சிறு வயதிலிருந்து எனக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது பெரிய கனவு. அதுவும் சத்யஜித் ரே, மகேந்திரன், பாலு மகேந்திரா மாதிரியான இயக்குநராக ஆக வேண்டும் என்ற கனவு. ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு இருந்தது கனவு மட்டும்தான் அந்தக் கனவைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய திறமையும் துணிச்சலும் எனக்கு இல்லை என்பதை க்ரியா ராமகிருஷ்ணன் எனக்குப் புரிய வைத்தார். அது மட்டுமல்லாமல் மொழியும் இலக்கியமும்தான் என்னுடைய உண்மையான தளம் என்பதைக் கண்டுபிடித்து அதில் செயல்படுவதற்கான ஊக்கமும் அளித்தார். என் வாழ்க்கை அங்கிருந்துதான் புதிய தடத்தில் செல்ல ஆரம்பித்தது.
மன்னார்குடியில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கடைக்குட்டிப் பிள்ளையாகப் பிறந்ததால் (பிறப்பு: 18.09.1979) அளவுக்கதிகமான செல்லத்தையும் சுதந்திரத்தையும் அனுபவித்தவன் நான். புத்தக வாசிப்பு என்பது இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது தொடங்கியது. சிறுவர் மலர், அம்புலி மாமா, கோகுலம் போன்ற புத்தகங்கள் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருந்தன. அப்படியே படிப்படியாக காமிக்ஸ், துப்பறியும் நாவல்கள், வரலாற்று நாவல்கள் என்று போய்க்கொண்டிருந்தேன். நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தபோது என் அண்ணன் கமலக்கண்ணன் எனக்குப் பரிசளித்த பாரதியார் கவிதைகள் என் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தையும் தாக்கத்தையும் என்னால் இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்போது ஆரம்பித்த பாரதிப் பித்து எனக்கு இன்றுவரை தெளியவில்லை. பிறகு அண்ணன்தான் எனக்கு ஜானகிராமனை அறிமுகப்படுத்தி வைத்தார். இப்படியாக எனது ரசனையின் உருவாக்கத்தில் ஆரம்ப நாட்களில் எனது அண்ணன் பெரும் பங்கு வகித்தார். அப்புறம் சுஜாதாவின் கட்டுரைகள் எனது இலக்கியப் போக்கிலும் சுந்தர ராமசாமியின் படைப்புகள் எனது வாழ்க்கைப் போக்கிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இன்று எனக்குச் சுந்தர ராமசாமியின் படைப்புகள் பெரிதும் பிடிக்காமல் போனாலும் என்னுடைய வாழ்க்கையில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுள் அவரும் ஒருவர்.
என் நண்பர்கள் இல்லாமல் உண்மையில் நான் இல்லை. பள்ளி நாட்களில் என்னுடைய நண்பன் கார்த்திகேயனின் கவிதைகள்தான் எனக்குப் பெரிய உந்துசக்தி. பிறகு மன்னார்குடி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சேர்ந்தது நான் எதிர்பாராத பரிசுகளை எனக்குக் கொடுத்தது. காதல், நட்பு என்று எனது கவிதையையும் வாழ்க்கையையும் செழுமைப்படுத்திய அனுபவங்கள் கிடைத்தன. கூடவே, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதல் பதிப்பில் முக்கியப் பங்காற்றிய தங்க. ஜெயராமன் எனது பேராசிரியராகக் கிடைத்தது என் வாழ்வில் மற்றுமொரு திருப்புமுனை. இன்றுவரை நான் அவருக்கு மாணவனாக இருந்து அவரிடம் கற்றுக்கொண்டிருப்பது எனது பெரும் பாக்கியம்.
2000 ஆவது ஆண்டில் ஒரு இலக்கிய நிகழ்வுக்காகச் சென்னை வந்த நான் அப்படியே புத்தகம் வாங்குவதற்காக க்ரியா பதிப்பகம் சென்றேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியமைத்த சம்பவமாக இருக்கும் என்று நினைக்கிறேன். க்ரியா ராமகிருஷ்ணன் என்னுடன் மிகுந்த நட்புடன் பேசினார், கூடுதலாக நான் அவருடைய நண்பர் ஜெயராமனுடைய மாணவன் வேறு. பிறகு சென்னை வரும்போதெல்லாம் அவரைப் பார்க்காமல் போகவே மாட்டேன். இப்படியாக இருக்கும்போதுதான் இளங்கலைப் படிப்பை முடித்தேன். மேற்கொண்டு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. வீட்டில் எதிர்ப்பு. அந்த நேரத்தில் ராமகிருஷ்ணன் என்னிடம் திரைப்படத் துறையில் நுழைவதில் உள்ள சவால்களைக் குறித்தும் முக்கியமாக நல்ல திரைப்படங்களை எடுப்பதில் உள்ள சிக்கல்களைக் குறித்தும் என்னிடம் காட்டமாகப் பேசினார். ஆங்கில இலக்கியத்திலேயே மேலும் முதுகலைப் படிப்பைத் தொடருங்கள் என்று அறிவுறுத்தவே நான் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.
அப்போது நான் எந்தக் கவிதை எழுதினாலும் ராமகிருஷ்ணனிடம் போய்க் காட்டுவேன். அவர் ஒவ்வொரு சொல்லையும் கூர்மையாகப் பார்ப்பார். அந்தப் பழக்கம் எனக்கும் தொற்றிக்கொண்டது. அவருடன் பழகியதில் மொழியின் மீது எனக்கிருந்த பிடிப்பு எனக்குப் புலப்படத் தொடங்கியது. பிறகு முதுகலை முடித்து எம்.ஃபில் சேரும்போது எனக்கு எங்காவது பகுதி நேர வேலை கிடைத்தால் புத்தகங்கள் வாங்குவதற்குப் பணம் கிடைக்கும் என்று ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் க்ரியாவிலேயே சேர்ந்துவிடுங்களேன் என்று சொன்னார். இப்படியாக 2004இல் க்ரியாவில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் மெய்ப்புப் பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்த என்னை அவர் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் விரிவாக்கப் பணியில் ஈடுபடுத்தினார்.
அப்போது எனக்கு வயது 23. என்னுடைய பேராசிரியர் ஜெயராமன் ஒருமுறை என்னிடம் 'அநேகமாக நீ கோடியில் ஒருத்தனாகத்தான் இருப்பாய். ஏனென்றால் இந்தியாவில் இப்படிப்பட்ட அகராதியியல் துறை சார்ந்த முறையான செயல்பாடுகள் மிக மிக அரிது. அதிலும் உன் வயதில் ஒருத்தர் ஈடுபட்டிருப்பது மிக மிக அரிது' என்று சொன்னார். அவர் எளிதில் வாயைத் திறந்து பாராட்டக் கூடியவர் அல்ல என்பதால் அவர் சொன்னது எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. தற்காலத்தில் புழக்கத்தில் உள்ள இந்திய மொழி ஒன்றுக்காக மொழியியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அகராதி தயாரிக்கப்பட்டிருப்பது தமிழில் மட்டும்தான் என்பதால் நாம் மிக மிக முக்கியமான ஒரு காரியத்தில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறோ
ம் என்பது எனக்கு நன்றாகப் புலனானது.
மொழியியல், அகராதியியல், பழந்தமிழ் இலக்கணம் போன்றவற்றில் கருத்தளவில் எந்தப் பரிச்சயமும் எனக்கு அப்போது கிடையாது. ஆனால் நடைமுறை அளவில் எனக்கு அகராதியியல் பிடிபட்டது. மொழியியல் மற்றும் அகராதியியல் போன்றவற்றில் பெரும் புலமை கொண்ட டாக்டர் இ. அண்ணாமலை மற்றும் பழந்தமிழ் இலக்கணத்தில் நல்ல புலமை உள்ள டாக்டர் அ. தாமோதரன் போன்றவர்களுடன் பக்கத்தில் இருந்தும் தூரத்தில் இருந்தும் கற்றுக்கொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்பு தமிழ்நாட்டின் மொழியியல், அகராதியியல் துறைகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட கிடைக்காத ஒரு வாய்ப்பு. துறை சார்ந்து இவர்களுக்கு இருக்கும் நிபுணத்துவத்தைவிட எனக்குப் பெரிய ஆச்சரியமளித்தது இவர்களின் அடக்கமும் பிறருடைய கருத்துகளை மதித்துக் காது கொடுத்துக் கேட்கும் குணமும்தான். கத்துக்குட்டியான நான் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் அளிப்பதுடன் நான் அவர்களை மறுத்துப் பேசும் இடத்தில் நான் சொல்வது சரியாக இருக்கக்கூடுமெனில் என்னுடன் உடன்படவும் செய்வார்கள். அவர்களுடைய புலமை அவர்களுடைய கண்ணைச் சிறிதளவுகூட மறைக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை அகராதியியல் என்பது ஒரு தொழிலாக வளரவில்லை. இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அகராதிகள் பெரும்பாலும் தனி நபர்களால் எழுதப்படுபவையாகவும் அகராதியியலைப் பின்பற்றாதவையாகவும்தான் இருக்கின்றன. ஆனால் க்ரியாவின் அகராதிப் பணிகள் பெரிய அறிஞர் குழுவை உள்ளடக்கியதாகவும் அகராதியியல் மொழியியல் போன்றவற்றைப் பின்பற்றிச் செய்யப்படுவதாலும் யாருக்கும் கிடைக்காத பயிற்சி எனக்கு இங்கே கிடைத்தது. இது ஒரு அரிய துறை என்னும் நினைப்பே இந்தத் துறையில் செயல்படுவதில் ஒரு சாகச உணர்வை எனக்குத் தருகிறது. ஆனால் என் வீட்டில் உள்ளவர்கள் நான் கல்லூரி ஆசிரியராக ஆவதையே பெரிதும் விரும்புகின்றனர். இந்தியாவில் இதுதான் பெரிய பிரச்சினை. எல்லாப் பெற்றொரும் தங்கள் பிள்ளைகள் டாக்டருக்குப் படிக்க வேண்டும், பொறியாளராக வேண்டும் என்று பட்டை கட்டிய குதிரை போன்று ஒரே மாதிரி சிந்திக்கின்றனர். தங்கள் குழந்தைக்கு என்ன கனவு இருக்கிறது, தங்களுடைய குழந்தை எந்தத் துறையில் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்பதைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை. எந்தத் துறையில் இறங்கினாலும் நல்ல வருமானம் வரும் என்ற நிலையும் சற்று அரிதான துறைகளுக்கு அரசாங்கம் மற்றும் பிற நிறுவனங்கள் ஆதரவு அளிக்கக்கூடிய நிலையும் இல்லாததுதான் இதற்குக் காரணம். அகராதியியலில் பணிபுரிந்தால் மாதம் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் என்ற நிலை நாளை வரும் என்றால் எல்லாரும் இதை நோக்கி ஓடி வருவார்கள்.
அகராதிப் பணிகளில் ஈடுபடுபவருக்குப் பல துறைகளைப் பற்றிய பரிச்சயம் வேண்டும். எனது பொது அறிவும் பல துறை ஞானமும் பூஜ்ஜியம் என்பது அகராதிப் பணியில் ஈடுபட ஆரம்பித்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. அகராதியில் அறிவியல் துறை சார்ந்த சொற்களுக்கு விளக்கம் எழுதுதல், ஏற்கனவே உள்ள விளக்கத்தைச் சரிபார்த்தல், சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த வல்லுநர்களைக் கலந்து ஆலோசனை செய்தல் போன்ற சிரமமான பணிகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன. தெரியாது என்று நான் எதைச் சொல்கிறேனோ அந்த வேலையைத்தான் என்னைச் செய்யச் சொல்வார்கள். கற்றுக்கொள்வதில் இது ஒரு பெரிய பயிற்சி எனக்கு. பறவைகளைப் பற்றிய விளக்கம் எழுத ஆரம்பித்தபோதுதான் உலகத்தில் பறவைகள் என்ற ஜீவராசிகள் இருக்கிற உண்மையே எனக்கு உறைக்க ஆரம்பித்தது. எப்படியொரு புத்தகப் புழுவாக நான் இருந்திருக்கிறேன்! பிறகு பறவைகள், விலங்குகள் என்று இயற்கை மீது முழுமையாகக் காதல் வந்தது. அறிவியல் துறைகளிலும் எனக்கு அளப்பரிய தாகத்தை அகராதிப் பணி ஏற்படுத்தியது. ஆர்வம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பதையும் நாம் நமது கண்களையும் மனதையும் எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதையும் நான் உணர்கிறேன்.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (2008) |
2008இல் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் விரிவாக்கப்பட்ட பதிப்பு வெளிவந்தது. அந்தப் பதிப்பில் எனக்குத் துணை ஆசிரியர் என்ற பொறுப்பைத் தந்திருந்தார்கள். அது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. க்ரியாவில் எனது இரண்டு கவிதைத் தொகுப்புகள்வெளியாகியிருக்கின்றன : சித்து (2006), கொண்டலாத்தி (2010).
சித்து (2006), கவிதைத் தொகுப்பு |
கொண்டலாத்தி (2010), கவிதைத் தொகுப்பு |
கொண்டலாத்தி என்ற கவிதைத் தொகுப்பு முழுக்க முழுக்க பறவைகளைப் பற்றிய கவிதைகளைக் கொண்டது. ஒன்பது ஆண்டு காலச் சென்னை வாழ்க்கையை முடித்துக் கொண்டு என் சொந்த ஊரான மன்னார்குடிக்குப் போனதுதான் பறவைகளின் உலகத்தை நான் நெருங்குவதற்குக் காரணத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவுதான் அந்தத் தொகுப்பு. உலகமெங்கும் சுற்றுச்சூழல் சார்ந்து குரல் ஒலிக்கும் சூழ்நிலையில் தமிழில் அந்தத் தொகுப்பு வர வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ராமகிருஷ்ணன் கவிதைகளுடன் தொடர்புடைய பறவைகளின் புகைப்படங்களுடன் அதைக் கொண்டு வர வேண்டுமென்று விரும்பி அப்படியே நேர்த்தியாக அதைக் கொண்டு வந்தார்.
ஒமர் கய்யாமின் 'ருபாயியத்' (2010), மொழிபெயர்ப்பு |
2010இல் ஒமர் கய்யாமின் ருபாயியத்தை என்னுடைய பேராசிரியர் ஜெயராமனுடன் சேர்ந்து மொழிபெயர்த்தது என்னால் மறக்க முடியாத அனுபவம்.
அறிமுகக் கையேடு: பறவைகள் (2013) |
பறவையியலாளர் ப. ஜெகனாதனுடன் சேர்ந்து 2013இல் 'அறிமுகக் கையேடு: பறவைகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டேன். இப்படியாக அகராதிப் பணி, கவிதை, மொழிபெயர்ப்பு, இயற்கை, அறிவியல் போன்றவற்றைச் சார்ந்து என்னுடைய வாழ்க்கை பயணிக்கிறது.
க்ரியா பதிப்பகத்தில் அகராதிப் பணி, பதிப்புப் பணி போன்றவற்றில் தற்போது ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எல்லாச் செயல்களிலும் அறநெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் நம்மைவிட நாம் செய்யும் செயல்கள் மிகவும் முக்கியமானவை என்பதையும்தான் க்ரியாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டதில் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறேன்.
நிறைய பேர் எனக்கு ஆதர்ச மனிதர்களாக இருந்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் பாரதியும் காந்தியும். பாரதி என்று நினைத்தவுடன் என் மனதில் கொந்தளிப்பை உணர்வேன். காந்தி என்று நினைத்தவுடன் என் மனதில் இனம்புரியாக ஒரு அமைதியை உணர்வேன். காந்தியின் பண்புகளின் அன்பு, எளிமை, நேர்மை, அறம் ஆகியவற்றை நான் மிகவும் முக்கியமானதாகக் கருதுவதுடன் அவற்றை நானும் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.
என் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் என்று நான் நினைப்பது என்னுடைய நண்பர்கள் மட்டுமே. உறவுகள் எல்லாம் அத்தனை வழிகளிலும் முட்டுக்கட்டையாக மாறிவிட்டபோது நண்பர்கள் மட்டுமே நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் விமர்சனத்தையும் எனக்கு வழங்கினார்கள். ஸ்டாலின், செந்தமிழ், கார்த்திக் ஆகியோர் எனக்கு மிகவும் முக்கியமானவர்கள். 2010ஆம் ஆண்டு என்னுடைய 'கொண்டலாத்தி' புத்தகத்தைப் படித்துவிட்டு எனக்கு அறிமுகமான மனநல மருத்துவர் சீதா என் வாழ்வில் மிக முக்கியமான மிகச் சிலரில் ஒருவர். தினம் தினம் சண்டையுடனும் அன்புடனும் என்னருகே இருக்கும் என் மனைவி சிந்து என் வாழ்வை மேலும் அழகாக்குகிறாள். எங்கள் மகன் 'மகிழ் ஆதன்' எனக்குப் பரிசாக வந்த வியப்பு.
நமக்குத் தொழில் கவிதை என்று சொன்ன பாரதியின் துணிச்சல் எனக்கும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
என்னுடைய கருத்துகளை பலரிடம் நான் பகிர்ந்துகொள்வதற்கு ஏதுவாக எந்த ஊடகங்களும் இல்லாத சூழலில் இணைய உலகத்தை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த விஷயங்களையும் என்னுடைய கருத்துகளையும் தெளிவாகப் பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இணைய உலகத்திற்குச் சற்றுத் தாமதமாகவே வந்திருக்கிறேன். இணைய உலகைக் குப்பைச் சிந்தனைகளின் வடிகாலாக ஆக்கிவிடாமல் ஆக்கபூர்வமான விஷயங்களை இதிலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான் இங்கு வந்திருக்கிறேன். ஆரோக்கியமான முறையில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறேன், வாருங்கள்!
அவசியமான பதிவுகள், உங்களின் அறிமுகத்தினால் பயனடைந்தேன், வாழ்த்துகள். இனி உங்கள் எழுத்தை தொடர முயற்சிக்கிறேன். நன்றி
ReplyDeleteநன்றி நண்பரே! அவசியம் உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
Deleteஅன்புடன்
ஆசை
கற்றல் வாழ்வின் எல்லைவரை இருக்கும் போது வாழ்க்கை சுவாரஸ்யம்தான் அதை விடுக்கும் போது வாழ்க்கை சூனியமாகிவிடும் ஆகவே கற்றுகொண்டே இருங்கள் நண்பா வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி தோழி! தொடர்ந்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Deleteக்ரியாவின் பணிகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல இடத்தில் புடம் போடப்பட்டிருக்கிறீர்கள். நல்லது.
ReplyDeleteவாழ்க .. வளர்க ...
அன்புள்ள தருமி அவர்களுக்கு நன்றி!
Deleteவாசிக்க என்பதன் அடியில் உள்ள இணைப்புகள் வேலை செய்யவில்லை. கவனிக்க.
ReplyDeleteநண்பரே நான் பரிசோதித்துப் பார்த்துவிட்டேன், எல்லா இணைப்புகளும் வேலை செய்கின்றன. ஒருவேளை உங்கள் browserஇல் ஏதாவது பிரச்சினையாக இருக்கலாம். என்றாலும், நீங்கள் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
Deleteஅன்புள்ள சகோதரர் ஆசைத்தம்பி அவர்களுக்கு .
ReplyDeleteமுதலில் அன்பான வாழ்த்துகள் . உங்கள் 'என்னைப்பற்றி... ' என்ற தன்னிலை விளக்கம் உங்களைப்பற்றி ஒரு உயர்வான மதிப்பை தரக் கூடியதாக அமைந்துள்ளது .பலமுறை படித்து மகிழ்ந்ததோடு அது எனக்கு ஒரு உந்துதல் சக்தியைத் தந்தது . உங்கள் சேவை மக்களுக்கு கிடைப்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.
'உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றி வைத்தவரே' என்பது நபிமொழியாகும். வளரட்டும் உங்கள் சேவை .
அன்புடன் ,
அ. முகம்மது அலி ஜின்னா
அன்புள்ள ஜின்னா அவர்களுக்கு,
Deleteநன்றி! உங்களுடைய கருத்துகள் எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கின்றன. தொடர்ந்து உங்கள் ஆதரவும் நட்பும் எனக்குக் கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
Please visit
ReplyDeletehttp://nidurseasons.blogspot.in/2010/09/kondalathi.html
கொண்டலாத்தி -Kondalathi
க்ரியாவின் புதிய வெளியீடும், ஆசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்புமான கொண்டலாத்தி என்ற புத்தகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்
Sunday, September 26, 2010
அன்புள்ள ஜின்னா அவர்களுக்கு,
Deleteநன்றி!
அன்பிற்கினிய தம்பி ஆசைக்குக்
ReplyDeleteகனிவான கைகுவிப்பு!
இனிய நல் வாழத்துகள்!
தங்களைப் பற்றிய தன்னறிமுகம் கண்டேன்;
உவகை கொண்டேன்!
எவரும் நுழையத் தயங்கும் அகரமுதலித் துறையில்
துணிந்து இறங்கிய தங்களைப் பாராட்டவேண்டும்.
ஆங்கிலப் புலமை இருப்பினும்
தவறின்றித் தமிழ் எழுதும் தங்கள் திறனுக்கு மற்றுமொரு பாராட்டு!
அகரமுதலித் துறையில் சிகரத்தைத் தொடுக!
தமிழ்க் கனி விளையும் மரங்களை நடுக!
வளர்க தங்கள் பணிகள்! வாழ்க தங்கள் புகழ்!
அன்புடன்
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ
(தற்சமயம் புதுச்சேரியில் இருந்து ;
வாழிடம் பிரான்சு.)
பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி! தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடுகிறேன்!
Deleteஅன்புடன்
ஆசை
Welcome to Blog World....
ReplyDeletewe proud about you
ReplyDelete