சிந்து
(என் மனைவி சிந்து எழுதிய இந்தக் கதை ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 30-04-2014 அன்று வெளியானது)
நிலா வானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துவிட்டது. நல்லவேளை, கடலில் விழுந்ததால் அடி ஏதும் இல்லாமல் தப்பித்துக்கொண்டது. ஆனாலும், பயத்தில் நிலா அழ ஆரம்பித்தது. அப்போது, வெளிச்சமாக ஏதோ மிதக்கிறதே என்று மீன்களெல்லாம் நிலாவை நோக்கி வர ஆரம்பித்தன. மீன்களின் கூட்டத்தைப் பார்த்ததும் நிலாவின் அழுகை மேலும் அதிகரித்தது.
குட்டிப் பையன் மகி கரையில் விளையாடிக்கொண்டிருந்தான். கடலிலிருந்து ஏதோ அழுகைச் சத்தம் வருகிறதே என்று வந்து பார்த்தான். கொஞ்ச தூரத்தில் உருண்டையாக ஏதோ ஒன்று மிதப்பது தெரிந்தது. கண்ணைக் கசக்கிக்கொண்டு நன்றாகப் பார்த்தான். ஆ… நிலா!
நிலா அழுதுகொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. நிலா எப்படிக் கடலில் விழுந்தது என்று அந்தக் குட்டிப் பையனுக்கு சந்தேகம். சரி! முதலில் நிலாவைக் காப்பாற்றியாக வேண்டுமென்று அவன் நினைத்துக்கொண்டான். அங்குமிங்கும் தேடி ஒரு காகிதத்தைக் கண்டுபிடித்தான். அழகான காகிதப் படகு செய்தான்.
“அழாதே நிலா. நான் படகு அனுப்புறேன். அதுல ஏறி வந்துடு” என்று நிலாவுக்குக் கேட்கும் விதத்தில் சொல்லிவிட்டுப் படகை வேகமாகக் கடலில் தள்ளிவிட்டான். “அலையே அலையே படகை மூழ்கடிச்சிடாம நிலாகிட்ட சேர்த்துடு. திரும்பவும் படகைக் கரைக்குக் கொண்டு வந்துடு” என்று அலையிடம் கேட்டுக்கொண்டான்.