ஆசை
('தி இந்து’ நாளிதழில் 02-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக விரிவான வடிவம் இது.)
1.
பிற மொழிக் கவிதைகள், காவியங்களுடனான ஊடாட்டம் தமிழ்
இலக்கியத்தை எப்போதுமே செழுமைப்படுத்தியே வந்திருக்கிறது. வால்மீகி ராமாயணம் என்ற
காவியக் கவிதையை உள்வாங்கித் தமிழ் மரபுக்கேற்ப கம்பர் புத்துருவாக்கிய கம்ப
ராமாயணத்தைவிட இதற்குச் சிறந்த உதாரணத்தைச் சொல்லிவிட முடியாது. கம்ப ராமாயணம்,
வில்லிபாரதம் போன்றவை தழுவல், அதாவது வழிநூல்கள், என்ற வகையில் அடங்கும். நவீன
காலத்தில் தழுவல் என்ற முறையைவிட மொழியாக்கம் என்ற முறையே அதிகம்
நிலைபெற்றிருக்கிறது. நவீன காலத்தில் பிற மொழிக் கவிதைகளை முதன்முதலில் தமிழில்
மொழிபெயர்த்தவர் அநேகமாக பாரதியாராகத்தான் இருக்கக் கூடும். ஆக, பிற மொழிக்
கவிதைகளின் மொழிபெயர்ப்பு நவீனத் தமிழில் தொடங்கி நூறு ஆண்டுகள் ஆனாலும்
குறிப்பிடத் தகுந்த கவிதை மொழிபெயர்ப்பு நூல்கள் மிகக் குறைவே. பெருந்தொகை என்ற
அளவில் பிரம்மராஜன் தொகுத்த ‘சமகால உலகக் கவிதைகள்’ என்ற நூல், பல்வேறு
குறைபாடுகளுடனும், குறிப்பிடத் தகுந்த முயற்சி! ஆனால், அந்த நூலின் முதல் பதிப்பு
வெளிவந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. அதற்குப் பிந்தைய ஆண்டுகளில்
சிறிய அளவிலான மொழிபெயர்ப்பு முயற்சிகள் பல நடந்திருக்கின்றன. தனியொரு கவிஞரின்
மொழிபெயர்ப்பு நூல்கள் நிறைய வந்திருக்கின்றன. உலகக் கவிதைகளின் பெருந்தொகுப்பு
என்றால் பிரம்மராஜனுடையது முதல் முயற்சி. சுந்தர ராமசாமியின் ‘தொலைவில் இருக்கும்
கவிதைகள்’, வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை ஆகியோரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘மண்ணும்
சொல்லும்: மூன்றாம் உலகக் கவிதைகள்’ (தற்போது விரிவாக்கப்பட்டு ‘கடைசி வானத்துக்கு
அப்பால்’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது) போன்ற தொகுப்புகள் உலகக் கவிதைகளின்
முக்கியமான மொழிபெயர்ப்புத் தொகுப்புகள்.
புனைகதை, கட்டுரை அளவுக்குக் கவிதைகள் அதிகம்
மொழிபெயர்க்கப்படுவதில்லை என்றாலும் முன்பைவிட அதிக அளவில் கவிதைகள்
மொழிபெயர்க்கப்படுகின்றன என்பது ஒருவகையில் ஆரோக்கியமான மாற்றமே! எனினும் மற்ற
மொழிபெயர்ப்புகளில் உள்ள தோல்வி விகிதத்தைவிட கவிதை மொழிபெயர்ப்புகள் அடையும்
தோல்வி விகிதம் மிக மிக அதிகம். கவிதைகளை உண்மையில் மொழிபெயர்க்கவே முடியாதோ என்ற
எண்ணத்தையே பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு நேரடியாகவோ ஆங்கிலம் வழியாகவோ வரும்
பெரும்பாலான மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. இங்கில்லை, உலகம்
முழுவதும் உள்ள சிக்கல் இது. இரு மொழிகளுக்கிடையே பொதுவாக உள்ள விஷயங்களைவிட
வேறுபாடாக இருக்கும் விஷயங்களே அதிகம். உரைநடையின் விவரணைத் தன்மையில் இந்தச்
சிக்கலை சமாளித்துவிட முடிகிறது. கவிதையிலோ அதன் கச்சிதத் தன்மை காரணமாக, அப்படிச்
சமாளிக்க முடியாமல் போகிறது. எனினும் நவீன வரலாற்றில் புகழ்பெற்ற சில
மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, பாரசிகக் கவிதையின் ஆங்கில
மொழிபெயர்ப்புகள் இரண்டை அப்படிச் சொல்லலாம்.
எட்வர்டு ஃபிட்ஜெரால்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒமர்
கய்யாமின் ‘ருபாயியத்’ முதலாவது உதாரணம்; கோல்மன் பார்க்ஸ் ஆங்கிலத்தில்
‘மொழிபெயர்த்த’ ரூமியின் கவிதைகள் இரண்டாவது உதாரணம். இந்த இரண்டு
மொழிபெயர்ப்புகளையும் மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்பகத்தன்மையற்ற
மொழிபெயர்ப்புகள் என்று பலரும் சொல்லிவிட்டாலும் மூலத்தோடு ஒப்பிடாமல் வெறும்
ஆங்கிலப் பிரதியை வைத்துப் பார்க்கும்போது கிடைக்கும் கவித்துவம் அவற்றை மிகுந்த
புகழ் பெற வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட நூற்றைம்பைது ஆண்டுகளுக்கு முன்பு அரைகுறை
பாரசிக மொழியறிவுடன், தனது அற்புதமான கவித்துவத்தைக் கலந்து எட்வர்டு
ஃபிட்ஜெரால்டு ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’தை மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பு என்று
கருதாமல் ஆங்கில இலக்கியத்தின் பகுதி என்றே கருதப்படும் அளவு தனித்துவத்தை அது
எட்டியது. தற்காலத்தில் கோல்மன் பார்க்ஸின் மொழிபெயர்ப்புகள் ஃபேஸ்புக், வாட்ஸ்
அப் வரையிலும் ரூமியின் புகழைக் கொண்டுசென்றிருக்கின்றன. ஆனால், கோல்மன்
பார்க்ஸுக்கு பாரசிக மொழி கொஞ்சம் கூட தெரியாது என்பது பலரும் அறியாத தகவல்.
ஏற்கெனவே, ஆங்கிலத்தில் செய்யப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்புகளை உள்வாங்கிக்கொண்டு
தனது மொழியில் அவற்றைக் கவித்துவம் ஊட்டிச் செய்த மொழியாக்கங்கள்தான் கோல்மன்
பார்க்ஸுடையவை. மூலத்துக்கு நம்பகத்தன்மையாகச் செய்ய முயன்ற பெரும்பாலான
மொழிபெயர்ப்புகள் தோற்ற இடத்தில் இந்த இருவரின் ‘அரைகுறை’ மொழிபெயர்ப்புகள் வெற்றி
பெற்றதற்குக் காரணம் அவர்களின் கவித்துவம். ஆக, கவிதை மொழிபெயர்ப்புக்கு
நம்பகத்தன்மையை முதன்மையாகக் கொள்வதா, கவித்துவத்தை முதன்மையாகக் கொள்வதா என்ற
கேள்வி எழுகிறது. ஒரு வாசகரைப் பொறுத்தவரை தனக்குக் கிடைத்திருக்கும் கவிதைப்
பிரதி வாசிப்பு இன்பத்தைக் கொடுக்கிறதா என்பதைத்தான் பெரும்பாலும் பார்ப்பாரே ஒழிய
நம்பகத்தன்மை கொண்டிருக்கிறதா என்று பார்ப்பது இல்லைதான். ஆனால், நம்பகத்தன்மை,
கவித்துவம் இரண்டிலுமே பெரும்பாலான கவிதை மொழிபெயர்ப்புகள் தோற்றுவிடும் சூழலில் மொழிபெயர்ப்புக்
கவிதைகளின் வாசகர்கள் பெரும்பாலும் பட்டினி கிடக்க வேண்டிய சூழல்தான் இங்கே
நிலவுகிறது.
2.
கவிதை மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை சமீப காலத்தில் மிகுந்த
கவனத்துக்குள்ளான நிகழ்வாக எஸ். சண்முகத்தின் மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளைக்
குறிப்பிடலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து ஃபேஸ்புக்கில் அநேகமாக தினசரி
ஒரு கவிதை என்ற கணக்கில் அவர் மொழிபெயர்த்த கவிதைகள் வாசகர்கள், கவிஞர்கள்,
மொழிபெயர்ப்பாளர்கள் மத்தியில் உடனுக்குடன் வரவேற்பு பெற்றன. மொழிபெயர்ப்பாளர்களும்
பாராட்டும் வகையில் சண்முகத்தின் மொழிபெயர்ப்புகள் பரவலான கவனத்தைப் பெற்றன.
இப்படி அவர் மொழிபெயர்த்த முன்னூறுக்கும் மேற்பட்ட கவிதைகள் சமீபத்தில்
தொகுக்கப்பட்டு ‘துயிலின் இரு நிலங்கள்’ என்ற தலைப்பில் புத்தகமாகவும்
தொகுக்கப்பட்டது. பிரம்மராஜனின் ‘சம கால உலகக் கவிதைகள்’ தொகுப்புக்குப் பிறகு
உலகக் கவிதைகளின் பெரும் பரப்பை உள்ளடக்கிய தொகுப்பு என்றால் அது இதுதான்.
உலகக் கவிஞர்களில் பழங்காலம், இடைக்காலம், தற்காலம் ஆகிய
காலப் பகுதிகளில் நாம் அறிந்திருப்பவர்களோடு கணிசமாக, நாம் அறிந்திராத பல
கவிஞர்களும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறார்கள். ரஷ்யக் கவிஞர்களில்
அலெக்ஸாண்டர் புஷ்கின், அலெக்ஸாண்டர் ப்ளாக், யெவ்ஜெனி யெவ்டுஷென்கோ, ஓசிப் மெண்டல்ஸ்டெம்
போன்ற நமக்குப் பரிச்சயமான கவிஞர்களுடன் அஃபானிவிச் ஃபெட், யாக்கோவ் போலான்ஸ்கி,
ஃபியோதர் சொலோகுப், கேவ்ரிலா டெர்ஜாவின் போன்ற பரிச்சயமற்ற கவிஞர்களும்
இடம்பெற்றுள்ளனர். ரஷ்யக் கவிதைகள், சீனக் கவிதைகள், பாரசிகக் கவிதைகள் போன்றவை
இந்தத் தொகுப்பில் கணிசமாக இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுக்கு அடுத்தபடியாக,
அமெரிக்கக் கவிதைகள். பெர்னாண்டோ பெஸ்ஸாவோ போன்ற லத்தீன் அமெரிக்கக் கவிஞர்களின்
கவிதைகளும் யீவ் போனஃபாய் (யீவ்ஸ் அல்ல, ‘யீவ்’தான்) போன்ற ஐரோப்பியக் கவிஞர்களும்
குறிப்பிடத் தக்க பிரதிநிதித்துவத்தை இந்தத் தொகுப்பில் பெற்றிருக்கிறார்கள்.
சரி, சண்முகம் எப்படி மொழிபெயர்த்திருக்கிறார்? தன்
முன்னவர்கள் (அதாவது கவிதை மொழிபெயர்ப்பாளர்கள்) முதுகில் வேதாளம் போல் ஏறி
உட்கார்ந்திருந்த சாபம் சண்முகத்தை என்ன செய்திருக்கிறது?
தனித்தனிக் கவிதைகளாக ஃபேஸ்புக்கில் வந்தபோதே சண்முகம்
இந்தக் கவிதைகளில் பயன்படுத்திய மொழி வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒருங்கே பெற்றது.
‘கேட்டல்’ என்பதற்குப் பதிலாக ‘செவிகொள்ளுதல்’ சென்ற சொல்லை சண்முகம் பயன்படுத்தியிருப்பது
சில இடங்களில் அழகூட்டுகிறது. உதாரணமாக, தொகுப்பின் முதல் கவிதையில் ஒரு வரி இது:
‘…பூவுலகின் உவகை யாவும்-நெஞ்சம் செவிகொள்கிறது’. ‘…நெஞ்சம் கேட்கிறது’ என்று
செய்திருந்தால் இவ்வளவு அழகு இந்த வரிக்கு வந்திருக்காது. அதேபோல், ‘உறு’ என்ற
வினைச்சொற்களைச் சேர்த்து ‘அப்பாலுற்றது’, ‘இறுதியுற்றது’, ‘ஆட்சியுறுகிறார்கள்’,
‘அமைவுற்றுள்ளது’, ‘சாய்வுறுகிறது’, ‘விரும்புறுகிறேன்’ என்பதுபோன்ற பிரயோகங்களை
உருவாக்கிப் பார்த்திருக்கிறார். ஓரிரு இடங்களில் நன்றாக இருந்தாலும் இதுபோன்ற
பிரயோகங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பை ஏற்படுத்துகின்றன; அதிலும்
‘விரும்புறுகிறேன்’ என்பது படிக்கும்போதே மரண அவஸ்தையை ஏற்படுத்துகிறது. மேலும்,
‘அண்மிக்க’, ‘நர்த்திக்கிறாய்’, ‘உன்னிக்கிறேன்’, ‘கனவுறலாம்’ என்று
வினைச்சொற்களிலும் கலப்புச் சொற்களிலும் பல்வேறு பரிசோதனைகளை சண்முகம்
செய்துபார்த்திருக்கிறார்.
இந்த மொழிபெயர்ப்புகளில் சண்முகம் செய்திருக்கும்
பரிசோதனைகளில் பலவும் நமக்கு உவப்பளிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு மொழியில்
இப்படிப்பட்ட பரிசோதனை முயற்சிகள் நிறைய மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த
முயற்சிகளில் கிடைக்கும் சிறு வெற்றியும் மொழிக்கு ஏதாவதொரு விதத்தில் உதவும்.
ஆகவே, வெற்றி தோல்வி தாண்டி இதுபோன்ற முயற்சிகளை நாம் பார்க்க வேண்டும்.
சண்முகத்துக்கு சங்க இலக்கிய வாசிப்பு கணிசமாக
உதவியிருக்கிறது எனபது மொழிபெயர்ப்புகளில் தெரிகிறது. எனினும் ஒட்டாத
இடங்களிலெல்லாம் ‘-ஆர்ந்த’ என்ற பின்ன்னொட்டைப் பசைபோட்டு ஒட்டி நெளியவைக்கிறார்
சண்முகம். ‘இருளார்ந்த’, ‘ஒளியார்ந்த’ என்பதையெல்லாம் தாண்டி ‘துன்பியலிலார்ந்து’
என்று சொல்லும்போது சற்றே நிமிர வைக்கிறார். அது என்ன ‘துன்பியலிலார்ந்து’ என்று
கவிதையின் ஆங்கில மூலத்தைத் தேடிப் போனால் அங்கே ‘துயரம்’ (tragic) காத்திருக்கிறது.
தன் பாணியில் ‘துயரார்ந்த’ என்றாவது அதை மொழிபெயர்த்திருக்கலாம். Tragic என்ற சொல்
கிரேக்க நாடகவியலுக்கு மட்டுமே
சொந்தமானதல்ல. ‘Tragic accident’ என்று ஆங்கிலத்தில் இருந்திருந்தால்
‘துன்பியலிலார்ந்த விபத்து’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்குமோ என்ற விபத்து
அச்சம் நமக்கு ஏற்படுகிறது.
மொழிபெயர்ப்புக்கான மொழிநடையைத்
தேர்ந்தெடுத்துக்கொண்டதல்ல இந்த பெருந்தொகுப்பின் முதன்மைப் பிரச்சினை. ஏற்கெனவே
பார்த்ததுபோல் மொழியில் சில பரிசோதனைகள் செய்துபார்க்க வேண்டும் என்ற சலுகையில்
நடை அடிப்படையிலான பல பிரச்சினைகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். ஆனால், பக்கத்துக்குப்
பக்கம் காணப்படும், சாத்தியமான அனைத்து வகையான பிழைகளையும் அப்படி விட்டுவிட
முடியுமா என்று தோன்றவில்லை. எழுத்துப்பிழை, அபாயகரமான அளவுக்குத் தவறாக
மொழிபெயர்த்திருப்பது, கவிஞர்களின் பெயர்களைப் பக்கத்துக்குப் பக்கம் வேறு
விதத்தில் எழுதியிருப்பது முதலானவற்றைப் பட்டியலிட்டால் ஒரு பக்கத்துக்கு
குறைந்தபட்சம் 5 பிழைகள் என்ற வீதத்தில் 400 பக்கங்களுக்கும் சேர்த்து 2,000
பிழைகளுக்குக் குறையாத அளவில் பெருஞ்சாதனை நிகழ்த்தியிருக்கிறது இந்தப் புத்தகம்.
ஃபேஸ்புக்கில் இந்தக் கவிதைகள் பிரபலமடைந்த காலத்தில்
நானும் ஒருசில கவிதைகளைப் படித்துவிட்டு அவற்றால் ஈர்க்கப்பட்டேன்.
நண்பர்களிடமெல்லாம் ‘யுரேகா’ என்று கூச்சலிடாத குறையாக சண்முகத்தின்
மொழிபெயர்ப்புகளைப் பற்றி விதந்தோதினேன். முதல் தடவை படிக்கும்போது துல்லியத்தில்
பிரச்சினை இருப்பது தெரிந்தாலும் கவித்துவமாக இருக்கிறதல்லவா என்று எனக்கு நானே
சமாதானம் செய்துகொண்டேன். புத்தகமாகத் தொகுக்கப்பட்டபோது மிகுந்த மகிழ்ச்சி
ஏற்பட்டது. கவிதை மொழிபெயர்ப்பில் பயிற்சி எடுத்துக்கொள்ளும் விதத்தில்
சண்முகத்தின் மொழிபெயர்ப்புகளையும் அவர் அந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளைப்
பயன்படுத்தினாரோ அவற்றைத் தேடி எடுத்து அந்தக் கவிதைகளுடனும் ஒப்பிட்டுப்
பார்த்தேன். எனக்கு பேரதிர்ச்சிதான் காத்திருந்தது.
ஒன்றல்ல இரண்டல்ல, அவ்வளவு பிழைகள். ஒவ்வொரு கவிதையையும்
அதன் ஆங்கில மூலத்தையோ, ஆங்கில மொழிபெயர்ப்பையோ வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால்
சிரமமேயின்றிப் பல்லிளிக்கின்றன பெரும்பாலான மொழிபெயர்ப்புகள். பல உதாரணங்களைக்
காட்டலாம். ஓசிப் மெண்டல்ஸ்டெம் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வரிகளின் ஆங்கில
மொழிபெயர்ப்பில் ‘Where they are taking me’ என்பது சண்முகத்தின் மொழியாக்கத்தில்
‘அவர்கள் எங்கு என்னிடம் பேசுகிறார்கள்…’ என்று ஆகிறது. அதே கவிதையில் ‘I want to
sleep’ என்ற வரி ‘நான் உறங்கப் போகிறேன்’ என்று தமிழ் உருவம் கொள்கிறது. இன்னொரு
கவிதையில் ‘It may be, night, you do not need me’ என்ற வரி ‘இது இரவாக
இருக்கக்கூடும் உனக்கு நான் தேவையில்லை’ என்று ஆகிறது. இது இரவா பகலா என்பதில்
கவிஞருக்கு ஏதும் ஐயமில்லை; ‘இது இரவாக இருந்தாலென்ன, நான்தான் உனக்குத்
தேவையில்லையே’ என்ற கழிவிரக்க தொனியில்தான் கவிஞர் பேசுகிறார். ‘May be’ என்றால்
‘கூடும்’ என்று புரிந்துகொள்ள வேண்டும் என்ற ‘ஏதோ’ அடிப்படையில்
மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அடுத்த வரிகள், ‘Out of the world’s abyss,/ Like a
shell without pearls/ I am cast on your shores’ என்று வருகின்றன. ‘உலகின்
ஆழ்குழியிலிருந்து வெளியேற/ முத்துக்கள் அற்ற சிப்பியைப் போல்/ நான் உனது கரையில்
வீசப்பட்டிருக்கிறேன்’ என்று சண்முகம் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
‘ஆழ்குழியிலிருந்து’ என்று சொல்லியாகிவிட்டது; அதென்ன ‘வெளியேற’? ஆங்கிலத்தில்
‘Out’ இருப்பதாலா? அடுத்த வரியில் ‘indifferently’ என்ற சொல் ‘வழக்கத்துக்கு
மாறாக’ என்று ஆகியிருக்கிறது. (‘உதாசீனமாக’ என்பதுதான் அந்தச் சொல்லின் அர்த்தம்).
உண்மைதான், இங்கே எல்லாமே மூலப் பிரதிக்கு மாறாகத்தானே
மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அதே கவிதையில், ‘And bind to the shell’ என்ற வரி
‘சங்கிற்குக் குருடாய் இருக்க’ என்று தமிழ் வடிவம் பெற்றிருக்கிறது. ‘Take’ என்ற
சொல் ‘talk’ ஆகவும் ‘want’ என்ற சொல் ‘went’ ஆகவும் புரிந்துகொள்ளப்பட்டதன்
அடிப்படையில் இங்கே ‘bind’ என்பது ‘blind’ ஆக மொழியாக்கம் பெற்றிருக்கிறது என்றே
புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ஓசிப் மாண்டெல்ஸ்டாமின் மற்றுமொரு கவிதை; சொற்களைப்
பற்றியது. ‘Words are unnecessary,/ There being nothing to learn:/ How sad and
exemplary/ Is an animal’s dark heart!’ என்பது முதல் பத்தி. ‘வார்த்தைகள்
தேவையற்றவை/ அவற்றில் கற்றறிய ஒன்றுமில்லை/ எத்தனை சோகம்/ அவை விலங்கின் இருண்ட
இதயம் பின்பற்றத்தக்கவை’ என்று சண்முகம் மொழிபெயர்த்திருக்கிறார். ‘எவ்வளவு
சோகமானது, அருமையானது/ ஒரு விலங்கின் இருள்சூழ் இதயம்!’ என்பதுபோலல்லவா
இருந்திருக்க வேண்டும். ‘அவை’ என்பது எங்கு வந்தது என்று புரியவில்லை.
இது ஓரிரு கவிதைகளில் மட்டுமே நிகழ்ந்த விபத்து அல்ல; பெரும்பாலான கவிதைகளில் நிகழ்ந்திருக்கும் ‘துன்பியலிலார்ந்த’ சம்பவம்! யெவ்டுஷென்கோவின் ரஷ்யக் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘Deliberate
indifference to the living, deliberate cultivation of the dead’ என்ற வரிகள் தமிழில் ‘வாழ்தலுக்குள் வேண்டுமென்றே வேற்றுமையின்மை செய்யப்பெறுகிறது, வேண்டுமென்றே மரித்தோரை அறுவடை செய்தல்’ என்று ‘மொழியாக்கமுறு’கின்றன. ‘get drunk’ என்பது ‘குடிமையில் உழல்கிறார்கள்’ என்றாகிறது. குடிமை என்றால் ‘civic’ என்றுதானே பொருள்படும்! நோய், குளிர், உயிர், குடி என்றால் கவித்துவம் இல்லை; நோய்மை, குளிர்மை, உயிர்மை, குடிமை என்றால்தானே கவித்துவம் மிளிரும்! யெவ்டுஷென்கோவின் இன்னொரு கவிதையின் வரிகள் ‘of whom,
essentially, what did we know?’ என்பது ‘அவர்களுள் அவசியமானவர்களைப் பற்றி நாம் எதை அறிந்திருக்கிறோம்’ என்றாகிறது. நேரெதிர் பொருளில் மொழிபெயர்க்கும் விந்தைகளும் அடிக்கடி கண்ணில் படுகின்றன. யெவ்டுஷென்கோவின் மற்றுமொரு கவிதையில் ‘Nothing is not
particular’ என்பது ‘அதிலுள்ள எதுவுமே குறிப்பானதல்ல’ ‘என்றுறு’கிறது. அதே கவிதையில் இரண்டு வரிகள் மொழிபெயர்க்க மறத்தலுறுகின்றன (அதாவது விடப்படுகின்றன). அதே கவிதையில், வாழ்க்கையைக் குறிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் ‘By the rule of
the game’ என்ற வரி ‘போராட்டத்தின் சட்டத்தில்’ என்றாகிறது. அதே கவிதையில் ‘Worlds die in
them’ என்ற வரி ‘உலகம் அவர்களுக்குள் இறங்குகிறது’ என்று நமக்குள் இடியாய் இறங்குகிறது. அது மட்டுமா இந்தக் கவிதை இரண்டாகப் பிளக்கப்பட்டு இரண்டு கவிதைகள் போல் அடுத்தடுத்த பக்கங்களில் தரப்பட்டுள்ளது. ‘Brother of a
brother? Friend of friends?/ Lover of lover?’ என்று கேள்வியில் அமைந்திருக்கும் வரிகள் ‘சகோதரனின் சகோதரனே/ நண்பர்களின் நண்பனே/ காதலரின் காதலரே’ என்று தமிழில் விளித் தன்மையை ஏற்கின்றன. ’சகோதரனின் சகோதரனா? நண்பர்களின் நண்பரா? காதலரின் காதலரா?’ என்பது போலல்லவா மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதே கவிதையில் ‘We who knew our
fathers/ in everything, in nothing.’ என்ற வரிகள் ‘நாம் நம் தந்தையர்களை அறிந்திருக்கிறோம்/ ஒவ்வொன்றிலும் ஒன்றுமில்லை’ என்று மொழியாக்கம் பெற்றிருக்கின்றன.
யெவ்டுஷென்கோவின் இன்னொரு கவிதையில் ‘I can recall’ என்ற
வரி தமிழில் ‘என்னால் மறு-நினைவுபடுத்த இயலுகிறது’ என்று உருப்பெறுகிறது. ‘recall’
என்ற சொல்லில் ‘re-’ என்ற முன்னொட்டு இருப்பதால் ‘மறு-நினைவு’ போலும்!
அதுமட்டுமல்லாமல் வெறுமனே ‘நினைவுபடுத்த’ என்று இருந்தால் அதில் கவித்துவம் இருக்காதல்லாவா!
‘மறு’ இட்டு ஒரு இடைச்சிறுகோடும் (hyphen) இட்டால்தான் புதிய கவித்துவம்
பிறக்கிறது. அடிப்படையில் ‘நினைவுபடுத்துதல்’ என்ற சொல்லே இங்கு இடறுகிறது.
கவிதையின் பாத்திரம் யாருக்கு
நினைவுபடுத்துகிறது? யாருக்கும் இல்லை, தனக்குதான் என்றால் ‘நினைவுபடுத்திப்
பார்க்க முடியும்’ என்றோ அல்லது சுதந்திரமாக ‘இப்போதும் நினைவுகூர்கிறேன்’ என்பது
போலவும் அல்லவா மொழியாக்கம் செய்திருக்க வேண்டும்! ஒரு சிறு வரியில் இவ்வளவு
பிரச்சினைகள் என்றால் ஒட்டுமொத்தத் தொகுப்புக்கும் கணக்கிட்டுப்
பார்த்துக்கொள்ளுங்கள்! ‘recall’ என்ற சொல்லை ‘மறு-நினைவுபடுத்த’ என்று
மொழிபெயர்த்ததை, ‘நினைவுபடுத்துதல்’ என்பதோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பிருப்பதால்
மன்னித்துவிட்டுவிடலாம். ஆனால், ‘It will
recall stored fruits
Bitten by a winter fire’ என்ற சார்லஸ் டாம்லின்ஸனின் வரிகள்
‘சேகரத்திலுள்ள கனிகள் மீள்- அழைப்புறுகிறது -/ அவை/ குளிர்கால தீயால் கடிக்கப்பட்டவை’ என்று மொழியாக்கம் செய்யப்படும்போது நமக்கு மரணம் பயம் ஏற்படுகிறதல்லவா. சொல்லுக்குச்
சொல் மொழிபெயர்ப்பு என்ற நிலையையும் தாண்டிச் சொல்லுக்கு உள்ளே உள்ள அசைகளையும்
மொழிபெயர்த்தல் என்ற உன்னத நிலையை சண்முகம் இலக்காகக் கொண்டிருப்பது ‘recall’
என்ற சொல்லை ’ மீள்-அழைப்புறுகிறது’ என்று மொழிபெயர்த்திருப்பதை வைத்து நாம் அறிந்துகொள்ள
முடிகிறது. இந்த இடத்தில் ‘நினைவுபடுத்துகின்றன’ அல்லது ‘ நினைவுக்குக்
கொண்டுவருகின்றன’ என்று மொழிபெயர்த்திருக்கலாம்தான். ஆனாலும்,
‘மீள்-அழைப்புறு’வதில் உள்ள கவித்துவம் அவற்றில் இருக்காது! ஃபெர்னாண்டோ பெஸோவாவின் ஒரு கவிதையில் ‘Spring’ (வசந்தம்) எஸ்.
சண்முகத்தின் மொழிபெயர்ப்பில் ‘இலையுதிர் கால’மாகியிருப்பது மெய்சிலிர்க்கவைப்பது.
மறைந்த, லத்தீன் அமெரிக்க நாவலாசிரியர் ரொபர்த்தோ
பொலான்யோவின் கவிதைகளும் அவர் பெயரும் சண்முகத்திடம் களப்பலி ஆகியிருக்கின்றன.
ஸ்பானிய ஒலியமைப்பு கூட வேண்டாம். ஆங்கிலத்தில் பார்த்ததுபோல் எழுதுவதிலும் ஒரு
ஒழுங்கு வேண்டாமா? ராபர்ட்டோ போலனோ, ராபர்ட்டோ போலனா என்று அடுத்தடுத்த
பக்கங்களில் வேறுவேறு அவதாரங்கள் நிகழ்கின்றன. அதை விட்டுவிடலாம். மொழிபெயர்ப்பை
விட முடியுமா? ‘her stepbrother’ என்பது ‘மாற்றாந்தாய் சகோதரன்’
ஆகியிருக்கிறது. மாற்றாந்தாயின் சகோதரனா (அப்படி என்றால் மாமா முறை),
மாற்றாந்தாயின் மகனா என்ற குழப்பம் ஏற்படுகிறதல்லவா? கவிதை முழுவதும் ‘நீ’ என்று
இருப்பது இடையில் ‘நீங்கள்’ ஆகவும் மாறிவிடுகிறது. ’let your
image dissolve’ என்ற வரியை ‘உன் படிம உருவைக் கரைக்கலாம்’ என்று சண்முகம்
மொழிபெயர்த்திருக்கிறார். Image என்றாலே படிமம்தானா? ‘உன் உருவம்
கரைந்துபோகட்டும்’ என்ற அர்த்தத்திலல்லவா மொழிபெயர்த்திருக்க வேண்டும்.
பொலான்யோவின் இன்னொரு கவிதையில் இடம்பெற்ற ‘All of us were living in a television
commercial’ என்ற வரிகள் தமிழில் ‘நாம் அனைவரும் தொலைக்காட்சி வணிகத்
திரையில்
வாழ்ந்திருக்க’ என்று மொழியாக்கம் ஆனதைப் படிப்பதற்கு நாம் மிகவும்
கொடுத்துவைத்திருக்க வேண்டும். ‘television commercial’ என்றால் அங்கன்வாடிக்
குழந்தைகள் கூட ‘தொலைக்காட்சி விளம்பரம்’ என்று சொல்லிவிடுமே. எப்படித் தவறு
நிகழ்ந்தது? தவறாக இருக்க வாய்ப்பில்லை. ‘தொலைக்காட்சி விளம்பரம்’ என்றால் அதில்
கவித்துவம் இல்லை ‘தொலைக்காட்சி வணிகத் திரையில்’ என்றால்தான்
கவித்துவம் இருக்கிறது (சங்கிற்குக் குருடாய் இருத்தல் போல). அதனால் இது
பிரக்ஞைபூர்வமான ஒரு முடிவுபோல்தான் இருக்கிறது. அதுமட்டுமல்ல, எதிர்மறை
வாக்கியங்களை நேர்மறைவாக்கியங்களாக ஆக்கும் ‘நேர்மறைச் சிந்தனை’யும்
மொழிபெயர்ப்பாளருக்கு இருப்பது பல இடங்களில் தெரியவருகிறது. எடுத்துக்காட்டாக,
மேலிருந்து குண்டுமழை பொழியப்படுவதைப் பற்றிய பொலான்யோவின் கவிதை ஒன்றில் ‘and I didn’t tell you we were on death’s program/ but
instead that we were going on a journey’ என்று
வருகின்றன. இந்த வரிகளை, சண்முகத்தின் ‘நேர்மறைச் சிந்தனை’ ‘நாம் மரணத்தின் நிகழ்ச்சியுள் இருக்கிறோம்/
என்று சொன்னேன் ஆனால்/ அதற்கு
மாறாக நாம் மற்றொரு பயணத்தில் இருந்தோம்’
என்று மொழியாக்கம் செய்கிறது. ’சொல்லவில்லை’ என்பது இங்கே ‘சொன்னேன்’ ஆக
மாறியிருக்கிறது. மக்களே, இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல, ஆங்கில மூலத்தை வைத்து அனைத்துக்
கவிதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதிர்ந்துபோய்விடுவீர்கள். அந்த அளவுக்கு,
அலட்சியம், பொறுப்பின்மை, அவசரம்!
இந்தத் தொகுப்பில் முன்னூறுக்கும் மேற்பட்ட கவிதைகள்
மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளின் மூலமான
ஆங்கில மொழிபெயர்ப்புகளை (பெரும்பாலும் சண்முகம் குறிப்பிட்டிருக்கும் அதே
மொழிபெயர்ப்புகளை) தேடிக் கண்டுபிடித்து ஒப்பிட்டுப் பார்த்துதான் இந்த
மொழிபெயர்ப்புகள் எவ்வளவு பெரிய மோசடி என்பதைக் கண்டறிய முடிந்தது. எனினும்
இவ்வளவு மோசடியான ஒரு முயற்சியை முக்கியமான எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்,
கவிஞர்கள், இலக்கிய வாசகர்கள் போன்றோர் கொண்டாடியிருப்பதற்கு என்ன காரணங்கள் என்று
யோசித்துப் பார்க்க வேண்டும்.
முதல் காரணம், குழறுபடியான மொழிபெயர்ப்பின் மூலம்
மேல்தோற்றத்துக்கு ஒரு கவித்துவத்தை இந்த மொழிபெயர்ப்புகள் கொண்டிருப்பது.
எடுத்துக்காட்டாக, ‘சங்கிற்குக் குருடாய் இருக்க’, ‘உலகம் அவர்களுக்குள்
இறங்குகிறது’ என்பது போன்ற வரிகளை (அவற்றின் ஆங்கில மூலத்தை மறந்துவிட்டு)
பார்க்கும்போதே இதில் ஏதோ கவித்துவம் இருப்பதுபோல் தோன்றுகிறதல்லவா. ஆங்கில
மொழிபெயர்ப்பைப் பார்க்காமல் இந்தக் குழறுபடியைக் கண்டுபிடிப்பது சிரமம். ஏனெனில்,
கவிதை பெரும்பாலும் அதர்க்கமான ஒரு வெளியில் இயங்குவது. முன்வரிக்கும் அடுத்த
வரிக்கும் தர்க்கபூர்வமான தொடர்பு இருந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆகவே,
குழப்படியான ஒரு மொழிபெயர்ப்பில் மேல்தோற்றத்துக்கு எழும் கவித்துவம் நம்மை
மயக்கிவிடுகிறது. கூடுதலாக, சங்க இலக்கிய மொழியின் வாசம் வேறு அங்கங்கே வீச
விடுவது. மொழியாக்குநருக்கு இயல்பாகவே உள்ள கவித்துவம் காரணமாக அங்கங்கே
கவித்துவம் உண்மையிலேயே மிளிர்வது போன்ற வரிகள். இவையெல்லாம் சேர்ந்து தரும்
தோற்றத்தில் (இந்தக் கட்டுரையாளர் உட்பட) பலரும் வீழ்ந்துவிட்டார்கள். கூடுதலாக,
ஃபேஸ்புக் ஒரு படைப்பாளியையோ மொழிபெயர்ப்பாளரையோ எந்த அளவுக்கு வீழ்ச்சியடையச்
செய்யும் என்பதற்கான உதாரணமாகவும் இந்த மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.
ஃபேஸ்புக்கின் உலகம் ‘உடனுக்குடன்’ உலகம். அங்கே, புகழ், அவமானம் எல்லாம்
‘உடனுக்குடன்’ கிடைத்துவிடுகின்றன. முந்தைய காலங்களில் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்குத் தற்போது
இது நிகழ்கிறது. ஃபேஸ்புக்கின் இந்த ஜனநாயக அம்சத்தை நிதானமாகவும்
பொறுப்புணர்வோடும் எதிர்கொள்ளவில்லையென்றால் பெரும் சறுக்கல் ஏற்படும் என்பதற்கு
இந்த மொழிபெயர்ப்புகள் சான்று கூறுகின்றன.
அனைத்துக் கவிதைகளிலும் சண்முகமே துறுத்திக்கொண்டு
தெரிகிறார். எல்லாக் கவிதைகளிலும் ஒரே மாதிரியான தொனி, ஒரே மாதிரியான சொல்முறை! உண்மையில்
இந்தத் தொகுப்பைக் கீழிறக்கிய அம்சம் எதுவென்று பார்த்தால் படைப்பை மீறித் தன்னை
முன்னிறுத்திய மொழிபெயர்ப்பாளரின் ஆளுமைதான். சுதந்திர மொழிபெயர்ப்பு, தழுவல்
என்றெல்லாம் தப்பித்துக்கொள்ள முடியாது. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்க முயன்று
பல இடங்களில் பிழையாக மொழிபெயர்த்திருக்கிறார் என்பதே உண்மை என்பதை நாம் ‘recall’
செய்து பார்க்க வேண்டும்!
சரி, ஃபேஸ்புக்கில் மொழிபெயர்த்துப் போட்டுவிட்டோம்.
புத்தகமாகக் கொண்டுவரும்போது சரிபார்க்க வேண்டுமல்லவா? மதிப்புக்குரிய, மூத்த
மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இந்த மொழிபெயர்ப்புகளை ‘திருத்தியிருக்கிறார்’ என்ற தகவல்
புத்தகத்தின் தொடக்கத்தில் தரப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அப்படி
எதைத் திருத்தியிருக்கிறார் என்பது எங்கும் தென்படவில்லை. அங்கங்கே ஏதோ ஒருசில
கவிதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, ஆங்கில மூலத்தை வைத்துப் பார்த்தாலே எவ்வளவு
பிழைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பது
‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ தெரிந்திருக்குமே! ‘க்ரோனி கேப்பிட்டலிசம்’
போல் ‘க்ரோனி க்ரிட்டிஸிஸம்’ ஒன்று தமிழ் இலக்கியச் சூழலில்
செயல்பட்டுக்கொண்டிருப்பதன் அடையாளங்களுள் ஒன்றாக இந்த மொழிபெயர்ப்புகளையும்
அதற்குக் கிடைத்த ஆதரவுகளையும் எடுத்துக்கொள்ள முடிகிறது. (‘க்ரோனி க்ரிட்டிஸிஸம்’
என்ற சொல்லைத் தமிழில் கமல் பாணியில் சொல்வதென்றால் ‘சார்ந்தோர் சார்ந்து இயங்கும்
விமர்சன மரபு’ எனலாம்).
வாசகருக்கு எந்த விதத்திலும் உதவிகரமாக இல்லாத தொகுப்பு
இது. பெயர்கள், விவரங்களில் அவ்வளவு பிழைகள். கேவ்ரில் டெர்சாவின் (Gavrila Romanovich
Derzhavin) என்று ஓர் இடத்திலும் கேவ்னிடா ரோமோனோவிச் டெர்ஜாவின்
என்று இன்னோர் இடத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதோர் சொலகுப்
(Fyodor
Sologub), பெதோர் சொலோகுப் என்று
அடுத்தடுத்த பக்கங்களில் வேறுவேறு வடிவங்களில் இடம்பெறுகிறது. இவரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் பின்னிணைப்பில் இல்லை. ‘பெத்ரிகோ கார்சியா லோர்கா’ (Federico Garcia
Lorca) என்றும் ‘பெத்திகோ கார்சியா லோர்கா’ என்றும் அடுத்தடுத்த பக்கங்களில் அவதாரம் எடுக்கிறார் லோர்கா.
விவரப் பட்டியலில் இறுதியில் ‘வின்செண்டே ஹியுட்போரோ’ என்று வெறுமனே ஒரு பெயர் மட்டும் இருக்கிறது, யார், எவர், ஆண்டு, நாடு என்று ஏதும் கொடுக்கப்படவில்லை. வெறுமனே ‘வின்செண்டே ஹியுட்போரோ’ அவ்வளவுதான். ஃபயத் ஜாமிஸ் (Fayad Jamis) என்ற கவிஞரைப் பற்றிய குறிப்பில் ‘க்யுபா மொழிக் கவிஞர்’ என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. க்யுபா மொழி என்று ஏதும் இருக்கிறதா? க்யுபாவைச் சேர்ந்த ஸ்பானிஷ் மொழிக் கவிஞர் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்! கபீர் (15-ம்
நூற்றாண்டு), இந்திய பக்தி இயக்கத்தின் முன்னோடி
என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். அப்படி என்றால் ‘ஆழ்வார்கள்’, ‘நாயன்மார்கள்’
எல்லாம் யாராம்! கவிதை மொழிபெயர்ப்புகளைப் போலவே பின்னால் கொடுக்கப்பட்டுள்ள
விவரங்களையும் கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும். எந்த விதத்திலும் உதவாத
குறிப்புகள். அகரவரிசையிலோ, நாடுகள் வரிசையிலோ, காலவரிசையிலோ கொடுக்கப்படவேயில்லை.
தோன்றிய வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. புத்தகத்தின் தொடக்கத்திலும்
பொருளடக்கம் ஏதும் இல்லை. ஆகவே, பாப்லோ நெரூடாவின் கவிதைகளைப் படிக்க வேண்டும்
என்றால் முன்னூற்று சொச்சம் பக்கங்களையும் புரட்டிப்பார்க்கும் விரல்பயிற்சியை
மேற்கொள்ள வேண்டும். அதைவிட கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது ஒரு பக்கத்தைப் புரட்டிப்
பார்ப்போம் என்று முயன்றால் வெற்றி கிடைக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
உண்மையில், நல்ல வரிகள் இல்லாமலில்லை. அவற்றில் பலவும்
எனக்கு ஆங்கில மூலம் கிடைக்கப்பெறாதவை. எடுத்துக்காட்டாக, இந்தக் கவிதை:
நான்
உன் சிரசை முத்தமிடுகிறேன்
விழிகள் மீதொரு முத்தம்- துயிலின்மையை போக்கிவிடுகிறது
நான்
உன் விழிகளை முத்தமிடுகிறேன்
இதழ்களின் மீதொரு முத்தம் - ஆழ்ந்தமிழ்ந்த தாகத்தை தணிக்கிறது
நான்
உன் இதழ்களை முத்தமிடுகிறேன்
சிரத்தின் மீதொரு முத்தம்- ஞாபகத்தை துடைத்தெறிகிறது
நான்
உன் சிரத்தை முத்தமிடுகிறேன்
(மெரினா
செட்டயீய)
அதேபோல், வியாயெஸ்லாவ் இவானோவின் கவிதையையும் சொல்லலாம்:
இடியுடன் மின்னும் பெருமழையினால் மூண்ட
இரு அடிமரங்கள் நாம், நள்ளிரவு வனத்தின் இரு சுடர்கள்.
இராப்பொழுதின் ஊடாய் பறக்கும் இரு எரிகற்கள் நாம்,
ஒற்றை ஊழின் இரு முனையுள்ள அம்புகள்.
……. ஒற்றைக் காட்சியின் இரு விழிகள் நாம்,
அதிர்ந்து துடிக்கும் ஒரே கனவின் சிறகுகள்.
பண்டையப் பேரழகு சயனிக்கும்,
புனிதக் கல்லறைப் பளிங்கின் மேலிருக்கும்
உளத்துயரின் இரு நிழல்கள் நாம்.
…ஒற்றைச் சிலுவையின் இரு கரங்கள் நாம்.
இன்னமும் நிறைய வரிகள் இருக்கின்றன. ஆனால், அவை யாவும்
‘சங்கிற்கு குருடாய்’ இருந்த மொழிபெயர்ப்புகள்தானோ என்ற அச்சமும் எழுகிறது.
ஒருசில கவிதைகளை எடுத்துக்கொண்டு அவற்றை மிகுந்த
கவனத்துடன் மொழிபெயர்த்துச் சிறிய புத்தகமாக வெளியிட்டிருந்தால் கூட உருப்படியாக
இருந்திருக்கும். சண்முகத்திடம் உள்ள கவித்துவம் அதற்குக் கைகொடுத்திருக்கும். நமக்குக்
கனவுகள் நிறைய இருக்கலாம், ஆனால் அந்த அளவுக்குச் செயல் வேகமும் தரமும் பொறுப்புணர்வும்
இல்லாதபோது உன்னதத்தை எட்டிப்பிடிப்பது எப்படி?
இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டிய பிழைகள், கொலைகள்,
அந்தக் கொலைகளால் விளைந்த கவித்துவம் எல்லாம் கையளவுதான்; புத்தகத்தில் வரிக்கு
வரி பார்த்தால் கடலளவு கிடைக்கும். ஏதோ, ஒரு உள்நோக்கத்தோடு இந்த விமர்சனம்
எழுதப்பட்டிருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு கீழே சண்முகம் பயன்படுத்திய சில
ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும்
பக்கத்தில் பக்கத்தில் கொடுத்திருக்கிறேன். ஒப்பிட்டுப் பார்த்து எனக்கு
உள்நோக்கம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். நேரம் இருப்பின் கவிதைக்குக்
கவிதை மூலம் தேடி ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.
துயிலின் இரு நிலங்கள்
(பிறமொழிக் கவிதைகள்)
தமிழாக்கம்: எஸ். சண்முகம்,
விலை: ரூ. 360
தோழமை வெளியீடு, சென்னை-78.
தொடர்புக்கு: 99401 65767
ஆங்கில மூலம்
RAIN
It’s raining and you say it’s as if the clouds
were crying. Then cover your mouth and speed up
your step. As if those emaciated clouds were crying?
Impossible. So then, why all this rage,
This desperation that’ll bring us all to hell?
Nature hides some of her methods
in Mystery, her stepbrother. And so, sooner than
you think, this afternoon you consider
an afternoon of the apocalypse, will seem nothing
but
a melancholy afternoon, an afternoon of loneliness
lost
in memory: Nature’s mirror. Or maybe
you’ll forget it. Rain, weeping, your footsteps
resounding on the cliff-walk. They don’t matter.
Right now you can cry and let your image dissolve
on the windshields of cars parked along
the Boardwalk. But you can’t lose yourself.
- Roberto Bolano
|
எஸ். சண்முகத்தின் மொழியாக்கம்
மழை பொழிந்து கொண்டிருக்கிறது
மேகங்கள் அழுவதற்கு ஒப்பாக இருக்கிறது என்கிறாய்
பின்பு வாயை மூடிக் கொண்டு வேகமாய் நடையிட்டுச் செல்கிறாய்
மெலிந்த மேகங்கள் ஏதோ அழுது அரற்றுவதுபோல்
அப்படியிருக்க வாய்ப்பில்லை பின் ஏனிந்த சீற்றம்?
இந்த நம்பிக்கையின்மை நம்மை நரகத்திற்கு இட்டுச் செல்கிறது
இயற்கை சில முறைமைகளை
அவளது மாற்றாந்தாய் சகோதரன் புதிர்மையினுள்
ஒளித்து வைத்திருக்கிறது
அதனால்
இதை ஊழிறுதியின் மாலையாக நீ கருதும் முன்பு
துயருறும் மதியமாகவே தோன்றும் ,
நினைவுகளில் தொலைந்த மதியம்
இயற்கையின் ஆடி
அல்லது
ஒருவேளை நீங்கள் அதை மறந்தும் போகலாம்
மழை
அழுதல்
நடைமுகட்டில் மறுஒலியுறும் உனது கால்தடங்கள்
அது பொருட்டல்ல
இக்கணத்தில் அந்த மரப்பாதையின் நெடுகிலும்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களின் கண்ணாடியில்
நீ அழுது உன் படிம உருவைக் கரைக்கலாம்
ஆனால்
உன்னையே நீ தொலைக்க இயலாது
|
I’ll try to forget A body that appeared during the snowfall
When all of us were alone In the park, on the little hill behind
the basketball courts I said hold on and she came back:
white face lit up by a noble heart Never
had I seen such beauty The moon drew away from the earth
From far off came the sound of cars on the highway: people
going home All of us were living in a television commercial until she
parted the successive curtains of snow and let me see her face: the pain
and beauty of the world in her gaze I saw tiny footprints in the snow
I felt the frozen wind on my cheeks
On the other end of the park someone was making signals
with a flashlight Every snowflake was alive Every insect egg was alive
and dreaming I thought: now
I’m going to be alone forever But the snow kept falling
and falling and she didn’t go away
-- Roberto Bolano
|
நான் மறக்க முயற்சிக்கிறேன்
பனிப்பொழிவின் கணத்தில் தோன்றிய உடலை
நாம் அனைவருமே தனிமையுற்றிந்த தருணம்
பூங்காவில் பின்புறமிருந்த குறுமலையில்
கூடைப்பந்து திடல்களில்
‘போகாதே நில்’ என்றேன்
நான் அவள் திரும்பி வந்தாள்
வெண்முகம் ஞானமுற்ற இதயத்தினால் ஒளிர்ந்தது
அதுபோன்ற பேரழகை நான் இதுவரை கண்ணுற்றதில்லை
நிலவு பூமியிலிருந்து தன்னைப் பின்னிழுத்துக்
கொண்டது
நெடுஞ்சாலைகளின் அதி-தூரத்திலிருந்து
கார்களின் ஒலி அண்மையுற்றது
மக்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
நாம் அனைவரும் தொலைக்காட்சி வணிகத்
திரையில் வாழ்ந்திருக்க
பனியின் திரைகளிலிருந்து அடுத்தடுத்து விடைபெறும்வரை
அவளது முகத்தைச் சற்றே கண்ணுறுகிறேன்
அவளது பார்த்தலில் வலியுறும் உலகின் பேரெழில்
நுண்- காலடித் தடங்களை நான் பனியில் கண்டேன்
எனது கன்னத்தில் உறைந்த மென்காற்றினை உணர்ந்தேன்
பூங்காவின் மறுபுறம் யாரோ
மின் விளக்குடன் சமிக்ஞை செய்தனர்
ஒவ்வொரு பனித்துகளும் உயிர்ப்புடன் இருந்தன
ஒவ்வொரு பூச்சியின் கருமுட்டையும் உயிர்ப்புடன் கனவுற்றிருந்தன
நான் நினைத்தேன்
இனி எப்போதைக்குமாய் நான் தனிமையுறுவேன்
ஆனால்
இடைவிடாது பனி-பொழியப் பொழிய அவள் பிரியவில்லை
|
GODZILLA IN
Listen carefully, my son:
bombs were falling
over
but no one even noticed.
The air carried poison
through
the streets and open
windows.
You’d just finished eating
and were watching
cartoons on TV.
I was reading in the bedroom
next door
when I realized we were
going to die.
Despite the dizziness and
nausea I dragged myself
to the kitchen and found
you on the floor.
We hugged. You asked what
was happening
and I didn’t tell you we
were on death’s program
but instead that we were
going on a journey,
one more, together, and
that you shouldn’t be afraid.
When it left, death didn’t
even
close our eyes.
What are we? you asked a
week or year later,
ants, bees, wrong numbers
in the big rotten soup of
chance?
We’re human beings, my son,
almost birds,
public heroes and secrets.
- Roberto Bolano
|
கவனமாகக் கேள் என் மகனே
மெக்ஸிகோ நகர்மீது குண்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தன
ஆனால் யாருமே அதைக் கவனிக்கவில்லை
திறந்த சன்னல்களினூடே சாலைகளினூடே
காற்று நஞ்சை ஏந்திச் செல்கிறது
சற்றுமுன்பு உணவருந்திவிட்டு ‘கார்ட்டூன்’ படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தாய்
நான் அடுத்துள்ள படுக்கையறையில் வாசித்துக் கொண்டிருந்தேன்
நாம் மரிக்கப் போகிறோமென உணர்ந்தேன்
தலைச்சுற்றலும் வாந்தியும் ஒருபுறமிருக்க
நான் என்னையே சமையலறைக்கு இழுத்துவர
நீ தரையில் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்தேன்
நாம் அணைத்துக் கொண்டோம்
என்ன நடக்கிறது என்று நீ கேட்டாய்
நாம் மரணத்தின் நிகழ்ச்சியுள் இருக்கிறோம்
என்று சொன்னேன் ஆனால்
அதற்கு மாறாக நாம் மற்றொரு பயணத்தில் இருந்தோம்
இன்னொன்று நீ பயப்படாதே
அது விடைபெற்றபோதும்
மரணம்
நமது விழிகளைக்கூட மூடவில்லை
நாம் யார்? என்று ஒரு
வாரம்
அல்லது
ஒரு வருடம் கழித்துக் கேட்டாய்
எறும்புகள்
தேனிக்கள்
பிறழ் எண்கள்
தற்செயல் கணத்தின் குழைந்த கெட்ட சூப்பின்
இடையே
என் மகனே
நாம் மனிதப்பிறவிகள்
ஏறக்குறைய பறவைகள்
பொது ஹீரோக்கள் இரகசியங்கள்
|
Look down. There is snow.
Where the snow ends
Sea and where the sea
enters
Gray among capes
Like an unvaried sky,
lapping
From finger to finger
Of a raised hand,
travellers
Skirt between snow and sea.
Minute, furtive and
exposed,
Their solitude is unchosen
and will end
In comity, in talk
So seasoned by these
extremes
It will recall stored
fruits
Bitten by a winter fire.
The title, without
disapprobation,
Says
"Merchants."
-Charles
Tomlinson
|
கீழே நோக்கு
அங்குள்ளது பனி
பனி எங்கு இறுதியுறுகிறதோ
அங்கு கடல்
கடல் எங்கு உட்புகுகிறதோ
அங்கு கடல் முனையில் சாம்பல் வண்ணம்
வேற்றுமையற்ற வானம் போல்
விரலிலிருந்து விரலுக்கிடையே விழுங்குதல் நிகழ்கிறது
உயர்த்தபட்ட கரம்
பயணிகள்
பனிக்கும் கடலுக்கும்
இடையேயான விளிம்பில்
நுனிதாய்
கபடமாய் மற்றும் வெளிப்படையாய்
அவர்களது தனிமைவாசம் தேர்வற்று
ஒழுங்கமைவில் முடிவுறுகிறது
உரையாடலில்
தீவிர நிலைகள் பண்பட்டிருக்க
சேகரத்திலுள்ள கனிகள் மீள்- அழைப்புறுகிறது -
அவை
குளிர்கால தீயால் கடிக்கப்பட்டவை
|
RESURRECTION
Poetry slips into dreams
like a diver in a lake.
Poetry, braver than anyone,
slips in and sinks
like lead
through a lake infinite as
Loch Ness
or tragic and turbid as
Consider it from below:
a diver
innocent
covered in feathers
of will.
Poetry slips into dreams
like a diver who's dead
in the eyes of God.
- Roberto Bolano
|
கவிதை கனவிற்குள் நழுவுகிறது
ஏரியில் மூழ்குபவனைப் போல்
கவிதை எல்லோரைக் காட்டிலும் துணிச்சலானது
‘லாச் நெஸ்’ ஏரியின் எல்லையின்மையினுள்
ஈயத்தைப் போல மூழ்கியும் நழுவியும்
அல்லது துன்பியலிலார்ந்து
கலங்கிச் சேறுற்ற ‘அலேக் பால்ட்டன்’ ஏரியின்
கீழ்ப்புறத்திலிருந்து பரிசீலியுங்கள்
ஒரு அப்பாவி நீர்மூழ்கி
விருப்புறலின் இறகுகளால் மூடப்பட்டுள்ளான்
கடவுளின் பார்வையில் மரித்த நீர்மூழ்கியாய்
கவிதை கனவிற்குள் நழுவுகிறது
|
Colours
When your face appeared over my crumpled life
|
கசங்கிச் சுருங்கிய என் வாழ்வின்மீது
தோன்றிய உன் முகத்தினால்
என் வாழ்வில் பொதிந்திருந்த வறுமையை முதன்முதலாக உணர்ந்துகொண்டேன்
பிறகு
ஒரு வனத்தின் நதியின் ஆழியின் மீது
ஒரு குறிப்பிட்ட ஒளி
வண்ணத்திலான உலகில் எனது தொடக்கமானது,
எதிர்பாராத சூரியோதயத்தின் அந்தத்தில்
நான் அச்சுறுகிறேன் நான் அச்சுறுகிறேன்
நான் அதை எதிர்த்துப் போராடப் போவதில்லை
எனது காதலே இந்த அச்சம்தான்
எதையுமே வளர்த்துக்கொள்ளத் திராணியற்றவனான
நான்
இதை இன்பப் பெருக்காக வளர்த்தெடுக்கிறேன்
காதல் ஓர் எச்சரிக்கையற்ற காவலன்
அச்சம் நுனிதாய் என்னைத் தன்னில் இழுக்கிறது
உனது முகம் பொருந்தும் தருணத்தில்
இந் நொடிகள்
குறுகியவையென்ற உணர்வுடன் இருக்கிறேன்
என் விழிகளில் நிறைந்திருக்கும் வண்ணங்கள் இன்மையாகின்றன
|
People
No people are uninteresting.
|
யாருமே சுவராசியமற்றவர்கள் அல்ல
அவர்களின்
விதியென்பது கோள்களின் தொடர் சரிதை
அதிலுள்ள எதுவுமே குறிப்பானதல்ல
ஒவ்வொரு கோளும் மற்றொன்றின் வேற்றுமையுரு
ஒரு மனிதன் இருன்மையில் வாழும்போதும்
இருண்மையில் நண்பர்களைக் கண்டடையும்
போதும்
இருண்மை
என்பது சுவராசியமற்றதல்ல
ஒவ்வொருவனின் உலகுமும் தனியானது
அந்த உலகில் ஓர் அற்புத நிமிடம்.
அங்கு எந்த மனிதன் இறக்கிறானோ
தன்னுடனேயே தனித்திருக்கிறான்
அவனது முதல் பனி
முதல் முத்தம்
முதல் பிணக்கு
அவனுடனேயே அற்றுப் போய்விடுகிறது
அவை
விடைபெற்ற புத்தகங்கள்
பாலங்கள்
மற்றும்
ஓவியம் தீட்டப்பெற்ற ‘கான்வாஸ்’
இயந்திரங்கள்
அவற்றின் விதி வாழ்தல்
ஆனால்
எதை இழந்தோமோ அது ஏதுமற்றதுமல்ல
பேராட்டத்தின் சட்டத்தில் ஏதோவொன்று அற்றுப் போயிற்று
மனிதர்கள் இறப்பதில்லை
ஆனால்
உலகம் அவர்களுக்குள் இறங்குகிறது
நாம் யாரைப் பிறழ்ந்தவர்கள் என்று எண்ணுகிறோமோ
அவர்கள்
*****
புவியின் உயிரினங்கள்
அவர்களுள்
அவசியமானவர்களைப் பற்றி
நாம் எதை அறிந்திருக்கிறோம்
சகோதரனின் சகோதரனே
நண்பர்களின் நண்பனே
காதலரின் காதலரே
நாம் நம் தந்தையர்களை அறிந்திருக்கிறோம்.
ஒவ்வொன்றிலும் ஒன்றுமில்லை
அவை அழிகின்றன
அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க இயலாது
இரகசிய உலகங்களை மீளுருவாக்க முடியாது
ஒவ்வொரு காலத்திலும்
மீண்டும்மீண்டும்
கையறுநிலைப் பாடலை
அழிவிற்கு எதிராக
நான் இசைக்கிறேன்
|
Gentleness
This can't go on: is after all
injustice of its kind. How in what year did this come into fashion?
Deliberate indifference to the living, deliberate cultivation of the dead.
Their shoulders slump and they
get drunk sometimes and one by one they quit. Orators at the crematorium
speak words of gentleness to history.
|
இனியும் இது இப்படியே நிகழாது
சாதாரணமாகச் சொன்னால்
இதுவும் ஒருவகையான அநீதிதான்,
எந்த வருடம் எப்படி இது ஒரு பாணியானது
வாழ்தலுக்குள் வேண்டுமென்றே வேற்றுமையின்மை செய்யபெறுகிறது
வேண்டுமென்றே மரித்தோரை அறுவடை செய்தல்
அவர்களது தோள்கள் தொய்வடைகின்றன
சில சமயங்களில் குடிமையில் உழல்கிறார்கள்
ஒருவர்பின் ஒருவராக விடைபெற்றுச் சென்றனர்
பிரசங்கிகள் இடுகாட்டில் அலைகின்றனர்
வரலாற்றிடம் கருணை சுரக்கும் வார்த்தைகளையே பேசுவர்
எது மாயகோவ்ஸ்கியிடமிருந்து வாழ்வைக் கைப்பற்றியது?
அவனது விரல்களுக்கிடையில் கைத்துப்பாக்கியை எது திணித்தது?
ஒருவேளை
அவனது அந்தக் குரல் அந்த தோற்றம்
எந்த தருணத்திலாவது
கருணையின் சிறு துகள்கள்
அவனது வாழ்வில் எதையேனும் ஈந்திருக்கின்றனவா?
மனிதர்கள் வாழ்கின்றனர்
மனிதர்கள் தொல்லைகளைப் பெருக்குபவர்கள்
மென்மை என்பதே
இறத்தலுக்குப் பின்வரும் புகழஞ்சலி
|
Words Are
unnecessary,
|
வார்த்தைகள் தேவையற்றவை
அவற்றில் கற்றறிய ஒன்றுமில்லை
எத்தனை சோகம்
அவை விலங்கின் இருண்ட இதயம் பின்பற்றத்தக்கவை
அறிவுறுத்த
அவற்றுக்கு எந்த உந்துதலுமில்லலை
உலகின் சாம்பல் வளைகுடாவின் நெடுகிலும்
வார்த்தைகளுக்கு எவ்வித
உபயோகமுமில்லை
|
How slowly the
horses move,
|
எத்தனை மெதுவாக இந்தக் குதிரைகள் நகர்கின்றன
விளக்குகள் எரியும் ஒளி எத்தனைக் கருமையாக உள்ளது
அவர்கள் எங்கு என்னிடம் பேசுகிறார்கள்
என
இந்த அந்நியர்களுக்கு நன்றாகத் தெரியும்
நான் குளிர்ந்திருக்கிறேன்நான் உறங்கப் போகிறேன்
அவர்களது அக்கறைகள் குறித்து மனதிடத்துடன் இருக்கிறேன்
திடிரென்று நட்சத்திர ஒளியை நோக்கி
ஒரு திருப்பத்தில் தூக்கி எறியப்பட்டேன்
காய்ச்சல் கண்டவனின் தலையசைப்பு
அக்கறை கொண்ட ஒரு அந்நியனின் குளிர்ந்த கைகள்
இன்னும் எனக்குத் தென்படவில்லை,
இருண்ட ஃபிர் மரத்தின் உருவ விளிம்பு
|
It may be,
night, you do not need me;
|
இது இரவாக இருக்கக்கூடும் உனக்கு நான் தேவையில்லை
உலகின் ஆழ்குழியிலிருந்து வெளியேற
முத்துக்கள் அற்ற சிப்பியைப் போல்
நான் உனது கரையில் வீசப்பட்டிருக்கிறேன்
வழக்கத்திற்கு மாறாக நீ அலைகளை அதிரச் செய்கிறாய்
மட்டுப்படுத்த முடியாமல் பாடுகிறாய்
ஆனால் நேசிக்கவும் போற்றவும் இயலும்
இந்தத் தெளிவற்ற தேவையற்ற சங்கு நீ என் அருகில் இந்த மணல்வெளியில் படுத்துக் கொள்ளலாம்
துணி ஆடையணிந்துகொண்டு
சங்கிற்குக் குருடாய் இருக்க
பேரலையின் மகத்தான மணியோசை
உனது முணுமுணுப்பின் தூவல் எங்கும் நிறைய
காற்றுடன் மழையுடன் பனிப்பொழிவுடன்
நொறுங்கும் சங்கின் ஓடுகள்
யாருமே தங்கியிராத ஓர் இதயம்
|
உங்களுடைய விரிவான விமரிசனத்தை படித்துப் பார்க்கையில், மொழிபெயர்ப்பாளர் ஒரு கவிதையை பலமுறை வாசித்த பின் மொழிபெயர்ப்பில் ஈடுபடாமல், ஓரிரு முறை வாசித்துவிட்டு முழுமையானப் பொருளை கிரகிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாய் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் என்பது நன்கு புலனாகிறது. "மாற்றாந்தாய் சகோதரன்" தான் இன்னும் இடியாய் என்னுள் அதிர்ந்துக் கொண்டிருக்கிறது. ஒரு வாசகனாக நானும் அவரது கவித்துவத்தில் மயங்கி இத்தகையத் தவறுகளைக் காணாது விட்டிருக்கிறேன் என்பதை எண்ணி பார்க்கையில் வெட்கப்படுகிறேன். தற்போது தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஅன்புடன்
ஆசை
This comment has been removed by the author.
ReplyDeleteமொழிபெயர்ப்பின்மீதான தங்களின் ஈடுபாட்டையும், புலமையையும் மிகவும் நுணுக்கமாக வைக்கின்ற பதிவு. ஓர் ஆய்வுக்கட்டுரையைப் படித்த உணர்வு ஏற்பட்டது. தங்களுடைய பரந்துபட்ட வாசிப்பை தெளிவாக்குகிறது நீங்கள் தரும் ஒப்புநோக்கல்கள். அவ்வப்போது சில கட்டுரைகளை மொழிபெயர்த்து வருகின்ற நிலையில் மொழிபெயர்ப்பிலும், மொழியாக்கத்திலும் உள்ள சிக்கல்களை அறிவேன். இக்காலகட்டத்திற்குத் தேவையான பொருண்மையிலான உங்களது நீண்ட பதிவிற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சார்!
Deleteஅன்புடன்
ஆசை
Egg plantஐ முட்டைச்செடி என மொழிபெயர்த்த 'முன்னோடி 'களின் வாரிசுகள் இவர்கள்.
ReplyDelete'அவளது காமுகன் அங்கே காத்திருந்தான்..'என்கிறது ஒரு மலையாள மொழிபெயர்ப்பு.
மணிகட்டப்படுவதற்காகவே நிறையப் பூனைகள் காத்திருக்கின்றன.
மொழிபெயர்ப்புகளைக் குறைசொல்கிறீர்களே! அப்படியென்றால் நீங்களும் இந்துத்துவவாதிதானோ!!!
Delete