கடந்த சனிக்கிழமை, 24-02-24 அன்று ஆரணி அருகில் அய்யம்பாளையத்தில் உள்ள ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோயிலுக்கு நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான ஜி. குப்புசாமியுடன் சென்றிருந்தேன். அங்கே பாடிய பதிகங்கள் இவை. சிறிய கோயில்தான். ஆனால், ரஜினி குடும்பத்தால் புகழ்பெற்ற கோயில். பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு இங்கே வந்து வேண்டிக்கொண்டால் சரியாகிவிடும் என்று ஒரு நம்பிக்கை. கோயிலுக்குச் சென்று தரிசனம் கண்டு அரை மணி நேரத்தில் எழுதிய பத்துக் கவிதைகள் இவை. அநேகமாக என்னால் பாடல் பெற்ற ஸ்தலமாக அந்தக் கோயில் இப்போது ஆகியிருக்கிறது என்பதில் எனக்குத்தான் மகிழ்ச்சி.
இந்தக் கோயிலுக்கும் பாடகி சுனந்தாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் தொண்டையில் ஒரு பாதிப்பு ஏற்பட்டு இங்கே வேண்டிக்கொண்டு போன பின் சரியானதாகக் கேள்விப்பட்டேன். இந்தப் பதிகங்களை நண்பர் ஜி.குப்புசாமி பாடகி சுனந்தாவுக்கு அனுப்பினார். அவர் படித்துப் பார்த்துவிட்டு இப்படியொரு மறுமொழி ஆற்றினார்: ‘Read this a couple of times, really Lord Perumal's grace! Thank you so much for sending this 🙏'. கோயிலுக்கு வழிநடத்திய ஜி.குப்புசாமி அவர்களுக்கும் படித்துவிட்டு நெகிழ்ந்துபோன சுனந்தா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி! பதிகம் கீழே:
1.
உலகெலாம் ஓரோசை
உலகின் பெயராய் அமைந்த
பேரோசை
மனதுக்குள் குமைந்து
வாய்க்குள் சுழன்று
வெளிப்பட மறுக்கின்றது
இறுக ஒட்டிக்கொண்ட வாயைத்
துளைக்கும் வண்டே
வருக
குழலோசை இவ்வுடல்
செய்க
*