Thursday, May 16, 2013

உலகின் முதல் மொழி தமிழா?


உலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி அடையப்போகும் முதல் மனிதன் நான்தான். ஆனால் அறிவியல்பூர்வமாகப் பார்க்கும்போது இதில் சற்றும் உண்மை இல்லை என்பதுதான் நிஜம். உலகின் முதல் மொழி எது என்ற ஆராய்ச்சியை மொழி அறிவியலாளர்கள் கிட்டத்தட்ட விட்டுவிட்டனர். கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது.
கிடைத்திருக்கும் சான்றுகளில் சுமேரிய மொழிக்கான சான்றுகள்தான் மிகவும் பழமையானது (கி. மு. 2900). இதனால் சுமேரிய மொழிதான் பழமையான மொழி என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. மற்ற மொழிகளுக்கு இதைவிட பழமையான சான்றுகள் கிடைக்கவில்லை. உலகில் தொன்மையான ஒருசில மொழிகளில் தமிழும் ஒன்று. ஆனால் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்று. சமஸ்கிருதம்தான் தொன்மையான மொழி, கிறேக்கம்தான் தொன்மையான மொழி என்று யாராவது நம்மிடம் சொன்னால் நமக்கு எவ்வளவு எரிச்சலாக இருக்கும். அதே போல்தான் தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என்றால் மற்ற மொழியைச் சேர்ந்தவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். சமஸ்க்ருதம் நவீன கிரேக்கம், சீனம், பாரசீகம் போன்ற மொழிகளைச் சேர்ந்த பலரும் இதேபோல்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் நான் சந்தித்த ஈரானியர் ஒருவர் உலகின் முதல் மொழி பாரசீகம்தான் என்றும் உலகின் எந்த மொழி அழிந்தாலும் பாரசீகம்தான் அழியாமல் இருக்கக் கூடிய ஒரே மொழி என்றும் என்னிடம் கூறியபோது எனக்குத் தோன்றியது இதுதான் 'கிணற்றுத் தவளைகள் தமிழுக்கு மட்டும்தான் சொந்தமா என்ன?' என் கிணறுதான் உலகிலேயே பெரிய கடல் என்று சொல்லும் தவளைகள் ஒவ்வொரு மொழியிலும் இருக்கவே செய்கிறார்கள். இந்தத் தன்மைக்கு ethnocentirism அதாவது இனமைய வாதம் என்று பெயர். இதுதான் மற்ற மொழிகளையும் இனங்களையும் அடிமைப்படுத்துவதற்கும் அழிக்க நினைப்பதற்கும் அடிப்படை. ஆரிய இனம்தான் உலகின் உன்னத இனம் என்ற ஹிட்லரின் எண்ணம் கோடிக்கணக்கிலான உயிர்களைக் (குறிப்பாக யூதர்களை) காவுவாங்கியது. அப்படிப் பாதிக்கப்பட்ட யூதர்களே இன்று பாலஸ்தீன மக்களை அழிப்பவர்களாக மாறிவிட்டனர். சிங்களவர்கள்தான் உயர்ந்தவர்கள், தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் இலங்கையில் இனப் படுகொலைக்கு வழிவகுத்தது. வரலாறு முழுக்க இதுபோல் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. தமிழ் இனமும் அது போன்ற இனமைய வாதத்திற்கு அடிமையாக வேண்டாம். 

உலகில் உள்ள மொழிகளிலேயே தமிழ்தான் தொன்மையானது, சிறந்தது என்றெல்லாம் சொல்ல நாம் உலகின் அத்தனை மொழிகளையும் கற்றாக வேண்டும். அது சாத்தியமல்ல. அவரவருக்கு அவரவர் மொழி சிறந்தது. தமிழின் சங்க இலக்கியம் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்துக்கொண்டிருப்பவன் என்கிற முறையிலும் உலகின் பிற மொழி இலக்கியங்களை ஆங்கிலம் வாயிலாகப் படித்துக்கொண்டிருப்பவன் என்கிற முறையிலும் என்னால் தமிழ் இலக்கியத்தைக் குறித்து மிகவும் பெருமை கொள்ள முடியும். வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு 'கல் தோன்றி மண் தோன்றக் காலத்து...' என்று சொல்லிக்கொண்டிருக்கும் நண்பர்களில் பலர் பழந்தமிழ் இலக்கியத்தை சிறிதளவுகூட வாசிக்கவில்லை என்பதுதான் உண்மை (பள்ளிப் பருவத்தில் மனப்பாடப் பகுதியில் அர்த்தம் தெரியாமல் மக்கப் பண்ணியதோடு பலருக்கும் பழந்தமிழ் இலக்கியத் தொடர்பு முடிந்துவிட்டது.) பழந்தமிழ் இலக்கியத்தை வாசியுங்கள். நம் சிற்பக் கலைகளின் பெருமையைப் பற்றி நேரே சென்று பார்த்து அறியுங்கள். அப்போது பெருமை கொள்ளுங்கள். அதில் ஓர் அர்த்தம் இருக்கும். கூடவே பிற மொழிகளின் வளத்தையும் சிறப்பையும் உரிமையையும் அங்கீகரியுங்கள். தமிழ் எவ்வளவு பழமையான மொழி என்பதைவிட தமிழ் எவ்வளவு காலம் வாழப் போகிறது என்பதுதான் தமிழுக்கு முக்கியம். அதுதான் எனது பிரதானமான அக்கறை. என்னைத் தமிழ்த் துரோகி என்றழைக்கப் போகும் நண்பர்களுக்கு: தயவுசெய்து அறிவியல் பூர்வமாக இதைப் பாருங்கள்.
 

மனித இனம் எங்கு தோன்றியது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆப்பிரிக்காவில்தான் உலகின் முதல் மனித இனம் தோன்றியது. சந்தேகம் இருப்பவர்கள் தயவுசெய்து மரபணு விஞ்ஞானிகளிடம் கேட்டுத் தெளிந்துகொள்ளவும். தயவுசெய்து உங்கள் முடிவுகளுக்கு இலக்கியத்தை ஆதாரமாகக் காட்டாதீர்கள்.
     (உலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் facebookஇல் அடிக்கடி போடப்படும் வெற்றுக் கூச்சலுக்கு நான் அளித்த எதிர்வினை)  

7 comments:

  1. மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
    இருந்தும் இன்றைய
    "கல் தோன்றா..."வாதிகளும்,
    "ஸம்ஸ்க்ருதம் தேவர்கள் தந்தபாஷை"வாதிகளும்,
    "There is nothing moving on earth that is not Hellenistic in origin"-வாதிகளும் போட்டுக்கொண்டிருக்கும் காட்டுக்கூச்சலிடையே
    நீரும் நானும் அரற்றுவதெல்லாம்
    "அரண்ய-ருதிதம்’-[cry in the wilderness]தானோ

    என்கிற ஒரு ஸினிக்கல் அங்கலாய்ப்பு தோன்றத்தான் செய்கிறது!

    N.பாலசுப்பிரமணியன்

    ReplyDelete
    Replies

    1. ஒத்த கருத்துடையோரைக் கண்டடைவதில் உள்ள மகிழ்ச்சியை உங்கள் கருத்துகளைக் கண்டதும் அடைந்தேன்.

      அன்புடன்

      ஆசை

      Delete
  2. இன்றுவரை இந்த அருமையான மற்றும் உண்மையான இந்த பதிவை தவற விட்டது மன வருத்தத்லுதிலும், ஒரு நிறைவை காண்கிறேன். இந்த பதிவை கிணறு தவளைகள், "அரண்ய-ருதிதம்" என கூறிக்கொண்டேதான் இருக்கும்.
    ஆகையால் இங்கு, அங்கலாய்ப்புக்கும் அப்பாற்ப்பட்டு உள்ளதை உள்ளபடி உரைத்ததை தைரியமாக பாராட்டுவோம். பாராட்டுகிறேன்.
    அன்புடன்
    நாகராஜ் ஜோதி
    கோவை.

    ReplyDelete
  3. ஒரு அழுத்தமான விடபத்தை ஓங்கிச் சொன்னமைக்கு எமது வணக்கம் நண்பரே

    இதேபோல்தான் அனைத்து மனிதனும் என் மதம்தான் உயர்ந்தது என்று சொல்லிக் கொ'ல்'கிறான்.

    நாளை இது நிரூபிக்கப்பட்டாலும் ஒத்துக்கொள்ளமாட்டான் இது மனித இயல்பு இதைப்போல்தான் மொழிகளின் நிலையும் என்பது எமது தாழ்மையான கருத்து - கில்லர்ஜி

    ReplyDelete
  4. நான்கு வருடத்திற்கு முன்பு அறிவியல்ரீதியாக எழுதபட்ட உங்க பதிவை இப்போது தான் நானும் கண்டேன்.
    எனக்கு தெரிந்து, நம்மவர்களை போல் இப்படியான கிணற்றுத் தவளைகளை துருக்கிய இனத்திலும் கண்டிருக்கேன்.

    ReplyDelete
  5. தமிழ் பழமையான மொழி என வாதிடுவதை விட தமிழ் ஒரு உன்னதமான மொழி என பெருமை கொள்ளலாம். அன்று வாழ்ந்த தமிழனா இப்போது வாழ்கிறான். கலை இலக்கியம் வாழ்க்கை முறை ஒழுக்கம் இவற்றில் பின்தங்கி விட்டவன் தமிழன்தான் முதலில் தோன்றியவன் என பீற்றிக்கொள்வதில் என்ன இருக்கிறது

    ReplyDelete
  6. உலகின் மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழி என்று மொழியியல் ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர், இதில் பல மொழிகள் பேசும் ஆய்வாளர்களும் தமிழ் மொழி ௨லகின் மூத்த மொழி ௭ன்று ஆய்வு செய்து பதிவு செய்துள்ளனர், நிலைமை இப்படியி௫க்க நீங்கள் தேவையில்லாத பொய்களை பரப்பி விட வேண்டாம், நீங்கள் ஒரு தமிழுக்கு ௭திரான துரோகி ௭ன்பது உறுதி

    ReplyDelete