Wednesday, May 25, 2016

பறவை தாத்தாவின் அழகான நாட்கள்!


தொகுப்பு: ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ இணைப்பிதழில் 25-05-2016 அன்று வெளியானது)

நம் ஊரில் சாலிம் அலியைப் ‘பறவை தாத்தா’ என்று அழைப்போமல்லவா! அதுபோல் உலகமெல்லாம் ‘பறவை தாத்தா’ என்று அழைக்கப்படுபவர் டேவிட் அட்டன்பரோ. அவர் ‘பறவை தாத்தா’ மட்டுமல்ல. தவளை தாத்தா, குரங்கு தாத்தா, திமிங்கிலம் தாத்தா என்று எல்லா உயிரினங்கள் பேரையும் சொல்லி அழைக்கலாம். அந்த அளவுக்கு இயற்கை உலகில் திரிந்து இயற்கையின் அதிசயங்களை நமக்குத் தொலைக்காட்சி மூலமாக அறிமுகப்படுத்தியவர் அவர்.
பறவைகளின் வாழ்க்கை, பாலூட்டிகளின் வாழ்க்கை, பூமியில் உயிர்வாழ்க்கை போன்றவற்றைப் பற்றி அவர் தயாரித்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உலகெங்கும் மிகவும் பிரபலம். ‘காந்தி’ படம் எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பிதான் டேவிட் அட்டன்பரோ. அவர் தனது 90-வது பிறந்த நாளைத் தற்போது கொண்டாடியிருக்கிறார். இயற்கை உலகில் அவர் வழியாக நமக்குக் கிடைத்த அற்புத தருணங்களில் சில இங்கே.

1. காடழிப்பும் லயர் பறவையும் (‘த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ், 1998)
லயர் பறவையை ஒளிப்படம் எடுத்தபோது கேமராவின் ஷட்டர் சத்தத்தை அது மிமிக்ரி செய்தது. அடுத்து அது செய்தது அட்டன்பரோவை மட்டுமல்ல பார்வையாளர்களையும் வியப்பிலாழ்த்தியது; கூடவே, குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தியது. அப்போது, பக்கத்தில் இயந்திர ரம்பத்தைக் கொண்டு மரங்களை யாரோ வெட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த இயந்திர ரம்பத்தின் சத்தத்தையும் லயர் பறவை மிமிக்ரி செய்தது அட்டன்பரோ படம் பிடித்த மகத்தான தருணங்களுள் ஒன்று.

Tuesday, May 24, 2016

காலப் பயணம் சாத்தியம்தான்



ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 24-05-2016 அன்று வெளியான கட்டுரையின் முழு  வடிவம் இது)

(சென்ற வாரத் தொடர்ச்சி)
காலப் பயணம் சாத்தியமா என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் காலம் என்பது என்ன என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

காலம் ஒரு அம்பு போல முன்னே பாய்ந்துகொண்டு செல்கிறது என்றும், பூமி, செவ்வாய், சூரியன் என்று பிரபஞ்சத்தில் எங்கும் காலம் ஒரே மாதிரி பயணித்துக்கொண்டிருக்கிறது என்றும் காலத்தைப் பற்றிச் சொல்லும் நியூட்டன் சொல்கிறார். நியூட்டன் காலத்துக்குப் பிறகு, 18-ம் நூற்றாண்டில் இத்தாலிய அறிவியலாளர் லக்ராஞ், இயக்கவியலைப் பற்றிச் சொல்லும்போது ‘இயக்கம் என்பது நான்கு பரிமாணங்களில் நடைபெறுகிறது. மூன்று பரிமாணங்கள் இடத்தைச் சார்ந்தவை, ஒரு பரிமாணம் காலம்’ என்று காலத்தை நான்காவது பரிமாணமாக முன்வைக்கிறார். அதற்குப் பிறகு ‘நான்காவது பரிமாணமாகக் காலம்’ என்ற கோட்பாடு சூடுபிடிக்கிறது.

 காலத்தைப் பற்றிய கோட்பாடுகள் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிப் போடுகிறார் ஐன்ஸ்டைன். அண்டவெளி, காலம் இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த ‘கால-வெளி’ என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். காலத்தை ஐன்ஸ்டைன் ஒரு நதிபோல உருவகிக்கிறார். நதி எப்படி ஒரு இடத்தில் வேகமாகவும் வேறொரு இடத்தில் மெதுவாகவும் போகிறதோ அதுபோலத்தான் காலமும் என்றார். அதாவது, இந்தப் பிரபஞ்சத்தில் எல்லா இடத்திலும் காலம் என்பது ஒன்று போல் இல்லை. செவ்வாய் கிரகத்தின் ஒரு நொடியும் பூமியின் ஒரு நொடியும் ஒன்று கிடையாது. அதேபோல் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு இடத்தில் இருக்கும் விண்மீனின் ஒரு மணி நேரமும் பூமியின் ஒரு மணி நேரமும் ஒன்று இல்லை என்பதை 1915-ல் வெளியான ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் கோட்பாடு சொல்கிறது.

வாசகர் திருவிழா 2016: அறிவுலகக் கொண்டாட்டத்துக்கு நீங்கள் தயாரா?


ஆசை
('சென்னை புத்தகக் காட்சி’ தொடங்கவிருப்பதை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 23-05-2016 அன்று வெளியான கட்டுரை)

ஜூன் 1-ல் தொடங்கவிருக்கிறது புத்தகக் காதலர்களுக்கான கொண்டாட்டம் சென்னைப் புத்தகக் காட்சி 2016.
சென்னை பெருமழை வெள்ளத்தின் காரணமாக இந்த ஆண்டு ஜனவரியில் நடக்கவிருந்த ‘சென்னை புத்தகக் காட்சி’ ரத்தானது. தொடர்ந்து தேர்வுகள், தேர்தல் என்று தள்ளிப்போய்க்கொண்டிருந்த இந்தப் புத்தகக் காட்சி, ஜூன் 1-ல் நடக்கிறது. இந்த ஆண்டு புத்தகக் காட்சி நடைபெறவிருக்கும் இடம் தீவுத்திடல்.
சுமார் 700 பதிப்பகங்கள், 15 லட்சம் தலைப்புகள் என்று பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் இந்தப் புத்தகக் காட்சி, இந்த முறை ரூ.15 கோடி விற்பனை இலக்கைக் கொண்டிருக்கிறது.
சென்னை பெருவெள்ளத்தில் புத்தகக் காட்சி தள்ளிப்போனது மட்டும் இழப்பல்ல. 60-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வெள்ளத்தால் ரூ.25 கோடிக்கும் மேல் கடுமையான இழப்பு ஏற்பட்டது. ‘தமிழ் மண்’, ‘லியோ புக்ஸ்’, ‘நர்மதா’, ‘இந்து’ போன்ற பதிப்பகங்கள் தலா ஒரு கோடிக்கும் மேல் இழப்பைச் சந்தித்தன. இவை தவிர, சிறு பதிப்பகங்களுக்கும் சிறு விற்பனையாளர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு மிகுந்த வேதனையளிக்கக்கூடியது. அந்தப் பதிப்பாளர்களுக்கெல்லாம் புத்தகக் காட்சிகளையும் வாசகர்களையும்விட அதிக ஆறுதலை யாரால் தர முடியும்? அதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது.

Sunday, May 22, 2016

ஒரு செல்ஃபி... பெரு மகிழ்ச்சி!

ஆசை
(2016 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ இணைப்பிதழில் வெளியான கட்டுரை)

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பெயர் சூட்டப்படுவது வழக்கம். சமூகம், தொழில்நுட்பம் எல்லாம் மாற மாற ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு புதுப் பெயர் அடுத்தடுத்து மாறிக்கொண்டே இருக்கிறது.
தொலைக்காட்சி தலைமுறை, இணைய தலைமுறை எல்லாம் அடுத்தடுத்து ஃபேஸ்புக் தலைமுறையாகவும் ஸ்மார்ட்போன் தலைமுறையாகவும் உருமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் தற்போதைய தலைமுறை ‘செல்ஃபி தலைமுறை’.
எங்கு பார்த்தாலும் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்களுக்கு முன்னே கையை நீட்டிக்கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டிருப்பதைக் காண முடியும். மெட்ரோ ரயில், மெரினா பீச், மால்கள், போக்குவரத்து நெரிசல், பேருந்து படிக்கட்டுகள் என்று செல்ஃபியின் ஷூட்டிங் ஸ்பாட்டுகள் ஏராளம்.

Tuesday, May 17, 2016

காலப் பயணம் சாத்தியமா?



ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 17-05-2016 அன்று வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது)

சூர்யா மூன்று வேடத்தில் நடித்து சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘24’ படம் காலப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டது. நிகழ்காலத்திலிருந்து கடந்த காலம், எதிர்காலம் என்று இரண்டு காலங்களுக்கும் பயணிப்பதே காலப் பயணம் என்ற கோட்பாடு. ஹாலிவுட் திரைப்படங்கள் உள்ளிட்ட மேல்நாட்டுத் திரைப்படங்களில் காலப் பயணத்தைப் பற்றிய திரைப்படங்கள் கணக்கில்லாமல் வெளிவந்திருக்கின்றன. இங்கோ, இப்போதுதான்இன்று நேற்று நாளை’, ‘24’ என்று சாத்தியமாகிக்கொண்டிருக்கிறது. ‘காலப் பயணம்என்பது இதுவரை கற்பனையாக இருந்தாலும் இயற்பியலை அடிப்படையாகக் கொண்டது. இயற்பியலில் நம்பவே முடியாத சாதனைகளை நவீன காலத்தில் செய்துகொண்டிருக்கும் மேலை அறிவியலின் மண்ணில்தானே அது சார்ந்த கற்பனைகளும் செழித்து வளரும்.

காலப் பயணம் குறித்த திரைப்படங்கள், அறிவியல் புனைகதைகள் போன்றவை மேலைநாடுகளிலிருந்து அதிகம் வெளிவந்தாலும்காலப் பயணம்என்பதொன்றும் புதிய சிந்தனை கிடையாது. கீழை தேசங்களின் புராணங்களிலும் காலப் பயணத்துக்கு ஒப்பாகக் கூறப்படும் தொன்மங்கள் காணப்படுகின்றன.

Saturday, May 14, 2016

இயற்கை மீதான ஆர்வம் இன்னும் தீரவில்லை எனக்கு! - டேவிட் அட்டன்பரோ பேட்டி


('தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 14-05-2016 அன்று எனது மொழிபெயர்ப்பில் வெளியான பேட்டி)

இயற்கை உலகை ஆவணமாக்கிய கலைஞர் டேவிட் அட்டன்பரோ கடந்த ஞாயிறு அன்று 90 வயதைத் தொட்டிருக்கிறார். இவர் ‘காந்தி’ என்ற புகழ்பெற்ற படத்தை எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பி. ‘லைஃப் ஆன் எர்த்’, ‘த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ்’ போன்ற புகழ்பெற்ற ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கிறார்.
புகழ்பெற்ற ‘பிளானட் எர்த்’ தொடரின் இரண்டாம் பாகத்துக்கும் அவரே குரல் கொடுக்கப்போகிறார் என்று பி.பி.சி. சமீபத்தில் அறிவித்திருக்கிறது. தயாரிப்பாளர், எழுத்தாளர், நிகழ்ச்சி வழங்குபவர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்து அவர் வழங்கிய ஆவணப்படங்களும் தொடர்களும் 100-ஐத் தாண்டும். அவரது புத்தகங்களின் எண்ணிக்கையும் 25-ஐத் தாண்டும். எனினும் அவரது ஆர்வமும் உத்வேகமும் சற்றும் குறைந்தபாடில்லை. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியிலிருந்து:
பூச்சிகளைப் பற்றி பெரும்பாலானோர் புரிந்துகொள்ளத் தவறும் விஷயங்கள் என்ன?
அறிவு என்பது மகத்தான விஷயம், மூடநம்பிக்கைதான் அதன் எதிரி. எல்லா சிலந்திகளும் கடிக்கும் என்பதும், அவை எல்லாமே விஷம் கொண்டவை என்பதும் மூடநம்பிக்கைகள்தான். ஆகவே, இவற்றைப் பற்றி மேலும்மேலும் தெரிந்துகொள்வது நமக்கு நன்மை தரும். மரவட்டை என்பது உண்மையில் தாவர உண்ணி என்றும், அதன் வாய்ப்பகுதி மிகவும் நுண்ணியதாக இருப்பதால் அதனால் நம்மைக் கடிக்க முடியாது என்றும் நமக்குத் தெரிந்திருந்தால் நம் உடலின் மீது மரவட்டை ஊர்வதைப் பற்றி நாம் எந்தக் கவலையும் பட மாட்டோம்.
இன்னொரு புறம் பூரான்கள். மரவட்டைகளைவிட குறைவான கால்களைக் கொண்டவை அவை. ஆனால், வேகமாக நகரக்கூடியவை. வேட்டை இயல்பு கொண்ட பூரான்கள் கடித்தால் விஷம் என்பது நமக்குத் தெரிந்ததால்தானே, அவற்றை நாம் அண்டுவதில்லை!

Friday, May 13, 2016

என் தந்தையைக் கொன்றவரை வெறுக்காமல் இருப்பது எப்படி?


ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ இணைப்பிதழில் 13-05-2016 அன்று வெளியான கட்டுரை)

மரண தண்டனைக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களிடம் வழக்கமாகச் சில கேள்விகள் கேட்கப்படும். உங்கள் அப்பாவையோ மகனையோ கொன்ற வர்களை மன்னித்து அவர்களுக்கு மரண தண்டனை வேண்டாம் என்று சொல்வீர்களா? உங்கள் தங்கையைப் பாலியல் பலாத்காரம் (ரேப்) செய்து கொன்றவனை மன்னித்து அவனுக்கு மரண தண்டனை வேண்டாம் என்று சொல்வீர்களா? இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வது கொஞ்சமல்ல, ரொம்பவே கஷ்டம்தான். தனக்கென்று வரும்போது பெருந்தன்மை, மன்னிப்பு, இரக்கம் போன்றவற்றை மனிதர்களால் அந்த அளவுக்குப் பின்பற்ற முடியவில்லைதான். ஆனால், அதே நேரத்தில் இவை ஒன்றும் பின்பற்ற முடியாதவையும் இல்லை.
இந்தியப் பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இந்துக்களும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு முஸ்லிம்களும் புலம்பெயர்ந்தபோது இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கொன்றழித்துக்கொண்டார்கள். அப்போது பத்து லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்திருக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். எல்லா இடங்களிலும் மாற்றுத் தரப்பினரின் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்று குவித்துக்கொண்டிருந்தார்கள். ரயில்கள் முழுவதும் பிணங்களைச் சுமந்துகொண்டு சென்றன/ வந்தன. முஸ்லிம்களை இந்துக்களும் இந்துக்களை முஸ்லிம்களும், ‘எங்கள் சொந்தங்களையும் பந்தங்களையும் கொன்றழித்தவர்கள் நீங்கள்’ என்று சொல்லிக் கொன்றழித்தார்கள். (இந்துக்களோடு சீக்கியர்களும் கைகோத்துக்கொண்டார்கள்).

Tuesday, May 10, 2016

அடுத்தது குவாண்டம் ஸ்மார்ட்போன்தானா?


ஜோயனா கிளெய்ன்

 ('தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 10-05-2016 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

கடந்த சில ஆண்டுகளாக கணினிகள், கைபேசிகள் போன்றவற்றுக்கான திரைகளை உற்பத்தி செய்பவர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் விஷயம் என்ன தெரியுமா? குவாண்டம் புள்ளிகள் என்று அழைக்கப்படும் நுண்ணிய படிகங்களை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்பதுதான். குறைந்த செலவில் மிகவும் துல்லியமான, பிரகாசமான உருவங்களை தொலைக்காட்சி, கைபேசித் திரைகளில் வழங்குவதுதான் இதன் பின்னுள்ள நோக்கம். குவாண்டம் புள்ளித் திரையுடன் ஐமேக்கை ஆப்பிள் வெளியிடப்போகிறது என்ற பேச்சு கடந்த ஆண்டு அடிபட்டது. ஆனால், அந்த நிறுவனம் வேறு தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டது. இந்த நுண்படிகங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகள் சுற்றுச்சூழலுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கக்கூடியவை என்று அதற்குக் காரணம் காட்டினார்கள். சாம்சங் தனதுஎஸ்.யூ.எச்.டிடிவியை சுற்றுச்சூழலுக்கு இயைந்த குவாண்டம் புள்ளித் தொழில்நுட்பத்தில் உருவாக்கி வழங்குகிறது. ஆனால், அது மலிவான விலையில் கிடைப்பதில்லை.

விண்வெளியில் மாதவிடாய் ஏற்படுமா?



பாம் பெல்லக்
(’தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 08-05-2016 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)
சர்வதேச விண்வெளி நிலையத்தின் கழிப்பறை

கடந்த 50 ஆண்டுகளில் இதுவரை 50 பெண்கள் விண்வெளியில் பறந்திருக்கின்றனர். இதைக் கணக்கில் வைத்துக்கொண்டு பார்க்கும்போது நமக்கு இயல்பாகவே ஒரு கேள்வி மனதில் எழும்: விண்வெளியில் பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சியை எப்படிச் சமாளிப்பது?
என்பிஜே மைக்ரோகிரேவிட்டிஎன்ற இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வுக்கட்டுரை இது குறித்து அலசுகிறது. விண்வெளி வீராங்கனைகளில் பலர் விண்வெளியில் இருக்கும்போது தங்கள் மாதவிடாயைத் தள்ளிப்போடவே விரும்புகிறார்கள் என்று அது சொல்கிறது. குறிப்பாக, நிறைய நாட்கள் நீளும் விண்வெளிப் பயணம் என்றால் இந்தத் தேர்வை மேற்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். விண்வெளியில் மாதவிடாயைச் சமாளிப்பது எப்படி என்பது குறித்து மேற்கண்ட ஆய்வுக்கட்டுரை விவரிக்கிறது. உடலில் பதிக்கப்படும் கருத்தடை மருந்து, கருப்பைக்குள் செலுத்திவைக்கப்படும் சாதனங்கள் போன்ற நீடித்துச் செயல்படும் கருத்தடை வழிமுறைகளைப் பயன்படுத்துவது பலனளிக்கலாம் என்று அந்த ஆய்வு சொல்கிறது. இது விண்வெளிப் பெண்களுக்குச் சாதகமானது மட்டுமல்ல, பொருட்களை ஏற்றிச்செல்வதில் விண்கலங்களில் உள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடியது.

விண்வெளியில் மாதவிடாய் ஏற்படுவதில் உடல் சார்ந்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார்கள் அந்த ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்களான வர்ஷா ஜெயினும் வர்ஜினியா . வோட்ரிங்கும். லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த வர்ஷா ஜெயின் விண்வெளி மகப்பேறியல் நிபுணராக இருப்பவர். பேலர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த வோட்ரிங்கை விண்வெளி மருந்தியல் நிபுணர் என்று சொல்லலாம். (விண்வெளியில் கிட்டத்தட்ட ஈர்ப்பு விசையே இல்லாதிருப்பதால் உள்நோக்கிய மாதவிடாய் ரத்தப்போக்கு ஏற்படும் என்றும், வயிற்றில் இந்த ரத்தம் தேங்கி நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுபவையெல்லாம் கட்டுக்கதைகள் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.)

Wednesday, May 4, 2016

எங்கிருந்து வந்தது நீர்?


நிக்கோலா செந்த் ஃப்ளர்
('தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 03-05-2016 அன்று எனது மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

பூமி மிகவும் பழமையானது. சூரியன் மிகவும் பழமையானது. ஆனால், இந்த இரண்டையும் விடப் பழமையானதாக இருக்கக்கூடிய ஒன்று.
இந்த உலகம் எப்படி நீர்சூழ் உலகானது என்பது ஒரு புதிரே. ஆனால், இது குறித்து அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு உள்ளது. அண்டவெளி மேகமொன்றில் மிதந்துகொண்டிருந்த பனித் துகள்களிலிருந்துதான் நமது பூமியில் உள்ள நீர் வந்திருக்கிறது என்கிறது அந்தக் கோட்பாடு. இது நடந்தது நமது சூரியன் உருவாவதற்கு முன்னால், அதாவது 460 கோடி ஆண்டுகளுக்கும் முன்னால்.
ஹைட்ரஜனின் குண்டான சகோதரி
வானியலாளர்களின் கணக்கீடுகளின்படி பார்த்தால் பூமியில் இருப்பதில் பாதியளவு நீர் அந்த அண்டவெளி மேகத்திலிருந்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது. அப்படியென்றால் நாம் குடிக்கும் நீரும், பூமியின் பெருங்கடல்களை நிரப்பியிருக்கும் நீரும் சூரியக் குடும்பத்தைவிட கோடிக் கணக்கான ஆண்டுகள் பழமையானவை என்று அர்த்தமாகிறது.