Monday, February 22, 2021

மாசியும் ஆசையின் அண்டங்காளியும்

 


கண்டராதித்தன்                                        

     ஏழூர் எல்லையைக் காக்கும் எல்லைக் கோயில் அது, ஒரு பக்கம் ஊர்,மற்றொரு பக்கம் நீர் நிரம்பி வழியும் ஏரி, மற்ற இரண்டு பக்கங்களிலும் அறுவடைக்குத் தயாராகவும், அறுவடை  முடிந்தும் இருக்கும் வயல்கள்  உள்ளே வாசியம்மன். உக்கிர தெய்வம். ஆனால் எல்லையைக் காப்பவள், மனம் பிறழ்ந்தவர்களையும் கதியற்றவர்களைம் திக்கு தெரியாதவர்களையும்  அன்போடு அரவணைத்து இரவும் பகலுமாய்க் காத்து நிற்பவள்,ஏழூர் மக்களும் மனம் விரும்பித் தேடி வரும் அன்னை அவள்.

        கோயில் என்று சொல்ல முடியாத கட்டிடம் அது.  சுண்ணாம்புக் காரை உதிர்ந்தும் எண்ணெய்ப் பிசுக்குடனும் அழுக்குடனும் காணப்படும் வசிப்பிடம்தான் ஆண்டாண்டு காலமாக அன்னைக்கு வாய்த்திருக்கிறது. குனிந்து சென்று சேவிக்கும்படியான நுழைவாயிலின் வழியாக உள்ளே செல்லும்போது சப்த நாடியும் ஒடுங்குவது போலவொரு அமைதி. அன்னை வாசியம்மன் கருத்த பெண்ணின் அகண்ட முதுகைப்போல உள்ள கற்பலகையில் வீற்றிருப்பாள், அங்கிருந்து அன்னையை வணங்கி எங்கள் ஊர் கற்பகம் பாடும் பாடல்கள் பல. என் நினைவில் இருப்பவை இரண்டே இரண்டு. அவற்றுள் ஒன்று இது:

 பல்லது கடித்து மீசை படபடவென்றே துடிக்க

கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி

எல்லினும் கரியமேனி எம்படர் வரினும் என்னை

ஒல்லையில் தாரகாரி ஓம்ஐம் ரீம் வேல் காக்க

எனக்குத் தெரிந்து இந்தப்  பாடல்களை நெக்குருகப் பாடும் கற்பகம் சில சமயம்  அன்னைக்கு எதிரில் நின்று மனம்போன போக்கில் வசைமாரி பொழிந்துவிட்டுத் தரையிலிருந்து மண்ணெடுத்து அப்பிக்கொண்டு செல்வார். புதிதாகப் பார்ப்பவருக்கு அந்தக் கோலம் அச்சுறுத்துவதாக இருக்கும்.

கற்பகம் வீடு,மனைவி, பெற்றோர் என ஏதும், யாரும் அற்றவர். கிடைத்த வேலையைச் செய்து கிடைத்த இடத்தில் உண்டு உறங்குபவர். கற்பகம், வாசியம்மனுடன் தன் வாழ்நாளுக்குமான பிணக்கும் நேசமும் வெறுப்பும் பகையும் ஊடலும் கொண்டிருந்தவர். ஒரு நாள் அங்கிருந்த மணம் வீசும் இலுப்பைத் தோப்பில் இறந்தும் போகிறார். ஊர், வெறியன் இறந்துபோனதாக அவர் வாழ்வை  முடித்துவிடுகிறது.        

       கற்பகம் கற்றவர் அல்ல, உற்றார் உறவுகளற்று மனம் போன போக்கில் வாழ்ந்து மடிந்தவர். அவருக்கிருந்த ஒரே பிடிப்பு காளிசொருபமான அன்னைதான். இங்கு கவிஞர் ஆசைக்கு ‘அண்டங்காளி’ இப்படியான தோற்றத்தில் இருந்திருக்க கூடும் என்றே இத்தொகுப்பை வாசிக்கும்போது தோன்றுகிறது.

     ஒரு நவீன மனதை வைத்துக்கொண்டு இத்தகைய கவிதைகளை எழுத முடியுமா என்பதுதான் எனக்கு முதலில் எழுந்த கேள்வி. சரி எழுதலாம் என்றே வைத்துக்கொள்வோம், ஒன்றிரண்டு கவிதைகள் இதுபோன்று எழுதவும் சாத்தியம்தான். ஆனால்  ஆசை இத்தொகுப்பில் உள்ள மொத்தக் கவிதைகளின் வழியாகவும் உக்கிர மனநிலையுடனும், அடங்க மறுத்தும் அண்டங்காளியுடனான  உறவின் பல்வேறு படிநிலைகளை வெவ்வேறு விதமாகவும் எழுதியிருக்கிறார். இந்த வகையில் இந்தக் கவிதைகள் விசேஷமானவை  என்றே நினைக்கிறேன்.

உதாரணத்துக்கு ’அண்டங்காளி’யின் சில தெறிப்புகள்;

‘எனக்கும் வாய்த்திருக்கிறாளே…’ கவிதையில்

தலைமேல் காலைத் தூக்கி

ஆடும்

தரங்கெட்ட தறுதலையை

பெண்குலத்தின் பேரழுக்கை

தலைமேல் தூக்கிவைத்து

கொண்டாடுகிறாயே

குடும்பத்துக்காகுமாடா

குலம் செழிக்க

வேண்டுமடா

என்றெல்லாம்

என் வீட்டார் சொல்லித்தான்

பார்த்தார்கள்

பக்கம்-38ல் உள்ள கவிதை:

இருமுனை முடிவின்மையின்

நடுவெளி நர்த்தனம் நீ

தொடுஊழி தரையிறக்கும்

தத்தளிப்பு நீ

கடல்புரியும்

தாண்டவத்தின் தெறிப்பும் நீ

எரிஜோதி இடைபறக்கும்

கொடும்பறவை நீ

பக்கம் 37:

நாறத்தலை விரித்து

நாலாத்திசையும்

கண்ணுருட்டி

தான்வேகும்

கொடுங்கனலை

அண்டங்கொதிக்க

அடிப்பற்ற வைத்து

கோரத்தாண்டவம்

கொற்றவை நீ

ஆடித்தெறிக்கும்போது

அஞ்சாமல் நிற்பேனோ

ஆகாசந்திறக்கும்

அன்னை அன்னை அன்னை

என்ன செய்தாய்

என்னை என்னை என்னை

இந்தத் தெறிப்புகள் சில எடுத்துக்காட்டுகள்தான்.

    இத்தொகுப்புகளின் மொத்தக் கவிதைகளையும் வாசிக்கும்போது இவற்றில் இருக்கும்  தாள கதியான நடை இக்கவிதைகளுக்கு அடிநாதமாக நின்றுகொண்டிருக்கிறது என்றே எனக்குப் பட்டது. ஆனாலும் மொத்த கவிதைகளையும் அண்டங்காளி நிரப்பியிருப்பதில் சற்றே மனப்பிசகு இருப்பது போல நினைப்பும் வந்தது.

 ஆசையின் இத்தொகுப்பில் காளியின் வடிவம், அனைத்து விதமான பெண் பாத்திரங்களுக்கும் பொருந்தியிருப்பது சிறப்பு. எனக்கு முதலில் எப்படி இது சாத்தியமாயிற்று என்றுதான் தோன்றியது.இந்த மனநிலையை எட்ட முடிந்திருப்பதே வினோதமானது என்றே கருதினேன். பிறகு அவரது முன்னுரையை வாசிக்கும்போது ஒருவிதமான தெளிவுக்கு வர முடிந்தது.

  கவிதையினால் ஏற்படும் விளைவுகள் என்பது இதுதான். இங்கு காளி எல்லா விதமான சொருபங்களாகவும் கவிஞருக்குத் தென்படுவது அவரது வினோத மனநிலையை தெளிவாக உணர்த்துகிறது. அவள் இந்த விதமான வடிவங்களை ஏறபதற்கானவள் என்றே நானும் கருதுகிறேன், காளியைப் போன்றே அணுக்கமானவளாகவும் காமக்கிழத்தியாகவும் அன்னையாகவும் சகோதரியுமாகவும் தோழியுமாகவும் இருக்க, கதியற்றவனுக்கு வேறு யாருண்டு?.அவளையே பல்வேறு வடிவ நிலைகளுக்கு வரித்துக்கொள்ளவும்,அதை அவ்வாறே எழுதவும் வாய்த்த மனதை கவிஞர் கொண்டிருந்ததும், நான் அறிந்தவரை அதுவொரு ஆட்கொள்ளப்பட்ட மனநிலை. இங்கிருந்து இத்தகைய கவிதைகள் தெளிந்த நீரோடையைப்போல சப்தமெழுப்பியபடிதான் இருக்கும். இது உருவாக்கும் ஓசை ஒரே கதியில்தான் இருக்கும், பல நேரங்களில் சலிப்பாகவும். ஆனால், இத்தகைய இடங்களில் நாம் கண்டிராத பல நூற்றுக்கணக்கான உயிரினங்கள் தன்போக்கில் வாழ்வைக் கொண்டிருக்கும். அதுபோன்ற நிலை ஆசைக்குக் கிட்டியிருக்கிறது. நம்மில் சிலருக்குக் கிட்டியும் அதை உணராமல் இருக்கிறோம் அவ்வளவுதான்.

இன்று மாசி மாதம் இரண்டாம் நாள், மாசி அண்டங்காளி பிறந்த மாதம். இதிலொரு நாளில் தங்களது நேர்த்திக் கடனுக்காகச் சுடுகாட்டிலிருந்து காளி வேடமிட்ட பெண்கள் கபாலத்தையேந்தி அகால இரவில்  ஊர்வலம்  வருகிறார்கள். அதில் நமது அன்னை, காதலி, சகோதரி என அனைவரும் கலந்து ஒன்றுபோல வீதியைக் கடக்கிறார்கள்.

  .

இக்கவிதைகளை எழுதியதன்  வாயிலாக  கவிஞர் ஆசை எந்த இடத்தில் நின்றிருப்பார் அல்லது எதை அடைந்திருப்பார் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். மிகுந்த ஆயாசம் கொள்ளும் ஒரு கரிய நிழலில் அவர் நிற்பது போலத் தோன்றுகிறது. அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும்; ஏனெனில் ஒரு கவிஞனாக எனக்கு துக்கமாக இருக்கிறது.

                                         

அண்டங்காளி

(கவிதைகள்)

ஆசை

விலை: ரூ.100

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEb

No comments:

Post a Comment