ஒன்று அதுவரை யமகுச்சி கண்டிராத பிரகாசத்துடன் வெடித்திருக்கிறது. யமகுச்சி தூக்கிவீசப்பட்டார். எங்கு பார்த்தாலும் தீ. எங்கெங்கும் மரண ஓலம். அவரது செவிப்பறை, கண்கள் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது; உடலில் கதிரியக்கத்தால் காயம் ஏற்பட்டது.  

குண்டுவெடித்த இடத்திலிருந்து 3 மைல் தூரத்தில் இருந்ததால் யமகுச்சி உயிருக்கு உடனடியாக ஆபத்து ஏற்படவில்லை. பேரழிவுக்கு நடுவே அவருக்குப் புகலிடம் கிடைத்தது. அன்று இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் நாகசாகிக்கு சென்றார் யமகுச்சி. உடலில் காயம் இருந்தாலும் ஆகஸ்ட் 9 அன்று பணிக்குத் திரும்பினார். அன்றைக்கு நாகசாகியில் குண்டு வீசப்பட்டது. இந்தக் குண்டுவெடிப்பிலும் யமகுச்சி உயிர் தப்பினார். அவருக்கு இருந்த அதிர்ஷ்டம் ஏனைய 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இல்லை. அதன் பிறகு நெடிய காலம் ஹிரோஷிமா, நாகசாகியின் வாழும் நினைவாக இருந்த யமகுச்சி 2010-ல் தனது 93 வயதில் காலமானார். அவரை இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்தது. ஒரு கொடூர வரலாற்றுக்கு ரத்த சாட்சியமாக இருந்த அந்த மனிதர் வாழ்நாள் நெடுக அணு ஆயுதங்களின் கொடுமையையும் பேரபாயத்தையும் பேசிக்கொண்டேயிருந்தார்.  

முன் வரலாறு 
1939-ல் உலகப் போர் இன்னும் தொடங்கியிருக்கவில்லை. ஆனால், ஜெர்மனியின் செயல்பாடுகளெல்லாம் உலக அமைதியை அச்சுறுத்திக்கொண்டிருந்த காலம் அது. இதற்கு முன்னதாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு அணுவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும் என்பதை ஐன்ஸ்டைனின் கோட்பாடு விளக்கியிருந்தது; இயற்பியலாளர் லியோ ஸில்லார்ட் அணுக்கரு சங்கிலித் தொடர் நிகழ்வை 1933-ல் கண்டுபிடித்திருந்தார். 1930-களின் இறுதியில் அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் ஜெர்மனி ஈடுபட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகி உலகையே அச்சுறுத்தின. இதைத் தொடர்ந்து இந்தத் திசையில் ஜெர்மனியை முந்துவது அவசியம் என்று கருதி ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனும் லியோ ஸில்லார்டும் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டுக்குக் கடிதம் எழுதினார்கள். அதுதான் அணுகுண்டு திட்டத்துக்குத் தொடக்கப்புள்ளி.  

முன்னேற்பாடுகள் எல்லாம் முடிந்து அமெரிக்காவின் மன்ஹாட்டன் மாவட்டத்தில் 1942-ல் அணுகுண்டு தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற ஆரம்பித்தன. அதனால், இதற்கு ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்ற பெயர் வந்து சேர்ந்தது. 1945-ல் அமெரிக்கா வெற்றிகரமாக அணுகுண்டைத் தயாரித்தும்விட்டது. தயாரித்த அணுகுண்டை 1945 ஜூலை 16 அன்று நியூ மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு பாலைவனப் பிரதேசத்தில் பரிசோதித்தார்கள்.  

இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் பிரதானமாக இருந்த ஜெர்மனி சரணடைந்ததால் அந்தப் போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தாலும் ஆசியப் பகுதியில் ஜப்பான் எளிதில் அடிபணிவதாக இல்லை. அணுகுண்டுப் பரிசோதனை நிகழ்த்தப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரூமேன், ரஷ்யாவின் ஸ்டாலின், பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ஆகிய மூவரும் சந்தித்து ஜப்பான் சரணடைவதற்கான இறுதி எச்சரிக்கையை விடுத்தார்கள். ஜப்பானோ வேறு வழிகளில் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுகொண்டிருந்தது. எது எப்படியிருந்தாலும் ஜப்பான் தோல்வியின் விளிம்பில்தான் நின்றுகொண்டிருந்தது. ஏற்கெனவே ஜப்பானின் 60 நகரங்களில் அமெரிக்கா சாதாரண வெடிகுண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்திருந்தது. இந்த நிலையில்தான் ஜப்பான் மீது அணுகுண்டை வீசுவது என்று முடிவெடுத்தது அமெரிக்கா.  

ஆகஸ்ட் 6 அன்று காலையில் பசிபிக் கடலில் உள்ள டினியன் தீவிலிருந்து ‘பி-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ்’ விமானம் புறப்பட்டது. பால் டிபெட்ஸ் ஓட்டிச்சென்ற அந்த விமானம் சுமந்திருந்த அணுகுண்டின் பெயர், குட்டிப் பையன் (லிட்டில் பாய்). 4,400 கிலோ எடை கொண்ட அதன் உள்ளே 64 கிலோ மட்டுமே செறிவூட்டப்பட்ட ‘யுரேனியம்-235’ இருந்தது. சரியாக 8.15 மணிக்கு ஹிரோஷிமாவுக்கு மேலே 31,060 அடி உயரத்தில் பறந்தபோது அணுகுண்டு விடுவிக்கப்பட்டது. கீழ்நோக்கிப் பயணித்து 45 நொடிகள் கழித்து, தரையிலிருந்து 1,950 அடிகள் இருக்கும்போது அது வெடித்தது. அணுகுண்டைப் போட்டுவிட்டு வெகு வேகமாக அந்த இடத்தைவிட்டுச் சென்ற அந்த விமானம் குண்டுவெடித்த இடத்திலிருந்து சுமார் 11 மைல் தொலைவில் பறந்தபோது குண்டுவெடிப்பின் அதிர்வுகள் அதையும் உலுக்கின.  

மானுட அவலத்தின் பேயாட்டம் 

அதன் பின்பு நடந்தது முன்னுதாரணமில்லாத ஒரு பேரழிவு. இந்தக் குண்டுவெடிப்பின் சக்தி 2 கோடி கிலோ டி.என்.டி. வெடிபொருளுக்கு இணையானது என்றார்கள். குண்டுவீச்சின் தாக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். 13 சதுர கி.மீ. தூரத்துக்கு நகரம் அழிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 70% கட்டிடங்கள் சேதமடைந்திருந்தன. தூரத்திலிருந்து பார்க்கும்போது ஹிரோஷிமாவுக்கு மேலே சிவப்பும் கறுப்புமாக ராட்சகக் காளான் ஒன்று முளைத்திருந்ததைப் போல தெரிந்ததாகச் சொன்னார்கள். குண்டுவெடித்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கறுப்பாக அமில மழை பெய்தது. இறந்துகொண்டிருந்தவர்களின் மரண ஓலமும், தங்கள் குடும்பத்தினரைத் தேடி அலைந்தவர்களின் ஓலமுமாக ஓசைகளின் நகரமானது ஹிரோஷிமா. கை, கால், தலையில்லாத குழந்தைகளை அவற்றின் அன்னையர் தூக்கிக்கொண்டு திரிந்தனர். என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் பலரும் தங்கள் உயிரையும் குடும்பத்தினரையும் பறிகொடுத்துவிட்டிருந்தார்கள். 

ஹிரோஷிமாவின் மீது குண்டு வீசப்பட்டும் ஜப்பான் அடிபணியவில்லை. மூன்று நாட்கள் கழித்து கொக்குரா என்ற நகரத்தின் மீது குண்டுவீசத் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், கொக்குராவில் மேகமூட்டமாக இருந்ததால், அடுத்து நாகசாகி தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இங்கு வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் குண்டு மனிதர் (ஃபேட் மேன்). இதன் எடை 4,670 கிலோ. இதன் உள்ளே 6.4 கிலோ புளுட்டோனியம் இருந்தது. ‘குட்டிப் பைய’னைவிட இது திறன் மிகுந்தது என்று கூறப்படுகிறது. 2.3 கோடி கிலோ டி.என்.டி. வெடிபொருட்களின் திறனுக்கு இணையானது அது என்று சொன்னார்கள். எது எப்படியிருந்தாலும் நாசத்தை வைத்துதான் போர் வியாபாரிகள் எல்லாவற்றையும் அளவிடுவார்கள். நாகசாகியின் மீது வீசிய குண்டும் ஹிரோஷிமாவுக்கு இணையான விளைவுகளை உண்டாக்கியது. எங்கெங்கும் மானுட அவலத்தின் பேயாட்டம். காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும் மருத்துவர்களும் செவிலியர்களும்கூட மிஞ்சவில்லை. 

நான்கு நாட்களுக்குள் இரண்டு அணுகுண்டு வீச்சு. ஜப்பான் நடுங்கிப்போனது. சில நாட்களில் ஜப்பான் மீது போர் தொடுக்கப்போவதாக ரஷ்யா அறிவித்ததும் வேறு வழியின்றி ஜப்பான் சரணடைந்தது. அணுகுண்டு வீசினாலும் வீசாவிட்டாலும் எப்படியும் ஜப்பான் இறுதியில் தோல்வியடைந்திருக்கும் என்று கருதுவோரும் உண்டு. ரஷ்யாவுக்குத் தன் பலத்தை நிரூபிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் இந்தக் குண்டுவீச்சுகள் என்போரும் உண்டு. இரண்டாவது உலகப் போரை முடித்துவைத்தது அணுகுண்டு வீச்சுதான் என்று ஒரு வாதம் சொல்லப்பட்டாலும் அதுதான் பனிப்போரைத் தொடங்கியும் வைத்தது என்ற உண்மையை நாம் காண வேண்டும். 

ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களிலும் குண்டுவீச்சின்போது உடனடியாக இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சமாக இருந்தாலும், அடுத்து வந்த சில வாரங்கள், மாதங்கள் என்று அந்த ஆண்டின் முடிவுக்குள் மேலும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சின் காரணமாகப் பல்வேறு வகையிலான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். கணக்கற்ற குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறந்து ஹிரோஷிமா, நாகசாகியின் வாழும் சாட்சிகளாக உலவுகின்றனர். அதற்குப் பிறகு, கடந்த 75 ஆண்டுகாலமாக எந்த நாடும் மற்றொரு நாட்டின் மீது அணுகுண்டு வீசவில்லை என்றாலும் ஏராளமான அணுஆயுதங்களைப் பல நாடுகளும் வைத்திருக்கின்றன. ஆகவே, எப்போதும் எரிமலையின் வாய் மீது உட்கார்ந்திருப்பது போன்றதுதான் நம் வாழ்க்கை. ஒரு கிறுக்குத்தனமான ஆட்சியாளரோ அல்லது ஸ்டேன்லி கூப்ரிக்கின் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்லவ்…’ படத்தில் வருவதுபோல் ஒரு ராணுவ ஜெனரலோ திடீரென்று ஒரு கணத்தில் ஒரு பொத்தானை அழுத்தினால் இந்த உலகம் முடிவுக்கு வரும் அபாயத்தில்தான் நாம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  

முதல் அணுகுண்டைத் தயாரித்த அறிவியலாளர்கள் ‘அழிவுநாள் கடிகாரம்’ (டூம்ஸ்டே கிளாக்) என்ற கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் அழிவுநாளுக்கு, அதாவது கடிகாரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு, இன்னும் இரண்டு நிமிடங்களே உள்ளன. நள்ளிரவு 12 மணியை நோக்கிய முதல் உந்தலை ஹிரோஷிமா அளித்ததென்றால் தொடர்ந்த போர்கள், அணுஆயுதப் பெருக்கம், இயற்கைப் பேரழிவுகள் போன்றவை மேலும் கடிகாரத்தின் முட்களை வேகமாக நகர்த்தின, நகர்த்திக்கொண்டிருக்கின்றன. ஹிரோஷிமா, நாகசாகியின் மீது குண்டுவீசப்பட்ட 75-ம் ஆண்டும் கரோனா பெருந்தொற்று உலகத்தையே முடக்கிப்போட்டிருக்கிறது. அது ‘அழிவுநாள்’ கடிகாரத்தையும் முடக்கிப்போடுமானால் மனித குலத்துக்கே பெரும் விடிவாக அமையும். 

-(ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டு வீசப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரை)

Friday, April 12, 2019

ஜாலியன்வாலா பாக் சுவடுகள்!

 அட்டன்பரோவின் ‘காந்தி’ படத்தில் இடம்பெற்ற ஜாலியன்வாலா பாக் படுகொலை காட்சி


ராமசந்திர குஹா

(ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நூற்றாண்டையொட்டி 12-04-19 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)  

ஜாலியன்வாலா பாக். அந்த இடம் அமிர்தசரஸ் பொற்கோயிலிலிருந்து அதிகத் தொலைவில் இல்லை. அங்கே, கூடியிருந்த கூட்டத்தைச் சுடும்படி ரெஜினல் டையர் என்ற பெயருடைய பிரிட்டிஷ் பிரிகேடியர்-ஜெனரல் ஒருவர் தனது துருப்புகளுக்கு 1919 ஏப்ரல் 13 அன்றுசரியாக இப்போதிலிருந்து நூறாவது ஆண்டுஆணையிட்டார். கிட்டத்தட்ட ஐநூறு பேர் அந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்கள். அங்குள்ளவர்களோ ஆயிரம் பேர் அல்லது இன்னும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக நம்புகின்றனர். இது ஒரு கொடூரமான கொலை. ஏனெனில், சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் நிராயுதபாணிகள் என்பதோடு முழுக்க முழுக்க அமைதிவழியிலானவர்கள். டையரின் வெறித்தனத்துக்கு வழிவகுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த வெறித்தனத்தை அதிகப்படுத்தியது பஞ்சாபின் சர்வாதிகார லெஃப்டினென்ட் கவர்னரான மைக்கேல் ட்வையரின் நடவடிக்கைகள்தான்.

ஜாலியன்வாலா பாகில் நடைபெற்ற படுகொலைக்கு பிரிட்டிஷ் வரலாற்றிலும் சரி, இந்திய தேசியத்தின் வரலாற்றிலும் சரி முக்கியமான இடம் உண்டு. இதுகுறித்து எண்ணிலடங்காத புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. சில புத்தகங்கள் தீவிரத்தன்மையும் ஆய்வுத்தன்மையும் கொண்டவை, மற்றவை உணர்ச்சிகரமாகவும் இலக்கியரீதியிலும் இருப்பவை. இந்த இரண்டு வகையிலும் வரக்கூடிய புத்தகத் தொகுப்பொன்று வெளியாகியிருக்கிறது. ‘விடுதலைக்குச் செய்யப்பட்ட தியாகம்: ஜாலியன்வாலா பாகின் 100 ஆண்டுகள்’ (Martyrdom to Freedom: 100 Years of Jallianwala Bagh) என்பது அத்தொகுப்பின் பெயர். பஞ்சாபின் மிகவும் பழமையானதும் மிகவும் மதிப்புக்குரியதுமானதி ட்ரிப்யூன்பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர் ராஜேஷ் ராமச்சந்திரன்தான் இப்புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்.

டையரின் நடவடிக்கைகளின் பின்னணி

புத்தகத்தின் முதல் பகுதி இத்தொகுப்புக்கென்றே (இந்தக் கட்டுரையாசிரியர் உட்பட) ஆய்வறிஞர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கியது. அதில் நடுநாயகமாக விளங்குவது மூத்த வரலாற்றாசிரியரான வி.என்.தத்தாவின் நேர்காணல். நேர்காணல் கண்டவர் அவரது மகளும் நன்கு அறியப்பட்ட அறிஞருமான நோனிகா தத்தா. அமிர்தரசரஸில் படுகொலைக்குச் சில ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் வி.என்.தத்தா. ஜாலியன்வாலா பாகிலிருந்து பத்து நிமிடத்தில் சென்றுவிடக்கூடிய தொலைவில்தான் அவர் தன் இளமைப் பருவத்தைக் கழித்தார். ஜாலியன்வாலா பாக் என்பது 1919 ஏப்ரல் வாக்கில் உண்மையில் தோட்டமாக (பாக்) அல்ல, குப்பை கொட்டும் இடமாகத்தான் இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

உரிய காலத்தில் தத்தா அந்தப் படுகொலையின் மிக முக்கியமான வரலாற்றாசிரியராக உருவெடுத்தார். அந்த நேர்காணலில் அவர் இப்படிச் சொல்கிறார், “டையரின் நடவடிக்கைகளின் பின்னணியை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். முதலாம் உலகப் போரில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பிரிட்டிஷாரின் தன்னம்பிக்கை உச்சத்துக்கே சென்றது. தங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்ற அளவுக்குத் துணிவுபெற்றிருந்தனர். நினைவில் கொள்ளுங்கள், டெல்லியில் ஒரு கலவரத்தை டையர் ஏற்கெனவே கலைத்திருக்கிறார், வடகிழக்குப் பிராந்தியத்தில் அவர் பெற்றிருந்த பயிற்சியும் அவர் வசமிருந்தது… [ஜாலியன்வாலா பாகில்] டையர் அந்தத் துருப்புகளைக் குறுக்கும் நெடுக்குமாக, நேராக, வலமும் இடமுமாக, கிணற்றுக்கு அருகாக என்றெல்லாம் உத்தரவிட்டுச் செலுத்தினார். தான் என்ன செய்கிறோம் என்பது குறித்த முழுமையான புரிதல் அவருக்கு இருந்தது.”

ஒரு எரிமலையின் வெடிப்பைத் தூண்டிவிட்ட நிகழ்வாகவே இந்தப் படுகொலைச் சம்பவத்தைப் பற்றி ஒருவகையில் சொல்லலாம் என்கிறார் வி.என்.தத்தா. ஏனெனில், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரின் ஆட்சியை இனிமேலும் சட்டபூர்வமானதாகக் கருத முடியாது என்ற எண்ணத்தை ஜாலியன்வாலா பாக் படுகொலை ஏற்படுத்தியது. அந்தப் படுகொலைக்குப் பிறகுதான், ‘இனவெறியைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதையும் டையர்தனமும் ட்வையர்தனமும் எவ்வகையிலாவது போய்த்தொலைந்தாக வேண்டும் என்றும் இந்தியர்கள் உணர்ந்தார்கள். நாகரிகச் சமூகத்தில் அந்த இருவருக்கும் எந்த இடமும் இல்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இறுதி வீழ்ச்சிக்கு இப்படுகொலைதான் வித்திட்டது. மாறாக, தேசிய அளவில் காந்தி புதிய தலைவராக உருவெடுத்தார்.” அல்லது, கவிஞராகிய வி.என்.தத்தாவின் தந்தையின் சொற்களில் சொல்வதானால் அந்தப் படுகொலைக்குப் பிறகு இந்தியர்களுக்கு எது நல்லது என்றும் எது கெட்டது என்றும் தெரிந்தது, கூடவே அவர்கள் அதற்கு மேலும் ஆமாம்சாமிகளாக இருக்க மாட்டார்கள்.

இந்நூலின் இரண்டாவது பகுதிதி ட்ரிப்யூன்இதழின் பக்கங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்நாட்களில் அந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் காளிநாத் ராய் என்ற வங்காளி. அவரைப் பற்றி அவரது சமகாலத்தவர் ஒருவர் சொல்லும்போது, “கம்பளிக் குல்லாய் அணிந்த குள்ளமான மனிதர். அவர் அணிந்திருந்த கம்பளி ஆடையின் பெரும்பாலான கம்பளி நூல் பல ஆண்டுகளுக்கு முன்பே உதிர்ந்துபோய்விட்டது. மீன் குழம்பு, பால் டம்ளர்கள், ரசகுல்லா, பருப்பு போன்றவற்றை மறதியுடன் கையாளும்போது அவரிடம் காணப்பட்ட தடுமாற்றங்களை அப்படியே அந்தக் கம்பளி ஆடை சுமந்திருக்கும். கண்ணாடியின் தடிமனான லென்ஸுக்குப் பின்னால் அவரது கண்கள் ஒளிந்திருக்கும். கண்ணாடியானது இரும்பு வளையத்தைக் கொண்டதாக, அது குறைந்தபட்சம் மூன்று இடங்களில் நூலால் தாங்கிப்பிடிக்கப்பட்டிருப்பதாக இருக்கும். அவர் பேசுவதோ வெகு அரிது.”

உண்மையை வெளிக்கொண்டுவந்ததி ட்ரிபியூன்இதழ்

கூச்ச சுபாவமும் கவர்ந்திழுக்காத தோற்றமும் கொண்டிருந்தாலும்கூடத் துணிவும் நெஞ்சுரமும் மிக்கவராக இருந்தார் காளிநாத் ராய். மிகவும் சிரமமான அந்நாட்களில் அவரது இந்தப் பண்புகளெல்லாம்தி ட்ரிபியூன்இதழை அவர் எப்படியெல்லாம் வழிநடத்தினார் என்பதிலேயே நமக்குத் தெரிகிறது.

அந்த இதழிலிருந்து இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் தலையங்கங்கள், கட்டுரைகள் போன்றவற்றை வாசிக்கும்போது அந்தச் சம்பவங்கள் நம் கண் முன் அப்படியே விரிகின்றன, பல இடங்களில் மிகவும் நெகிழவும் வைக்கின்றன. பஞ்சாபில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் வித்திட்ட ரௌலட் சட்டத்தைப் பற்றிதி ட்ரிப்யூன்இப்படிச் சொல்கிறது: “ஏற்கெனவே கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த மக்களுடைய உரிமைகளெல்லாம் இச்சட்டத்தின் அமலாக்கத்தால் முற்றிலும் பொருளற்றுப்போகின்றன. கூடவே, ஆள்வோரின் எதேச்சாதிகாரமும் பூரணமாகிறது.” ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை வழிநடத்திய சுதந்திர வேட்கை கொண்ட தேசப்பற்றாளரைப் பற்றி அந்த இதழ் இப்படி எழுதியது: “காந்தியைப் பற்றி கோகலே ஒருமுறை இப்படிச் சொன்னார்: காந்தியிடத்தில் இந்தியர்களின் மனிதநேயம் அதன் பூரணத்தன்மையை அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட காந்தி தன் மக்களைப் பற்றி மிகவும் ஆழமாக அறிந்துவைத்திருக்கிறார், இந்தியத் தலைவர்களிலேயே மிகவும் புனிதத்தன்மை கொண்டிருப்பதுடன் மிகவும் பிரபலமான தலைவரும் அவரே…”.

காந்தியைப் பற்றிய மேற்கண்ட குறிப்பு வெளியானது 1919, ஏப்ரல் 6, ஞாயிறு அன்று. அடுத்த ஞாயிற்றுக்கிழமைதான் படுகொலை நிகழ்த்தப்பட்ட தினம். ராணுவச் சட்டம் அமலில் இருந்ததால் அந்தப் படுகொலையைப் பற்றிய செய்திகளும் வெளியாகவில்லை. பத்திரிகைகள் மீதிருந்த தணிக்கை விலக்கப்பட்ட பிறகே, இந்த ஒட்டுமொத்த அநியாயத்தைப் பற்றியும் விசாரிப்பதற்கு ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்ட ஹன்ட்டர் கமிஷனின் விசாரணைகளைதி ட்ரிப்யூன்கூர்ந்து கவனித்து தினமும் எழுதியது.

நியாயமான கேள்விகளைக் கேட்கத் தவறியது ஏன்?

கமிஷனின் முன்பு ஜெனரல் டையர் ஆஜரானபோது, அந்த இதழ் தங்கள் பக்கங்களில் நேரடியாக ஐந்து கேள்விகளை டையரிடம் முன்வைத்தது.

1. கூட்டம் கூடுவதைத் தடுப்பதற்கு டையர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

2. எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் சுட்டதற்கு என்ன நியாயம் கூறுவார்?

3. துப்பாக்கிச்சூடு தொடங்கியவுடனே கூட்டம் கலைந்தோட ஆரம்பித்தும்கூடத் துப்பாக்கிச்சூட்டை நிறுத்தாததன் காரணம் என்ன?

4. தோட்டாக்கள் தீரும் நிலையிலும் ஏற்கெனவே ஐநூறு பேர் கொல்லப்பட்ட நிலையிலும்கூட நிறுத்தாதது ஏன்?

5. காயப்பட்டவர்களை நிர்க்கதியாக விட்டுச்சென்றது ஏன்?

ஆனால், இதுபோன்ற நேரடியான தொனியில் இதுபோன்ற கேள்விகளை டையரிடம் ஹன்ட்டர் கமிஷன் முன்வைக்காமல் போனதுதான் துயரம்.

இறுதியில், ‘அமிர்தசரஸின் கசாப்புக்காரர்வெறுமனே பணிநீக்கம் செய்யப்படுகிறார். இதைப் பற்றிச் சொல்லும்போது தண்டனைபோதாதென்று அப்பட்டமாகத் தெரிகிறதுஎன்றுதி ட்ரிப்யூன்எழுதியது. இதற்கிடையே, டையரின் கொடூரமான மேலதிகாரியான மைக்கேல் ட்வையர் சிறு தண்டனைகூட இன்றித் தப்புகிறார். ஆகவே, ‘கண்துடைப்பு ஆவணம்என்று ஹன்ட்டர் அறிக்கை குறித்து காளிநாத் ராய் குறிப்பிட்டதில் வியப்பொன்றும் இல்லை.

இப்புத்தகத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிடம் பற்றிய வேறு சில முக்கியமான தகவல்களும் கிடைக்கின்றன. தியாகிகளின் ரத்தம் சிந்தப்பட்டதால் புனிதத்துவம் பெற்ற மண்ணைத் தாங்கிய நிலத்தை இந்திய தேசிய காங்கிரஸ் வாங்கி, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருக்கும் புதிய தேசத்தின் சொத்தாக மாற்றியது. இந்த நினைவிடத்துக்காக நிதி திரட்டியவர்களில் முக்கியப் பங்கு வகித்தவர்கள்: காந்தி, டாக்டர் சைஃபுதீன் கிச்லூ, பண்டிட் மதன்மோகன் மாளவியா, சுவாமி ஷ்ரத்தானந்தா.

ஒற்றுமையின் தேசியச் சின்னம்

இன்று விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வைக்கப்படும் நினைவிடங்கள் எண்ணிலடங்காது; தேர்தல் நெருங்கும் சமயத்திலெல்லாம் பேராசை கொண்ட அரசியல்வாதிகளால் அப்படிப்பட்ட நினைவிடங்கள் திறந்துவைக்கப்படுகின்றன; அவற்றுக்கான நிதியும் தனியார் நிறுவனங்களிடமிருந்தோ பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்தோ வலுக்கட்டாயமாகப் பெறப்படுகிறது. ஆனால், ஜாலியன்வாலா பாக் நினைவிடம்தான் இந்திய வரலாற்றில் மிகவும் ஜனநாயகபூர்வமாக நிதி திரட்டப்பட்டு முதன்முதலில் கட்டப்பட்ட நினைவிடம். அந்த நினைவிடத்துக்கான நிதியானது பஞ்சாபிலும் இந்தியா முழுவதிலும் உள்ள மக்களிடமிருந்தும் திரட்டப்பட்டது. லூதியானாவைச் சேர்ந்த மக்கள் ரூ.7,000; வார்தா மக்கள் ரூ. 7,500; பம்பாய் மக்கள் ரூ 20,000; கல்கத்தா மக்கள் ரூ.26,000 என்று அள்ளியள்ளிக் கொடுத்தார்கள். (இந்தத் தொகையெல்லாம் அன்று மிகவும் அதிகம். மேலும், இன்றைய பணமதிப்பைவிட அன்றைய பணமதிப்பு மிகவும் அதிகம் என்பதையும் கணக்கில் கொண்டு பார்க்க வேண்டும்).

தனதுயங் இந்தியாஇதழில் இந்த நிதித்திரட்டலைப் பற்றி எழுதும்போது காந்தி இப்படிக் கூறுகிறார், ‘இறந்துபோன அப்பாவிகளைப் பற்றிய நினைவுதான் புனிதமான அறக்கட்டளையாகக் கருதப்பட வேண்டியது. மேலும், உயிர் பிழைத்த உறவினர்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காகத் தேசத்திடம் கேட்கும் உரிமையும் பெற வேண்டும். இந்த நினைவிடத்தின் முக்கியமான அர்த்தம் இதுதான்.’

மேலும், அவர் எழுதினார்: ‘முஸ்லிமின் ரத்தம் இந்துவின் ரத்தத்தோடு கலந்துவிடவில்லையா? சீக்கியரின் ரத்தம் சனாதனியின் ரத்தத்துடனும் சமாஜத்தினரின் ரத்தத்துடனும் கலக்கவில்லையா? இந்த நினைவிடமானது இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அடைவதற்கான நேர்மையான, நீடித்த முயற்சியின் தேசியச் சின்னமாக இருக்கட்டும்.’

இப்படி எல்லோரையும் ஒருங்கிணைக்கக்கூடிய, பன்மைத்துவம்கொண்டதாக காந்தி எதிர்நோக்கிய பேருணர்ச்சியானது தேசப் பிரிவினையின்போது பஞ்சாபில் சுக்குநூறாக உடைத்து நொறுக்கப்பட்டது. அப்படி உடைத்து நொறுக்கப்பட்டதை, ‘தி ட்ரிப்யூன்இதழின் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் மீட்டுருவாக்க முயன்றுகொண்டிருக்கிறோம்போல!
-தமிழில் : ஆசை, நன்றி: ‘இந்து தமிழ்’