Wednesday, January 6, 2016

'காந்தி' தாத்தாவுக்குக் கைகொடுத்த செல்லப் பேத்திகள்

                                          ஆசை, சாரி, சுடரொளி ஜி. சுபா, ஜி. பிரபா          படம்: ம. பிரபு

ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 06-01-2016 அன்று சுருக்கமாக வெளியான கட்டுரையின் முழு வடிவம் இங்கே)
    
நம்முடைய ‘தி இந்து’வுக்கு திடீர் விருந்தாளிகள் மூன்று பேர் வந்திருந்தார்கள். சுடரொளி ஜி. பிரபா, சுடரொளி ஜி. சுபா என்கிற குட்டி வாசகிகளும் அவர்களுடைய தந்தை கோவிந்தனும்தான் அந்த மூன்று விருந்தாளிகள். அவர்கள் வந்திருந்த நோக்கம் என்ன தெரியுமா?

சென்னையின் சமீபத்திய மழை வெள்ளத்தில் உயிர்கள், உடமைகள் மட்டுமின்றி அறிவுச் செல்வங்களின் பொக்கிஷங்களான நூலகங்களும் நிறைய மூழ்கிப் போய்விட்டன அல்லவா! அவற்றுள் ஒன்றுதான் தி. நகர் தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் உள்ள ‘காந்தி கல்வி மையம்’. ‘காந்தி கல்வி மையம்’! காந்தி எழுதிய நூல்கள், காந்தியைப் பற்றிய நூல்கள், காந்தியுடன் தொடர்புள்ள நூல்கள் என்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட அரிய களஞ்சியம் அது. நூலகம் மட்டுமல்ல, காந்தியச் சிந்தனைகளை எல்லோரிடமும் கொண்டுசேர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகளும் இந்த மையத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. காந்தியை மாணவர்களிடையே கொண்டுசெல்லும் இவர்களது முயற்சி 15,000 மாணவர்களை எட்டியிருக்கிறது என்றால் பாருங்களேன்!

காந்தி கல்வி மையத்தின் அத்தனை புத்தகங்களும் ஆவணங்களும் வெள்ளத்தால் சர்வநாசமாயின. இந்த நூலகத்துக்கு உயிர் கொடுப்பதற்கான நிதி உதவிகள், புத்தக உதவிகள் உள்ளிட்ட உதவிகளை வேண்டி சில நாட்களுக்கு முன்பு,  ‘உதவி எதிர்பார்க்கிறது காந்தி மையம்’ என்ற கட்டுரையை நமது ‘தி இந்து’ நாளிதழில் வெளியிட்டிருந்தோம். அதைப் படித்துவிட்டுத் தாங்களும் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்தச் சிறுமிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘தி இந்து’ அலுவலகத்துக்கு அவர்கள் வந்த காரணம் இதுதான்.

சுடரொளி ஜி. சுபா 12-ம் வகுப்பு படிக்கிறார். சுடரொளி ஜி. பிரபா ஏழாம் வகுப்பு படிக்கிறார். காந்தியை ஏன் பிடிக்கும் என்று கேட்டதற்கு, “காந்தி தாத்தாவ யாருக்குத்தான் பிடிக்காது! அவருடைய எளிமையும் நேர்மையும் அர்ப்பணிப்பும் எனக்கு அவர்மேல ஈடுபாட ஏற்படுத்திச்சு. அப்படிப்பட்ட காந்தித் தாத்தாவுடைய கொள்கைகளைப் பரப்புற ‘காந்தி கல்வி மையம்’ வெள்ளத்துல மூழ்கிடுச்சுனு இந்து பத்திரிகையில நீங்க எழுதினத படிச்சோம். எனக்கு ரொம்ப வருத்தமாயிடுச்சு. அப்போதான், புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக எங்க பாட்டி ஆயிரம் ரூபா கொடுத்தாங்க. அந்தப் பணத்தை காந்தி கல்வி மையத்துக்குக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணி அப்பாகிட்ட சொன்னேன். அப்பாவுக்கு ரொம்பவும் சந்தோஷம்” என்றார் சுபா.

“அதுசரி, அக்கா ஆயிரம் ரூபாய் கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்காங்க. நீங்க ஏதும் கொடுக்கலையா? என்று சின்னப் பெண் பிரபாவிடம் செல்லமாகச் சீண்டினால் “நானும்தான் என்னோட ஆயிரம் ரூபாயக் கொடுக்கிறேன். நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து ரெண்டாயிரம் ரூபாய். எங்களுக்கு புத்தாண்டைக் கொண்டாடுறதவிட இதுலதான் சந்தோஷமே’ என்று முந்திக்கொண்டு சொல்கிறார் பிரபா.

இந்தக் குட்டி வாசகிகளின் அப்பா கோவிந்தன் பேசினார், “எங்க ரெண்டு பொண்ணுங்களுமே குட்டியிலேருந்தே இப்படித்தான். பெரியவ, சுடரொளி ஜி. சுபா நாலைஞ்சு வயது இருக்கறப்பதான் சுனாமி வந்தது. தன்னோட பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம், அதற்குப் பதிலாக அந்தப் பணத்த சுனாமி நிவாரணத்துக்குக் கொடுத்துடலாம்னு அவளாகவே முடிவெடுத்தா. அவ மட்டுமில்லை சின்னவளும்தான். இப்போ சென்னை வெள்ள நிவாரணப் பணிகள்லயும் ரெண்டு பேரும் ஈடுபட்டிருக்காங்க.”

‘அப்படியா, என்ன நிவாரணப் பணிகள் செஞ்சீங்க?’ என்று பிரபாவிடம் கேட்டோம். “நாங்க எங்க பள்ளிக்கூடத்துல சேகரிச்ச ஏழாயிரம் ரூபாய் பணத்தை வெள்ள நிவாரணத்துக்காகக் கொடுத்தோம். அது மட்டும் இல்லே. நானும் அக்காவும் துளசிங்கபுரத்துக்குப் போய் நிவாரணப் பொருட்கள்லாம் கொடுத்தோம்” என்று அழுத்தம்திருத்தமாகப் பேசினார். ஆங்கிலச் சொற்களே கலக்காமல் பேசியது மட்டுமல்ல தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் பேசினார் பிரபா.

“இப்படி உதவிகள் செய்யுறப்போ உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்வு ஏற்பட்டுச்சு? என்று கேட்டால் அதற்கும் அட்டகாசமாகப் பதில் சொல்கிறார் பிரபா. “நாங்க கொண்டுபோன பிஸ்கட், தண்ணீ பாட்டில் எல்லாத்தையும் பார்த்தபோது அங்க இருந்த குழந்தைகள் முகத்துல சந்தோஷம் எங்களுக்குத் தெரிஞ்சது. அவங்க சந்தோஷத்தப் பார்த்து எங்களுக்கும் மனசுல சந்தோஷம் ஏற்பட்டுச்சு” என்று பெரிய சிரிப்புடன் சொன்னார்.

“சரி, மெட்ரிகுலேஷன் படிக்கிறீங்க. ஆனா, தமிழ்ல இவ்வளவு அழகாப் பேசுறீங்களே. நிஜமா சொல்லுங்க நம்ம பத்திரிகையை நீங்க ரெண்டு பேரும் படிக்கிறீங்களா, இல்லை உங்க அப்பா படிச்சுக் காட்டுவாங்களா?” என்று கேட்டால் ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. “ என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க. நாங்க ரெண்டு பேருமே தினமும் தமிழ் செய்தித்தாள்களப் படிப்போம், தெரியுமா?” என்று ஒரே குரலில் சொல்கிறார்கள்.

“ஆரம்பத்துல அக்காதான் எனக்குப் படிச்சுக் காட்டுவா. இப்பல்லாம் நானே படிக்கிறேன். அப்பா, அக்கா, அம்மா இந்த மூணு பேரும்தான் தினமும் எனக்கு ஏதாவது சொல்லிக்கொடுப்பாங்க” என்கிறார் பிரபா.

“ஆமாம், அக்கா கொடுக்கிற பயிற்சிகள்தான் அதிகம்” என்று பெருமிதமாகச் சொல்கிறார் கோவிந்தன்.

இரண்டு பேருக்குமே ‘மாயாபஜார்’ இணைப்பிதழ் என்றாலே உயிர். அறிவியல் பரிசோதனைகள் குறித்த பகுதி தனக்குப் பிடித்தமானது என்று பிரபா சொல்கிறார்.

‘காந்தி கல்வி மையத்துக்காக இரண்டு பேரும் தந்த இரண்டாயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, ‘தி இந்து’ அலுவலகத்தைச் சுற்றிக்காட்டினோம். ஒரு பத்திரிகை அலுவலகத்துக்குத் தாங்கள் வருவது இதுதான் முதல்முறை என்று அந்தச் சிறுமிகள் சொன்னார்கள். “ஆஹா, யார் இவர்கள் குட்டிப் பத்திரிகையாளர்களாகப் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார்களா?” என்று கேட்ட ‘தி இந்து’ நண்பர்களிடம் விஷயத்தைச் சொன்னதும் இரண்டு சிறுமிகளையும் முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார்கள். பலருடனும் புகைப்படம் எடுத்துக்கொள்வதில் விருப்பம் காட்டினார்கள் அந்தச் சிறுமியர். “நாங்க செய்யிற சின்ன விஷயத்தப் போய் இவ்வளவு பெரிதா ஆக்கி எல்லோரிடம் சொல்லிப் பாராட்டுறிங்களே” என்று இருவருமே சங்கடப்பட்டார்கள். தாங்கள் செய்வது மிகவும் சிறிய விஷயம்தான் என்று அவர்கள் நினைக்கிறார்கள்; எதிர்காலத்தில் அவர்கள் பெரிய பெரிய விஷயங்களைச் செய்யப் போகிறார்கள் என்பதற்கு இதுதான் அடையாளம் என்று தோன்றியது. அவர்கள் புறப்படும்போது ஒன்று கேட்டார்கள், “வேற எங்கேயாவது நிவாரண முகாம்கள் நடந்தா சொல்லுங்க சார். நாங்களும் போய் உதவி செய்யுறோம்.”
 - நன்றி: ‘தி இந்து’
‘தி இந்து’ இணையதளத்தில் இதன் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: http://goo.gl/lGT0I7

     

No comments:

Post a Comment