Wednesday, January 6, 2016

பறவை ராஜா பராக்!


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் நான் எழுதத் தொடங்கியிருக்கும் நகைச்சுவைப் பறவை உலாவின் அறிமுக அத்தியாயம்)

உலாவுக்கு முன்…
தன் வீட்டில் வந்து மயங்கி விழுந்த மீன்கொத்தி ஒன்றைப் பார்த்ததிலிருந்துதான் அவனுக்குப் பறவைகள் மீது இரக்கம் பிறந்தது. பறவைகள் உலகத்தின் அரசனாக அவனே தன்னை அறிவித்துக்கொண்டான். இது எந்தப் பறவைக்கும் தெரியாது.
பறவைகளின் உலகத்துக்கு அரசனாகப் பதவியேற்றதிலிருந்து எல்லா பறவைகளையும் கவனிப்பதை அவன் வழக்கமாக்கிக் கொண்டான். தனக்கென்று தளபதி, பணிப்பெண், சிப்பாய்களையும் நியமித்துக்கொண்டான். எல்லோரும் அழுதுகொண்டே பதவியேற்றார்கள். பதவியேற்ற நாளிலிருந்து தினமும் காலையில் உலா சென்று பறவைகளை நலம் விசாரிப்பதை அவர்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள்.
பறவைகளின் அரசன் என்றாலும் அவனுக்குப் பறவைகளைப் பற்றி ஏதும் தெரியாது. மந்திரியும் பணிப்பெண்ணும் சிப்பாயும்தான் பறவைகளைப் பற்றி அவனுக்குச் சொல்வார்கள். அப்படிச் சொல்லும்போது உண்மையையும் பொய்யான கதையையும் சேர்த்தே சொல்லிவிடுவார்கள். அவர்கள் எது சொன்னாலும் அந்த அரசன் நம்பிவிடுவான். உடனே, கிறுக்குத்தனமாக ஏதாவது கட்டளை இடுவான். என்றாலும், பறவைகள் மீது உண்மையில் அன்பு கொண்டவன் அந்த அரசன்.
பொய்க்கதைகளை நம் வாண்டுகள் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள் என்றாலும் யாரும் அவற்றை நம்பிவிடக் கூடாது என்பதற்காக இருவாச்சிப் பறவையொன்றைத் துணைக்கு அழைத்திருக்கிறோம். தளபதி, பணிப்பெண், சிப்பாய் எல்லாம் பொய்க்கதை சொன்னால் அதைக் கண்டுபிடித்து இருவாட்சிப் பறவை நமக்குச் சொல்லிவிடும். உண்மையான தகவல்கள் என்றால் பெரிய சிறகுகளை விரித்து இருவாட்சிப் பறவை பாராட்டும்.
இதோ உலா ஆரம்பமாகிவிட்டது. பறவைகளின் அரசனுடன் நாமும் பறவை உலா செல்வோமா? ஒவ்வொரு வாரமும் உலாவில் சந்திப்போம்.
                                                (தொடரும்)
 -நன்றி ‘தி இந்து’
‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தத் தொடரைப் படிக்க: http://goo.gl/p5n416 

No comments:

Post a Comment