Monday, June 21, 2021

காலம்: மகிழின் மூன்று கவிதைகள்

 


நான் இரண்டு நாட்களுக்கு முன்பு கிண்டிலில் Carlo Rovelliயின் The Order of Time புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது மகிழ் என்னிடம் அது எதைப் பற்றியது என்று கேட்டான். காலத்தைப் பற்றியது என்று சொன்னேன். காலம் என்றால் என்ன என்று கேட்டான். நான் ‘நேற்று, இன்று, நாளை’ என்றரீதியில் காலத்தைப் பற்றி விளக்க முயன்றேன். முடியவில்லை. எவ்வளவுதான் காலத்தைப் பற்றிப் படித்தாலும் அதை விளக்குவது ரொம்பவும் கடினம் என்பதை உணர்ந்தேன். நீயே உனக்குப் பிடித்த மாதிரி விளக்கிக்கொள் என்று சொல்லிவிட்டேன். உன் கவிதை வழியாக அதைச் செய்யலாம் என்றேன்.  அதை அடுத்து அவன் எழுதிய மூன்று கவிதைகள். 


காலம்-1


நான் காலத்தில் மிதந்தேன்

காலத்தை
என் கண்ணுக்குள் தெரிய வைத்தேன்

காலம் என் கனவைத் தூக்கிக்
கடலில் போட்டது

நேற்று இருந்த காலம்
இன்னைக்கு இருக்குமா

இருக்கும்
காலம் என்னிடம் சொன்னது

காலம் என்னைக்
காலத்தின் முடிவுக்குக்
கூட்டிட்டுப் போனது


அங்கே
வானத்தின் முடிவு
கீழே இறங்கியது

--


காலம்-2

காலம் என்றால் என்ன

அது ஒரு பூ

அந்தப் பூவுக்குள்
ஒரு உலகம் இருக்கிறது

--


காலம்-3

காலத்தை என் கை மூலம்
நான் நிறுத்திவைத்தேன்

காலம் என்னிடம்
பூமியின் கனவைச் சொன்னது

நான் காலத்தை
இல்லாமல் ஆக்கினேன்

நான் காலத்தின் சிலையைக்
கட்டினேன்

நான் காலத்தைத்
திருப்பி ஓடவைத்தேன்

---

இது அவனது தொகுப்பில் இடம்பெற்ற காலக் கவிதை:

காலம்: 0

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
காலத்தில் பறப்பான்
காலத்தை நேரில் பார்ப்பான்
காலத்தைக் கற்பனை பண்ணிப்பான்

 


Monday, April 19, 2021

ஸ்பைடர்மேனால் வரையப்பட்டவன் – மகிழ் உலகத்துக்கு ஓர் அறிமுகம்

 


ஆசை

நான் வெகுகாலமாகக் குழந்தைகளின் மொழியைக்  கவனித்துக்கொண்டுவருகிறேன். மொழியை அவர்கள் வெளிப்படுத்தும் விதத்தில் அறியாமையும் அழகும் ஒன்றுசேர்ந்து வெளிப்படும். கவிதைக்கேயுரிய அதர்க்கம் அவர்களின் மொழியில் வெளிப்படுவதை நாம் காணலாம். 

மகிழ் ஆதன் 2012-ல் பிறந்தான். அவன் ‘அம்மா’, ‘அப்பா’ சொல்ல ஆரம்பித்ததிலிருந்து மொழியை எப்படி உள்வாங்குகிறான், மொழி அவனிடமிருந்து எப்படி வெளிப்படுகிறது என்பதையெல்லாம் நெருக்கமாக கவனித்துக்கொண்டிருந்தோம். உலகத்தை அவன் புதிதாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்த நாட்கள் என்பதால் அழகான, ஆனால் நாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளை, எல்லாக் குழந்தைகளையும் போலவே, கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு 4 வயது இருக்கும்போது அவனுக்கும் எனக்கும் பின்வரும் உரையாடல் நிகழ்ந்தது:

எனக்கு ஏசப்பா ரொம்பப் பிடிக்கும்

ஆனா அம்மா என்னை ஏசப்பா கோயிலுக்கு அடிக்கடி அழைச்சுட்டுப் போக மாட்டேங்கிறா.

(ஏசப்பா உன்னோட பேசினாரா?)

அவர் எப்படிப் பேசுவாரு? 

அவரு நிஜம் இல்லை. வரைஞ்சது.

நாமளும் வரைஞ்சதுதான்.

நம்மளை யாரோ வரைஞ்சு அனுப்பியிருக்காங்க.

(யாரு?)

ஸ்பைடர்மேன்.

அவன் பேசியதைக் கேட்டதும் மௌனியின் ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ எனக்கு நினைவுக்கு வந்தது. ‘கவிதை மாதிரியே பேசுறியே’ என்று அள்ளி அணைத்துக்கொண்டேன். அடுத்ததாகச் சில நாட்கள் கழித்து ஒன்றைச் சொன்னான். அதுவும் அப்படித்தான் இருந்தது. கவிதை என்பதற்கான வரையறை தெரியாவிட்டாலும் எந்தக் கவிதையையும் அவனுக்கு நாங்கள் சொல்லித்தராவிட்டாலும் ‘கவிதை மாதிரியே பேசுறியே’ என்று சொன்னதிலிருந்து இதுதான் கவிதை என்று பிடித்துக்கொண்டுவிட்டான் போல. ஆரம்பத்தில் அவ்வப்போது சொல்லிக்கொண்டுவந்தவன் ஒரு கட்டத்தில் மழையாய்க் கொட்ட ஆரம்பித்துவிட்டான். சொந்த ஊருக்குத் தன் அம்மாவுடன் அவன் சென்றிருந்தபோது விளையாடிக்கொண்டிருந்தபோதெல்லாம் வந்துவந்து கவிதை சொல்லியிருக்கிறான். இரண்டே நாளில் 20-க்கும் மேற்பட்ட கவிதைகள். தொடக்கத்தில் என் மனைவியிடம்தான் அதிகக் கவிதைகளைச் சொல்லியிருக்கிறான். எழுதவோ படிக்கவோ பழக்கப்படாத சமயம் அது. இப்போதுகூட எழுதுவதில் அவனுக்குத் தேர்ச்சி வரவில்லை. ஆகவே, அவன் கவிதை சொல்லச்சொல்ல அவன் கவிதைக்கென்றே வைத்திருக்கும் நோட்டில் எழுதிக்கொள்வோம். நோட்டு கையில் இல்லாத சமயத்தில் கைபேசியில் பதிவுசெய்துகொள்வோம். இப்படியாக இன்று வரை சுமார் 300 கவிதைகள் சொல்லிவிட்டான். அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு 80 கவிதைகளை இந்தத் தொகுப்பில் வெளியிடுகிறோம். தற்போது 9 வயதைத் தொடும் மகிழ், 6 வயதுக்குள் ஒரு தொகுப்புக்குத் தேவையான அளவுக்குக் கவிதைகள் சொல்லிவிட்டான்.


குழந்தையிடம் மொழி வெளிப்படுவதைப் பார்ப்பது ஆற்றின் தோற்றுவாயில் உள்ள ஊற்றை அள்ளிக்குடிப்பது போல என்பதை நாங்கள் கண்டுவருகிறோம். அவனே பல சொற்களை உருவாக்கியிருக்கிறான். பல சொற்களுக்கு அவனே அர்த்தம் கொடுத்திருக்கிறான். ‘என் பாடல் சனம் பாடல்’ என்ற வரியில் வரும் ‘சனம்’ என்ற சொல்லுக்கு நாம் அறிந்த பொருள் ’மக்கள்’ (ஜனம்). ஆனால், அவனுக்கு அந்தப் பொருளில் ‘சனம்’ என்ற சொல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதி அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டபோது, ‘காக்கா மாதிரி குயில் மாதிரி கத்துறது’ என்றான். ஆக, மிமிக்ரி என்ற பொருளில் அதைப் பயன்படுத்தியிருக்கிறான். அந்தந்தத் தருணத்துக்குத் தோன்றும் சொல்லும் பொருளும் கூட அவனுடைய கவிதைகளில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு கவிதையில் ‘தேவகதை’ என்ற சொல்லைக் கூறியிருந்தான். அதன் அர்த்தம் என்ன என்று நாங்கள் கேட்டதற்கு அவன் கூறிய விளக்கத்தை வைத்துப் பார்த்தபோது ‘தேவதை’ என்பதைத்தான் அப்படிக் கூறுகிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. 


இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சில இடங்களில் ‘நம்மள்’, ’பளிச்சின்னு’ என்று பேச்சு நடையில் கவிதை சொல்பவன் சில இடங்களில் ’என் காற்றும் என்னை நேசிக்கும்’ என்று இலக்கிய நடையில் சொல்லியிருக்கிறான். பேச்சு வழக்கு-எழுத்து வழக்கு என்ற இரட்டைப் பண்பு தமிழ், அரபி போன்ற மொழிகளுக்கே உரிய தனித்துவம். அதை மகிழும் பிரதிபலிப்பது வியப்பே. மகிழ் எப்படிக் கூறினானோ அப்படியே நாங்கள் கவிதைகளைப் பதிவுசெய்திருக்கிறோம். நடையையோ மொழியையோ மாற்றவில்லை. எழுத்தில் பதிவுசெய்யும்போது தேவையான இடங்களில் ஒற்று மட்டும் போட்டிருக்கிறோம். அவன் கவிதையைச் சொல்லும்போது கொடுக்கும் இடைவெளிகளுக்கு ஏற்ப வரிகளைக் கூடுமானவரை உடைத்திருக்கிறோம். நிறுத்தற்குறி எதையும் கிட்டத்தட்ட இடவில்லை.  


மகிழின் கவிதைகள் சிலவற்றை என் நண்பர்களும் வழிகாட்டிகளுமான க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன், மருத்துவர் சீதா  ஆகியோரிடம் அனுப்பிக் கேட்டபோது ‘இந்தக் குழந்தையிடம் அசாத்தியத் திறமை இருக்கிறது’ என்று சொன்னதுடன் மகிழைப் பற்றிக் கவலை கொள்ளவும் ஆரம்பித்தார்கள். மழலை மேதைமை என்பது ஒரு சுமை என்றும் வெளியுலகம் அவர்களுக்கு நிறைய ஆபத்துகளை வைத்திருக்கும் என்றும் அந்தச் சுமையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் கருதினார்கள். அவனுடைய கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டபோது அவர்கள் அப்படிச் செய்யக் கூடாது என்றுதான் கூறினார்கள். இதன் பின்னர் மகிழ் கவிதைகளைப் புத்தகமாக்க வேண்டும் என்ற என் ஆசையை நான் நிறுத்திக்கொண்டுவிட்டேன். ஆனால், ஆண்டுகள் செல்லச்செல்ல, அவன் அதிகமாகக் கவிதைகள் சொல்லச்சொல்ல, என் பிடி தளர்ந்தது. “நம்முடைய அபிப்பிராயங்களின் அடிப்படையில் ஒருவருடைய பணியை மறைக்கக் கூடாது. மகிழை வெறுமனே குழந்தையாக நீ பாவிக்கிறாய். அப்படிச் சுருக்கிப் பார்க்கக் கூடாது” என்று நண்பர் சமஸ் சொன்னார். இதனால் என்னுடைய எண்ணத்தில் மாற்றம் உருவானது. சிறு வயதில் தனக்கு நிகழ்ந்திருக்கக் கூடிய நல்ல விஷயம் ஒன்று தவறிப்போய்விட்டிருக்கிறதே என்று அவன் இளைஞனாக ஆன பிறகு வருந்தக் கூடும் என்பதாலும், உண்மையிலேயே மகிழின் கவிதைகள் ஒரு ‘நிகழ்வு’ என்று நானும் என் மனைவியும் கருதியதாலும்தான் புத்தகம் கொண்டுவர முடிவெடுத்தோம். ஆயினும் இப்போதும் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. 


மகிழ் தனக்குத் தோன்றும்போது கவிதை சொல்வான். சில வரிகள் நன்றாக இல்லை, வேறு சொல் என்றால் யோசித்துச் சொல்வான். அப்போதும் சரியில்லை என்றால் விட்டுவிடுவோம். சினிமா பாடல்களைத் தவிர கவிதைகளின் பரிச்சயம் அவனுக்கு இல்லை. நல்ல கவிதைகள் படித்துக்காட்டலாம் என்று நினைத்து பாரதியாரில் தொடங்கினோம். ‘காக்கைச் சிறகினிலே’, ‘சின்னஞ்சிறு கிளியே’ தவிர ஏதும் பிடிக்காமலும் அவன் வயதுக்குப் பிடிபடாமலும் போனதால் அத்துடன் நிறுத்திக்கொண்டோம். மிகச் சிறு வயதிலேயே பறவைகள் அறிமுகம், அடிக்கடி மாடிக்குச் சென்று வானத்தைப் பார்த்தல் போன்ற பழக்கங்கள் அவனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தோம். கவிதை சொல்லச் சொல்லி வற்புறுத்தாமல் இருக்கவும் எங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டோம். சில சமயம் மாதக் கணக்கில் கவிதை சொல்லாமல் இருப்பான்; சில சமயம் ஒரே நாளில் 5, 6 என்று தினந்தோறும் கவிதைகள் சொல்லுவான். அவன் போக்கில் விட்டுவிட்டோம். 


தற்போது கூடுவாஞ்சேரியில் அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மகிழ் தமிழ்வழிக் கல்வி கற்கிறான். கதை சொல்வதில் மிகுந்த ஈடுபாடு உடையவன். யோசித்துச்  சொல்லாமல் தோன்றியதைச் சொல்லிக்கொண்டே இருப்பான். அவற்றுள் அழகிய பல கதைகள் இருக்கின்றன. ஸ்பைடர்மேன், விஜய், ஜாக்கிசான் ஆகியோரின் தீவிர ரசிகன். குறிப்பாக, ‘டோராவின் பயணங்கள்’, ‘வருத்தப்படாத கரடி சங்கம்’ போன்ற குழந்தைகள் தொடர்களின் தீவிர ரசிகன்.


இந்தத் தொகுப்பு வெளிவரும்போது க்ரியா ராமகிருஷ்ணன் எங்களுடன் இல்லாமல் போனது எங்களுக்குப் பெரும் இழப்பு. மகிழ் கவிதைகளைப் பற்றி எப்போதும் வியந்துகொண்டே இருப்பார். அவருக்கு எங்கள் நன்றி. மகிழைப் பற்றி எப்போதும் கவலைப்படும் மருத்துவர் சீதாவுக்கும் நன்றி. மகிழை எங்கள் கையில் பத்திரமாகத் தந்த மருத்துவர் கீதா அர்ஜூனுக்கும் நன்றி. மகிழ் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று ஆதரவளித்த சமஸுக்கு நன்றி. இந்தப் புத்தகத்தை அழகுற வெளியிடும் ‘நூல்வனம்’ மணிகண்டனுக்கு நன்றி. அவரிடம் ஆற்றுப்படுத்திய தம்பி ராஜனுக்கு நன்றி. பொருத்தமான பின்னட்டை வாசகம் எழுதிக்கொடுத்தவரும், தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரும், மகிழ் கவிதைகளின் ரசிகருமான பா.வெங்கடேசனுக்கும் நன்றி.  


மகிழின் கவித்துவத்தில் எப்போதும் பூரித்திருக்கும் அவனுடைய அம்மா சிந்துவுக்கு என் அன்பு. மகிழுக்கும் அவனுடைய குட்டித் தம்பி நீரனுக்கும் முத்தங்கள்.

நூல் விவரங்கள்:

நான்தான் உலகத்தை வரைந்தேன்
(கவிதைகள்)

மகிழ் ஆதன்

வானம் பதிப்பகம் வெளியீடு

விலை: ரூ.50

புத்தகத்தை வாங்குவதற்கு: மணிகண்டன் - 9176549991

                                                            ஆசைத்தம்பி - 9962292137 

Thursday, March 4, 2021

அண்டங்காளி: சன்னதம் கொண்ட கவிதைகள்


 

ஜி.குப்புசாமி

கவிதை பிறப்பது பெரும்பாலும் உளத்தூண்டலாலும், மனவெழுச்சியாலும் என்பதால் கவிஞனின் மனதில் அது உருவாகும் கணத்தைத் துல்லியமான சொற்களால் விவரிக்கமுடிவதில்லை. தூண்டல், எழுச்சி இவற்றோடு பீடித்தலும் கவிதையைக் கொண்டுவரும் என்பதற்கு சமீபத்தைய சான்று ஆசையின் ‘அண்டங்காளி’ தொகுப்பின் கவிதைகள்.

தனக்கு சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை என்று முன்னுரையில் குறிப்பிடும் ஆசை, காளியின் உக்கிரத்துக்கு ஆட்பட்டு, அருள்வயப்பட்ட நிலையில் இக்கவிதைகளை எழுதி முடித்தபின்பும் கடவுள் நம்பிக்கை வரவில்லை என்றே சொல்கிறார். காளியைப் போலவே கண்ணனும். தெய்வ உருக்கள் என்பதைமீறி   cultish phenomenon களே. அவர்களால் பீடிக்கப்படுவதற்கு கடவுள் நம்பிக்கை வேண்டுமென்பதில்லை. இத்தாலியின் ராபர்டோ கலாஸ்ஸோவும் ஜெர்மனியின் குந்தர் கிராஸும் உதாரணங்கள்.

தமிழின் மகத்தான கவிஞன் ஒருவனையும் இதற்கு முன்பு காளி ஆக்கிரமித்திருக்கிறாள். ‘யாதுமாகி நின்றாய் காளீ… பூதமைந்தும் ஆனாய்….போதமாகி நின்றாய்…இன்பமாகி நின்றாய்… என்னுள்ளே புகுந்தாய்…பின்பு நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ காளீ..’ என்று தனக்குள் வியாபித்திருக்கும் ஒரு பெரும் சக்தியை உன்மத்தநிலையில் பாரதி உபாசிக்கிறான்.  மந்தமாருதத்தில் கரையும்போதும், வானத்தை நோக்கும்போதும், மலையுச்சியில் நிற்கும்போதும், சிந்தை எங்கெங்கோ செல்லும்போதும் அங்கெல்லாம் அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள் காளி.  இது பக்தி என்ற வகைப்பாட்டில் அடங்குமாவென்று சந்தேகமாக இருக்கிறது. மனம் சாதாரண லௌகீக வாழ்வுநிலையிலிருந்து விடுபட்டு தன்னிச்சையாக ஓர் அதீத உயர்நிலைக்கு சென்றுவிடுவது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. உன்னதமான கவிமனம் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அது நிகழ்கிறது. ஆசையின் இக்கவிதைகளில் அந்தக் கவிமனம் புலப்படுகிறது.

’வெறி கொண்ட தாய்’ எனும் கவிதையில் பாரதி, ‘பேயவள் காணெங்கள் அன்னை – பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை’ என்று தொடங்கி அடுத்து வரும் வரிகளில் வேதங்கள் பாடுவள் காணீர் – ஓதரருஞ் சாத்திரங்கோடி உணர்ந்தோதி உலகெங்கும் விதைப்பாள் .. பாரதப் போரெனில் எளிதோ – விறல் பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள்‘ என்று அவளை  பாரத தேவியாகவே உருவகிக்கிறார்.

ஆனால் இங்கு ஆசைக்கு காளி அவரை ஆட்டுவிக்கும் கருவியாகவே இருக்கிறாள். தாவும் மனமேறி தாளமிடும் மந்தியாக, சீறும் ஒளி சொடுக்கி சீழ்க்கை அடிப்பவளாக, ஏறும் ஒலி முடக்கி ஏகாந்தம் செய்பவளாக, ஆடும் நிலை விரித்து அண்டமிடும் அற்புதமாக இருக்கிறாள்:

பேயவள்காண் எங்கள் அன்னை

பிறப்பறுக்கும் பெருஊழி

தாவும் மனமேறி

தாளமிடுமொரு மந்தி

ஊறும்சுவை விரட்டி

முன்சென்று நுகர்பவள்

பாயும்நதி மூடும்

பாழ்வெளிப் போர்வையவள்

சீறுமொளி சொடுக்கி

சீழ்க்கை அடிப்பவள்

நாறும்மலர் தெறிக்கும்

நர்த்தனங்கள் காட்டுபவள்

ஏறுமொலி முடக்கி

ஏகாந்தம் செய்பவள்

தூறும்விதி ஒழுகும்

தூமைதரு பேரெழிலாள்

ஆடும்நிலை விரித்து அண்டமிடும் 

அற்புதமே தேடும் விழிகளைத்

தேய்க்கும் ஒளி அருள்வாயே.

(பக். 26)

காளி என்பவள் அசையாமல் சமைந்திருப்பவள் அல்ல. அவளிடம் எப்போதும் துடிப்பும் துடிப்பும் துள்ளலும் குதித்துக் கொண்டிருக்கின்றன.  அந்த குதிப்புக்கேற்றவாறு ஆசையின் சொற்கள் தாளகதியில் வந்து விழுகின்றன.

காலைப் பிடித்திழுத்துச்

சுற்றியேறி குறி படரும் கொடியே

யட்சி யட்சி யட்சி

கொவ்வைக் குறுமுலையின்

குமிழ் வெடிப்பே

யட்சி யட்சி யட்சி…………….

(பக் 27)

குறியடியில் 

உன் ஆட்ட மேடை

போட்டது யார்

அதுவும் வெட்கங் கெட்டு

நீ ஆடும் ஆட்டத்துக்குக் கூட

மண்டை ஆட்டுது

பார்

எந்தத்தாளம்

கேட்டது 

என்ன ஆட்டம்

கண்டது

அதன் நாவில்

எச்சில் ஊறி

படியிறங்கி

ஏன் கோலம்

போட்டது .

(பக்.73)

•••••••••••••••••••••••••••

ஓசை லயம் தேவையற்ற சொற்களைத் தந்துவிடும் என்பது ஒரு நவீன சிந்தனை . யாப்பிலக்கணத்தின் அடிப்படையிலும் ஓசையும் தாளமும் உள்ளன . இன்றைய கவிதைகள் தாள லயத்தைத் துறந்து சொற்சிக்கனத்தோடு வருபவை . ஆனாலும் ஆசையின் இந்த ‘ காளி ‘ கவிதைகள் இப்போது மரபாகியிருக்கும் நவீன கவிதை முறைக்கு அடங்குவதாக இல்லை.  பிரக்ஞை மீறி , அருள்வயப்பட்ட அதீத நிலையில் இக்கவிதைகள் அவரிடமிருந்து வெடித்துக் கொண்டு வருகின்றன . 

இருமுனை முடிவின்மையின் 

நடுவெளி நர்த்தனம் நீ

தொடுஊழி தரையிறக்கும்

தத்தளிப்பு நீ

கடல்புரியும்

தாண்டவத்தின் தெறிப்பும் நீ

எரிஜோதி இடைபறக்கும்

கொடும்பறவை நீ

அனலுமிழும் கனல் மயக்கும்

பேய்சிரிப்பு நீ

நாத்திகனின் கனவில் வரும்

நடனக்காளி நீ

(பக்.38)

என்ற கவிதையை மண்ணில் காலூன்றி ஸ்திரமாக நின்றிருக்கும் போது ஒரு கவிஞனால் எழுதியிருக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது .

காலவரையறைகளைத் தாண்டி முதலும் முடிவுமற்ற அண்டப் பெருவெளியிலிருந்து உருவாகி வந்தவை போல ஒரு eternity இக்கவிதைகளில் இருக்கின்றன. முன்பே சொன்னதைப் போல ஒரு அதீத சக்தியின் பீடிப்பில் கட்டுண்டு இருக்கையில் மட்டுமே இத்தகைய வரிகளைக் கவிஞனால் எழுத முடியும்  என்று தோன்றுகிறது . அப்படிப் பார்க்கும்போது இக்கவிதைகளுக்கு முழு பிரக்ஞையில் இருக்கின்ற ஆசை சொந்தம் கொண்டாட முடியாதென்றும் தோன்றுகிறது .

 நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியரும் , கவிஞரும் , ஓவியருமான குந்தர் கிராஸ் 1960 களில் கல்கத்தா நகருக்கு முதன் முறையாக வருகிறார் . அந்நகரம் அவருக்கு ஒரு மகத்தான மனத்திறப்பை ஏற்படுத்துகிறது . அந்த நகரத்தில் இருக்கும் ஏதோ ஒரு மாயசக்தி அவரை மீண்டும் மீண்டும் வருகை தர வைக்கிறது . உலகின் மிகவும் செல்வச் செழிப்பான நாட்டிலிருந்து வந்தவரான குந்தர் கிராஸுக்கு  கல்கத்தா நகரின் சேரியும், குப்பை மேடுகளும், அழுக்கும் அசூயை அளிப்பதாக இருந்தாலும் அவற்றை எழுத்தில் பதிவு செய்ய முற்படுகிறார் . இவ்வளவு ஏழ்மையிலும் வங்காளிகள் பெரும் கொண்டாட்டத்துடன் வழிபடும் காளி பூஜையைப் பார்த்துவிட்டு வந்தவருக்கு எழுதமுடியாமற் போய்விடுகிறது . எவ்வளவு முயன்றாலும் ஒரு வரிகூட எழுத முடியவில்லை. ஆனால் திடீரென அவர் கை வரையத் தொடங்குகிறது . எழுதவேண்டிய நோட்டுப் புத்தகத்தில் கோட்டுச் சித்திரங்களாக தன்நிலை மறந்து வரைந்து கொண்டேயிருக்கிறார் . பின்னர் அதைப்பற்றிக் குறிப்பிடும்போது  ”நானாக யோசித்து வரையவில்லை .ஏதோ எனக்குள்ளிருந்து என் விரல்கள் மூலமாக வரையவைத்தது” என்கிறார் . வரிசையாக பல சித்திரங்களை வரைந்து முடித்ததும் அவர்  ‘ விடுபடுகிறார் ‘ . எழுத நினைத்த வரிகளை வரைந்திருந்த படங்களின் மீதே எழுதுகிறார் . படங்களோடு அவர் கையெழுத்திலேயே அந்த நூல் வெளிவந்திருக்கிறது . புத்தகத்தின் பெயர் : SHOW YOUR TONGUE.

 எனைப் பாதியிலே 

 கொண்டுவந்து

 பாழ்வெளியில்

 தள்ளிவிட்டாய்

 முட்டித்திறப்பேனோ நான்

 நீ மூடிவிட்ட பெருங்கதவை

     (பக்.28) 

என்ற வரிகள் குந்தர் கிராஸின் ‘நாக்கை நீட்டு’ புத்தக அனுபவத்தைத்தான் நினைவூட்டுகின்றன.

இக்கவிதைகளில் திரும்பத் திரும்ப வருகின்ற காமமும், யோனியும், குறியும் அவற்றின் நேரான பொருளில் குறிப்பிடப்படுவதாக  நினைக்கத் தோன்றவில்லை. இச்சொற்களுக்கு இணையாக – ஏன் அதிகமாகவே , உடலின் மற்ற பாகங்களும் உணர்ச்சிகளும் வந்துகொண்டே இருக்கின்றன. உடலையும் உணர்ச்சிகளையும் முன்னுரையில் சபரிநாதன் குறிப்பிடிவதைப்போல அண்டத்தின் நுண்வடிவ மாதிரிகளாகவே இக்கவிதைகள் முன்வைப்பதாகத் தோன்றுகிறது. உடல் அவயங்கள் சார்ந்த கவிதைகளிலும் அவை கவிஞனுக்குத் தொந்தரவு தருவதாகவே இருக்கின்றன. அது பொறுக்காமல் கவிஞர் காளியிடம் முறையீடு செய்துகொண்டே இருக்கிறார். ஆனால் ஆடும் கூத்தை காளி நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவஸ்தையின் உச்சத்தில் இதே அவயங்களைக் கொண்டு கவிஞர் காளியை வணங்கவும் செய்கிறார்:

குறியால் நினைக்கிறேன்

உன்னை

குறியால் தொழுகிறேன்

உன்னை

குறியால் உணர்கிறேன்

உன்னை

குறிகோடி படைத்துத்

தறி நெய்பவளே

குறிபிடித்துக் கூட்டிச் செல்லடி

என்னை

உன் குறியாளும்

பெருமேடைக்கு.

(பக்.40)

**********************************************

இந்த உன்மத்த நிலை ஒரு சித்திரவதைதான். அருள்பாலித்த நிலையில் பரவசமும் பரிதவிப்பும் சமமாக வந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையிலிருந்து தன்னை விடுவித்துவிடவும் வேண்டிக்கொள்கிறார். அண்டங்காளி இப்போது அண்டங்களவாணியாகிவிடுகிறார்:

அண்டங்களவாணி

எங்கிருந்து எடுத்து வந்தாய்

என்னை

எடுத்த இடத்தில்

வைத்துவிடடி

என்னை. 

(பக்.79)

கவிஞரை அண்டப் பெருவெளிக்குக் கூட்டிச்சென்று அலைக்கழித்துவந்த அண்டங்காளி இறுதியில் மலையேறிவிடுகிறாள்:

காளியவள் களிநடனம்

காட்டிவிட்டாள்

ஆழிதனை ஊஞ்சலென

ஆட்டிவிட்டாள்

ஊழிமனக் காட்சிதனை

நாட்டிவிட்டாள்

பாழிருளைப் படம்பிடித்து

மாட்டிவிட்டாள்

(பக்.83)

என்று காளியம்மை ஆடிய கூத்து நிறைவடைகிறது.

கொஞ்சம் திகைப்பையும், சற்று சிலிர்ப்பையும், மிகவும் பயத்தையும் ஒரே நேரத்தில் உண்டாக்கி ஓர் அலாதியான வாசிப்பனுபவத்தைத் தந்திருக்கும் காளியம்மைக்கும், அவள் ஆசிபெற்ற ஆசைக்கும் நமஸ்காரங்கள்.

---------------------------------------------------------------

அண்டங்காளி

ஆசை

விலை: ரூ.100

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEb

Tuesday, February 23, 2021

ஆசையின் ‘குவாண்டம் செல்ஃபி’ ஓர் அறிமுகம்ராஸ்மி 

தனது சக உயிரினங்களை வெற்றிக்கொண்ட மனிதகுலத்தை தற்போது தொழில்நுட்பங்கள் ஆளுகின்றன என்று கூறும் ஹராரி யுகத்தில், ஆசையின் கவிதை உலகம் இப்பேரண்டத்தை தனக்குள் அடக்கி அனைத்துப் படைப்புகளுக்கும் சரிசமமான இடத்தை உறுதி செய்கிறது. எல்லோரையும் எல்லாவற்றையும் அரவணைத்துக்கொள்கிறது. 75 கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பு, கிட்டத்தட்ட இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றைப் பற்றியுமே பேச முற்படுகிறது. இவற்றுக்காக இதற்காகத்தான் இந்த கவிதைகள் என்று வகைமைப்படுத்திட முடியவில்லை. உலக உயிர்களுக்கெல்லாம் இக்கவிதைகளை பொருத்திப் பார்த்தாலும் சாலப் பொருந்திப் போகிறது.

‘குவாண்டம் செல்ஃபி’யின் மொத்தக் கவிதைகளும் இந்த ஒரு கவிதைக்குள் அடங்கிவிடுகின்றன.

 “உடலின் எல்லை எதுவரை

 என்று தெரிந்தாக வேண்டும்

எனக்கு’’ - எனத் தொடங்கி ,

“மரணமென்பது

விரித்தலுக்கெதிரான

எல்லையற்ற சுருங்குதலின்

திடீர் கலகமன்றி

வேறென்ன”  என்று முடியும்.

இந்தக் கவிதையின் முதல் பத்திக்கும் இறுதி பத்திக்கும் இடையில்தான் ‘குவாண்டம் செல்பி’ கவிதை உலகம்  தன்னை சுருக்கி விரித்து நிகழ்த்திக் காட்டுகிறது.

ஒரு கவிதையை அணுகும் பார்வைக்கோணம் நிச்சயம் வாசகனை சார்ந்தது. எனக்கு ‘குவாண்டம் செல்ஃபி’யை வாசிக்கும்போது ஒரு குறு நகரச் சிறுவனின் கண்ணோட்டத்தில் இக்கவிதைகள் அமைந்துள்ளதாக தோன்றியது. புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்’ என்ற சிறுகதையில், சவாகாசமாய்த் தகரப் பீப்பாயைக் கையில் பிடித்துபடி  செத்துக்கொண்டிருக்கும் கிழவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையை போன்ற சிறுவன் அவன். நவீன உலகின் எவ்வித உளவியல் கோட்பாடுகளுக்கும் தர்க்கத்துக்கும் உள்ளாகாத சிறுவன் அவன். இத்தகைய தீங்குகளில்லாமல் உலகை தரிசிக்கும் தன்மை இக்கவிதைகளின் ஆன்மாவாக உள்ளது.

" நீ என்

ஆன்ம சகோதரி,

ஆத்மிக அன்னை,

அடிமனதின் காதலி என்

புலன்களின் வேசி. "

இதில் ஒரு பெண் எத்தனை உருவாக, உயிராக விஸ்தரிக்கப்படுகிறாள் என்பதுனூடே அவள் மீதான பிரியம் எப்படி எல்லையற்ற அண்டமாக பரந்து அவளென்ற புள்ளிக்குள் அமிழ்கிறது.

“நான் இருக்கிறேன் என்று பார்க்காதே அம்மா” என்ற கவிதை அனைத்து மகன்களும் தரிசிக்க வேண்டிய ஒன்று. இந்தக் கவிதை உலக கற்பிதங்களால் உண்டாக்கப்பட்ட நம் மனதின் அழுக்கைக் கழுவிவிடுகிறது.

“உன் மதாவிடாய் வலியைத் தன் மேல் பூசிக்கொள்ளத் தெரியவில்லை என்றால் இக்கவிதை உயிரற்றது என்று அர்த்தம்” என்று தொடங்கும் கவிதையில், ஆசையின் ‘குவாண்டம் செல்பி’யின் குறிக்கோள் நிறைவடைகிறது. அது இப்பேரண்டத்தின் அற்புதத் தருணங்களை வெளிச்சமிட்டு அதன் மடியில் நம்மை அணைத்து நம் அத்தனை தீங்கெண்ணங்களையும் வெளியேற்றச் செய்கிறது.

“சுவரை உதைத்து உதைத்து” என்ற சர்ரியல் கவிதையை பல முறை வாசித்தேன். ஒரு பெண்ணாக, ஒரு தேசாந்திரியாக, பூனையாக, செடியாக இன்னபிற உயிராக என்னை  கற்பனை செய்து வாசிக்கும்போது ஒவ்வொரு வாசிப்பிலும் அக்கதாபாத்திரத்திற்குரிய தரிசனத்தை அடையும் சாத்தியத்தை அக்கவிதை எனக்கு வழங்கியது.

ஒட்டுமொத்தமாக,‘குவாண்டம் செல்ஃபி’ வாழ்தலின் ஊடாக மேற்கொள்ளப்படும் பயணம் பற்றிய கதைகளாய் தன்னை பிறப்பித்துக்கொள்கிறது. விலக்கப்பட்ட கனியை உண்டு அறிதலை அடையாமல், அறியாமையின் வழியே ஞானத்தை நோக்கிய பயணமாக அந்தப் பயணம் அமைகிறது.

நூல் விவரம்:

குவாண்டம் செல்ஃபி

(கவிதைகள்)

ஆசை

விலை: ரூ.160

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3qlMQyu.

Monday, February 22, 2021

மாசியும் ஆசையின் அண்டங்காளியும்

 


கண்டராதித்தன்                                        

     ஏழூர் எல்லையைக் காக்கும் எல்லைக் கோயில் அது, ஒரு பக்கம் ஊர்,மற்றொரு பக்கம் நீர் நிரம்பி வழியும் ஏரி, மற்ற இரண்டு பக்கங்களிலும் அறுவடைக்குத் தயாராகவும், அறுவடை  முடிந்தும் இருக்கும் வயல்கள்  உள்ளே வாசியம்மன். உக்கிர தெய்வம். ஆனால் எல்லையைக் காப்பவள், மனம் பிறழ்ந்தவர்களையும் கதியற்றவர்களைம் திக்கு தெரியாதவர்களையும்  அன்போடு அரவணைத்து இரவும் பகலுமாய்க் காத்து நிற்பவள்,ஏழூர் மக்களும் மனம் விரும்பித் தேடி வரும் அன்னை அவள்.

        கோயில் என்று சொல்ல முடியாத கட்டிடம் அது.  சுண்ணாம்புக் காரை உதிர்ந்தும் எண்ணெய்ப் பிசுக்குடனும் அழுக்குடனும் காணப்படும் வசிப்பிடம்தான் ஆண்டாண்டு காலமாக அன்னைக்கு வாய்த்திருக்கிறது. குனிந்து சென்று சேவிக்கும்படியான நுழைவாயிலின் வழியாக உள்ளே செல்லும்போது சப்த நாடியும் ஒடுங்குவது போலவொரு அமைதி. அன்னை வாசியம்மன் கருத்த பெண்ணின் அகண்ட முதுகைப்போல உள்ள கற்பலகையில் வீற்றிருப்பாள், அங்கிருந்து அன்னையை வணங்கி எங்கள் ஊர் கற்பகம் பாடும் பாடல்கள் பல. என் நினைவில் இருப்பவை இரண்டே இரண்டு. அவற்றுள் ஒன்று இது:

 பல்லது கடித்து மீசை படபடவென்றே துடிக்க

கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி

எல்லினும் கரியமேனி எம்படர் வரினும் என்னை

ஒல்லையில் தாரகாரி ஓம்ஐம் ரீம் வேல் காக்க

எனக்குத் தெரிந்து இந்தப்  பாடல்களை நெக்குருகப் பாடும் கற்பகம் சில சமயம்  அன்னைக்கு எதிரில் நின்று மனம்போன போக்கில் வசைமாரி பொழிந்துவிட்டுத் தரையிலிருந்து மண்ணெடுத்து அப்பிக்கொண்டு செல்வார். புதிதாகப் பார்ப்பவருக்கு அந்தக் கோலம் அச்சுறுத்துவதாக இருக்கும்.

கற்பகம் வீடு,மனைவி, பெற்றோர் என ஏதும், யாரும் அற்றவர். கிடைத்த வேலையைச் செய்து கிடைத்த இடத்தில் உண்டு உறங்குபவர். கற்பகம், வாசியம்மனுடன் தன் வாழ்நாளுக்குமான பிணக்கும் நேசமும் வெறுப்பும் பகையும் ஊடலும் கொண்டிருந்தவர். ஒரு நாள் அங்கிருந்த மணம் வீசும் இலுப்பைத் தோப்பில் இறந்தும் போகிறார். ஊர், வெறியன் இறந்துபோனதாக அவர் வாழ்வை  முடித்துவிடுகிறது.        

       கற்பகம் கற்றவர் அல்ல, உற்றார் உறவுகளற்று மனம் போன போக்கில் வாழ்ந்து மடிந்தவர். அவருக்கிருந்த ஒரே பிடிப்பு காளிசொருபமான அன்னைதான். இங்கு கவிஞர் ஆசைக்கு ‘அண்டங்காளி’ இப்படியான தோற்றத்தில் இருந்திருக்க கூடும் என்றே இத்தொகுப்பை வாசிக்கும்போது தோன்றுகிறது.

     ஒரு நவீன மனதை வைத்துக்கொண்டு இத்தகைய கவிதைகளை எழுத முடியுமா என்பதுதான் எனக்கு முதலில் எழுந்த கேள்வி. சரி எழுதலாம் என்றே வைத்துக்கொள்வோம், ஒன்றிரண்டு கவிதைகள் இதுபோன்று எழுதவும் சாத்தியம்தான். ஆனால்  ஆசை இத்தொகுப்பில் உள்ள மொத்தக் கவிதைகளின் வழியாகவும் உக்கிர மனநிலையுடனும், அடங்க மறுத்தும் அண்டங்காளியுடனான  உறவின் பல்வேறு படிநிலைகளை வெவ்வேறு விதமாகவும் எழுதியிருக்கிறார். இந்த வகையில் இந்தக் கவிதைகள் விசேஷமானவை  என்றே நினைக்கிறேன்.

உதாரணத்துக்கு ’அண்டங்காளி’யின் சில தெறிப்புகள்;

‘எனக்கும் வாய்த்திருக்கிறாளே…’ கவிதையில்

தலைமேல் காலைத் தூக்கி

ஆடும்

தரங்கெட்ட தறுதலையை

பெண்குலத்தின் பேரழுக்கை

தலைமேல் தூக்கிவைத்து

கொண்டாடுகிறாயே

குடும்பத்துக்காகுமாடா

குலம் செழிக்க

வேண்டுமடா

என்றெல்லாம்

என் வீட்டார் சொல்லித்தான்

பார்த்தார்கள்

பக்கம்-38ல் உள்ள கவிதை:

இருமுனை முடிவின்மையின்

நடுவெளி நர்த்தனம் நீ

தொடுஊழி தரையிறக்கும்

தத்தளிப்பு நீ

கடல்புரியும்

தாண்டவத்தின் தெறிப்பும் நீ

எரிஜோதி இடைபறக்கும்

கொடும்பறவை நீ

பக்கம் 37:

நாறத்தலை விரித்து

நாலாத்திசையும்

கண்ணுருட்டி

தான்வேகும்

கொடுங்கனலை

அண்டங்கொதிக்க

அடிப்பற்ற வைத்து

கோரத்தாண்டவம்

கொற்றவை நீ

ஆடித்தெறிக்கும்போது

அஞ்சாமல் நிற்பேனோ

ஆகாசந்திறக்கும்

அன்னை அன்னை அன்னை

என்ன செய்தாய்

என்னை என்னை என்னை

இந்தத் தெறிப்புகள் சில எடுத்துக்காட்டுகள்தான்.

    இத்தொகுப்புகளின் மொத்தக் கவிதைகளையும் வாசிக்கும்போது இவற்றில் இருக்கும்  தாள கதியான நடை இக்கவிதைகளுக்கு அடிநாதமாக நின்றுகொண்டிருக்கிறது என்றே எனக்குப் பட்டது. ஆனாலும் மொத்த கவிதைகளையும் அண்டங்காளி நிரப்பியிருப்பதில் சற்றே மனப்பிசகு இருப்பது போல நினைப்பும் வந்தது.

 ஆசையின் இத்தொகுப்பில் காளியின் வடிவம், அனைத்து விதமான பெண் பாத்திரங்களுக்கும் பொருந்தியிருப்பது சிறப்பு. எனக்கு முதலில் எப்படி இது சாத்தியமாயிற்று என்றுதான் தோன்றியது.இந்த மனநிலையை எட்ட முடிந்திருப்பதே வினோதமானது என்றே கருதினேன். பிறகு அவரது முன்னுரையை வாசிக்கும்போது ஒருவிதமான தெளிவுக்கு வர முடிந்தது.

  கவிதையினால் ஏற்படும் விளைவுகள் என்பது இதுதான். இங்கு காளி எல்லா விதமான சொருபங்களாகவும் கவிஞருக்குத் தென்படுவது அவரது வினோத மனநிலையை தெளிவாக உணர்த்துகிறது. அவள் இந்த விதமான வடிவங்களை ஏறபதற்கானவள் என்றே நானும் கருதுகிறேன், காளியைப் போன்றே அணுக்கமானவளாகவும் காமக்கிழத்தியாகவும் அன்னையாகவும் சகோதரியுமாகவும் தோழியுமாகவும் இருக்க, கதியற்றவனுக்கு வேறு யாருண்டு?.அவளையே பல்வேறு வடிவ நிலைகளுக்கு வரித்துக்கொள்ளவும்,அதை அவ்வாறே எழுதவும் வாய்த்த மனதை கவிஞர் கொண்டிருந்ததும், நான் அறிந்தவரை அதுவொரு ஆட்கொள்ளப்பட்ட மனநிலை. இங்கிருந்து இத்தகைய கவிதைகள் தெளிந்த நீரோடையைப்போல சப்தமெழுப்பியபடிதான் இருக்கும். இது உருவாக்கும் ஓசை ஒரே கதியில்தான் இருக்கும், பல நேரங்களில் சலிப்பாகவும். ஆனால், இத்தகைய இடங்களில் நாம் கண்டிராத பல நூற்றுக்கணக்கான உயிரினங்கள் தன்போக்கில் வாழ்வைக் கொண்டிருக்கும். அதுபோன்ற நிலை ஆசைக்குக் கிட்டியிருக்கிறது. நம்மில் சிலருக்குக் கிட்டியும் அதை உணராமல் இருக்கிறோம் அவ்வளவுதான்.

இன்று மாசி மாதம் இரண்டாம் நாள், மாசி அண்டங்காளி பிறந்த மாதம். இதிலொரு நாளில் தங்களது நேர்த்திக் கடனுக்காகச் சுடுகாட்டிலிருந்து காளி வேடமிட்ட பெண்கள் கபாலத்தையேந்தி அகால இரவில்  ஊர்வலம்  வருகிறார்கள். அதில் நமது அன்னை, காதலி, சகோதரி என அனைவரும் கலந்து ஒன்றுபோல வீதியைக் கடக்கிறார்கள்.

  .

இக்கவிதைகளை எழுதியதன்  வாயிலாக  கவிஞர் ஆசை எந்த இடத்தில் நின்றிருப்பார் அல்லது எதை அடைந்திருப்பார் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். மிகுந்த ஆயாசம் கொள்ளும் ஒரு கரிய நிழலில் அவர் நிற்பது போலத் தோன்றுகிறது. அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும்; ஏனெனில் ஒரு கவிஞனாக எனக்கு துக்கமாக இருக்கிறது.

                                         

அண்டங்காளி

(கவிதைகள்)

ஆசை

விலை: ரூ.100

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEb

Friday, February 19, 2021

குவாண்டம் செல்ஃபி: ஓர் அறிமுகம்குட்டி ரேவதி

கவிஞர் ஆசையின் “குவாண்டம் செல்ஃபி” நூல் வெளியீடு!

இந்நூலை முகநூலில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

“குவாண்டம் செல்ஃபி”, பெரும்பாலும் மனித யாக்கை பற்றிய கவிதைகள். 

பாலியல் லயிப்பை  இயல்பான சொற்கள் கொண்டு  உடல் மீதே எழும் கவனக்குவிப்பு. 

நிகழ்கணத்தின் முன் - பின் என்ற இரு எல்லைகளுக்கு வெளியே இழுத்துச்செல்லும் சொற்களின் நீட்சி. 

மேலோட்டமான வாசிப்பில் கைப்பற்றிவிட முடியா அர்த்த வெளிப்பாடு. 

இன்னொரு வாசிப்பிற்கு ஈர்த்துச் செல்லும் வாக்கியத்தொடர்ச்சி.

பெண் உடல் அருமையை மிக அருகில் கண்டறிந்துவிட்ட ஆண் உடலின் கூவிளி. 

பிண்டத்துடன் பேரண்டப்பரிமாணத்தை இணைக்கும்  மொழி முயற்சி.

பெண்ணின் பாலியல் வலிமைகளிடம் மன்றாடும் நெறி.

அவளுடன் தன்னைப் பிணைத்து  அவள் உடலின் மாண்புகளைக் கண்டறியும் தீவிரம்.

பெண் உடலையும் ஆண் உடலையும் ஒன்றாக்கிவிடும் தொடர் முயற்சி. 

முந்தைய கவிதையை விட அடுத்த கவிதையில் அதிகமாய்.  

உடலின் அற்புத பால்தன்மைகளைக் கண்டறிய கவிதையையே 

ஓர் அகழ்வாய்வுக்கருவியாக பயன்படுத்தும் கூர்திறன்.

தன்னைனயே தன்னொளிர்வுமிக்க பிம்பமாக மாற்றும் மொழிச் செயல்பாடு.

உளச்சிக்கலற்ற பால் புத்தெழுச்சி, இதை மொழிப்படுத்துவதில் முரண்பாடில்லாமை. 

இதை இத்தொகுப்பின் எல்லாவற்றிலும் முன்னதாக வைக்கலாம். 

ஆண் உடற்சிறையிலிருந்து வெளியேறி, அதே சமயம்  தன்தளையிலிருந்து விடுதலையடைந்த 

பெருங்கூவல், பெரும் பறப்பு.

உடல் இயங்கியலைப் பாலியல் நுகர்வு, கிளர்ச்சி, பரிவு, 

ஒன்றுதலுடன் ஏற்கும் ஆணின் அழகியல் பயணம்.

பெண்ணியம் என்ற முனைமழுங்கிய கத்தியை எறிந்துவிட்டு, 

பெண் - ஆண் உடல்களைக்  கனிந்த சொற்களால் ஊசி கொண்டு தைக்கும்

மீமெய்ப் பெண்ணியம்

இருமுனைப் பாலியல் அடையாளங்களைக் கலைத்து ஒருமை செய்யும் 

மொழி + அறிவு + கவிதை கூட்டுத்தொழிற்பாடே, 

கவிஞர் ஆசையின் “குவாண்டம் செல்ஃபி”

தன் உடலில் சிறைபட்டிருப்பதும் அதிலிருந்து விடுதலையுறுதலுமே 

வாழ்க்கையின் முதன்மையான மெய்ப்பாடு 

என்பதை ஒவ்வொரு கணமும் அறிவுறுத்தும் அகவுணர்ச்சி.

நூலில் திருத்தம் என்று நான் கூற விரும்புவது, தலைப்புகளற்ற கவிதைகளாக 

அவற்றைத் தொகுத்திருப்பதே.

குறிப்பிட்டுக்காட்ட ஏதுவாக இல்லாமல் போவதுடன்  ஒரு கவிதை தலைப்பின்றி 

தர்க்கப்பூர்வமாக நிறைவுறுவதில்லையே.

வாழ்த்துகள், ஆசை. தொடர்ந்து இதே தீவிரத்துடன் கவிதை வெளியில் செயல்பட்டு

நீங்கள் முன்வைக்கும் புதிய வகைமையான 

சமூக உடலின் பரிமாணங்களால் எல்லோரையும் எழுச்சியுறச்செய்க.

நூல் விவரங்கள்:

குவாண்டம் செல்ஃபி

(கவிதைகள்)

ஆசை

விலை: ரூ.160

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3qlMQyu

Thursday, February 18, 2021

சாக்த அழகியல் - ஆசையின் ‘அண்டங்காளி’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து...

 


கலாப்ரியா

கவிஞர் ஆசையின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் இன்று முக நூல் மூலமாக முகம் காட்டுகின்றன.  ’அண்டங்காளி’ அதில் ஒன்று. முதலில் அவற்றிற்காக என் வாழ்த்துகள். 

இயற்கை மனித குலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. எப்போதும் இருக்கும். இயற்கையின், அல்லது இயற்கை நிகழ்வுகளின் பேருண்மையினைக் கண்டு பிடிப்பதே, காரண காரியத்தை ஆராய்வதே  மனித குலத்தின் தொடர்ந்த தேடலாக இருக்கிறது. அந்த வகையான, காரண- காரியத் தேடல் என்பது ஆன்மீகவாதிகள் ஆராய்ச்சியாளர்கள், தத்துவவாதிகளின் தேடல்.இதில் பின் இரண்டு வகையினரின் தேடல் என்பது பருண்மையானது.ஆன்மீக வாதிகளின் தேடல் முற்றிலும் தர்க்கங்களின் அடிப்படியில் அனுமானிக்கப்பட்டது. ஆனால் அது எதுவும் முடிவுற்ற பாடுமில்லை முடிவுறுகிற விஷயமும் இல்லை. அது முடிவுறாதது என்கிற புரிதலுமே ஒருவகைத் தேடலுடன் சேர்ந்ததுதான்,  அதனைப் புரிந்து கொள்கிறவர்கள் கவிஞர்களே. அவர்களே இயற்கையின் இந்தக் கூத்தை ஒரு சக்தியின் கூத்தாக உருவகித்து அதன் எல்லையின்மையையும் முடிவின்மையையும் உணர்ந்து கொள்கிறார்கள். 

”அன்புறு சோதியென்பார்- சிலர் ஆரிருட் காளியென்றுனைப் புகழ்வார்” என்றும்,அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்ததாயின் கைப்பந்தென ஓடுமடா –” என்றும் தன் முன்னோடிகளின் நீட்சியாகத் தானும் பாடவும் ஆரம்பிக்கின்றான். இது கவிஞர்கள் ஓடி ஓடி அலுக்காத பாதை. சபரிநாதன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல இது காளிதாசன், பாரதி எனப் பலர் வியந்துருகிக் கலந்து, புணர்ந்து கும்பிட்டுக் கூடிக் களித்த ஒரு வடிவம்.  கவிஞர்ஆசை அதன் இப்போதைய நீட்சி. அவரே முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல இது எவ்வளவு தூரம் இப்போதையக் கவிதைகளுடன் பொருந்திப் போகும் என்று பார்க்க வேண்டும்

 “முலை தேடி: முலைதேடி “ என்று நான் எழுதிய போது பெரிய கசப்புணர்வுடனேயே 70களில், சிலரே ஏற்றுக் கொண்டார்கள். சக்தி உபாசனை போன்றதொரு கவிதைகளை நான் தாகூரை விலகித் தழுவி எழுதிய போது நான் உண்மையில் உபாசகன் இல்லை. ஒரு வகையில் நாத்திகன் என்று கூடச் சொல்லலாம். அப்புறமாக பிற்காலத்திலேயே பாரதியினை மறுபடி மறுபடி வாசிக்கையில், அவனால் சற்றே மாறி, அந்த வினைச்சியைக் காதலிக்கத் தொடங்கினேன்  என்று சொல்லலாம். அப்போதெல்லாம் பாரதி தன் ’மூன்று காதல்’களை முன் மொழிந்து என்னுள் பாடிக் கொண்டே இருந்தான். அவனே ” கன்னி வடிவமென்றே…”   முதலில் காளியினை கன்னியென்றே நெருங்குகிறான் பின்னரே அவள் அன்னை வடிவமடா என்று வணங்குகிறான். இதன் தாக்கம் அல்லது என் சுய அனுபவம் காரணமாகவோ “புணர்ச்சி முற்றி தாய்மை தரிசிக்கணும்” என்று நான் எழுதினேன். நானும் ஒரு வகை முரணுடனேயே என் கவிதைகளில் ”புணர்ச்சியிலிருந்து தாய்மைக்கு” என்னும் சார்பினை உருவகித்துக் கொண்டேன். ஒரு வகையில் அவருக்கு நான் முன்னோடி. அதனாலேயே நண்பர் ஆசை இதைப் பற்றிப் பேச என்னை அழைத்திருக்கிறாரோ என்னவோ. ஆனால் ஆசைக்கு எனக்கு இருந்த சுதந்திரம் கூட இப்போது இருக்கிறதா தெரியவில்லை. சபரிநாதனும் இது போல் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறார். ஆனால் ஆசை,  துணிச்சலாகத, ”தன் முழு உடலிலும் ஒரு விறைத்த குறிபோல காமம் அதன் தூய நிலையில் பரவியிருந்ததாக’ முன்னுரையில் எழுதுகிறார். அந்தத் தூய்மை பல கவிதைகளில் பளிச்சிட:

ஆடும் அன்னையே

நீ கால்தூக்கக் குறிகண்டு

கண்மூடாப்

பிள்ளை நான்

எனை ஊதி

வெளித்தள்ளிய

உலைத்துருத்தி

வாய்கண்டு

வாய்பிளந்து

நிற்கிறேன்

என்று எழுத முடிகிறது.

தன்னைப் பேய்க்கவியாகவும்  அம்மையை பேய்க்காளியாகவும் உருவகித்து எழுகிறார்.

விந்துத் தெறிப்பிலுன்

வினை வடிவம் காட்டுகிறாய்

ஆதார இருளுணர்த்தும்

குளிரள்ளித் தெளிக்கிறாய்

விந்தை உருவாக்கி

விந்தை உள்வாங்கி

அன்னை நீ புரியும்

அருள்கோலத்தில்

வந்து விழுந்த துளியென்னை

வாங்கிக்கொள் மறுபடியும்

இது பிராய்டியக் கருத்தியலான இடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்று  அலகு பிரிக்க முயல்பவர்களிடம் நான் அப்படி அல்ல என்று சொல்லுவேன். இதில் மறுபடி தாயின் வயிறே சரணம் என்னும் அத்வைதச் சாயல் கூட இருக்கிறது. ஆனால் ஆசை அத்வைதியில்லை, ஆகவும் முடியாது. மேலும், “மறுபடி தாயின் கருப்பை நோக்கி” என்பது பல வேறு தீர்க்கதரிசிகளின் தேடுதலாயும் இருக்கிறது. ஆசை காளியின் அழகோடு அந்தத் தாண்டவத்தையே அதிகம் நேசிக்கிறார்

கண்ணைத் திறந்துகொண்டு

காணும் காளியல்ல நீ

கண்ணை மூடினால்

விழிக்கோளத்துக்கும்

இமையடைப்புக்கும்

இடையே 

இருள்தாண்டவம் ஆடுபவள் நீ

இருட்காளி

உன் இருட்கோலம் 

தடவிய விழிக்கோளம்

இமைதிறக்கக் காணும்

காட்சியெல்லாம் பூணும்

பொருட்கோலம் நீ

பேயிருட்காளி

கண்மூடி நான் காணும்

இருளெல்லாம்

கண் திறந்தே காணவேண்டும்

வழிசெய்

**

’விழிக்கோளத்துக்கும்/இமையடைப்புக்கும்/இடையே இருள்தாண்டவம்  ஆடுபவள் நீ’

என்கிற வரிகள் சாக்த அழகியலின் உச்சம். இப்படிப் பல நல்ல கவிதைகள் நிரம்பிய தொகுப்பு இது. சில நீளமான “ எனக்கும் வாய்த்திருக்கிறாளே பொண்டாட்டி..” போன்ற கவிதைகளைத் தவிர்த்திருக்கலாம். அதே போல பல கவிதைகளில், சபரிநாதன் சொல்வது போல ஓசையின் உத்வேகத்தை நம்பி எழுதப்படும் கவிதைகளுக்கு நேரும் அசம்பாவிதங்கள் பலவும் இங்கு நிகழ்ந்துள்ளன.” அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு,

துர்கணமோ நற்கணமோ 

துயர்கணமோ உயர்கணமோ

அற்புதமோ -உன்- அலங்கோலமோ

அத்தனையும் கவிதைக்குள் வரும்போது

அன்னையின் அருஞ்செயலாய் மாறிவிடும்

அழகென்ன அருளென்ன

அவளின்றி ஒரு கணமும் கழியாத 

நிலையென்ன நினைவென்ன

போன்ற முழுமையும் இறுக்கமுமான ஏனைய பல கவிதைகளைக் கவனிக்கையில்

ஊழியின் கலையாகத் தாண்டவத்தையும் பேய்க்கூத்தின் உருவகமாக காளியையையும் அவள் தாய்மையின் பேறாக பேய்க்கவிஞனாகத் தன்னையும் ஆக்கிக் கொண்டிருக்கிற நல்ல அனுபவத்தை வழங்குகின்றன இந்த அண்டங்காளி தொகுப்பு. 

வாழ்த்துகள் ஆசை.


அண்டங்காளி

ஆசை

விலை: ரூ.100

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEb

Wednesday, February 17, 2021

ஆசையின் ‘குவாண்டம் செல்ஃபி’ - கவிஞர் சுகுமாரனின் அறிமுகம்சுகுமாரன் 

‘காதல் அல்லது காமத்தின் தீவிர நிலையே இந்தக் கவிதைகளில் பிரதானம்’ என்று தொகுப்பின் முன்னுரையில் ஆசை குறிப்பிடுகிறார். தமிழில் இன்றுவரை எழுதப்பட்ட கவிதைகளில் கணிசமானவை காதலையும் காமத்தையும் சொல்பவைதாம். அகத்திணை என்ற பிரிவைக் கொண்டிருப்பதும் இந்த மொழிதான். இந்த நோக்கில் ஆசையின் காதல் அல்லது காமநிலைக் கவிதைகள் ஒரு நெடிய மரபின் இன்றைய கண்ணிகள். 

அகத்துறைக் கவிதைகள் வெறும் காதலைப் பேசுவதில்லை. மாறாகக் காமத்தையே அதிகம் பேசுகின்றன. களவொழுக்கத்தை முதலிலும் கற்பொழுக்கத்தை இரண்டாவதாகவுமே கருதுகின்றன. உடலின்பத்தைத் தயக்கமின்றி வெளிப்படுத்துகின்றன. காலப் போக்கில் உருவாக்கப்பட்ட ஒழுக்க மதிப்பீடுகள் காமம் என்பதைக் கூடாச் சொல்லாகவும் உடல் திளைப்பைப் பேசக் கூடா ரகசியமாகவும் மாற்றின. பாரதியின் கண்ணன் பாடல்களில் ‘சாரீரகமான காதலையே கவிஞர் அதிகம் வர்ணித்திருக்கிறார்’ என்ற வ.வே.சு ஐயரின் விமர்சனம் இந்த விலக்கின் உதாரணம். இன்றைய கவிதைச் சூழலிலும் இந்த மனப்போக்கைப் பார்க்க முடிந்திருக்கிறது. தமிழில் பெண்கள் எழுதிய கவிதைகளை வெறும் உடல் துய்ப்பின் வெளிப்பாடாகவும் ஒழுக்கக் கேட்டின் பிரதிபலிப்பாகவும் கருதி பண்பாட்டுக் காவலர்கள் கொந்தளித்தது  நினைவுக்கு வருகிறது. எனினும் கவிதை  விலக்கையும் விழுமியத்தையும் கடந்தே செயல்படுகிறது. 

புதிய கவிதையில் இவை இயல்பாகவே மீறப்படுகின்றன. காமத்தைப் பேசுபொருளாகக் கொண்ட கவிதைகளைக் கலாப்ரியா உள்ளிட்ட சில கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவை உதிரியான கவிதைகள். ஒரு தொகுப்பு அளவுக்கான காமக் கவிதைகளை ‘எழுத்து’ காலக் கவிஞர் மா. தக்ஷிணாமூர்த்தியின் ‘திவ்ய தர்சனம்’ தொகுப்பு கொண்டிருந்தது. அதன் பின்னரும் சில தொகுப்புகள் வெளியாயின. காமத்தின் தீவிர நிலையைப் பேசும் தொகுப்பாக ஆசையின் ‘குவாண்டம் செல்ஃபியைச் சொல்லலாம். திவ்ய தர்சனத்திலுள்ள கவிதைகள் காமத்தின் உச்சமாக ஆன்மீக நிலையைக் கண்டடைகின்றன. ஆசையின் கவிதைகள் பிரபஞ்சத்தின் இயல்பான அசைவுகளில் ஒன்றாக, தவிர்க்க இயலாத இயக்கமாகக் காமத்தைப் போற்றுகிறது. குவாண்டம் என்ற அறிவியற் கலைச்சொல் குறிப்பிடும் பேரளவான ஆற்றலைக் காமத்துக்கு வழங்குகிறது.

காதலுக்கும் காமத்துக்குமான வித்தியாச இழை எங்கே மறைகிறது என்பது இந்த லீலையின் விளங்காப் புதிர். அந்தப் புதிரை விளங்கிக்கொள்ள முனையும் வேட்கையாகவே ஆசையின் கவிதைகள் திகழ்கின்றன. காதலின் நீட்சிதான் காமமா அல்லது காமத்தின் கௌரவச் சுருக்கம்தான் காதலா என்ற  கேள்விக்கு விடையைத் தேடுகின்றன. காதல் நெருக்கமும் சரீர முயக்கமும் தேடலுக்கு முகாந்திரங்களாகின்றன.

அதுவரை

உரக்கச் சொல்கிறேனடி

உன்னை நான் பிரபஞ்சக்காதல் செய்கிறேன் என்று  

இன்னும் சொல்லப்போனால்

பிரபஞ்சம் கொள்ளாத காதல் செய்கிறேன் என்று – என சாத்வீகமாகச் சொல்லப்படும் கவிதையும் 

உன் யோனிக்குள்ளிருந்தே

பார்க்க விரும்புகிறேன் 

ஒட்டு மொத்தப் பேரண்டத்தையும் – எனத் தீரா வேட்கையுடன் சொல்லப்படும் கவிதையும் ஒப்புநோக்கில் ஒரே தீவிரத்தின் வெவ்வேறு வடிவங்களாகின்றன. 

இந்தத் தீவிர உணர்வை ஆசை பல தளங்களில் விரிக்கிறார். அறிவியல் உண்மைகள், சிறார் கதைகள், காட்சியனுபவங்கள், இலக்கியப் பின்புலங்கள் ஆகியவற்றின் துணையால் பெருக்கிக் காட்டுகிறார். இந்த ரசவாதத்தால் கவிதைகள் மேலும் ஆழமான பொருளைக் கொள்கின்றன. சில கவிதைகள் தரைதட்டி வெறும் காமக் கூற்றுகளாக நின்று விடவும் செய்கின்றன.

ஆசையின் குவாண்டம் செல்ஃபி தொகுப்பிலுள்ள பெரும்பான்மைக் கவிதைகளும் ஒரே குரலின் பலவிதத் தொனிகளில் வெளிப்படுவது குறிப்பிடத் தக்கது. பெண்ணை வியக்கும் காதலனின் குரலாகவோ பெண்ணுடலில் தன்னைத் தேடும் காமுகனின் குரலாகவோதான் அது வெளிப்படுகிறது. காதலுக்கு ஆட்படும் பெண்ணி்ன் உணர்வோ காமத்தில் ஆழ்ந்த பெண்ணின் உணர்ச்சியோ ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ஓர் ஆணின் வெளிப்பாடு அப்படித்தானே இருக்கும் என்ற பதில் அவ்வளவு பொருத்தமானதாக இல்லை என்று தோன்றுகிறது. காதலிலும் காமத்திலும் பெண்ணும் சம பங்காளி அல்லவா? அந்தப் பங்களிப்பு இந்தக் கவிதைகளில் இடம்பெறாததைக் குறையாகச் சொல்லலாம். காதலுக்கும் காமத்துக்குமுள்ளான பெண் மனநிலையை ஒரு கவிஞன் அனுமானிக்க முடியும் இல்லையா? 

தீவிரநிலையை வித்தியாசமாகவும் செறிவுடனும் பெரும் எண்ணிக்கையிலும் ஆசை கவிதைகளாக்கி இருக்கிறார். கூர்வாளின்மேல் பயிலும் நடை இந்தச் செயல். அந்தத் துணிச்சலுக்குப் பாராட்டுகள். கவிதைகள் பெறவிருக்கும் புகழ்மொழிகளுக்கும் கண்டனங்களுக்கும் வாழ்த்துக்கள். 


குவாண்டம் செல்ஃபி

(கவிதைகள்)

ஆசை

விலை: ரூ.160

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3qlMQyu


Tuesday, February 16, 2021

காமத்தின் தாளமும் அகண்டகாரப் பின்புலமும்...சபரிநாதன் 

மனிதன் ஒழுங்கமைவைத் தேடுகிற உயிரினம். வடிவமைப்பைக் கணிக்கும் உள்ளுணர்வு அவனுக்கு இயல்பிலேயே வாய்த்துள்ளது. மழைக்காலம் முடிந்து குளிர்காலம். பிறகு கோடையும் கழிந்தால் மீண்டும் திரும்புகிற மழைக்காலம் என பருவங்கள் ஒரு நிரந்தரச் சுழற்சியை அறிவிக்கும் அதே நேரம் ஓர் உத்தரவாதத்தையும் அவனுக்கு வழங்குகின்றன. வசந்தம் மீள மரங்கள் பூச்சூடி நிற்கையில் நமக்குள் எழுகிற நம்பிக்கை, பரிணாமத்தின் ஒரு கட்டத்தில் அழகியல் உணர்ச்சியாக உருமாறி இருக்கக்கூடும். பஞ்ச காலத்திலும் கொள்ளை நோய் நேரத்திலும் நம்மில் தோன்றும் ‘மழை வரும்' என்ற நிச்சயமும் ‘இயல்புநிலை திரும்பும்' என்ற எதிர்பார்ப்பும் மிக ஆழமான இடத்தில் வேர்பிடித்துள்ளவை. அது உயிரியல்பாகவே நமக்குள் ஊறிப்போயுள்ளது. காரணம், வாழ்வின் நடனமான இச்சுழற்சியானது பல்லாயிரம் ஆண்டுகளாக மனித ஞாபகத்தில் ஓடிப் பதிந்துள்ளதுதான். இன்னும் நீட்டித்துச்சொல்வதென்றால், தொன்மங்களும் புராணங்களும் யுகங்களையும் பிறவிகளையுமேகூடக் காலச்சக்கரத்தில் மீளமீள வந்துசெல்பவை என ஆறுதல் அளிக்கின்றன. தவிர, கடும்

குழப்பத்தை அறிவதற்கும் நமக்கு வடிவுருக்கள் தேவையாகின்றன. இந்த ஒழுங்கமைவின் தேட்டத்திலிருந்து பிறந்தவற்றுள் ஒன்றே தாளம் என்று நினைக்கிறேன். சொல்லப்போனால், எல்லா அறிதலுமே ஒரு வகையில் லயத்தை அறிவதுதான். தாளம் ஒரு காலக்கணக்கு எனில், நாம் உணரும் காலம் கூட தாளக்கணக்கு எனலாம்.

இசை, நடனம், கவிதை என எல்லாக் கலைகளும் தாளத்தின் இந்த உத்தரவாதத்தை, உத்வேகத்தை, சீர்மையின் அர்த்தத்தை, ஒழுங்கின் நிறைவை ரசிகர்களுக்கு அளிக்கின்றன. மிகச் சிறந்த லயம் வாசகனை, கண நேரமெனினும், உயர் பிரக்ஞைக்கு

அழைத்துச்செல்ல வாய்ப்புடையது என்கிறார் அரவிந்தர். இந்திய விமர்சன மரபில் சப்த அலங்காரம், அர்த்த அலங்காரம் என்ற இரண்டு வகைகள் சொல்லப்படுகின்றன. மத்தியகால அரசவைக் கவிதைகள் அளவுக்கதிகமாக சப்த அலங்காரங்களை அணிந்து நடக்க முடியாதபடி மூச்சுத்திணறத் தொடங்கியதைக் கண்ட நவீனத்துவம் அணிகலன்களைத் துறந்த நிர்வாணக் கவித்துவத்தை நோக்கி நகர்ந்தது. அப்படி திட்டமான யாப்பு வடிவங்களைத் துறந்து முன்னேறியபோது, கவிதை இழப்பது என்ன என்பது குறித்த பிரக்ஞை பல நவீன கவிஞர்களுக்கு இருந்துள்ளதைப் பார்க்கிறோம். அதைப் பேச்சுமொழியின் ஓசையொழுங்கைக் கொண்டும் லிரிக் கவிதைகள் வழியாகவும் அவர்கள் கடந்துள்ளனர். ஆங்கிலத்தில் ராபர்ட் ஃப்ராஸ்ட் மாதிரி, தமிழில் பிரமிள், ஞானக்கூத்தன் போன்று, ஓசை வடிவங்களைச் சற்று நெகிழ்த்திப் பயன்படுத்துவதைத் தொடர்ந்தோரும் இருந்தனர். இதைத் தாண்டி தற்சமயம் புத்துருவியல்வாதக் கவிதைகளும் (Neoformalist poems) மேலை மொழிகளில் பரீட்சார்த்தமாக எழுதப்படுகின்றன. இப்படியாக இசைமையின் போதாமை உணரப்படும் இப்போதைய தமிழ்ச் சூழலில் ஆசையின் இத்தொகுப்பு சமகாலக் கவிதைகளின் செல்நெறியிலிருந்து பெரிதும் விலகி நிற்கிறது என்பதால் தனது தனித்துவத்தைக் கண்கூடாக முன்வைக்கிறது. 

இருமுனை முடிவின்மையின்

நடுவெளி நர்த்தனம் நீ

தொடுஊழி தரையிறக்கும்

தத்தளிப்பு நீ

கடல்புரியும்

தாண்டவத்தின் தெறிப்பும் நீ

எரிஜோதி இடைபறக்கும்

கொடும்பறவை நீ

அனலுமிழும் கனல் மயக்கும்

பேய்ச்சிரிப்பு நீ

நாத்திகனின் கனவில் வரும்

நடனக்காளி நீ

என்ற வரிகளை எதிர்கொள்கையில் ஒரு புழுத்துளை வழியாக நாம் முற்றிலும் வேறொரு காலத்துக்குள் விழுந்துவிட்டதைப் போல உணர்கிறோம். இந்த உச்சாடன கதி அகவெளியின் சூட்டில் உருக்கொண்டு, இறுதியில் மொழியுருகி வழியும், அர்த்தங்களை அலட்சியப்படுத்திய ஒரு பித்தரங்கத்துக்குள் நுழைந்துவிடுகிறது. இந்த வரிகளுக்கு என்ன பொருள் என்று வாசகர் கோருகையில் அவர் மொழிக்குள்ளேயே தொலைய நேரிடும். ஏனெனில், அங்கே கவிஞனேகூட ஓசையால் இழுத்துச் செல்லப்படும் குருடனாகிவிடுகிறான், யாருமின்றி லயத்தின் மேல் பயணிக்கும் படகுபோல. இப்போது அவன் பார்வை நடைபாதையில் இல்லை; அது உள்ளேயோ வெளியேயோ வேறெங்கோ கற்பனாதீதத்தில் நிலைகுத்தி நிற்கிறது. இதற்கு அழுத்தம் சேர்க்கும் பொருட்டு இக்கவிதைகளின் திரைச்சீலையாக அன்றாடக் காட்சிகள் அன்றி அண்டம், கருந்துளை, காலவெளிக் கம்பளம், பாழ்வெளி எனப் பிரபஞ்சத்தின் இருண்ட பெரும்புறம் விரிக்கப்பட்டுள்ளது. காளியானவள் காலசொரூபிதானே.

கண்ணைத் திறந்துகொண்டு

காணும் காளியல்ல நீ

கண்ணை மூடினால்

விழிக்கோளத்துக்கும்

இமையடைப்புக்கும்

இடையே 

இருள்தாண்டவம் ஆடுபவள் நீ

இருட்காளி

...

கண்மூடி நான் காணும்

இருளெல்லாம்

கண் திறந்தே காண வேண்டும்

வழிசெய்

அந்தகத்தை வேண்டிப் பெறும் கவிஞனைக் காண்கிற அதேநேரம் இதில் ஓர் உபாசகனையும் காண்கிறோம். இந்த உபாசகன் அன்னையை யாசிப்பவன் மட்டுமல்ல; அவளைச் சீண்டுபவனும் சபிப்பவனாகவும் இருக்கிறான். ஒரு மகனின் முழுவுரிமையையும் எடுத்துக்கொள்கிற உபாசகன். இத்தகைய தோத்திரத் தன்மையும் வரம்பற்ற இறைஞ்சல் தொனியும் கலந்து காலப் பொருத்தப்பாட்டுக்கு ஒவ்வாத விசித்திரப் படைப்புகளாக இவற்றை ஆக்குவதைக் கவிஞரே ஊகித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர் எதிர்பார்ப்பும் அதுதான்போல.

இவை கட்டின்மையும் ஒருவிதப் பீடிப்பும் கொண்ட கவிதைகள். இத்தகைய பித்துநிலை சொல்வழிப்படுகையில் மனவக்கிரங்களாகவும் வெளிப்படத் தயங்குவதில்லை. சில இடங்களில் இவை பிரக்ஞை வரம்பிடாத தன்னரற்றலாகவும், விளைவு கருதாத பைத்திய உளறலாகவும் படுகிறது. பல சமயம் உளவியல் கூறாய்வு செய்வதற்கான ஆர்வத்தை அடக்கிக்கொண்டேன் என்றே கூற வேண்டும். உதாரணத்துக்கு இந்நூலில் வருகிற, மேடையில் ஆடும் காளியைக் கீழமர்ந்திருந்து காணும் தனயன் என்ற பிம்பம் பல்வேறு அடக்கப்பட்ட பிராயத்து நினைவுகளைக் கொண்டுவருகிறது.

ஆடும் அன்னையே

நீ கால்தூக்கக்

குறிகண்டு

கண்மூடாப்

பிள்ளை நான்

...

எனைப் பாதியிலே

கொண்டுவந்து

பாழ்வெளியில்

தள்ளிவிட்டாய்

முட்டித்திறப்பேனோ நான்

நீ மூடிவிட்ட பெருங்கதவை

இந்நூலில் அரங்கேறும் பிரதான நாடகம் காளிக்கும் கவிஞனுக்கும் இடையிலானது. இந்த நாடகம் காளிதாஸன் தொட்டு பாரதி உட்பட பல கவிஞர்களின் வாழ்வில் நிகழ்ந்த ஒன்று. ஆசையும் தன் கவிதைக்குள் அதை நிகழ்த்திப் பார்க்கிறார். அரைச் சந்தத்தில் தோத்திர பாணியில் எழுதப்பட்ட கணிசமான கவிதைகளில் பாரதி பாடல்களின் எதிரொலிப்பு கேட்கிறது (அன்னை அன்னை, பேயவள்காண் எங்கள் அன்னை), ஆங்காங்கே கண்ணதாசனின் தாக்கமும் தென்படுகிறது (பார் சிவனே).

பக்தி இலக்கியங்கள் சிவன், விஷ்ணு என்ற ஆண் பெருந்தெய்வங்களை ஒட்டி எழுதப்பட்டவை. சாக்த மரபிலும் இத்தகைய பாடல்கள் இருப்பினும், தாந்திரீக மார்க்கத்தில் மைய இடம்பெற்றிருந்த காளி எனும் பெண் தெய்வம் மீதான பாடல்கள் வங்காளத்தில் 18ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ‘சாக்த பாதவளி' என்ற இவ்வகைமையில் தாந்திரீகக் கூறுகள் கூர் நீக்கப்பட்டு மெல்லியல் படைத்துப் பொதுவெளிக்குள் நுழைந்தன என்கின்றனர். இதில் காளி பல்வேறு மனிதாய உணர்வுகளுக்கும் உறவு நிலைகளுக்கும் ஆளாகிறாள். பெரும்பாலும் அன்னையாக, சிலபோது காதலியாக, போற்றப்பட்டு, வணங்கப்பட்டு, சீண்டப்பட்டு, சில நேரம் மிரட்டவும் படுகிறாள். இத்தகைய தன்மையை ஒத்த கவிதைகளை இத்தொகுதியில் பார்க்கலாம்.

தெண்டத்துக்குத்

தீ வளர்த்தாய்

தெருத்தெருவாய்

தேரிழுத்தாய்

உண்டசோறு

செரிப்பதற்கு எமை

உருட்டிவிளை யாடுகின்றாய்

கண்டகருமாந்திரத்தையும்

காலமென்று கூட்டிவர

மண்டைபெருத் தாடுதடி

மதிமயங்கச் செய்யுதடி-உன்

அண்டப்புளுகு நாங்கள்

அவசரத்துக்குப்

பெத்துப்போட்டாய்

இதில் மகிமைக்கும் போற்றுதலுக்கும் ஒவ்வாத அப்பட்டமான அவமதிப்பு தொனி அல்லது மரியாதையின்மை உள்ளதைக் காணலாம். இது ஏறத்தாழ இத்தொகுப்பு முழுக்க ஒலிக்கிறது. அதே நேரம் சைவ மரபில் முக்கியப் படிமமான கூத்து, முன்னொரு காலம் ஐயனின் நடனத்தைக் காண விரும்பிய மூதாட்டியின் பெருவிருப்பம், ஒற்றை முலை, காளியவள் களிநடனம் என தமிழ் இலக்கியப் பரப்பில் கண்பட்ட சில படிமங்களைத் தவிர, தனிப்பட்ட தாந்திரீகத்தின் குறியீடுகளோ படிமங்களோ தாக்கமோ இவற்றில் காணப்படுவதில்லை. பதிலாக, தடைக்கட்டுகள் நிலவும் சமூக சரிநிலைகளையெல்லாம் மீறி இங்கே அன்னை தேவியாகிறாள்; தேவி அன்னையாகிறாள். முலை, முலைப்பால், யோனிவாசல் என அன்னையோடு தொடர்புடைய யாவும் தேவியோடும் தொடர்புடையவை என்பதால் இம்மயக்கநிலைப் பிராந்தியத்தை இக்கவிதைகள் பயன்படுத்துகின்றன. பக்தியைக் காமத்தின் மொழியிலும் காமத்தை பக்தி வழியாகவும் சொல்லிப் பார்த்த பாரம்பரியம் உண்டுதானே நமக்கு. அர்த்தமாக்கல் மட்டுமல்ல, புனிதமாக்கலும் கலையை வாகனமாகக் கொண்டதுதான்போல. 

இக்கவிதைகளின் எரிபொருளாக உள்ளது காமம். வழக்கமாகக் காமம் சார்ந்து எழுதப்படும், இன்பப் பரவசத்தையும் காதலின் கிறக்கத்தையும் வெளிப்படுத்தும் மென்மையான கவிதைகள் போலன்றி இவற்றில் மூர்க்கமும் கரைதல் விருப்பமும் நிரம்பியுள்ளன. நீர்ச்சுழலில் விழ விரும்பி நீந்தும் ஒருவரைப் போலத் தெரிகிறார் கவிதைசொல்லி. உடலே குறியாக விறைப்பதாகவும் இப்பேரண்டத்தைக் காளியின் உயவுநீர் விளையாட்டாகவும் காணும் கவிஞர்,

குறிபிடித்துக் கூட்டிச்செல்லடி

என்னை

உன் குறியாளும்

பெருமேடைக்கு

என்று வேண்டுகிறார். இக்கவிதைகளில் ஒரு ‘நானும்' ஒரு  ‘நீ'யும் வசிக்கின்றன. அவை சிலநேரம் கவியாகவும் காளியாகவும், சிலநேரம் சேயாகவும் தாயாகவும், சிலபோது காதலன் காதலி யாகவும், கணவன் மனைவியாகவும் விளங்குகின்றன. ஆனால், எப்போதும் அது ஓர் ஆணும் பெண்ணுமாகவுமே அமைகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால், பெண்ணுக்கு இங்கு ஒரு நிலையான பாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அவள் பேரன்னையாகவும் வரமளிக்கும் பேய்க்காளியாகவும் உறைந்திருக்கிறாள். ஆணே கிடந்து அலைக்கழிபவனாகவும் தஞ்சம் கேட்பவனாகவும் உழல்கிறான். எனவே, இக்கவிதைகள் பெரும்பாலும் தனது ஆண்தன்மையை பங்கமின்றி அப்பட்டமாக எடுத்துரைப்பவையாகவும் உள்ளன எனச் சொல்லலாம். அதே நேரம் ஆசாரமான ஒரு வாசகருக்கு இத்தொகுப்பு மர்ம ஸ்தானங்களின் மணம் வீசும் வஸ்துவாகத் தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், இவ்வரிகளையும் இவற்றை எழுதிய மனக்கொந்தளிப்பையும் இவற்றுள் புதைந்துள்ள மனரகசியங்களையுமே நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். ஏனெனில், இங்கு உடல் மட்டும் இருக்கிறது. உணர்ச்சி  தாளமாகி அதுவே மனமாகிறது. மனம், வெறுமனே உடலின் மொழி பாய்ந்து கொப்பளிக்கும் செயலாகிறது.

அதேநேரம் இந்தப் பாலியல் சுட்டல்களும் காமத் தணலும் சுகிப்பின் பரவசத்தைப் பேசுவதைவிட நிலைகுலைவையும் உள்ளொடுங்குதலுக்கான விருப்பத்தையும் பேசுவதாகவே படுகிறது. வெப்பமிக்க ஆங்காரம் ஒலிப்பினும் இவை அடிப் படையில் இருத்தலியல் பதைப்பின் விசித்திர வெளிப்பாடுகள்தானோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. ஈரோஸ் இயங்குவதுபோல தானடோஸும் இயங்குகிறது. இனம்புரியாத விருப்புறுதியும், இல்லாதொழிவதற்கான ரகசிய ஆசையும் சேர்ந்தே வினைபுரிகின்றன. யோனி வழியே மீண்டும் திரும்பிச்செல்லும் ஆசையைப் பல இடங்களில் போலவே இக்கவிதையிலும் காணலாம்:

சூனியம் பிளந்தவளே

அதைச் சுத்தியலால் அடித்தவளே

சுண்டி இழுத்தவளே

எடுத்த இடத்தில்

வைத்துவிடடி

என்னை

தாந்திரீக மரபிலிருந்தே மனித உடலை அண்டத்தின் நுண்வடிவ மாதிரியாகக் காணும் போக்கு தொடங்குகிறது. முன்பு வைதீக, அவைதீக மரபுகளின் சந்நியாச வலியுறுத்தலுக்கும் தேக ஒறுப்புக்கும் மாறாக தாந்திரீகத்தில் உடலும் உறவும் மையமாக இடம்பெறுகின்றன. அத்வைத ஒருமைக்கும் சூன்யத்துக்கும் பதிலாய் இருமையும் துய்ப்பும் முன்வைக்கப்படுகின்றன. பற்றிலிருந்து விடுதலை எனும் பெரும் பாதையில், பற்றின் வழி விடுதலை என்பதாய் நிகழ்த்தப்பட்ட இவ்விடையீடு உலகியலின் சார்பாகச் சமநிலையைப் பேண ஒரு சாத்தியத்தை வழங்கிற்று எனலாம்.

சமகாலத்திய நவீன மனம் கொண்ட வாசகருக்கு இக் கவிதைகள் எந்த அளவுக்குப் பொருத்தப்பாடு கொண்டிருக்கும் என்பது பெரிய கேள்வி. கட்டற்ற தன்மையானது வடிவ மைதியை மட்டுமின்றி சில கவிதைகளில் வெளிப்பாட்டையுமே சிதைத்துள்ளதாகப் படுகிறது. மேலும், ஓசையின் உத்வேகத்தை நம்பி எழுதப்படும் கவிதைகளுக்கு நேரும் அசம்பாவிதங்கள் பலவும் இங்கு நிகழ்ந்துள்ளன. லயமும் கவித்துவ உத்வேகமும் கலந்து அபாரமாகத் தொனிக்கும் கவிதைகளின் அருகிலேயே சிலது வெடிக்காமலும் சிலது வெறும் வெடிச் சத்தமாகவும் முடிந் துள்ளன.

நிலையற்ற பீடிப்பும், சந்தக் கட்டும், துதித் தன்மையும், தாந்திரீக சாயலும், காமக் கடுப்பும், அகண்டகார பின்புலமும் கூடி நினைவுகூர இயலாத ஒன்றை ஞாபகப்படுத்தும் விநோத மான கலவையாகக் கூடிவந்திருக்கிறது இக்கவிதைத் தொகுதி. ஆசையின் முந்தைய தொகுதியைப் போலவே இதுவும் வாசிப்பனுபவத்தில் ஒரு தனித்துவமான நூலாக விரியும் என எண்ணுகிறேன்.

(‘அண்டங்காளி’ கவிதைத் தொகுப்புக்கு சபரிநாதன் எழுதிய மதிப்புரை)

அண்டங்காளி

ஆசை

விலை: ரூ.100

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEbFriday, January 8, 2021

சபரிநாதன்: நூறு புலன்கள் முளைத்த கவிஞர்வெயில் காலத்தில் எல்லாமே திறந்திருக்கிறது, அப்பட்டமாக இருக்கிறது என்ற உணர்வே நம்முள் ஏற்படும். ஆயினும் வெயில் எல்லா அப்பட்டங்களுக்கும் உள்ளே ரகசிய மூடலைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. தார்ச்சாலையில் சற்றுத் தொலைவில் தோன்றும் கானல்நீர் அப்படிப்பட்ட ரகசிய மூடல்தானே. ஒரு வெயிற்காலத்தில் சபரியின் கவிதைகளைப் படிக்கும்போது இவ்வளவு அப்பட்டமான கவிதைகள் எவ்வளவு ரகசிய மூடல்களைக் கொண்டிருக்கின்றன என்றே தோன்றுகிறது.

கதவில்லாத, மறைவிடம் இல்லாத எதுவும் இல்லை. அதையெல்லாம் சபரி திறக்க முயல்கிறார். ‘தாத்தா இந்த முறுக்கைத் திறந்து தா’ என்று தன்னிடம் ஒரு குழந்தை கேட்டதாக மறைந்த கலை-இலக்கிய விமர்சகர் தேனுகா ஒரு முறை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை முறுக்கு ஒரு உலகம்; அதைத் திறந்துதான் அடைய வேண்டும். கவிஞர்கள் அந்தக் குழந்தையைப் போல்தான் இருக்க வேண்டும். கீழ்க்காணும் வரிகளில் சபரி அந்தக் குழந்தையாகவே தெரிகிறார்.

‘அப்படி ஒரு கணம் இது

ஒவ்வொரு பொருளிலும் ஒரு கதவு திறக்கிறது

காண முடியாதது எதுவுமில்லை கேட்க முடியாதது எதுவுமில்லை

நூறுநூறு புலன்கள் முளைத்த புத்துயிரி நான்.’

ஒரு மொழியின் அசாதாரணக் கவிஞர் நூறு நூறு புலன்கள் முளைத்த புத்துயிரியாக இருக்கும்போது அவரால் எல்லாப் பொருட்களிலும் கதவு இருப்பதைக் காண இயலும்; அதே நேரத்தில் அவரால் திறக்க முடியாத கதவேதும் இருப்பதில்லை. ஆரஞ்சுப் பழம் வழியாக அவரால் இந்த உலகத்தைப் பார்க்க முடியும். அப்படிப் பார்க்கும்போது அவரையும் இந்த உலகம் ஆரஞ்சு வழியாக முறைக்கவும் செய்யும்.  

தயாரான மனது

யதார்த்த வாழ்வில் நாம் பார்க்கும் பல விஷயங்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் கடந்துவிடுகிறோம். அல்லது எந்தச் சலனமும் இல்லாமல் நம் ஆழ்மனதில் பதிய அனுமதித்து அப்படியே இருந்துவிடுகிறோம். அதேபோல் காலப்போக்கில் மறக்கப்பட்ட விஷயங்களையும் ஆழ்மனதின் ஓரத்துக்கே தள்ளிவிடுகிறோம். உதாரணத்துக்கு, ஒரு கவிதையில் சம்பந்தாமே இல்லாதது போன்ற இடத்தில் ‘இப்போதெல்லாம் யாரும் யாரையும் குட்டி பூர்ஷ்வா என்று திட்டுவதில்லை’ என்று ஒரு வரி வரும். இதற்கு நம்மிடமிருந்து ‘ஆமாம்தானே’ என்று பதில் வருகிறது. ஒரு காலத்தில் இடதுசாரி விவாதங்களில், இலக்கிய இதழ்களில் நிறைய கேட்ட சொல் ‘குட்டி பூர்ஷ்வா’. இன்று அந்தச் சொல்லுக்கு என்ன ஆகிவிட்டது. ‘குட்டி பூர்ஷ்வா’ இல்லாமலா போய்விட்டார்? இது சாதாரண விஷயம்தான் என்று நாம் போய்விடுகிறோம். ஆனால், எவ்வளவு சாதாரண விஷயங்களை நம் ஆழ்மனதுக்குள் கொட்டிவைப்பது? அவையெல்லாம் தங்களுக்குள் கலைந்து கலைந்து விளையாட்டு நடத்தும் கோலம்தான் சபரியின் பல கவிதைகள்.

இதுபோன்று சம்பந்தமே இல்லாதது போன்ற வரிகள் சபரியின் கவிதைகளில் ஏராளமாகத் தலைகாட்டும். நம் நினைவு அப்படித்தானே! எந்த சம்பந்தமும் இல்லாமல் திடீரென்று ஒரு படத் தலைப்பு நினைவுக்கு வரும், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் நினைவுக்கு வருவார். அப்படி இருக்க கவிதைகள் மட்டும் ஏன் தொடர்ச்சியாக நூல் பிடித்ததுபோல் போய்க்கொண்டிருக்கின்றன? கவிதையாக மாறும் விஷயங்களைக் கவிதைக்குள் கொண்டுவர மிகவும் தயாரான ஒரு மனது வேண்டும். தன் மேல் பதியப்படும் இசைக்கீறலுக்காகத் தயாராக இருக்கும் பதிவுசெய்யப்படாத இசைத்தட்டு போன்ற மனது வேண்டும். அதனால்தான் அடுக்கடுக்காக சபரியின் எல்லாக் கவிதைகளிலும் இந்த மாயம் நிகழ்கிறது. இதற்கேற்ப சபரியின் கண் இழுவலையாக மாறி சம்பவங்களின் சொற்களை இழுத்துவருகிறது. ‘தள்ளுவண்டியில் சென்னா கொதிக்கும் மாலையில் திரும்பும் எனக்கு’ எனும்போது அந்த வரியில் சொல்லப்படாத, மாலைக்கு உரிய எல்லா விஷயங்களையும் அந்த வரி சேர்த்து இழுத்துக்கொண்டே தன் வீட்டுக்குத் திரும்புகிறது.

அப்பா நம்மிடம் ஒப்படைக்கும் வாள்

சிறுவயதிலிருந்து எனக்கு அப்பாவுடன் சைக்கிளில் செல்வது ரொம்பவும் பிடிக்கும். ஆரம்பத்தில் முன்னாலும் இன்னும் கொஞ்சம் வயது கூடிய பின் பின்னாலும் அமர்ந்து போவேன். அப்பாவுக்கு வயதாகி நான் இளைஞனாக மாறிய பிறகும் கொஞ்சநாள் அது தொடர்ந்துகொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் சைக்கிளை என்னிடம் கொடுத்து ‘ஓட்டு’ என்று சொல்லிவிட்டு சைக்கிளின் பின்னால் உட்கார்ந்துகொள்ள அவர் தயாரானபோது என் உலகமே இடிந்து தலைமேல் விழுந்ததுபோல் இருந்தது. சபரியின் ‘அப்பாவுக்கு டை அடித்த நான்கு நிமிடங்கள்’ கவிதையைப் படித்தபோது அதேமாதிரியான உணர்வு மேலிட்டது. மருத்துவமனையில் இருக்கும் அப்பாவுக்கு மகன் டை அடிப்பது பற்றிய கவிதை இது. அதன் இறுதி வரிகள் இவை: ‘… நான் குழைக்கிறேன் மயிர்ச்சாந்தை/ நரைக்கூச்சலுக்கு எதிராக கரும்மௌனத்தை/ இக்கூர்ச்சகை தான் எனது வாள்/ இனி அவர் சார்பாக/ நான் போரிடுவேன்.’ அப்பாக்கள் நம்மிடம் சைக்கிளையும் சாயம் பூசும் புருசையும் தந்துவிடும் கணம்தான் நம் பிராயத்துடனான எல்லாத் தொடர்புகளையும் ரத்தம் சிந்தச் சிந்த அறுக்கும் கத்தியாக உருவெடுத்துவிடுகிறது. அதே நேரத்தில், நம் அப்பாக்கள் சார்பாகப் போரிடுவதற்கான வாளாகவும் அந்தக் கணம் நம் கையில் வந்து உட்கார்ந்துகொள்கிறது.

பரிசோதித்திராத பிரக்ஞை

‘அன்பைப் பரிசோதித்திராத/ பால்கன்னி ஆடுகளின் காலம் அது’ என்று ஒரு கவிதையில் எழுதுகிறார் சபரி. இது வழக்கமான அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் இடையிலான ஒப்பீட்டைத் தாண்டியும் ஒவ்வொரு காலமும் தனது வெகுளித்தனத்தைத் தொலைத்துக்கொண்டே வருவதை நமக்கு உணர்த்துகிறது. வனவிலங்கு ஆர்வலர்கள் அதிகரித்துவருவதையும் வனவிலங்குகள் குறைந்துவருவதையும் நாம் நினைத்துப்பார்க்க வேண்டும். வனவாழ் பழங்குடியினருக்கு அவர்களைச் சுற்றிலும் இருக்கும் உயிரினங்களைப் பற்றிய பட்டறிவு அதிகம். ஆனால், அவற்றின் உடலில் இன்ன வகையான திசுக்கள், இத்தனை எலும்புகள், உயிரின வகைப்பாட்டியலில் அந்த விலங்கை எப்படிக் குறிப்பிடுவது என்ற விவரமெல்லாம் வனவிலங்கு ஆர்வலருக்கே தெரியும். வெகுளித்தனம் என்பது இயல்பறிவைக் குறித்த பிரக்ஞையற்று அதைக் கொண்டிருத்தல். அதைத் தொலைக்கும்போது சபரி சொல்வது போல் அன்பைப் பரிசோதித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.

ஈயின் பாதை…

ஒரு காட்சியை எந்தக் கோணத்தில் பார்த்து அல்லது உள்வாங்கி, அதை எப்படிப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படுத்துவது என்பதில் அடங்கியிருக்கிறது ஒரு கவிஞரின் வீச்சு. ஜெபமாலையை உருட்டிக்கொண்டே முணுமுணுக்கும் ஜெபா சித்தியின் உதடுகள் பற்றி சபரி இப்படி எழுதுகிறார்.

‘…வா போ வா போ வா போ… இப்படித் தொடர்ந்து தட்டச்சு செய்கிறது

புலனாகாத துணிச்சரிகையொன்றைத் தைக்கிறது, அதை

ஈரமான கத்தரியால் வெட்டுகிறது மீண்டும்

தைக்கிறது மீண்டும்

வெட்டுகிறது’

ஒரு ஈயின் பாதையைப் பின்தொடர்ந்தால் என்னென்ன கோட்டோவியங்கள் கிடைக்குமோ அதைப் போலவே சித்தியின் ஜெபம் கூறும் உதடுகளைப் பின்தொடர்ந்து சொற்கோலங்களை உருவாக்குகிறார் சபரி.

கோழியின் வீரமரணம்

பெரும்பாலான கவிதைகளை உதிரிஉதிரியாக சபரி கோர்த்துக்கொண்டே செல்கிறார். அது அலங்கோலமான கவிதைக் கட்டமைப்பாக இல்லாமல் தொடர்ச்சியான அர்த்தத்துக்கு எதிரான கட்டமைப்பாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘பின்காட்சி ஆடியில் அஸ்தமனம்’ என்ற கவிதையில் இந்தப் பகுதி:

‘வண்டியை நிறுத்துகிறோம் சிகரெட்டுக்காக

தூரப்புஞ்சையில் மங்கலாக ஒளிரும் அது ஒரு கோழிப்பண்ணை

-விபத்து நடக்க வாய்ப்பே இல்லாத இடம்-

உபயத்தில் இரண்டு காரைச்சுவர்கள், அர்த்தமின்மைக்கு எதிராக ஒரு மஞ்சள் விளக்கு

மேலே சாய்வோடுகள் மீது குந்தியிருக்கும் உடுக்கள் பொரித்த பேரந்தகாரம்: முட்டையை அடைகாக்கும் காட்டெருமை

உள்ளிருந்து ஒரு கோழியாவது வெளியேறி வந்து

இதை எல்லாம் அண்ணாந்து பார்த்தால்

மாரடைப்பில் சரிந்து விழக் கூடும்.

ஒருவருக்காவது அப்படியொரு வீரமரணம் வாய்க்கெட்டும்’

‘விபத்து நடக்க வாய்ப்பே இல்லாத இடம்’ ஏன் இந்தக் கவிதையில் இடம்பெற்றிருக்கிறது என்று யோசித்துத் தீரவில்லை. அவ்வளவு ஈர்ப்பையும் புதிரையும் கொண்டிருக்கிறது. சபரி சங்ககாலத்துக் கவிஞராக இருந்திருந்தால் ‘மீனெறி தூண்டிலார்’, ‘விட்ட குதிரையார்’, ‘செம்புலப் பெயல்நீரார்’ போல மேற்கண்ட கவிதையால் ‘முட்டையை அடைகாக்கும் காட்டெருமையார்’ என்று பெயர் பெற்றிருக்கக் கூடும். ‘விபத்து நடக்க வாய்ப்பே இல்லாத இடம்’ என்ற ஒரு வரி சொல்லும் அந்தகாரத்தின் மேலே இருக்கும் ‘உடுக்கள் பொரித்த அந்தகாரம்’ ஒரு கோழிக்கு மட்டுமல்ல நமக்கும் வீரமரணத்தை ஏற்படுத்தும் அர்த்தமின்மையைச் சுமந்துகொண்டிருக்கிறது. அதற்கு எதிராக ஒரு மஞ்சள் விளக்கு எப்போதும் எரிந்துகொண்டிருக்கும். இந்தக் கவிதையில் மட்டுமல்ல, சபரியின் பெரும்பாலான கவிதைகளிலும்.    

29 வயது ஆகும் சபரிநாதன் ஏற்கெனவே ‘களம்+காலம்= ஆட்டம்’ (2011, புது எழுத்து வெளியீடு) தொகுப்பின் மூலம் பரவலாக அறியப்பட்டவர்; இளம் கவிஞர். இவரது ‘வால்’ (2016, மணல் வீடு வெளியீடு) தொகுப்பு அவரை சமகாலத்தின் தனிப்பெருங்கவிஞராக ஆக்குகிறது. இவரது கவிதைகளில் வட்டார வழக்கு, சங்கக் கவிதைகளின் தாக்கம், விவிலியத் தமிழ் என்று மொழிப் பயன்பாட்டில் ஒரு வீச்சு தெரிகிறது. புதிதாக உருவாக்கும் சொற்கள், சொல்லடுக்குகள் போன்றவை இவரது மொழி வளத்தை நமக்கு உணர்த்துகின்றன.  

சம காலத்தின் முக்கியமான இளம் கவிஞரான சபரிநாதனுக்கு கடந்த வாரம் யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சபரி போன்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும்போதுதான் விருதுகளின் தரநிர்ணயம் உயர்கிறது. யுவபுரஸ்கார் விருது பெற்றிருக்கும் சபரிநாதனுக்கு வாழ்த்துக்கள்!


Sunday, November 29, 2020

நாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்?யுவால் நோவா ஹராரி 

சதிக் கோட்பாடுகள் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவற்றில் ரொம்பவும் பரவலானது உலகளாவிய ரகசிய அரசியல் குழுவைப் பற்றிய சதிக் கோட்பாடுதான். “ஒரு குழுவைச் சேர்ந்த மக்கள் ரகசியமாக உலகத்துப் போக்குகளைக் கட்டுப்படுத்தி உலகையே ஆள்கிறார்கள்” என்ற கோட்பாட்டை நம்புகிறார்களா என்று 25 நாடுகளைச் சேர்ந்த 26 ஆயிரம் பேரிடம் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. “நிச்சயமாக அல்லது ஒருவேளை உண்மையாக இருக்கலாம்” என்பது 37% அமெரிக்கர்களின் பதிலாக இருந்தது. 45% இத்தாலியர்களும், 55% ஸ்பானியர்களும் 78% நைஜீரியர்களும் அப்படியே பதிலளித்தார்கள். 

சதிக் கோட்பாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன. அவற்றுள் சில கோட்பாடுகள் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நாஜிஸத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் வழக்கமாக நாஜிஸத்தை ஒரு சதிக் கோட்பாடாகக் கருதுவதில்லை. அது ஒரு நாடு முழுவதையும் ஆட்கொண்டு இரண்டாம் உலகப் போரைத் தொடக்கியதால் அது தீயதாக இருந்தாலும் நாஜிஸத்தை நாம் வழக்கமாக ஒரு ‘சித்தாந்தம்’ என்றே கருதுவோம். 

நாஜிஸமும் சதிக் கோட்பாடே 

ஆனால், அதன் மையமான சித்தாந்தத்தைப் பொறுத்தவரை, நாஜிஸமானது கீழ்க்கண்ட யூத வெறுப்புப் பொய்யை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ரகசிய சதிக் கோட்பாடாகவே இருந்தது: “யூத நிதி நிறுவனங்களின் ரகசியக் குழுவொன்று ஒட்டுமொத்த உலகத்தையும் ரகசியமாக ஆதிக்கம் செலுத்துவதுடன் ஆரிய இனத்தை அழிப்பதற்கும் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள்தான் போல்ஷ்விக் புரட்சிக்குக் காரணம், மேற்கத்திய ஜனநாயக நாடுகளை இயக்கிக்கொண்டிருப்பவர்கள் அவர்களே, ஊடகங்களும் வங்கிகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஹிட்லரால் மட்டுமே அவர்களின் எல்லா தீய தந்திரங்களையும் கண்டுபிடிக்க முடிந்தது – அவரால் மட்டுமே அவற்றைத் தடுத்து நிறுத்தி மனித குலத்தைக் காப்பாற்ற முடியும்.” இதுதான் அந்தப் பொய். 

இதுபோன்ற உலகளாவிய ரகசிய அரசியல் குழுக்களினுடைய கோட்பாடுகளின் பொதுவான அமைப்பைப் புரிந்துகொள்வது என்பது அவற்றின் கவர்ச்சியையும் அவற்றில் அமைந்திருக்கும் பொய்மையையும் நமக்கு விளக்கும். 

கட்டமைப்பு 

இந்த உலகில் நடக்கும் ஏராளமான நிகழ்வுகளின் பின்னணியில் ஒரு தீய குழுவொன்று இருக்கிறது என்று உலகளாவிய ரகசிய அரசியல் குழுக்கள் தொடர்பான கோட்பாடுகள் வாதிடுகின்றன. இந்தக் குழுவின் அடையாளம் மாறலாம்: இந்த உலகம் ரகசியமாக ஃப்ரீமேஸன்களால், சூனியக்காரிகளால் அல்லது சாத்தானியர்களால் ஆளப்படுகிறது என்று சிலர் நம்புகிறார்கள்; பிறர், அது வேற்றுக்கிரகவாசிகளால், பல்லி மனிதர்களால் அல்லது பல்வேறு இறுக்கமான குழுக்களால் ஆளப்படுவதாக நம்புகிறார்கள். ஆனால், இதன் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றுதான்: அந்தக் குழு கிட்டத்தட்ட அனைத்து நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறது; அதே நேரத்தில், இப்படித் தான் கட்டுப்படுத்துவதை ரகசியமாகவும் வைத்திருக்கிறது. 

இதுபோன்ற உலகளாவிய சதிக் கோட்பாடுகள் எதிரெதிர் துருவமாகக் காட்சியளிப்பவற்றை ஒன்றிணைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றன. கம்யூனிஸமும் முதலாளியமும் நேரெதிராக இருக்கும் எதிரிகள்போல் மேல் தோற்றத்துக்குத் தோன்றுகிறதல்லவா? தவறு, அப்படித்தான் யூத ரகசிய அரசியல் குழுக்கள் நம்மை நம்பவைக்கின்றன என்று நாஜி சதிக் கோட்பாடு கூறியது. புஷ் குடும்பமும் கிளிண்டன் குடும்பமும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்று சூளுரைத்துக்கொண்டவை என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் நமக்கு முன்னால் நடிக்கிறார்கள் – மூடிய கதவுக்குப் பின்னால் அவர்கள் ஒரே விருந்து நிகழ்வுக்குத்தான் செல்வார்கள். இப்படியெல்லாம் இந்தச் சதிக் கோட்பாடுகள் எதிரெதிர் துருவங்களை இணைத்துக் கூறுகின்றன. 

மயக்கும் கண்ணி 

இதிலிருந்து இந்த உலகத்தைப் பற்றிய ஒரு கோட்பாடு வெளிப்படுகிறது. செய்திகளில் கூறப்படும் நிகழ்வுகளெல்லாம் நம்மை ஏமாற்றும் விதத்தில் தந்திரமாக வடிவமைக்கப்பட்ட வடிகட்டிகளே. நமது கவனத்தைத் திசைதிருப்பும் பிரபலத் தலைவர்களெல்லாம் உண்மையாக ஆள்பவர்களின் கைகளில் வெறும் பொம்மைகளே. 

உலகளாவிய சதிக் கோட்பாடுகளை நிறைய பேர் நம்பி, பின்பற்றுவதற்கு ஒரு காரணம் என்னவென்றால் எண்ணற்ற சிக்கலான நிகழ்வுகளுக்கு அவை நேரடியான, ஒற்றை விளக்கத்தைத் தருகின்றன. நமது வாழ்க்கை தொடர்ச்சியாகப் போர்கள், புரட்சிகள், பிரச்சினைகள், பெருந்தொற்றுக்களால் அலைக்கழிக்கப்படுகின்றன. ஆனால், சில வகையான சதிக் கோட்பாட்டை நான் நம்பினால் எனக்கு எல்லாம் புரிகிறது என்ற ஆசுவாச உணர்வு எனக்கு ஏற்படுகிறது. 

சிரியாவில் நடைபெறும் போர்? அங்கே என்ன நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு நான் மத்தியக் கிழக்கு வரலாற்றைப் படிக்கத் தேவையில்லை. அது பெரிய சதியின் ஒரு பகுதி. 5ஜி தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்? மின்காந்த அலைகள் பற்றி நான் எந்த ஆராய்ச்சியும் செய்யத் தேவையில்லை. அது ஒரு சதிக் கோட்பாடுதான். கரோனா பெருந்தொற்று? அதற்கும் உயிர்ச்சூழல்கள், வௌவால்கள், வைரஸ்களுக்கும் தொடர்பில்லை. இது தெளிவாக சதிக் கோட்பாடுதான். 

உலகளாவிய சதிக் கோட்பாடு கொண்டிருக்கும் எல்லாப் பூட்டுகளையும் திறக்கும் சாவியானது உலகின் எல்லாப் புதிர்களையும் திறந்துவிடுகிறது, பிரத்யேக வட்டம் ஒன்றுக்கான, அதாவது எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் மக்களின் வட்டம் ஒன்றுக்கான அனுமதியை எனக்குத் தருகிறது. அது என்னை வழக்கமான நபர்களை விட அதிக புத்திசாலியாக ஆக்குகிறது. பேராசிரியர்கள், இதழாளர்கள், அரசியலர்கள் போன்ற அறிவுஜீவி மேல்தட்டினர், ஆளும் வர்க்கத்தினரைவிடவும்கூட என்னை மேலுயர்த்துகிறது. அவர்கள் காணத் தவறியதை அல்லது அவர்கள் மறைக்க முயல்வதை நான் காண்கிறேன். 

பிழை 

உலகளாவிய சதிக் கோட்பாடுகள் எல்லாம் ஒரே அடிப்படைப் பிழையால் பீடிக்கப்பட்டிருக்கின்றன: வரலாற்றை அவை மிகவும் எளிமையானதாக நினைக்கின்றன. உலகளாவிய சதிக் கோட்பாடுகளின் மையக் கருதுகோள் என்னவென்றால் இந்த உலகத்தைத் தன் வசத்தில் கட்டுப்படுத்துவது ஓரளவுக்கு எளிது என்பதுதான். போர்கள், தொழில்நுட்பப் புரட்சிகள் தொடங்கி பெருந்தொற்றுகள் வரை சிறியதான சில குழுக்களால் புரிந்துகொள்ள முடியும், முன்கூட்டியே கணிக்க முடியும், எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று சதிக் கோட்பாடுகளை நம்புபவர்கள் நினைக்கிறார்கள். 

குறிப்பாகக் குறிப்பிட வேண்டியது எதுவென்றால் உலகளாவிய சதுரங்கத்தில் பத்து நகர்வுகளை முன்கூட்டியே காணும் இந்தக் குழுவின் திறன்தான். அவர்கள் வைரஸை எங்காவது வெளியிடும்போது அது இந்த உலகம் முழுதும் எப்படிப் பரவும் என்பதைக் கணிப்பது மட்டுமல்லாமல் உலகப் பொருளாதாரத்தை ஒரு ஆண்டு கழித்து எப்படிப் பாதிக்கும் என்பதையும் அவர்கள் கணிக்கக் கூடியவர்கள். ஒரு போரை அவர்கள் தொடங்கினார்கள் என்றால், அது எப்படி முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். 

இராக் எடுத்துக்காட்டு 

ஆனால், இந்த உலகம் அதைவிடவும் மிகவும் சிக்கலானது. எடுத்துக்காட்டாக, இராக்கில் அமெரிக்காவின் ஊடுருவலைப் பற்றி யோசித்துப் பாருங்கள். 2003-ல் இந்த உலகின் ஒரே ஒரு வல்லரசு, நடுத்தர அளவுள்ள மத்தியக் கிழக்கு நாட்டினுள் ஊடுருவியது. அந்த நாட்டிலுள்ள பேரழிவு ஆயுதங்களை அழிப்பதற்காகவும், சதாம் ஹுசைனின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும் அந்த ஊடுருவலை நிகழ்த்தியதாக அமெரிக்கா கூறியது. அந்தப் பிரதேசத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், இராக்கின் முக்கியமான எண்ணெய்க் கிணறுகளைத் தன்வசப்படுத்தவும் அமெரிக்கா இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று சிலர் சந்தேகப்பட்டனர். தனது லட்சியத்துக்கான தேடலில் உலகின் மிகச் சிறந்த ராணுவத்தை அமெரிக்கா ஈடுபடுத்தியதோடு மட்டுமல்லாமல் டிரில்லியன் கணக்கான டாலர்களையும் அதற்காகச் செலவழித்தது.  

சில ஆண்டுகளை வேகமாக முன்னோக்கி ஓட்டிப் பாருங்கள், இந்த பிரம்மாண்டமான முயற்சியின் விளைவுகள் என்ன? பரிபூரணப் பேரழிவுதான். பேரழிவு ஆயுதங்கள் ஏதும் இராக்கில் இல்லை, அந்த நாடு அதலபாதாளத்துள் வீழ்ந்தது. இந்தப் போரில் பெரிய வெற்றியாளர் யாரென்றால் ஈரான்தான். அதுதான் இந்தப் போரின் விளைவாக அந்தப் பிராந்தியத்தில் பெரும் ஆதிக்கச் சக்தியாக உருவானது.  

ஆக, ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷும் டொனால்டு ரம்ஸ்ஃபெல்டும் உண்மையில் ஈரானியக் கையாள்கள் என்றும் தீயதும், சாமர்த்தியமானதுமான ஈரானிய சதியை அவர்கள் நிறைவேற்றினார்கள் என்றும் நாம் முடிவுக்கு வரலாமா? வரவே முடியாது. மாறாக, மனித விவகாரங்களைக் கணிப்பதும் கட்டுப்படுத்துவதும் மிக மிகக் கடினம் என்ற முடிவுக்கே நம்மால் வர முடியும்.  

இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வதற்காக மத்தியக் கிழக்கு நாடொன்றை ஊடுருவத் தேவையில்லை. ஒரு பள்ளிக்கூட வாரியத்திலோ உள்ளூர் பஞ்சாயத்திலோ நீங்கள் பணியாற்றியிருந்தாலும் அல்லது உங்கள் அம்மாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியூட்டும் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய முயன்றாலும் உங்களுக்குத் தெரியும் மனிதர்களைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம் என்று. ஒரு திட்டத்தைத் தீட்டுவீர்கள், அது நேரெதிர் விளைவையே ஏற்படுத்தும். நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரோடு நீங்கள் ஒரு சதித் திட்டம் தீட்டுவீர்கள், ஒரு முக்கியமான கட்டத்தில் அவர் உங்கள் முதுகில் குத்திவிடுவார்.  

1,000 அல்லது 100 மனிதர்களையே நம்மால் கணிக்கவும் கட்டுப்படுத்தவும் மிகவும் சிரமமாக இருக்கும் சூழலில் கிட்டத்தட்ட 800 கோடி மக்களை ஆட்டுவிப்பது எளிது என்று சதிக் கோட்பாட்டாளர்கள் நம்மை நம்பச் சொல்கிறார்கள். 

நிதர்சனம் 

நிச்சயமாக, உலகில் உண்மையான சதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. தனிநபர்கள், பெருநிறுவனங்கள், அமைப்புகள், திருச்சபைகள், கட்சிகளின் பிரிவுகள், அரசுகள் போன்றவையெல்லாம் தொடர்ந்து வெவ்வேறு சதிகளைத் தீட்டி அவற்றை நிறைவேற்றுகின்றன. அதனால், அவை ஒட்டுமொத்த உலகத்தையும் கணித்து அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது என்று சொல்லிவிடுவது எளிதல்ல. 

1930-களில் உலகெங்கும் கம்யூனிஸப் புரட்சிகளைத் தூண்டிவிட சோவியத் ஒன்றியம் உண்மையில் சதித் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது; முதலாளிய வங்கிகளெல்லாம் நேர்மையற்ற எல்லாவித உத்திகளையும் பின்பற்றின; ரூஸ்வெல்ட்டின் நிர்வாகம் ‘நியூ டீல்’ மூலம் அமெரிக்காவை மறு கட்டமைப்பு செய்யத் திட்டமிட்டது; யூதர்களின் ஸையனிஸ்ட் இயக்கம் பாலஸ்தீனில் தங்கள் தாய்நாட்டை நிறுவும் திட்டத்தை இடைவிடாமல் பேணியது. ஆனால், இவையும் எண்ணற்ற பிற திட்டங்களும் அடிக்கடி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இயக்குபவர்களாக ஒற்றைக் குழு ஏதும் இருந்திருக்கவில்லை. 

இன்றும்கூட நீங்கள் நிறைய சதிகளுக்கு இலக்காகலாம். உங்கள் சக ஊழியர்கள் உங்கள் முதலாளியை உங்களுக்கு எதிராகச் செயல்படும்படி சூழ்ச்சி செய்யலாம். தீங்கு விளைவிக்கும் ஓபியாய்டுகளை உங்களுக்குக் கொடுக்கும்படி உங்கள் மருத்துவருக்கு ஒரு பெரிய மருந்து நிறுவனம் லஞ்சம் கொடுக்கலாம். மற்றுமொரு பெருநிறுவனம் அரசியலர்களுக்கு அழுத்தம் கொடுத்து, சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு நீங்கள் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்த முயன்றுகொண்டிருக்கலாம். ஒரு அரசியல் கட்சி தங்களுக்கு செல்வாக்கு மிக்க மாவட்டங்களின் எல்லையைத் தேர்தல் வெற்றிக்கு ஏற்றவாறு மறுவரையறுக்கலாம். வெளிநாட்டு அரசு ஒன்று உங்கள் நாட்டில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடலாம். இவையெல்லாம் உண்மையான சதிகளாக இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் உலகளாவிய ஒற்றைச் சதியின் பங்காக இருப்பவையல்ல. 

அதிகாரமும் பிரபல்யமும் 

சில சமயம், ஒரு பெருநிறுவனம், ஒரு அரசியல் கட்சி, அல்லது ஒரு சர்வாதிகாரி தம் கைகளில் இந்த உலகின் ஒட்டுமொத்த அதிகாரத்தில் கணிசமான பகுதியைக் கொண்டிருக்க முயன்று வெற்றி காண்பதும் உண்டு. அப்படி ஒரு விஷயம் நிகழும்போது, அதை ரகசியமாக வைத்திருப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம். பெரும் அதிகாரம் வரும்போது பெரும் பிரபல்யம் வரும்.  

உண்மையில், பெரும் அதிகாரத்தைக் கைக்கொள்வதற்கான அத்தியாவசியத் தேவையாகப் பெரும் புகழ் என்பது பல விஷயங்களிலும் இருந்துள்ளது. பொது மக்களின் பார்வையை லெனின் தவிர்த்திருந்தால் ரஷ்யாவில் அவர் அதிகாரத்தை வென்றிருக்க முடியாது. ஸ்டாலின் ஆரம்பத்தில் ரகசியமாகவே திட்டம் தீட்ட விருப்பம் கொண்டிருந்தார். ஆனால், சோவியத் ஒன்றியத்தில் எல்லா அதிகாரங்களையும் தன் கையில் அவர் குவித்துவிட்டிருந்தபோது பால்டிக் பிரதேசத்திலிருந்து பசிபிக் வரை ஒவ்வொரு அலுவலகம், பள்ளி, வீடு ஆகியவற்றில் ஸ்டாலினின் படம் தொங்கிக்கொண்டிருந்தது. ஸ்டாலினின் அதிகாரம் என்பது அவரது ஆளுமை மீதான் வழிபாடுடன் தொடர்புகொண்டது. லெனினும் ஸ்டாலினும் திரைக்குப் பின்னால் உள்ள ஆட்சியாளர்களின் முகமூடி மட்டுமே என்ற கருத்து எல்லா வரலாற்று ஆதாரங்களுக்கும் முரணானது. 

எந்த ஒரு தனி ரகசியக் குழுவும் இந்த ஒட்டுமொத்த உலகையும் ரகசியமாகக் கட்டுப்படுத்தவில்லை என்பது துல்லியமானது மட்டுமல்ல, அது நமக்கு சக்தியையும் அளிக்கிறது. அப்படிப் புரிந்துகொண்டால், நம் உலகில் ஒன்றுக்கொன்று போட்டியிடும் குழுக்களை நம்மால் அடையாளம் காண முடியும் என்றும், சில குழுக்களுக்கு எதிராக சில குழுக்களுடன் உங்களை இனம் கண்டுகொள்ள முடியும் என்றும் அர்த்தமாகிறது. உண்மையான அரசியல் என்பதெல்லாம் இதைப் பற்றியதுதான். 

- யுவால் நோவா ஹராரி, வரலாற்றாசிரியர், ‘சேப்பியன்ஸ்’ நூலாசிரியர். 

© ‘நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை, நன்றி: ‘இந்து தமிழ்’ நாளிதழ்

Friday, November 27, 2020

ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம்! - வி.பி. சிங்கின் உரைமண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கசப்புணர்வை ஏற்படுத்தின. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம் என்பதும் அப்படிச் செய்வதன் மூலம் எங்களை நாங்களே நெருக்கடிக்குள் தள்ளப்போகிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஒருவேளை அதுதான் எனது விதியாக இருக்கலாம்.  

நான்  நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதார அமைப்புடன் என் பார்வைகள் முரண்பட்டன; ஆக, அந்தப் பதவியிலிருந்து நான் விலக நேரிட்டது. பாதுகாப்பு அமைச்சராக நான் இருந்தபோது எனது பார்வைகள் அரசியல் கட்டமைப்புடன் முரண்பட்டன. ஆகவே, அந்தப் பதவியிலிருந்தும் விலக நேரிட்டது. தற்போது நான் பிரதமராக இருக்கிறேன், சமூக அமைப்பைப் பற்றிய எனது கொள்கையும் தற்போதைய கொள்கையும் முரண்படுகின்றன; ஆகவே, நான் வெகு விரைவில் இந்தப் பதவியை விட்டும் போக வேண்டியிருக்கும். ஆயினும், நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. எங்களுடைய ஐந்தாண்டு கால ஆட்சியை நிறைவுசெய்வதற்காகவே இந்த அமைப்புகளுக்கு நாங்கள் தலைவணங்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம், அதே நேரத்தில் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து போரிடுவோம். நூற்றுக் கணக்கான தேர்தல்களில் போட்டியிட வேண்டியிருந்தாலும் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை; ஆனால் நீதியின் பாதையிலிருந்து நாங்கள் விலகிச்செல்ல மாட்டோம்.  

இந்த ஆண்டு பாபா சாஹேப் பீம் ராவ் அம்பேத்கரின் நூற்றாண்டு, சமூகநீதியின் ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக நாங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் சில வகுப்பினரின் வெறுப்புக்கு உள்ளாகத்தான் நேரிடும். ஏழைகள் எப்படி அதிகாரத்தின் பங்குதாரர்களாக ஆவது என்பதுதான் நம் முன் தற்போது உள்ள கேள்வி. நீதிக்கான போராட்டத்தில் ஏழை எளியோர் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடவில்லை, மாறாக சமூக வாழ்க்கையில் கண்ணியமும் மதிப்பும் கிடைப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இந்த அதிகாரக் கட்டமைப்பில்- அது இந்த அவையிலாகட்டும் அல்லது அதிகாரத் தரப்பிலாகட்டும்- அவர்கள் பங்கெடுக்காவிட்டால் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கவே முடியாது என்பது என்னுடைய கருத்தாக இருந்துவந்திருக்கிறது. ஆகவே, நாட்டின் நிர்வாகத்தில் தங்கள் பங்கை அவர்கள் பெறுவதற்கு வழிவகை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகாரத்தில் அவர்கள் பங்கு பெற்றாலொழிய வெறுமனே விவாதங்கள் நடத்துவது வீணாகப் போவதுடன் அவர்கள் புறக்கணிப்புக்குள்ளாவது தொடரவே செய்யும்.     

ஐயா (அவைத்தலைவர்), மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே இந்தக் கட்டத்தை எட்டியிருக்கிறோம், அரசு அமைப்பது என்பது தற்காலிக நிறுத்தம் மட்டுமே. ஆட்சியில் இருந்தபோதும் எங்களது போராட்டத்தைத் தொடர்ந்தோம், அதிகாரத்தில் இல்லாதபோதும் தொடரவே செய்வோம். விடாமல் போராடுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். முக்கியமான நிகழ்வுகளின் ஒருசில கணங்கள் கூட வரலாற்றில் கணிசமான முக்கியத்துவத்தைப் பெறும்.  

கடவுளின் படைப்பான, நமது சக மனிதர்கள் மீது நாம் நமது கவனத்தைத் திருப்புவோமாக. எண்ணற்ற மனிதர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு துயர்மிகுந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அந்த மக்களுக்கு உதவிசெய்வது நம் கடமையாகிறது, நாங்கள் செய்ததும் சரியாக அதைத்தான். அரசுக்கு அதிகாரம் இருக்கிறது; அந்த அதிகாரம் ஏழைகளுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உதவவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் சில பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மண்டல் குழுவானது சாதியம் என்ற பிரச்சினையை எழுப்புகிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் கூறினார். இந்த அம்சத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக அமைப்பும் அரசியல் கட்டமைப்பும் பல வழிகளில் ஒன்றையொன்றைச் சார்ந்தவையாகும். சமூக, பொருளாதார அமைப்புகளில் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கீழ்மட்ட அளவில் பெருமளவிலான கூட்டுறவு காணப்படுகிறது. இந்தக் கீழ்மட்டமானது பெரிதும் தலித் மக்களாலும் சிறு விவசாயிகளாலும் ஆனது. அவர்களில் 99% ஏழைகள். மேலும் அவர்களில் 90% பேர் சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள். உயர்சாதி மக்கள் பணக்காரர்கள் என்பதும் உண்மை. சமூக அமைப்புக்கும் பொருளாதார அமைப்புக்கும் வேறுபாடுகள் இருக்கும் என்றால் சமூக அமைப்புக்கும் அரசியல் கட்டமைப்புக்கும் இடையே ஒற்றுமைகளும் இருக்கவே செய்கின்றன. அரசியல் கட்டமைப்பை மாற்றாமல் சாதியத்தை ஒழிக்கவோ சமூக அமைப்பை மாற்றவோ நம்மால் முடியாது. சாதியத்தை வேரோடு அழிக்க அரசியல் கட்டமைப்பில் நாம் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். மண்டல் குழு தொடர்பாக நாங்கள் எடுத்த முடிவு தீவிரமான பரிசீலனைக்குப் பிறகு மனவுறுதியுடன் எடுக்கப்பட்டது. நாம் எல்லோரும் கிராமங்களிலிருந்து வந்திருக்கிறோம், ஆகவே கிராமத்தினரின் நலன்களுக்கு உதவுவதற்காக எங்களின் அதீத சக்தியைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் தயார் 

ஐயா, இந்தக் கணத்தில் எங்கள் தரப்பைப் பொறுத்தவரை அதீதத் திமிரோ கடுமையான  வேதனையோ எதுவும் எங்களுக்கு இல்லை. மாறாக, நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் கூடவே நாங்கள் அவமானகரமான முறையில் செல்லவில்லை என்று பெருமிதமும் அடைகிறோம். சிலநேரம் மரணம் என்பது வாழ்க்கையை விட உயர்வானது. ஐயா, ஒரு நபர் தனக்கு மிக மிக முக்கியமான ஒரு லட்சியத்தை அடைவதற்காகத் தன் வாழ்க்கையையே இழக்கத் துணிவார் என்றால், அவர் அதற்காக வருத்தப்பட மாட்டார். இது ஒரு நல்ல நோக்கத்துக்கான போராட்டம், நாங்கள் அதிகாரத்தில் இருந்தபோது இந்த நோக்கத்துக்காக தொடர்ந்து போராடினோம், அதிகாரத்தை விட்டு விலகினாலும் இந்தப் போராட்டத்தைத் தொடரவே செய்வோம்.      

-தமிழில்: ஆசை

Saturday, November 21, 2020

வல்லபி: மலை தேவதையின் காதல் பாடல்கள்


தேன்மொழி தாஸின் கவிதைகளைப் படிக்கும்போது சமவெளியிலிருந்து வந்து தன்னை நேசித்துவிட்டுப் பிரிந்துசென்ற ஒருத்தனுக்காக ஒரு மலை தேவதை நெடிய காத்திருப்பில் இருப்பதுபோன்ற பிம்பம் உருவாகும். குறிஞ்சி நிலத்தில் பிறந்த தேன்மொழி தாஸின் பெரும்பாலான கவிதைகளுக்கான உரிப்பொருள் முல்லைத் திணைக்கான காத்திருத்தலும், பாலைத் திணைக்கான பிரிவும்தான். திணை மயக்கம் சங்கக் கவிதைகளிலேயே காணப்படும் ஒரு விஷயம்தான் என்பதால் நவீன கவிதை அந்தக் கட்டுப்பாட்டையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லைதான். இந்தத் திணை மயக்கம்தான் தேன்மொழி தாஸின் கவிதைகளுக்கு ஒருங்கே அழகும் துயரமும் ஊட்டியிருக்கிறது. 

நவீன கவிதைகளுக்கு நேர்ந்த பெரும் துயரங்களுள் ஒன்று அது இடத்தையும் சூழலையும் பெரிதும் இழந்தது. பறவை வெறுமனே பறவையாகத்தான் வரும், மரம் பெயரின்றி மரமாக வரும், சிலர் விதிவிலக்குகளாக இருந்தாலும் பெரும்பாலான போக்கு அப்படி. தேன்மொழி தாஸ் கவிதைகளில் அக உலகத்தோடு புற உலகும் பின்னிப் பிணைந்தே அவையவற்றின் அடையாளங்களுடன் வருகின்றன. ஆதிமனது இயற்கையை வியப்பதன் அல்லது வழிபடுவதன் தொடர்ச்சி என்றும் தேன்மொழி தாஸின் கவிதைகளைக் கூறலாம். குளவிப் பூம்புதர், வலம்புரிக் காய், வெந்தயப் பூ, தும்பிகை மரம், அடைக்கலாங் குருவி, காட்டுப்பூனை, மலைவேம்பு, நீலச் சங்குப்பூ, வச்சிரதந்திப் புழுக்கள், புல்குருவி, மலைராணிப் பூக்கள், கிளிப்பூக்கள், அழிஞ்சில் கனி, பேய்க்காளான், மந்திரக் காளான், தூக்கணாங்குருவி, கடமான் என்று காடும் மலையும் சார்ந்த உயிர்கள் பலவும் துருத்தாமல் தேன்மொழி தாஸின் கவிதையில் இடம்பெற்றிருக்கின்றன. 

‘வச்சிரதந்திப் புழுக்கள் மரம்குடையும் காட்சி/ மனதை மத்தியானம் ஆக்கும்’ என்ற வரிகளெல்லாம் நவீன படிம மொழியில் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே தென்படுகின்றன. வார்த்தைகளால் விவரிக்க முடியாத சௌந்தர்யங்களை அடுத்தடுத்து வெவ்வேறு உணர்வு நிலைகளைக் கொண்டு கோத்துத் தருபவை தேன்மொழி தாஸின் கவிதைகள். ஒரு கருவை எடுத்துக்கொண்டு அதை விரித்துச்செல்பவையல்ல அவை; கரு அல்லாமல் மனநிலையே கவிதையாகிறது. அந்த மனநிலை பிரிவின் வலியைச் சுமந்திருக்கலாம், காத்திருப்பைச் சுமந்திருக்கலாம், ஏமாற்றத்தைச் சுமந்திருக்கலாம். ‘நித்திரையடையாமல்/ இமையினுள் உருளும் காதல் கண்களுக்கு/ கடுகுத்தோலின் மினுமினுப்பு’, ‘கண்கள்/ வருத்தங்களைக் குவித்து விளையாடும்/ கண்ணாடி/ அவைகளுக்கு மூளையின் முடிச்சிலிருந்து ஒருவரியேனும்/ காதல் கடிதம்/ எழுதிவிட வேண்டும்’, ‘காத்திருப்பது/ காதலின் ஈரப்பதத்தை/ காற்றின் ஒத்திசையில் இசைப்பது’, ‘கதவருகே நின்றுகொண்டு நினைவுகளோடு பேசுவது/ காட்சிப் பிழையாகவேனும் நீ/ வந்துவிடுவாய் என்பது தான்’ போன்ற வரிகளெல்லாம் அப்படி அந்தந்தச் சமயத்தின் மனநிலைகள் கவிதைகளாக ஆனதற்குச் சில உதாரணங்கள். 

இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது கம்பீரமான ஒரு பெண், அதுவும் காதல் வயப்பட்டதாலேயே கம்பீரமான ஒரு பெண், இன்னும் சொல்லப்போனால் பிரிவுவயப்பட்ட பெண் பற்றிய சித்திரம் நம் மனதில் தோன்றிவிடுகிறது. ‘பெண் ஸ்தனங்களின் கம்பீரமே/ ஆண் விழிகளின் மேல் தோல்களில்/ பல அடுக்குகளாக இருப்பதையும் கண்டேன்’ என்று ஒரு இடத்தில் எழுதுகிறார். இன்னொரு இடத்தில், ‘எனது அகத்தின் புன்னகை அசையா தீபச்சுடர்’ என்கிறார். பெண்ணின் காதலுக்கு முன்பு ஆண்கள் சுருங்கித்தான் போகிறார்கள். 

கவிதையே பெரிதும் தர்க்கத்தை மீறுவதுதான் என்றாலும் சமயத்தில் சேர்த்துவைத்துப் பொருள்கொள்ள முடியாத அளவுக்கு, ஆனால் அழகுடன் தேன்மொழி தாஸின் கவிதைகளில் தர்க்கம் மீறப்பட்டிருக்கிறது. ‘ஆணின் கணிதம்/ பெருங்காய வாசனையோடு விரியும் வளைகோடு’, ‘அகம் அழிவின்மையின் நீலத் தீ’, ‘காற்று பொற்கம்பியாய்/ பார்வையை எங்கோ இழுத்துச்செல்கிறது’, ‘பூமி கணித இதயம் கொண்ட நூல்கண்டு/ அதன்மேல் அவர்களோ நெல்பூவாய் நடப்பார்கள்’ போன்ற வரிகளை உதாரணமாகக் காட்டலாம். 

புனைகதையில் ‘நனவோடை’ என்பது ஒரு உத்தி. மனதில் எண்ணங்கள் ஒரு ஒழுங்கற்று வெளிப்படுவது இயல்பு. அந்த இயல்பில் அந்தப் போக்கில் எண்ணங்களைப் புனைகதையில் எழுதுவார்கள். கவிதையே சில சமயங்களில் நனவோடையின் ஒரு துண்டாக வெளிப்பட்டாலும் இது தேன்மொழி தாஸின் கவிதைகளில் ஆழமாக வெளிப்படுகிறது. வழக்கமாக இது நவீன இலக்கிய உத்தி என்றாலும் தேன்மொழி தாஸின் கவிதைகளில் இது செவ்வியல் தொனியில் வெளிப்பட்டிருக்கிறது. அகமொழி ஒரு இடத்தில் தொடங்கி இடையே புறமும் ஆங்காங்கே எட்டிப்பார்த்து கவிதை வேறொரு இடத்தில் முடியும். அப்படி வரும்போது இரண்டிரண்டு தொடர்புடைய வரிகளின் தொகுப்புபோல் கவிதை காட்சியளிக்கிறது. ஆழ்ந்த கவித்துவத்துடன் இப்படி தேன்மொழி தாஸ் எழுதும்போது ஒரே சமயத்தில் புரியாமையும் தித்திப்பும் ஈர்ப்பும் சௌந்தர்யமும் ஏற்படுகிறது. 

இந்த மலையுச்சியில் இருந்துகொண்டு எதிரே உள்ள மலைச்சரிவின் காட்டைப் பார்க்கும் உணர்வை அவரது பல கவிதைகள் தருகின்றன. ‘பெருவனம் காலங்களால் புலம்புகிறது’ எனும்போது காடே காலத்தின் ரூபம் கொள்கிறது. அபி தனது கவிதைகளில் ‘மாலை’ எனும் அரூபத்துக்குச் செய்திருப்பதை தேன்மொழி தாஸ் ‘மலை’, ‘காடு’ எனும் ரூபங்களுக்குச் செய்திருக்கிறார். ‘புலிக் குட்டியின் மேல் சவாரி செய்யும்/ புல் குருவி காற்றைச் சுவைக்கும்/ சம்பூரணராகம் காடுகளின் மத்தியில் தொங்குகிறது’ என்பது போன்ற வரிகள் இதற்கு உதாரணம். 

மொழி அலங்காரத்தை நவீன கவிதை புறக்கணித்தே வந்திருக்கிறது. அது நல்லதே. அதே நேரத்தில் மொழியழகும் தீண்டப்படாத ஒரு வஸ்துவாக ஆகிவிட்டதோ என்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால், தேன்மொழி தாஸின் கவிதைகள் சொல்லின்பம் கூடியவையாக இருக்கின்றன. ‘நுழுந்துதல்’, நீல வாசம்’, ‘தில்லோலம்’, ‘மணிமான் கதிர்’, ‘வாழ்வின் ஆயல் மொழி’, ‘ஒழுங்கின்மையின் பச்சைச் சுடர்’, ‘குளவிப் பூம்புதர்’, ‘புலரி நிலப்பூண்’ போன்ற சொற்களும் பிரயோகங்களும் அவருடைய கவிதைகளுக்குப் பேரழகைச் சேர்க்கின்றன. அவருடைய உணர்வையும் உலகத்தையும் சொல்வதற்கென்று விரிந்த சொற்களஞ்சியம் அவரிடம் இருக்கிறது. அகத்தின் மொழி அவருக்குப் பலம் என்றால் புறத்தைப் பற்றி எழுதும்போது சில இடங்களில் கவித்துவப் பொன்மொழிகளாகவே வரிகள் எஞ்சிவிடுகின்றன. ‘கிணற்றில் கேதுதல் சூரன்கலையாகுமோ’ போன்ற வரிகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். 

‘வல்லபி’ தேன்மொழி தாஸின் ஆறாவது கவிதைத் தொகுப்பு. அபூர்வமான, அழகிய, செறிவான கவிதைகளுக்குச் சொந்தக்காரரான தேன்மொழி தாஸின் கவிதைகள் பரவலாகச் சென்றடையும்போது அவற்றின் சௌந்தர்யங்கள் வாசகர்களைத் திளைக்க வைப்பது நிச்சயம். வல்லபி 

தேன்மொழி தாஸ் 

எழுத்துப் பிரசுரம் வெளியீடு 

அண்ணா நகர், சென்னை – 40. 

தொடர்புக்கு: 98400 65000 

விலை: ரூ.200 ('இந்து தமிழ்’ நாளிதழில் 21-11-20 அன்று வெளியான கட்டுரை)

Monday, October 26, 2020

பிரம்மாண்டத்தை ஒரு சொல் தொட்டுவிடும்! அபி பேட்டிதமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான அபி 1942-ல் பிறந்தவர். அவரது இயற்பெயர் பீ.மு. அபிபுல்லா. நான்கு தசாப்தங்கள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அபி தற்போது மதுரையில் வசிக்கிறார். இதுவரை ’மௌனத்தின் நாவுகள்’ (1974), ‘அந்தர நடை’ (1979), ‘என்ற ஒன்று’ (1988), ‘அபி கவிதைகள்’ (2013) ஆகிய தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. அபி கவிதைகளின் முழுத் தொகுப்பை சமீபத்தில் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவருடன் பேசியதிலிருந்து…

உங்களின் முதல் தொகுப்புக்கும் அடுத்த தொகுப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு காணப்படுகிறதல்லவா? இது கவிதைரீதியிலான பரிணாம வளர்ச்சியா, அகரீதியிலான மாற்றத்தின் விளைவா? 

இரண்டும்தான். அனுபவ விரிவு, கூர்வையில் கூர்மை – ஒன்று; மொழியைச் செறிவு செய்து பிறக்கும் வெளிப்பாட்டு வளர்ச்சி – இரண்டு. எந்தப் படைப்பாளிக்கும் இது பொருந்தும்; தேவையும் கூட. பெரிய வேறுபாடு என்று நீங்கள் குறிப்பிடுவதைப் பலரும் உணர்ந்திருப்பார்கள். என் தொடக்க காலக் கவிதைகளின் பொது இயல்பு ஒருவித சோகம் என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். சொந்த வாழ்வு அழுத்தங்களுக்கும், வாசிப்பில் நான் கண்ட, என் உள்ளகத்தோடு வேர்முடிச்சுத் தொடர்புடைய தத்துவ தரிசனங்களுக்கும் இடையே ஆன ஊசல் நிலை அது. ஆனால், அதை வெளிப்படுத்த அப்போதிருந்த சூழ்நிலையில் எனக்குக் கிடைத்த மொழி அலங்காரமும் படிம அடுக்குகளும் நிரம்பியதாக இருந்தது. ஒரு இடைவெளிப் பார்வையில் என் பயண இலக்கும் பயணப் பாதையும் துல்லியப்பட வேண்டும் என உணர்ந்தேன். 

என் அடுத்த நகர்வு, மூலங்கள், முரண்பாடுகள் இன்றித் தூய்மையில் இலங்கும் தொலைவாழத்தை நோக்கிய நகர்வு. இப்போது என் கவிதை உண்மையுறும் என உணர்ந்தேன். உள்-வெளி என்ற பேதம் மறையத் தொடங்கும் நிலை; நான்களின் அபரிமிதமான நெரிசலில் இருத்தலும் இன்மையும் ஒன்றெனவே காணும் நிலை; சிற்சில கணப் பிளவுகளிலிருந்து வந்து தொடும் ஆனந்த சுதந்திரத்தை உணரும் விடுபட்ட நிலை – இவை கவிப்பொருளாயின.

கவிதை வெளிப்பாட்டில், மொழியின் சர்வாதிகாரத்துக்குப் பணிய மறுத்தேன்; என் சொல் தனது அர்த்தத்தைத் தாண்டி வெளிவந்தது; சொல், வடிவிலிருந்து அனுபவத்தின் வடிவிலி நிலையை நோக்கிச் சென்றது. படிமங்கள் மனசிலிருந்து மனசுக்கு எந்த ஊடகமும் இன்றிப் பாயும் புதிய அழகியல், கவிதையை எளிய செறிவாக்கிற்று. 

உங்கள் கவிதைகள் பெரிதும் அக உலகக் கவிதைகளாக இருக்கின்றன. ஏன்? உங்கள் வாழ்க்கைப் பின்னணியில் இதற்கான தடயங்கள் உண்டா?

உண்டு. அதிகம் பேசாத, பெருமளவுக்குத் தன்னுள் அடங்கிய என் தந்தையின் இயல்பு எனக்குப் பிறவிக் கொடையாக வந்திருக்கலாம். அகநோக்காளன் அகவுலகைத் தன் கவிதைக்கு வரித்துக்கொள்வதில் வியப்பேதும் இல்லை. எனக்கு இயல்பாகவும் எளிதாகவும் இருந்தது, இருப்பது அகவுலக நடமாட்டம். இப்போது என்னுடைய கேள்வி: எந்த அளவுக்குப் புறநோக்காளனாக ஒருவன் இருந்தாலும் அவனுக்குள் ஓர் அகவுலகம் இல்லையா? இடைவிடாமல் படிமங்கள் தோன்றிப் பெருகித் திரியக் கிடக்கும் அகவுலகம் யாரிடம்தான் இல்லை? கவிதையின் அகவுலகுக்கான அழைப்பொலி கேட்கும் வாசகர்களுக்கு அவரவர் அகங்களைத் துடைத்துத் துலக்கிப் பார்க்கும் தூண்டுதல் உண்டாகலாம். ‘இவ்வளவும் உண்டா இங்கே?’ என்று கிளர்ச்சி கொள்ளும் பொதுவாசகனும் இருக்கிறான். அகம் என்று சொல்லத் தொடங்கும்போதே ‘சமூகத்துக்கு எதிரான தனிமனிதம்’ என்று இடைமறிப்பது கொஞ்ச காலத்துக்கு முன்பு இருந்தது. இன்று இல்லை. இன்னவற்றை இன்ன விதமாக எழுது என்று கற்பிப்பவர்களும் இப்போது இல்லை.

பிரபஞ்சம், அதில்  மனிதனின் இருப்பு பற்றிய விசாரணைகளை உங்கள் கவிதைகளில் காண முடிகிறது அல்லவா?

எல்லோருக்கும் தெரியும், மனித இனம் தோன்றியதிலிருந்தே பிரபஞ்சத் தேடலை நிகழ்த்திவருகிறது. விஞ்ஞானமும் தத்துவமும் அதனதன் கருவிகளின் துணைகொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சிற்றடி எடுத்துவைத்துவருகின்றன. என்ன, எப்படி, எதற்காக என்ற கேள்விகள் அறிதோறும் கிடைக்கின்ற புதுப் புது அறியாமைகளைச் சுமந்து கனக்கின்றன…

இந்த முடிவிலிகளைத் துழாவும் முயற்சியில், ஒருவகையில் முடிவிலியாகிய கவிதையும் இணைந்துகொள்கிறது. ஆனால், கவிதையின் நோக்கம் கண்டுபிடிப்பதல்ல; முடிவு காண்பதல்ல; முடிவிலிகள் தரும் திகைப்பில் திளைத்திருப்பது.

உங்களின் மாலை கவிதை வரிசை தனித்துவமானது. இந்தக் கவிதைகள் உங்களிடம் எப்படி வந்துசேர்ந்தன?

வந்துசேரவில்லை. என் பிள்ளைப் பருவத்தில், மனத் தனிமையில், விவரம் புரியாத அனுபவமாக என்னிடமே இருந்தவை இவை. அப்போது மலைக்குவடுகள், காடுகள், சுனைகள், சிற்றோடைகள், கடுங்குளிர் இவற்றோடு – என்னை நிரந்தரமாகப் பற்றிவைத்திருந்த என் மாலைப் பொழுதோடு – விளக்க முடியாத உறவு கொண்டிருந்தேன். சாதாரண வெளிப்படைகளுடன் அசாதாரண விநோதங்கள் குழம்பிக் கனத்திருந்தன, அந்தப் பிள்ளைச் சிறு மனதில். கவிதையிலும் மேலான அந்தத் தூய அனுபவங்களை இன்று அப்படியே வெளிப்படுத்த முடியாது. 

சங்கக் கவிதையில் முல்லைத் திணையின் உள்ளடக்கம் இருத்தல்; தலைவி தலைவன் வரவை எதிர்நோக்கித் துயரடக்கிக் காத்திருத்தல். அந்தத் திணைக்குரிய பொழுது மாலை. அந்த மரபை விரிவுசெய்து ஒரு புதிய முல்லைத் திணையாகப் பிறப்பெடுத்தவை ‘மாலை’ கவிதைகள். பிரபஞ்சத்தின் காத்திருப்பை ஒரு தரிசனமாகக் கண்டவை; என் வருகைக்குக் காத்திருக்கும் ‘நான்’ ஆக என்னை ஆக்கியவை; யோசிப்பும் நின்றுபோன மௌனத்தை, என் வடிவில் இருந்த மௌனத்தை எனக்குக் காட்டியவை. மொத்தத்தில் அழுகை, கண்ணீர் இல்லாத ஒரு மகத்தான துயரத்தை – பிரபஞ்ச சோகத்தை எனக்குக் காட்டியவை.

தமிழ்க் கவிதை மரபு எந்த அளவுக்கு உங்கள் படைப்புலகத்துக்குப் பங்களித்திருக்கிறது?

பங்களிப்பு, பாதிப்பு என்பவை தொலைதூரத்து உறவுகள், நுட்பமானவை, கேள்வியை எதிர்கொள்ளும்போது தேடிக் காண்பவை என்ற அளவில் உள்ளவைதான் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.  எனக்கு மிகவும் உவப்பானது சங்க இலக்கியம். சற்றுக் குறுகலான இலக்கண மரபுக்குள் இயங்க வேண்டிய நிலையில் கூடக் கவிதை அல்லாத எதுவும் தன்னை அண்டாதபடி காத்துக்கொண்ட அதன் தூய எளிமையின் மீது என்க்கு ஈடுபாடு. அந்த மொழிச் செறிவும் வெளிப்பாட்டுக் கூர்மையும் என் கவிதையாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம். சங்க காலப் பொதுமக்களின் பேச்சு மொழி, பேச்சு முறை எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. எனினும் பேச்சு மொழியின் நேரடி, உடனடி அதிர்வலைகளைப் புலவர்கள் அங்கங்கே பொருத்தமாக இணைத்திருக்க வேண்டும். ஏனெனில், அந்தக் கவிதைகள் மிகப் பெரும்பாலும் பேச்சுகளே. என் கவிதை பெரும்பாலும் அகப் பேச்சுகளாக உள்ள ஒப்புமையை இங்கு இப்போது நினைத்துப் பார்த்துக்கொள்கிறேன்.

தத்துவத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பேசிய சித்தர்கள் என் கவிப்பொருளில் பாதிப்பு நிகழ்த்தியிருக்கலாம் என விமர்சகர்கள் ஊகம் கொள்கின்றனர். மற்றபடி, தமிழ்க் கவிதை மரபுக்கு அப்பாற்பட்ட வெளியுலகப் பாதிப்புகள், நவீன இலக்கியப் பாதிப்புகள், எவ்வகைப் பாதிப்புக்கும் உட்படாத என் சுயங்கள் பற்றி விமர்சகர், வாசகர் சொல்லலாம். 

படைப்பின்போது முற்றுமுழுதாக நான் என்னையே பற்றி நின்றுகொள்வது எனக்கு நன்றாகத் தெரியும். 

வெளித்தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும் உங்கள் கவிதைகள் பலவும் பொதுவாசகர்கள் அணுகுவதற்குச் சற்று சிரமமாக இருக்கிறதல்லவா. அப்படிப்பட்ட வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

சில கவிதைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது ஒரு பொதுவான ஆதங்கம். நவீன கவிதையில் படைப்பாளிகளின் அக இயக்கம் தனித்தன்மையுடன் செயல்படும்போது வாசகனுக்கு ஒரு இருண்மை தோன்றும். மொழி, சிந்தனை வடிவங்களுக்கு  வந்து சேராத, வடிவு பெறாத உணர்வு நிலைகளைக் கவிதையாக்க முயல்கிறான் கவிஞன். மூலங்களைத் தொட்டு முடிவிலிகளின் ஊடாகச் செல்லும் முயற்சிகளும் கவிதையில் உண்டு. எந்த அனுபவமும் இல்லாத ஒரு வெற்றிட நிலை வாய்த்தால் கவிதை அதைச் சொல்ல ஆசைப்படுகிறது.

‘புரிந்துகொள்ளல்’ என்பதற்கான புதிய அர்த்தம் இன்று தேவை. புரிந்துகொள்வது என்பது சொற்களின் அகராதி அர்த்தத்தைப் புரிந்துகொள்வது அல்ல. பொழிப்புரை கவிதை ஆகாது. சொல்லின் த்வனி என்ன, படிமங்கள் எங்கே கொண்டுசெல்கின்றன, மனசில் கவிதை உருவாக்கும் சலனங்கள் எவ்வுணர்வு சார்ந்தவை – என்ற ரீதியில் வாசகன் தன் அனுபவங்களைத் திரட்டிப் பார்க்க வேண்டும். புரிந்துகொள்ளுதல் என்பது அனுபவப்படுத்திப் பார்த்துக்கொள்வதுதான். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு அனுபவம். ஒரே கவிதை பல்வேறு அனுபவங்களைக் கிளரச் செய்யும். உங்களுக்குக் கிடைக்கும் அனுபவம்தான் கவிதையின் அர்த்தம். உங்கள் பக்குவத்துக்கேற்ப கவிதை வேறொரு நாள் வேறோர் அனுபவம் தரும். உண்மையில் ஒரு கவிதை மன, கால வெளிகளில் பல கவிதைகளாகிவிடுவது உண்மையே. ஆதங்கம் வேண்டாம்.

கவிதை கவிஞனைப் படைக்கிறது என்கிறீர்கள், எப்படி?

‘மனிதனிலிருந்து கவிஞனைப் படைக்கிறது கவிதை’ என்று சொல்லியிருந்தேன். இது ஒரு சாதாரண உண்மைதான். அவன் அறிந்தோ அறியாமலோ அவனுக்குள்ளிருக்கும் கவிதை அவனிடமிருந்து வெளிப்படும்போது அவன் ‘கவிஞன்’ ஆகிறான். குழந்தை பிறந்த கணத்தில் ‘தாயை’ படைப்பது போல்தான் இது. கவிதை, கவிஞனை அடையாளப்படுத்துவதுபோலவே வாசிக்கின்ற தகுதியான வாசகர்களையும் கவிஞர்களாக அடையாளப்படுத்துகிறது. வெவ்வெறு வாசகனின் வெவ்வேறு அனுபவப் பாங்கிற்கேற்பக் கவிதை புதுப்புதுப் பரிமாணங்களைக் கொள்ளும்போது அவை வாசகர்களின் கவிதைகளே அல்லவா!

படைப்புலகுக்குரிய தனித்த ஒரு தளத்தில் வைத்துப் பார்க்கும்போது இந்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

உங்கள் ஒட்டுமொத்தக் கவிதையுலகமும் 130 சொச்சம் கவிதைகளில் முடிந்துவிட்டதுபோல் தெரிகிறதே. சமீப ஆண்டுகளில் கவிதை எழுதவில்லையா?

நீண்ட இடைவெளிகளைக் கொண்டது என் படைப்புலகம். எந்த அர்த்தங்களையும் ஊகங்களையும் கொண்டிராத அந்த இடைவெளிகளே என்னுள்ளிருக்கும் கவிதைகளோடு நான் திளைத்தும் உளைந்தும் தனித்திருக்கும் பொழுதுகள். நான் ‘சும்மா இருப்பது’ இவ்வகையில்தான். நான் எழுதுகிறேன் என்ற பிரக்ஞையோ நிறைய எழுத வேண்டும் என்ற உத்வேகமோ என்னிடம் இல்லை. என் குறை/நிறை இது. எந்த ஒரு பிரம்மாண்டத்தையும் ஒற்றைச்சொல்/ ஒற்றைவரி தொட்டுவிட முடியும் எனும்போது சொற்களைப் பெருக்கும் அவசியம் ஏது? சரி, நானும் உணர்கிறேன். இப்போதைய இடைவெளி சற்று நீண்டுவிட்டது.

ஒற்றை வரியில் ஒரு பிரம்மாண்டத்தைத் தொட்டுவிட முடியும் என்பதற்கு உதாரணமாக உங்கள் வரி ஒன்றைக் காட்ட முடியுமா?

‘சூன்யம் என்ற ஒன்று இருந்தவரை எல்லாம் சரியாயிருந்தது’ - இந்த வரி உங்களை அலைக்கழிக்க அனுமதித்துப் பாருங்கள்.

உங்களின் சம காலக் கவிஞர்களில் உங்களுக்குப் பிடித்தமானவர்கள் யார்?

நிறைய பேரைச் சொல்லலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஞானக்கூத்தன், பிரமிள், சி.மணி, தேவதேவன், தேவதச்சன், கலாப்ரியா ஆகியோரின் கவிதைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

 (‘இந்து தமிழ்’ நாளிதழில் 25-10-20 அன்று வெளியான பேட்டியின் சற்று விரிவான வடிவம் இது)