Monday, April 11, 2016

நம்முடைய மொழி ஆண்களின் மொழியா?


ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 10-04-2016 அன்று வெளியான கட்டுரை)
  
‘கவிஞன் என்பவன்’, ‘எழுத்தாளன் என்பவன்’, ‘நடிகன் என்பவன்’, ‘உழைப்பாளி என்பவன்’, ‘புரட்சியாளன் என்பவன்’ என்றெல்லாம் தொடங்கும் ஏராளமான வாக்கியங்களை நமது அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் தினசரி நாம் எதிர்கொண்டுவருகிறோம். இந்த வாக்கியங்களை ஒரு பெண் படிக்கும்போது அவருக்கு என்ன தோன்றும்? ‘ஓஹோ, கவிதை, எழுத்து, நடிப்பு, உழைப்பு, புரட்சி என்று அனைத்தும் ஆண்களால்தான் செய்யப்படுகின்றனவோ?’ என்ற கேள்விதானே எழும். இதெல்லாம் பரவாயில்லை. இந்த வாக்கியங்களைவிட அதிகமாக நாம் தினசரி எதிர்கொள்வது, ‘மனிதன் என்பவன்’, ‘மனிதன் இருக்கின்றானே’ ரீதியிலான வாக்கியங்கள்தான். அப்படியென்றால் பெண்கள் மனித குலத்தில் சேர்த்தி இல்லையோ? மனித குலம் என்றாலே அதை ஆண்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதுதான் இயல்பாக நடந்துவரும் விஷயம் அல்லவா? இதை யாரிடம் சென்று முறையிடுவது? ‘படைத்தவனிடமா?’ அங்கும் ஆண்தானே உருவகிக்கப்பட்டிருக்கிறார்? ‘அவனிடம்’ போனால் என்ன நியாயம் கிடைக்கும்?
இந்தக் கேள்விகளெல்லாம் தமிழில் சிறுபத்திரிகைகளில் பெண்ணுரிமையைப் பற்றி எழுதுபவர்களின் வட்டத்தைத் தாண்டி நாம் அதிகம் எதிர்கொள்ளாதவை. மேலைநாடுகளிலோ 
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே இந்தக் கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு, அவற்றை அந்தச் சமூகங்களும் எதிர்கொண்டு, அவற்றுக்குத் தீர்வு காணவும் முயன்றுவருகின்றன.


இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ‘வரலாறு’ என்று பொருள்படும் ‘ஹிஸ்டரி’ (History) என்ற ஆங்கிலச் சொல்லின் மீதே பெண்ணியவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். ‘ஹிஸ்டரி’ என்ற சொல்லில் இருக்கும் ‘ஹிஸ்’ (His- அவனுடைய) என்ற பதமே ஆண் வாடை அடிப்பதாக இருக்கிறது என்று அதற்கு மாற்றாக ‘ஹெர்ஸ்டோரி’ (Herstory- அவள் சரிதை) என்ற வார்த்தையை உருவாக்கினார்கள். ‘ஹிஸ்டரி’ என்ற சொல்லுக்கும் ‘ஹிஸ்’ என்ற சொல்லுக்கும் வேர்ச்சொல் அளவில் எந்தத் தொடர்புமில்லை. ஆனால், காலம்காலமாக வரலாறு எழுதப்பட்டுவந்திருக்கும் விதமே அதை ‘ஆண் வரலாறு’ என்றுதான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. பெண்கள் அதிகம் வரலாறு எழுதவில்லை, வரலாறு படைக்கவில்லை என்பது இதற்கு பதிலாக சொல்லப்படுகிறது. உண்மை அதுவல்ல, வரலாறு எழுதவோ படைக்கவோ பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மையான வரலாறு.

மொழி என்பது நம் உணர்வு, மனநிலை, இயல்பு, விருப்பு வெறுப்பு என்று நம்மிடம் இருப்பவற்றையெல்லாம் வெளிப்படுத்துவதற்கான ஒரு சாதனம். சமூகம், வரலாறு என்று எல்லாமே இப்படி ஆண்களை மையப்படுத்தியதாக இருக்கும்போது மொழியில் மட்டும் அந்த ஆதிக்கம் இல்லாமல் இருக்குமா? அதன் விளைவுதான் ‘ஹிஸ்டரி’ ‘ஹிஸ் ஸ்டோரி’ (அவன் சரிதை) என்று ஆனது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஆண் மொழியைப் பற்றி ஆங்கிலத்தில் பெரும் விவாதம் உருவானது. அதன் விளைவாக ஆண்களை மையப்படுத்திச் சொல்லப்படும் சொற்களுக்கும் வழக்குகளுக்கும் மாற்றாக வேறு சொற்களும் வழக்குகளும் பரிந்துரைக்கப்பட்டன. ஒருவர் ஆணா, பெண்ணா என்று குறிப்பிடப்படாத/ தெரியாத சூழலிலும் வழக்கமாக ஆங்கிலத்தில் ‘ஹீ’ (He – அவன்), ‘ஹிஸ்’ (His – அவனுடைய) என்ற சொற்களையே பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு வாக்கியம்: ‘Someone has left his book behind.’ (‘யாரோ ஒருத்தன் தன்னுடைய புத்தகத்தை விட்டுச் சென்றுவிட்டான்’ என்பது இதன் அர்த்தம்). புத்தகத்துக்கு உரிமையாளர் ஆணா பெண்ணா என்று தெரியாமலேயே அது ஒரு ஆணுடையது என்ற பொருளில் மேற்கண்ட வாக்கியம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாக மாற்றிச் சொல்வதே தற்போதைய வழக்கம்: ‘Someone has left their book behind.’ (யாரோ ஒருத்தர் தனது புத்தகத்தை விட்டுச் சென்றுவிட்டார்). இதுபோல் சொற்களும் இருபாலருக்கும் பொதுவாக மாற்றப்பட்டுவருகின்றன. (ஆண்) தலைவர் என்ற பொருள்படும் ‘சேர்மேன்’ (Chairman) என்ற சொல்லுக்குப் பதிலாக இருபாலருக்கும் பொருந்தக்கூடிய, ‘தலைவர்’ என்ற பொருள்படும் ‘சேர்பர்ஸன்’ (Chariperson) என்ற சொல் தற்போது ஓரளவு புழக்கத்தில் இருக்கிறது. இதுபோல் நிறைய சொற்கள் பரிந்துரைக்கப்பட்டுப் பொதுவழக்கில் இருக்கின்றன. மொழியில் ஆண் ஆதிக்கத்தை நீக்கி இரு பாலருக்கும் பொதுவான பயன்பாடுகளை ஆங்கில அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் எப்போதோ நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டன. புகழ்பெற்ற ஆங்கில மொழி நடைக் கையேடுகள், ஆங்கில அகராதிகள் போன்றவற்றிலும் இந்த வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.
தமிழ் என்று வரும்போதோ அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் இரண்டையுமே நவீனத்துவம் இன்னும் தீண்டவில்லையோ என்றே தோன்றுகிறது. வெகுமக்கள், ஊடகங்கள் மட்டுமல்லாமல் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதும் சிறுபத்திரிகைகளிலும் ‘ஆண் மொழி’ அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. அதன் அடையாளம்தான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கண்ட, ‘எழுத்தாளன் என்பவன், ‘கலைஞன் என்பவன்’ என்பது போன்ற சொற்றொடர்கள்.
தமிழ் மொழி ‘குடிமகள்’ என்ற சொல்லுக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ‘சிட்டிசன்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் ‘குடிமகன்' என்ற சொல் மட்டுமே புழக்கத்தில் இருப்பதால் பெண்கள் அமைச்சர் பதவி போன்றவற்றை ஏற்கும்போது ‘இந்தியக் குடிமகனான நான்…' என்று சொல்லியே பதவியேற்க வேண்டியிருப்பது பெரும் சங்கடம் என்று சொல்லி, 2003-ம் ஆண்டு ‘குடிமகள்' என்ற சொல்லை அவர் புழக்கத்தில் கொண்டுவந்தார்.
ஒரு பெண்ணின் மீது பாலியல்ரீதியாக நிகழ்த்தப்படும் தாக்குதலைக் குறிக்க ‘கற்பழிப்பு' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சொல்லில் உள்ள ‘கற்பு' விவாதத்துக்குரியது என்பதாலும், பெண்கள் மட்டுமன்றி, சிறுவர்கள், திருநங்கைகள், ஆண்கள் போன்றோரும் பாலியல்ரீதியாகத் தாக்கப்படுவதைக் குறிக்க ‘கற்பழிப்பு' என்ற சொல் பயன்படாது என்பதாலும் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவது தவறு. அதற்குப் பதிலாக, பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், வன்புணர்ச்சி போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.
அறிவுவெளியிலும் ஆண்மொழி ஆதிக்கம் செலுத்துவதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. புத்தகம், சிந்தனை, கலை என்றாலே அது ஆண்கள் தொடர்பான விஷயம்போல் வாசகன், எழுத்தாளன் போன்ற ‘ன்' விகுதியில் முடியும் சொற்கள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நம்முடைய அன்றாட வாழ்விலும் ‘அப்பா சொன்னார், அப்பா வந்தாங்க’ என்றும் ‘அம்மா சொன்னாள், அம்மா வந்தாள்’ என்றும்தான் பெரும்பாலும் குறிப்பிடுகிறோம். அப்பா மரியாதைக்கு உரியவர், அம்மா அப்படியல்ல!
பேச்சு வழக்கு என்பது இயல்பை, அப்போதைக்கு என்ன தோன்றுகிறதோ அதைப் பேசுவது. ஆகவே, பேச்சு வழக்கில் ஆண் மைய சமூகத்தின் ஆண் மொழி இயல்பாகவே வெளிப்படும். எழுத்து மொழி என்று வரும்போது அது ஒரு வகையில் ஆவணப் பதிவாகிவிடுகிறது. ஆகவே, மேற்பூச்சுக்காக வேண்டியாவது ஒருவர் தனது பாரபட்சம், ஆதிக்க உணர்வு போன்றவற்றை எழுத்தில் நீக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அப்படி இருந்தும் நம்முள் ஆழமாக இருக்கும் ஆணாதிக்கம் நம்மையறியாமலேயே நுட்பமான வழிமுறைகளில் வெளிப்பட்டுவிடுகிறது. சிறுபத்திரிகைகளிலிருந்து வெகுஜன ஊடகங்கள் வரை இதுபோன்ற ஆண்மொழியை நீக்கிப் பொதுமொழியை நோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது.
ஆகவே, இனி ‘ஆண்டவனி’டமும் ‘படைத்தவனி’டமும் முறையிடுவதற்குப் பதிலாகக் கடவுளிடமும் தெய்வத்திலும் முறையிடலாம்.
இப்படி ஆண்மொழிக்கு எதிராக மொழியில் மாற்றங்கள் மேற்கொள்ளும்போது மிகையாகவும் சில காரியங்கள் நடந்துவிடுகின்றன. ‘கவிதாயினி, நண்பி, இளைஞி’ என்பது போன்ற சொற்கள் வலிந்து உருவாக்கப்பட்டவை போலவே தோன்றுகின்றன. ‘கவிதாயினி, நண்பி’ ஆகிய சொற்களுக்கு பதில் பொதுமொழிச் சொற்களான ‘கவிஞர், நண்பர்/ தோழர்’ என்பதையே பயன்படுத்தலாம். நெருக்கமாகக் காட்டிக்கொள்ள வேண்டுமானால் ‘நண்பி’க்கு பதிலாக ‘தோழி’ பயன்படுத்தலாம். ‘இளைஞி’க்கு மாற்றாக ‘இளம் பெண்’ என்ற பதத்தைப் பயன்படுத்தலாம்.
பெரும்பாலான இடங்களில் ‘ர்' விகுதியையோ, பன்மை விகுதியையோ பயன்படுத்தினாலே நாம் ஆண்மொழியின் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும். ஆனால், ஆண்மொழியைப் பொதுமொழியாக மாற்றுவதென்பது வெறுமனே ‘ன்’ஐ, ‘ர்’ஆக மாற்றும் விவகாரமல்ல. அது முதலில் மனதில் ஏற்பட வேண்டிய மாற்றம். அந்த மாற்றம் நிகழ்ந்தால் மொழியிலும் அது தானாகவே பிரதிபலிக்கும்.

 - நன்றி: ‘தி இந்து’ ‘
‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க:http://goo.gl/qCcqZK

No comments:

Post a Comment