Monday, January 13, 2020

ஆன்மா என்னும் புத்தகம்: நாமே புத்தர்



என்.கௌரி
(13 டிசம்பர், 2018-ல் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான கட்டுரை)

அமைதியை அடைய வேண்டுமென்றால், நாமே அமைதியாக இருக்க வேண்டும். இந்த எளிமையான உண்மையைத்தான், பவுத்தத் துறவியும் அறிஞரும் கவிஞரும் அமைதிக்கான செயல்பாட்டாளருமான திக் நியட் ஹான். Being Peace (‘அமைதி என்பது நாமே’) புத்தகத்தில் விளக்கியிருக்கிறார் 1987-ம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகம், உலகம் முழுவதும் 2,50,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. தமிழில் இந்த ஆண்டு (2018) வெளியான இந்தப் புத்தகத்தை ஆசைத்தம்பி மொழிபெயர்த்திருக்கிறார்.

நாம் உலகத்தை மாற்ற விரும்பினால், முதலில் அதை நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று திக் நியட் ஹான் சொல்கிறார். நமக்குள் எப்போதுமே இருக்கும் உண்மையான அமைதியை, அதாவது நமது புத்த இயல்பை விழிப்படையச் செய்வதைப் பற்றி அவர் இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார்.

இந்த விழிப்புணர்வு எவ்வளவு வலிமையானது என்பதை அவரது தெளிவான விளக்கங்கள் நமக்குப் புரியவைக்கின்றன. நம் மன அமைதிதான் நம் அனைத்துச் செயல்களுக்குமான வழிகாட்டியாக இருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. பவுத்தம், தியானம் பற்றிய அடிப்படைகளைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.

மலரென மலர முடியும்

“நாம் மனத்தில் அமைதியுடன் இருந்தால், மகிழ்ச்சியாக இருந்தால், மலரென மலர முடியும் நம்மால், நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும், நம் சமுதாயம் முழுவதற்கும் நமது அமைதியால் பயன் கிடைக்கும்” என்று திக் நியட் ஹான் விளக்குகிறார்.

இந்தப் புத்தகம், ‘துன்பப்படுதல் மட்டும் போதாது’, ‘மூன்று ரத்தினங்கள்’, ‘உணர்வுகளும் புலனறிவும்’, ‘பயிற்சியின் அடிப்படை’, ‘சமாதானத்துக்காகப் பாடுபடுதல்’, ‘சகவாழ்வு’, ‘தினசரி வாழ்க்கையில் தியானம்’ என்ற ஏழு அத்தியாயங்களாக எழுதப்பட்டிருக்கிறது.

நாம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இல்லாவிட்டால், நம்மால் நம் அமைதியையும் மகிழ்ச்சியையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. வாழ்க்கை என்பது அச்சமூட்டக்கூடியது, அற்புதமானது என இரண்டுமானதாகவும் இருக்கிறது. நாம் தியானம் செய்வதன் நோக்கம் என்பது இந்த இரண்டு அம்சங்களையும் எதிர்கொள்வதற்காகத் தான் என்று அவர் விளக்குகிறார். நாம் புன்னகைப்பதாலும் மூச்சு விடுவதாலும் அமைதியாக இருப்பதாலும்தான் நம்மால் நமக்குள் அமைதியைக் கொண்டுவர முடியும்.

புன்னகையும் மூச்சுப் பயிற்சியும்

நாள் முழுவதும் நாம் புன்னகைசெய்வதைப் பயிலலாம். புன்னகைக்க முயலும்போது முதலில் நமக்கு அது கடினமானதாகத் தோன்றலாம். அப்படி இருந்தால் நாம் அது ஏன் என்று யோசிக்க வேண்டும். புன்னகைத்தல் என்பது நம்மைக் குறித்த உணர்வுடன் நாம் இருக்கிறோம், அதாவது நம்மேல் நமக்கு முழு ஆளுமை இருக்கிறது, நாம் மறதியில் மூழ்கிவிடவில்லை என்பது ஆகும்.

இந்தப் புன்னகையை நாம் புத்தரின் முகத்திலும் போதிசத்துவர்களின் முகங்களிலும் காணலாம். மூச்சுப் பயிற்சியின்போதும் புன்னகைக்கும்போதும் நாம் உச்சாடனம் செய்யும் வகையில், இந்தக் கவிதையை அவர் விளக்குகிறார்:

“மூச்சை இழுக்கும்போது, நான் உடலையும் மனதையும்

அமைதியடையச் செய்கிறேன்.

மூச்சை விடும்போது, நான் புன்னகைக்கிறேன்.

தற்கணத்தில் நிலைக்கும்போது

நான் உணர்கிறேன்

இக்கணத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்று.”

இந்தக் கவிதை புன்னகையின் வல்லமையை நமக்குப் புரியவைக்கிறது.

புத்தர்கள் என்பது நாம்தான். ‘புத்’ என்ற வேர்ச்சொல், விழிப்புணர்வு பெறுதல், அறிதல், புரிந்துகொள்ளுதல்’ என்று பொருள்படும். விழிப்புணர்வு பெறும், புரிந்துகொள்ளும் ஆண் அல்லது பெண் புத்தர் எனப்படுவர். இந்த விழிப்புணர்வு பெறும், புரிந்துகொள்ளும், அன்பு காட்டும் திறன் என்பதுதான் புத்தர் இயல்பு என்று அழைக்கப்படுகிறது.

சீனர்களும், வியத்நாமியர்களும், ‘நான் என்னில் உள்ள புத்தரிடம் திரும்பிச்சென்று அதன்மேல் நம்பிக்கை கொள்கிறேன்’ என்று சொல்வார்கள். ‘என்னில்’ என்று சேர்ப்பது நீங்களேதான் புத்தர் என்பதை மேலும், தெளிவாக்குகிறது என்பதை அவர் விளக்குகிறார்.

இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சமாக இதில் விளக்கப்பட்டிருக்கும் பதினான்கு விதமான மனம்நிறை கவனத்துக்கான பயிற்சிகளைச் சொல்லலாம். ‘வெளிப்படைத் தன்மையுடன் இருத்தல்’, ‘எந்தப் பார்வையுடனும் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருத்தல்’, ‘சுதந்திரமான சிந்தனையுடன் இயங்குதல்’, ‘துன்பத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருத்தல்’, ‘எளிமையான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்தல்’, ‘கோபத்தைக் கையாள்தல்’, ‘தற்கணத்தில் மகிழ்ச்சியாக இருத்தல்’, ‘பிறருடனும் சமூகத்துடனும் தொடர்பில் இருத்தல்’, ‘உண்மையாகவும் அன்புடனும் பேசுதல்’, ‘பெருந்தன்மை’ உள்ளிட்ட பதினான்கு வகையான மனம்நிறை கவனத்துக்கான பயிற்சிகளை இந்தப் புத்தகம் எளிமையாக விளக்குகிறது.

அமைதியால் உலகத்தை நிறைக்க விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

திக் நியட் ஹான்:

1926 –ம் ஆண்டு வியத்நாமில் பிறந்தார். தன் பதினாறாவது வயதில் பவுத்த துறவியானார். வியத்நாம் போர் பாதிப்பிலிருந்து அகதிகளை மீட்பதற்காக ‘engaged Buddhism’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். தன் நாற்பதாவது வயதில் வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட இவர், பிரான்ஸ் நாட்டில் ‘ப்ளம் வில்லேஜ்’ மையத்தில் தற்போது பவுத்தத்தைக் கற்பித்து வருகிறார். எந்த ஒரு சித்தாந்தத்தையும் அது பவுத்தமாக இருந்தாலும், விடாப்பிடியாக அதைப் பிடித்துக்கொண்டிருக்கக் கூடாது என்ற கருத்தை இவர் போதித்துவருகிறார்.  ‘TheMiracle of Mindfulness’, ‘The Sun My Heart’, ‘Living Buddha’, ‘A Guide to Walking Meditation’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார்.



வியத்நாம் போரில் சேவையாற்றிக்கொண்டிருந்த பவுத்தத் தன்னார்வலர்கள் பலரும் உயிரிழந்தார்கள். அவர்கள் வன்முறையற்ற வழியில், வெறுப்பில்லாமல் இறப்பது எப்படி என்று திக் நியட் ஹான் எழுதிய கவிதை இது. அந்தக் கவிதையின் தலைப்பு – ‘பரிந்துரை’

எனக்கு வாக்குறுதி கொடு

எனக்கு வாக்குறுதி கொடு இன்றே,

எனக்கு வாக்குறுதி கொடு இப்போதே,

தலைக்கு மேலே சூரியன்

துல்லியமாக உச்சியில் இருக்கும்போதே

எனக்கு வாக்குறுதி கொடு:

மலையளவு வெறுப்பையும் வன்முறையையும் கொண்டு

அவர்கள் உன்னை அடித்து வீழ்த்தினாலும்,

ஒரு புழுவை மிதிப்பதுபோல்

உன்மீது ஏறி நின்று நசுக்கினாலும்,

உன்னைக் கொன்று கண்டதுண்டமாக வெட்டிப்போட்டு

உன் குடலை உருவினாலும்,

நினைவில் கொள், சகோதரா,

நினைவில் கொள்:

மனிதன் நம் எதிரியல்ல.

உன் தகுதிக்கு ஏற்றது காருண்யம்தான்.

அது வெல்ல முடியாதது,

மனிதனில் உள்ள மிருகத்தைக் காண

வெறுப்பு உன்னை ஒருபோதும் விடாது.

ஒரு நாள், இந்த மிருகத்தைத் தன்னந்தனியாக நீ சந்திக்கும்போது,

உன் துணிவு தளராமல், உன் கண்கள் கருணையுடன்

சற்றும் கஷ்டப்படாமல்

(அவற்றை யாரும் பார்க்கவில்லையெனினும்),

உன் புன்னகையிலிருந்து

பூவொன்று பூக்கும்.

பிறப்பு இறப்பின் ஆயிரமாயிரம் உலகங்களினூடாக

உன்னை நேசிப்பவர்கள்

உன்னைக் காண்பார்கள்.

மறுபடியும் தன்னந்தனியாக,

தாழ்ந்த தலையுடன் நான் செல்வேன்,

அன்று நித்தியத்துவமாக மாறிவிட்டது என்பதை அறிந்தவாறு,

நீண்ட, கரடுமுரடான சாலைமீது,

சூரியனும் நிலவும்

தொடர்ந்து ஒளிரும்.

-நன்றி: ‘இந்து தமிழ் திசை’, என்.கௌரி

No comments:

Post a Comment