Tuesday, March 21, 2017

To Nature, with love...


N. Vinothkumar
(தம்பியும் சக பத்திரிகையாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் பறவையியலாளரும் ந. வினோத்குமார் 'சர்வதேச வன நாள்’, ‘சர்வதேசக் கவிதை நாள்’ ஆகியவற்றை முன்னிட்டு அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னைப் பற்றி இன்று எழுதியது!) 
Environmentalists observe this day (March 21) as International Day of Forests. Incidentally, World Poetry Day is also being observed today. While, UN announced Forest Day, to protect forests, it announced Poetry Day in 1999, to 'fulfill aesthetic needs'. It says that 'poetry can meet this need if its social role of interpersonal communication is recognised and it continues to be the means of arousing and expressing awareness'. On this day, I am happy to introduce a poet who blends nature in his writings. Meet, Asaithambi of Tiruvarur district, is currently a journalist with The Hindu Tamil, Chennai. 

He started penning poems at the young age. The well known poet Bharathiyar has exerted greater influence on him. During his college days, the works of poets like Manushya Puthran and Cre-A Ramakrishnan had an impact on his way of delivering thoughts. One fine day, in 2005, he was encouraged to observe a bird by Cre-A Ramakrishnan. Asai, was unable to even sight that bird. From then onwards, he developed a passion towards birdwatching. Over a period of time, he took the children from his neighbourhood for birdwatching. Their ways of expressing about a bird made him to think to write poems about nature.

 In 2010, he brought out a poetry collection on birds in Tamil, titled 'Kondalathi' (Tamil for Hoopoe). It was published by Cre-A. It is the first of its kind book so far in Tamil. Most of the birds recorded in those poems are resident birds. "Those birds co-habiting with humans, developed a kind of relationship" he says. Nature writers such as Theodore Baskaran, P.Jegannathan and litterateurs like Venkat Saminathan, Sankararamasubramanian were praised that book. "Whenever speaking about nature writing, people used to mention about Sangam literatures. But in those days the life coexisted with nature. Today we started to look humans and nature seperately, so that the need for such nature related poems arises" he says. 

A poem from his collection: This moment/Weighing as much as/A tailor bird/And trembling/Like the stem/After it flown away. (Translation, mine). Such kind of attempts should be welcomed, so that the planet can be embraced with more love.
 - nvinoth2020@gmail.com

Saturday, March 18, 2017

முடிந்தவரை சாதித்திருக்கிறது திமுக - திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு பேட்டி


ஆசை
திராவிட இயக்கத்தின் முக்கியமான வரலாற்றாசிரியர்களுள் ஒருவர் க. திருநாவுக்கரசு (வயது 75). ‘நீதிக்கட்சி வரலாறு’, ‘திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை’ முதலான முக்கியமான வரலாற்று நூல்களின் ஆசிரியர். இவர், தற்போது திமுகவின் வரலாற்றை விரிவாக ஆய்வுசெய்து ‘திமுக வரலாறு’ (நக்கீரன் வெளியீடு) என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடவிருக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து…

திராவிட இயக்க வித்து உங்களுக்குள் விழுந்தது எப்படி, எப்போது?
என் ஆரம்பக் கல்வி ஆசிரியர் முனுசாமி (அன்பரசு) கூறிய புத்தர் கதையும் என் குடும்பச் சூழலும் இதற்கு வித்திட்டன. உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறபோதே அறிஞர் அண்ணாவை எங்கள் உறவினர் வீட்டில் பார்த்தது மேலும் உந்துதலைக் கொடுத்தது. ‘அய்யா கட்சி வேறில்லே, அண்ணா கட்சி வேறில்லே, எல்லாம் ஒன்றுதானுங்க, ஏமாந்து போகாதீங்க’ எனும் மேடைப் பாடல், உயர் சாதியினர் சூத்திர, தாழ்த்தப்பட்ட சாதிகளை நடத்தும் மேலாண்மைக் காட்சியைக் கண்டது, இவையெல்லாம் என்னுள் திராவிட இயக்க வித்து ஊன்றுவதற்குக் காரணமாயிற்று.

இடதுசாரி இயக்கங்களுக்கு இருப்பதுபோல் அதிக அளவில் திராவிட இயக்கங்களுக்கு வரலாற்றாசிரியர்கள் இல்லையே, ஏன்?
இடதுசாரி இயக்கம் என்பது இந்தியவயமானது மட்டுமல்ல; அது உலகளாவியதும் கூட! திராவிட இயக்கத்தில் அந்த அளவுக்கு இருக்க முடியாது. வாழ்நிலைக்கு ஏற்பத்தான் மெய்ம்மையும் இருக்கும். அந்த வகையில் திராவிட இயக்கத்துக்கு வரலாற்று ஆசிரியர்கள் அமைந்திருக்கிறார்கள். தேவை கருதி அதன் எண்ணிக்கை கூடும்.

‘நீதிக்கட்சி வரலாறு’ போன்ற நூல்களின் தொடர்ச்சியாக இப்போது ‘திமுக வரலாறு’. இந்தத் தொடர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நீதிக்கட்சி என்பது திராவிட இயக்க அரசியல் கட்சிகளின் கருத்தியல் மையம். அங்கிருந்துதான் சமூகநீதி கால்கோள் கொண்டு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. சம்ஸ்கிருத எதிர்ப்பைத் திராவிட இயக்கத் தந்தை டாக்டர் சி. நடேசனார் அன்றே சட்டமன்றத்தில் பேசிப் பதிவுசெய்திருக்கிறார். தமிழ் இலக்கியத்தின் மாண்பைத் தமிழர் களுக்கு நினைவூட்டியிருக்கிறார். கருணாநிதி ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ எனும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வித்தாக 1917-ம் ஆண்டில் நீதிக்கட்சியின் அதிகாரபூர்வமான ‘திராவிடன்’ ஏடு எடுத்துத் தந்த கொள்கை முடிவைச் சுட்டிக்காட்டலாம். இப்படி ஒரு தொடர்ச்சி இருப்பதால்தான் ‘திமுக வரலாறு’ படைக்க முடிகிறது. ஆகவே தான் திமுகவை திராவிட இயக்கத்தின் உண்மை யான அரசியல் பிரிவு என்று நான் கூறுகிறேன்.

‘திமுக வரலாறு’ நூலின் முன்னோடி முயற்சிகளென்று எவற்றைக் கருதுகிறீர்கள்?
எனக்கு முன்பாகவே ‘திராவிட இயக்க வரலாறு’ எனும் பெயரில் முரசொலி மாறன் முதல் தொகுதியை எழுதி வெளியிட்டிருக்கிறார். நாவலர் இரா. நெடுஞ்செழியன் ‘திராவிட இயக்க வரலாறு முதல் தொகுதி’ என்று எழுதினார். இதன் தொடர்ச்சி என்று இருவரும் எழுதவில்லை. எழுத்தாளர் கே.ஜி. இராதா மணாளன் ‘திராவிட இயக்க வரலாறு’ என்று எழுதினார். இவையன்றி, ‘பிட்டி தியாகராயர் முதல் கலைஞர் வரை’ எனும் தலைப்பில் மாலைமணி பி.எஸ். இளங்கோ எழுதியிருக்கிறார். திமுக வரலாறு என்ற பெயரிலும் டி.எம். பார்த்தசாரதி எழுதியிருக்கிறார். இவற்றையெல்லாம், திமுக வரலாறு எழுதுவதற்கு முன்னோடி முயற்சிகளென்று குறிப்பிடலாம்.

கிட்டத்தட்ட 70 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட திமுகவைப் பற்றி வரலாறு எழுதுவது அவ்வளவு சாதாரண வேலையில்லை. இந்தப் பணியில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள், சந்தோஷங்கள், வருத்தங்கள், மனநிறைவு, விடுபடல்கள் என்னென்ன?
நீங்கள் சொல்வதுபோல் இது சாதாரணப் பணி இல்லைதான். நான் இப்போது எழுதி வெளியிடும் நூல் 70 ஆண்டு கால வரலாறு அல்ல. 1949 முதல் 1969 வரை - அதாவது 20 ஆண்டு கால வரலாறு மட்டுமே. இந்த 20 ஆண்டு கால வரலாறு மட்டும் சுமார் 3,000 பக்கங்கள் வருகின்றன. இதில் மூன்று தொகுதிகள் மட்டும் 1,840 பக்கங்கள் கொண்டவை. இவை, வரும் 25-ம் தேதி மு.க.ஸ்டாலினால் வெளியிடப்படவிருக்கின்றன. அடுத்த மூன்று தொகுதிகள் இன்னும் ஆறு மாதங்களில் வெளியிடப்படும்.
இந்தப் பணியில் எதிர்கொண்ட அறைகூவல் கள் நிறைய உண்டு. ஒருவரிடம் ஒரு குறிப்பைப் பெறுவதற்காகப் பல நாட்கள் சென்றுவர வேண்டும். சிலர், பழைய ஏடுகளை எதிரே வைத்துக்கொண்டு ‘இது அது இல்லை’ என்று சொல்வார்கள். சிலர் முக்கியமானவர் களாகவும் செல்வாக்கு உடையவர்களாகவும் கூட இருப்பார்கள்; அவர்களைப் பற்றிச் சொன்னால் நாடு அறிந்துகொள்ளும்; இதை நான் சொன்னதாக எழுதிவிடாதீர்கள் என்று சொல்வார்கள். ஆனால், அந்த நிகழ்வை ஒப்பிட்டுப் பார்ப்பேன்.
உண்மைதானா என்று ஆராய்வேன். அந்த ஆய்வில், தெளிவும் ஆதாரமும் கிடைக்குமானால் பதிவு செய்வேன். அப்போதுதான் முழு மன நிறைவு ஏற்படும். சில தரவுகள் நம்பிக்கை இல்லாமல் இருக்கும். ஆதாரம் இருக்காது, காழ்ப்பின் காரணமாக ஒன்றைக் கிளப்பிவிட்டிருப்பார்கள். அவற்றையெல்லாம் தவிர்த்துவிடுவேன். முழுமையான ஆய்வும் நம்பிக்கையும் இல்லாமல் இருக்கிற செய்திகளைத் தனியே எடுத்து வைத்துவிடுவேன். அவை விடுபடல்களாகவே இருக்கும்.

திமுகவைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? இயக்கச் சார்புக்கும் நடுநிலைக்கும் சமரசம் காண முடிந்ததா?
திமுகவைப் பற்றிய விமர்சனங்களை நான் நிச்சயம் எதிர்கொள்வேன். திமுக ஓர் அரசியல் பண்பாட்டு இயக்கம். அதன் மீது கடுமையான விமர்சனங்கள் இருக்கும்; எழும். திராவிட இயக்கம் வேறு; கட்சி வேறு என்று கருதுபவன் நான். திமுக இரண்டறக் கலந்தது. நான் கொள்கை சமரசம் செய்துகொள்வதில்லை.

திமுக சாதித்தவை என்ன, தவறவிட்டவை என்ன?
சாதித்தவை ஏராளம். திமுக முற்றிலுமாக திராவிட இயக்கக் கொள்கைகளை நிறைவேற்றிவிட்டது என்று சொல்லிவிட மாட்டேன். ஆனால், அந்தக் கட்சி முடிந்தவரை சாதித்திருக்கிறது. நிறைவேற்றாத சாதனை களைத் தவறவிட்டவை என்று சொல்ல முடியாது. இனி எதிர்வரும் திமுகவின் ஆட்சிக் காலம் அதனை இட்டு நிரப்பும்.
 - நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/1AoEgD)

Friday, March 17, 2017

என்றும் காந்தி! - 30: கருத்துச் சுதந்திரமில்லாக் காலத்துக்கு காந்தி!


ஆசை

சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு மோசமான காலகட்டங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, நெருக்கடி நிலை காலகட்டம், இன்னொன்று தற்போதைய காலகட்டம். கடந்த 70 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், பாஜக உள்ளிட்ட வலதுசாரிக் கட்சிகள் என்று எதுவுமே கருத்து சுதந்திரப் பரிசோதனையில் மிஞ்சாது. சல்மான் ருஷ்தியின்சாத்தானின் பாடல்கள்’ (The Satanic Verses) நாவலை காங்கிரஸ் அரசு தடைசெய்தது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ அரசு ஆண்டபோது தஸ்லிமா நஸ்ரினின் நாவலைத் தடைசெய்தது. பாஜக கட்சியும் சரி அரசுகளும் சரி அந்தக் கட்சி சார்பான அமைப்புகளும்சரி பல்வேறு புத்தகங்களுக்கும் பல்வேறு கலைஞர்களுக்கும் முட்டுக்கட்டை போட்டிருக்கின்றன. எம்.எஃப். ஹுசைன், சிவாஜியைப் பற்றிய ஜேம்ஸ் லைனின் புத்தகம் தொடங்கி பெருமாள் முருகன் வரை ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.

கருத்துச் சுதந்திரம் மோசமான வீழ்ச்சியை அடைந்திருக்கும் நம் காலத்துக்கு காந்தி உண்மையில் வழிகாட்டக் கூடும். சுதந்திர இந்தியாவின் கருத்துச் சுதந்திர ஒடுக்குதலை அவர் எதிர்கொள்வதற்கு சுதந்திர இந்தியாவில் அவர் அதிக நாட்கள் வாழவில்லை என்றாலும் பிரிட்டிஷ் இந்தியாவின் கருத்துச் சுதந்திர ஒடுக்குதலைப் பலமுறை எதிர்கொண்டிருக்கிறார் என்பது அவருக்குள்ள முதன்மையான தகுதி.

ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை இருக்கிறது!

1909-ல், காந்தியின் தென்னாப்பிரிக்கக் காலகட்டத்தில் (இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கொண்ட கப்பல் பயணத்தின்போது) குஜராத்தியில் அவர் எழுதிய புத்தகம்இந்திய சுயராஜ்ஜியம்’. காந்தியின் அன்பர் ஒருவர் இந்தப் புத்தகத்தின் பிரதிகளைக் கப்பல் மூலம் இந்தியாவுக்கு வரவழைக்க முயன்றார். எனினும், இந்தியாவில் அந்தப் புத்தகத்தின் பிரதிகளை ஆங்கிலேய அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அந்தப் புத்தகம் குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்தில் ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலேய அதிகாரிகளால் படித்துப்பார்க்கப்பட்டது. தேசத்துரோகக் கருத்துகளை உள்ளடக்கியிருப்பதாகக் கருதி அந்த நூல் தடைசெய்யப்பட்டது. இது குறித்து காந்தி இந்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். ‘மகாத்மா காந்தியின் தொகுப்புகளில் கூட இடம்பெற்றிராத அந்தக் கடிதத்தை ஆவணக் காப்பகங்களில் கண்டுபிடித்திருக்கிறார் காந்தியின் வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ராமசந்திர குஹா. “ஒவ்வொரு மனிதரும் தான் விரும்பிய கருத்துக்களை வெளிப்படுத்தவும், அவற்றைச் செயல்படுத்தவும், அதனால் யாருக்கும் உடல்ரீதியிலான துன்பத்தை அவர் ஏற்படுத்தாதவரை, அவருக்கு முழு உரிமை இருக்கிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்துஎன்று அந்தக் கடிதத்தில் காந்தி எழுதியிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு காந்தி எழுதியது இன்றும் நமக்குப் பொருத்தமாக இருக்கிறது.

'தேசத்துரோகமே காங்கிரஸின் கொள்கை!'

அது மட்டுமல்லாமல் 1920-ல் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தின் தொடர்ச்சியாக 1921, 1922 ஆகிய ஆண்டுகளில் காந்தி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழுதிய கட்டுரைகள், சௌரி சௌரா வன்முறை ஆகியவற்றுக்காகத் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டார். “ராணுவவீரரோ, சாதாரண நிர்வாக அதிகாரியோ யாராக இருந்தாலும் இந்த அரசாங்கத்தின் கீழ் பணிபுரிவது பாவம் என்று நான் தயக்கமில்லாது சொல்கிறேன்தேசத்துரோகமே காங்கிரஸின் கொள்கையாகிவிட்டதுஒத்துழையாமை என்பது முற்றிலும் சமயரீதியிலான, அறரீதியிலான இயக்கமே ஆயினும் அரசைக் கவிழ்க்க வேண்டும் என்பதைத் தெரிந்தே தன் இலக்காகக் கொண்டிருக்க்கிறதுஎன்று ஒரு கட்டுரையில் காந்தி எழுதியிருந்தார். இது போதாதா தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்படுவதற்கு? ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உடல் நலம் காரணமாக இரண்டு ஆண்டுகளில் காந்தி விடுவிக்கப்பட்டார்.

தனது நம்பிக்கையே அறுதியானதல்ல

ஒருவர் தான் நம்பும் கொள்கை, கருத்து போன்றவற்றை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், அவையே அறுதியானவை என்றும் நம்புவதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது என்று காந்தி கருதினார். தான் கொண்ட கொள்கை, கருத்து போன்றவற்றின் மேல் முழுமையான புரிதலும் நம்பிக்கையும் இல்லாதவர்கள்தான் அவற்றுக்கு மாறுபாடான கருத்துகளைக் கண்டால் அஞ்சி, அதன் மூலம் தங்கள் கருத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று கருதி மாற்றுக் கருத்தை ஒடுக்க முயல்கிறார்கள். ஒருவருடைய கொள்கை உறுதியானது, உண்மையானது, அறம்சார்ந்தது என்றால் அவர் மாற்றுக் கருத்தைக் கண்டு அஞ்சத் தேவையேயில்லை. உண்மையில் மாற்றுக் கருத்துகளுடன் உறவாடுவதே ஒரு கருத்தையோ கொள்கையையோ மேலும் செறிவாக்கும் என்பதை காந்தி உணர்ந்திருந்தார். எந்த வகைக் கருத்தினரும், சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களும் தாங்கள் சொல்வதே சரி என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாதென்று காந்தி திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தார்

’’நாம் எல்லோருமே பிழைகள் செய்யக் கூடியவர்களாகையால் நம் கருத்துக்களை அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டிவருகிறது. இதைப் போன்ற பெரிய நாட்டில் உண்மையாகவும் நாணயமாகவும் கருத்துக்கள் கொண்டுள்ள எல்லோருக்கும் இடம் இருக்க வேண்டும். ஆகவே, குறைந்தபட்சம் நம் விஷயத்திலும் பிறர் விஷயத்திலும் நாம் செய்ய வேண்டுவது எதிராளியின் கருத்தைப் புரிந்துகொள்வதும் அதை ஏற்க முடியாவிட்டாலும், நம் கருத்தை நாம் மதிப்பதுமாகும். செம்மையான பொது வாழ்வுக்கு இன்றியமையாத சாதனங்களில் இது ஒன்றாகையால் சுயராஜ்யத்திற்கு நமக்குள்ள தகுதியையும் இதுவே காட்டும். நாம் தாராள புத்தியும் சகிப்புத் தன்மையும் இல்லாதிருந்தால் நம்மால் நம்மிடையே எழும் தகராறுகளை சமூகமாகத் தீர்த்துக்கொள்ள முடியாதாகையால் எப்பொழுதும் மூன்றாம் மனிதன் தீர்ப்புக்கு , அதாவது அந்நியர் ஆதிக்கத்திற்கு அடங்கியே இருக்க வேண்டியிருக்கும்” (யங் இந்தியா,17-4-1924) என்று காந்தி எழுதினார்.

உண்மையான ஜனநாயகம்

நம் எதிர்த் தரப்பு சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ள சித்தமாக இல்லாவிட்டால் ஜனநாயகம் வளர்ந்து பருவம் எய்துவதே சாத்தியமல்ல என்று காந்தி கருதினார். உண்மையில், எதிர்த் தரப்புக்குச் செவிமடுக்கும்போதுதான் நம் தரப்புக்கு நியாயம் பிறக்கிறது என்கிறார் காந்தி. “நாம் எதிராளி சொல்வதைக் கேட்க மறுக்கையிலும், கேட்டாலும் அவர்கள் சொல்வதைக் கேலி செய்கையிலும் நம் நடவடிக்கைகளில் நியாயம் புகாது தடுக்கிறோம். எதிராளியின் பேச்சை சகிக்காமலே, பொறுக்காமலே பழகிவிடுகையில் நம்மால் உண்மையை அறிய முடியாமல்போகும். இயற்கையில் நமக்குள்ள அறிவாற்றலின் துணையால் செயல்படுகையில் நமக்கு சரியென்று தோன்றுவதை அஞ்சாமல் சொல்லவும்,செய்யவும் துணிய வேண்டும். ஆனால் நாம் உண்மையென்று நம்பியிருந்தது அவ்வாறில்லை என்று தெரிந்ததும் நம் கருத்தை மாற்றிக்கொள்ளவும், முன்பு நினைத்தது தவறு என்று தயங்காது ஒப்புக்கொள்ளவும் வேண்டும். இவ்வாறு செய்வதனால் நம்மிடமுள்ள உண்மை மேலும் உறுதியாவதோடு, அதிலிருந்த குறைகளும் நீக்கப்பெறும்” (ஹரிஜன்,31-5-1942) என்றும் எழுதுகிறார். எவ்வளவு ஜனநாயகம் மிக்கவராக இருந்திருக்கிறார் காந்தி! கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி காந்தி முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் எழுதியது இன்னும் புரட்சிகரமாகவே இருக்கிறது.

புண்படுத்துவதற்கான உரிமை

மக்களின் மனது புண்படுகிறது; மதநம்பிக்கை புண்படுகிறது என்றெல்லாம் கூறி இன்று படைப்புகளும் கருத்துகளும் தடைசெய்யப்படுகின்றன அல்லது முடக்கப்படுகின்றன. உண்மையில், உலக வரலாற்றில் எல்லாப் புரட்சிகளும் புண்படுத்துவதில்தான் ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கெனவே மக்கள் திரள் கொண்டிருக்கும் பழமைவாதக் கருத்துகளைப் புண்படுத்தினால்தானே புதுமையும் புரட்சியும் பிறக்கும். இந்து மதத்தின் கடந்த நூற்றைம்பது ஆண்டுகால வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது அம்பேத்கர், அயோத்திதாசர், பெரியார், கூடவே இடதுசாரிகள், பிற தலித்திய சிந்தனையாளர்கள் போன்றோர் இந்துக்களின் மனதைக் கடுமையாகப் புண்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, தங்களைத் தீவிர இந்துக்களாக நம்பிய விவேகானந்தரும் காந்தியும்கூட இந்து மதத் தீவிரப் பற்றாளர்களின் மனங்களைப் புண்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் இந்துக்களின் மனதைப் புண்படுத்தவில்லை என்றால் இந்துமதச் சீர்திருத்தங்கள் எப்படி நிகழ்ந்திருக்கும்? இன்று நாம் முன்பைவிட சற்றேனும் மேலான ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்றால் மேற்குறிப்பிட்டவர்களைப் போன்றோர் நம்மைப் புண்படுத்தியதும் அடிப்படைக் காரணமல்லவா? ஆகவே, புரட்சிக்கு (மனதை) புண்படுத்துதல் அடிப்படை ஆயுதம் என்பதை நாம் மறந்துவிடலாகாது

புண்படுத்துதலைப் பற்றி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முந்தியே, 1922-ல், காந்தி எழுதியதைப் பார்க்கும்போது அவர் காலத்தில் உள்ளவர்களிடமிருந்து மட்டுமல்ல, நம் காலத்தில் உள்ள பலரிடமிருந்தும் பல மைல்தூரம் அவர் முன்னே இருந்தது நமக்குப் புரிய வரும். “பேச்சு சுதந்திரம் என்பதற்கு ஒருவர் பேச்சினால் மனம் புண்ணானாலும் அதைத் தடுக்காது விடுவது என்றுதான் அர்த்தம். பத்திரிக்கைகள் மிகவும் காரசாரமாக கருத்துக்களை வெளியிடுவதோடு நில்லாமல், விஷயங்களைத் திரித்துக்கூறவும் விடப்படும்போதுதான் அவற்றுக்கு சுதந்திரம் இருக்கிறது என்று ஆகும்மக்கள் கூட்டங்களில் கூடி புரட்சிகரமான திட்டங்களைப் பற்றி விவாதிப்பதற்கும் அனுமதிக்கப்படும்போதுதான் கூட்டம் கூடும் சுதந்திரம் உண்மையில் மதிக்கப்பட்டதாகும்” (யங் இந்தியா,12-1-1922).

திரித்துக் கூறவும் புண்படுத்தவும் கூட சுதந்திரம் வேண்டும் என்று காந்தி சொல்லியிருக்கிறார். “திரித்துக் கூறியிருக்கிறார், புண்படுத்தியிருக்கிறார்என்ற அடிப்படைகளில் நாம் அனைத்தையும் தடைசெய்துவிட வாய்ப்பு இருக்கிறது என்பதை காந்தி உணர்ந்திருக்கிறார்.

காந்தியைப் பின்பற்றும் அவரின் வாரிசுகள்

பூரண கருத்துச் சுதந்திரத்தை காந்தி லட்சியமாகக் கொண்டிருந்தாலும் காந்தி தொடர்பாகவே பிற்காலத்தில் இந்த விஷயத்தில் நேர்மாறாக நடந்திருக்கிறது. கோட்சேவைப் பற்றிய நாடகங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. காந்தியைப் பற்றி எழுதப்பட்ட கவிதையொன்றைஆபாசம்என்று கருதி உச்ச நீதிமன்றம் அதற்குத் தடைவிதித்திருக்கிறது. காந்திக்கும் அவரது நண்பர் காலன்பாக்குக்கும் இடையே தன்பாலின உறவு (Homosexual relationship) இருந்ததாக ஜோஸஃப் லீலிவெல்டு எழுதியகிரேட் சோல்: மகாத்மா காந்தி அண்ட் ஹிஸ் ஸ்டரகிள் வித் இந்தியா’ (Great Soul: Mahatma Gandhi and His Struggle with India, Joseph Lelyveld) என்ற நூலில் எழுதியிருந்தார். இந்த நூலை குஜராத் அரசு தடை செய்தது.

எனினும் காந்தி குறித்த படைப்புகள் தடைசெய்யப்படுவதை முதலாவதாக எதிர்த்தவர்கள் காந்தியின் வாரிசுகளே! ஜோஸஃப் லீலிவெல்டின்கிரேன் சோல்: மகாத்மா காந்தி அண்ட் ஹிஸ் ஸ்டரகிள் வித் இந்தியாபுத்தகம் குஜராத்தில் தடைசெய்யப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் தடைசெய்யப்படும் அபாயம் இருந்தது. ஆனால், இந்தப் புத்தகத்துக்குத் தடைவிதிப்பதென்பது, சுதந்திரமான விவாதத்தை எப்போதும் வலியுறுத்திவந்த காந்தியின் கொள்கைக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்றும் உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயகம் என்று இந்தியா தன்னைக் கூறிக்கொள்வதைக் கேள்விக்குறியாக ஆக்கிவிடும் என்றும் கூறி காந்தியின் பேரன்கள் ராஜ்மோகன் காந்தியும் கோபாலகிருஷ்ண காந்தியும் தடைக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டு தடைவிதிக்கப்படாமல் தடுத்தும்விட்டனர். இத்தனைக்கும் அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் குறிப்பிட்ட விஷயத்தை இருவரும் கடுமையாக மறுத்தனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். காந்தியைப் பற்றிய கவிதைக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தபோது அந்தத் தடைக்கு எதிராக காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். இதைப் பற்றியெல்லாம் சொல்லும்போது, “கருத்துச் சுதந்திரத்தின் மீது இவர்கள் (காந்தியின் வாரிசுகள்) கொண்டிருக்கும் கொள்கை ரீதியிலான பிடிப்பை இந்திய வரலாற்றின் மற்ற பெரும் தலைவர்களின் குடும்ப வாரிசுகளோ கொள்கை வாரிசுகளோ கொண்டிருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானதுஎன்று ராமச்சந்திர குஹா எழுதுகிறார்.

பூரண சுயராஜ்ஜியத்துக்குக் கருத்துச் சுதந்திரம் மிக இன்றியமையாதது என்று காந்தி உறுதியாக நம்பினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கு குறிப்பிடத்தக்க இடமளிக்கப்பட்டதில் காந்தியின் பங்களிப்பும் இருக்கிறது என்றாலும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான காலனிய காலத்துச் சட்டங்கள் பல நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பிடித்துவிட்டது, இன்னும் அப்படியே இருப்பது நம் ஜனநாயகத்துக்கு அழகல்ல. பிரிவுகள் 153, 153A, 295, 295A, 298, 499, 500, 505, 124 போன்றவை அப்படிப்பட்ட சட்டப்பிரிவுகள் இவை திருத்தப்படுவதும் அல்லது நீக்கப்படுவதும்தான் காந்திக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் தரப்பு என்று கிட்டத்தட்ட எதுவுமே இல்லாதது பேராபத்து! சமீபத்தில் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன், இளம் பாடகி நஹித் அஃப்ரின் (இந்து மதக் கடவுளைப் பற்றிப் பாடியதற்காக) என்று பலரும் தங்கள் கருத்துகளுக்காகவும் படைப்புகளுக்காகவும் தடை, முட்டுக்கட்டை, வன்முறை போன்றவற்றை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்தியா மறுபடியும் நெருக்கடி நிலை காலத்துக்கோ ஆங்கிலேயர் காலத்துக்கோ போய்விடுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலானோர் தங்கள் கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் அளவுக்கு எதிர்த்தரப்பின் கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதில்லை. மதிக்காவிட்டால் கூடப் பரவாயில்லை, அவை வெளிப்படுத்தப்படவே கூடாது என்ற நினைப்பில் செயல்படுகிறார்கள்.

காந்தி விரும்பியது பரிபூரண கருத்துச் சுதந்திரம். “நீ கூறுவதை முற்றிலும் நான் மறுக்கிறேன். ஆனால், இதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைக் காப்பதற்காக என் உயிரையும் கொடுப்பேன்என்ற புகழ்பெற்ற வாசகங்களுக்கு இணையான கருத்துக்கள்தான் காந்தியுடையவையும். ஒரு இடதுசாரி அல்லது இஸ்லாமிய எழுத்தாளரின் நூலோ, இடதுசாரி அல்லது இஸ்லாமியக் கலைஞரின் படைப்போ தடைசெய்யப்படும்போது அந்தப் படைப்புகளுடன் சிறிதளவும் உடன்படாத ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் தன் உயிரையும் கொடுத்து அந்தத் தடையை எதிர்த்துப் போராடும் காலமும், ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரரின் படைப்புக்குத் தடைவிதிக்கப்படும்போது (!) அந்தப் படைப்புகளுடன் சற்றும் உடன்படாத ஒரு இடதுசாரியோ இஸ்லாமியரோ தம் உயிரைக் கொடுத்து அந்தத் தடைக்கு எதிராகப் போராடும் காலமும் வருமென்றால் அதுதான் காந்தி கனவுகண்ட இந்தியாவின் கருத்துச் சுதந்திரத்தின் பொற்காலமாக இருக்கும். அது நிச்சயம் தற்காலம் இல்லை!


(சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் காந்தி உங்களைச் சந்திப்பார்)
-  நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/eEHARr)

Thursday, March 16, 2017

என்றும் காந்தி!- 29: காந்தி என்றொரு பத்திரிகையாளர் (பகுதி-2)



ஆசை

ஹரிஜன்பத்திரிகை

1932-ல் காந்தியின் உண்ணாவிரதம், பூனா ஒப்பந்தம் போன்றவற்றைத் தொடர்ந்து காந்தியின் கவனம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களின்பால் சென்றது. 1933-ல்ஹரிஜன்என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினார். கூடவே, சகோதரப் பத்திரிகைகளாக குஜராத்தியில்ஹரிஜன் பந்து’, இந்தியில்ஹரிஜன் சேவக்போன்றவற்றையும் தொடங்கினார்

1933, பிப்ரவரி 11-ல் வெளியான முதல் இதழில்ஹரிஜன்இதழை அறிமுகப்படுத்தி காந்தி இப்படி எழுதுகிறார்: ”ஹரிஜன் இதழின் ஆங்கிலப் பதிப்பானதுஹரிஜன் சேவா சங்கத்தினரால் அந்த சங்கத்தினருக்காக வெளியிடப்படுகிறது. ஆங்கிலம் அறிந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவரும், அவர்களுக்காக சேவையாற்றுவோர் ஒவ்வொருவரும் சான்றிதழைக் காட்டி இந்த இதழை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். தான் வாங்கும் பிரதிக்கும் கூடுதலாக சந்தா வழங்கும் வாசகர்களால்தான் இது சாத்தியமாகும்… ‘ஹரிஜன்இதழை நீங்கள் கவனமாகப் படிப்பீர்கள் என்றால் அது உங்களை மிக நுட்பமான பணியொன்றுக்குத் தயார்செய்யும். இந்தியா முழுக்க நடைபெறும் தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகளைப் பற்றி வார வாரம் உங்களுக்கு இந்த இதழ் தெரிவிக்கும். மற்றவ்வர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் எதிராளிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் இதழ் உங்களுக்குத் தெரிவிக்கும். தீண்டாமை ஒழிப்புத் தொண்டர்களின் பலவீனங்களையும் தவறுகளையும் தெளிவாகச் சுட்டிக்காட்டும். தாங்கிக்கொள்ள முடியாத அடிமைச் சங்கிலியிலிருந்து 4 கோடிக்கும் மேற்பட்ட மனித உயிர்களை விடுவித்து, இந்து மதத்தின் பாவங்களைக் களைந்து அதைத் தூய்மையாக்கும் இந்த இயக்கத்தில் நீங்கள் சக பணியாளராக உங்களை இணைத்துக்கொள்வீர்களா? எதிராளிகள் சிலர் இந்த இதழின் சந்தாதாரராக ஆனாலும் எனக்குக் கவலை இல்லை. நான் நம்பிக்கைவாதி. எதிராளிகளுடன் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. இந்த இதழின் பக்கங்களில் இடம்பெறும் எழுத்துக்கள் எந்த அளவுக்குச் சீர்திருத்தப் பணியாளர்களுக்கானவையோ அந்த அளவுக்கு நம் எதிராளிகளுக்குமானவை. ‘ஹரிஜன்இதழ் உண்மைக்காக நிற்குமென்றால், சீர்திருத்தவாதிகள் பொறுமையுடன் இருப்பார்களென்றால், நமது இன்றைய எதிராளிகள் நாளைய சீர்திருத்தவாதிகளாக மாறுவார்கள்.”

தீண்டாமை ஒழிப்புதான்ஹரிஜன்இதழின் பிரதான நோக்கம் என்றாலும் அரசியல், உடல் நலம், மதஒற்றுமை, இயற்கை விவசாயம் என்று பல்வேறு விஷயங்களையும் இந்த இதழ் தொட்டுப் பேசியது. இந்த இதழில் காந்திதான் நட்சத்திரப் பங்களிப்பாளர் என்றாலும் மற்றோரும் ஏராளமாகப் பங்களிப்பு செய்தார்கள். ஒரு வாரத்துக்கு மூன்று கட்டுரைகள் வீதம் என்ற அளவில் கூட காந்தி எழுதியிருக்கிறார். ரயில் பயணங்களின்போதும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவற்றில்ரயிலில் எழுதியதுஎன்று காந்தி குறிப்பிட்டிருப்பார். வலது கை வலித்தால் இடது கையால் காந்தி எழுதுவார்.

ஹரிஜன்பத்திரிகையின் பிரதான சக்தியாக காந்தி இருந்திருந்தாலும் அவரது எழுத்தையே ஆசிரியர் குழுவினர் பிரசுரிக்க மறுத்த சம்பவமும் நடந்திருக்கிறது. 1947-ல் காந்தி நவகாளி யாத்திரையில் இருந்தபோது அனுப்பிய கட்டுரைதான் அது. அவரது பிரம்மச்சர்ய பரிசோதனை பற்றிய கட்டுரை என்று அனுமானிக்க முடிகிறது. “ஹரிஜன் இதழ் எனக்குச் சொந்தமானது அல்ல என்பதை நான் முழுமையாக உணர்கிறேன். இந்த இதழை மிகவும் அக்கறையோடு நடத்தும் உங்களுக்குத்தான் அது உண்மையில் சொந்தமானது என்று நான் கருதுகிறேன். நான் செலுத்தும் அதிகாரம் தார்மிகரீதியிலானது மட்டுமேஎன்று அவர்களுக்கு காந்தி எழுதினார். சர்வாதிகாரச் சக்தி இருந்து அப்படி சர்வாதிகாரத்தைச் செலுத்தாதவர் காந்தி!

காந்தி என்றொரு ரீடர்ஸ் எடிட்டர்

எழுத்துப் பிழைகள், தகவல் பிழைகள் விஷயத்தில் காந்தி மிகவும் கவனமாக இருந்தார். தானே பிழையாக எழுதினாலும் அதற்கு மன்னிப்பும் கேட்டதுண்டு. 1939, டிசம்பர் 23-ம் தேதியிட்டஹரிஜன்இதழில் அப்படி ஒரு விஷயத்துக்கு காந்தி மன்னிப்பு கேட்கிறார். ‘Cavil’ என்ற வினைச்சொல்லைத் தான் தவறாகப் பயன்படுத்தியதற்கான மன்னிப்புகோரல் அது. ஆங்கிலம் பேசும் இந்தியர்களுக்கு உள்ள வழக்கமான பிரச்சினை அது என்பதுடன், ஆங்கில அகராதியில் அந்தச் சொல்லில் பொருளைப் பார்க்காமல் எப்போதோ காதில் விழுந்ததைக் கேட்டுக்கொண்டு பயன்படுத்தியிருக்கிறேன் என்று காந்தி எழுதியிருக்கிறார். இந்த வகையில் இந்திய இதழியலில் முன்னோடிரீடர்ஸ் எடிட்டர்களில் காந்தியும் ஒருவர்.

அறம் சார் இதழியல்

காந்தியைப் பொறுத்தவரை பத்திரிகைகளின் முதன்மையான கடமை மக்கள் பணியாற்றுவதே. “பத்திரிகைக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் என்ன துன்பம் நேர்ந்தாலும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தேசத்தின் எண்ணங்களை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்என்றார் காந்தி. அன்றைய பத்திரிகைகளைப் பற்றி காந்தி சொல்லியிருக்கும் பல விஷயங்கள் இன்றைய ஒட்டுமொத்த ஊடகங்களுக்கும் மிகவும் பொருந்தும். “செய்தித்தாள்காரர்கள் நடமாடும் கொள்ளை நோய் போல் ஆகிவிட்டார்கள். செய்தித்தாள்களெல்லாம் மக்களுக்கு பைபிள், குரான், கீதை ஆகிய வேதங்களை ஒன்றாக்கியது போல் (வேதவாக்காக) ஆகிவிட்டன. கலவரங்கள் ஏற்படப்போவதாக ஒரு செய்தித்தாள் எழுதவும் டெல்லியில் தடிகள், கத்திகள் போன்றவை விற்றுத்தீர்ந்துவிடுகின்றன. மக்களைத் துணிவுடன் இருப்பதற்குக் கற்றுக்கொடுப்பதே ஒரு பத்திரிகையாளரின் பணி, அவர்களுக்குள் அச்சத்தை விதைப்பதில்லைஎன்கிறார் காந்தி.

இந்தியன் ஒப்பீனியன்’, ‘யங் இந்தியா’, ‘ஹரிஜன்போன்ற பத்திரிகைகள் மட்டுமல்லாமல் 1919-ல்சத்தியாகிரகாஎன்ற பதிவுசெய்யப்படாத பத்திரிகையையும் காந்தி நடத்தியிருக்கிறார்.

காந்தியின் வரலாறும் அவரது இதழியல் வரலாறும் அந்தக் காலத்தில் இந்திய வரலாறும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. மக்களின் இதயத்தை நோக்கிப் பேசவேண்டும் என்ற எண்ணம் கொண்ட காந்தி தனது கட்டுரைகள் அனைத்தையும் அலங்காரம் தவித்த எளிய மொழியிலேயே எழுதினார். மிகக் குறைவான விலையையே தனது பத்திரிகைகளுக்கு நிர்ணயித்தார். விளம்பரங்களைப் புறக்கணிக்கும் தைரியமும் காந்தி என்ற பத்திரிகை அதிபருக்கு இருந்தது. அவரது எல்லாச் செயல்பாடுகளுக்கும் மையமானஅறம்என்ற கருத்தாக்கமே அவரது பத்திரிகைச் செயல்பாடுகளுக்கும் மையமாக விளங்கியது. மேலும் காந்தி என்ற பத்திரிகையாளரைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் எஸ்.என் பட்டாச்சார்யா எழுதியமகாத்மா காந்தி- ஜர்னலிஸ்ட்’ ( MAHATMA GANDHI - THE JOURNALIST: S. N. Bhattacharya; National Gandhi Museum & Manak Publications Pvt. Ltd., New Delhi) என்ற புத்தகத்தைப் படித்துப் பார்க்கலாம். காந்தியின் பத்திரிகைகள் யாவும் ஆவணப்படுத்தப்பட்டு இணையத்திலும் கிடைக்கின்றன. ’காந்தி ஹெரிடேஜ் போர்ட்டல்என்ற இணையதளத்தில் (https://www.gandhiheritageportal.org/journals-by-gandhiji) இந்தப் பத்திரிகைகளைக் காணலாம்.

நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/fPD9sI)

(நாளை…)