Wednesday, September 27, 2023

கடவுளர்களுக்கும் அனுமதிக்கப்படாத உண்டியல்



எனக்குக் கடவுள் நம்பிக்கை
இல்லை
ஆனால் கடவுள்களை
எனக்குப் பிடிக்கும்
அவர்களெல்லாம்
மனிதர்கள் விதவிதமாகச் செய்த
உண்டியல்கள்
கிராமத்து மரத்தடிகளில்
சின்ன உண்டியல்களில் ஆரம்பித்து
பெரியகோயில்களில்
கர்ப்பகிரகத்தின் உள்ளே இருக்கும்
பெரிய உண்டியல்கள் வரை
ஏராளமான உண்டியல்கள்
அந்த உண்டியல்களில்
புவியின் அத்தனை நம்பிக்கைகளும்
வேண்டுதல்களும்
பாவங்களும்
சாபங்களும்
ஆசைகளும்
தேர்வு எண்களும்
கொட்டப்படுகின்றன
அந்த நம்பிக்கைகள்
வேண்டுதல்கள்
பாவங்கள்
சாபங்கள்
ஆசைகள்
மிக அழகியவை
அவற்றுக்கான ஒரே உண்டியல்
என்பதால்
கடவுளர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்
சிறுவர்களாய் இருக்கும்போது
சிறிய மாரியம்மன் கோயிலில்
மாரியம்மன் கண்முன்னே
வேப்பங்குச்சியில் தாரை ஒட்டி
உண்டியலில் விட்டுக்
காசு திருடினோம்
நானும் கூட்டாளிகளும்
பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்
மாரியம்மன்
எப்போதோதான் அங்கே ஆட்கள் வருவார்கள்
எப்போதோதான் உண்டியலில் காசு விழும்
கடவுளர்களைப் படைத்துவிட்டு
அவர்களுக்குள் எல்லாவற்றையும் கொட்டும்வரை
பிரச்சினை இல்லை
அவர்களுக்குள் குச்சி விட்டு
நோண்டிக்கொண்டிருப்பதுதான் விபரீதம்
அப்படி நோண்டவும்
குழந்தைகளுக்கு மட்டுமே
அனுமதிக்கப்பட்டிருக்கிறது
குழந்தைகள் தங்கள்
பொம்மை உண்டியலை
எத்தனை முறை வேண்டுமானாலும்
தூக்கிப்போட்டு
உடைக்கட்டும்
மற்றவர்கள்
உண்டியலில் போட வேண்டியதைப்
போட்டுவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல்
போய்விட வேண்டியதுதான்
தங்களுக்குள் வந்து விழுவதைக்
கடவுளர்கள் கூட ஏறெடுத்துப் பார்ப்பதில்லை
-ஆசை

Tuesday, September 26, 2023

ஜட்டியின் ஆன்மா




பிள்ளைகள் கலைத்துப்போட்டு
விளையாடியதில்
துவைத்த துணி
அழுக்குத் துணி
எல்லாம்
ஒன்றாய்க் கலந்து
கிடக்கின்றன
இன்று போட்டுக்கொள்ள
ஜட்டி வேண்டும்
எடுத்து முகர்ந்துபார்க்கிறேன்
ஒவ்வொன்றாய்
எது துவைத்தது
எது துவைக்காதது
என்று அடையாளம் காண
இயலவில்லை என்னால்
நாளானால்
அழுக்கும் தன் நாற்றம்
இழக்கிறது
ஜட்டியில்
குடிபுகுந்த பின்
அங்கே ஏற்கெனவே அடைபட்டிருக்கும்
ஜட்டியின் ஆன்மாவுடன்
அழுக்கு பேசியிருக்கும்
வந்தபோது இருந்த
தன் மணத்தையும்
தான் எப்போதோ
இழந்த கதையைச் சொல்லி
ஜட்டியின் ஆன்மா
அழுதிருக்கும்
அதன் பின்
உணர்ந்திருக்கும்
ஜட்டியின் அழுக்கு
எதையும் விடாப்பிடியாக
பிடித்து வைத்திருக்க வேண்டிய
அவசியம் இல்லையென்று
நாள்பட்ட அழுக்குதான்
ஆன்மா ஆகும்
நாள்பட்ட அழுக்குதான்
ஞானமடையும்
ஆனால்
நான் இப்போது
அணிந்திருப்பது
நாள்பட்ட அழுக்கின் ஞானமா
இல்லை
துவைத்து ஆன்மா வெளியேற்றப்பட்ட ஜட்டியா 
- ஆசை

Saturday, September 9, 2023

பிரபஞ்சத்தின் மாபெரும் சர்வாதிகாரி

சார்லி சாப்ளினின் ‘த கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்திலிருந்து



1.
மாபெரும் அடினாய்டு ஹிங்கல்
உம்மை நாங்கள் ஆராதிக்கிறோம்
என்றுமுள்ள சர்வ வல்லமைகொண்ட 
ஒரே சர்வாதிகாரி நீங்கள்
உம் ஆதிக்கத்துக்கு
அகில உலகமும்
அடிபணிவதாக

இவ்வுலகை 
ஒரே குடையின் கீழ் கொண்டுவரும்
உம் அகண்ட தேசக் கனவின்
நிழலில் என்றும் வாழ்ந்திருக்கப்
பேரவா கொண்ட சிறுபூச்சி நாங்கள்

உம் மகிமையின் 
மகுடத்திலிருந்து உதிரும்
மயிலிறகுகள்
என்றும் எமக்கு
சாமரம் வீசட்டும்

உம் வாக்குக் காற்றின் வேகத்தில்
உம் வாய்க்கு முன் 
ஒலிபெருக்கியின்
ஒலிவாங்கித் தண்டுகள்
அஞ்சி வளைந்து
நடுங்குவதுபோல்
எங்கள் உள்ளமும்
நடுங்கி வளைகிறது

உம் ஒரே நாடு 
ஒரே சர்வாதிகாரி
ஒரே இறைவன்
ஒரே மொழி
ஒரே சிந்தனை
ஒரே இனம்
என்ற மாபெரும் கனவு
எங்கள் மனத்திரையில்
படமாக விரியும்போது
வெம்மை தாளாமல்
தீப்பிடிக்கிறது

அந்தத் தீச்சூடு தாளாமல்
எங்கள் ரோமங்கள் 
குத்திட்டுக் கூர்ஈட்டியாய் நிற்கின்றன
வாய்களோ 
உன்னதக் கனவுக்கு
உரத்த கோஷம் 
பொறிபறக்கக் கக்குகின்றன
கைகளோ காட்டுத்தீச் சுவாலைகளாய்
மேலெழுந்து ஆர்ப்பரிக்கின்றன

என்றுமுள்ள சர்வ வல்லமைகொண்ட 
ஒரே சர்வாதிகாரி 
அடினாய்டு ஹிங்கல்
உம்மை நாம் ஆராதிக்கிறோம்

2.
நிற்க
உமக்கான ஆராதனையை அடுத்து
உம்மேலுள்ள விசனமொன்றை
உம்முன் வைப்பதற்கு 
மன்னிக்க வேண்டும் தேவரீர்

சென்றமுறை
உம்மைச் சந்திக்க வந்தார்
உம்மைப் போன்ற கனவுகொண்ட
இன்னொரு சர்வாதிகாரி
நல்ல பெயர் கொண்ட
நப்போலினி

அவர் திமிர் அடக்க
உம் உயரம் காட்ட
உமக்கு உயரமாகவும்
அவருக்குத் தரையொட்டியும்
இருக்கை சமைத்தீர் நன்று அய்யா

ஆனால்
இருக்கை உயரம் போதாமல்
அவர் உம் மேசைமேல்
ஏறியமரத்
திடுக்கிட்டு நீங்கள்
சமைந்ததை
உம் பக்தர்கள் நாம்
எப்படி ஏற்பது

முக்காலத்துக்கும் வாய்க்கால் வெட்டி
அதில் உம் மதுரவாய்ப் பாசனம்
செலுத்துபவரே
இதை முன்னறிய மறந்தீரே

3.
அய்யா
அடுத்த முறை
உலகின் சர்வாதிகாரிகள்
உமை நோக்கி வரும்போது
ஒரே ஒரு நாற்காலி சமையும்
அதில் நீர் மட்டுமே அமையும்

முன்னே மேசையின்றித்
தரைவிரிப்பில்
அவரெல்லாம் 
அமரச் செய்யும்

எம் தேசம்
ஒரே தேசம்
அதில் ஒரே ஒரு நாற்காலிதான்
என்று சொல்லும்

எம் நாட்டில்
விருந்தினர் உபசரிப்பு முறையிதுவே
என்று அவரெல்லாம் ஆற்றுப்படுத்தும்

உம்மைப் பார்த்துவிட்டுச் செல்லும்போது
அவரின் ‘சர்வ’த்தையெல்லாம்
உருவிவிட்டு
வெறும் அதிகாரிகளாய்
வழியனுப்பும்

4.
பூமிப் பந்தின் மேல்
ஒரே சிம்மாசனம் அமைத்து
அதன் மேல் வீற்றிருந்து
பூமி மேல்
நிதம் மும்மாரி
நீர் பெய்வதைப்
பார்த்துவிட்டுக் கண்மூட வேண்டும்

பின் வரும் தலைமுறைகள்
நீர் பெய்த மும்மாரிதான்
உலகுசூழ் 
உப்பு ஆழிகளாயிற்று
என்று இதிகாசங்கள்
இயற்ற வேண்டும்

அதுதான் ஐயன்மீர்
எம் ஒரே ஆசை

5.
ஆயினும் ஓர் ஆபத்து
உம்மை விடப் பெரிய ஆசனத்தைப் 
போட்டு ஒருவர் 
இப்பிரபஞ்சத்தின் மேல் அமர்ந்திருக்கிறார்

அவரை அவ்விடம்
அகற்றி
அங்கே நீவிர் 
அமர வேண்டும்
அதுவரை அவர் தொழுத
அமரர்க்கெல்லாம் 
நீவிர் சர்வ அதிகாரி 
ஆக வேண்டும்

இப்படியாக
நீவிர் புதிய தேசம்
புதிய உலகம் படைப்பதுபோல்
புதிய பிரபஞ்சமும் படைக்க வேண்டும்

அதன் ஒவ்வொரு
நட்சத்திரத்துக்கும்
பழைய பெயரகற்றி
உம் பெயரையே
வைக்க வேண்டும்

நட்சத்திரம் கண்சிமிட்டும்போதெல்லாம்
அது காட்டித் 
தன் குழந்தைக்குச் சோறூட்டும்
தாயெல்லாம்
‘அதோ பார்
அடினாய்டு ஹிங்கல்
கண்சிமிட்டுகிறார்’
என்று சொன்னால்
மேலும் ஒரு கவளம்
சோறிறங்காதா
தேவரீர்
          - ஆசை, 09-09-23

குறிப்புகள்: 
1. ஹிட்லரைப் பகடி செய்து 1940-ல் சார்லி சாப்ளின் எடுத்த ‘த கிரேட் டிக்டேட்டர்’ (The Great Dictator) திரைப்படத்தின் தாக்கத்தால் எழுதிய கவிதை. அந்தப் படத்தில் ஹிட்லரை நினைவுபடுத்தும் பாத்திரத்துக்கு அடினாய்டு ஹிங்கல் என்றும், முசோலினியை நினைவுபடுத்தும் பாத்திரத்துக்கு பென்ஸினோ நப்போலினி என்றும் சாப்ளின் பெயர் வைத்திருப்பார்.

2. வேறு ஏதும் இல்லை.


Friday, September 8, 2023

தெய்வங்களின் தேர்




1.
நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே
என் வண்டியின் 
முன்சக்கரத்தை 
மோந்துபார்த்து
நிதானமாக
ஒன்றுக்கு அடிக்கிறது ஒரு நாய்

எனக்கு அதன் மேல் கோபம்
வரவில்லை

எனக்கே தெரியாமல்
எத்தனை தெய்வங்கள்
என் மீது மோந்துகூட பார்க்காமல்
ஒன்றுக்கு அடித்துக்கொண்டிருக்கின்றனவோ 

அந்த நாய்கள் மீதான கோபத்தால்
இந்த நாயின் மீதா
கல்லெறிவது

2.
என்றாவது ஒரு நாள்
தெய்வங்களின் தேர்
என் மேல் ஏறிச் செல்ல
வரும்

அதன் சக்கரம்
என் மேல் ஏறும்போது
உயிர்போகும் வலியிலும்
மந்தகாசத்துடன்
அதன் மேல் நிச்சயம்
நான் ஒன்றுக்கு அடிப்பேன்

என் வாழ்நாளில்
நான் சேர்த்து வைத்த சிறுநீரெல்லாம்
எவ்வளவு ஆனந்தத்துடன்
அந்தச் சக்கரத்தின் மீது
பீறிட்டு நனைக்கிறது
என்பதை விழி பிதுங்கிக் காண்பதுதான்
என் கடைசிக் காட்சியாக
இருக்க வேண்டும்

தேரில் அடிபட்டுச் செத்தாலும்
தெருநாய்க்குத் திமிர் எவ்வளவு என்று
தெரிந்துகொள்ளட்டும்
இறங்கிப் பார்க்கும்
தெய்வங்கள்

3.
என் கார் முன்சக்கரத்தின் அடியில்
இழுத்துக்கொண்டு கிடக்கும் நாயை
இறங்கிவந்து பார்த்தேன்

நீரும் உயிரும் 
பிரிந்துகொண்டிருந்தன

நீர் 
சக்கரத்தை நனைத்துக்கொண்டிருந்தது

உயிர் 
எதை நனைத்துக்கொண்டிருக்கும்
என்று தெரியவில்லை

அப்போது தீனமான குரலில்
பேச ஆரம்பித்தது
அந்த நாய்
‘ஒரு தத்துவம் சொல்லட்டுமா சார்
வாழ்க்கை என்பது சிறுகச் சிறுக
நாம் சேர்க்கும் சிறுநீர்
மரணம் என்பது
அதை முழுமுற்றாக 
ஒரு சொட்டு விடாமல் 
அடிப்பதற்கான
தருணம்’

நாயின் மேல் ஏற்றிவிட்டோமே
என்ற குற்றவுணர்வு இருந்தது

ஏற்றியது தத்துவவாதி நாய் மீதுதான்
என்பது தெரிந்ததும்
குற்றவுணர்வு போய்விட்டது

4.
தெருநாயோ
தெருத்தெய்வமோ
அவற்றின் மேல் எப்போதும் 
எனக்குப் பொறாமை உண்டு

போர்ஷ்
லம்போர்கினி
பிஎம்டபிள்யு
ஆடி
பென்ஸ்
என்று 
எந்த கார் சக்கரத்திலும்
அவற்றால்
ஒன்றுக்கு அடிக்க முடியும்

என்னால் 
என்னுடைய கார் சக்கரத்தில் கூட 
ஒன்றுக்கு அடிக்க முடியாது

அப்படி 
ஒருமுறை கூட 
எனக்குத் தோன்றாதது குறித்து
வியப்பு கொள்கிறேன்

உன் கார் மேல்
நீ ஒன்றுக்கு அடிக்காமல்
வேறு எந்த நாய் அடிப்பது
என்று என்னையே
காறியுமிழ்ந்துகொள்கிறேன்

ஆனாலும்
என் கார் சக்கரத்தின் மேல் அடிக்க 
ஏதோ ஒன்று
என்னைத் தடுக்கிறது

அப்படி ஒரு எண்ணம் வர
தெருநாயாய் ஆக
பரிணாம வளர்ச்சியின்
பரிவார தெய்வங்களை
வேண்டிக்கொள்கிறேன்

சக்கரம் கண்டால்
தானாய்க் கால்தூக்கும் காலம்
கனியட்டும்

     - ஆசை 

Thursday, September 7, 2023

இருவேறு உலகத்து ஒரே மலர்





மலர்களுக்குக் கண்கள் உண்டு
அவை நம் கண்கள் இல்லை

மலர்களுக்குக் கண்ணீர் உண்டு
அவை நம் கண்ணீர் இல்லை

மலர்களுக்கு மனம் உண்டு
அது நம் மனம் இல்லை

மலர்களுக்கு வலி உண்டு
அது நம் வலி இல்லை

மலர்கள்
நமக்காக மலர்பவை இல்லை
ஆனால் நமக்காக
வைக்கப்படுபவை

அப்படி நமக்கு வைக்கப்படும்போது
இனி இந்த உலகத்தோடு
நாம் பேசுவதற்கான
நம் ஒரே வாயாக
ஆகிவிடுபவை

அப்படி நமக்கு வைக்கப்படும்போது
எல்லோரும் நம்மிடம் பேசுவதை
நாம் கேட்பதற்கான
ஒரே காதாகவும்
ஆகிவிடுபவை

நாம் இருக்கப் போகும் வெறுமைக்கும்
எங்கிருந்து அங்கு சென்றோமோ
அந்த வெறுமைக்கும் இடையே
அதன்பின்
ஒரே ஒரு மலர் மட்டுமே
இருக்கும்

இருவேறு உலகத்தின்
இயற்கைக்கும்
மணம் பரப்பியபடி
      - ஆசை