Thursday, February 18, 2021

சாக்த அழகியல் - ஆசையின் ‘அண்டங்காளி’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து...

 


கலாப்ரியா

கவிஞர் ஆசையின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் இன்று முக நூல் மூலமாக முகம் காட்டுகின்றன.  ’அண்டங்காளி’ அதில் ஒன்று. முதலில் அவற்றிற்காக என் வாழ்த்துகள். 

இயற்கை மனித குலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. எப்போதும் இருக்கும். இயற்கையின், அல்லது இயற்கை நிகழ்வுகளின் பேருண்மையினைக் கண்டு பிடிப்பதே, காரண காரியத்தை ஆராய்வதே  மனித குலத்தின் தொடர்ந்த தேடலாக இருக்கிறது. அந்த வகையான, காரண- காரியத் தேடல் என்பது ஆன்மீகவாதிகள் ஆராய்ச்சியாளர்கள், தத்துவவாதிகளின் தேடல்.இதில் பின் இரண்டு வகையினரின் தேடல் என்பது பருண்மையானது.ஆன்மீக வாதிகளின் தேடல் முற்றிலும் தர்க்கங்களின் அடிப்படியில் அனுமானிக்கப்பட்டது. ஆனால் அது எதுவும் முடிவுற்ற பாடுமில்லை முடிவுறுகிற விஷயமும் இல்லை. அது முடிவுறாதது என்கிற புரிதலுமே ஒருவகைத் தேடலுடன் சேர்ந்ததுதான்,  அதனைப் புரிந்து கொள்கிறவர்கள் கவிஞர்களே. அவர்களே இயற்கையின் இந்தக் கூத்தை ஒரு சக்தியின் கூத்தாக உருவகித்து அதன் எல்லையின்மையையும் முடிவின்மையையும் உணர்ந்து கொள்கிறார்கள். 

”அன்புறு சோதியென்பார்- சிலர் ஆரிருட் காளியென்றுனைப் புகழ்வார்” என்றும்,அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்ததாயின் கைப்பந்தென ஓடுமடா –” என்றும் தன் முன்னோடிகளின் நீட்சியாகத் தானும் பாடவும் ஆரம்பிக்கின்றான். இது கவிஞர்கள் ஓடி ஓடி அலுக்காத பாதை. சபரிநாதன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல இது காளிதாசன், பாரதி எனப் பலர் வியந்துருகிக் கலந்து, புணர்ந்து கும்பிட்டுக் கூடிக் களித்த ஒரு வடிவம்.  கவிஞர்ஆசை அதன் இப்போதைய நீட்சி. அவரே முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல இது எவ்வளவு தூரம் இப்போதையக் கவிதைகளுடன் பொருந்திப் போகும் என்று பார்க்க வேண்டும்

 “முலை தேடி: முலைதேடி “ என்று நான் எழுதிய போது பெரிய கசப்புணர்வுடனேயே 70களில், சிலரே ஏற்றுக் கொண்டார்கள். சக்தி உபாசனை போன்றதொரு கவிதைகளை நான் தாகூரை விலகித் தழுவி எழுதிய போது நான் உண்மையில் உபாசகன் இல்லை. ஒரு வகையில் நாத்திகன் என்று கூடச் சொல்லலாம். அப்புறமாக பிற்காலத்திலேயே பாரதியினை மறுபடி மறுபடி வாசிக்கையில், அவனால் சற்றே மாறி, அந்த வினைச்சியைக் காதலிக்கத் தொடங்கினேன்  என்று சொல்லலாம். அப்போதெல்லாம் பாரதி தன் ’மூன்று காதல்’களை முன் மொழிந்து என்னுள் பாடிக் கொண்டே இருந்தான். அவனே ” கன்னி வடிவமென்றே…”   முதலில் காளியினை கன்னியென்றே நெருங்குகிறான் பின்னரே அவள் அன்னை வடிவமடா என்று வணங்குகிறான். இதன் தாக்கம் அல்லது என் சுய அனுபவம் காரணமாகவோ “புணர்ச்சி முற்றி தாய்மை தரிசிக்கணும்” என்று நான் எழுதினேன். நானும் ஒரு வகை முரணுடனேயே என் கவிதைகளில் ”புணர்ச்சியிலிருந்து தாய்மைக்கு” என்னும் சார்பினை உருவகித்துக் கொண்டேன். ஒரு வகையில் அவருக்கு நான் முன்னோடி. அதனாலேயே நண்பர் ஆசை இதைப் பற்றிப் பேச என்னை அழைத்திருக்கிறாரோ என்னவோ. ஆனால் ஆசைக்கு எனக்கு இருந்த சுதந்திரம் கூட இப்போது இருக்கிறதா தெரியவில்லை. சபரிநாதனும் இது போல் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறார். ஆனால் ஆசை,  துணிச்சலாகத, ”தன் முழு உடலிலும் ஒரு விறைத்த குறிபோல காமம் அதன் தூய நிலையில் பரவியிருந்ததாக’ முன்னுரையில் எழுதுகிறார். அந்தத் தூய்மை பல கவிதைகளில் பளிச்சிட:

ஆடும் அன்னையே

நீ கால்தூக்கக் குறிகண்டு

கண்மூடாப்

பிள்ளை நான்

எனை ஊதி

வெளித்தள்ளிய

உலைத்துருத்தி

வாய்கண்டு

வாய்பிளந்து

நிற்கிறேன்

என்று எழுத முடிகிறது.

தன்னைப் பேய்க்கவியாகவும்  அம்மையை பேய்க்காளியாகவும் உருவகித்து எழுகிறார்.

விந்துத் தெறிப்பிலுன்

வினை வடிவம் காட்டுகிறாய்

ஆதார இருளுணர்த்தும்

குளிரள்ளித் தெளிக்கிறாய்

விந்தை உருவாக்கி

விந்தை உள்வாங்கி

அன்னை நீ புரியும்

அருள்கோலத்தில்

வந்து விழுந்த துளியென்னை

வாங்கிக்கொள் மறுபடியும்

இது பிராய்டியக் கருத்தியலான இடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்று  அலகு பிரிக்க முயல்பவர்களிடம் நான் அப்படி அல்ல என்று சொல்லுவேன். இதில் மறுபடி தாயின் வயிறே சரணம் என்னும் அத்வைதச் சாயல் கூட இருக்கிறது. ஆனால் ஆசை அத்வைதியில்லை, ஆகவும் முடியாது. மேலும், “மறுபடி தாயின் கருப்பை நோக்கி” என்பது பல வேறு தீர்க்கதரிசிகளின் தேடுதலாயும் இருக்கிறது. ஆசை காளியின் அழகோடு அந்தத் தாண்டவத்தையே அதிகம் நேசிக்கிறார்

கண்ணைத் திறந்துகொண்டு

காணும் காளியல்ல நீ

கண்ணை மூடினால்

விழிக்கோளத்துக்கும்

இமையடைப்புக்கும்

இடையே 

இருள்தாண்டவம் ஆடுபவள் நீ

இருட்காளி

உன் இருட்கோலம் 

தடவிய விழிக்கோளம்

இமைதிறக்கக் காணும்

காட்சியெல்லாம் பூணும்

பொருட்கோலம் நீ

பேயிருட்காளி

கண்மூடி நான் காணும்

இருளெல்லாம்

கண் திறந்தே காணவேண்டும்

வழிசெய்

**

’விழிக்கோளத்துக்கும்/இமையடைப்புக்கும்/இடையே இருள்தாண்டவம்  ஆடுபவள் நீ’

என்கிற வரிகள் சாக்த அழகியலின் உச்சம். இப்படிப் பல நல்ல கவிதைகள் நிரம்பிய தொகுப்பு இது. சில நீளமான “ எனக்கும் வாய்த்திருக்கிறாளே பொண்டாட்டி..” போன்ற கவிதைகளைத் தவிர்த்திருக்கலாம். அதே போல பல கவிதைகளில், சபரிநாதன் சொல்வது போல ஓசையின் உத்வேகத்தை நம்பி எழுதப்படும் கவிதைகளுக்கு நேரும் அசம்பாவிதங்கள் பலவும் இங்கு நிகழ்ந்துள்ளன.” அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு,

துர்கணமோ நற்கணமோ 

துயர்கணமோ உயர்கணமோ

அற்புதமோ -உன்- அலங்கோலமோ

அத்தனையும் கவிதைக்குள் வரும்போது

அன்னையின் அருஞ்செயலாய் மாறிவிடும்

அழகென்ன அருளென்ன

அவளின்றி ஒரு கணமும் கழியாத 

நிலையென்ன நினைவென்ன

போன்ற முழுமையும் இறுக்கமுமான ஏனைய பல கவிதைகளைக் கவனிக்கையில்

ஊழியின் கலையாகத் தாண்டவத்தையும் பேய்க்கூத்தின் உருவகமாக காளியையையும் அவள் தாய்மையின் பேறாக பேய்க்கவிஞனாகத் தன்னையும் ஆக்கிக் கொண்டிருக்கிற நல்ல அனுபவத்தை வழங்குகின்றன இந்த அண்டங்காளி தொகுப்பு. 

வாழ்த்துகள் ஆசை.


அண்டங்காளி

ஆசை

விலை: ரூ.100

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEb

No comments:

Post a Comment