இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற ஆக்டேவியா பாஸின் ஆறு கவிதைகள்
1. விடியற்பொழுது
குளிர்ந்த விரைவான கரங்கள்
உருவிக்கொள்கின்றன
இருளின் கட்டுத்துணியை
ஒவ்வொன்றாக
நான் கண் திறந்து பார்க்கிறேன்
இப்போதும்
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
இன்னமும் புதிதாக இருக்கும்
ஒரு காயத்தின் மத்தியில்
2. Reversible
வெளியினுள்
நான்
என்னுள்
வெளி
எனக்கு வெளியில்
வெளி
நான்
எங்கும் இல்லை
எனக்கு வெளியில்
வெளியினுள்
வெளி
அதற்கு வெளியில்
எங்கும் இல்லை
நான்
வெளியினுள்
இப்படியே...
3. நட்பு
எதிர்பார்த்திருந்த தருணம் இது
மேசையின் மேலே
முடிவற்று வீழ்கிறது
விளக்கின் விரித்த கூந்தல்
ஜன்னலை ஆழங்காண முடியாததாக
ஆக்குகிறது இரவு
இங்கே யாருமில்லை
பெயரற்ற ஒரு இருப்பு சூழ்கிறது என்னை.
4. தொடுகை
எனது கைகள்
திறக்கின்றன உனது இருப்பின் திரைகளை
கூடுதல் நிர்வாணத்தை உனக்கு அணிவிக்கின்றன
உனது உடலின் உடல்களை வெளிப்படுத்துகின்றன
எனது கைகள் கண்டுபிடிக்கின்றன
இன்னொரு உடலை உனது உடலுக்காக
5. இயக்கம்
நீ செம்பழுப்புநிற குதிரை என்றால்
நான் குருதியின் சாலை
நீ முதற்பனி என்றால்
நான் புலரியில் கணப்பைப் பற்ற வைப்பவன்
நீ இரவின் கோபுரம் என்றால்
நான் உனது மனதில் எரிந்துகொண்டிருக்கும் குச்சி
நீ காலை நேர வெள்ளம் என்றால்
நான் முதற்பறவையின் குரல்
நீ ஆரஞ்சுப் பழங்களின் கூடை என்றால்
நான் சூரியனின் கத்தி
நீ கல் பலிபீடம் என்றால்
நான் நிந்தனையின் கரம்
நீ உறங்கும் நிலம் என்றால்
நான் பசுந்தண்டு
நீ காற்றின் துள்ளல் என்றால்
நான் மூடப்பட்ட நெருப்பு
நீ நீரின் வாய் என்றால்
நான் பாசியின் வாய்
நீ மேகத்தின் காடு என்றால்
நான் அதைத் துண்டாக்கும் கோடரி
நீ நிந்தனையின் நகரம் என்றால்
நான் புனிதப்படுத்தும் மழை
நீ மஞ்சள் மலை என்றால்
நான் லிச்சனின் சிவப்புக் கரங்கள்
நீ உதயமாகும் சூரியன் என்றால்
நான் குருதியின் சாலை
6. இங்கு
இந்த வீதியின் வழியே எனது காலடிகளின் சத்தம்
எதிரொலிக்கிறது
மற்றுமொரு வீதியில்
அங்கு
நான் கேட்கிறேன் எனது காலடிச் சத்தம்
இந்த வீதியைக் கடப்பதை
இதில்
பனி மட்டுமே நிஜம்
- ஆக்டேவியோ பாஸ் மெக்ஸிகோ நாட்டுக் கவிஞர், இலக்கியத்துக்காக 1990-இல் நோபல் பரிசு பெற்றவர், கவிதைகள் ஆங்கிலம் வழியாகத் தமிழில்: ஆசை
No comments:
Post a Comment