Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

Friday, July 25, 2025

மக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்! - இயக்குநர் மகேந்திரன் பிறந்தநாள் மீள்பகிர்வு


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான இயக்குநர் மகேந்திரன் நேர்காணலின் முழு வடிவம் இது. இந்த நேர்காணலின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அச்சில் வெளியாகியிருக்கிறது. முழுமையான, விரிவான நேர்காணல் எனது வலைப்பதிவில் பிரத்யேகமாக இங்கே...)

ஐம்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ இரண்டு படங்களும் வெளியாகி. ஆனாலும், சலிக்கவே சலிக்காமல் தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னமும். இன்று அவரது 86-வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு அவரது நேர்காணலின் மீள்பகிர்வு இங்கே...

இன்று புதிதாக வரும் இயக்குநர்களும் உங்களை ஆதர்சமாகக்கொண்டிருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எனக்கு எல்லாமே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. நான் வேண்டுமென்றே எந்த உத்தியையும் பின்பற்றி அந்தப் படத்தை எடுக்கவில்லை. எனக்குத் தெரிந்த சினிமாவை நான் எடுத்தேன். ஆனால், மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் நிறைய எழுதுகிறார்கள் அதைப் பற்றி. அதற்கு என்ன காரணம் என்பதை உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

எனக்குப் பள்ளி நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்கள் மீது ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. மேடை நாடகங்கள் போலவும் வானொலி நாடகங்கள் போலவும் தமிழ்த் திரைப்படங்கள் இருப்பதாக நான் உணர்ந்தேன். சினிமா ஒரு காட்சி ஊடகமாக இருக்க வேண்டும். காட்சிகளால் நகர வேண்டும் என்று நினைத்தேன். எனக்குத் தமிழ்த் திரைப்படங்கள் மீது என்னென்ன ஒவ்வாமைகளெல்லாம் இருந்தனவோ அதையெல்லாம் நீக்கிவிட்டு எடுத்த படம்தான் ‘உதிரிப்பூக்கள்’.

Friday, April 25, 2025

ஒரு ராணுவ வீரரின் குடும்பத்தினர்கூட போர் வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்!- ராணுவ வீரரின் மகனும் போர்ச் செய்தியாளருமான ஜி.கிருஷ்ணன் பேட்டி



உரத்த குரலில் ‘போர் வேண்டும், போர் வேண்டும்’ என்று ஆளுக்காள் கூவிக்கொண்டிருக்கும் காலத்தில் ஜி.கிருஷ்ணனின் குரல் நிதானமானது. அமைதியை விரும்புவது. ராணுவ வீரரின் குடும்பத்தில் பிறந்து போரைப் பற்றிய கசப்பான நினைவுகளைச் சுமந்து, பின்னாளில் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளராகப் பணியாற்றியவர். ‘தி இந்து’, ‘அசோசியேட்டட் பிரஸ்’ என்று அவருடைய இதழியல் பணி இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளாவிய பரப்பைக் கொண்டது. தற்போது பாலக்காட்டில் தன் மனைவியுடன் வசித்துவரும் ஜி.கிருஷ்ணனுடன் நடத்திய உரையாடலிலிருந்து…

Saturday, March 22, 2025

உலகின் அரிய பறவையுடன் எட்டு ஆண்டுகள்! - பறவையியலாளர் ப.ஜெகநாதனுடன் ஒரு நேர்காணல்

ப.ஜெகநாதன்

 

ஆசை

உலகிலேயே மிகவும் அரிதான பறவைகளுள் ஜெர்டான்ஸ் கோர்ஸரும் ஒன்று. அழிந்துபோய்விட்டதாகக் கருதப்பட்டு 1986-ல் ஆந்திரத்தின் கடப்பா பகுதியில் ஜெர்டான்ஸ் கோர்ஸர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்தப் பறவையின் இருப்பிடத்துக்குச் சென்று, அந்தப் பறவையைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டே, அதன் இருப்பிடத்தைக் காப்பாற்றும் முயற்சிகளில் எட்டு ஆண்டுகள் ஈடுபட்டவர் பறவையியலாளர் ஜெகநாதன். அந்த ஆண்டுகளில் அவராலேயே ஏழெட்டு முறைதான் அந்தப் பறவையைப் பார்க்க முடிந்திருக்கிறது என்றால் அந்தப் பறவை எந்த அளவுக்கு அரிதானது என்பது நமக்குப் புரியும். அவரை சந்தித்து உரையாடியதிலிருந்து…

Wednesday, February 26, 2025

பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது! - பொருளியலாளர் ஜெயரஞ்சன் பேட்டி


 

ஆசை


பொருளாதாரம் எப்படி நம் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறது, அரசின் பொருளாதார முடிவுகளெல்லாம் எப்படிக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் தாக்கமும் பாதிப்பும் ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுதுவதில் வல்லவர் பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன். பணமதிப்பு நீக்கத்தின்போது இவர் எழுதிய ‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ நூல் பெரும் புகழ்பெற்றது. தற்போது ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற இவரின் புதிய புத்தகம் வெளியாகியிருக்கும் சூழலில் அவருடன் உரையாடியதிலிருந்து...

தமிழில் பொருளாதாரம் சார்ந்த எழுத்துகளின் நிலை எப்படி இருக்கிறது?

ரொம்பவும் குறைவுதான். நான் படிக்கும்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தமிழ் வழிக்கல்விக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தது. முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களை ஒருசில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்திருந்தார்கள். அதற்குப் பிறகு படிக்கவே முடியாத அளவுக்கு மோசமான மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பித்தன. அதற்குப் பிறகு பொருளாதாரம் சார்ந்த எழுத்துகள் இரண்டு வகையாக இருந்தன. முதல் வகை நிதி ஆலோசகர்களின் எழுத்து. பங்குச் சந்தையில் எப்படிப் பணம் போடுவது, தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பது போன்று எழுதுபவர்கள் அதிகம். அதை விட்டால் இரண்டாவதாக, இடதுசாரி சிந்தனையாளர்களின் எழுத்து. இதைத் தாண்டி, பொருளாதாரத்தைத் தமிழில் விரிவாக விளக்கி எழுதியதுபோல் எனக்கு யாரும் நினைவில் இல்லை.

Saturday, March 16, 2024

நம்மாழ்வார் எல்லோருக்கும் உரியவர்: மொழிபெயர்ப்பாளர் அர்ச்சனா வெங்கடேசன் பேட்டி


ஆசை

(இன்று அர்ச்சனா வெங்கடேசன் பிறந்தநாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எடுத்த பேட்டியின் மறுபகிர்வு) 

ஆண்டாளையும் நம்மாழ்வாரையும் அழகான ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றிருப்பவர் அர்ச்சனா வெங்கடேசன். ஏ.கே.ராமானுஜனின் தொடர்ச்சி. நம்மாழ்வாரின் ‘திருவாய்மொழி’ அர்ச்சனாவின் மொழிபெயர்ப்பில் ‘எண்ட்லெஸ் சாங்’ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மொழிபெயர்ப்புக்காக ‘லூஸியன் ஸ்ட்ரைக் ஏசியன் ட்ரான்ஸ்லேஷன் பிரைஸ்’ என்ற விருது அர்ச்சனாவுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (டேவிஸ்) மதங்கள் சார்ந்த ஆய்வுகளுக்கும் ஒப்பிலக்கியத்துக்குமான இணைப் பேராசிரியராக இருக்கும் அர்ச்சனாவுடன் உரையாடியதிலிருந்து…

தமிழ் இலக்கியத்தின் பக்கம் எப்படி வந்தீர்கள்?

சென்னை பெசன்ட் நகரில் பிறந்து வளர்ந்தவள் நான். 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழி என்பதால், சென்னையில் இருக்கும் வரை தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது. பேசுவேன் அவ்வளவுதான். ஆனால், சிறு வயதில் ஆங்கில இலக்கியத்தின் மீது விருப்பம் அதிகம். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பெர்க்லி) ஆங்கில இலக்கியம் படிக்கும்போது, என் அறைத்தோழி ஜார்ஜ் எல்.ஹார்ட்டின் வகுப்புக்கு என்னைக் கூப்பிட்டுச் சென்றார்.

Monday, October 26, 2020

பிரம்மாண்டத்தை ஒரு சொல் தொட்டுவிடும்! அபி பேட்டி



தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான அபி 1942-ல் பிறந்தவர். அவரது இயற்பெயர் பீ.மு. அபிபுல்லா. நான்கு தசாப்தங்கள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அபி தற்போது மதுரையில் வசிக்கிறார். இதுவரை ’மௌனத்தின் நாவுகள்’ (1974), ‘அந்தர நடை’ (1979), ‘என்ற ஒன்று’ (1988), ‘அபி கவிதைகள்’ (2013) ஆகிய தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. அபி கவிதைகளின் முழுத் தொகுப்பை சமீபத்தில் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவருடன் பேசியதிலிருந்து…

உங்களின் முதல் தொகுப்புக்கும் அடுத்த தொகுப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு காணப்படுகிறதல்லவா? இது கவிதைரீதியிலான பரிணாம வளர்ச்சியா, அகரீதியிலான மாற்றத்தின் விளைவா? 

இரண்டும்தான். அனுபவ விரிவு, கூர்வையில் கூர்மை – ஒன்று; மொழியைச் செறிவு செய்து பிறக்கும் வெளிப்பாட்டு வளர்ச்சி – இரண்டு. எந்தப் படைப்பாளிக்கும் இது பொருந்தும்; தேவையும் கூட. பெரிய வேறுபாடு என்று நீங்கள் குறிப்பிடுவதைப் பலரும் உணர்ந்திருப்பார்கள். என் தொடக்க காலக் கவிதைகளின் பொது இயல்பு ஒருவித சோகம் என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். சொந்த வாழ்வு அழுத்தங்களுக்கும், வாசிப்பில் நான் கண்ட, என் உள்ளகத்தோடு வேர்முடிச்சுத் தொடர்புடைய தத்துவ தரிசனங்களுக்கும் இடையே ஆன ஊசல் நிலை அது. ஆனால், அதை வெளிப்படுத்த அப்போதிருந்த சூழ்நிலையில் எனக்குக் கிடைத்த மொழி அலங்காரமும் படிம அடுக்குகளும் நிரம்பியதாக இருந்தது. ஒரு இடைவெளிப் பார்வையில் என் பயண இலக்கும் பயணப் பாதையும் துல்லியப்பட வேண்டும் என உணர்ந்தேன். 

என் அடுத்த நகர்வு, மூலங்கள், முரண்பாடுகள் இன்றித் தூய்மையில் இலங்கும் தொலைவாழத்தை நோக்கிய நகர்வு. இப்போது என் கவிதை உண்மையுறும் என உணர்ந்தேன். உள்-வெளி என்ற பேதம் மறையத் தொடங்கும் நிலை; நான்களின் அபரிமிதமான நெரிசலில் இருத்தலும் இன்மையும் ஒன்றெனவே காணும் நிலை; சிற்சில கணப் பிளவுகளிலிருந்து வந்து தொடும் ஆனந்த சுதந்திரத்தை உணரும் விடுபட்ட நிலை – இவை கவிப்பொருளாயின.

கவிதை வெளிப்பாட்டில், மொழியின் சர்வாதிகாரத்துக்குப் பணிய மறுத்தேன்; என் சொல் தனது அர்த்தத்தைத் தாண்டி வெளிவந்தது; சொல், வடிவிலிருந்து அனுபவத்தின் வடிவிலி நிலையை நோக்கிச் சென்றது. படிமங்கள் மனசிலிருந்து மனசுக்கு எந்த ஊடகமும் இன்றிப் பாயும் புதிய அழகியல், கவிதையை எளிய செறிவாக்கிற்று. 

உங்கள் கவிதைகள் பெரிதும் அக உலகக் கவிதைகளாக இருக்கின்றன. ஏன்? உங்கள் வாழ்க்கைப் பின்னணியில் இதற்கான தடயங்கள் உண்டா?

உண்டு. அதிகம் பேசாத, பெருமளவுக்குத் தன்னுள் அடங்கிய என் தந்தையின் இயல்பு எனக்குப் பிறவிக் கொடையாக வந்திருக்கலாம். அகநோக்காளன் அகவுலகைத் தன் கவிதைக்கு வரித்துக்கொள்வதில் வியப்பேதும் இல்லை. எனக்கு இயல்பாகவும் எளிதாகவும் இருந்தது, இருப்பது அகவுலக நடமாட்டம். இப்போது என்னுடைய கேள்வி: எந்த அளவுக்குப் புறநோக்காளனாக ஒருவன் இருந்தாலும் அவனுக்குள் ஓர் அகவுலகம் இல்லையா? இடைவிடாமல் படிமங்கள் தோன்றிப் பெருகித் திரியக் கிடக்கும் அகவுலகம் யாரிடம்தான் இல்லை? கவிதையின் அகவுலகுக்கான அழைப்பொலி கேட்கும் வாசகர்களுக்கு அவரவர் அகங்களைத் துடைத்துத் துலக்கிப் பார்க்கும் தூண்டுதல் உண்டாகலாம். ‘இவ்வளவும் உண்டா இங்கே?’ என்று கிளர்ச்சி கொள்ளும் பொதுவாசகனும் இருக்கிறான். அகம் என்று சொல்லத் தொடங்கும்போதே ‘சமூகத்துக்கு எதிரான தனிமனிதம்’ என்று இடைமறிப்பது கொஞ்ச காலத்துக்கு முன்பு இருந்தது. இன்று இல்லை. இன்னவற்றை இன்ன விதமாக எழுது என்று கற்பிப்பவர்களும் இப்போது இல்லை.

பிரபஞ்சம், அதில்  மனிதனின் இருப்பு பற்றிய விசாரணைகளை உங்கள் கவிதைகளில் காண முடிகிறது அல்லவா?

எல்லோருக்கும் தெரியும், மனித இனம் தோன்றியதிலிருந்தே பிரபஞ்சத் தேடலை நிகழ்த்திவருகிறது. விஞ்ஞானமும் தத்துவமும் அதனதன் கருவிகளின் துணைகொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சிற்றடி எடுத்துவைத்துவருகின்றன. என்ன, எப்படி, எதற்காக என்ற கேள்விகள் அறிதோறும் கிடைக்கின்ற புதுப் புது அறியாமைகளைச் சுமந்து கனக்கின்றன…

இந்த முடிவிலிகளைத் துழாவும் முயற்சியில், ஒருவகையில் முடிவிலியாகிய கவிதையும் இணைந்துகொள்கிறது. ஆனால், கவிதையின் நோக்கம் கண்டுபிடிப்பதல்ல; முடிவு காண்பதல்ல; முடிவிலிகள் தரும் திகைப்பில் திளைத்திருப்பது.

உங்களின் மாலை கவிதை வரிசை தனித்துவமானது. இந்தக் கவிதைகள் உங்களிடம் எப்படி வந்துசேர்ந்தன?

வந்துசேரவில்லை. என் பிள்ளைப் பருவத்தில், மனத் தனிமையில், விவரம் புரியாத அனுபவமாக என்னிடமே இருந்தவை இவை. அப்போது மலைக்குவடுகள், காடுகள், சுனைகள், சிற்றோடைகள், கடுங்குளிர் இவற்றோடு – என்னை நிரந்தரமாகப் பற்றிவைத்திருந்த என் மாலைப் பொழுதோடு – விளக்க முடியாத உறவு கொண்டிருந்தேன். சாதாரண வெளிப்படைகளுடன் அசாதாரண விநோதங்கள் குழம்பிக் கனத்திருந்தன, அந்தப் பிள்ளைச் சிறு மனதில். கவிதையிலும் மேலான அந்தத் தூய அனுபவங்களை இன்று அப்படியே வெளிப்படுத்த முடியாது. 

சங்கக் கவிதையில் முல்லைத் திணையின் உள்ளடக்கம் இருத்தல்; தலைவி தலைவன் வரவை எதிர்நோக்கித் துயரடக்கிக் காத்திருத்தல். அந்தத் திணைக்குரிய பொழுது மாலை. அந்த மரபை விரிவுசெய்து ஒரு புதிய முல்லைத் திணையாகப் பிறப்பெடுத்தவை ‘மாலை’ கவிதைகள். பிரபஞ்சத்தின் காத்திருப்பை ஒரு தரிசனமாகக் கண்டவை; என் வருகைக்குக் காத்திருக்கும் ‘நான்’ ஆக என்னை ஆக்கியவை; யோசிப்பும் நின்றுபோன மௌனத்தை, என் வடிவில் இருந்த மௌனத்தை எனக்குக் காட்டியவை. மொத்தத்தில் அழுகை, கண்ணீர் இல்லாத ஒரு மகத்தான துயரத்தை – பிரபஞ்ச சோகத்தை எனக்குக் காட்டியவை.

தமிழ்க் கவிதை மரபு எந்த அளவுக்கு உங்கள் படைப்புலகத்துக்குப் பங்களித்திருக்கிறது?

பங்களிப்பு, பாதிப்பு என்பவை தொலைதூரத்து உறவுகள், நுட்பமானவை, கேள்வியை எதிர்கொள்ளும்போது தேடிக் காண்பவை என்ற அளவில் உள்ளவைதான் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.  எனக்கு மிகவும் உவப்பானது சங்க இலக்கியம். சற்றுக் குறுகலான இலக்கண மரபுக்குள் இயங்க வேண்டிய நிலையில் கூடக் கவிதை அல்லாத எதுவும் தன்னை அண்டாதபடி காத்துக்கொண்ட அதன் தூய எளிமையின் மீது என்க்கு ஈடுபாடு. அந்த மொழிச் செறிவும் வெளிப்பாட்டுக் கூர்மையும் என் கவிதையாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம். சங்க காலப் பொதுமக்களின் பேச்சு மொழி, பேச்சு முறை எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. எனினும் பேச்சு மொழியின் நேரடி, உடனடி அதிர்வலைகளைப் புலவர்கள் அங்கங்கே பொருத்தமாக இணைத்திருக்க வேண்டும். ஏனெனில், அந்தக் கவிதைகள் மிகப் பெரும்பாலும் பேச்சுகளே. என் கவிதை பெரும்பாலும் அகப் பேச்சுகளாக உள்ள ஒப்புமையை இங்கு இப்போது நினைத்துப் பார்த்துக்கொள்கிறேன்.

தத்துவத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பேசிய சித்தர்கள் என் கவிப்பொருளில் பாதிப்பு நிகழ்த்தியிருக்கலாம் என விமர்சகர்கள் ஊகம் கொள்கின்றனர். மற்றபடி, தமிழ்க் கவிதை மரபுக்கு அப்பாற்பட்ட வெளியுலகப் பாதிப்புகள், நவீன இலக்கியப் பாதிப்புகள், எவ்வகைப் பாதிப்புக்கும் உட்படாத என் சுயங்கள் பற்றி விமர்சகர், வாசகர் சொல்லலாம். 

படைப்பின்போது முற்றுமுழுதாக நான் என்னையே பற்றி நின்றுகொள்வது எனக்கு நன்றாகத் தெரியும். 

வெளித்தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும் உங்கள் கவிதைகள் பலவும் பொதுவாசகர்கள் அணுகுவதற்குச் சற்று சிரமமாக இருக்கிறதல்லவா. அப்படிப்பட்ட வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

சில கவிதைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது ஒரு பொதுவான ஆதங்கம். நவீன கவிதையில் படைப்பாளிகளின் அக இயக்கம் தனித்தன்மையுடன் செயல்படும்போது வாசகனுக்கு ஒரு இருண்மை தோன்றும். மொழி, சிந்தனை வடிவங்களுக்கு  வந்து சேராத, வடிவு பெறாத உணர்வு நிலைகளைக் கவிதையாக்க முயல்கிறான் கவிஞன். மூலங்களைத் தொட்டு முடிவிலிகளின் ஊடாகச் செல்லும் முயற்சிகளும் கவிதையில் உண்டு. எந்த அனுபவமும் இல்லாத ஒரு வெற்றிட நிலை வாய்த்தால் கவிதை அதைச் சொல்ல ஆசைப்படுகிறது.

‘புரிந்துகொள்ளல்’ என்பதற்கான புதிய அர்த்தம் இன்று தேவை. புரிந்துகொள்வது என்பது சொற்களின் அகராதி அர்த்தத்தைப் புரிந்துகொள்வது அல்ல. பொழிப்புரை கவிதை ஆகாது. சொல்லின் த்வனி என்ன, படிமங்கள் எங்கே கொண்டுசெல்கின்றன, மனசில் கவிதை உருவாக்கும் சலனங்கள் எவ்வுணர்வு சார்ந்தவை – என்ற ரீதியில் வாசகன் தன் அனுபவங்களைத் திரட்டிப் பார்க்க வேண்டும். புரிந்துகொள்ளுதல் என்பது அனுபவப்படுத்திப் பார்த்துக்கொள்வதுதான். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு அனுபவம். ஒரே கவிதை பல்வேறு அனுபவங்களைக் கிளரச் செய்யும். உங்களுக்குக் கிடைக்கும் அனுபவம்தான் கவிதையின் அர்த்தம். உங்கள் பக்குவத்துக்கேற்ப கவிதை வேறொரு நாள் வேறோர் அனுபவம் தரும். உண்மையில் ஒரு கவிதை மன, கால வெளிகளில் பல கவிதைகளாகிவிடுவது உண்மையே. ஆதங்கம் வேண்டாம்.

கவிதை கவிஞனைப் படைக்கிறது என்கிறீர்கள், எப்படி?

‘மனிதனிலிருந்து கவிஞனைப் படைக்கிறது கவிதை’ என்று சொல்லியிருந்தேன். இது ஒரு சாதாரண உண்மைதான். அவன் அறிந்தோ அறியாமலோ அவனுக்குள்ளிருக்கும் கவிதை அவனிடமிருந்து வெளிப்படும்போது அவன் ‘கவிஞன்’ ஆகிறான். குழந்தை பிறந்த கணத்தில் ‘தாயை’ படைப்பது போல்தான் இது. கவிதை, கவிஞனை அடையாளப்படுத்துவதுபோலவே வாசிக்கின்ற தகுதியான வாசகர்களையும் கவிஞர்களாக அடையாளப்படுத்துகிறது. வெவ்வெறு வாசகனின் வெவ்வேறு அனுபவப் பாங்கிற்கேற்பக் கவிதை புதுப்புதுப் பரிமாணங்களைக் கொள்ளும்போது அவை வாசகர்களின் கவிதைகளே அல்லவா!

படைப்புலகுக்குரிய தனித்த ஒரு தளத்தில் வைத்துப் பார்க்கும்போது இந்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

உங்கள் ஒட்டுமொத்தக் கவிதையுலகமும் 130 சொச்சம் கவிதைகளில் முடிந்துவிட்டதுபோல் தெரிகிறதே. சமீப ஆண்டுகளில் கவிதை எழுதவில்லையா?

நீண்ட இடைவெளிகளைக் கொண்டது என் படைப்புலகம். எந்த அர்த்தங்களையும் ஊகங்களையும் கொண்டிராத அந்த இடைவெளிகளே என்னுள்ளிருக்கும் கவிதைகளோடு நான் திளைத்தும் உளைந்தும் தனித்திருக்கும் பொழுதுகள். நான் ‘சும்மா இருப்பது’ இவ்வகையில்தான். நான் எழுதுகிறேன் என்ற பிரக்ஞையோ நிறைய எழுத வேண்டும் என்ற உத்வேகமோ என்னிடம் இல்லை. என் குறை/நிறை இது. எந்த ஒரு பிரம்மாண்டத்தையும் ஒற்றைச்சொல்/ ஒற்றைவரி தொட்டுவிட முடியும் எனும்போது சொற்களைப் பெருக்கும் அவசியம் ஏது? சரி, நானும் உணர்கிறேன். இப்போதைய இடைவெளி சற்று நீண்டுவிட்டது.

ஒற்றை வரியில் ஒரு பிரம்மாண்டத்தைத் தொட்டுவிட முடியும் என்பதற்கு உதாரணமாக உங்கள் வரி ஒன்றைக் காட்ட முடியுமா?

‘சூன்யம் என்ற ஒன்று இருந்தவரை எல்லாம் சரியாயிருந்தது’ - இந்த வரி உங்களை அலைக்கழிக்க அனுமதித்துப் பாருங்கள்.

உங்களின் சம காலக் கவிஞர்களில் உங்களுக்குப் பிடித்தமானவர்கள் யார்?

நிறைய பேரைச் சொல்லலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஞானக்கூத்தன், பிரமிள், சி.மணி, தேவதேவன், தேவதச்சன், கலாப்ரியா ஆகியோரின் கவிதைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

 (‘இந்து தமிழ்’ நாளிதழில் 25-10-20 அன்று வெளியான பேட்டியின் சற்று விரிவான வடிவம் இது)

Friday, October 2, 2020

எல்லோரும் இணைவதற்கு காந்திதான் மையப்புள்ளியாக இருக்க முடியும் - அண்ணாமலை பேட்டி



ஆசை  

புதுடெல்லியில் உள்ள தேசிய காந்திய அருங்காட்சியகத்தின் இயக்குநர் என்கிற அடையாளத்தைத் தாண்டிய, சமகாலத்தின் குறிப்பிடத்தக்க காந்தியச் சிந்தனையாளர்களில் ஒருவர் எனும் அடையாளத்தையும் கொண்டவர் அ.அண்ணாமலை. சென்ற ஆண்டு நாடெங்கும் காந்தியின் 150-வது பிறந்த நாள் நிகழ்வுகளையும் கொண்டாட்டங்களையும் நடத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவரான அண்ணாமலையுடன், சமகாலச் சூழலில் காந்தியையும் அவருடைய வழிமுறைகளையும் எப்படிப் பொருத்திப் பார்ப்பது என்று பேசினேன்…  

காந்தியம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?  
ராணுவத்தில் சேர்ந்து அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்ற மிகப் பெரிய கனவுடன் கல்லூரிக் காலத்தில் வாழ்ந்தவன் நான். அதில் ஏற்பட்ட சில மாற்றங்கள், அனுபவங்கள் என்னை வேறு வழிக்குத் திருப்பிக் கொண்டுவந்துவிட்டன. எம்எஸ்சி அமைதியாக்கம் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதுகலைப் பட்டத்தில் சேர்ந்தேன். களப்பணியில் காந்தி தேவைப்படுகிறார் என்பதற்காகப் படிக்க ஆரம்பித்தேன். அதுவே காந்தியப் பணியை நோக்கித் திருப்பியதோடு வாழ்க்கைப் பணியாகவும் அமைந்துவிட்டது தற்செயலான விஷயம்தான்.  

தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநராக உங்களால் மறக்க முடியாத விஷயங்கள் எவையெவை?  
தேசிய காந்தி அருங்காட்சியகத்தைக் காந்தியக் கருவூலம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய கடிதங்கள் என்று ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியது. தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்களைப் பார்ப்பது போன்ற ஒரு அனுபவம்தான் எனக்கு ஏற்பட்டது. உதாரணத்துக்கு, என்னுடைய நண்பர் ஒருவர் காந்தியுடைய வளர்ப்பு மகளும், அவருடைய ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்று கருதப்பட்டவர்களின் குழந்தையுமான லட்சுமியைப் பற்றிய தகவல் கேட்டிருந்தார். அதற்காக நான் தேடிக்கொண்டிருந்தபோது எங்களுடைய அந்தப் புகைப்படப் பிரிவில் தற்செயலாக ஒரு சின்ன நோட்டீஸ் கிடைத்தது. அதில் காந்தியுடன் அவருடைய வளர்ப்பு மகள் லட்சுமி என்று ஒரு படம் போட்டு இருந்தது. அந்தப் படம் 1935-களில் எடுக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரிந்தது. அதை எடுத்து வைத்துக்கொண்டேன். இதைத் தொடர்ந்து பழைய புத்தகங்கள் எல்லாம் வைத்திருக்கக்கூடிய அந்த அறையைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கடிதத் தொகுப்பைப் பார்த்தேன். காந்தி கைப்பட எழுதிய அஞ்சல் அட்டை. அந்தக் கடிதத்தில் ‘உங்களுடைய மகன் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறுகிறார். அதற்குப் பின்னால் இந்தத் திருமணத்தைப் பற்றிப் பேசுவோம்’ என்று திருமணம் பற்றிய ஒரு பதிவு இருந்தது. அவர் ஆந்திரத்தைச் சேர்ந்த சர்மா என்பவருக்கு எழுதிய கடிதம். சர்மாவின் மகன் மாருளியா. அவரை மாருதி என்றே அழைப்பார்கள்; அவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவருக்கும் காந்தியின் ஆசிரமத்தில் இருந்த அவருடைய வளர்ப்பு மகளும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருமான லட்சுமிக்கும் இடையிலானதுதான் இந்த திருமணப் பேச்சுவார்த்தை. இதுவரை இந்தக் கடிதம் எங்கும் வெளியிடப்படவில்லை. ஆனால், இதுபோன்ற நடவடிக்கையில் காந்தி ஈடுபட்டிருந்தார் என்பது தெரியும். ஆகவே, எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, நூலகத்துக்குச் சென்று பழைய செய்தித்தாள்கள் பிரிவில் இருக்கும் கோப்புகளை எல்லாம் பார்க்கலாம் என்று எடுத்தேன். ஒரு கோப்பை நான் திருப்பியவுடன் என் கண்ணில் பட்டது ஒரு பெண்ணின் பேட்டி. தன்னுடைய வாழ்க்கையில் காந்தி எப்படியெல்லாம் மாற்றங்களைக் கொண்டுவந்தார், எப்படித் திருமணம் நடந்தது என்பதைப் பற்றியெல்லாம் விளக்கமாகப் பேசியிருந்தார். அந்தப் பெண் வேறு யாரும் அல்ல; லட்சுமிதான். அடுத்தடுத்து புகைப்படம் கிடைக்கிறது, காந்தி எழுதிய கடிதம் கிடைக்கிறது, லட்சுமியின் பேட்டி கிடைக்கிறது எனும்போது ஆச்சரியமாக இருக்கிறது; அதுவரை ஒரு கதையாகச் சொல்லப்பட்டது அங்கே ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டது. இப்படியான பல விஷயங்கள் நடந்துகொண்டேயிருக்கும் இடம் அது.  

சிறுவர்களிடம் காந்தியை எடுத்துச்செல்வதைப் பணியாகக் கொண்டிருக்கிறீர்கள். சிறுவர்கள் காந்தியை எப்படி எதிர்கொள்கிறார்கள்?  
மாணவர்களுக்கு காந்தியை சொல்வது மிக எளிதாகத்தான் இருக்கிறது. பெரியவர்களுக்கு சொல்லும்போதுதான் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், மாணவர்கள் காந்தியை காந்தியின் வழியாக அணுகுகிறார்கள்; நல்லதோ கெட்டதோ நேரடியாகத் தங்கள் அனுபவத்தின் வழி காந்தியை மதிப்பிடுகிறார்கள். பெரியவர்களோ பெரும்பாலும் காந்தியை வேறு மனிதர்களின் பார்வைகளின் வழி வந்தடைகிறார்கள். காந்தியை வாசிக்காமலே, அவரைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமலேயே அவருக்கான தீர்ப்பை எழுதிவிடுகிறார்கள். 

காந்தியும் அந்நாளைய காந்தியர்களும் அதிகாரத்திடம் உண்மையைப் பேசினார்கள்; இந்நாளைய காந்தியர்கள் மௌனமாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? 
காந்தியர்கள் எப்போதும் ஒரே மாதிரியாகவே செயலாற்றுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வேறு பல அமைப்புகளுடனும் ஒப்பிட முடியாத அளவுக்குப் பல்வேறு தளங்களில் தங்கள் காரியங்களை அவர்கள் விரித்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அன்றைக்கு காந்தியர்களுக்கும் அவர்களுடைய காரியங்களுக்கும் கொடுக்கப்பட்ட நியாயமான கவனம் இன்றைக்கு ஊடகங்களால் கொடுக்கப்படுவதில்லை என்பதே இப்படியான பார்வைக்கான காரணம். இந்தத் தலைமுறை ஊடகங்களை முழுக்கவுமே வியாபார நோக்கங்கள் ஆக்கிரமித்துவிட்டன; விளைவாக, ஆட்சியதிகாரத்துக்கு அப்பாற்பட்டு சந்தை நோக்கத்தின் அடிப்படையில் பரபரப்பையே நாடுகின்றன. சமூகம் இரண்டாகப் பிளந்துகொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம் என்று முடிவெடுத்துப் பேசுபவர்களின் செயல்பாடுகளே கவனிக்கப்படுகின்றன. காந்தியர்கள் அப்படியான இயல்பைக் கொண்டவர்கள் அல்ல. பிளேக் காலகட்டத்திலும், போயர் போர் காலகட்டத்திலும் பிரிட்டிஷ் அரசுடனும் இணைந்து செயலாற்றியவர் காந்தி. பிரிட்டிஷார் ஆட்சியை வேரறுக்கச் செயல்பட்ட காந்தியின் இந்த அணுகுமுறையை ஒரு காந்தியர் பின்பற்றுவதை இன்றைய ஊடகங்கள் எப்படி அணுகும் என்று நினைக்கிறீர்கள்? ஜனநாயகத்துக்காக, மதச்சார்பின்மைக்காக, சுற்றுச்சூழலுக்காக என்று ஒவ்வொரு தளத்திலும் அதிகாரத்தை நோக்கி உரக்கப் பேசுவதில் மட்டும் அல்ல; சிதைவுகளுக்கு மாற்றாக ஒன்றை உருவாக்கும் பணியிலும் காந்தியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உரிய கவனம் இன்று பெறாததால், அவர்கள் செயல்படவே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  

காந்தியோடு முரண்பாடு கொண்டிருந்த சித்தாந்தங்கள் பலவும் தற்போது காந்தியத்தோடு நெருங்கிவருவதுபோல் தெரிகிறது. இந்த மாற்றத்தின் காரணம் என்ன? 
எதிரி மிகவும் பலசாலியாக இருப்பதால் எதிராளிகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பது எல்லோருக்கும் புரிகிறது. அதற்கு ஒரு மையப்புள்ளி தேவை இல்லையா? சமூகத்தின் எல்லாத் தரப்புகளோடும், எதிரில் இருப்பவரையும் ஒரு தரப்பாக அணுகிய காந்தியே அந்த மையப்புள்ளியாக இருக்க முடியும் என்றும் புலப்படத் தொடங்கியிருக்கிறது. அதன் விளைவாகவே காந்தி என்ற மையப் புள்ளியை நோக்கி எல்லோரும் வந்துகொண்டிருக்கிறார்கள்.  

தனிப்பட்ட வாழ்க்கையில் பின்பற்ற இயலாத அளவு கடினமானதா காந்தியம்?  
சைக்கிள் ஓட்டுவதுபோலத்தான் வாழ்க்கை. சைக்கிள் பழகும்போது நமக்கு எல்லோருக்கும் தெரியும், எவ்வளவு கடினமான ஒரு செயல். எத்தனை முறை தடுக்கித் தடுக்கி விழுந்திருப்போம். எத்தனை முறை அடிபட்டிருப்போம். ஆனால், அந்த சைக்கிள் ஓட்டிப் பழகியவுடன் எவ்வளவு எளிதாக இருக்கிறது. அது, பழக்கத்தில்தான் வருகிறது, உங்களுடைய அர்ப்பணிப்பில்தான் உள்ளது. நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் காந்தியத்தைவிட எளிமையானது வேறு எதுவுமே கிடையாது. நம்முடைய வாழ்க்கையை நாம் சிக்கலாக்கிக்கொண்டதால் வந்த வினைதானே ஒழிய அவருடைய சிந்தனையைப் பொறுத்த அளவில் எளிமையானதுதான்.  

காந்தி தற்காலத்துக்கு எந்த அளவுக்குப் பொருத்தப்பாடு உடையவராக இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்?
காந்தி தற்காலத்துக்கு ஏற்புடையவரா என்ற கேள்வியைக் காட்டிலும், நாமும் நம்முடைய வாழ்க்கை முறையும் தற்காலத்துக்கு ஏற்புடையவையா என்று கேள்வியை மாற்றிக்கொண்டால், காந்தி எல்லாக் காலத்துக்கும் எவ்வளவுக்குப் பொருத்தம் உடையவர் என்பது விளங்கிவிடும் என்று நினைக்கிறேன். நம்முடைய வாழ்க்கை முறை, நம்முடைய பொருளாதார அணுகுமுறை, நம்முடைய வளர்ச்சி தொடர்பிலான பார்வை அத்தனையிலும் ஓட்டை விழுந்துகொண்டிருப்பதை எல்லோருமே உணர்ந்திருக்கிறோம்தானே! இதற்கு என்ன மாற்று, யாருடைய வழிமுறை பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சமூகத்தளத்திலேயே ஒரு முஸ்லிம் அல்லது ஒரு தலித் பக்கத்திலிருந்து இன்றைய காலகட்டத்தைப் பாருங்கள். அவர்களுக்கு இவ்வளவு நெருக்கமான, பக்கபலமான ஒரு தார்மீக உறவுக்குரல் காந்திபோல வேறு எது ஒன்று இருக்கிறது? 

காந்தியம் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?  
பொதுவாக, நாம் ஏதோ புதுமையானவர்கள்போலவும், காந்தியம் மிகவும் பழமையானவர்போலவும் ஒரு பார்வையை வைத்துக்கொண்டு காந்தியை அணுகுகிறோம். இது தவறு. ‘காந்தியம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வேண்டுமா அல்லது நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள வேண்டுமா?’ என்று கேள்வியை மாற்றி யோசிக்குமாறு உங்களை வேண்டுகிறேன். 

-(2020 காந்தி ஜெயந்தி அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான பேட்டி)

Monday, June 1, 2020

மின்சாரம் இல்லையென்றால், தமிழக விவசாயம் நாசமாகிவிடும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி



ஆசை

கரோனா பாதிப்புகளுக்கு விவசாயமும் விதிவிலக்கு அல்ல. அடி மேல் அடி விழுவதுபோல இந்தச் சமயத்தில் விவசாயத்துக்கான கட்டணமில்லா மின்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஏற்பாடுகளைத் தொடங்கியிருக்கிறது இந்திய அரசு. ஒருபுறம் இதைக் கடுமையாக எதிர்ப்பதாகச் சொன்னாலும், மறுபுறம் விவசாயிகளின் மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தும் பணி நோக்கி நகர்கிறது தமிழக அரசு. அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகள் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். தமிழக விவசாயம் எந்த அளவுக்கு மின்சாரத்தைச் சார்ந்திருக்கிறது? தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர் பி.ஆர்.பாண்டியனுடன் பேசினேன்...


விவசாயிகளுக்கான மின் இணைப்பில் மீட்டர் பொருத்தப்படுவதை ஏன் எதிர்க்கிறீர்கள்?

விவசாயிகளுக்கான கட்டணமில்லா மின்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்துக்கான முன்னோட்டம் இது என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம். என்றைக்கு ‘உதய் மின் திட்ட’த்தில் தமிழக அரசு கையெழுத்துப் போட்டதோ அன்றைக்கே தொடங்கிவிட்டது இதற்கான அச்சாரம். அந்தத் திட்டத்தை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு, இவர்கள் அந்தத் திட்டத்தில் கையெழுத்துப் போட்டதுதான் இன்று மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இது முற்றிலும் மின்சாரத்தைத் தனியார்மயமாக்கும் நோக்கம் கொண்டதே.


எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் மீட்டர் பொருத்தப்படுகிறது என்று அரசு கூறுகிறதே?

இப்படித்தான் ஆட்டத்தைத் தொடங்குவார்கள்! நாங்கள் பார்க்காததா? தமிழக அரசு உண்மையாகவே இந்தச் சட்டத்தை எதிர்க்கிறது என்றால், உடனடியாக அவசரச் சட்டம் இயற்றி ‘புதிய மின்சார சீர்திருத்த வரைவு மசோதா-2020’ஐ மத்திய அரசு கைவிடும்படி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் ரத்துசெய்வதையும் மின்சாரத்தைத் தனியார்மயமாக்குவதையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் தமிழ்நாட்டு அரசு திட்டவட்டமாகக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். ஒரு விஷயம் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஒரு ஏக்கர்; நான் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கலாம்; ஆனால், மின் பயன்பாட்டைத் தீர்மானிப்பது நிலத்தின் அளவு மட்டும் அல்ல; நீர் எத்தனை அடியில் இருக்கிறது என்பதே மின் பயன்பாட்டைத் தீர்மானிக்கும். நூறு அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளவனுக்கும் ஆயிரம் அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளவனுக்கும் எப்படி மின் பயன்பாட்டைச் சமன்படுத்துவீர்கள்? போர்செட்டில் சுவிட்ச் போர்டு இருக்கும் இல்லையா, அதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சென்ஸார் வைத்துவிட்டார்கள். எந்தெந்த விவசாயி எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார் என்ற விவரம் மின் வாரியத்துக்குப் போய்விடும். இப்போது மீட்டர் பொருத்துவதன் பின்னணியில் மின்சாரத்தை விலையாக்கும் நோக்கம் எதுவும் இல்லையென்றால், நீங்கள் மீட்டர் பொருத்துவதன் நோக்கம்தான் என்ன?


தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தியில் மின்சாரம் எந்த அளவுக்குப் பங்கு வகிக்கிறது?

தமிழகத்தைப் பொறுத்தவரை அடிப்படையில் இது நீர்ப் பற்றாக்குறை மாநிலம். கேரளம், பஞ்சாப், உத்தர பிரதேசம் போல வளம் கொழிக்கும் மாநிலம் அல்ல. தாமிரபரணி நீங்கலாக ஏனைய நதிகள் அண்டை மாநிலங்களின் தயவோடு பிணைந்திருப்பவை. இதை உணர்ந்துதான் நிலத்தடி நீராதாரத்தைப் பயன்படுத்தி, விவசாயத்தைத் தூக்கி நிறுத்த நம்முடைய முன்னாள் முதல்வர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். இன்றைக்குத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மிகை உணவு உற்பத்தி மாநிலமாகத் தமிழ்நாடு திகழக் காரணம் நிலத்தடி நீராதாரம்தான். தமிழகத்தின் உணவுக் களஞ்சியமான காவிரிப் படுகையையே எடுத்துக்கொள்ளுங்கள்,. 10 லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது; இதில் சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவுக்குக் கட்டணமில்லா மின்சாரத்தைப் பயன்படுத்தியே விவசாயம் செய்கிறோம். இயற்கைச் சீற்றங்களால் மொத்த விவசாயமும் பாதிக்கப்படும்போது, பயனடையும் நிலங்களில் அளவு அதிகரிக்கும்; விவசாயிகள் நீரைப் பகிர்ந்துகொள்வதும் உண்டு. கட்டணமில்லா மின்சாரம்தான் இதையெல்லாம் சாத்தியப்படுத்துகிறது. வேளாண்மைக்கு 12 மணி நேரம் மின்சாரம் வழங்குவதாக அரசாங்கம் கூறினாலும், உண்மையில் 9 மணி நேரம்தான் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதிலும் ஏராளமான தடங்கல்கள். இப்போதைய குறுக்கீடு விவசாயத்தை மொத்தமாகவே நாசமாக்கிவிடும்.


கரோனா காலகட்டத்தில் அரசிடம் விவசாயிகள் எதிர்பார்ப்பது என்ன?

நம்முடைய பல பலவீனங்களை கரோனா காலகட்டம் அம்பலப்படுத்திவிட்டது. இனியாவது அரசு மாற வேண்டும் என்று நினைக்கிறோம். கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தன்னுடைய பார்வையை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். விவசாயத்தை அதன் பழைய செல்வாக்குக்கு மீட்டெடுக்காமல், கிராமங்களில் மறுமலர்ச்சி சாத்தியமில்லை. ஆனால், இந்த நெருக்கடியான சூழலிலும்கூட அரசு சோதிக்கவே செய்கிறது. கஷ்டமான சூழலிலும் உணவு உற்பத்தியைத் தொடர்கிறார்கள் விவசாயிகள். ஆனால், விளைபொருட்கள் விநியோகம், சந்தைப்படுத்தலில் அரசு எங்களுக்கு உதவியாக இல்லை. எவ்வளவு விளைபொருட்கள் வீணாகின்றன தெரியுமா? வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுகிறார்கள் விவசாயிகள். கேட்டால், ‘கிடங்கு கட்டியிருக்கிறோம்; குளிர்சாதன வசதியுள்ள கிடங்கு, இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்பார்கள். அந்தக் கிடங்குகள் எங்கே இருக்கின்றன என்று விவசாயிகள் யாருக்குமே தெரியாது. தமிழகத்தின் உணவுக் களஞ்சியம் இது; இந்தக் காவிரிப் படுகையில் எத்தனை கிடங்குகளை அமைத்திருக்கிறீர்கள்? கிராமத்துக்கு ஒன்றுகூட தேவைப்படலாம்; மாவட்டத்துக்கு எத்தனை அமைத்திருக்கிறீர்கள் என்று பட்டியல் கொடுங்களேன்! எல்லாம் வாய்ப்பந்தல்! விவசாயிகளையும் மதியுங்கள். எங்கள் குரலுக்கு மதிப்பளியுங்கள்!

Tuesday, January 21, 2020

கவிதை தீப்பந்தம் போன்றது! குட்டி ரேவதி பேட்டி


ஆசை
(18-01-20 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான பேட்டி)
இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்க் கவிதையுலகில் தீவிரமாகச் செயல்பட்டுவருபவர் குட்டி ரேவதி. இதுவரை இவரது 12 கவிதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. தற்போது குட்டி ரேவதியும் ஒட்டுமொத்தக் கவிதைகளின் தொகுதி வெளியாகியிருக்கிறது. கவிஞர், சிறுகதையாசிரியர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், சித்த மருத்துவர், சமூகச் செயல்பாட்டாளர் என்று பல முகங்களைக் கொண்ட குட்டி ரேவதியுடன் உரையாடியதிலிருந்து...

கவிதைக்குள் எப்படி வந்தீர்கள்?

அப்பா இளம் பருவத்திலேயே தமிழ் மொழி மீது உண்டாக்கிய ஆர்வம்தான் காரணம். நிறைய சங்கப் பாடல்களை மனனமாக அவர் எனக்குச் சொல்லிக் காட்டுவார். இதனால் எனக்குத் தொடர் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. இதற்குத் தீனிபோடும் வகையில் பழைய புத்தகக் கடைகளிலிலிருந்து எனக்கான புத்தகங்களை அப்பா தேடித் தேடி வாங்கிவந்து தருவார். நான் படித்த சித்தமருத்துவத்தில் தமிழ் மொழிப்பாடத்திட்டம் ஒரு முக்கியமான காலகட்டத்தின் சொற்களை அள்ளிவந்து எனக்கு வழங்கியது. கூடவே, 90- களில் திருநெல்வேலியில் நிலவிய இலக்கியப் பண்பாடு எனப் பல காரணங்கள் ஒன்றிணைந்துதான் கவிதைக்குள் நுழைந்தேன்.

நீங்கள் எழுத வந்த காலத்தின் பெண் கவி மொழியும் தற்போதைய பெண் கவி மொழியும் மாறியிருக்கிறது ௭ன்று நினைக்கிறீர்களா?

பெண் கவி மொழி காலந்தோறும் நிறைய மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய பரிமாணம் பெறுகிறது. உள்ளடக்கங்களில், கவிதை எழுத வேண்டிய நோக்கங்களில், மொழியின் திறத்தில் என எல்லாவற்றிலும். தற்போதைய பெண் கவிஞர்கள் மொழியை  எளிதான ஓர் ஊடகமாகப் பயன்படுத்தமுடிகிறது. நாங்கள் எழுத வந்தபோது, அது ஒரு போராட்டத்திற்கான வேகத்துடன் இருந்தது. எழுதுவதே விடுதலையாக இருந்த காலகட்டத்திலிருந்து விடுதலைக்கான குரலாய் கவிதையை ஆக்கும் சவால், இன்றைய பெண் கவிஞர்களின் செயல்பாட்டில் இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக ௧விதை எழுதி வருகிறீர்கள். இந்தப் பயணத்தில் கவிதை உங்களுக்கு என்ன விதமான சாத்தியங்களை, திறப்புகளைத் தந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறேன். பெருவாரியான ஆண் எழுத்தாளர்களின் எதிர்ப்பைச் சந்தித்த என் கவிதைகளை தற்போது ஜீரோ டிகிரி பதிப்பகம் 900 கவிதைகள் கொண்ட இரு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறது. இந்தக் கவிதைகளை ஒரு கல்லூரி மாணவன் எந்த மனத்தடையும் சுய இறுக்கமும் இன்றி வாசிக்கத் தொடங்குகிறான்.

தொடங்கிய இடத்திலிருந்து வெகுதூரம் வந்திருக்கிறேன். கவிதைகள் வழியாக, நம் தமிழ்ச் சமூகத்தின் வெவ்வேறு போராட்ட காலகட்டங்களின் ஊடாக நான் என் மொழியின் துணை கொண்டு கடந்து வந்திருக்கிறேன். இயன்றவரை, கவிதை மொழி சார்ந்த அத்தனை சாத்தியங்களையும், விடுதலைக்கான வழிகளையும் தொடர்ந்து கண்டறிந்துகொண்டே இருக்கிறேன்.

புனைவை முயன்று பார்த்தாலும் கவிதை உங்கள் பிரத்யேக தேர்வாக இருக்கிறது அல்லவா? அது ஏன்?

ஆமாம்! ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’, என்ற இரு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. மூன்றாவதாக, புதிய சிறுகதைத் தொகுப்பு ‘மீமொழி’, வெளிவரவிருக்கிறது.

உயிர்வாழ, தனிமனித மறுமலர்ச்சிக்கு எப்போதும் கவிதையுடன்தான் ஏதேனும் செய்துகொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. கவிதை, தீப்பந்தம் போன்றது. எனக்கு நானே வழியைக் காட்டிக்கொள்ளவும், மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளவும் கவிதை தரும் ஊக்கம் எல்லா காலங்களிலும் தேவையாக இருக்கிறது. சமூக மாற்றங்களை உணர்ந்துகொள்ள, அநீதிகளை எதிர்க்க, தனிமனித வாழ்வைத் தாண்டிச் சமூக உறவுகளைப் பேண என எல்லாவற்றுக்கும். கவிதைக்குள் ஒரு குரல், தீவிரத்தின் தீவிரமான குரல்  ஒன்று தீப்பிழம்பு போல் எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.  

இலக்கிய உலகில் பெண்களுக்கான இடம், அங்கீகாரம் எப்படி இருக்கின்றது?

எப்போதுமே இலக்கிய உலகம் பெண்களுக்கான அங்கீகாரத்தையும் இடத்தையும் கொடுப்பதில் தயக்கத்துடன் மனத்தடையுடன்தான் செயல்படுகிறது. ஆனால், அதை எதிர்பார்த்து இன்று எந்தப் பெண் எழுத்தாளரும் செயல்படுவதில்லை. கறாரான சமூக விமர்சனங்களை பெண்கள் தங்கள் எழுத்தில் முன்வைத்துக்கொண்டேயிருப்பதும், அதற்கான வாய்ப்புகளைத் தம் அளவில் உருவாக்கிக்கொண்டே இருப்பதும், சமூகத்தை அதை நோக்கி இணங்கச் செய்வதும்தான் அங்கீகாரங்களில் சேரும்.  எனில், பெண் எழுத்து பெருமளவில் இதை வென்றிருக்கிறது.  


'முலைகள்' கவிதைத் தொகுப்பு வெளிவந்தபோது கடும் எதிர்ப்பை சந்தித்தீர்கள். அதனுடன் ஒப்பிடும்போது இன்றைய சூழல் எப்படி இருக்கிறது?

இருபது ஆண்டுகளில் பொதுச்சமூகம் பெண் எழுத்தை அணுகுவதில் நிறைய மாறியுள்ளது. பெண் எழுத்துதான் இன்று இலக்கியத்தில் முதன்மையானதாக இருக்கிறது. பெண் வாசகர்கள் இந்தப் புத்தகக் காட்சியில் அதிகமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். எனில், பெண் எழுத்தின் செயல்பாடும், பெண்கள் மொழியை நோக்கி வேகமாக நகரும் சமூக அசைவும்தான் காரணம்.

இன்று வெகு எளிதாக, ஒரு பெண் தன் கவி ஆளுமையைக் கையாள முடிகிறது. கவிதையில் சமூகக் கட்டமைப்பை எழுதுவது அன்று கடுமையாக எதிர்க்கப்பட்டது. இன்றைய பெண் கவிதை,  சாதி, மதம், கடவுள், திருமணம் என எந்தச் சமூக நிறுவனத்தையும் கவிதையில் விமர்சிக்கும் பொதுவெளியும் பயிற்சியும் அழகு நிலையும் கொண்டிருக்கின்றது. நம்மைச் சுற்றி நிறைய பெண் கவிஞர்கள் நிலைத்த தீவிரத்துடனும், பொதுப்பொருள் சார்ந்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகள், பெண் எழுத்தைக் கவனப்படுத்துகின்றன. பதிப்பாளர்கள், பெண் படைப்புகளை முன்னணிப் பணியாகக் கொண்டிருக்கின்றனர். சமூகத்தில் பெண் கவிதை ஒரு முழக்கம் போல், அழியாத பாடல்போல் ஒலிக்கத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் இன்னும் கவிதை வழியாக நாம் மாற்றியமைக்க வேண்டிய சிந்தனைகளும் போக்குகளும் நிறைய இருக்கின்றன.

உங்கள் திரைப் பயணம் எப்படி இருக்கிறது?

சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. ‘சிறகு’, என்ற என் முதல் படத்தை இயக்கிவருகிறேன்.  எப்போதுமே திரைத்துறையில் நான் இயங்க விரும்பினேன். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் பணியாற்றத் தொடங்கிய பின்பு அது சீரான தொழில் துறை சார்ந்த பயணமாக மாறியது. எதைச் செய்தாலும் எப்படிச் சிறப்பாக செய்வது என்று கற்றுக்கொடுக்க, அவருக்கு நிகர் அவரே. விரைவில், எனது ‘சிறகு’, திரையைத் தொடவிருக்கிறது.

உங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள் யார்? சமகாலத்தில் நம்பிக்கை தருபவர்கள் யார்?

என் ஆதர்ச எழுத்தாளர் கவிஞர் பிரமிள்தான். காரணங்கள், நான் எழுத வந்தபோது சந்தித்த எதிர்ப்பின் அரசியலை, சாதிய ஒடுக்குமுறை அரசியலை அவர் எழுத்து வழியாகவே தெளிந்தேன். கவிதை மொழியை அவர் அளவுக்குக் கூர்மையான சமூக ஆயுதமாக மாற்றியவர் எவரும் இல்லை. கவிஞர் தேவதேவனின் சமரசமின்மை, அரிய ஒரு சமூக விழுமியம். எவரிடமும் காணக் கிடைக்காதது. நான் என்றென்றும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஒன்று.

என்னுடன் எழுத வந்தவர்களை, இன்றைய இளங்கவிஞர்களைத் தொடர்ந்து நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். கவிதையின் திசையும் மொழியின் போக்கும் எங்கே மாறுகின்றன என்பதை உணர்த்த வல்ல அரிய உரைகற்களாக தற்காலக் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறென். பெண் கவிஞர்களில், சஹானா, மனுஷி, முபீன் சாதிகா, தனசக்தி, யாழினி ஶ்ரீ, தீபு ஹரி, தென்றல் சிவக்குமார், கயல், சிங்கப்பூர் கனகலதா என்று நிறைய பெண் கவிஞர்களைப் பின்தொடர்கிறேன். சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து கவிஞராக உருவெடுத்திருக்கும் சுபா செந்தில்குமாரின் கவிதைகள் நவீனக் கவிதையின் அடுத்த தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. புதிய தலைமுறையினர் ஒவ்வொருவரின் கவிதை வெளிக்குள்ளும் பயணிப்பது, நான் மேற்சென்று எழுதிச்செல்ல உதவுகிறது.

Friday, January 17, 2020

பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது!




ஜெயரஞ்சன் பேட்டி


ஆசை
(17-01-20 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான பேட்டி இது)

பொருளாதாரம் எப்படி நம் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறது, அரசின் பொருளாதார முடிவுகளெல்லாம் எப்படிக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் தாக்கமும் பாதிப்பும் ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுதுவதில் வல்லவர் பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன். பணமதிப்பு நீக்கத்தின்போது இவர் எழுதிய ‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ நூல் பெரும் புகழ்பெற்றது. தற்போது ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற இவரின் புதிய புத்தகம் வெளியாகியிருக்கும் சூழலில் அவருடன் உரையாடியதிலிருந்து...

தமிழில் பொருளாதாரம் சார்ந்த எழுத்துகளின் நிலை எப்படி இருக்கிறது?

ரொம்பவும் குறைவுதான். நான் படிக்கும்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தமிழ் வழிக்கல்விக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தது. முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களை ஒருசில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்திருந்தார்கள். அதற்குப் பிறகு படிக்கவே முடியாத அளவுக்கு மோசமான மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பித்தன. அதற்குப் பிறகு பொருளாதாரம் சார்ந்த எழுத்துகள் இரண்டு வகையாக இருந்தன. முதல் வகை நிதி ஆலோசகர்களின் எழுத்து. பங்குச் சந்தையில் எப்படிப் பணம் போடுவது, தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பது போன்று எழுதுபவர்கள் அதிகம். அதை விட்டால் இரண்டாவதாக, இடதுசாரி சிந்தனையாளர்களின் எழுத்து. இதைத் தாண்டி, பொருளாதாரத்தைத் தமிழில் விரிவாக விளக்கி எழுதியதுபோல் எனக்கு யாரும் நினைவில் இல்லை.

எழுத ஆரம்பித்தது எப்படி?
மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள்தான் என்னை எழுத வைத்தன. 1980-களில் ‘எம்ஐடிஎஸ்’-ல் ஆராய்ச்சி மாணவனாக இருந்தேன். என்னைச் சந்திக்க வரும் ஊடக நண்பர்கள் பொருளாதாரத்தைப் பற்றிக் கட்டுரை கேட்பார்கள். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். குறிப்பாக, வேளாண் துறையையும் அதன் பொருளாதாரத்தையும் பற்றி அதிகம் எழுதினேன். நான் மாணவனாக இருந்தபோது காவிரிப் பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது காவிரியைப் பற்றி எழுதினேன். இதெல்லாம்தான் தொடக்கப் புள்ளி. அதற்குப் பிறகு, முப்பதாண்டு காலம் தேசிய, சர்வதேச அளவிலான ஆய்வு நிறுவனங்களில் முழுநேர ஆய்வுப் பணியில் இருந்துவிட்டேன். ஆனால், வெகுஜன மக்களுக்குப் பொருளாதார சிந்தனையைக் கொண்டுசெல்லாமல் மேல்மட்ட நிலையிலேயே பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைத்தேன். அந்தச் சூழலில், தொலைக்காட்சி ஊடகங்கள் என்னை இழுத்துக்கொண்டுபோய் விவாதங்களில் உட்கார வைத்தன. அதன் தொடர்ச்சியாக, ‘மின்னம்பலம்’ இணையதளத்தில் எழுதலானேன். அப்படித்தான், பணமதிப்பு நீக்கத்தின்போது 60 நாட்களில் 100 கட்டுரைகள் எழுதினேன். பின்னால், அது புத்தகமாகவும் வந்தது. நான் எழுதிய பிற பொருளாதாரக் கட்டுரைகளையும் தொகுத்து ‘இந்தியப் பொருளாதார மாற்றங்கள்’ என்றொரு புத்தகத்தையும் வெளியிட்டோம்.

சமீப காலமாக நிறைய பொருளாதாரப் புத்தகங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் படுகின்றன அல்லவா?

நல்ல புத்தகங்கள் வருகின்றன. தாமஸ் பிக்கட்டியின் நூல் தமிழில் வந்திருக்கிறது. ஒரு சாதாரண வாசகரால் பிக்கட்டியை எடுத்தவுடன் படிக்க முடியாது. ஆகவே, இது போன்ற புத்தகங்களில் நான்கைந்து பக்கங்களில் ஒரு எளிமையான அறிமுகம் இருக்க வேண்டும். இவ்வளவு பெரிய வளர்ச்சி என்கிறோம், ஆனால் இந்த வளர்ச்சியால் யாருக்குப் பயன் என்று கேட்டுப் பார்க்க வேண்டும், கடந்த 20 ஆண்டுகளில் நாடு எப்படி வளர்ந்திருக்கிறது, இதில் சாதாரண மக்களின் வருமானம் எப்படி இருக்கிறது, செல்வந்தர்களின் வருமானம் எத்தனை மடங்காக ஆகியிருக்கிறது; இதைப் பற்றித்தான் தாமஸ் பிக்கெட்டி எழுதியிருக்கிறார் என்று சொன்னால் வாசகர்கள் உள்ளே வருவதற்குப் பெரும் உதவியாக இருக்கும்.

யாருடைய பொருளாதாரச் சிந்தனைகள் தமிழுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
வலதுசாரிச் சிந்தனைகளும், அதற்கு மாற்றாக இருக்கும் இடதுசாரிச் சிந்தனைகளும் வர வேண்டும். இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடையிலான மோதல்கள்தான் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ரொம்ப நாளாக நடந்துகொண்டிருக்கின்றன. எது சரி, எது தவறு என்பதை மக்களே முடிவுசெய்துகொள்வார்கள். வலதுசாரிச் சிந்தனையைப் பொறுத்தவரை, அவர்களே எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று யார் சொன்னார்களோ அவர்களே, ‘நாம் ரொம்பவும் அதிகமாகப் போய்விட்டோமோ’ என்று கவலை தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவின் பெரும் பணக்காரர் களான பில் கேட்ஸ் போன்றவர்கள், ‘எங்களிடம் அளவுக்கதிகமாகப் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் இன்னும் அதிகமாக வரி கட்ட வேண்டும்’ என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. பன்னாட்டு நிதியமே, ‘நாம் ரொம்பவும் அதீதமாகப் போய்விட்டோமோ’ என்று அவர்களுடைய பத்திரிகையில் எழுதுகிறது. கட்டுக்கடங்காத ஏற்றத்தாழ்வு இருக்கும்போது முதலாளித்துவமே தன்னைத் தக்கவைத்துக்கொள்ளுமா என்ற கேள்வி இருக்கிறது. அவர்கள் ஒன்றும் அற உணர்ச்சியால் இப்படிக் கவலைப்படவில்லை. அமைப்புக்கே ஆபத்து வந்துவிடும்போல் இருக்கிறதே என்றுதான்.

தமிழ்நாட்டின் பொருளாதார முன்னெடுப்புகள் எப்படி இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்திருக்கின்றன என்ற முறையில் விரிவாகப் பேசியிருக்கிறீர்கள் அல்லவா?
தமிழ்நாடு இவ்வளவு வளர்ந்த மாநிலமாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணம் சமூக நீதிதான். அது இல்லை என்றால் கேரளம், தமிழ்நாடு தவிர்த்து ஏனைய மாநிலங்களில் இருப்பதுபோல் வெகுசிலருக்கான வளர்ச்சியாக மட்டுமே இருந்திருக்கும். அதுதான் மக்களை அடுத்த அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியபடி போய்க்கொண்டே இருக்கிறது. அப்படி நகர்த்தும்போது அவர்கள் பல பிரச்சினைகளிலிருந்து விடுபடுகிறார்கள். அப்படி விடுபடும்போது அவர்களுடைய பணமும் சக்தியும் நேரமும் அவர்கள் அடுத்த கட்டங்களை நாடிச் செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது. அதைவிடப் பெரிய விஷயம் என்னவென்றால் சாப்பாட்டுக்கு மற்றவர்களை சார்ந்திருந்த சூழல் இருக்கிறதல்லவா! எங்கள் ஊர் திருவையாறு பக்கத்தில், காவிரிக் கரையில் இருக்கிறது. தண்ணீர் அவ்வளவு ஓடும் அந்தப் பகுதியிலேயே வருஷத்தில் 110 அல்லது 120 நாட்கள்தான் விவசாய வேலை இருக்கும். மீதி நாள் வேலை இருக்காது. வேலை இருந்தால்தான் சம்பளம். அந்த மாதிரி சூழல் இருந்த காலத்தில் ஏப்ரல் வந்தால் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கும். ஜூன் 1-ம் தேதியெல்லாம் சாப்பிடுவதற்கு வீட்டில் ஒன்றும் இருக்காது. அப்போது ஆண்டை வீட்டுக்குப் போய்தான் தலையைச் சொறிந்துகொண்டு நிற்க வேண்டும். அவர்களும் உடனேயே கொடுத்துவிட மாட்டார்கள்.  கூனிக் குறுக வைத்து ஏகப்பட்ட நிபந்தனைகள் போட்டு அதற்கப்புறம்தான் இரண்டு கலம் நெல் தருவார்கள். அண்ணாவும் அவர்களுக்குப் பின் வந்தவர்களுமாகச் சேர்ந்து அந்தச் சூழல் அடியோடு புரட்டிப்போடப்பட்டது. சாப்பாட்டுக்காக யாரும் யாரிடமும் போய் நிற்கத் தேவையில்லை என்றானது. பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது. ‘எல்லோரையும் சோம்பேறிகளாக ஆக்கிவிட்டார்கள். யாரும் வேலைக்கு வர மாட்டேன் என்கிறார்கள்’ என்று சொல்வது மேல்குடிப் பார்வை மட்டுமல்ல, மத்தியதர வர்க்கத்துக்கும் அந்தப் பார்வை ரொம்பவும் வசதியாக இருக்கிறது. இப்படி இருக்கும்போதுதான் திராவிட இயக்கத்தின் சாதனைகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

உங்களது ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ புத்தகம் பல முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. எப்படி வந்தது இந்த யோசனை?
நான் ‘எம்ஐடிஎஸ்’-ல் சேர்ந்தபோதிலிருந்தே ஒரு விஷயம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வந்தது. அது நிலச்சீர்திருத்தம் தொடர்பானது. அப்போதெல்லாம் நிலச்சீர்திருத்தம் என்றால் இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பது. இப்போது சீர்திருத்தம் என்றால் இல்லாதவர்களிடம் பிடுங்கி இருப்பவர்களுக்குக் கொடுப்பதாக மாற்றிவிட்டார்கள். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஹைதராபாதில் உள்ள ‘தேசிய ஊரக வளர்ச்சி ஆய்வு மையம்’ ஒரு நல்கை கொடுத்தது. தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் குத்தகைதாரர்களின் வாழ்க்கை நிலை என்னவாகியிருக்கிறது என்பதுதான் எனது ஆய்வு. அதற்காகப் போய் பார்க்கும்போது எப்படி எல்லாம் தலைகீழாக மாறிப்போயின என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஆங்கிலத்தில் பெரிய அறிக்கை ஒன்று எழுதினேன். அதன் தமிழாக்கம்தான் ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற புத்தகம். யாரிடமிருந்து யாருக்கு நிலம் போனது, எந்தக் காலகட்டத்தில் போனது, சட்டங்கள் என்ன செய்தன, சட்டங்களைத் தாண்டி சமூகத்தில் என்ன நிகழ்ந்தது என்பதையெல்லாம் இதில் சொல்லியிருக்கிறேன்.

உங்களின் அடுத்தடுத்த எழுத்துத் திட்டங்கள் என்னென்ன?
என்னுடைய ஆய்வுப் பணிகளைக் குறைத்துக்கொண்டு எழுத்துப் பணியில் அதிகம் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்திருக்கிறது. அடுத்த புத்தகக்காட்சிக்குள் தமிழகப் பொருளாதார நிலை பற்றி இரண்டு நல்ல புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்ற யோசனை இருக்கிறது.

Tuesday, March 5, 2019

ஒரு ராணுவ வீரரின் குடும்பத்தினர்கூட போர் வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்!- ராணுவ வீரரின் மகனும் போர்ச் செய்தியாளருமான ஜி.கிருஷ்ணன் பேட்டி






ஆசை

(’இந்து தமிழ் திசை’ நாளின் நடுப்பக்கத்தில் நான் எடுத்த பேட்டி இன்று, 05-031-2019, வெளியாகியிருக்கிறது)

உரத்த குரலில்போர் வேண்டும், போர் வேண்டும்என்று ஆளுக்காள் கூவிக்கொண்டிருக்கும் காலத்தில் ஜி.கிருஷ்ணனின் குரல் நிதானமானது. அமைதியை விரும்புவது. ராணுவ வீரரின் குடும்பத்தில் பிறந்து போரைப் பற்றிய கசப்பான நினைவுகளைச் சுமந்து, பின்னாளில் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளராகப் பணியாற்றியவர். ‘தி இந்து’, ‘அசோசியேட்டட் பிரஸ்என்று அவருடைய இதழியல் பணி இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளாவிய பரப்பைக் கொண்டது. தற்போது பாலக்காட்டில் தன் மனைவியுடன் வசித்துவரும் ஜி.கிருஷ்ணனுடன் நடத்திய உரையாடலிலிருந்து

உங்கள் பின்னணியைப் பற்றிச் சொல்லுங்களேன்

வேலையென்று முதலில் சேர்ந்ததுதி இந்துஆங்கில நாளிதழில்தான். 1977-ல் ஆரம்பித்து 1988 வரை அங்கு பணிபுரிந்தேன். அதற்குப் பிறகு பல்வேறு நாடுகளில் பணிபுரிந்தேன். உலகின் பெரிய செய்தி நிறுவனமானஅசோசியேட்டட் பிரஸ்சார்பாக தெற்காசியப் பகுதியை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். தற்போது, செய்தித்தாள்களுக்கான சுயேச்சையான பயிற்சி ஆலோசகராக இருக்கிறேன். செய்தியாளர்கள், துணை ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்துக்கொண்டிருக்கிறேன். இதையெல்லாம் தாண்டி என் குடும்பம் ஒரு ராணுவக் குடும்பம். அப்பா ராணுவ வீரராக இருந்தவர். இரண்டாம் உலகப் போர், சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய-சீனப் போர், இந்திய-பாகிஸ்தான் போர் என்று பல போர்களையும் கண்டவர். அப்பா போர்களில் பங்கேற்றவராகவும் பிள்ளை அதன் பார்வையாளராகவும் இருந்ததுதான் காலத்தின் விசித்திரம்!

ராணுவம், போர்ச் சூழல் இவற்றோடு உங்களுக்கு நேரடி அறிமுகம் ஏற்பட்டது எப்போது?

1979-ல்வார் கரெஸ்பாண்டென்ஸ் கோர்ஸ்என்று இந்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பாக இரு மாதப் பயிற்சி வழங்கினார்கள். அப்போதுதி இந்துசார்பில் அனுப்பப்பட்டிருந்தேன். ‘மிலிட்டரி காலேஜ் ஆஃப் காம்பேட்என்ற ராணுவப் பயிற்சிக் கல்லூரியில்தான் எங்களுக்குப் பயிற்சி நடந்தது. அங்கே லெஃப்டினென்ட் ஜெனரலாக சுந்தர்ஜி இருந்தார். அவர் பின்னாளில் தரைப்படைத் தலைமைத் தளபதியாக ஆனார். அவர்தான் எங்களுக்குப் பயிற்சியளித்தார். அது தரைப்படை பயிற்சிக்கான களம். அதேபோல் கப்பற்படை, விமானப்படை என்று பல இடங்களுக்கும் சென்றோம். ராணுவத்தின் பல்வேறு கூறுகளையும் அப்போதுதான் தெரிந்துகொண்டோம். பயிற்சியின் முக்கியமான அம்சம் என்னவென்றால், போரைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் ஒரு செய்தியாளர் மக்களிடம் எப்படி முன்வைப்பது என்பதுதான்.

எங்களுக்கென செயற்கையாக ஒரு போர்க்களத்தையே உருவாக்கி, உருவகித்து அதைப் பற்றி உடனடியாகச் செய்திகளை எழுதச் சொல்லி எங்களுக்குப் பயிற்சியளித்தார்கள். அது ஒரு டிரில். ‘இது பாகிஸ்தான், இது நம் இந்திய நிலைகள்என்று இடங்களைப் பிரித்து, ஒரு போர்ச் சூழலையே அங்கு செயற்கையாக உருவாக்கினார்கள். பெரும் ஓசையை ஏற்படுத்தும் போலி குண்டு ஒன்றையும் பக்கத்தில் போட்டார்கள். ‘உங்கள் தட்டச்சு இயந்திரம் எல்லாம் உடைந்துபோய்விட்டன; பத்து நிமிடங்களுக்குள் இந்தப் போரைப் பற்றிய செய்தியை எழுதிக்காட்டுங்கள்என்று சொல்வார்கள். நாங்கள் கொடுக்கும் செய்திகளை வாங்கிப் படித்துக்காட்டி, ‘இன்னின்ன விஷயங்களை இப்படியெல்லாம் ஏன் எழுதக் கூடாது? இன்னின்ன விஷயங்களை எப்படியெல்லாம் எழுத வேண்டும்என்றெல்லாம் சொல்லிக்கொடுப்பார்கள். ஒரு சாதாரணத் தகவல்கூட எப்படி எதிரிகளுக்கு முக்கியமான சமிக்ஞை ஆகிவிடும் என்பதை அற்புதமாக விளக்குவார்கள்.

ஓர் உதாரணம் சொல்லுங்களேன்

 மக்களோடு மக்களாகத்தான் உளவாளிகள் கலந்திருப்பார்களாம். ராணுவச் சமையல்காரரிடம், “என்னய்யா, இன்னைக்கு என்ன சமைச்சே? முட்டை பிரியாணியா?” என்று கேட்பார்களாம். “ஆமாம். மூணு மணி நேரம் ஆச்சுஎன்றாலே, அது முன்னூறு பேருக்கானது என்று புரிந்துகொண்டுவிடுவார்களாம். ராணுவக் குடியிருப்பில் திடீரென தினசரிகளின் எண்ணிக்கை குறைகிறது என்றால், அந்த நாடு எங்கோ ஆட்களைக் குவிக்கிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று சந்தேகப்படுவார்களாம். ஒருவர் வெளியூர் போகிறார் என்றால், முதலில் அவர் நிறுத்தச் சொல்வது தினசரி செய்தித்தாளைத்தானே? இப்படி நிறைய விஷயங்கள். அப்படி இருக்கையில், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு விவகாரங்களை எழுதுகையில் விலாவாரியாக எழுதுவது, யூனிட்டுகளின் பெயர்கள் போன்ற நுட்மான தகவல்களையெல்லாம் குறிப்பிடுவது நம் நாட்டுக்கு நாமே குழிபறிப்பதாகிவிடும் என்று சொல்வார்கள். மிக முக்கியமாக அவர்கள் சொல்வது, போர் என்பது மிகத் தீவிரமான விஷயம். அதை விளையாட்டுபோல உற்சாக, வெறித்தன மனநிலையில் அணுகக் கூடாது என்பதுதான்.

இந்தப் பயிற்சியெல்லாம் உங்களுக்குப் பிற்பாடு உதவியதா?

கண்டிப்பாக. மிகப் பெரிய உதவியாக இருந்தது. எதையெல்லாம் எழுத வேண்டும்; எதையெல்லாம் எழுதக் கூடாது என்பதை நம்முடைய ராணுவத்திடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். உதாரணத்துக்கு, கார்கில் போரின்போது டைகர் ஹில்ஸில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தப்போகிறது என்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். ஆனால், நாளைக்கு இப்படி நடக்கப்போகிறது என்று எழுத முடியுமா? மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சரெல்லாம் கொண்டுவந்தபோது, அதையெல்லாம் நாங்கள் புகைப்படம்கூட எடுத்தோம். ஆனால், பிரசுரிக்கவில்லை. இதேபோல ராணுவத்தினர் எனக்குக் கற்றுக்கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகளும் முக்கியமானவை என்று நினைக்கிறேன்.

அந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளலாமா?

போர்க்களத்திலிருந்து நீங்கள் எதை உங்கள் வாசகர்களுக்குக் கொடுக்கப்போகிறீர்கள், எதை நீங்கள் மறைக்கப்போகிறீர்கள்? இதுதான் அந்த வழிகாட்டு நெறிமுறைகளின் மையமான விஷயம். ராணுவம் எவ்வளவோ அத்துமீறல்களில் ஈடுபடும்; சில சமயங்களில் மக்களையே அது கொல்லும். வியட்நாம், போஸ்னியா அனுபவங்களை இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம். நீங்கள் எதையெல்லாம் வாசகர்களுக்குக் கொடுக்கப்போறீர்கள்? முக்கியமாக உங்களுடைய முதலாளி யார்? இப்படியான கேள்விகளை எழுப்பி ராணுவத்தினர் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘உங்களுக்கு முதலாளி உங்கள் வாசகர்கள்தானே தவிர ராணுவமோ அரசோ அல்ல. உங்கள் தர்மம் ராணுவத்துக்குக் கட்டுப்பட்டதல்ல, உங்கள் வாசகர்களுக்குக் கட்டுப்பட்டது. நீங்கள் உண்மையைத்தான் வாசகர்களுக்குத் தர வேண்டும்.’

ராணுவத்திலேயே இப்படிக் கூறினார்களா, ஆச்சரியமாக இருக்கிறதே?

நம்புங்கள். ‘ஒவ்வொரு தரப்புக்கும் ஒவ்வொரு தர்மம் இருக்கிறது. போர் என்று வந்துவிட்டால் நாங்கள் எதையாவது முயன்று பார்க்கவே நினைப்போம். நாங்கள் செய்வது வெளியில் தெரியக் கூடாது என்றும் நினைப்போம். அது எங்களுடைய பிரச்சினை. ஆனால், பத்திரிகையாளர்களான நீங்கள் உண்மைக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும். ஏனென்றால், உண்மை என்ன என்பதுதான் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும். அது உங்களுக்கான தர்மம்என்று சொன்னார்கள். ‘பத்திரிகையாளர் என்பவர் பங்கேற்பாளர் அல்ல, கூர்ந்துநோக்குபவர் மட்டுமேஎன்று சொன்ன அவர்கள் அதற்கு ஓர் உதாரணமாக மார்ட்டின் லூதர் கிங் காலத்தில் நடந்த விஷயம் ஒன்றையும் சொன்னார்கள்.

ஒரு துப்பாக்கிச்சூட்டின்போது புகைப்படக்காரர் தனது கேமராவைக் கீழே போட்டுவிட்டு ஒரு பெண்ணைக் காப்பாற்ற ஓடியிருக்கிறார். இதை மார்ட்டின் லூதர் கிங் எதிர்க்கிறார். ‘பத்திரிகையாளர், புகைப்படக்காரரெல்லாம் பங்கேற்பாளர்கள் அல்ல, உற்றுநோக்குபவர்களே. அந்தப் பெண்ணைக் காப்பாற்ற ஓடியதால் ஏற்பட்டிருக்கும் நல்விளைவைவிட அந்தத் துப்பாக்கிச்சூட்டைப் படம் எடுத்து உலகுக்கு முன் காட்டியிருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய நல்விளைவு இன்னும் பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும். இந்த விஷயம் பல லட்சம் மக்களைப் போய்ச்சேர்ந்து அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்; உன் தர்மம் பத்திரிகைத் தொழில்என்று கிங் கூறியதை ராணுவத்தினர் மேற்கோள் காட்டினார்கள். அதேபோல, போர்ச் சூழலில் ராணுவமும் அரசும் சொல்வதை நம்புங்கள்; ஆனால் சரிபாருங்கள்என்றும் சொன்னார்கள். கிடைத்த தகவலை ஒன்றுக்குப் பத்து முறை சரிபார்க்க வேண்டும்.

இது போருக்கு மட்டும் அல்ல; இதழியலில் அடிப்படை அறம் என்று சொன்னாலும்கூட போர்ச் சூழலில் கூடுதல் முக்கியத்துவம் இதற்கு அளிக்க வேண்டும். ஏனென்றால், எந்த ஒரு போரிலும் முக்கியமான ஓர் அம்சம் இரு தரப்பும் நடத்தும் பிரச்சாரப் போர். பிரச்சாரம் என்றாலே அதிலும் பொய்யும் ஒரு பகுதிதானே! அப்படி இருக்கையில், எல்லாச் செய்திகளையும் சந்தேகமின்றி நம்புவதும் அதைச் செய்தியாகப் பரப்புவதும் பல கோடிப் பேரின் வாழ்வோடு சம்பந்தப்பட்டதாகிவிடும் என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். எல்லாவற்றிலும் சிகரம், ‘நியாயமாக எழுதுங்கள்; பாரபட்சமில்லாமல் எழுதுங்கள்; நிதானமாக எழுதுங்கள்என்று அவர்கள் சொன்னது. ‘இந்தியா-பாகிஸ்தான்இருவரும் எதிரிகள்; பாகிஸ்தானை அழிக்க வேண்டும், வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும்என்றெல்லாம் எழுதாதீர்கள். இப்படி எழுதும்போது எதிர் நாட்டைச் சேர்ந்த சிலரின் உயிரை மட்டும் அல்ல; உங்கள் சொந்த நாட்டு ராணுவம் உட்பட கோடிக்கணக்கான மக்களின் உயிர்களையும் சேர்த்தே பணயம் வைக்கிறீர்கள். மக்கள் முன் தகவல்களை வையுங்கள்; அவர்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்க விழையாதீர்கள். அவர்களுக்குச் சொந்த மூளை இருக்கிறது. அதை மதியுங்கள்என்றார்கள்.

ராணுவத்திடமிருந்து இப்படிப்பட்ட வழிகாட்டுதல்கள் வருவது என்பது எவ்வளவு முக்கியமான, சந்தோஷமான விஷயம்!

 நிச்சயமாக! ஆனால், இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. உண்மையில், ராணுவத்தினர் நாம் நினைப்பதுபோன்று, நமக்குக் காட்டப்படுவதுபோன்று போர் வெறி பிடித்தவர்கள் இல்லை. ஏனென்றால், போர் என்றால் எவ்வளவு தீவிரமானது என்பது அவர்களுக்குத்தான் முழுமையாகத் தெரியும். நாட்டின் உயிரைப் பாதுகாக்கத்தான் ஒவ்வொரு ராணுவ வீரரும் விரும்புகிறாரே தவிர, தன்னுடைய உயிரைத் தேவையின்றி இழக்க யாருமே விரும்புவதில்லை. இந்த விஷயத்தில் என்னுடைய குடும்ப அனுபவத்தையே நான் உதாரணமாகச் சொல்ல முடியும்.

கொஞ்சம் விளக்க முடியுமா?

சமீபத்திய பதற்றச் சூழலின் பின்னணியில் என் அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கையில், என்னுடைய அப்பாவின் போர் அனுபவங்களைப் பற்றிய பேச்சு வந்தது. அம்மா சொன்னார், “திடீர்னு அழைப்பு வந்து அப்பா போனார். அப்புறம் ஒருநாள் திடீர்னு லெட்டர் வரும். அதோடு பல மாதங்கள் அப்படியே ஓடும். வீட்டில் ஒருவருக்கும் ஒருவேளை உணவு இறங்காது.
 எப்படி இறங்கும்? போர் முனைக்குச் சென்றவர் வீடு திரும்புவார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?” இதை என் அம்மா சொன்னபோது இந்த 95 வயதிலும் அவர் தேம்பித் தேம்பி அழுதார். எனக்குப் பழைய ஞாபகங்கள் வந்தன. 1962 சீனப் போரின்போது எனக்கு 6 வயது. விடுப்பில் வீட்டுக்கு வந்திருந்த என் அப்பா திடீரென்று ஒருநாள், ‘‘போர் தொடங்கப்போகிறது. நான் செல்ல வேண்டும்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். போர் தொடங்கியாகிவிட்டது என்றால் ஊருக்குச் சென்றிருக்கும் ராணுவத்தினருக்குத் தகவலெல்லாம் சொல்ல மாட்டார்கள். தானாகவே விடுப்பெல்லாம் ரத்தாகிவிடும்.

வானொலியில் போர் அறிவிப்பைக் கேட்டுவிட்டு உடனடியாகப் பக்கத்தில் உள்ள ராணுவப் பிரிவில் போய்ப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். அதற்கப்புறம் அவர் எங்கே சென்றார் என்பது எங்களுக்குத் தெரியவே தெரியாது. அவர் உயிரோடு திரும்பிவந்த பிறகுதான் அவர் அசாம் அருகே இருந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவந்தது. அப்பாவும் அவருடைய நண்பர்களும் புறப்பட்டுச் சென்றபோது எல்லாக் குடும்பங்களிலும் பெண்கள் அனைவரும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்கள். என் வீட்டிலும் அம்மாவும், அக்காக்கள் இருவரும் தேம்பித் தேம்பி அழுதார்கள். ஏன் அழுகிறார்கள் என்று எனக்குப் புரியவேயில்லை. 1965 பாகிஸ்தான் போரின்போது எனக்கு 9 வயது. கொஞ்சம் விஷயங்கள் புரிபட ஆரம்பித்திருந்தன. 1971 போரின்போது எனக்கு 15 வயது. நிறைய விஷயங்கள் புரிபட ஆரம்பித்திருந்தன. இரவெல்லாம் தூக்கமே வராது. ‘அப்பா செத்துப்போய்விடப்போகிறார்என்ற உணர்வுதான் சூழ்ந்திருக்கும். எதுவுமே உத்தரவாதம் கிடையாது, பாருங்கள். என் அப்பாவுடன் சென்றவர்களில் ஒருவர் பாதியிலேயே திரும்பிவந்தார், ஊனப்பட்டு. எப்படியிருக்கும் உங்களுக்கு!

கார்கில் போரின்போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்திலும் அதை நேரில் பார்த்தேன். திராஸ் என்ற இடத்தில்தான் அதிகம் சண்டை நடந்துகொண்டிருந்தது. அதற்கு எதிரே டைகர் ஹில்ஸ் இருக்கிறது. ஒரே ஒரு லேண்ட்லைன் தொலைபேசிதான் இருக்கும். எஸ்.டீ.டி. ராணுவ வீரர்களுக்கு வாரத்துக்கு ஒரு நாள் இரண்டு மணி நேரம் ஒதுக்கி, ஊருக்குத் தொலைபேசி மூலம் பேசட்டும் என்று அனுப்புவார்கள். அந்தத் தொலைபேசி மூலம் ஊரிலுள்ள தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்காக மிக நீண்ட வரிசையில் கால் கடுக்க அந்த வீரர்கள் நின்றிருப்பார்கள். இரண்டு நிமிஷம் மூன்று நிமிஷம் மட்டும்தானே பேச முடியும். அதில் ஒரு சர்தார்ஜிநான் திராஸில் இருக்கிறேன். திராஸில் இருக்கிறேன்என்கிறார். எதிர் முனையில் உள்ள அவருடைய குடும்பத்தினரோ  மதராஸா?’ என்று கேட்கிறார்கள். அவருக்குக் கிடைத்த அந்த இரண்டு நிமிடம் முழுவதும்திராஸ்-மதராஸ்உரையாடல்தான். கண்களில் நீர் கசிய அந்த மனிதர் அங்கிருந்து அகன்றார். நெஞ்சை உருக்கிய காட்சி அது.

ஊடகங்கள் தங்கள் வியாபாரத்துக்காக, தொலைக்காட்சி நெறியாளர்கள் தங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்குக்காக உச்ச ஸ்தாயியில்போர் வேண்டும்என்று முழங்கலாம். ஆனால், ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்கூடபோர் வேண்டும்என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அந்த வார்த்தை எவ்வளவு கொடுமைகளைக் கூட்டி வரும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஊடகங்களைப் பற்றிப் பேச்சு செல்வதால் கேட்கிறேன், இன்றைய அணுகுமுறைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மோசம், மஹா மோசம். அந்தக் காலத்திலும் தேசப் பற்று இருந்தது. ஆனால், யாரும் இப்போது செய்வதுபோல அடித்தொண்டையில் கத்தித் தங்கள் தேசப் பற்றை உரக்கக் கூவிக்கொண்டிருக்கவில்லை. எனக்கு 63 வயது ஆகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பான பங்கேற்பாளராக இல்லாமல் வெறும் பார்வையாளராக மட்டும் இருக்கிறேன். ரொம்பவும் பயமாக இருக்கிறது. எங்கள் உறவினர்கள் இருக்கும் வாட்ஸ்-அப் குழுமத்தில்கூடபாகிஸ்தானை வெட்டணும், குத்தணும், குண்டுவீசிக் கொல்லணும். போர் தவிர வேறு வழியே இல்லைஎன்பதுபோலெல்லாம் தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள். வேதனையாக இருக்கும். ஊடகங்களுக்கு இதில் முக்கியமான பங்குண்டு. நிலைமை மோசமாவதற்கு அர்னாப் கோஸ்வாமியைப் போன்றவர்கள்தான் முக்கியக் காரணம். ‘எதிரி நாட்டின் ரத்தமா, நம் தேசத்தின் மண்ணா?’ என்பதுபோலெல்லாம் கத்துகிறார்கள். இப்படி வெறிபிடித்துக் கூச்சலிடுவதால் பீதியைக் கிளப்பிவிடுகிறார்கள்.

பீதி அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு டி.ஆர்.பி. எகிறும். அந்தக் காலத்தில் நல்லவேளை அர்னாப் கோஸ்வாமி இல்லை. அதிகபட்சமாகசீனாக்காரனே வெளியே போடா!” என்று சொல்வார்களே தவிரபோர் வேண்டும்என்றெல்லாம் இப்படி பேச மாட்டார்கள். சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரையும் ஒரு ஊடகமாக்கிவிட்டிருப்பதன் விளைவு இது. ஒவ்வொருவரும் ராணுவ - ராஜதந்திர வல்லுநர்கள் ஆகிவிடுகிறார்கள். லைக்குகள், ஷேர்கள் கொடுக்கும் மயக்கம்தான் அவர்களைக் கத்தவைக்கிறது. அதன் உச்சம்தான், ‘நீ என் கருத்தை ஏற்கவில்லையென்றால் நீ ஒரு தேசத்துரோகிஎன்று சொல்லும் நிலை நோக்கி அவர்களைத் தள்ளுகிறது. புல்வாமா-பாலாகோட் தாக்குதல்களைப் பொறுத்தமட்டில் ஊடகங்களிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ‘நம்புங்கள்; ஆனால் சரிபாருங்கள்என்று சொன்னேன் அல்லவா! நம் தரப்பில் 40 சொச்சம் பேர் இறந்தார்கள் என்று செய்தி வெளியிட்டால் அதற்கு ஆதாரம் இருக்கிறது; அவர்களின் உடல்களைக் கொண்டுசென்ற சவப்பெட்டிகளே அதற்குச் சான்று; செய்திகளை வெளியிட்டீர்கள்.

ஆனால், பாகிஸ்தான் தரப்பில் 300 சொச்சம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்திக்கு என்ன சான்று தரப்பட்டிருக்கிறது? இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது என்று எந்தத் தொலைக்காட்சி நிறுவனமாவது கூறினார்களா? அப்படியென்றால், இந்தச் செய்தியை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? ‘இதை உறுதிசெய்துகொள்ள எங்களிடம் வழி இல்லைஎன்ற வரியோடு தகவலை எழுத வேண்டும். தரமான சர்வதேசச் செய்தி நிறுவனங்கள் இப்படித்தான் செய்யும். அப்புறம் அடுத்த தரப்புச் சூழலையும் கவனிக்க வேண்டும். பாகிஸ்தானில்ராய்ட்டர்ஸ்செய்தி நிறுவனம் என்ன செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதோடு நம்முடைய செய்தியைப் பொருத்திப்பார்த்து வாசகருக்குக் கொடுக்க வேண்டும்.

பாகிஸ்தானில் குண்டுவீசப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில் உள்ள கிராமத்தினருடன்ராய்ட்டர்ஸ்பேசியிருக்கிறார்கள். “ஆமாம். குண்டு வீசினார்கள்என்று ராய்ட்டர்ஸிடம் கிராமத்தினர் கூறியிருக்கிறார்கள். மறுபடியும் அங்கு சென்றபோது “35 உடல்களை எடுத்துக்கொண்டு போனார்கள். அந்தப் பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பைப் பலப்படுத்தினார்கள். எங்கள் கைபேசிகளையெல்லாம் பிடுங்கிக்கொண்டார்கள். எல்லோரையும் துரத்தியடித்தார்கள்என்று அந்தக் கிராமத்தினர் கூறியிருக்கிறார்கள். இதையெல்லாம் செய்திக்கட்டுரைகளாக ராய்ட்டர்ஸ் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். ஆக, இப்போது நாம் இந்தச் சம்பவம் தொடர்பாக சுயேச்சையான விசாரணையையோ ஆய்வையோ செய்வதற்குத் திடமான ஒரு தொடக்கப்புள்ளி கிடைத்திருக்கிறது. இங்கிருந்துதான் நாம் தொடங்க வேண்டும். ஆனால், இந்திய ஊடகங்கள் மோசமான இடம் நோக்கி நகர்ந்திருக்கின்றன. ‘பிரச்சாரப் போர்என்பார்கள். அதில் எடுத்த எடுப்பில் நம் ஊடகங்களில் பெரும்பாலானவை பலியாகிவிட்டன.

பிரச்சாரப் போரை எப்படித்தான் எதிர்கொள்வது? அதற்கான வழிமுறைதான் என்ன?

அரசுத் தணிக்கை என்று வந்தால் ஆபத்தாகிவிடும். புரளிகளை அம்பலப்படுத்தும்ஆல்ட்நியூஸ்போன்ற சுயேச்சையான அமைப்புகள் நிறைய வேண்டும். செய்தித்தாள்களும் புரளிகளைக் களையும் விழிப்புணர்வு பகுதிகளைப் பிரசுரிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடம் இயல்பான ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஒரு அராஜகம் வரும்போது மக்களிடமிருந்து விழிப்புணர்வு தோன்றினால் மட்டுமே அதை எதிர்த்துப் போரிட முடியும்.

- நன்றி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்