ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ இணைப்பிதழில் 13-05-2016 அன்று வெளியான கட்டுரை)
மரண தண்டனைக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களிடம் வழக்கமாகச் சில கேள்விகள் கேட்கப்படும். உங்கள் அப்பாவையோ மகனையோ கொன்ற வர்களை மன்னித்து அவர்களுக்கு மரண தண்டனை வேண்டாம் என்று சொல்வீர்களா? உங்கள் தங்கையைப் பாலியல் பலாத்காரம் (ரேப்) செய்து கொன்றவனை மன்னித்து அவனுக்கு மரண தண்டனை வேண்டாம் என்று சொல்வீர்களா? இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வது கொஞ்சமல்ல, ரொம்பவே கஷ்டம்தான். தனக்கென்று வரும்போது பெருந்தன்மை, மன்னிப்பு, இரக்கம் போன்றவற்றை மனிதர்களால் அந்த அளவுக்குப் பின்பற்ற முடியவில்லைதான். ஆனால், அதே நேரத்தில் இவை ஒன்றும் பின்பற்ற முடியாதவையும் இல்லை.
இந்தியப் பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இந்துக்களும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு முஸ்லிம்களும் புலம்பெயர்ந்தபோது இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கொன்றழித்துக்கொண்டார்கள். அப்போது பத்து லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்திருக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். எல்லா இடங்களிலும் மாற்றுத் தரப்பினரின் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்று குவித்துக்கொண்டிருந்தார்கள். ரயில்கள் முழுவதும் பிணங்களைச் சுமந்துகொண்டு சென்றன/ வந்தன. முஸ்லிம்களை இந்துக்களும் இந்துக்களை முஸ்லிம்களும், ‘எங்கள் சொந்தங்களையும் பந்தங்களையும் கொன்றழித்தவர்கள் நீங்கள்’ என்று சொல்லிக் கொன்றழித்தார்கள். (இந்துக்களோடு சீக்கியர்களும் கைகோத்துக்கொண்டார்கள்).
ஆனாலும், இது ஒரு பக்கத்து உண்மை மட்டுமே. இந்த வஞ்ச உணர்வே முழுமையாக இருந்திருந்தால் இரண்டு தரப்பினரும் முற்றிலும் அழிந்துபோயிருப்பார்கள். இரண்டு தரப்பிலும் உள்ள நல்ல மனம் படைத்தவர்கள் கணக்கில்லாத அளவில் மாற்று மதத்தவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ‘1947 தேசப் பிரிவினை ஆவணக் காப்பகம்’ (1947 Partition Archive) என்ற இணையதளத்தில் அதிரவைக்கும் பயங்கரங்களுடன், நெகிழ வைக்கும் சம்பவங்களும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
பாகிஸ்தானிலிருந்து தன் குடும்பத்தினரை இழந்து நிராதரவாக இந்தியா வந்த ஒரு பையனை டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா நிர்வாகம் தத்தெடுத்துக்கொண்டு அவனைப் படிக்க வைத்தது. அந்தப் பையன் அங்கேயே வளர்ந்து படித்து, தற்போது கனடாவில் வசிக்கிறார். அதேபோல் வெறிபிடித்துத் துரத்திக்கொண்டு வந்த முஸ்லிம் கும்பலிடமிருந்து ஒரு இந்துவைக் காப்பாற்றி ரயிலின் முதல் வகுப்பில் ஒரு முஸ்லிம் அன்பர் ஒளியவைத்துக்கொண்ட சம்பவம் பற்றியும் அந்த இணையதளத்தில் படிக்கக் கிடைக்கிறது. இதுபோன்று இன்னும் ஏராளம்.
பிரபலமான ‘காந்தி’ படத்தில் ஒரு காட்சியைப் பார்த்திருப்பீர்கள். தேச விடுதலையை ஒட்டி ஏற்பட்ட பிரிவினையின்போது இரண்டு தரப்புமே மூர்க்கமாகக் கலவரங்களில் ஈடுபட்டதைத் தடுத்து நிறுத்துவதற்காக காந்தி உண்ணாவிரதம் இருக்கும் காட்சி ஒன்று அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும். அவர் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தவுடன் கல்கத்தாவில் கலவரங்கள் ஓய ஆரம்பித்து வன்முறையாளர்கள் காந்தியைத் தேடி வந்து ஆயுதங்களைக் கீழே போடுகிறார்கள். அப்போது கையில் சப்பாத்திகளுடன் ஒல்லியாக ஒரு மனிதர் (ஓம் பூரி) ஓடி வருவார். காந்தியிடம் வீசி அவற்றைச் சாப்பிடச் சொல்வார். ‘நான் ஒரு முஸ்லிம் குழந்தையை சுவரில் மோதிக் கொன்றுவிட்டேன்’ என்பார் ஓம் பூரி. ‘ஏன்?’ என்று காந்தி கேட்பார். ‘முஸ்லிம்கள் என் குழந்தையைக் கொன்றுவிட்டனர். அதனால்தான் பழிவாங்குவதற்காக அப்படிச் செய்தேன்’ என்பார் ஓம் பூரி. ‘இந்தப் பாவத்திலிருந்து வெளிவர வேண்டுமென்றால் நான் சொல்வதைச் செய். கலவரத்தில் தாய் தந்தையரை இழந்த ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள். அந்தக் குழந்தை முஸ்லிம் குழந்தையாக இருக்க வேண்டும். அதைக் கடைசி வரை முஸ்லிமாகத்தான் வளர்க்க வேண்டும்’ என்பார் காந்தி. ஓம் பூரி காந்தியின் கால்களைக் கட்டிக்கொண்டு அழுவார். உண்மையில் நடந்ததையே படத்தில் சித்தரித்தார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
உலக அளவிலும் நிறைய உதாரணங்கள் காட்டலாம். தென்னாப்பிரிக்காவில் இருந்த மிகக் குறைந்த அளவிலான வெள்ளையர்கள், பெரும்பான்மையினராக இருந்த கறுப்பினத்தவரை மிக மோசமாக அடக்கியாண்டார்கள். நிறவெறி தலைவிரித்தாடியது. கறுப்பினத்தவருக்காகப் போராடி, 27 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டு விடுதலையானார் மண்டேலா. சிறையிலிருந்து வெளியே வந்த அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபராகவும் ஆகிறார். ஆட்சி அதிகாரம் கிடைத்த பிறகு அவர் நினைத்திருந்தால் அங்கிருந்த வெள்ளையர்களை கறுப்பினத்தவரின் ஆதரவோடு அழித்தொழித்திருக்கலாம். ஆனால், அவர் மன்னிப்பின் பாதையை, பெருந்தன்மையின் பாதையை, சகோதரத்துவத்தின் பாதையையே தேர்ந்தெடுத்தார். துணை அதிபர் பொறுப்பை எஃப்.டபிள்யூ. டி கிளர்க் என்ற வெள்ளையினத்தவருக்குக் கொடுத்து கறுப்பினத்தவர்-வெள்ளை யினத்தவர் சமரசத்துக்கு வழிவகுத்தார்.
மன்னிக்கும் இதயம், வெறுப்பைக் கடத்தல் போன்ற குணங்களெல்லாம் ஏதோ ஏசு, காந்தி, மண்டேலா போன்றவர்களுக்குத்தான் சாத்தியப்படும் என்று நினைத்துவிட வேண்டாம். வரலாற்றில் இடம்பெறாமல் நம் அன்றாட வாழ்வில் இந்தச் செயல்களை செய்துகொண்டிருப்போருக்கு எக்காலத்திலும் குறைவில்லை. சொல்லப்போனால் மனிதர்களின் மூர்க்கம், வன்முறை, வக்கிரம், பேராசை, பொறாமை போன்ற குணங்களால் ஏற்படும் பேரழிவுகளைச் சமநிலைப்படுத்த எளிய மனிதர்களின் அற்புத குணங்களே உதவுகின்றன. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் குர்மெஹர் கவுர்.
இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது கார்கில் போரில் தன் தந்தையை இழந்த கவுர், முஸ்லிம்களையும் பாகிஸ்தானையும் வெறுத்து வந்தவர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் தாய்தான் இந்த வெறுப்பைக் கடக்க அவருக்கு உதவினார். தான் எப்படி வெறுப்பைக் கடந்தேன் என்றும், இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் சமாதானமாக ஏன் வாழ வேண்டும் என்றும் கவுர் வழங்கியிருக்கும் ஒரு வீடியோ இந்த வாரம் இணையத்தில் வைரலாகிவருகிறது. வெறுப்பைக் கடப்பது மிகவும் கடினம்தான். ஆனால், கடந்தாக வேண்டியதுதான் மனித குலம் சமாதானத்துடன் வாழ வழிவகுக்கும். இந்தச் செய்தியைக் கூறும் கவுரின் இந்த வீடியோவை அவசியம் பாருங்கள்: https://goo.gl/YLYQUM (தற்போது இந்த வீடியோ அகற்றப்பட்டிருக்கிறது)
குர்மெஹர் கவுரின் வேண்டுகோள்
வெறுப்பைக் கடந்தேன்
‘ஹாய், என் பெயர் குர்மெஹர் கவுர். இந்தியாவிலுள்ள ஜலந்தர்தான் என் ஊர். இவர்தான் என்னுடைய அப்பா கேப்டன் மந்தீப் சிங் (புகைப்படத்தைக் காட்டுகிறார்). 1999-ல் நடந்த கார்கில் போரில் அவர் கொல்லப்பட்டார். அவர் இறந்தபோது எனக்கு 2 வயதுதான். அவரைப் பற்றிய நினைவுகள் எனக்கு மிகவும் குறைவு. அதைவிட, அப்பா இல்லாமல் இருப்பதென்றால் என்ன என்பது குறித்த நினைவுகள்தான் எனக்கு அதிகம். பாகிஸ்தானையும் பாகிஸ்தானியர்களையும் நான் எந்த அளவுக்கு வெறுத்தேன் என்றும் எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள்தானே என் தந்தையைக் கொன்றார்கள்.
முஸ்லிம்களையும் நான் வெறுத்தேன். ஏனென்றால் எல்லா முஸ்லிம்களும் பாகிஸ்தானியர்களே என்று நான் நினைத்தேன். நான் 6 வயது சிறுமியாக இருந்தபோது பர்தா போட்டுக்கொண்டு வந்த ஒரு பெண்ணைக் கத்தியால் குத்த முயன்றேன். ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் பெண்தான் என் அப்பாவின் மரணத்துக்குப் பொறுப்பு என்று நான் நம்பியதால்தான் அப்படிச் செய்தேன். என் அம்மா என்னைத் தடுத்து நிறுத்தினார். என் தந்தையைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல; போர்தான் என்பதை எனக்கு அவர் புரிய வைத்தார். அதைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு சற்றுக் காலம் பிடித்தது. ஆனால், இன்று என் வெறுப்பைப் போக்க நான் கற்றுக்கொண்டுவிட்டேன். அப்படிச் செய்வது எளிதல்லதான், ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சிரமமானதும் அல்ல. என்னால் இதைச் செய்ய முடிகிறது என்றால் உங்களாலும் செய்ய முடியும்தானே!
இன்று நானும் ஒரு போர்வீரரே, என் அப்பாவைப் போல. இந்தியா, பாகிஸ்தான் இடையே சமாதானம் ஏற்படுவதற்காக நான் போரிடுகிறேன். எந்தப் போருமே இல்லாமல் இருந்திருந்தால் என் அப்பா இன்னமும் உயிரோடு இருந்திருப்பார் அல்லவா! இரு நாட்டு அரசாங்கங்களும் பிரச்சினையைத் தீர்ப்பதுபோல் நடிப்பதை விட வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த காணொலியை உருவாக்கியிருக்கிறேன். 2 உலகப் போர்களுக்குப் பிறகும் ஃபிரான்ஸும் ஜெர்மனியும் நட்பு நாடுகளாக ஆக முடியுமென்றால், ஜப்பானாலும் அமெரிக்காவாலும் தங்கள் கடந்த காலத்தை மறந்துவிட்டு முன்னேற்றத்தை நோக்கி உழைக்க முடியுமென்றால் நம்மால் ஏன் முடியாது? பெரும்பாலான இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் அமைதியான வாழ்வையை விரும்புகிறார்கள், போரை அல்ல. இரு நாட்டுத் தலைமைகளின் தகுதியையே நான் கேள்வி கேட்கிறேன். மூன்றாம் உலகத் தலைமையை வைத்துக்கொண்டு, முதல் உலக நாடாக ஆவது பற்றி நாம் கனவு கண்டுகொண்டிருக்க முடியாது. (மூன்றாம் உலகம்: ஏழை நாடுகள், முதல் உலகம்: பணக்கார நாடுகள்). தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள், ஒருவருக்கொருவர் பேச்சுவார்த்தை நடத்துங்கள், காரியத்தை நிறைவேற்றுங்கள். போதும், அரசாங்கங்களால் ஆதரவளிக்கப்படும் தீவிரவாதம்.
போதும், அரசாங்கங்களால் உளவாளிகள் அனுப்பப்படுவது. போதும், அரசாங்கங்களால் உருவாக்கப்படும் வெறுப்புப் பிரச்சாரம். நாட்டு எல்லையின் இரண்டு பக்கத்திலுமே ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். போதும், இனிமேலும் தாங்க முடியாது. குர்மெஹர் கவுர்கள் தங்கள் தந்தைகளை இழந்து தவிக்கும் நிலை இல்லாத உலகிலேயே வாழ நான் ஆசைப்படுகிறேன். நான் மட்டும் தனி ஆள் கிடையாது, என்னைப் போன்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.’ இப்படிச் சொல்லும் வாசகங்கள் தாங்கிய அட்டைகளைக் காட்டிவிட்டுக் கடைசியாக #ProfileForPeace என்ற ஹேஷ்டேகைக் காட்டிவிட்டு எழுந்து செல்கிறார் கவுர்.
- நன்றி: ‘தி இந்து’ (http://goo.gl/dkqbvW)
என் தந்தையைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல; போர்தான் என்ற தலைப்பில் நாளிதழ்களில் வந்த செய்தியைப் படித்தேன். இப்பதிவு மூலமாக மேலும் பல செய்திகளை அறிந்தேன். குர்மெஹர் கவுர் சொல்வதைப் போல வெறுப்பைக் கடக்க முயற்சித்தால் பகைமை உணர்வு குறைய வாய்ப்புண்டு.
ReplyDelete