ஆசை
தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும் ‘கிட்டத்தட்ட’ இல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.
எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு ‘எடிட்டிங்’ என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.
இவற்றை எண்ணங்கள் என்று சொல்வதைவிட ‘முற்சாய்வு’ என்று சொல்வதே பொருத்தம். ஓர் எழுத்தாளர் கொண்டுவந்து கொடுக்கும் படைப்பை வெட்டி ஒட்டி, திருத்தி எழுதுபவர்தான் எடிட்டர் என்ற கருத்தே இங்கு நிலவுகிறது. தமிழ்ப் பத்திரிகை உலகைப் பொறுத்தவரை இதில் கொஞ்சம் உண்மை இருக்கலாம். அதிலும்கூட, குறிப்பிட்ட எழுத்தாளர் புகழ் பெற்றவராக இருந்தால் அவரது ஒப்புதலுடனே திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். எழுத்தாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கைவைத்து அவர்கள் சீற்றம் கொண்ட நிகழ்வுகளெல்லாம் உண்டு. பதிப்புலகத்திலும் வெகுஜன வாசிப்புக்காக நூல்கள் வெளியிடும் சில பதிப்பகங்கள் இப்படித் தங்கள் இஷ்டப்படி வெட்டி ஒட்டி, திருத்தி எழுதி வெளியிடுவது உண்டு. இது தீவிர இலக்கியப் பதிப்புகளுக்குப் பெரும்பாலும் கிடையாது.பதிப்புத் துறையில் ஒரு நல்ல எடிட்டரின் பணிகள் என்னென்ன? தனக்கு வரும் நூல்களை முதலில் படித்துப் பார்த்து, அவை பிரசுரத்துக்குத் தகுதியானவைதானா என்று முடிவெடிப்பது முதல் வேலை. ஒரு பிரதி நல்ல படைப்பு சாத்தியங்களையும் விஷய கனத்தையும் கொண்டிருந்து மொழி நடை, கட்டமைப்பு போன்றவற்றில் ஏதும் பிரச்சினைகள் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைகளையெல்லாம் சுட்டிக்காட்டி அவற்றை எழுத்தாளரைக் கொண்டு சரிசெய்யச் சொல்வது மிக முக்கியமான பணி. இதற்கு எழுத்தாளர்-எடிட்டர் இருவருக்கிடையிலான தொடர்ச்சியான, சரியான தகவல் தொடர்பு முக்கியம். நேரடிச் சந்திப்புகள் அதைவிட முக்கியம். ஒரு பிரதியில் ஏராளமான தகவல்கள் இருக்கும், காலம் பற்றிய குறிப்புகள் இருக்கும். ஆகவே, அவற்றைச் சரிபார்ப்பது அவசியம். எடுத்துக்காட்டாக, 28-09-69-ல் நடந்த சட்டமன்றக் கூட்டத்தைப் பற்றிய குறிப்புக்கு ஆசிரியர் 28-09-69 நாளிதழை மேற்கோள் காட்டியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்; ஒரு நாளில் நடந்த நிகழ்வு ஒன்று அதே நாளின் மாலை செய்தித்தாளில் வெளியாகலாம், இல்லையென்றால் அடுத்த நாள் செய்தித்தாளில்தான் வெளியாகும். மேற்கண்ட செய்தித்தாள் மாலை நாளிதழ்தானா, குறிப்பிட்ட ஆண்டில் மாலை நாளிதழ்கள் வெளியாகினவா என்பதையெல்லாம் முதலில் சரிபார்க்க வேண்டும். அந்த இதழ் மாலை நாளிதழ் என்றால் பிரச்சினையில்லை; இல்லையென்றால் பிரதியில் தேதியை மாற்ற வேண்டும். எல்லாவற்றுக்கும் முக்கியமாக குறிப்பிட்ட நாளில் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றதா என்பதை வேறு ஆதாரங்களின் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்து, மொழி வழக்குகள். இதற்குத் தமிழில் போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை. ஒரு நாவலில் கதைசொல்லல் எழுத்து வழக்கிலும் உரையாடல்கள் பேச்சு வழக்கிலும், குறிப்பாக வட்டார வழக்கிலும் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். இதில் ஒருமை நிலவ வேண்டும். கதைசொல்லலில் ஆசிரியரை அறியாமல் பேச்சு வழக்கு வந்து கலந்துவிடலாம்; அதே போல் உரையாடல்களில் (மேடைப் பேச்சு போன்ற சில சூழல்களைத் தவிர்த்து) எழுத்து வழக்கு கலந்துவிடலாம். இவை சரிசெய்யப்பட வேண்டியவை. அதேபோல் குறிப்பிட்ட வட்டாரத்தினர் பேச்சில் அவர்களுடன் தொடர்பில்லாத வட்டாரத்தினரின் பேச்சு கலப்பதுபோல் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திரைப்படத்தில் கோயம்புத்தூர்வாசியாக இருக்கும் கதாநாயகன் மதுரை வழக்கில் பேசினால் எப்படி இருக்கும்? அதுபோல்தான் இதுவும்.
ஒரு பிரதி தற்போது இருப்பதைவிட மேலும் பல சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது; ஆனால், அந்த எழுத்தாளர் அதைத் தவறவிட்டிருக்கிறார் என்றால் ஒரு நல்ல எடிட்டர் அதைச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளார். திறந்த மனதுடைய எழுத்தாளர் என்றால், தனது ‘ஈகோ’வைவிட தனது படைப்பு முக்கியமானது என்று நினைக்கும் எழுத்தாளர் என்றால் அந்தச் சவாலை ஏற்றுத் தன் படைப்பைச் செழுமைப்படுத்துவார். எடிட்டர்கள் என்றாலே கொடுங்கோலர்கள், ஆசிரியரின் பிரதியை முழுவதும் தாங்களே எழுதிவிடுபவர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள்கூட தாங்கள் எழுதியதைத் தங்கள் நண்பர்களிடம் கொடுத்துக் கருத்துக் கேட்பதில்லையா? அந்த நண்பர்கள் கருத்து சொல்வதில்லையா? அதில் சிலவற்றை ஏற்றுக்கொண்டு அந்த எழுத்தாளர்கள் தனது படைப்புகளில் திருத்தங்கள் மேற்கொள்வதில்லையா? (இதில் விதிவிலக்கான, தான் எழுதும் எதிலும் தனது தலையீடு உட்பட யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது என்று விரும்பும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்தான்.) கருத்து
சொல்லும் அந்த நண்பர்களைப் போன்றவர்தான் க்ரியா ராமகிருஷ்ணன்.
க்ரியா ராமகிருஷ்ணன் பற்றித் தமிழில் நிறைய கட்டுக்கதைகளும் அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் நிலவுகின்றன. அவரிடம் வரும் படைப்பாளிகளின் பிரதிகளை அழகுபடுத்துகிறேன் என்ற பேரில் அவர் சுரண்டுகிறார், படைப்புகளை அவரே திருத்தி எழுதுகிறார் என்பது பிரதானக் குற்றச்சாட்டு. இதனை எழுத்தாளர் ஜெயமோகன் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து முன்வைத்துவருகிறார். க்ரியாவில் ந. முத்துசாமி, சா.கந்தசாமி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, இராசேந்திர சோழன், பூமணி தொடங்கி இமையம் வரை ஏராளமான எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. இவர்களில் மரணமடைந்தவர்கள், உயிரோடு இருப்பவர்கள் என்று பலரிடமும் ஜெயமோகனுக்கு உறவு இருந்திருக்கிறது. இவர்களிடம் பேசிப் பார்த்திருந்தால் அது எவ்வளவு பொய் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். முக்கியமாக, அவரது இலக்கிய குருவான சுந்தர ராமசாமியிடம் பேசிப்பார்த்திருக்கலாமே? ஆக, ஜெயமோகன் கருத்துப்படி பார்த்தால் மேற்படி எழுத்தாளர்களின் எழுத்துகள் செம்மையானதற்குக் காரணம் க்ரியா ராமகிருஷ்ணன்தான். இது அந்த எழுத்தாளர்களை எவ்வளவு அவமானப்படுத்தும் செயல்! இந்த அவதூறுக்கு முக்கியமான காரணம் இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’. இந்த நாவலை ராமகிருஷ்ணன் பல முறை திருத்தி எழுதினார் என்று தொடர்ந்து சொல்லிவருகிறார் ஜெயமோகன். இமையத்தின் வாழ்க்கை தொடர்பான ஒரு வரியைக் கூட க்ரியா ராமகிருஷ்ணனால் எழுதியிருக்க முடியாது என்பதை அறியாத அளவா வாசகர்கள் அறிவிலிகள்? தமிழின் முக்கியமான நாவல்களுள் ஒன்றான ‘ஆழி சூழ் உலகு’ நாவலை தமிழினி வசந்தகுமார் செம்மையாக்கம் செய்து வெளியிட்டார் என்பதும் செவிவழிச் செய்தி. (இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது.) அதை ஜெயமோகன் கண்டுகொள்ள மாட்டார். அவரது சீற்றம் க்ரியா
ராமகிருஷ்ணன் மட்டும் மீது பாய்வதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.
எனக்குத் தெரிந்து க்ரியா ராமகிருஷ்ணன் எந்த எழுத்தாளரினதும் ஒரு வரியைக் கூட தானே திருத்தியதில்லை. “இந்த இடத்தில் பிரச்சினை இருப்பதைப் போல் தெரிகிறது. வாக்கியம் தெளிவாக இல்லை. இதை சரிசெய்யுங்களேன்” என்று எழுத்தாளரிடம் சொல்வார். “கதைப் போக்கில் சில முரண்கள் இருக்கின்றன. அதையெல்லாம் சரிசெய்தால் நன்றாக இருக்கும்” என்று கேட்டுக்கொள்வார். எழுத்தாளரின் முடிவே இறுதியானது. ஆனால், ஒற்றுப் பிழைகள், தகவல் பிழைகளை அனுமதிக்கவே மாட்டார்.
க்ரியா ராமகிருஷ்ணனுடனான 20 ஆண்டுகள் உறவில் அவருடைய ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன் என்பதால் ஒரு எடிட்டராக அவர் எப்படிப்பட்ட பணியை ஆற்றினார் என்பதை மற்றவர்களைவிட அதிகம் அறிவேன். ராமகிருஷ்ணன் ஒரு பதிப்பாளர், எடிட்டர், அகராதியியலர், பிழைதிருத்துநர்,
புத்தகத்தின் வடிவமைப்பில் மிகுந்த ரசனை உடையவர் என்று பல்வேறு முகங்கள் கொண்ட ஓர் ஆளுமை. (அவருக்கு மூன்று வயதிலிருந்தே ஒரு கண் மட்டும்தான் தெரியும். அதை வைத்துக்கொண்டுதான் இவ்வளவு நுணுக்கமாகப் பிரதியைப் பார்த்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.) இந்தப் படைப்புக்கு இன்ன எழுத்துரு, இன்ன எழுத்துரு அளவு வைத்தால் இன்னும் அழகாக இருக்கும் என்பது போன்ற விஷயங்களையெல்லாம் யோசித்தவர்.
இலக்கியத்தில் சிறுகதை, நாவல், நாடகம், தத்துவம், மொழிபெயர்ப்புகள் என்று சிறந்த இலக்கிய எடிட்டராக அவர் திகழ்ந்த அதே நேரத்தில் இலக்கியமல்லாத நூல்கள் பலவும் அவர் எப்படிப்பட்ட எடிட்டர் என்பதை நமக்குக் காட்டும். ஐராவதம் மகாதேவனின் ‘எர்லி டமில் எபிகிராஃபி ஃப்ரம் தி எர்லியஸ்ட் டைம்ஸ் டூ த சிக்ஸ்த் செஞ்சுரி ஏ.டி.’ என்ற நூல் ஒரு எடிட்டராக அவரது பயணத்தில் முக்கியமானது. இப்படி ஒரு நூலைத் தான் எழுதிக்கொண்டிருப்பதாகவும் தமிழ்நாட்டில் அந்த நூலை வெளியிடும் அளவுக்குப் பதிப்பாளர் இல்லை என்றும் ராமகிருஷ்ணனிடம் ஐராவதம் மகாதேவன் கூறியபோது “க்ரியாவுக்குத் தாருங்கள், நாங்கள் வெளியிடுகிறோம்” என்று சவாலாக ஏற்றவர் ராமகிருஷ்ணன். புத்தக உருவாக்கத்தின்போது அந்தப் புத்தகத்தில் உள்ள சிக்கல்கள், மொழிப் பிழைகள் போன்றவற்றை ஐராவதம் மகாதேவனிடம் எப்படி எடுத்துச் சொல்வது என்று ராமகிருஷ்ணன் தயங்கினார். மிகவும் வெளிப்படையாகத் தெரியும் பிழைகளை முதலில் பட்டியலிட்டுக்கொண்டு தனது ஆங்கிலேய நண்பரை உடன் அழைத்துக்கொண்டு ஐராவதம் மகாதேவனைச் சந்தித்து அந்தப் பிழைகளை விவரித்தார். “நான் 40 வருஷமாக ஆங்கிலத்தில் எழுதுகிறேன்” என்று கோபக்காரரான ஐராவதம் மகாதேவன் முரண்டுபிடித்தாலும் ராமகிருஷ்ணனின் சுட்டிக்காட்டல்களை உடன் இருந்த நண்பர் ஆமோதித்ததால் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே இப்படியொரு புத்தகம் உருவாவது ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குத் தெரியவருகிறது. தாங்கள் வெளியிடுகிறோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஐராவதம் மகாதேவனுக்குப் பெரும் சங்கடம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ’ஹார்வர்டு ஓரியண்டல் வரிசை’யில் தன் புத்தகம் வெளியாவது பெரிய கௌரவம்; அதே நேரத்தில் க்ரியாவிடம் ஒப்புக்கொண்டாயிற்று. அப்போது ராமகிருஷ்ணன் ஒரு யோசனையைத் தெரிவித்தார்: “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு பிரதியை நூலாக வெளியிட ஒப்புக்கொண்டால் அது புத்தக வடிவம் பெறுவதற்கு பத்து ஆண்டுகள் வரை ஆகலாம். கூடவே, அந்த நூலின் காப்புரிமை அவர்களிடமே இருக்கும்; ஆசிரியருக்குத் தன் நூலின்மேல் உள்ள உரிமை பறிக்கப்படும். உங்கள் நூல் இந்தியச் சொத்து. இந்தியாவிடமே இருக்க வேண்டும். வேண்டுமென்றால், க்ரியாவுடன் இணைந்து ஹார்வர்டு வெளியிடலாம். ஆனால், க்ரியா இறுதி செய்த வடிவம்தான் வெளியிடப்பட வேண்டும். முக்கியமாக, வெளியீட்டாளர்களின் பெயரில் க்ரியாவின் பெயர்தான் முதலில் இருக்க வேண்டும். இதற்கெல்லாம் அவர்கள் ஒப்புக்கொண்டால் இணைந்து வெளியிடலாம்.” ஹார்வர்டு இந்த நிபந்தனைகளையெல்லாம் ஒப்புக்கொண்டு, புத்தகம் வெளியானது. பிழைகள் களையப்பட்டு செம்மையாக்கப்பட்ட புத்தகத்தைக் கண்டு க்ரியா ராமகிருஷ்ணனிடம் ஐராவதம் மகாதேவன், “நீங்கள் மட்டும் இல்லையென்றால் நான் வங்காள விரிகுடா கடலில்தான் போய்க் குதித்திருக்க வேண்டும்” என்றிருக்கிறார்.
இதனால் தன்னை மேலாகவும் எழுத்தாளர்களைக் கீழாகவும் ராமகிருஷ்ணன் வைத்திருந்தார் என்று அர்த்தமல்ல. “எடிட்டர் ஒருபோதும் எழுத்தாளரின் இடத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது, முடியவும் முடியாது. ஒரு ஆசிரியருக்கு உதவிசெய்வதற்குத்தான் எடிட்டர் இருக்கிறார். இதில் ஈகோவுக்கு வேலையே இல்லை” என்று ராமகிருஷ்ணன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்ததை இங்கே நினைத்துப்பார்க்கலாம்.
நானும் ஒரு கவிஞன், க்ரியாவில் எனது கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன என்ற முறையில் அவரது யோசனைகளால் எனது கவிதைகள் செழுமையடைந்திருக்கின்றன என்றே கூறுவேன். கவிதைகளை எழுதியவுடன் அவரிடம் போய்க் காட்டுவேன். மிகப் பிரமாதமான வரிகள் என்று எனக்கு நானே மனதுக்குள் மெச்சிக்கொண்டிருக்கும் வரிகளைத்தான் அவர் சுட்டிக்காட்டி “இந்த வரிகள் உங்கள் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு. கவிதைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் வெகு தூரம்”
என்பார். அது முதலில் என் ‘ஈகோ’வைத் தாக்கும். நியாயப்படுத்துதலில் இறங்குவேன். “எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். அப்புறம் உங்கள் படைப்பு, நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்பார். சில நாட்கள் கழித்து அவர் கூற்றின் உண்மையை உணர்ந்து அதற்கேற்ப மாற்றம் செய்துபார்த்தால் கவிதை மேலும் துலங்குவது தெரியும். தான் ஒரு கவிதை வாசகர் இல்லை என்று அவர் சொல்லிக்கொண்டாலும் சி.மணி, பசுவய்யா (சுந்தர ராமசாமி), வ.ஐ.ச. ஜெயபாலன், ஷங்கர்ராமசுப்ரமணியன் உள்ளிட்ட முக்கியமான கவிஞர்களின் நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவர்களுக்கும் என்னைப் போன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். “படைப்போ மொழிபெயர்ப்போ இம்மீடியேட் கிராட்டிஃபிகேஷன் (உடனடி சந்தோஷம்) நம்மை ஏமாற்றிவிடும். ஆகவே, அந்தப் படைப்பையோ மொழிபெயர்ப்பையோ தள்ளி இருந்து ஒரு விலகல் மனநிலையிலிருந்து பார்க்கும்போது நிறைகுறைகள் நமக்குப் புலப்படும். அப்போது செம்மையாக்கினால் படைப்பு மேலும் பொலிவு பெறும். ஆகவே, ஒரு படைப்பாளிதான் ஒரு படைப்பின் முதல் எடிட்டராக இருக்க வேண்டும்” என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு.
2003-ல் தொடங்கி
2013 வரை பல்வேறு நூலாக்கங்களில் க்ரியா ராமகிருஷ்ணனுடன் பயணித்திருக்கிறேன். எனது அனுபவத்தில் முதல் இரண்டு புத்தகங்கள் பிரெஞ்சு சமூகவியலாளரான பியர் பூர்தியுவின் ‘தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்’, இமையத்தின் ‘மண் பாரம்’ சிறுகதைத் தொகுப்பு. ‘தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்’ நூலின் உருவாக்கம் போல் தமிழில் வேறு ஒரு புத்தகம் உருவாகியிருக்குமா என்பது சந்தேகமே. அந்த மொழிபெயர்ப்பின் முதல் வரைவை அதன் மொழிபெயர்ப்பாளர் வெ.ஸ்ரீராம் வரிக்கு வரி வாசிப்பார்; ஓய்வுபெற்ற வெளியுறவுத் துறை அதிகாரியும் பல மொழிகள் அறிந்தவருமான டி.கே. கோபாலன் அதனை பிரெஞ்சு மூலத்துடன் வரிக்கு வரி ஒப்பிடுவார். க்ரியா ராமகிருஷ்ணன் தன் கையில் வைத்திருக்கும் ஆங்கில நூலுடன் ஒப்பிடுவார். ஒரு வாசகனாக நான் எனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்வேன். இப்படி ஒன்றரை ஆண்டுகள் வெவ்வேறு அமர்வுகளில் இந்தப் புத்தகத்தின் உருவாக்கம் நிகழ்ந்தது. தமிழில் புத்தகங்கள் அதிகம் விற்காத சூழலில் ஒரு புத்தகத்துக்காக இவ்வளவு உழைப்பைச் செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுவது இயல்பே. இந்த அளவுக்கு உழைப்பைச் செலுத்த ஒருவராவது இருக்க வேண்டுமல்லவா? அப்படிப்பட்டவர்தான் க்ரியா ராமகிருஷ்ணன்.
அதுமட்டுமல்ல, மொழிபெயர்ப்பு நூல்களின் ஒவ்வொரு பதிப்பிலும் மொழிபெயர்ப்பாளருடன் உட்கார்ந்து திருத்தங்கள் மேற்கொண்டுதான் வெளியிடுவார். 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட மொழிபெயர்ப்பின் மறுபதிப்பு வெளியிடும்போது இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழில் ஏற்பட்ட மாற்றங்களைக் கணக்கில் கொள்வார். அதற்கேற்ப மொழிபெயர்ப்பில், மொழிபெயர்ப்பாளரின் ஒத்துழைப்புடன் திருத்துவார்.
ஒரு எடிட்டராக ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் உருவாக்கத்தில் க்ரியா ராமகிருஷ்ணனின் பங்கைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எடிட்டர் என்றால் ஒட்டுமொத்த அகராதிப் பதிவுகளையும் அவரே எழுதுவார் என்று அர்த்தமல்ல. இந்த வரையறையெல்லாம் தனிநபர் உருவாக்கும், கதிரைவேற்பிள்ளையின் அகராதி போன்றவற்றுக்கே பொருந்தும். ஆனால், அகராதியானது ஒரு குழுவால் உருவாக்கப்பட்டால்தான் பல்வேறு அறிவுகள், திறமைகள், துறைகள் உள்ளே வரும். ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி உள்ளிட்ட சர்வதேச அகராதிகள் அப்படி உருவானவைதான். தமிழில் தன்னால் இயன்ற சிறப்பான ஒரு குழுவை உருவாக்கியவர் ராமகிருஷ்ணன். அகராதியின் ஒவ்வொரு சொல்லுக்குமான விளக்கம் குழுவினருக்கும் ஆலோசகர்களுக்கும் அனுப்பப்படும். அவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பார்கள். அவற்றை ஒருங்கிணைத்து, அந்தக் கருத்துகளில் எவற்றையெல்லாம் வைத்துக்கொள்வது, எவற்றை விடுவது என்ற இறுதி முடிவை ராமகிருஷ்ணன் எடுப்பார். 2008-ல் வெளியான விரிவாக்கப்பட்ட பதிப்பில் நான் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். அகராதியில் இடம்பெறும் வெவ்வேறு துறைகள் சார்ந்த சொற்களின் பட்டியலை எனக்குத் தந்து, தொடர்புடைய துறையின் வல்லுநர்களை சந்தித்து அந்தச் சொற்களை சரிபார்த்து, திருத்திக்கொண்டு வரும்படி என்னை அனுப்பினார். உயிரியல், பறவையியல், இயற்பியல் என்று பல துறைகளின் பரிச்சயம் எனக்குக் கிடைத்ததற்கு ராமகிருஷ்ணன்தான் காரணம். ஓர் அகராதியியலாளர் எல்லாத் துறைகளின் அறிவையும் பெற வேண்டும் என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பார். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் மூலம் க்ரியா ராமகிருஷ்ணன் தமிழுக்குப் பெரும் பங்களிப்பு செய்திருந்தாலும் அறிவுத் துறை அவருக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. ஏனெனில், அவர் மொழியியலிலோ அகராதியியலிலோ பட்டம் பெற்றவர் இல்லை. அதே போல் இலக்கிய உலகமும், அகராதி என்பது இலக்கியத்துக்குத் தொடர்பற்ற விஷயம் என்று ராமகிருஷ்ணனின் அகராதிப் பங்களிப்பை அலட்சியப்படுத்திக்கொண்டிருக்கிறது
மொழியானது உயிர்ப்போடு இருக்கும் ஒரு விஷயம். அதற்கேற்ப, அகராதியும் உயிர்ப்போடு இருக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் உலகம் தொழில்நுட்பத்திலும் ஏனைய துறைகளிலும் பெரும் பாய்ச்சல் கண்டுகொண்டிருக்கிறது. இது எல்லா மொழிகளிலும் பிரதிபலித்தது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதல் பதிப்பு வெளியானது 1992-ல். அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் எவ்வளவோ சொற்கள் தமிழுக்கு வந்துசேர்ந்திருக்கின்றன, எவ்வளவோ சொற்கள் வழக்கொழிந்து போயிருக்கின்றன, எவ்வளவோ சொற்களுக்குப் புதிய பொருள் கிடைத்திருக்கிறது. இது போன்று மொழியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களை அகராதியும் பிரதிபலிக்க வேண்டும். ஆகவே, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை விரிவாக்கித் திருத்தி 2008, 2020 ஆகிய ஆண்டுகளில் மேலும் இரண்டு பதிப்புகளை ராமகிருஷ்ணன் வெளியிட்டார். மூன்று பதிப்புகளிலும் குறிப்பிட்ட சொல்லிலிருந்து குறிப்பிட்ட சொல் வரை எடுத்துக்கொண்டு அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்கள், எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள், கூடுதல் தகவல்கள் போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் அது பெரும் வியப்பை ஏற்படுத்தும். ஒரு அகராதி எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது, அதன் பின்னுள்ள மனித உழைப்பு, அறிவு உழைப்பு எப்படிப்பட்டது என்று நமக்குப் புரியும். தெற்காசிய மொழிகள் எதிலும் நிகழ்ந்திராத சாதனை இது என்று இந்தியவியல் அறிஞர் டேவிட் ஷுல்மன் கூறியிருப்பது மிகையல்ல.
எடுத்துக்காட்டாக, ‘போடு’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். 1992-ல் வெளியான முதல் பதிப்பிலும், 2008-ல் வெளியான இரண்டாம் பதிப்பிலும் ‘போடு1’, போடு2’ என்று இரண்டு தலைச்சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 2020 பதிப்பில் ‘போடு1’, ‘போடு2’, போடு3’, போடு4’ என்று நான்கு தலைச்சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ‘போடு1’-ஐத் தவிர ஏனையவை துணைவினைகள். 1992-ம் ஆண்டு பதிப்பில் ‘போடு1-க்கு 29 பொருளும், 2008-ம் ஆண்டு பதிப்பில் 54 பொருளும், 2020-ம் ஆண்டு பதிப்பில் 56 பொருளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் 1992 –ம் ஆண்டு பதிப்பில் ‘போடு1’ என்ற சொல்லுக்கு 63 எடுத்துக்காட்டுச் சொற்றொடர்களும், 2008-ம் ஆண்டு பதிப்பில் 172 சொற்றொடர்களும், 2020-ம் ஆண்டு பதிப்பில் 176 சொற்றொடர்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று அகராதிகளிலும் ‘போடு’ என்ற சொல்லுக்கான விளக்கத்தையும் எடுத்துக்காட்டுகளையும் மட்டும் வரிக்கு வரி ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்தால் அகராதி என்றால் என்ன, ஓர் அகராதிக்குள் என்னென்ன வேலைகள் இருக்கின்றன என்பதெல்லாம் புரியும்.
பதிப்பாளராகத் தனது 46 ஆண்டு காலப் பயணத்தில் ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் புத்தகங்கள் 200-க்கும் குறைவுதான். ஆனால், அவற்றுக்குள் உள்ள வகைமைகள் நம்மை வியக்க வைப்பவை.
சிறுகதை, நாவல், நாடகம் என்று புனைவுகளை எடுத்துக்கொண்டால் மௌனி, ஜி.நாகராஜன், ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சா.கந்தசாமி, இராசேந்திரசோழன், எஸ். சம்பத், சார்வாகன், பூமணி, திலீப் குமார், இமையம், புகழ் போன்றோரின் நூல்களை க்ரியா வெளியிட்டிருக்கிறது.
கவிதை என்று எடுத்துக்கொண்டால் ந.பிச்சமூர்த்தி, சி.மணி, பசுவய்யா (சுந்தர ராமசாமி), நாரணோ ஜெயராமன், தி.சோ. வேணுகோபாலன், வ.ஐ.ச. ஜெயபாலன், எம்.ஏ. நுஃமான், அ.யேசுராசா, ஷங்கர்ராமசுப்ரமணியன் உள்ளிட்ட பல கவிஞர்களின் நூல்களை க்ரியா வெளியிட்டிருக்கிறது. ஞானக்கூத்தனின் நூல்களை க்ரியா வெளியிடவில்லை என்றாலும் அவருடைய முதல் நூலை க்ரியா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள்தான் சேர்ந்து வெளியிட்டிருக்கிறார்கள்.
கலை இலக்கியம் விமர்சனம், கலாச்சாரம், சித்தாந்தம் போன்ற வகைமைகளை எடுத்துக்கொண்டால் சுந்தர ராமசாமி, பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம், எஸ்.வி.ராஜதுரை, தங்க.ஜெயராமன் போன்றோரின் நூல்களை க்ரியா வெளியிட்டிருக்கிறது.
முக்கியமாக, ஈழத்து நவீன இலக்கியம் அநேகமாக க்ரியா மூலமாகத்தான் தமிழில் அறிமுகமாகிறது. எம்.ஏ. நுஃமானும் அ.யேசுராசாவும் தொகுத்த ‘பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’ அவ்வகையில் க்ரியாவின் முக்கியமான பங்களிப்பாகும். மேலும், மு. தளையசிங்கத்தின் இரண்டு நூல்களை க்ரியா வெளியிட்டிருக்கிறது. மு.நித்தியானந்தனின்
‘கூலித் தமிழ்’ ஒரு முக்கியமான நூல்.
மேற்குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழ் இலக்கிய உலகின் தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர்கள். இவர்களின் பிரதிகள் ஒவ்வொன்றும் ஒரு எடிட்டராக ராமகிருஷ்ணனுக்குச் செழுமையான அனுபவத்தைத் தந்ததுடன் அவையும் மிகச் சிறந்த ஒரு எடிட்டரை க்ரியா ராமகிருஷ்ணனிடம் கண்டடைந்தன.
க்ரியா வெளியிட்ட மொழிபெயர்ப்புகளும் முக்கியமானவை ஆல்பெர் காம்யு, ஃப்ரன்ஸ் காஃப்கா, ழான்-போல் சார்த்ர், ழூல் ரேமோன், விக்தோர் ஹ்யூகோ, ரே பிராட்பரி, ஜோஷ் வண்டேலூ, ஷார்ல் போத்லெர், அந்த்வான்
து செந்த்-எக்சுபெரி, ழாக் ப்ரெவெர், ஸீக்ஃப்ரீட் லென்ஸ், யூழேன் இயொனெஸ்கோ, பியர் பூர்தியு ஆகிய மேலை நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. லா வோட்சுவின் ‘தாவோ தே ஜிங்’, ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ போன்ற கீழை இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளும் குறிப்பிடத் தகுந்தவை. இந்திய மொழிகளிலிருந்து சுரேந்திர வர்மா (இந்தி), பாதல் சர்க்கார் (வங்கமொழி), கிரீஷ் கர்னாட் (கன்னடம்) போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டன.
இலக்கியத்தைத் தவிர மற்ற நூல்களை தமிழ் இலக்கிய உலகம் தீண்டாத நிலையில் க்ரியா வெளியிட்ட இலக்கியம் சாராத நூல்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ‘டாக்டர் இல்லாத இடத்தில்’, ‘தோண்டு கிணறுகளும் அவற்றின் அமைப்பும்’, ‘மரம் வளர்ப்பு’, ‘இந்தியாவின் சுற்றுச்சூழல்’ போன்றவை க்ரியா வெளியிட்டவற்றில் புனைவல்லாத,
முக்கியமான நூல்கள்.
ஆங்கிலத்திலும் ஈஜின் இர்ஷிக்கின் ‘டமில் ரிவைவலிஸம் இன் த 1930ஸ்’, அ.மா.சாமியின் ‘ஜென் ஹார்ட், ஜென் மைண்டு’, ‘ஜென்: அவேக்கனிங் டூ யுவர் ஒரிஜினல் ஃபேஸ்’, ஜோப் தாமஸின் ‘சோழா ப்ரான்ஸெஸ்’ உள்ளிட்ட பல நூல்களை க்ரியா வெளியிட்டிருக்கிறது.
இத்தனை வகைமைகளில் பல்வேறு பிரதிகளையும் தமிழில் கையாண்டிருக்கும் ஒரே எடிட்டர் க்ரியா ராமகிருஷ்ணன்தான். ஒரு பிரதியைப் பிழைகளின்றி, செம்மையாக, அழகாக, நூலாசிரியரின் ஒத்துழைப்புடன் வாசகரிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் அவரது பிரதான அக்கறை. இந்த அக்கறைதான் ஒரு எடிட்டராக அவர் அடைந்த புகழுக்கும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் காரணம்.
(க்ரியா எஸ்.ராமகிருஷ்ணனின் நினைவாக க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘Book Culture in Tamil/ தமிழில் புத்தகக் கலாச்சாரம்’ [2021] என்ற நூலில் இடம்பெற்ற கட்டுரை.)
No comments:
Post a Comment