Saturday, May 18, 2013

தென் இந்திய பறவைகள்: பறவைகளைப் பற்றிய ஒரு முக்கியமான கையேடு

ஆசை 
மும்பையிலுள்ள 'பிஎன்ஹெச்எஸ்'  (Bombay Natural History Society) அமைப்பு நூறாண்டுகளுக்கும் மேல் இயற்கையியல் தொடர்பாக இயங்கிவரும் மிக முக்கியமான அமைப்பு. சலீம் அலி உள்ளிட்ட மிக முக்கியமான இயற்கையியலாளர்கள் பணியாற்றிய அமைப்பு. 'பிஎன்ஹெச்எஸ்'ஐச் சேர்ந்த பல ஆய்வாளர்களும் வல்லுநர்களும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் போன்றவற்றைப் பற்றி ஆராய்வதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிடுபவர்கள். தங்கள் அனுபவத்தின் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் அவர்கள் பல முக்கியமான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் எல்லாருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது சலீம் அலியின் 'The Book Of Indian Birds'. அந்த வரிசையில் ரிச்சர்ட் கிரமிட், டிம் இன்ஸ்கிப் ஆகியோரின் உருவாக்கத்தில் வெளியானதும் புகழ் வாய்ந்ததுமான 'South Indian Birds' என்ற புத்தகம் தற்போது பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. 'தமிலிலும்' கோபிநாதன் மகேஷ்வரன் என்பவரால் 'மொலிபெயர்கபட்டு' தற்போது வெளியாகியிருக்கிறது.
        தமிழ் இலக்கியத்துக்கும் பறவைகளுக்கும் உள்ள உறவு மிகப் பழமையானது. நாராய் நாராய் செங்கால் நாராயில் தொடங்கி இன்றைய தேவதேவன் வரையில் தொடரும் உறவு அது. அப்படியிருக்கும்போது தமிழில் பறவைகளைக் குறித்த ஆய்வுக் கட்டுரைகளோ, நூல்களோ மிகவும் குறைவு. தியோடர் பாஸ்கரன் போன்ற வெகு சிலர் மட்டுமே இங்கொன்றும் அங்கொன்றுமாக எழுதிவருகிறார்கள். பாட்ஷா, க. ரத்னம் போன்றவர்கள் சில முக்கியமான புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் பறவைகளைப் பற்றி தமிழ் நன்கு தெரிந்த ஒருவர் எழுதிய புத்தகம் என்னும் அடிப்படையில் க. ரத்தினத்தின் 'தமிழ்நாட்டுப் பறவைகள்' என்ற புத்தகம், (மிகவும் மோசமான படங்களைக் கொண்டிருந்தாலும்) குறிப்பிடத் தக்கது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் தென்னிந்திய பறவைகள் புத்தகம் வெளிவந்திருக்கிறது.
      இந்தக் கையேட்டில் தென்னிந்தியாவைத் தாயகமாகக் கொண்ட பறவைகள், அடிக்கடி வலசை வரும் பறவைகள் என்று 600க்கும் மேற்பட்ட பறவைகளைப் பற்றிய சிறு விளக்கங்களைக் காணலாம். விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் பக்கங்களுக்கு எதிர்ப் பக்கத்தில் பறவைகளின் ஓவியங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. புத்தகத்தின் முற்பகுதியில் தென்னிந்தியப் பறவைகளின் வாழிடங்கள், சரணாலயங்கள், பறவைகள் தொடர்பான அமைப்புகளைப் பற்றிய தகவல்கள், பறவைகள் தொடர்பான நூல்களைப் பற்றிய குறிப்புகள் என்று உபயோகமான பகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பறவைகளின் படங்களுக்காக அவற்றை வரைந்த ஓவியர்கள் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. சமீபக் காலத்தில் பறவைகளைப் பற்றிய புத்தகங்களிலேயே மிகச் சிறப்பான படங்களைக் கொண்ட புத்தகம் இதுதான். அது மட்டுமல்லாமல் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போன்றதொரு புத்தகத் தயாரிப்பு.
      இப்படிச் சிறப்பான பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும் இந்தப் புத்தகத்தின் பலவீனமான அம்சம் தமிழே தெரியாத ஒருவரால் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகும். பின்னட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பத்தியைத் தருகிறேன், தெரிந்துகொள்ளுங்கள் இது எப்படிப்பட்ட மொழிபெயர்ப்பு என்று:
       "இக்கையேட்டில் உள்ள 87 வண்ணத்தகடுகள் பல பறவைகளின் இறக்கை நிரம் மற்றும் எப்படியெல்லாம் பறவையின் வெவ்வேறு உருவநிலையில் மாற்றமடைகிறது என்பதை தெளிவாக விழக்கப்பட்டிருகின்றன. இவைகளை பற்றிய மிக தெளிவான விழக்கங்கள் தகுடுகளின் எதிர்புரம்  விவரிக்கப்பட்டுள்ளன."   
      பக்கத்துக்குப் பக்கம் வரிக்கு வரி இப்படித்தான். நீங்கள் கேட்கலாம். பறவைகள்தானே  முக்கியம்; மொழி முன்னே பின்னே இருந்தால் என்ன? என்று. நல்லது. நீங்கள் சலீம் அலியின் புத்தகத்தையோ பிற அறிஞர்கள் எழுதிய பறவைகளைப் பற்றிய புத்தகத்தையோ எடுத்துப் பாருங்கள். அச்சுப் பிழையைக் கண்டுபிடிப்பதுகூடக் கடினம். (ஆங்கில 'போர்னோ' புத்தகங்களில்கூட அழகான ஆங்கிலம் இருக்கும்).
   இத்தனைக்கும் சலீம் அலி போன்றவர்களின் தாய்மொழி ஆங்கிலம் கிடையாது. தமிழில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. அதிலும் நம் மொழி செம்மொழி வேறு. தொழில்நுட்பம், அறிவியல் போன்ற துறைகளுக்கும் தமிழுக்கும் ஏன் இவ்வளவு தகராறு? யோசித்துப் பார்த்தால் இது தமிழின் பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினை என்று தோன்றுகிறது.
   சித்த மருத்துவத்தில் ஆரம்பித்து மாட்டு வாகடம்வரை எத்தனையோ துறைகளில் எத்தனையோ நூல்கள் இடைக்காலத் தமிழில் வெளிவந்திருக்கின்றன. ஆனால், ஆங்கிலத்தின் தாக்கம் அதிகரித்த பிறகு நமது மரபான அறிவியல் தமிழோடு நமக்கு இருந்த உறவு கத்தரிக்கப்பட்டுவிட்டது. இப்போது தமிழ்நாட்டில் பல துறை வல்லுநர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் ஆங்கிலத்தில் நன்றாக எழுதுவார்கள்; தமிழ் என்று வரும்போதுதான் தமிழ், தமில் ஆகிவிடுகிறது.
       இந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளருக்குத் தோகை என்ற சொல் தெரியவில்லை.
(எ-கா)
'... அழகான கண்ணாடி போன்ற வழவழப்புடன் கூடிய பச்சை நிற நீண்ட வால் சிறகுகள்...'
இதை இப்படி எழுதியிருந்தால் எவ்வளவு சுலபமாக இருந்திருக்கும் பாருங்கள்: 'கண்ணாடி போன்ற வழவழப்பான, நீண்ட இறகுகளைக் கொண்ட‌ பச்சை நிறத் தோகை'.
          கொண்டை என்னும் சொல்லைச் சில இடங்களில் பயன்படுத்துகிறார், சில இடங்களில் மறந்துவிடுகிறார்: (எ-கா) (கொண்டலாத்தி)
'...உச்சியிலுள்ள இறகு கொத்து காற்றாடி போல் கருப்பு முனையுடன் இருக்கும்.'
          இப்படிப் புத்தகம் முழுவதும் சொல்லிக்கொண்டே போகலாம் அவ்வளவு பிழைகள். ஒற்றுப் பிழைகள், எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் என்று முடிவில்லாமல் நீள்கின்றன. 'பிஎன்ஹெச்எஸ்'ஐச் சேர்ந்தவர்களில் நன்கு தமிழ் தெரிந்தவர் ஒருவர்கூடவா இல்லை? அல்லது க. ரத்னம் போன்றவர்களிடம் கொடுத்துத் தமிழைச் சரிசெய்யச் சொல்லியிருக்கலாமே? நல்ல விஷயத்தைச் செய்கிறார்கள். நோக்கத்தின் அடிப்படை தமிழில் கொடுப்பது. இவ்வளவு மோசமாகத் தமிழில் கொடுப்பதன் மூலம் அடிப்படை நோக்கமே சிதைந்துபோய்விடுகிறது அல்லவா? மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் இந்தப் புத்தகம் எப்படி வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது. 'பிஎன்ஹெச்எஸ்'இடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான்: உங்கள் அற்புதமான உழைப்பை வீணாக்காதீர்கள், இந்தப் புத்தகத்தின் அடுத்த பதிப்பைத் தமிழ் தெரிந்த ஒருவரின் மொழிபெயர்ப்பில் கொண்டுவர முயலுங்கள்.
         மொழிபெயர்ப்பை மறந்துவிட்டால் இது ஓர் அற்புதமான கையேடு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பறவைகள் மீது ஆர்வமும் காதலும் கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன்.
(தென் இந்திய பறவைகள்; ரிச்சர்ட் கிரமிட், டிம் இன்ஸ்கிப், கோபிநாதன் மகேஷ்வரன், பி. என். ஹெச். எஸ்).

(தமிழ் இன்று இணைய இதழுக்காக 2010ஆம் ஆண்டு எழுதிய மதிப்புரை)

No comments:

Post a Comment