Tuesday, June 18, 2013

க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்

இன்று எனது நண்பரும் வழிகாட்டியும் க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்த நாள்.

அகராதி, மொழி, இலக்கியம் போன்றவற்றைக் குறித்த பல விஷயங்களை அவரிடம்தான் கற்றேன். எல்லாவற்றையும்விட என் வாழ்வில் நேரடியாகப் பெரும் தாக்கத்தைச் செலுத்தியதும் அவர்தான். நாற்பது வருடங்கள் பதிப்புத் துறையில் இருந்து பலருக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறார். (ஆனால் இதைப் பெரும்பாலானோர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள்). தமிழ்ச் சமூகத்துக்கு இவர் வழங்கிய கொடைதான் 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'. இந்த அகராதிக்காக அவர் இழந்ததும் இழந்துகொண்டிருப்பதும் நிறைய.

மொழியை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தவர்களிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காத சூழலில் பெரும் போராட்டத்துடன் இந்த அகராதியைக் கொண்டுவந்தார். சிங்கப்பூர் அரசாங்கம் இந்த அகராதியின் சிறப்பை உணர்ந்துகொண்டு தங்கள் மாணவர்களுக்காக இதைப் பரிந்துரைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த அகராதியின் முதல் பதிப்புக்கு நூலக ஆணைகூட கிடைக்கவில்லை என்பதுதான் சிறப்பு. கருணாநிதிக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதியும் கடைசிவரை இந்த அகராதிக்குக் கிடைத்தது பாராமுகம்தான். இதில் வெட்கக்கேடு என்னவென்றால் 2009 பாராளுமன்றத் தேர்தலின்போதும் 2011 சட்டமன்றத் தேர்தலின்போதும் தி.மு.க. அரசு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தமிழுக்குச் செய்த சேவைகளில் ஒன்றாக இந்த அகராதியையும் தொலைக்காட்சி விளம்பரங்களில் குறிப்பிட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டுப் பலரும் க்ரியா அகராதி தி.மு.க. அரசின் உதவியால்தான் வெளியானதா  என்று எங்களிடம் கேட்டார்கள். பற்றிக்கொண்டு வந்தது.

அகராதி மட்டுமல்ல ராமகிருஷ்ணனின் பங்களிப்பு. ந. முத்துசாமியுடன் சேர்ந்து 'கூத்துப்பட்டறை' ஆரம்பித்தது, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது, மொழிக்காக இயங்கும் 'மொழி' அறக்கட்டளையை உருவாக்கியது போன்ற அவரது பங்களிப்புகளும் மிக முக்கியமானவை.

எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக நான் கருதுவது ராமகிருஷ்ணன் மிகத் தீவிரமாகப் பின்பற்றிய அறம்தான். எல்லாச் செயல்களிலும் அறம் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது வாழ்க்கை முறை.

அவரது பங்களிப்புகள் இதுவரை புறக்கணிப்பும் இருட்டடிப்பும் செய்யப்பட்டே வந்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் தமிழில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் என்று நான் இரண்டு விஷயங்களை உறுதியாகக் கூறுவேன்; ஒன்று வையாபுரிப்பிள்ளை ஆசிரியராக இருந்து தொகுத்த தமிழ் லெக்சிகன், இன்னொன்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. இவை இரண்டுமே புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியை எப்படி ஆங்கிலேயர்கள் கொண்டாடுகிறார்களோ அப்படி நாம் இந்த இரண்டு அகராதிகளையும் கொண்டாடியிருக்கவேண்டும். ஆனால் நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் கொண்டாடுவதற்கு நமக்கு சினிமா நடிகர்கள் ஏராளமானோர் இருக்கும்போது நாம் எப்படி மேற்குறிப்பிட்ட விஷயங்களைக் கொண்டாடுவோம்?

க்ரியா அகராதியைக் குறித்தும் க்ரியா ராமகிருஷ்ணனைக் குறித்தும் நான் விரைவில் விரிவாக எழுதுவேன். இன்று ராமகிருஷ்ணனுக்கு பிறந்தநாள் என்பதால் சுருக்கமாக இந்தப் பதிவு.

ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்!